இன்றைய உலகமயமாதல் சூழலிலே மார்க்சிசம் தனது ஒட்டுமொத்த வளர்ச்சியின் ஊடே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்து முன்னேறிச் செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர்நோக்கி நிற்கின்றது. நமது நாட்டில் அக்கடமைக்குரிய பங்கையும் பங்களிப்பையும் வழங்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு.
“யூட்டோப்பியா” (Utopia) என்ற நூலில், “மனிதனை உண்ணும் செம்மறியாடுகள்’ பற்றி சர் தோமஸ் மோர் எழுதியிருந்தார். நிலப் பிரபுக்கள் விவசாயிகளைக் கட்டாயப்படுத்தி நிலத்தைவிட்டு வெளியேற்றியதைப் பற்றி எழுதினார்.
இவ்வாறே பாட்டாளிவர்க்கம் தோன்றியது. நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கட்குத் தம் உழைப்புச்சக்தியை விட்டால் எதுவுமில்லை. அதேவேளை, அவர்கள் நிலமானியச் சமுதாயத்தளைகளினின்று விடுதலை பெற்றிருந்தனர்.
இலங்கையின் தோட்டத்தொழில் தொடர்பாகவும் இவ்வாறான ஒரு நிகழ்வை நாம் காணலாம். அப்போது இலங்கையையும் இந்தியா வையும் ஆண்ட பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள், கெட்டொழிந்து தமது நிலத்தை இழந்த விவசாயிகளைத் தென்னிந்தியாவினின்று கொண்டு வந்து தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தினார்கள். வருடம் முழுவதும் வேலைவாங்க வசதியானவர்கள் என்பதால் இலங்கைக்குள் குடிவந்த இந்தத் தொழிலாளரை அவர்கள் விரும்பினார்கள்.
இது எவ்வாறு நடக்கிறது என்று பார்ப்போம். தன் நிலத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட விவசாயி பாட்டாளியாக மாற்றப்படுவது பற்றி . அவனுக்கு, இப்போது தன் உழைப்புச் சக்தியை விட்டால், தனதென்று சொல்ல நிலமோ உற்பத்திச் சாதனமோ அவனிடம் இல்லை. எனவே, தான் வாழ்வதற்குத் தன் உழைப்புச் சக்தியை விற்பதைவிட அவனுக்கு வேறு வழியில்லை.