இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-6
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-6

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-6

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.)யானது, 1925 டிசம்பர் 25 அன்று கான்பூரில் நடந்த மாநாட்டில்தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதாக அறிவிக்கிறது. ஆனால் சி.பி.எம். கட்சியோ, 1920-ல், அன்றைய சோவியத் ஒன்றியத்தில் ஓர் அங்கமாக இருந்த உஸ்பெகிஸ்தானின் (துருக்கேஸ்தான்) தலைநகர் தாஷ்கண்டில் அக்டோபர் 17-ம் தேதி நடந்த கூட்டம்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நாளாகும் என்று அறிவிக்கிறது. இவற்றில் எது சரியானது என்ற குழப்பம் இந்திய கம்யூனிச இயக்கத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. ஆனால் வரலாற்று ஆதாரங்களின்படி, 1925 டிசம்பர் 25-ல் கான்பூரில் நடந்த மாநாட்டில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது என்பதே சரியான முடிவாகும்.

அன்றைய பிரிட்டிஷ் காலனியாட்சியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல கம்யூனிசக் குழுக்கள் இரகசியமாக இயங்கி வந்தன. வங்கத்தில் அனுசீலன் சமிதி, ஜுகந்தர், முசாபர் அகமது குழு முதலான குழுக்களும், மும்பையில் டாங்கே தலைமையிலான குழுவும், சென்னையில் சிங்காரவேலர் தலைமையிலான குழுவும், ஐக்கிய மாகாணத்தில் சௌகத் உஸ்மானி தலைமையிலான குழுவும், பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தில் குலாம் உசைன் தலைமையிலான குழுவும் இயங்கி வந்தன. அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசானது எல்லா வகையான கம்யூனிசக் குழுக்களையும் முற்றாகத் தடை செய்ததோடு, குறிப்பாக, லெனின் தலைமையிலான “போல்ஷ்விக்” சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட் குழுக்களைத்தான் மிகத் தீவிரமாக ஒடுக்கியது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், கட்சியின் முதலாவது பொதுச் செயலாளராகவும் பணியாற்றிய எஸ்.வி. காட்டே 1950-களில் அளித்த விரிவான பேட்டியானது, பின்னர் “ஃபிரண்ட்லைன்” இதழில் மறுபதிப்பாக வெளிவந்தது. அதில் அவர், “தாஷ்கண்ட் நகரிலோ அல்லது வேறிடத்திலோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், அது முறையாக இயங்கவில்லை. இந்திய கம்யூனிச இயக்கத்திற்கான ஒரு அடித்தளம் உருவாக்கப்பட்டது என்றுதான் இதனைக் குறிப்பிட முடியும். பல்வேறு கம்யூனிஸ்டு குழுக்களை ஒன்றிணைத்து கான்பூர் நகரில் நடத்தப்பட்ட மாநாடுதான், இந்திய கம்யூனிஸ்டு கட்சி உண்மையாகத் தொடங்கப்பட்டதை அறிவித்தது.

ஒரு கம்யூனிஸ்டு குழு தாஷ்கண்ட் நகரில் கூடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டதாக அறிவிக்கலாம் எனினும், அது நீடித்து நின்று செயல்படவேயில்லை. ஏனெனில், அதன் தொடக்ககால உறுப்பினர்களில் சிலர் இந்தியாவுக்கு வந்தபோது, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டார்கள். இந்நிலையில் ஒரு கட்சியாக அது செயல்பட்டிருக்க அடிப்படையே இல்லை.

“கான்பூர் நகரில் சத்யபக்தா என்பவர்தான் கம்யூனிஸ்டு கட்சியைத் தொடங்க வேண்டுமென்ற நோக்கத்துடன், பல கம்யூனிஸ்டு குழுக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் “பிரதாப்” என்ற பத்திரிகையின் உதவியுடன் நாடெங்குமுள்ள கம்யூனிஸ்டுகளை அறைகூவி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அதைப் பார்த்து, நாங்கள் அந்த மாநாட்டுக்குப் புறப்பட்டோம்.

“அங்கே நாங்கள் சத்யபக்தாவுடன் விவாதித்தோம். அவர் தேசியவாத கம்யூனிசக் கட்சியை – இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்ட வேண்டுமென்றார். அகிலத்தின் பொது வழிகாட்டுதலை மட்டும் ஏற்கலாம்; மற்றபடி, இந்திய நிலைமைக்கேற்ப கட்சியின் பெயரும் கொள்கையும் அமைய வேண்டுமென அவர் வாதிட்டதை நாங்கள் நிராகரித்தோம். அகிலத்தின் வழிகாட்டுதலின்படி, சர்வதேச பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான ஒரு அங்கமாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) அமைய வேண்டுமென்று எங்கள் கருத்தைப் பிரச்சாரம் செய்து மாநாட்டில் பெரும்பான்மை முடிவாக்கினோம். சிங்காரவேலர் அன்று நடந்த கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உரையாற்றினார். இந்தியா மட்டுமின்றி, வெளிநாட்டு கம்யூனிஸ்டு கட்சிகளின் பார்வையாளர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்” என்று அக்கால நிகழ்வுகளை தனது நினைவிலிருந்து காட்டே விளக்கியுள்ளார். (Frontline , Volume 29 – Issue 09, May 05-18, 2012)

இந்த வரலாற்று ஆதாரங்களின்படி, 1925-ம் ஆண்டு டிசம்பர் 25, 26, 27 தேதிகளில் கான்பூரில் நடந்த மாநாட்டில்தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது என்பதே சரியான முடிவாகும். சி.பி.எம். கட்சி வறட்டுத்தனமாகவும் வீம்புக்காகவும் 1920-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டதாகக் கூறுவது தவறானதும், அணிகளைக் குழப்புவதுமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *