இந்தத் தொகுப்பு நூலில் வி. இ. லெனின் மார்க்சியத்தைப் பற்றி எழுதிய பிரபல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவை கார்ல் மார்க்ஸ் போதனையின் முக்கிய சாரத்தை வெளிப்படுத்தி பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் இந்தப் போதனையின் விதியைக் காட்டுகின்றன. ‘மார்க்சின் போதனை மெய்யானது, அதனால் தான் அது எல்லாம் வல்ல தன்மை பெற்றிருக்கிறது. அது முழுமையான, உள்ளிணக்கம் கொண்ட போதனை. ஓர் ஒன்றிணைந்த உலகப் பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது. எந்த வடிவத்திலுமமைந்த மூடநம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு ஆதரவோ இந்த உலகப் பார்வையுடன் ஒத்துவர முடியாது. ஜெர்மானியத் தத்துவஞானம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோசலிசம் என்ற வடிவத்தில் 19-ஆம் நூற்றாண்டில் மனித குலம் உருவாக்கித் தந்த தலைசிறந்த படைப்புகளின் உரிமை பெற்ற வாரிசுதான் மார்க்சியம்.’
மார்க்சியத்தின் வெற்றிகள், இதனுடைய எதிரிகளை மார்க்சியப் போர்வைக்குள் புகுந்து கொள்ளுமாறும் மார்க்சின் போதனையைத் திரித்துக் கொச்சைப்படுத்துமாறும் நிர்ப்பந்திக்கின்றன என்று லெனின் தன் கட்டுரைகளில் காட்டுகின்றார், ஆனல் இவை வீணான முயற்சிகள்; ஒவ்வொரு புதிய வரலாற்றுச் சகாப்தமும், முரண்பாடுகளையும் கேடுகளையும் உடைய முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிச சமுதாயத் திற்கு மாறிச் செல்லும் பாதையை மனித குலத்திற்குக் காட்டும் தத்துவம் என்ற வகையில் மார்க்சியத்திற்கு மேன்மேலும் அதிக வெற்றியைக் கொண்டு வருகிறது.
இத்தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆகிய கட்டுரைகளில் மார்க்சிய ஆசான்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு இடம் பெற்றுள்ளது.
மார்க்சியத்தினுடைய வரலாற்று
வளர்ச்சியின் சில இயல்புகள்
‘எங்களுடைய போதனை, செயலுக்கு ஒரு வழி காட்டியே தவிர வறட்டுச் சூத்திரம் அல்ல’ என்கிறார் எங்கெல்ஸ். தம்மையும் புகழ் மிக்க தமது நண்பரையும் குறிக்கும் வண்ணம் எங்களுடைய என்கிறார், மார்க்சியத்தில் அடிக்கடி பலரும் மறந்துவிடும் ஓர் அம்சத்தைக் குறிப்பிடத்தகுந்த வலிவுடனும் பொருள் நிறைவுடனும் இந்த ஒப்புயர்வற்ற வாசகம் வலியுறுத்துகிறது. இதை மறந்து விடுவதின் மூலமாக நாம் மார்க்சியத்தை ஒருதலைப்பட்சமான, உருக்குலைக்கப்பட்டதான, உயிரற்ற ஒன்றாய்த் திரித்துவிடுகிறோம்; உயிர்த்தியங்கி வரும் ஆன்மாவை அதிலிருந்து பறித்து விடுகிறோம்; மார்க்சியத்தின் மூலாதாரத் தத்துவ அடித்தளங்களை அதாவது முரண்பாடுகள் நிறைந்தும் சர்வவியாபகமாயுமுள்ள சரித்திர வளர்ச்சியைப் பற்றிய போதனையாகிய இயக்கவியலை – தளர்த்திப் பலவீனப்படுத்துகிறோம்; நமது சகாப்தத்தில் நம் முன்னுள்ள திட்டவட்டமான நடைமுறைக் கடமைகளுடன், வரலாற்றின் ஒவ்வொரு புதிய திருப்பத்தையும் தொடர்ந்து மாறும்படியான இந்தக் கடமைகளுடன் மார்க்சியத்துக்கு இருக்கும் தொடர்பை நாம் அறுத்தெறிகிறோம்.
