CPI, CPM (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில் -cp
1967 ஆம் ஆண்டு நக்சல்பாரி போரட்டத்திற்குப் பிறகு இந்திய சமூகத்தைப் ப்ற்றிய வர்க்க ஆய்வினை மிகச் சரியாகவே ஆய்வு செய்து அதன் அடிப்படையில் இரு ஒன்றுபட்ட கட்சியை கட்டுவற்கான முயற்சிகளை மேற்கொண்டது குறித்த அனுபவங்களை நாம் மார்க்சிய லெனினிய இயக்க வரலாற்றினை படிக்கும்போது அறிய முடிகிறது. மக்கள் போரட்டங்களையும் கட்சி க்ட்டும் முயற்சிகளிலும் அது சிறிது முன்னேற்றம் அடைந்தது எனினும் வழக்கம்போலவே உலக அளவில் கம்யூனிஸ்ட க்ட்சிகளுக்குள் ஏற்பட்ட சந்தர்ப்பவாதம், திருத்தல்வாதம், பாராளுமன்றவாதம் போக்குகளைப் போலவே இந்திய மா-லெ இயக்கங்களுக்குள்ளும் பல்வேறுவிதமான போக்குகள் எழுந்தன. இதனால் இந்தியா முழுமைக்குமான உருவான மா-லெ இயக்கம் பல்வேறு அரசியல் போக்குகளைக் கொண்ட பல மா-லெ இயகங்களாக பிரிய ஆரம்பித்தது இன்று பல குழுக்களாக் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இது புரட்சிக்கு மாபெரும் பின்னடைவுதான்.
CPI, CPM (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில் 26/07/2016
நான் தொடர்சியாக வரலாற்றை எழுத முடியாமைக்கு வருந்துகிறேன், நான் நேற்று கேட்டகபட்ட கேள்விக்கு பதிலளிக்கும் முகமாகவே இந்த பதிவை எழுதி கொண்டுள்ளேன். CPI,CPM தோழர்கள் சிந்திக்க நான் கேள்விகளை அடுக்கி கொண்டும் வரலாற்று நிகழ்வுகளை துணை கொண்டும் விளக்கவே இப்படி கையாலும் நிலை. சில CPI,CPM தோழர்கள் மா-லெ அமைப்பே தகற்ந்துவிட்டது நீங்கள் எழுத என்னவுள்ளது என்றெழுதியுள்ளார். CPI லிருந்துதான் CPMம் CPMலிருந்துதான் CPI(ML)ம் உருவாகின இவை தத்துவார்த்த ரீதியாக வளர்ச்சி போக்கில். போலிகளிலிருந்து பலர் நாளை உண்மையான தத்துவார்த்ததை தூக்கிபிடித்து மார்க்சிய லெலின்ய மாசெதுங்க் பாதையில் கட்சியை வளர்த்தெடுக்கலாம் ஆகையால் வரலாற்றில் தவறுகளை விமர்சன பூர்வமாக அணுகி உண்மையான கம்யூனிஸ்டாக வாழ முயற்சிப்போம் ..சி.பி
எப்போதும் மக்கள் போராட்டங்களுக்குத் துரோகமிழைக்கும் போலி கம்யூனிஸ்டுகள் ‘நூல் இழையில்’ மறைக்கும் பகுதிகளை நாம் சொல்லியாக வேண்டும். ஆம் இவர்கள் குருசேவ் பாதையில் கட்சியை சீரழித்ததுடன் மார்க்ச்சியதையே “மண்ணுகேற்ற மார்க்ச்சியம்” என்று ஏமாற்றி பிழைக்கும் நிலை, நேருவும் காந்தியும் இவர்கள் தலைவர்கள் ஆகும்போது இவர்கள் எந்த வர்க்கத்தை சார்ந்தவர்கள் என்பது அறிவது மிக சுலபம். ஆனால் அன்றைய வீரஞ்செறிந்த கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கப் போராட்டத்தை, தலைமறைவு இயக்கத்தில் கம்யூனிச போராளிகள் செய்த தியாகம், அர்ப்பணிப்பை வர்க்க உணர்வு கொப்பளிக்க செறிவாக அளித்திருக்கலாம். விவசாயிகள் இயக்கத்தின் வரலாறை, அதன் வர்க்கப் போராட்ட வீச்சை இடது, வலது போலிகள் இன்னும் முழுமையாக, ஆழமாக மக்களிடம் துலக்கமாக எடுத்துக்காட்டாததன் மர்மம்தான் என்ன?
அப்படிப்பட்ட சமரசமற்ற களப்போராட்டத்தைக் காட்ட ஆரம்பத்தில் சீனிவாசராவ், களப்பால் குப்பு, கரம்பயம் சுப்பையா வரிசையில் அதிகார புரோக்கர்களான இ.எம்.எஸ்யும், சுர்ஜித்தையும், ஜோதிபாசுவையும், இந்திரஜித் குப்தாவையும் …. காணச் சகிக்க முடியாது. CPI மிலிருந்து வெளியேறிய CPM எதோ மார்க்ச்சியத்தை காப்பது போல் புறப்பட்ட வேகத்திலே மார்க்ச்சிய-லெனின்யத்தை தூக்கிபிடித்து உலுபவனுக்கே நிலம் உழைப்பவனுக்கே அதிகாரம் என்று 1967 ல் வெடித்த மக்கள் போராட்டங்களை தனது போலிசுடன் மத்திய அரசு படை பலத்தால் கொன்றொழித்த கைவர்கள் இன்றும் மார்க்ச்சியத்தின் பெயரால் வாழ்ந்து கொண்டிருக்கும் கம்யூனிச துரோகிகள். அசலை வெளிக் கொணர்ந்தால் நகல் நகைப்பிடமாகும்.
