மனிதரும் கடவுளரும்- சி.சிவசேகரம்
LDதங்கள் அனைத்திற்கும் பொதுவான அம்சங்கள் என்று அதிகம் இல்லை. வெவ்வேறு சமுதாயச் சூழ்நிலைகளிற் தோன்றிப் பரவியும் இணைந்தும் பிரிந்தும் மாறியும் வந்துள்ள மதங்கள் அவற்றின் சமுதாயச் சூழல்களையும் அவற்றில் ஏற்பட்ட் வரலாற்று மாற்றங்களையும் பிரதிபலிப்பன. மதங்கள், பொதுவாகவே, தாம் உருவான காலச் சூழலுக்குத் தம்மை இறுகப் பிணைத்துக் கொண்டதன் விளைவாகப் புதிய சமுதாயச் சூழல்கட்கு ஏற்றவாறு இயங்க முடியாது தவிக்கின்றன. சமுதாய மாற்றங்களை நிராகரித்துப் பழைமை பேண வேண்டுவோர், மதங்களைத் தமக்கு ஆதாரமாகப் பயன்படுத்துவது வழமை. மத நம்பிக்கைகள் மட்டுமன்றிச் சடங்கு சம்பிரதாயங்களும் மாற்ற இயலாதன என்றே அவர்கள் வாதிப்பார்கள். ஆயினும் வரலாற்றின் மாற்றங்கட்கு வளைந்து கொடுக்காமல் ஒரு மதம் நிலைக்க முடியாது என்பதால், மதங்கள் இறுதியிற் சமுதாய மாற்றத்துக்கு விட்டுக் கொடுக்க நேருகிறது. இதற்கான உதாரணங்களை இங்கு நான் தர அவசியம் இல்லை. மதங்களின் ஒவ்வோர் அம்சமும் அதன் தோற்றுவாயில் மனிதன் என்ற சமுதாய விலங்கின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டவையே. மனிதரது தேவைகட்கும் ஐயங்கட்கும் மனிதர் கண்டறிந்த தீர்வுகள் பல மதங்கள் என்பன மனிதர் சாத்தியமெனக் கருதிய தீர்வுகளில் ஒரு பகுதியேயன்றி வேறல்ல. மதங்கள் மனிதத் தேவைகளை எவ்வளவு தூரம் நிறைவு செய்தன என்றோ அவற்றால் இன்னும் எவ்வளவு காலம் எவ்வாறு பயனுள்ள பணியாற்ற முடியுமென்றோ
நான் ஆராய முற்படவில்லை. மறுமையை வலியுறுத்தி இம்மையை அதற்குக் கீழ்ப்பட்ட ஒன்றாக்க முனையும் மதங்களின் மறுமைக் கோட்பாடுகளும் ஆன்மா, கடவுள் என்பன பற்றிய கருத்துகளும் மனிதரது இம்மை அனுபவங்களில் வேரூன்றி நிற்கின்றன என்பதை மட்டும் இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
மனிதருக்குத் தம் வாழ்வு இந்த மண்ணிற் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே வரையறைப்பட்ட ஒன்றென்பதை ஏற்க இயலாமையையே மறுமைக் கோட்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன. மரணத்தின் பின் மனிதர் இன்னொரு முறை பிறப்பதாகக் கருதுவதும் இன்னோர் உலகை அடைவதாகக் கொள்வதும் மரணம் என்ற வலிய உண்மையை ஏற்க இயலாமையின் காரணமாக விளைந்தவை. வானுலகம், மோட்சம், சுவர்க்கம், நரகம் போன்ற படிமங்களும் இன்ப துன்பங்கள் பற்றியும் நன்மை தீமை பற்றியும் மனிதர் கொண்டிருந்துள்ள கருத்துகளின்பாற்பட்டவையே. நிரந்தரமான ஆன்மா, உருவமும் அருவமும் அற்ற ஆதியந்தமற்ற பரம்பொருள் போன்ற கருத்துகள் காலத்தாற் பிற்பட்டவை. இக்கருத்துகளின் விருத்தி ஒரு சிந்தனை மரபின் விருத்தி. இந்து மதம் ஒரு புறம் மனித உணர்வு கடந்த ஒரு பரம்பொருளை வலியுறுத்தினாலும், உண்மையில் அது பல கடவுட் கொள்கையுள்ள மதமேயாகும். இந்து மதத்தில் ஒரு கடவுட் கொள்கை வந்த முறை, யூத-கிறிஸ்தவ-இஸ்லாமிய மரபில் ஒரு கடவுட் கொள்கை புகுந்த முறையினின்றும் வேறுபட்டது என்பதால், இந்து மதம் ஏக காலத்தில் ஒரு கடவுட் கொள்கையைப் பல கடவுட் கொள்கைகளுடன் இணைத்துப் பேணக் கூடியதாயிற்று. ஆயினும் ஒரு கடவுட் கொள்கை பல கடவுட் கொள்கையை விடத் தன்னளவிலேயே மேம்பட்டதாகி விடமுடியாது. கடவுட் கொள்கையின் முக்கிய இடர்ப்பாடே மனிதர் அறிதற்கரியதாகக் கூறப்படும் ஒன்றை மனிதர் அறியக் கூடியவாறு மட்டுமன்றி அறிவுபூர்வமான வாதங்களுடு நிலைநாட்ட முனைவதாகும். கடவுள் நம்பிக்கையுள்ளோர் எவ்வளவு தூரத்துக்குக் கடவுளைத் தெளிவாக விவரிக்க முனைகின்றனரோ, அவ்வளவு எளிதாக ஒரு நாத்திகனாற் கடவுள் பற்றிய விளக்கங்களையும் விவரணங்களையும் மறுக்க முடிகிறது. பிறவியின் நோக்கமோ கடவுள் உலகையும் உயிர்களையுந் தோற்றுவித்திருப்பின், அப்படைப்பின் நோக்கமோ அல்லது யாவும் மாயை எனின் அம்மாயைக்குரிய காரணமோ மனிதர் அறியத்தக்கவையல்ல. மனிதர் அறிய இயலாத பரம்பொருள் ஒன்றுக்கு மனிதர் கருதுமாறான ஒரு நோக்கம் ஏன் இருக்க வேண்டும்? எவராலும் மறுக்கக்கூடாத ஒரு கடவுட் கொள்கை மனிதராற் பயன்படுத்த முடியாத ஒன்றாகவே இருக்கும். அத்தகைய கடவுளை அடைய முனையும் எவரும் அதனை அடைவரோ
என்பதும் நிச்சயமற்றது. அக் கடவுளை அடைய விரும்பாமலும் முயலாமலும் ஒருவர் அடையமுடியாது என்ற நிலை மைக்கும் அவசியமில்லை. கடவுளை அடைவது தான் சென்ம ஈடேற்றத்தின் இறுதி நிலை என்று யார் கூற முடியும்? அதற்கப்பால் இன்னொன்றிருந்தால் அதை அக்கடவுளன்றி யார் நிருணயிக்கக்கூடும்? கடவுளர் பற்றிய மனிதரது கொள்கைகள் யாவும் ஊகங்களென்ற அளவில் ஒன்றுக்கு ஒன்று சமமானவையே. இந்தளவிற். கடவுளர் பற்றிய கொள்கைகளைக் கொஞ்சம் ஒப்பிடுவோம்.
கடவுள் தன் சாயலிலேயே மனிதரைப் படைத்தார் என்ற கருத்து மற்றைய உயிரினங்கள்மீது மனிதர் தமது ஆளுமையை நிலைநாட்டிய பின்னரே ஏற்பட்டது. நேர்மையாகக் கூறின், இம்மனிதர் தமது சாயலிலேயே அக்கடவுளைச் சிருட்டித்தனர். அக்கடவுளுக்கும் மனிதர் போல விருப்பு வெறுப்புக்களும் கோபமும் அன்பும் இருந்தன. எதிரி இருந்தான். மனிதரை நேசிக்கும் ஒரு பிதாவான கடவுள் ஆணாதிக்கத்தின் குறியீடாகவும் மனித சமுதாய விழுமியங்களை நியாயப்படுத்தும் ஒரு வாதியாகவும் உள்ளார். பாலுறவு பற்றியும் பிற புலன் இன்பங்கள் பற்றியுமான குற்ற உணர்வுகள் ஆதிக்கஞ் செலுத்திய நெறிகளைக் கொண்ட ஒரு சமுதாயம் கடவுளையும் தனது விழுமியங்கட்கு ஏற்பவே கண்டது. விவிலியத்தின் ஒரு கடவுட் கொள்கைக்கு முற்பட்ட சமூகங்களிற் கடவுளர் மிகுந்த மனித சுபாவம் உடையோராயிருந்தமையும் கடவுளரிடையே மனிதரிடையிலான உறவுகள் போன்ற உறவுகள் அமைந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்தியத் துணைக்கண்டத்திலும் உலகின் பிற பகுதிகளிலும் மனிதப் பண்புகளும் மனிதரிடையிலான உறவுகள் போன்றஉறவுகளுங் கொண்ட கடவுளர் இருந்தனர். இவை யாவும் மனிதரது கடவுட் கொள்கை எவ்வளவு தூரம் மனித வாழ்வின் அடிப்படையில் உருவானது என்றே காட்டுகின்றன. மனிதர் பற்றி எவ்வகையான எதிர்பார்ப்பேனும் இருக்கக்கூடிய ஒரு கடவுளுக்கு ஏன் வேறு உணர்வுகளும் இருக்க முடியாது என்பது ஒரு நியாயமான வாதமே. இந்து மதத்தின் ஒரு கடவுட் கொள்கை ஓர் அருவுருவற்ற பரம்பொருளாக அமைந்தது. இக்கொள்கை பலகடவுட் கொள்கையை நிராகரிக்காமல் அத்தனை தெய்வங்களையும் பரம்பொருளின் பகுதியாக்கிக் கொண்டது. பெளத்தத்தின் நாத்திகத் தன்மையும் பரம்பொருள் பற்றிய இந்துமதக் கோட்பாடும், மனிதர் தமது அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற நாடும் தெய்வத் துணையைத் தரவல்லனவல்ல. பிராத்தனைகட்கும் வேண்டுதல்கட்கும் நிஷ்டைக்கும் தவத்துக்கும் இரங்கக்கூடிய கடவுளரின் நிலைப்பு இதனாற் சாத்தியமாயிற்று. இத்தகைய கடவுளர் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவராயின், மனிதர் விளக்கி விவரிக்க முனையும் எத்தகைய
கடவுளருமே பகுத்தறிவுக்கு ஒவ்வாதவரே. மனிதரது அறிவுக்கு அப்பாற்பட்ட உணர்வு கடந்த பரம்பொருளை மனிதர் அறிதல் அரிது. அதனை நட்பாக்கவோ பகையாக்கவோ இடமில்லை. மனிதச் செயற்பாடுகளை நிருணயிக்கும் பரம்பொருள் மனிதச் செயல்களால் எவ்வகையிலும் பாதிக்கப்பட முடியாதது. எனவே மனித வாழ்க்கையின் செய்நெறி பற்றிப் பரம்பொருளின் விருப்பு வெறுப்பென்ற கருத்துகட்கே இடமில்லை. இங்கே, மனித இருப்பு, தன் அடிப்படையிலேயே தன்னை அறிய வேண்டிய நிலைக்கு ஏறத்தாழ நாத்திகத்துக்கு நெருக்கமாக, வந்துவிடுகிறது. மனிதருக்கோ கடவுளர், வாழ்வின் பற்றுக்கோடாகவே தேவைப்படுகின்றனர். இதையே மதங்களும் மதச்சார்புள்ள சமூக அதிகார பீடங்களும் வரலாற்றில் பயன்படுத்தி வந்துள்ளன.
தேவகுமாரர், தேவதூதர், அவதாரங்கள், தெய்வசித்தி பெற்றோர், தெய்வத்தன்மை கொண்ட மன்னர்கள் போன்ற அனைவருமே மனித சமுதாயத்தின்மீது தம் ஆளுமையைச் செலுத்தக் கடவுள் பேரைப் பயன்படுத்தினோரே. இவர்கள் அனைவருமே இக்காரணத்தாற் கெட்டவர்களோ, ஆணவ மிகுந்தவர்களோ, பிற்போக்குச் சக்திகளோ ஆகிவிடமாட்டார். ஒவ்வொருவரையும் அவரவரது வரலாற்றுச் சூழலில் வைத்தே நாம் மதிப்பிடல் நியாயம். கடவுள் பற்றிய எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் சமுதாயங்களின் நிலைமைகட்கேற்ப விருத்தியடை கின்றன. எந்தவிடத்து எல்லாம் வல்ல ஒரு கடவுளின் பேரால் மனிதர் மனிதரை அழிக்குமாறு தூண்டப்படுகிறனரோ, அந்தவிடத்துக் கடவுட் கொள்கை மானுட விரோதமான ஒன்றாகிவிடுகிறது. எந்தவொரு தெய்வத்தின்மீதான நம்பிக்கையும் தன்னை நிலைநாட்ட வேண்டி வேறுவிதமான நம்பிக்கையையும் வழிபாட்டு உரிமையையும் மறுக்க முற்படுமாயின், முன்னைய நம்பிக்கை மிகவும் பலவீனமான ஒன்றாகவே இருக்க முடியும். மனிதரைப் பிரிக்கும் கடவுட் கொள்கைகளைவிடக் கடவுள் மறுப்பு மேலானது. விலங்குகளையும் மரங்களையும் முன்னோரையும் வழிபட்டு வந்த ஆதி மனிதரது கடவுட் கொள்கைகூட, மதத்தின் பேரால் போர் தொடுக்கத் தூண்டுங் கொள்கைகளைவிட முற்போக்கானவை.
மதங்களுங் கடவுட் கொள்கைகளும் காலத்துடன் மாறி வந்தவை. மதச்சடங்கு சம்பிரதாயங்களும் வேகமாக மாறி வருவனவே. இவற்றிற் பேணத்தக்கது எது தகாதது எது என்று விதிக்க வல்லார் எவருமில்லை. காலமே மாற்றத்தின் அதி வலிய கருவி. இந்து சமயம் போன்று அதிக மாற்றங்களைக் கண்ட பெருமதங்கள் இல்லை. பிற மதங்களின் கடவுட் கொள்கைகளை மதிப்புடனோ சகிப்புத் தன்மையுடனோ கருதி வந்தமை இந்திய மத மரபுகளில் இடையிடையேனுங் காணப்பட்ட ஒன்று. அது
முற்றாக அழியும் அபாயம் இன்று தலை தூக்கியுள்ளது. காவிக் கொடியைப் போர்க் கொடியாக உயர்த்தும் போக்குப் பற்றியும் வித்தைக்காரர்களும் அவதாரங்கள், ரிஷகள், பகவான்கள் என்று தம்மைக் கூறிக் கொள்வோரும் மனிதரது பலவீனங்களைப் பயன்படுத்திக் கடவுளரை வியாபாரமாக்க முனைவது பற்றியும் இந்து இளைஞர்கள் கூடியளவு சிந்தித்துச் செயற்படுவார்கள் என நம்புகிறேன்.
மதச் சுதந்திரமும் மனிதச் சுதந்திரமும்
சமுதாயக் கோட்பாடுகள் சமுதாயத்துக்கும் மனிதருக்கும் இடையிலான உறவை வரையறுக்கின்றன. அதன் மூலம் அவை, ஒருபுறம் தனிமனிதச் சுதந்திரம் பற்றிய சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. மறுபுறம், தனிமனித உரிமைகள் தொடர்பான, உத்தரவாதங்களையும் முன் வைக்கின்றன. மனிதரின் இருப்பு சமுதாய இருப்பாகவே வரலாற்றில் இருந்து வந்துள்ளது. இச் சமுதாய வாழ்வே இன்று தனிமனிதர் செய்யக்கூடிய பலவேறு வகையான காரியங்களை இயலுமாக்கியது. இவ்வகையிற் தனிமனித நலனும் சமுதாய நலனும் இணைந்தே செயற்பட்டு வந்துள்ளன. இவ்விரண்டு நலன்களுக்குமிடையில் முரண்பாடுகள் எப்போதுமே இருந்துள்ளன. ஆயினும் அம் முரண்பாடுகள் அடிப்படையிற் சினேகமானவை. சமுதாய மாற்றத்தில் இம்முரண்பாடுகட்குத் தொடர்பாகச் செயற்படும்போதே தனிமனிதரது பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. எனவே மனிதச் சுதந்திரம் எனும்போது நாம் தனிமனிதச் சுதந்திரம் என்ற ஒன்றை மட்டும் கருத்திற் கொள்ளாமல், சமுதாயம் என்ற முழுமையினது சுதந்திரத்தையும் அதன் முக்கியமான கூறுகளது சுதந்திரத்தையும் சேர்த்தே கருத வேண்டியிருக்கிறது.
சமுதாயக் கோட்பாடுகள் காலத்துடன் விருத்தியடைந்து வந்துள்ளன. மரபுகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற சமுதாய வழக்குத் தொடர்பான வழிகாட்டல்கள் பரவலாகச் சமுதாய ஏற்பைச் சார்ந்து நிற்பன. ஒழுக்கம், அறநெறிகள் போன்றனவற்றில் மதங்களுக்கு முக்கியமான பங்கு இருந்து
வந்துள்ளது. உற்பத்தி உறவுகளிலும் தனியார் உடைமை, ஆளுமை, அதிகாரம் ஆகியவற்றிலும் மனிதரால் இயற்றப்பட்ட சட்டமுறைகளின் முக்கியத்துவம் பெரிது. இவற்றைவிட மனிதனது சிறப்பான அக்கறைக்குரிய துறைகளுள்ளும் சிந்தனையையும், நடைமுறையையும் ஆளும் வழிகாட்டல்கள் உள்ளன. இவற்றிடையே, சமுதாய நடைமுறையிற் சரிபிழைகள் பற்றிய பொதுவான உடன்பாடு எப்போதுமே இருக்க அவசியமில்லை. சில மரபுகள் மத நம்பிக்கையுடனும் சட்டத்துடனும் முரண்படலாம். மத நம்பிக்கைகள் சட்டத்துடன் மாறுபடலாம். இவ்வாறான முரண்பாடுகள் சமுதாய வளர்ச்சியின்போது தவிர்க்க முடியாதவை. இவை மாற்றத்தின் கருவிகளாகச் செயற்படுபவை.
மரபுகளும் சமய வழிகாட்டல்களும் பகுத்தறிவின் அடிப்படையிலல்லாது ஒரு பாரம்பரியத்தின் அடிப்படையிலேயே தம்மை நிலைநிறுத்திக் கொள்வன. மரபுகள் கடந்தகாலச் சமுதாய நடைமுறையின் அடிப்படையில் தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன. மதங்கள் புலனறிவுக்கும் பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்ட ஒரு ஞானத்தின் பேராலேயே பெருமளவும் தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன. சட்டங்கள் சமுதாய நிர்ப்பந்தத்தை ஏற்று மாறும் தன்மையுடையவை. மரபுசார்ந்த விதிமுறைகள் சமுதாய உட்பிரிவுகட்கு ஏற்ப மாறுபடலாம். மதங்கள் குறிப்பிட்ட ஒரு சமுதாய எல்லைக்கும் அப்பால் தமது ஆளுமையை வலியுறுத்த முனைகின்றன. சட்டங்கள் ஒரு சமுதாயத்திற்குப் பொதுவானவையாக வகுக்கப்படுகின்றபோதும், சில சூழ்நிலைகளில் மரபுகள், மதங்கள் தொடர்பான விஷயங்களில் அவை ஒரு சமுதாய அமைப்பிற்குள் விலக்குகளையோ வெவ்வேறு விதிகளையோ கொண்டு அமையலாம்.
மதங்கள் மனிதரின் புறவாழ்விற்கும் புலனுணர்வு சார்ந்த அறிவுக்கும் அப்பாற்பட்டதெனக் கூறப்படும் கருத்துகள் மூலம் தம்மை நியாயப்படுத்திக் கொள்வதால், மதங்களில் ஏற்படும் மாற்றங்கள் சமுதாய மாற்றங்களைவிடக் காலத்தால் மிகவும் பிற்பட்டவையாக அமைகின்றன. பெருவாரியான சூழல்களில், மிகுந்த தயக்கத்துடனும் இவ்வாறான மாற்றங்களின்றி மதங்களின் இருப்பு அசாத்தியமாகலாம் என்ற நிர்ப்பந்தத்தின் கீழுமே மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
எல்லா மதங்களும் ஒன்றையே போதிக்கின்றன என்பது முற்றிலும் அபத்தமான ஒரு கூற்று. எல்லா மதங்களும், தமக்குரிய சூழலுக்கமைய அல்லது தமது தோற்றுவாயின் சூழலுக்கமைய, மனித நலனை மனத்திற் கொண்டவை என்பதில் உண்மை உண்டு. ஆயினும், மனித நலன் என்பது என்ன, சரிபிழைகள் என்பன என்ன என்பது பற்றி எக்காலத்துக்குமான
வரைவிலக்கணங்கள் இல்லை. எனவே, மதங்களின் பொதுமை மிகவுங் குறைபாடுடைய ஒன்றாகவே காணப்படுகிறது.
மறுபுறம், பகுத்தறிவின் அடிப்படையில் மனிதர் வந்தடையும் முடிவுகள் எப்போதுமே சரியானவையாகவும் தம்முள் உடன்பாடானவை யாகவும் அமைய அவசியமில்லை. மனிதச் சிந்தனைகளதும் உணர்வுகளதும் அகச்சார்பான பண்பை நாம் முற்றாக மறந்துவிடக் கூடாது. வெறுமனே சட்டங்கள் மூலம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியாது என்பதையும் மரபுகளும் மதங்களும் மனிதனது நடத்தையை நன்னெறிப்படுத்துவதில் ஆற்றியுள்ள நல்ல பங்கையும் நாம் மறுக்க முடியாது. அதேவேளை, மரபுகளும் மதங்களும் சமுதாய நீதியை மறுக்கவும் பயன்பட்டுள்ளன. இன்னமும் பயன்படுகின்றன. எனவே மதங்கள் பற்றிய நமது பார்வை வெறுமனே அவற்றை ஏற்பதா எதிர்ப்பதா என்ற தோரணையில் அமைய முடியாது. மதங்கள் மனித ஒடுக்கலுக்குப் பயன்பட்டுள்ளதுபோல, மனித விடுதலையிலும் பங்களித்துள்ளன என்பதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். எந்த ஒரு மதத்தின் அடிப்படையிலும் மனித விடுதலைக்கான போராட்டத்தை அதன் இறுதி இலக்குவரை கொண்டு செல்ல இயலாதிருப்பது ஏனென்றும் நாம் கவனிக்க வேண்டும். மனித விடுதலைக்குப் பயன்பட வேண்டிய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மருத்துவமுங்கூட, இன்று மனிதர்மீது மனிதர் ஆதிக்கம் செலுத்தும் வசதியை அதிகப்படுத்தியுள்ளன. எனவே மனித விடுதலையின் எதிரி தனியே மதமல்ல.