நமது காலத்தில், ருஷ்யாவில் மார்க்சியத்தின் கதியைப் பற்றி அக்கறை கொண்டிருப்பவர்களின் மத்தியிலே, மார்க்சியத்தின் இந்தக் குறிப்பிட்ட அம்சத்தை மறந்து விடுகிறவர்களை அடிக்கடி கண்டு வருகிறோம். ஆயினும் சமீப காலத்தில் ருஷ்யா திடீர் மாறுதல்களுக்கு உட்பட்டிருப்பது எல்லோருக்கும் தெளிவாய்த் தெரிந்தே இருக்க வேண்டும். செயலின் சூழ்நிலைமைகளையும், அவற்றின் காரணமாகச் செயலின் குறிக்கோள்களையும் மிகவும் நேரடியாகவும் உடனடியாகவும் நிர்ணயிக்கும்படியான சமுதாய-அரசியல் நிலைமையை வழக்கத்திலில்லாத வேகத்துடனும் வலிவுடனும் மாற்றி விடும் அளவுக்கு இந்த மாறுதல்கள் திடுதிப்பென நிகழ்ந்துள்ளன.

பொதுப்படையான, அடிப்படையான குறிக்கோள்களை இங்கே நான் குறிப்பிடவில்லை. வர்க்கங்களிடையே நிலவும் அடிப்படை உறவு மாறாமலிருக்கும் வரையில் சரித்திரத்தின் திருப்பங்களினுள் இந்தக் குறிக்கோள்கள் மாறுவதில்லை . ருஷ்ய சமுதாயத்திலுள்ள பல்வேறு வர்க்கங்களிடையே நிலவி வரும் அடிப்படை உறவு, உதாரணமாய், சென்ற ஆறு ஆண்டுகளாக மாறாமலிருந்து வருவதுபோலவே, ருஷ்யாவில் பொருளாதாரத்தில் (பொருளாதாரத்தில் மட்டுமல்ல) காணப்படுகிற பொதுவான பரிணாம வளர்ச்சிப் போக்கும் மாறாமலே இருந்து வந்திருக்கிறது என்பது தெட்டத் தெளிவு.
ஆனால், இந்தக் காலகட்டத்தில் ஸ்தூலமான சமுதாய அரசியல் நிலைமையும், அதுபோல நேரடியான, உடனடியான செயலின் குறிக்கோள்களும் மிகத் தீவிரமாக மாறி வந்திருக்கின்றன. இதன் விளைவாக, மார்க்சியத்திலும் அதன் பல்வேறு அம்சங்கள் முன்னணிக்கு வந்து தீர வேண்டும். ஏனெனில் மார்க்சியம் உயிர்ப்பண்பு கொண்ட போதனையாகும்.
இந்தக் கருத்தைத் தெளிவாக்கும் பொருட்டு, ஸ்தூலமான சமுதாய அரசியல் நிலைமையில் சென்ற ஆறு ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கிற மாறுதலைக் கொஞ்சம் கவனிப்போம். இந்த ஆறாண்டுக் காலப்பகுதி மூன்று மூன்று ஆண்டுகளைக் கொண்ட இரு காலப்பகுதிகளாகப் பிரிவதை எடுத்த எடுப்பிலேயே காண்கிறோம். ஒரு காலப்பகுதி 1907ஆம் ஆண்டின் கோடையுடன் ஏறத்தாழ முடிவடைகிறது; மற்ற காலப் பகுதி 1910-ஆம் ஆண்டின் கோடையுடன் முடிவடைகிறது. முற்றிலும் தத்துவார்த்தக் கண்ணோட்டத்தில், முதல் மூன்றாண்டுக் காலப்பகுதியானது அப்போது ருஷ்யாவில் அரசு அமைப்பு முறையின் அடிப்படையான குணாதிசயங்களில் வேகமாக ஏற்பட்ட மாறுதல்களால் வேறுபடுத்திக் காட்டப்படுகிறது.
இந்த மாறுதல்களின் போக்கு ஒரே சீராக இல்லாமல் அநேக ஏற்ற இறக்கங்களுடன் கூடியதாயிருந்தது; இரு திசைகளிலும் ஊசலாட்டத்தின் வீச்சும் மிகப் பெரிதாயிருந்தது. “மேல் கட்டுமானத்தில்” ஏற்பட்ட இந்த மாறுதல்களின் சமுதாய – பொருளாதார அடிப்படை என்னவெனில் ருஷ்ய சமுதாயத்தின் எல்லா வர்க்கங்களும் மிகப் பல்வேறுபட்ட துறைகளிலும் எடுத்துக் கொண்ட செயல்களே (டூமா சட்டசபைக்குள்ளேயும் வெளியேயும், பத்திரிகைகள், சங்கங்கள், பொதுக் கூட்டங்கள் முதலானவற்றில் நடைபெற்ற செயற்பாடே) ஆகும். சரித்திரத்தில் அடிக்கடி காணக்கிடைக்காத அளவிலே இந்தச் செயல் அவ்வளவு பகிரங்கமானதாயும், எடுப்பாகவும், வெகுஜன வீச்சுடையதாகவும் இருந்தது.
இதற்கு மாறாக இரண்டாம் மூன்றாண்டுக் காலப்பகுதியின் தனி இயல்பு -இங்கே முற்றிலும் தத்துவார்த்த சமூகவியல்’ கண்ணோட்டத்தில் மட்டுமே விஷயத்தைக் கவனித்து வருகிறோம் என்று மீண்டும் சொல்கிறேன்-என்னவென்றால், அநேகமாகத் தேக்கநிலை என்று மதிக்கக் கூடிய அளவுக்குப் பரிணாம வளர்ச்சி மந்தமாயிருந்ததேயாகும். அரசு அமைப்புமுறையில் ஓரளவுகூட முக்கியமான மாறுதல்கள் எவையும் ஏற்படவில்லை . முந்திய காலப்பகுதியில் எந்த அரங்குகளில் நடவடிக்கைகள் வளர்க்கப்பட்டனவோ அவற்றில் பெரும் பாலானவற்றில் வர்க்கங்களுடைய பகிரங்கமான, பல்வகைப்பட்ட நடவடிக்கைகள் எவையும் அநேகமாக நடைபெறவில்லை.
இந்த இரண்டு காலப்பகுதிகளுக்குமிடையே இருந்த ஒற்றுமையம்சம் என்னவெனில், இரண்டு காலப்பகுதிகளிலும் ருஷ்யாவில் முதலாளித்துவப் பரிணாமம் நடைபெற்று வந்தது. இந்தப் பொருளாதாரப் பரிணாமத்துக்கும் பல பிரபுத்துவ, மத்திய காலத்திய அமைப்புகள் நீடித்து இருந்து வந்ததற்கும் இடையேயிருந்த முரண்பாடு நீக்கப்படாமல் தொடர்ந்து இருந்து வந்தது; சில அமைப்புகள் அரைகுறையான பூர்ஷ்வாத் தன்மை பெற்றதனால் இந்த முரண்பாடு தீவிரமடைந்ததே ஒழிய தணிக்கப்படவில்லை.
இந்த இரண்டு காலப்பகுதிகளுக்கிடையே இருந்த வேற்றுமை என்னவென்றால், மேற்குறிப்பிட்ட சீரில்லாத, ஏற்ற இறக்கமான அதிவேக மாறுதல்கள் எந்த வடிவத்தை ஏற்குமென்பது முதலாவது காலப்பகுதியில் வரலாறு படைக்கும் தலைமையான முதற்பெரும் கேள்வியாய் இருந்தது. ருஷ்யாவின் பரிணாம வளர்ச்சி முதலாளித்துவத் தன்மையதாய் இருந்ததால் இந்த மாறுதல்களின் உள்ளடக்கமும் முதலாளித்துவத் தன்மை கொண்டதாய் இருந்து தீரவேண்டியதாயிற்று. ஆனால் முதலாளித்துவ வர்க்கத்தாரில் வெவ்வேறு வகையினர் இருந்தனர். ஏறத்தாழ நிதான மிதவாதப் போக்கை அனுசரிப்பதாய்க் கூறும் நடுத்தர முதலாளிகளும் பெரு முதலாளிகளும் தங்கள் வர்க்க நிலை காரணமாக உடனடி மாறுதல்களுக்கு அஞ்சி நிலவுடைமை அமைப்பிலும் சரி; அரசியல் “மேல் கட்டுமானத்திலும்” சரி, பழைய ஏற்பாடுகளைப் பெருமளவு மிச்சசொச்சங்களை இருந்தவாறே வைத்திருக்க முயற்சித்தார்கள். கிராமப் புறத்திலுள்ள குட்டி முதலாளித்துவ வர்க்கம் “தங்கள் கையால் உழைத்து” ஜீவிக்கிற விவசாயி மக்களுடன் பின்னிப் பிணைந்திருக்கும் காரணத்தால் வேறு வகைப்பட்ட முதலாளித்துவச் சீர்திருத்தங்களுக்காக, அதாவது மத்திய காலத்திய மிச்சசொச்சங்கள் நீடித்திருக்க மிகக் குறைந்த இடமே அளிக்கக்கூடிய முதலாளித்துவச் சீர்திருத்தங்களுக்காக, முயற்சித்துத் தீர வேண்டியிருந்தது. கூலித் தொழிலாளர்கள் தம்மைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை உணர்வு பூர்வமாக அறிந்து கொண்டிருந்த அளவுக்கு இவ்விரண்டு வேறுபட்ட போக்குகளிடையே நடைபெற்ற போரைப் பற்றித் தமக்கேற்ற கண்ணோட்டத்தை வகுத்துக் கொண்டு தீர வேண்டியிருந்தது. இவ்விரண்டு போக்குகளும் முதலாளித்துவ அமைப்பு முறையின் கட்டுக்கோப்பை விட்டு வெளியே செல்லாமல் அதனுள்ளேயே இருந்து, அவ்வமைப்பின் முற்றிலும் வெவ்வேறான வடிவங்களையும், அதன் வளர்ச்சியில் முற்றிலும் வெவ்வேறான வேகங்களையும், அதன் முற்போக்குச் செல்வாக்கில் வெவ்வேறு தரங்களையும் வற்புறுத்தின.