கீழத்தஞ்சையின் வர்க்கப் போராட்டத்தின் முழுப் பரிமாணத்தையும், வரலாற்றையும் மக்களிடம் கொண்டு சென்றால், பாராளுமன்றத்துக்கு உள்ளே பதவி நாற்காலியிலும், வெளியே கட்சி ஆபிசிலும் பணபட்டுவாட போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் குட்டு உடைந்து விடும். 48, 50-களில் போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள் என்றால்; தொழிலாளி வர்க்கத்தின் மீதான அடக்கு முறைக்கு எதிராக ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டிருக்கும் நீங்கள் யார் என்ற கேள்வி எழுந்துவிடும்.
ஆதிக்கச் சாதியினரின் அடக்கு முறைக்கு சாதி வெறிக்கு எதிராக அன்றைய கம்யூனிஸ்டு கட்சி டீக்கடையில் அமர்வோம், கோயிலில் நுழைவோம் என்று நுழைந்து காட்டியது. இன்றோ மேல் சாதியின் மனம் மாறாமல் மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாது என்கின்றனர் போலிக் கம்யூனிஸ்டுகள்.
டீக்கடை பெஞ்சில் உட்கார உரிமை கோரிப் போராடிய சீனிவாசராவ், தனுஷ்கோடி எங்கே? பிரதமர் நாற்காலியில் குந்த கட்சியிடம் உரிமை கோரி ‘போர்க் கொடி’ தூக்கிய ஜோதிபாசு எங்கே?
“சாதி ஒடுக்குமுறைக்கெதிராக என்ன செய்தார்கள் கம்யூனிஸ்டுகள்?” என்ற அவதூறுக்குத் தன் ரத்தத்தால் பதில் சொல்லியிருக்கிறது கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கம். பண்ணையடிமைத்தனத்திற்கெதிரான போராட்டத்தில் சீனிவாசராவையும், இரணியனையும் தனுஷ்கோடியையும் இன்னும் ஆயிரக்கணக்கானோரையும் செங்கொடி தந்தது. நீலக்கொடி தராதது ஏன்?
கண்ணெதிரே நடந்த பண்ணையடிமைத்தனத்திற்கெதிரான போராட்டத்தில் களத்திலிறங்காமல், அரசு சன்மானங்களைப் பெறவும், அதிகாரத்தைப் பங்கு போடவும் பக்கவாட்டில் ஒதுங்கிக் கொண்டவர்களின் அரசியல் பிழைப்புவாதத்தை அறிந்து கொள்ள அன்றைய சமகால வரலாற்றைப் புரட்டிப் பார்க்கக் கோருகிறது கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கம்.
இதை வலது, இடது கம்யூனிஸ்டுகள் இன்று கோர மாட்டார்கள்; கிளற மாட்டார்கள். அன்றைய விவசாயிகள் இயக்கம் அவர்களது தொண்டையில் முள்ளாய் சிக்கியிருக்கிறது. அந்த இறந்த காலத்தைத் தட்டியெழுப்பினால் அது இவர்களது நிகழ்காலத்தைக் கொன்று விடக்கூடிய ஆபத்து இருக்கிறது. இவையோ முந்திய வரலாறு என்றால், இப்போது ஆட்சி கட்டிலில் அமர்ந்து கொண்டு என்ன செய்து கொண்டுள்ளனர்?.
மே.வங்கத்தில் நடந்தது என்ன? சில நிகழ்வுகளை பார்ப்போம்; ஒவ்வொரு முறையும் சட்டமன்ற – நாடாளுமன்ற – உள்ளாட்சித் தேர்தல்களில், ஏழைகளின் நண்பனாகக் காட்டிக் கொள்ளும் இடதுசாரிக் கூட்டணி கட்சிகளுக்கே அவர்கள் வாக்களித்தார்கள். வாக்குறுதிகள் வீசப்பட்டனவே தவிர, அவை லால்கார் வட்டார மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. வறுமை ஒழிப்புக்காகவும், வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதி அவர்களைச் சென்றடையவும் இல்லை.
புரட்சி பேசும் போலி கம்யூனிஸ்டுகளின், ஆளும் வர்க்கங்களின், மேட்டுக்குடி கும்பல்களின், அவர்களின் ஊதுகுழல்களான ‘தேசிய’ பத்திரிகைகளின் வாதம். பழங்குடியின மக்களைப் போலீசார் இழுத்துச் சென்று வதைத்தாலும், பொய் வழக்குப் போட்டுச் சிறையிலடைத்தாலும் அவை வன்முறையோ, பயங்கரவாதமோ அல்ல. சி.பி.எம். குண்டர்கள் மற்றும் போலீசின் அடக்குமுறையின் கீழ் அவர்கள் இருத்தி வைக்கப்பட்டாலும், அது வன்முறை அல்ல; புதிய விசயமும் அல்ல.
வறுமையையும் அடக்குமுறையையும் சகித்துக் கொண்டு அமைதியாக இருந்த பழங்குடியின மக்கள் மெதுவாக விழித்தெழுந்து போராடத் தொடங்கினால், அது சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைக்கும் வன்முறை! பழங்குடியினக் கிராமங்களைச் சுற்றி வளைத்துச் சூறையாடி விடிய விடிய வதைத்த போலீசாரின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடி, போலீசாரை அப்பகுதியிலிருந்து விரட்டியடித்தால், அது பயங்கரவாதம்!