மதம் மக்களது அபினி என்ற மார்க்ஸின் மேற்கோள் இவ்வளவு காலமும் மார்க்ஸியம் மதத்தைத் தனது பிரதான எதிரியாகக் கொள்கிறது என்று காட்டுவதற்குப் பயன்பட்டு வந்துள்ளது. கொடுமையான சுரண்டலுக்கு உட்பட்ட மனிதனுக்கு மதம் ஆறுதலளிக்கிறது. அந்த ஆறுதல் மனிதனை அமைதிப்படுத்திப் போராட்ட உணர்வை மழுங்கடிக்கிறது என்ற கருத்திலும் கொடுமையான ஒரு சூழலில் மனிதன் நாடக்கூடிய ஒரே ஆறுதலாக மதம் இருந்து வந்த உண்மையை ஒட்டியும் மார்க்ஸ் அழகாகக் கூறியுள்ளார். அபினி என்ற சொல்லை அதன் தீய விளைவுகளைப் பற்றிய இன்றைய அறிவை மனத்திற் கொண்டு நோக்கும்போது, மார்க்ஸ், மதம் ஒரு நச்சுப் பொருள் என்ற நோக்கிற் கூறியதாக யாரும் எண்ண இடமுண்டு. இது குறைபாடான வாசிப்பின் விளைவு
ஒரு மார்க்ஸியவாதி நல்ல காரணங்கட்காக மதத்தை நிராகரிக்கலாம். தனிமனிதரது மதநம்பிக்கைகளை மதிக்க மறுப்பவராகவும் வழிபாட்டு, மத அனுட்டான உரிமைகளை மறுப்பவராகவும் அவர் இருப்பாராயின், அவரது
மதச் சுதந்திரமும் மனிதச் சுதந்திரமும் மார்க்ஸியச் சிந்தனை எவ்வளவு ஆழமான ஒன்றாக இருப்பினும், அவரால் மனித இனத்தின் விடுதலைக்கு அதிகம் பங்களிக்க முடியாது. எது முக்கியமான சமுதாய முரண்பாடு என்பது பற்றிய தெளிவு ஒரு மார்க்ஸியவாதிக்கு அவசியம் மத நிறுவனங்கள் சுரண்டும் வர்க்கங்களோடு அணிவகுத்து நிற்கும்போது, அந்த நிறுவனங்களதும் அந்த மதத்தைச் சேர்ந்த மக்களதும் தேவைகட்கும் இடையிலான வேறுபாட்டை இனங்காண்பதன் மூலமே, மதத்தின் பேரால் சமுதாய மாற்றத்தை மறிக்க முனைவோரைத் தோற்கடிக்க இயலும். மறுபுறம், மதங்களின் பேரால் வெவ்வேறு வகைகளில் அடக்குமுறை ஆட்சியாளர்கட்கும் ஏகாதிபத்திய வாதிகட்கும் எதிரான கிளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. இவை பற்றிய ஒரு தெளிவான பார்வையும் நமக்கு அவசியம்.
மதங்கள் தமது தோற்றுவாயிலேயே பிற்போக்கானவையல்ல. மனித விடுதலை, சமுதாயச் சீர்திருத்தம் போன்ற இலக்குகளுடன் பல மதங்கள் பிறந்துள்ளன என நாம் அறிவோம். மதங்களுக்குள்ளே இருக்கும் அதிகார வர்க்கங்களின் ஆதிக்கத்துக்கு எதிரான கிளர்ச்சிகள் மதங்களின் பேரால் உருவாகி வளர்ந்துள்ளன. வைணவ, சைவ பக்தி இயக்கங்களின் வெகுஜனத் தன்மை பற்றி விரிவாகவே ஆராயப்பட்டுள்ளது. கத்தோலிக்கத் திருச்சபைக்குள்ளிருந்தே லத்தீன் அமெரிக்காவின் விடுதலைக்கான இறையியல் உருவானது. அரபு நாடுகளின் கொள்ளைக்கார ஷேக்குகட்கும், சுல்தான்கட்கும் அரசர்கட்கும் எதிரான குரலாகவும் இஸ்லாமிய அடிப்படைவாதம் எழுகிறது.
அல்பானியப் புரட்சியில் பர்தா அணிந்த பெண்களும், திபெத்தில் தலாய் லாமாவின் நிலப்பிரபுக்களின் கிளர்ச்சிக்கு எதிராக சாதாரண பெளத்த லாமாக்களும், இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவுவதில் ஒரு புத்த பிக்குவும் பங்குபற்றினரென்றால், மதத்தை எதிரியாகக் கருதுகிற அரசியலுடன் அந்த உடன்பாடு சாத்தியமாகியிருக்குமா என நாம் சிந்திப்பது பயனுள்ளது. மதம் தொடர்பாக ஒரு மார்க்ஸியவாதி எடுக்கக்கூடிய நிலைப்பாடுகட்கும் தேசிய இனங்கள் தொடர்பாகவும் சாதிமுறை தொடர்பாகவும் எடுக்கக்கூடிய நிலைப்பாடுகட்கும் சில முக்கியமான ஒற்றுமைகள் உள்ளன.
மத நம்பிக்கைக்கும் வழிபாட்டுக்குமான சுதந்திரம், ஒரு தேசிய இனம் தனது சுய அடையாளத்தைப் பேணுவதற்கான சுதந்திரம் போன்றது. சாதி, தேசிய ஒடுக்குமுறைகட்கெதிரான உரிமைப் போராட்டத்திற்கு வழங்கப்படக் கூடிய ஆதரவு மத அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் வழங்கப்பட வேண்டியுள்ளது. சாதி உணர்வோ தேசிய உணர்வோ மத
உணர்வோ தம்மளவிலேயே முற்போக்கானவை அல்ல. ஒடுக்கப்பட்ட சாதியினர், தேசிய இனங்கள், மதப் பிரிவினர் என்போர் பற்றிய மார்க்ஸிய நிலைப்பாடு சாதி ஒடுக்குமுறையாளர், தேசிய ஒடுக்குமுறையாளர், மதவெறியர் என்போர் பற்றிய நிலைப்பாட்டினின்று மிகவும் வேறுபடுகிறது.
தொழிற்சங்கப் போராட்டங்களோ முதலாளித்துவ ஜனநாயகமோ சமூகச் சீர்திருத்தங்களோ சமத்துவமான மனித சமுதாயத்தை உருவாக்கியதில்லை என மார்க்ஸியவாதிகள் அறிவர். ஆயினும் அவை தொடர்பான போராட்டங்களை அவர்கள் முழுமனத்துடன் ஆதரிக்கின்றனர். இவ்வாறே இனம், நிறம், மதம், சாதி, தேசம், பால் போன்று எந்த அடிப்படையிலாயினும் மனிதரது உரிமைகள் மறுக்கப்படுமாயின், மனிதர் ஒடுக்கப்படுவாராயின், அவர்கள் எதிர்த்துப் போராடுவது இயல்பானதும் நியாயமானதும் என்பதை ஒரு மார்க்ஸிவாதி உணராமலிருக்க முடியாது. எனவே, மத நம்பிக்கைக்கும் வழிபாட்டுக்குமான சுதந்திரம் மார்க்ஸியத்துக்கு முரணானதல்ல. மதங்களை நம்பவும் நம்பாமலிருக்கவும் மனிதருக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும். மனிதரது தெரிவுகள் மதிக்கப்பட வேண்டும். இந்தளவில், ஒரு மார்க்ஸியவாதியால் எந்த மதத்தினிடமும் இன்னொரு மதவாதியைவிடக் கூடிய சகிப்புடன் நடந்துகொள்ள முடியும்.
மதங்களின் பேரால் மக்கள் ஏமாற்றப்படுவது உண்மை. தேசம், மொழி, பிரதேசம் என்பவற்றின் பேராலும் ஜோசியம், பில்லிசூனியம், சூதாட்டம் போன்றவற்றினாலும் மட்டுமன்றி, விஞ்ஞானத்தின் பேராலும் தொழில்நுட்பம், நவீனத்துவம், அபிவிருத்தி என்பவற்றின் பேராலுங்கூட மனிதர் ஏமாற்றப்படலாம். மார்க்ஸியத்தின் பேராற் கூட மனிதர் ஏமாற்றப்படலாம். நம் முன்னுள்ள பிரச்சனை, மக்களுக்குத் தமது சூழல் மீதும் தமது வாழ்வின் மீதுமான ஆளுமை தொடர்பானது. அவர்கள் முதுகிற் சவாரி செல்வோரை மறிக்கும் ஒரு அதிகாரங்கூட அவர்கள் மீதான அதிகாரமாக மாறிவிடலாம். எனவே, ஒரு மார்க்ஸியவாதியின் பிரதான பணி, மக்கள் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க உதவுவதுதான். தாமே மக்களைவிட அதிகம் அறிந்தவரெனக் கருதும் எவரும் இதைச் செய்தல் கடினம.
மத அடிப்படையிலான சமுதாயங்களிலும் சமுதாயப் பிரிவுகளுக்குள்ளும் மதங்களால் நியாயப்படுத்தப்படும் பல்வேறு விதமான ஒடுக்குதல்கள் உள்ளன. ஆணாதிக்கம் இவற்றுள் முக்கியமான ஒன்று. மதபீடங்களின் வர்க்க நலன்கள் சுரண்டும் வர்க்கங்களைச் சார்ந்து நிற்பதும் உண்மை. ஆயினும், இவ்வாறான சூழல்களில், இச் சமுதாயங்கட்கு வெளியில் இருந்து மாற்றத்தைத் திணிக்கும் முயற்சிகள், அவை எவ்வளவு
தான் நல்லெண்ணம் உடையனவாய் இருப்பினும், எதிர்மாறான விளைவுகளையே தரவல்லன. மனித சமுதாயங்களிடையே சமத்துவமான உறவுமும் அதன் அடிப்படையிலான உறவுப் பரிமாறல்களும் இருக்குமாயின், மதங்களின் அடிப்படையில் நிகழும் அநீதிகட்கெதிரான எழுச்சிகள் அச்சமுதாயங்களின் உள்ளிருந்தே எழுவது இயலுமாகும். மனித சமுதாயத்தின் பன்முகப்பட்ட பண்பு மார்க்ஸியவாதிகட்கு உடன்பாடானது. இப் பன்முகப் பண்பில் விடுதலையினதும் சமத்துவத்தினதும் கூறுகள் உள்ளடங்கியுள்ளன.
