இலக்கைதேடி
விவாதம்

விவாதம்

” உலகின் பாதி மக்களின் செல்வமும் 26 நபர்களின் செல்வமும் சமம்… எப்போது மாறும் இந்தச் சூழல்? ”

முப்பது ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் செல்வத்தையும் தற்போதைய செல்வத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியா ஒரு பணக்கார நாடு என்ற முடிவுக்கே நாம் வர வேண்டும். இது ஒரு பாதிதான். முப்பது ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே இருந்த இடைவெளியைத் தற்போதுள்ள இடைவெளியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் முழு உண்மை தெரியும். ஆம்! இந்தியாவின் ஏற்றத்தாழ்வு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் பெரிய இடைவெளியைக் கொண்டிருக்கிறது.

உலக வறுமையை அகற்றுவதற்கான ‘ஆக்ஸ்ஃபாம்’ அமைப்பின் சமீபத்திய அறிக்கை அச்சுறுத்துகிறது. அதன்படி, இந்தியாவின் பணக்காரர்களின் சொத்தில் ஒவ்வொரு நாளும் ரூ.2,200 கோடி அதிகரிக்கிறது. உச்சத்தில் உள்ள ஒரு சதவீதத்தினரின் சொத்து மதிப்பு 39% அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், பொருளாதார ஏணியில் கீழ்பாதியில் உள்ள மக்கள்தொகையில் சரிபாதி மக்களின் வருமானம் வெறும் 3%தான் அதிகரிக்கிறது.

சுவிட்சர்லாந்தில் சென்ற வாரம் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தின் உச்சி மாநாட்டுக்கு முன்னதாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. 2018-ல் மட்டும் உலக அளவில் பணக்காரர்களின் செல்வம் நாளொன்றுக்கு 12% அதாவது, ரூ.17,801 கோடி அதிகரித்திருக்கிறது. ஏழைகளாக இருக்கும் பாதிப் பேரின் செல்வமோ 11% குறைந்திருக்கிறது.

இந்தியாவில் 13.6 கோடி பேர், அதாவது மக்கள்தொகையில் 10% பேர் 2004 முதலாகக் கடனில் சிக்கியுள்ளதாக ‘ஆக்ஸ்ஃபாம்’ அறிக்கை கூறுகிறது. அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வால் வறுமைக்கு எதிரான போராட்டத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்ப தாகவும், உலகெங்கும் மக்களின் கோபம் அதிகரித்திருப்பதாகவும் ‘ஆக்ஸ்ஃபாம்’ கூறுகிறது.

“இந்தியாவின் ஏழை மக்கள் தங்கள் அடுத்த வேளை சாப்பாட்டுக்காகப் போராடிக்கொண்டிருக்கும்போது,, ஒருசில பணக்காரர்கள் மட்டும் செல்வத்தைக் குவித்துக்கொண்டே போவது தார்மீகரீதியில் மிகவும் கொடுமையானது” என்கிறார் ‘ஆக்ஸ்ஃபாம்’ அமைப்பின் செயல் இயக்குநர் வின்னி பையான்யீமா. “மேலே இருக்கும் ஒரு சதவீதத்தினருக்கும் மிச்சம் உள்ளோருக்கும் இடையிலான இந்த அசிங்கமான ஏற்றத்தாழ்வு தொடரும் என்றால், நாட்டின் சமூக, ஜனநாயக அமைப்பில் முற்றிலுமான சிதைவு ஏற்படும்” என்று அவர் கூறுகிறார்.

உலக மக்கள்தொகையில் பாதி அளவான 380 கோடி பேரிடம் ஒட்டுமொத்தமாக எவ்வளவு சொத்து இருக்கிறதோ, அது எல்லாம் வெறும் 26 பேரிடம் இருக்கிறது என்பது எவ்வளவு கொடுமையானது. உலகின் மிகப் பெரிய பணக்காரரான அமேஸான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸின் செல்வம் இந்திய மதிப்பில் ரூ.8 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. இவருடைய செல்வத்தில் நூற்றில் ஒரு பங்குதான் 11.5 கோடி மக்கள்தொகையைக் கொண்ட எத்தியோப்பியாவின் ஒட்டுமொத்த சுகாதார நிதிநிலை அறிக்கையின் தொகையும்.