அவர்கள் போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டியை நிறுவினார்கள். அந்தக் கமிட்டி கிராமங்களில் மருத்துவ – சுகாதார வசதியும், பள்ளிகள் – சாலைகள் – பாலங்கள் உள்ளிட்டு மின்சார வசதியும் ஏற்படுத்தித் தரக் கோரி போராடியவர்களை அடக்குமுறையில் ஈடுபட்ட போலீசார் மக்கள் முன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்; அதுவரை போலீசாரையோ அரசு அதிகாரிகளையோ இப்பகுதியினுள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்ற கோரிக்கையுடன் மக்களைத் திரட்டிப் போராடினர்.
இவையெல்லாம் சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைக்கும் அராஜக – வன்முறைகள் என்று சாடுகிறது. மே.வங்க இடதுசாரி அரசு. ஆனால், இந்த அராஜக – வன்முறையாளர்கள், மக்களின் சுயவிருப்ப உழைப்பின் மூலம் 20 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைத்துள்ளார்கள். ‘இடதுசாரி’ அரசின் பஞ்சாயத்து நிர்வாகம் சாலையே போடாமல், ஒரு கி.மீ. சாலை அமைக்க ரூ. 15,000 வீதம் செலவிட்டதாகக் கணக்கு காட்டி ஏய்க்கும் நிலையில், 20 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க மொத்தம் ரூ. 47,000 செலவாகியுள்ளதாக அவர்கள் கணக்குகளை எழுதி மக்களின் பார்வைக்கு வைத்துள்ளார்கள்.
இது மட்டுமின்றி, தூர்ந்து போன குடிநீர்க் கிணறுகளைச் சீரமைத்தும் புதிய கிணறுகளைத் தோண்டியும், பள்ளிக்கூடங்களை நிறுவியுமுள்ளார்கள். நிதியில்லை என்று இடதுசாரி அரசு புறக்கணித்து இழுத்து மூடிவிட்ட கண்டபாஹரி கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தை அவர்கள் சீரமைத்து உள்ளூர் மருத்துவர்களைக் கொண்டு மக்களுக்குச் சிகிச்சையளிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, காடுகளை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலங்களை, நிலமற்ற பழங்குடியினருக்கு விநியோகிக்கச் சட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படாத நிலையில், கண்டபாஹரி, பன்ஷ்பேரி கிராமங்களை அடுத்துள்ள புறம்போக்கு நிலங்களை, நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளார்கள். இந்நடவடிக்கைகளுக்காக அவர்கள் இடதுசாரி அரசின் உதவியை எதிர்பார்த்து நிற்கவில்லை. எதிர்பார்த்தாலும், அது கிடைக்கப் போவதுமில்லை.
போலீசு பயங்கரவாத அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய லால்கார் பழங்குடியின மக்கள், லால்கார் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரை விரட்டியடித்து, போலீசு நிலையத்தை இழுத்து மூடினர். லால்கார் காடுகளை அழித்து 5000 ஏக்கர் பரப்பளவில் ஜிண்டால் எனும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனம் தொடங்கவுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டத்தை முற்றாக ரத்து செய்யவும், அடக்குமுறையை ஏவிய போலீசார் பகிரங்க மன்னிப்பு கேட்கவும் கோரி இம்மக்கள் தொடர்ந்து போராடி வந்ததால், இப்பகுதிக்குள் போலீசாரோ, அரசு அதிகாரிகளோ நுழைய முடியவில்லை. அதன்பிறகு நாடாளுமன்றத் தேர்தலின்போது, வாக்குப் பதிவைக் கண்காணித்து முறைப்படுத்துவது என்ற பெயரில் போலீசு முகாமிட முயற்சித்தது. போலீசுடன் கூட்டுச் சேர்ந்து சி.பி.எம். குண்டர்கள் இப்பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அதிகாரவர்க்க – போலீசு ஆட்சியை நிறுவ எத்தணித்தனர். அந்த முயற்சியையும் லால்கார் மக்கள் தமது போராட்டங்களால் முறியடித்தனர்.
தேர்தல் முடிந்த பிறகு, மீண்டும் தமது அதிகாரத்தை நிலைநாட்ட போலீசும் – அதிகார வர்க்கமும் கிளம்பின. அதனுடன் கூட்டுச் சேர்ந்து சி.பி.எம். குண்டர்கள் ஆள்காட்டிகளாகவும் அடியாட்களாகவும் செயல்பட்டனர். இவர்களின் கூட்டுச் சதிகள் – சூழ்ச்சிகள் – தாக்குதல்களை முறியடித்த லால்கார் பழங்குடியின மக்கள், 2008 ஜூன் 15-ஆம் தேதியன்று சி.பி.எம். குண்டர்படைத் தலைவர்களது வீடுகளையும் உள்ளூர் சி.பி.எம் கட்சி அலுவலகங்களையும் தாக்கித் தீயிட்டுக் கொளுத்தினர்.
இதற்கு முன்னதாக, நந்திகிராமம் – கேஜூரி பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசு வெற்றி பெற்றதும், ஹேதியா நகரிலுள்ள சி.பி.எம். வட்டாரக் கமிட்டி அலுவலகம் ஜூன் 9-ஆம் தேதியன்று திரிணாமுல் காங்கிரசு கட்சியினரால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அரசு அதிகாரத்தைக் கொண்டும் குண்டர் படைகளைக் கொண்டும் தேர்தலின் போது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்ட சி.பி.எம். உள்ளூர் தலைவர்களது வீடுகளும் கட்சி அலுவலகங்களும் நந்திகிராமம் பகுதியில் அடுத்தடுத்து திரிணாமுல் காங்கிரசு கட்சியினரால் தாக்கப்பட்டுத் தீயிடப்பட்டன.
இவற்றை அரசியல் வன்முறை என்று சாடும் சி.பி.எம் கட்சி, லால்கார் மக்கள் போராட்டத்தை மட்டும் பயங்கரவாத வெறியாட்டம் என்று குற்றம் சாட்டுகிறது. லால்கார் மக்கள் சி.பி.எம். அலுவலகங்களையும் குண்டர்படைத் தலைவர்களது வீடுகளையும் மட்டும் தாக்கித் தீயிடவில்லை. அவர்கள் போலீசாரையும் அதிகார வர்க்கத்தையும் அடித்து விரட்டி விட்டு, அரசு அடக்குமுறையிலிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்துக் கொண்டு, தமது சொந்த ஆட்சியை நடத்துகிறார்கள். அதுதான் பயங்கரவாதம் என்கிறது ‘இடதுசாரி’ அரசு. சட்டத்தின் ஆட்சிக்கு எதிராக, அதிகார வர்க்க – போலீசு ஆட்சிக்கு எதிராக தமது சொந்த ஆட்சியை நிறுவக் கிளம்பிவிட்டார்களே, அதுதான் பயங்கரவாதம் என்கிறது சி.பி.எம். அரசு.-( நன்றி வினவு)
இப்படி சீரழிவு பாதையில் பயணித்து கொண்டிருக்கும் இவர்கள் மக்கள் விரோதிகளாக ஆட்சிக்காக எதையும் செய்யும் கீழ்தரமான நிலையில்.. மற்றவை நாளை தொடருவேன்…..
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
CPI, CPM (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில் 27/07/2016
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான அமர்த்யா சென், மே.வங்கத்தைச் சேர்ந்தவர். அவர், “பசியும் பட்டினியும்தான் மிகக் கொடிய வன்முறை” என்றார். தமது மக்களுக்கு உணவளிக்காத அரசுதான், அம்மக்கள் மீது வன்முறையை ஏவும் கொடிய குற்றவாளி என்று அவர் சாடியுள்ளார்.( 2008 ல்) அவரது வாதப்படி, குற்றவாளியான மே.வங்க இடதுசாரி அரசு, பசி-பட்டினி எனும் வன்முறையை லால்கார் பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து ஏவி வந்துள்ள போதிலும், இம்மக்கள் நல்வாழ்வை எதிர்பார்த்து அமைதியாகவே காத்திருந்தார்கள்.
“இப்பயங்கரவாதத்தையும், அதைப் பின்னாலிருந்து கொண்டு இயக்கி வரும் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளையும் முறியடிக்க மாநிலப் போலீசுப் படை போதாது; மைய அரசின் துணை ராணுவப் படைகளையும் அனுப்ப வேண்டும்” என்று டெல்லிக்குப் பறந்தார், போலி கம்யூனிஸ்டு முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா. அரசியலில் எதிரெதிர் முகாம்களில் உள்ள காங்கிரசும் சி.பி.எம்.மும் லால்கார் மக்களின் ‘பயங்கரவாதத்தை’ ஒழிப்பதில் ஓரணியில் நின்றன. முதலில் மூன்று கம்பெனி துணை இராணுவப் படைகளை அனுப்பிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அடுத்ததாக “கோப்ரா” அதிரடிப்படையையும் எல்லைப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவினரையும் லால்காருக்கு ஏவினார். மொத்தம் எவ்வளவு போலீசு – துணை ராணுவப் படையினர் லால்காரில் குவிக்கப்பட்டனர் என்ற விவரத்தை இன்றுவரை அரசு அறிவிக்கவில்லை. மாவோயிஸ்டுகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்த மைய அரசு, லால்கார் காடுகளிலிருந்து அவர்களை வெளியேற்றி அழிப்பது என்ற பெயரில் இவ்வட்டாரமெங்கும் அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. மே.வங்க இடதுசாரி அரசு அதற்கு ஒத்தூதியது.
இப்பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க லால்கார் பழங்குடியின மக்கள் சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டும் அகலமான குழிகளை வெட்டியும் தடையரண்களை ஏற்படுத்தி, வில்-அம்பு, கோடாரிகளுடன் அரசு பயங்கரவாதப் படைகளை மறித்து நின்றார்கள். “அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்தாதீர்கள்; நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக உள்ளோம்” என்று பழங்குடியின மக்களின் போராட்டக் கமிட்டி மத்திய-மாநில அரசுகளிடம் பலமுறை கோரிய போதிலும், அவை ஏற்க மறுத்துவிட்டன. மறித்து நின்ற மக்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கிராமங்களைச் சூறையாடி கண்ணில்பட்டவர்களைக் கொடூரமாகத் தாக்கி போலீசும் துணை இராணுவப் படைகளும் வெறியாட்டம் போட்டன. இப்படி ஒவ்வொரு கிராமமாகச் சுற்றி வளைத்து அரசு பயங்கரவாதிகள் தாக்குவதையும், இதற்குத் துணையாக வான் படையின் ஹெலிகாப்டர்கள் வட்டமிடுவதையும் கண்டு அஞ்சிய மக்கள், கிராமங்களை விட்டு வெளியேறி நகரத்திலுள்ள பள்ளிகள் – மைதானங்களில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர்.