இவ்விதம் முதலாவது காலப்பகுதி போர்த்தந்திரம் பற்றிய பிரச்சனைகளென்று வழக்கமாகக் குறிக்கப்படுகிறவற்றை மார்க்சியத்தின் முன்வரிசையில் கொண்டு வந்து நிறுத்தியது. இது ஏதோ தற்செயலாக நடக்கவில்லை; தேவையின் கட்டாயத்தால் ஏற்பட்டது. இந்தப் பிரச்சனைகள் குறித்துக் கிளம்பிய சர்ச்சைகளும் கருத்து வேற்றுமைகளும் ‘அறிவுத் துறையினரிடையே’ நடக்கிற சர்ச்சைகள்தான் என்றும், ‘பக்குவமடையாத பாட்டாளி வர்க்கத்தின் மேல் செல்வாக்குப் பெறுவதற்காக நடக்கும் ஒரு போராட்டமே’ என்றும், ‘அறிவுத் துறையினர் தங்களைப் பாட்டாளி வர்க்கத்துக்குத் தகவமைத்துக் கொள்வதைக்’ குறிப்பவையே என்றும் பல்வேறு சாயல்களிலுமான வேஹி ஆதரவாளர்கள் நினைக்கிறார்கள்; இதைவிட தவறான கருத்து வேறென்றுமில்லை. இதற்கு நேர்மாறாக இந்தப் பாட்டாளி வர்க்கம், பக்குவம் பெற்று விட்டதனால் தான், அது ருஷ்யாவின் முதலாளித்துவ வளர்ச்சி பூராவிலும் காணப்படும் இவ்விரண்டு வேறுபட்ட போக்குகளிடையே நடக்கிற போர் குறித்து ஏனோதானே என்றிருக்க முடியவில்லை; ஆகவே இந்த வர்க்கத்தின் தத்துவாசிரியர்கள் வெவ்வேறான இவ்விரு போக்குகளுக்கும் (நேர் முகமாகவோ மறைமுகமாகவோ, நேரான பிரதிபலிப்பாகவோ எதிரான பிரதிபலிப்பாகவோ) ஏற்ற வகையில் தத்துவ ரீதியான வரையறுப்புகளை வகுத்துத் தருவதைத் தவிர்க்க முடியவில்லை .
இரண்டாவது காலப்பகுதியிலே ருஷ்யாவின் முதலாளித்துவ வளர்ச்சியின் வெவ்வேறான போக்குகளிடையிலான போர் நிகழ்ச்சி அரங்கில் காணப்படவில்லை, ஏனெனில் இந்த இரண்டு போக்குகளுமே “பழுத்த பிற்போக்கர்களால்” நசுக்கப்பட்டுவிட்டன, பின்னுக்குத் தள்ளப்பட்டு உள்வாங்கிக் கொள்ளும்படிச் செய்யப்பட்டன, தற்காலிகமாக மூச்சொடுக்கப்பட்டன. மத்திய காலத்தியப் பழுத்த பிற்போக்கர்கள் முன்னணிக்கு வந்து நின்று கொண்டதோடல்லாமல் முதலாளித்துவச் சமுதாயத்தின் மிக விரிந்த ஜனப்பகுதிகளிடையே வேஹியின் உணர்ச்சிகளை, மனச்சோர்வையும், மறுதலித்துக் கைவிடும் மனோநிலையையும் மேலோங்கச் செய்தனர். இப்போது தலை தூக்கியது பழைய அமைப்பு முறையைச் சீர்திருத்த நிற்கும் இரண்டு வழிமுறைகள் இடையிலான போர் அல்ல; எந்த விதமான சீர்திருத்தங்களிலும் நம்பிக்கையின்மை, “அடிபணிந்துவிடும்”, “பாவ மன்னிப்பு நாடும்” மனப்பாங்கு, சமூக விரோதப் போதனைகளின் மீது மோகம், இறை ஞானப் பித்து இத்தியாதியானவையே இப்போது தலை தூக்கின.