இன்று பலவிதமான தீவிர மதவாதப் போக்குகள் உள்ளன. இந்து அடிப்படைவாதம், சாதியம், இஸ்லாமிய விரோதம் என்பவற்றை வலியுறுத்துகிறது. அந்தளவில் அது முறியடிக்கப்பட வேண்டியது. கிறிஸ்தவ அடிப்படைவாதம் அமெரிக்காவிலும் மேற்கிலும் வலதுசாரி அரசியலுடன் கைகோத்து நிற்கிறது (இதற்கு மாறாக விடுதலைக்கான இறையியற் கோட்பாடு உள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதம் ஒருபுறம் முக்கியமான ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்தியாகவும் சுரண்டும் வர்க்கங்களின் ஊழல் மிகுந்த ஆட்சிகட்கு எதிரான ஆயுதமாகவும் செயற்பட்டுள்ளது. அதேவேளை அதனுட் பொதிந்துள்ள சகிப்பின்மையின் கூறுகள் ஈரானின் முல்லாக்களின் அதிகாரத்துக்கும் ஊழல்கட்கும் வசதி ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான இடங்களில், தேசியம் போன்று மத உணர்வும் ஒரேகாலத்தில், முற்போக்கான கூறுகளையும் பிற்போக்கான கூறுகளையும் தன்வசத்தே உடையது என்பதை நாம் நினைவுகூர்வது நல்லது. V−
ஒரு மார்க்ஸிவாதிக்கு, மதச் சுதந்திரம் மனிதச் சுதந்திரத்தின் ஒரு பகுதி என்றளவில், ஆதரிக்கப்பட வேண்டிய ஒன்றாகியது. மதச் சுதந்திரம் சமுதாய நீதியையும் மனித விடுதலை யையும் மறிக்கும் ஒரு கருவியாகும்போது, மதங்களில் உள்ள விடுதலைப்பாங்கான கூறுகளை வலி யுறுத்தி, ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் துணைபோகும் கூறுகளை விமர்சிப்பதற்கான தேவை ஏற்படுகிறது. மதத்தோடல்லாமல் மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்தவும் ஒடுக்கவும் எடுக்கப்படும் முயற்சிகளுடனேயே எவரும் மோத வேண்டியுள்ளது. தனிமனித உரிமைகள் என்ற பேரில் மற்றவர்களது மத நம்பிக்கைகளைப் புண்படுத்துமாறான செயல்கள் ஊக்குவிக்கப்படக் கூடாதவை. அதேவேளை, ஒருவரது மத நம்பிக்கை, இன்னொருவர், அந்நம்பிக்கை உள்ளவராயினும் இல்லாதவராயினும், அவர்மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறையாக்கப்படல் மிகவும் தவறானது. கடவுளின் சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் எவ்வாறு எந்த ஒரு தனிமனிதனுக்கும் இருக்க முடியும்? சர்வ வல்லமையுள்ள தமது கடவுள் குற்றவாளிகளைத் தக்கபடி
கவனிக்க வல்லார் என்ற நம்பிக்கை இல்லாதவர்களது மத நம்பிக்கை குறைபாடுடையது. சமுதாய ரீதியாகத் தவறுகளைச் சமுதாயம் திருத்தலாம். சமுதாயத்தின் செயற்பாட்டைக் கேள்விக்குட்படுத்தும் உரிமை தனிமனிதர்கட்கு உண்டு. இந்த உரிமையின் அடிப்படையிலேயே உலகின் பிரதான மதங்கள் பல உருவாக இயலுமாயிற்று.
மதமும் மனித உரிமைகளும் பற்றிய விஷயங்களில் சட்டாம்பிள்ளைத்தனமான கட்டளைகள் மனித நலனுக்குத் தீங்கானவை. எனவே இவ்வாறான முரண்பாடுகளை நிதானமுடனும் சகிப்புடனும் அணுகுவது மனித இன விடுதலைக்கு (அது பொருள் சார்ந்த புற விடுதலையாயினும் சீவன் சார்ந்த அகவிடுதலையாயினும்) நல்ல பயனளிக்கும்.
Related