லால்கார் பகுதிக்குள் பத்திரிகையாளர்களோ, மனித உரிமை அமைப்பினரோ, தன்னார்வக் குழுக்களோ நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, அரசு பயங்கரவாத அட்டூழியங்கள் வெளியுலகுக்குத் தெரியாமல் மூடிமறைக்கப்படுகின்றன. இக்கொடுஞ்செயலுக்கு எதிராக பிரபல வரலாற்றியலாளரான சுமித் சர்க்கார், பிரபல எழுத்தாளர் பிரஃபுல் பித்வா, மகாசுவேதாதேவி, கலைஞர்களான தருண் சன்யால், கௌதம் கோஷ், அபர்ணா சென் முதலானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவில் மனித உரிமை இயக்கத்தினரும் அறிவுத்துறையினரும் கண்டனப் பேரணி நடத்தியுள்ளனர்.
லால்கார் மக்களை மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் தூண்டிவிட்டு அரசுக்கெதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள் என்று போலி கம்யூனிச ஆட்சியாளர்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும்போதே, எந்த மாவோயிஸ்டு தூண்டுதலும் இல்லாமல் பிர்பூம் மாவட்டம் போல்பூரில் மே.வங்க அரசின் நிலப்பறிப்புக்கு எதிராக விவசாயிகள் தன்னெழுச்சியாகத் திரண்டு அண்மையில் போராட்டத்தை நடத்தியுள்ளனர். போராடிய விவசாயிகளை போலீசும் சி.பி.எம். குண்டர்களும் கூட்டுச் சேர்ந்து தாக்கி ஒடுக்குவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே படம் பிடித்து அம்பலப்படுத்துகின்றன.
புரட்சி சவடால் அடித்து வந்த போலி கம்யூனிஸ்டுகள், மறுகாலனியாக்க சூழலில் உழைக்கும் மக்களின் எதிரிகளாகவும் குண்டர்படைகளை ஏவி மக்களைக் குதறும் பாசிச பயங்கரவாதிகளாகவும் சீரழிந்து விட்டதை சிங்கூர்-நந்திகிராமம் முதல் இன்று லால்காரில் நடந்துள்ள வெறியாட்டங்கள் வரை திரும்பத் திரும்ப நிரூபித்துக் காட்டுகின்றன. காங்கிரசு அரசும் மே.வங்க ‘இடதுசாரி’ அரசும் கூட்டுச் சேர்ந்து பயங்கரவாத வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டு, லால்காரை ‘விடுதலை’ செய்து ‘அமைதி’யை நிலைநாட்டிவிட்டதாக அறிவிக்கின்றன. இவ்வளவுக்குப் பின்னரும் நாட்டு மக்கள் நடுநிலை வகிக்கவோ ‘இடதுசாரி’ அரசு மீது நம்பிக்கை வைக்கவோ அடிப்படை இல்லை. அரசு பயங்கரவாத அடக்குமுறைக்கு உழைக்கும் மக்கள் அடங்கிக் கிடந்ததாக வரலாறுமில்லை.
–புதிய ஜனநாயகம், ஜூலை-2009
போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்க மாநிலம் இதுவரை கண்டிராத பழங்குடியின மக்களின் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சி! கடந்த நவம்பர் முதல் வாரத்தில் வெடித்தெழுந்த இப்பேரெழுச்சி மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களில் புயல் போலச் சுழன்று வீசியது. “ஐயோ! மாவோயிஸ்டு பயங்கரவாதிகள்! சிங்கூர்நந்திகிராமத்தைத் தொடர்ந்து இங்கேயும் ஊடுருவி விட்டார்கள்” என்று அலறியது, மே.வங்க போலி கம்யூனிச அரசு. “மூன்று மாவட்டங்களில் அரசு நிர்வாகம் முற்றாகச் செயலிழந்து விட்டது” என்று புலம்பின முதலாளித்துவ நாளேடுகள். […]
பேரெழுச்சி! போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்க மாநிலம் இதுவரை கண்டிராத பழங்குடியின மக்களின் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சி! கடந்த நவம்பர் முதல் வாரத்தில் வெடித்தெழுந்த இப்பேரெழுச்சி மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களில் புயல் போலச் சுழன்று வீசியது. “ஐயோ! மாவோயிஸ்டு பயங்கரவாதிகள்! சிங்கூர்நந்திகிராமத்தைத் தொடர்ந்து இங்கேயும் ஊடுருவி விட்டார்கள்” என்று அலறியது, மே.வங்க போலி கம்யூனிச அரசு. “மூன்று மாவட்டங்களில் அரசு நிர்வாகம் முற்றாகச் செயலிழந்து விட்டது” என்று புலம்பின முதலாளித்துவ நாளேடுகள். “இம்மாவட்டங்களில் எங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பில்லை” என்றுபீதியில் கூச்சலிட்டனர் அரசு அதிகாரிகளும், போலீசாரும்.
வில்அம்பு, கோடாரி, அரிவாள் முதலான மரபு வழி ஆயுதங்களுடன் பல்லாயிரக்கணக்கான சந்தால் பழங்குடியின மக்கள், இம்மாவட்டங்களிலுள்ள போலீசு நிலையங்களை முற்றுகையிட்டு, போலீசாரை உள்ளே வைத்துப் பூட்டினர். இம்மாவட்டங்களை இணைக்கும் அனைத்து நெடுஞ்சாலைகளையும் அகலமான குழிகளை வெட்டித் துண்டித்தனர். சாலையில் மரங்களை வெட்டிப் போட்டு தடையரண்களை உருவாக்கினர்.