ஆச்சரியப்படத்தக்க முறையில் திடுதிப்பென நிகழ்ந்த இந்த மாறுதல் தற்செயலானதல்ல, ‘வெளிப்புற’ நிர்ப்பந்தத்தினால் மட்டும் ஏற்பட்ட விளைவல்ல. இதற்கு முந்திய காலப்பகுதி, தலைமுறை தலைமுறையாய், பல நூற்றாண்டுகளாய், அரசியல் பிரச்சனைகளிலிருந்து ஒதுங்கி நின்று வந்த, அரசியல் பிரச்சனைகளே இன்னதென்று அறியாமலே இருந்து வந்த ஜனப்பகுதிகளை ஆழ்ந்த முறையிலே உலுக்கி உசுப்பி விட்டது. ஆகவே ‘எல்லா மதிப்புகளையும் திரும்ப மதிப்பிடலும்’, அடிப்படைப் பிரச்சனைகளைப் புதிதாய்ப் பயில்வதும், தத்துவத்தில் அடிப்படைக் கூறுகளில் அரசியல் அரிச்சுவடியில் புதிய அக்கறை காட்டுவதும் இயற்கையாகவும் தவிர்க்க முடியாத வகையிலும் மேலோங்கின. நெடுந்தூக்கத்திலிருந்து திடீரென்று எழுப்பிவிடப்பட்டு மிகவும் முக்கியமான பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியதாகிவிட்ட கோடிக்கணக்கான மக்கள் அதிக காலத்துக்கு இம்மட்டத்தில் இருந்து கொண்டிருக்க முடியாது. இடைவேளை ஓய்வு பெறாமலும், ஆரம்ப அடிநிலைப் பிரச்சனைகளுக்குத் திரும்பாமலும், இணையற்ற பொருள் வளம் செறிந்த படிப்பினைகளை “ஜீரணிக்க” உதவுவதும், ஒப்பிட முடியாத அளவு அதிக விரிவான ஜனத்திரள் முன்னிலும் மிகுந்த உறுதியோடும், உணர்வோடும், நிச்சயத்தோடும், விடாமுயற்சியோடும் முன்னேறுவதைச் சாத்தியமாக்குவதுமான புதிய பயிற்சி பெறாமலும் அவர்களால் மேற்செல்ல முடியவில்லை.
நாட்டின் வாழ்க்கையின் சகல துறைகளிலும் உடனடிச் சீர்திருத்தங்கள் செய்து முடிப்பதுதான் முதலாவது காலப் பகுதியின் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்தது. பெற்ற அனுபவத்தை விமர்சித்து ஆராய்வது, இன்னும் அதிக விரிவான ஜனப்பகுதிகள் அந்த அனுபவத்தை ஜீரணிப்பது, சொல்லப் போனால் அந்த அனுபவம் அடிமண்ணுக்குள் எனலாம், அதாவது பல்வேறு வர்க்கங்களைச் சேர்ந்த பிற்பட்ட அணிகளுக்குள் ஊடுருவிச் செல்வது-இவைதான் இரண்டாவது காலப்பகுதியின் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்தன. காரணம், சரித்திர வளர்ச்சியின் இயக்கவியல் அப்படி அமைந்திருந்தது.

மார்க்சியம் உயிரற்ற வறட்டுச் சூத்திரம் அல்ல; இறுதி முடிவாக்கப்பட்டுவிட்ட, முன்கூட்டியே தயார் செய்து வைக் கப்பட்டுவிட்ட, மாற்றத்துக்கு இடமில்லாது இறுகிவிட்ட போதனை அல்ல அது. செயலுக்கான உயிருள்ள வழிகாட்டி அது; சமுதாய வாழ்க்கை நிலைமைகளில் ஆச்சரியப்படத்தக்க அளவில் திடுதிப்பென நிகழ்ந்த மாறுதல்களை இக்காரணத்தால் நிச்சயமாய் மார்க்சியம் பிரதிபலித்துக் காட்டவே செய்யும். ஆழ்ந்த சிதைவிலும், ஒற்றுமையின்மையிலும், பல வகைப்பட்ட ஊசலாட்டங்களிலும், சுருங்கச் சொன்னால் மார்க்சியத்துக்கு உள்ளேயே ஒரு மிகத் தீவிரமான நெருக்கடியிலும் இந்த மாறுதல் பிரதிபலித்துக் காட்டப்பட்டது. இந்தச் சிதைவை எதிர்த்து மூர்க்கமாகப் போராட வேண்டிய தேவை, மார்க்சியத்தின் அடிப்படைகளுக்காக மூர்க்கமாக, விடாப்பிடியான போராட்டத்தை நடத்த வேண்டிய தேவை, மறுபடியும் நிகழ்ச்சி நிரலுக்கு வந்தது. இதற்கு முந்திய காலப்பகுதியில் வர்க்கங்களின் மிகவும் விரிவான பகுதியோர் தமது குறிக்கோள்களை வகுத்துக் கொள்வதில் மார்க்சியத்தைத் தவிர்த்து விலக்க முடியாமற் போகவே, இந்தப் போதனையை