“இந்தியாவில் மேலே உள்ள 10% பேர்தான் ஒட்டுமொத்த தேசத்தின் 77.4% வளத்தை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சுருக்கிப் பார்த்தோம் என்றால், மேலே உள்ள 1% பேர் தேசிய வளத்தின் 51.53%-த்தை வைத்திருக்கிறார்கள். மக்கள்தொகையில் பெரும்பான்மையினரும், கீழ்மட்டத்தில் இருப்பவர்களுமான 60% பேர், தேசிய வளத்தில் வெறும் 4.8%ஐ மட்டுமே சொத்தாகக் கொண்டிருக்கின்றனர். செல்வத்தின் ஏணிப்படியில் மேலே இருக்கும் 9 பெருங்கோடீஸ்வரர்கள் கீழே இருக்கும் 50% பேரின் செல்வத்துக்கு இணையான செல்வத்தைக் கொண்டிருக்கின்றனர்” என்கிறார் ஆக்ஸ்ஃபாமின் வின்னி பையான்யீமா.

அது மட்டுமல்லாமல், 2018-2022-க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் தினமும் 70 புதிய கோடீஸ்வரர்கள் உருவாவார்கள் என்றும் கணிக்கிறது ‘ஆக்ஸ்ஃபாம்’. “அரசாங்கங்கள் ஒருபக்கம் மருத்துவம், கல்வி போன்ற பொதுச் சேவைகளுக்குக் குறைவாக நிதி ஒதுக்கி ஏற்றத்தாழ்வை எப்படி மேலும் அதிகமாக்குகின்றன என்பதையும், இன்னொரு பக்கம் பெருநிறுவனங்களுக்கும் பணக்காரர்களுக்கும் எப்படிக் குறைவாக வரி விதிக்கின்றன என்பதையும், வரி செலுத்தாமல் தப்பிப்பவர்களின் மேல் அரசு எப்படி நடவடிக்கை எடுக்கத் தவறுகிறது என்றும் ஆய்வுகள் நமக்குத் தெளிவூட்டுகின்றன” என்கிறார் ‘ஆக்ஸ்ஃபாம்’ இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் பெஹர். ‘ஆக்ஸ்ஃபாம்’ அமைப்பைப் பொறுத்தவரை கடந்த ஆண்டும் புதிதாக 18 பெருங்கோடீஸ்வரர்களை இந்தியா தந்திருக்கிறது. தற்போது இவர்களின் எண்ணிக்கை 119. இவர்களின் ஒட்டுமொத்தச் செல்வமும் ரூ.28 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது. இந்தியாவின் பணக்காரர்களிடம் கூடுதலாக வெறும் 0.5% வரியை விதித்தால் மருத்துவத்துக்காக அரசு செலவிடும் தொகையில் கூடுதலாக 50% பணம் கிடைக்கும் என்றும் ‘ஆக்ஸ்ஃபாம்’ கூறுகிறது.

மத்திய, அனைத்து மாநில அரசுகளின் ஒட்டுமொத்த வருமான, மூலதனக் கணக்கிலான செலவுத் தொகை ரூ.2,08,166 கோடி. இதில் மருத்துவம், பொதுச் சுகாதாரம், தண்ணீர் விநியோகம் ஆகியவற்றுக்குச் செய்யும் செலவுகள் அடக்கம். இது இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரூ.2.8 லட்சம் கோடி சொத்தைவிடக் குறைவானது. எப்போது மாறும் இந்தச் சூழல்? எப்படி மாறும் இந்தச் சூழல்?ஆக்ஸ்ஃபாம்பணக்காரர்கள்