“கடந்த பத்தாண்டுகளாக மாவோயிஸ்டு தீவிரவாதிகள் என்று பொய்க்குற்றம் சாட்டி வதைத்துச் சிறையிடப்பட்டுள்ள அனைத்து அப்பாவி பழங்குடியினரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்; கடந்த நவம்பர் முதல் வாரத்தில் லால்கார் பகுதியில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டுப் பழங்குடியினரை மிருகத்தனமாக வதைத்த குற்றத்துக்காக, போலீசு உயரதிகாரி ராஜேஷ்சிங், சந்தால் பழங்குடியின மக்கள் முன்பு தோப்புக்கரணம் போட்டுப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; தாக்குதலில் ஈடுபட்ட லால்கார் போலீசார் மக்கள் முன் மூக்கு தரையில்படும்படி கீழே படுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்குவதோடு, புறக்கணிக்கப்பட்ட இம்மாவட்டங்களில் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்” என்ற கோரிக்கைகளுடன் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
வறுமைவேலையின்மை, அரசின் புறக்கணிப்பு, போலீசின் அடக்குமுறை முதலானவற்றால் ஏற்கெனவே குமுறிக் கொண்டிருந்த சந்தால் பழங்குடியின மக்களை, நவம்பர் 3ஆம் தேதியிலிருந்து கட்டவிழ்த்து விடப்பட்ட போலீசு அடக்குமுறையானது பேரெழுச்சிக்குத் தள்ளியது. சந்தால் பழங்குடியின மக்கள் மீதான போலீசு வெறியாட்டத்துக்குக் காரணம் என்ன?
மே.வங்கத்தின் மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்கள், காடுகள் நிறைந்த பின்தங்கிய பகுதியாகும். சந்தால் பழங்குடியின மக்கள் நிறைந்துள்ள இம்மாவட்டங்களில் சமூக நலத்திட்டங்கள் நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு, சந்தால் பழங்குடியின மக்கள் வறுமையில் உழன்று கொண்டிருக்கிறார்கள். இப்பகுதியில் இயங்கிவரும் நக்சல்பாரி புரட்சியாளர்கள் இம்மகளை அமைப்பாக்கி, அரசியல்படுத்திப் போராட்டங்களைக் கட்டியமைத்து வந்தனர். நக்சல்பாரி தீவிரவாதிகளை ஒடுக்குவது என்ற பெயரில், மே.வங்க போலீசு பயங்கரவாதிகள் இப்பகுதியில் அப்பாவி மக்கள் மீது வன்முறைவெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விடுவதும், மாவோயிஸ்டு தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி அப்பாவிகளைக் கைது செய்து வதைப்பதும் கேள்விமுறையின்றித் தொடர்ந்து கொண்டிருந்தது.
இச்சூழலில், உள்நாட்டுவெளிநாட்டு முதலாளிகளுக்கு விசுவாச சேவை செய்துவரும் போலி கம்யூனிச ஆட்சியாளர்கள், இப்பகுதியில் மக்களின் வாழ்வுரிமையைப் பறித்து சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவக் கிளம்பினார்கள். ஏற்கெனவே சிங்கூர்நந்திகிராமத்தில் சி.பொ.மண்டலத்தை நிறுவி, மக்களின் எதிர்ப்பை மிருகத்தனமாக ஒடுக்கி, நாடெங்கும் அம்பலப்பட்டுப் போன சி.பி.எம்.ஆட்சியாளர்கள். இம்முறை இத்திட்டம் பற்றி மக்களுக்குத் தெரிவிக்காமல், சதிகார முறையில் நிறைவேற்றிடத் துடித்தனர்.
இருப்பினும், ஜிண்டால் எனும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனத்தின் எஃகு ஆலைக்காக சந்தால் பழங்குடியினர் வாழும் காட்டுப் பகுதிகளை அழித்து 5,000 ஏக்கரில் சி.பொ.மண்டலம் நிறுவப்படவுள்ள உண்மைகள் மெதுவாகக் கசியத் தொடங்கியதும், மாவோயிஸ்டுகள் இச்சிறப்புபொருளாதார மண்டலத்துக்கு எதிராகப் பிரசாரத்தில் ஈடுபட்டுப் பழங்குடியின மக்களைப் போராட்டத்துக்கு அணிதிரட்டி வந்தனர். கடந்த நவம்பர் 2ஆம் நாளன்று அவசர அவசரமாக இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அறிவிக்கப்பட்டு, மே.வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் மைய அரசின் அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் விழாவில் பங்கேற்றுவிட்டுத் திரும்பும் வழியில், மாவோயிஸ்டுகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தி எச்சரித்தனர். இத் தாக்குதலில் வாகனங்களுக்குச் சேதம் ஏற்பட்டதைத் தவிர, வேறு எவருக்கும் பாதிப்பில்லை.