அவர்கள் அளவுமீறி ஒருதலைப்பட்சமாகவும் திரித்துக் குலைக்கப்பட்ட பாணியிலும் கிரகித்துக் கொண்டனர். குருட்டுப் பாடமாய்ச் சிற்சில கோஷங்களையும் போர்த்தந்திரப் பிரச்சனைகளுக்கான சிற்சில விடைகளையும்-இந்த விடைகளுக்கான மார்க்சிய அடிநிலைக் கூறுகளைப் புரிந்து கொள்ளாமலே-நெட்டுருப் போட்டு வைத்திருந்தனர். சமுதாய வாழ்வின் பல்வேறு துறைகளிலும் ‘எல்லாப் பண்பு மதிப்புகளையும் மறுபடியும் மதிப்பீடு செய்ய’ நேர்ந்ததைத் தொடர்ந்து, மார்க்சியத்தின் மிகவும் கருத்தியலான. பொதுப் படையான தத்துவவியல் அடிப்படைகள் ‘திருத்தப்பட்டுவிடும்’ ஒரு நிலைமை ஏற்பட்டது. பல்வேறுபட்ட கருத்து முதல் வாதச் சாயல்களிலுமாகிய முதலாளித்துவத் தத்துவவியலின் செல்வாக்கு மார்க்சியவாதிகளிடையே கொள்ளை நோய் போலப் பரவிய மாகியக் கருத்துகளின் வாயிலாய் வெளியாயிற்று. புரிந்து கொள்ளப்படாமலும் சிந்தித்து கிரகிக்கப்படாமலும் போட்டு நெட்டுருச் செய்யப்பட்ட ‘கோஷங்கள்’ திருப்பித் திருப்பிக் கூறப்பட்டதானது வெற்றுச் சொல்லடுக்குகளை வெகுவாய்ப் புழக்கத்துக்கு வரச் செய்தது. இதன் நடைமுறை விளைவு என்னவெனில், பகிரங்கமான அல்லது மறைமுகமான ‘ஒத்சொவிசம்’ அல்லது மார்க்சியத்தின் “சட்டபூர்வ உருவே” ஒத்சொவிசம் என்பதாய்க் கொள்வது போன்ற முற்றிலும் மார்க்சிய விரோத, குட்டி முதலாளித்துவப் போக்குகள் மலிந்து விட்டன.
இன்னொரு புறத்தில், வேஹி சஞ்சிகையின் மனப்பான்மை, கொள்கை துறந்து ஒடும் மனப்பான்மை முதலாளித்துவ வர்க்கத்தாரின் விரிவான பகுதிகளை ஆட்கொண்டு விட்டதுடன் நில்லாமல், மார்க்சியத் தத்துவத்தையும் நடைமுறையையும் நிதானமும் ஒழுங்கும் வழி வரம்புகளுக்குள் அடக்கி வைக்க முயற்சிக்கிற போக்குக்குள்ளும் புகுந்துவிட்டது. கடைசியாக மார்க்சியத்தில் மிஞ்சினதெல்லாம் ‘படி வரிசை முறை’ (hierarchy), ‘தலைமைப் பாத்திரம்’ (hegemony) முதலான வற்றைப் பற்றிய, மிதவாதத்தில் முற்றிலும் ஊறிப்போன வாதங்களில் உபயோகிப்பதற்கேற்ற வெறும் சொற்களே.
இந்த எல்லா வாதங்களையும் பற்றிப் பரிசீலிப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மார்க்சியம் அனுபவித்துவரும் நெருக்கடியின் ஆழத்தைப் பற்றியும், இந்தக் காலப்பகுதியில் நிலவும் ஒட்டுமொத்தமான சமுதாய – பொருளாதார நிலைமைக்கும் அந்த நெருக்கடிக்கும் இடையேயுள்ள சம்பந்தத்தைப் பற்றியும் நாம் மேலே குறிப்பிட்டவற்றைத் தெளிவுப்படுத்த இந்த வாதங்களைக் குறிப்பிட்டாலே போதும். இந்த நெருக்கடி எழுப்பும் பிரச்சனைகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. வாய்ச்சவடால் அடித்து அவற்றை அகற்றிவிட நடக்கிற முயற்சிகள் போல் தீங்கிழைக்கும்படியான, கோட்பாடற்ற செய்கை வேறு எதுவும் இருக்க முடியாது. நெருக்கடியின் ஆழத்தையும் அதை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்திருக்கும் எல்லா மார்க்சியவாதிகளையும் மார்க்சியத்தின் தத்துவ அடிப்படைகளையும் ஆதார வரையறுப்புகளையும் பாதுகாப்பதற்காக அணி திரட்டுவதைக் காட்டிலும் முக்கியமானது எதுவும் இருக்க முடியாது; ஏனெனில் மார்க்சியத்தின் பலவகைப்பட்ட “சக பிரயாணி”களிடையே முதலாளித்துவச் செல்வாக்கு பரவியுள்ளதால் எதிரெதிரான திசைகளிலிருந்து இவை திரித்துப் புரட்டப் படுகின்றன.