இருப்பினும், மறுநாளே மாவோயிஸ்டு பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை என்ற பெயரில் பழங்குடியின மக்கள் மீது மே.வங்க போலீசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. பழங்குடியின மக்களின் அற்ப உடமைகளையும், சைக்கிள்பாத்திரங்கள் போன்றவற்றைக் கூட விட்டுவிடாமல் நாசமாக்கிய போலீசார், மூன்று பள்ளிக்கூட மாணவர்களை அரசைக் கவிழ்க்க சதி செய்ததாகப் பொய் வழக்கு போட்டு கைது செய்து வதைத்தனர். சீதாமணி முர்மூ என்ற பெண்ணை துப்பாக்கிக் கட்டையால் போலீசார் தாக்கியதில் அவரது கண்களில் இரத்தம் பீறிட்டு, இன்று அவர் பார்வையிழந்துள்ளார். பல கர்ப்பிணிப் பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. பலருக்கு எலும்பு முறிந்து மருத்துவமனைகளில் கிடத்தப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர், வியாபாரி, கண்பார்வையற்ற முதியவர் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிரவாதிகள் என்று கைது செய்யப்பட்டுக் கொடூரமாக வதைக்கப்பட்டனர். உள்ளூர் போலீசும் ரிசர்வ் போலீசும் சேர்ந்துகொண்டு விடியவிடிய 3 நாட்களுக்கு நடத்திய இத்தாக்குதலால் மித்னாபூர் மாவட்டமே பீதியில் உறைந்து போனது.
போலீசு அடக்குமுறையால் துவண்டுபோன சந்தால் பழங்குடியின மக்களிடம் நம்பிக்கையூட்டி அணிதிரட்டிய மாவோயிஸ்டுகள், லால்கார்ஜார்கிராம் பகுதியில் 600க்கும் மேற்பட்ட கிராமத் தலைவர்களைக் கூட்டி விவாதித்து, அதனடிப்படையில் 10 அம்சக் கோரிக்கைகளுடன் போராட்டத்தைத் தொடர முடிவு செய்தனர். மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களில் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டு, மக்கள் கமிட்டிகள் உருவாக்கப்பட்டு அவற்றை ஒருங்கிணைக்கும் “போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி” நிறுவப்பட்டது. அதன் வழிகாட்டுதலின்படி, நவம்பர் 6ஆம் தேதி இரவு 5,000 பேருக்கு மேலாக வில்அம்பு, கோடரி, அரிவாள்களுடன் அணிதிரண்ட பழங்குடியின மக்கள் லால்கார் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டுச் சூறையாடி, போலீசாரை நையப்புடைத்துக் கொட்டடியில் தள்ளிப் பூட்டினர். தொலைபேசிமின்சார இணைப்புகளைத் துண்டித்தனர்.
மறுநாள், நவம்பர்7; அந்நவம்பர் புரட்சி நாளில் மேற்கு மித்னாபூர் மாவட்டமெங்கும் ஆயுதமேந்திப் பல்லாயிரக்கணக்கில் திரண்டு பேரணி நடத்திய பழங்குடியின மக்கள், அம்மாவட்டத்தை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் அகலமான குழிகள் வெட்டி முற்றாகத் துண்டித்தனர். சாலைகளில் மரங்களை வெட்டிப்போட்டுத் தடையரண்களை ஏற்படுத்தினர். சமரசம் பேச வந்த கீழமை நீதிமன்ற துணை மாஜிஸ்திரேட் பழங்குடியின மக்களால் “கெரோ” செய்யப்பட்டதால், அவரும் போலீசாரும் வாகனங்களை விட்டுத் தப்பியோடினர்.
அடுத்த இரு நாட்களில் மித்னாபூர் மாவட்டம் மட்டுமின்றி சந்தால் பழங்குடியினர் நிறைந்த புருலியா, பங்குரா மாவட்டங்களிலும் வில்அம்பு, கோடாரி, அரிவாள், துடப்பக்கட்டையுடன் போலீசு அடக்குமுறைக்கு எதிராகவும், சி.பொ.மண்டலத்துக்கு எதிராகவும் பல்லாயிரக்கணக்கானோரின் எழுச்சிமிகு பேரணிகள் தொடர்ந்தன. இம்மாவட்டங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு, போலீசு நிலையங்களும் அரசு அலுவலகங்களும் முற்றுகையிடப்பட்டன. போலீசாரும் அரசு உயர் அதிகளாரிகளும் இம்மாவட்டங்களை விட்டுத் தப்பியோடினர். நவம்பர் 10ஆம் தேதியன்று பல்வேறு பழங்குடியின அமைப்புகள் ஒன்றிணைந்து தாஹிஜுரி எனுமிடத்தில் சாலை மறியல் நடத்தியபோது, தடியடி நடத்திக் கலைக்க முயன்ற போலீசாரை 5000க்கும் மேல் திரண்ட பழங்குடியின மக்கள் ஏறத்தாழ 5 கி.மீ.தொலைவுக்குத் துரத்தி துரத்தி வந்து விரட்டியடித்தனர். இம்மூன்று மாவட்டங்களில் அரசு நிர்வாகம் முற்றாகச் செயலிழந்து, பழங்குடியின மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் ‘விடுதலைப் பிரதேசங்களாக’க் காட்சியளித்தன.
அரண்டு போன போலிக் கம்யூனிச ஆட்சியாளர்கள் சர்வகட்சி கூட்டத்தைக் கூட்டி, பழங்குடியின மக்களிடம் சமரசம் பேச வருமாறு அழைத்தனர். ஆனால், எல்லா ஓட்டுக்கட்சிகளும் தங்களுக்குப் பழங்குடியின மக்களிடம் செல்வாக்கு இல்லை என்று கூறி மறுத்துவிட்டன. மித்னாபூர் மாவட்டம், பின்பூர் தொகுதியில் பழங்குடியின மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்ற ஜார்கந்து கட்சி (நரேன்பிரிவு) எம்.எல்.ஏ.கூடச் சமரசப் பேச்சுவார்த்தைக்குத் தூது செல்ல மறுத்துவிட்டார். இதற்கிடையே, போலீசு அடக்குமுறையைக் கண்டித்து, திரிணாமூல் காங்கிரசு கட்சியினர் மித்னாபூர் மாவட்ட நீதிமன்றத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்திய சோசலிஸ்ட் ஐக்கிய மையக் கட்சியினர் ஜார்கிராம் பகுதியில் கடையடைப்புப் போராட்டத்தையும், பேரணிமறியல் போராட்டங்களையும் நடத்தினர். ஜார்கந்த் திசாம் கட்சி மூன்று மாவட்டங்களில் வெற்றிகரமாக கடையடைப்புப் போராட்டத்தை நடத்தியது.