விரிவான ஜனப்பகுதிகளைச் சமுதாய வாழ்க்கையில் உணர்வு பூர்வமாகப் பங்கெடுத்துக் கொள்ளும்படி முதலாவது மூன்றாண்டுக் காலப்பகுதி விழிப்புறச் செய்தது. அவர்களில் பலர் இப்பொழுதுதான் முதல் தடவையாக உண்மையான முறையிலே மார்க்சியத்தைத் தெரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிருர்கள். இது சம்பந்தமாக முதலாளித்துவப் பத்திரிகைகள் என்றையும் விட அதிகமாகப் பொய்யான கருத்துகளைச் சிருஷ்டித்தும், மிக விரிவாகப் பரப்பியும் வருகின்றன. இந்த நிலைமைகளிலே மார்க்சியவாதிகளின் அணிகளிலே ஏற்படும் சிதைவு மிகவும் ஆபத்தானது. தற்சமயம் இந்தச் சிதைவு தவிர்க்க முடியாதது என்பதற்குரிய காரணங்களைப் புரிந்து கொள்வதும், இந்தச் சிதைவை எதிர்த்து முரணின்றிப் போராடுவதற்காக அணிகளைத் திரட்டி ஒன்று சேர்ப்பதும், மார்க்சியவாதிகளுடைய இந்நாளைய கடமையாகும். இத்தொடரின் மிகவும் நேரடியான, துல்லியமான பொருளில் இந்நாளைய கடமையாகும்.
ஸ்வேஸ்டா, இதழ் 2, நூல் திரட்டு,
1910) டிசம்ப ர் 23 தொகுதி 20,
ஒப்பம் வி. இலியின் பக்கங்கள் 84-89
வரலாற்றில் கார்ல் மார்க்ஸ் தத்துவத்துக்கு விதிக்கப்பட்ட வருங்காலம்
சாஷலிசச் சமுதாயத்தின் சிற்பியாய்ப் பாட்டாளி வர்க்கம் ஆற்றும் வரலாற்றுப் பணியை மார்க்சின் தத்துவம் தெளிவுப்படுத்துகிறது. இதுவே இத்தத்துவத்தின் முதன்மையான சிறப்பு. மார்க்ஸ் இந்தத் தத்துவத்தை விரித்துரைத்த பின் உலகெங்கணும் நடைபெற்றுள்ள நிகழ்ச்சிகளின் போக்கு இத்தத்துவத்தை மெய்ப்பித்திருக்கிறதா?
1844-ல் மார்க்ஸ் இதை முதன் முதல் எடுத்துரைத்தார். 1848ல் வெளியான மார்க்ஸ், எங்கெல்சின் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை இந்தத் தத்துவத்தை முழுமையாகவும் முறையாகவும் விரித்துரைத்தது. இது நாள் வரை இதுவே தலை சிறந்த விரிவுரையாய் இருந்து வருகிறது. அதன்பின் உலக வரலாறு மூன்று பிரதான காலக்கூறுகளாய்த் தெளிவாய்ப் பிரிக்கப்பட்டிருக்கிறது: 1) 1848-ம் ஆண்டுப் புரட்சியிலிருந்து பாரிஸ் கம்யூன் (1871) வரை; 2) பாரிஸ் கம்யூனிலிருந்து ருஷ்யப் புரட்சி (1905) வரை; 3) ருஷ்யப் புரட்சிக்குப் பின்,
இந்தக் காலக்கூறுகள் ஒவ்வொன்றிலும் மார்க்சின் தத்துவத்துக்கு விதிக்கப்பட்ட எதிர்காலம் என்னவென்பதைக் காண்போம்.