மே.வங்க ‘இடது சாரி’ கூட்டணியிலுள்ள வலது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான நந்தகோபால் பட்டாச்சார்யா, “அரசு அடக்குமுறையின் எதிர்விளைவுதான் சந்தால் பழங்குடியனரின் எழுச்சி” என்று ‘இடதுசாரி’ அரசைச் சாடியுள்ளார். கூட்டணியிலுள்ள பார்வர்டு பிளாக் கட்சியின் செயலரான அசோக் கோஷ்,”பழங்குடியின மக்களை நீண்டகாலமாகப் புறக்கணித்து ஒடுக்கியதால் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடுதான் இக்கிளர்ச்சி. இதற்கு மாவோயிஸ்டுகள் மீது பழிபோடுவதில் பயனில்லை” என்று சி.பி.எம். ஆட்சியாளர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
மறுபுறம், நந்திகிராம வழியில் மோட்டார் சைக்கிள் ரௌடிப் படைகளைக் கொண்டு தாக்க சி.பி.எம்.குண்டர்களை ஏற்பாடு செய்தனர். சி.பி.எம்.கட்சியின் அமைச்சர் சுஷந்தாகோஷ், மாவட்டச் செலாளர் தீபக் சர்க்கார் ஆகியோர் தலைமையில் வெடிகுண்டுகளுடன் குண்டர் படை கட்டியமைக்கப்பட்ட போதிலும், பழங்குடியின மக்களின் கோபாவேசத்தைக் கண்டு அஞ்சி, இத்தாக்குதல் திட்டத்தை சி.பி.எம்.கட்சி நிறுத்தி வைத்துவிட்டது.
வேறுவழியின்றி பழங்குடியின மக்களின் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் “போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்களை கமிட்டி”யிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த விழைவதாக அரசு அதிகாரிகள் அறிவித்தனர். மக்கள் கமிட்டியினரோ, இப்பேச்சுவார்த்தை பல்லாயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் முன் பகிரங்கமாக நடத்தப்பட வேண்டும்; அதற்கு முன் போலீசு அதிகாரிகள் மக்களிடம் தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். அதிகார வர்க்கமோ தங்களை “கெரோ” செய்து அவமானப்படுத்தி விடுவார்கள் என்று அஞ்சி , இதற்கு உடன்பட மறுத்தது.
இந்த இழுபறியோடு போராட்டத்தை மேலும் நீட்டித்தால், கூலிஏழைகளான பழங்குடியினருக்கு மண்ணெண்ணெய் முதலான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் இடர்ப்பாடுகள் பெருகும் என்பதால் போராட்டத்தைத் தற்காலிகமாக விலக்கிக் கொண்டு, போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தைச் சமூகப் புறக்கணிப்பு செய்யுமாறு பழங்குடியினருக்கு மக்கள் கமிட்டி அறைகூவல் விடுத்துள்ளது. இதனால் போராட்டம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதாகவோ, அதிகார வர்க்கபோலீசு ஆட்சி மீண்டும் நிலைநாட்டப்பட்டு விட்டதாகவோ கருத முடியாது. மக்கள் கமிட்டியின் சமூகப் புறக்கணிப்பு அறிவிப்பினால், இனி தவித்த வாய்க்கு தண்ணீர் கூட பழங்குடியின மக்கள் கொடுக்க மாட்டார்கள் என்று உள்ளூர அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது அதிகார வர்க்கமும் போலீசும். இதுவே பழங்குடியின மக்களின் பேரெழுச்சிக்குக் கிடைத்த வெற்றி.
நேற்று, சிங்கூர்நந்திகிராமத்தில் சி.பி.எம். குண்டர்களையும் போலீசையும் கொண்டு வெறியாட்டம். இன்று, மித்னாபுரில் அதிகார வர்க்கத்தையும் போலீசையும் கொண்டு பாசிச பயங்கரவாதம். மே.வங்கத்தை ஆளும் போலிகம்யூனிச சி.பி.எம். கட்சியினர் உழைக்கும் மக்களின் எதிரிகளாக, பாசிஸ்டுகளாகச் சீரழிந்து விட்டதற்கு அண்மைக்கால நிரூபணங்களே இவை. இப்போலி கம்யூனிஸ்டுகளை நேற்றுவரை நம்பிய மே.வங்க உழைக்கும் மக்களே. அவர்களின் பாசிச ஒடுக்குமுறைக்கும் முதலாளித்துவ சேவைக்கும் எதிராகப் பேரெழுச்சியில் இறங்கியுள்ள நிலையில், புரட்சியை நேசிக்கும் சி.பி.எம். அணிகள் இனியும் இத்துரோகக் கட்சியில் நீடிக்க அடிப்படை ஏதாவது இருக்கிறதா?
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2008.
பின் குறிப்பு:- போலிக் கம்யூனிஸ்ட் என்பதன் இடத்தில் திருத்தல்வாதிகள் என்று போட்டு கொள்ளவும்