முதலாவது காலக்கூறின் துவக்கத்தில் மார்க்சின் தத்துவம் எவ்வகையிலும் கோலோச்சும் நிலையில் இருக்கவில்லை. சோஷலிசத்தின் எண்ணிறந்த குழுக்கள் அல்லது போக்குகளில் ஒன்ருகவே இருந்தது. உண்மையில் கோலோச்சிக் கொண்டிருந்த சோஷலிச வடிவங்கள் பிரதானமாய் நமது நரோதிசத்தை ஒத்தவை: வரலாற்று இயக்கத்தின் பொருள் முதல்வாத அடித்தளத்தைப் புரிந்து கொள்ளாமை, முதலாளித்துவச் சமுதாயத்தில் ஒவ்வொரு வர்க்கத்துக்குமுள்ள பாத்திரத்தையும் முக்கியத்துவத்தையும் தனித்துப் பிரிக்கும் திறனின்மை, ஜனநாயகச் சீர்திருத்தங்களின் முதலாளித்துவத் தன்மையை மக்கள், ‘நீதி’, ‘உரிமை’ இத்தியாதி குறித்த பல்வேறுபட்ட, அரை – சோஷலிசத் தொடர்களைக் கொண்டு மூடிமறைத்தல் முதலான பலவற்றிலும் இவை நமது நரோதிசத்தை ஒத்தவை.
மார்க்சியத்துக்கு முற்பட்ட சோஷலிசத்தின் இந்தக் கதம்பத்திரளான ஆடம்பர வாய்வீச்சு வடிவங்கள் யாவற்றுக்கும் 1848-ஆம் ஆண்டுப் புரட்சி மரண அடி கொடுத்தது. எல்லா நாடுகளிலும் இப்புரட்சி சமுதாயத்தின் பல்வேறு வர்க்கங்களையும் செயலில் வெளிப்படச் செய்து புலப்படுத்திக் காட்டிற்று. குடியரசுவாத முதலாளித்துவ வர்க்கம் பாரிசில் 188 ஜூன் நாட்களில் தொழிலாளர்களைச் சுட்டு வீழ்த்தியதானது, பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் இயற்கையாகவே சோஷலிசத் தன்மையது என்பதை முடிவாய்ப் புலப்படுத்திக் காட்டிற்று. மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தினர் எந்த வகையான பிற்போக்கையும் விட பாட்டாளி வர்க்கத்தின் சுயேச்சையைக் கண்டுதான் நூறு மடங்கு கூடுதலாய் அஞ்சி நடுங்கினர். கோழைகளாய் அண்டிப் பிழைக்கும் மிதவாதிகள் பிற்போக்கிற்கு அடிபணிந்து தண்டமிட்டனர். விவசாயி மக்கள் பிரபுத்துவத்தின் மீதமிச்சங்கள் ஒழிக்கப்பட்டதுடன் திருப்தியடைந்து ஒழுங்கின் ஆதரவாளர்களோடு சேர்ந்து கொண்டனர், எப்பொழுதாவது அரிதாய்த்தான் தொழிலாளர் ஜனநாயகத்துக்கும் முதலாளித்துவ மிதவாதத்துக்கும் இடையே ஊசலாடினர். வர்க்கமல்லாத சோஷலிசம், வர்க்கமல்லாத அரசியல் இவை குறித்த எல்லாத் தத்துவங்களும் அப்பட்டமான அபத்தமே என்பது நிரூபணமாயிற்று.

முதலாளித்துவ மாற்றங்களுக்குரிய இந்த வளர்ச்சியைப் பாரிஸ் கம்யூன் (1871) நிறைவுறச் செய்தது; வர்க்க உறவுகள் அவற்றின் மிகப் பெருமளவுக்கு ஒளிவுமறைவற்ற உருவில் காட்சி தரும் அரசியலமைப்பு வடிவமான குடியரசு உறுதி பெற பாட்டாளி வர்க்கத்தின் வீரதீரம் மட்டுமே தான் காரணம்.
ஏனைய எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் மேலும் சிக்கலான. நிறைகுறையான வளர்ச்சி இதே விளைவுக்கு இட்டுச் சென்றது முதலாளித்துவச் சமுதாயம் திட்டவட்டமான உருப் பெற்றுவிட்டது. முதலாவது காலக்கூறின் (1848-7I) கடைப் பகுதியில், புயல்களும் புரட்சிகளுமாயிருந்த இப்பகுதியில், மார்க்சியத்துக்கு முற்பட்ட சோஷலிசமானது இறந்துபட்டது. சுயேச்சையான பாட்டாளி வர்க்கக் கட்சிகள் உதித்தெழுந்தன: முதலாவது அகிலம் (1864-72), மற்றும் ஜெர்மன் சமூக-ஜனநாயகக் கட்சி.
இரண்டாவது காலக்கூறு (1872-1904) துவக்கத்திலிருந்தே அதன் ‘சமாதானத்’ தன்மையால், புரட்சிகள் இல்லாத நிலையால் வேறுபடுத்திக் காட்டப் பெற்றது. மேற்குலகு முதலாளித்துவப் புரட்சிகளை நடத்தி முடித்து விட்டது. கிழக்குலகு இன்னும் அவற்றுக்குரிய மட்டத்துக்கு உயர்ந்தாகவில்லை.
வரவிருந்த மாற்றங்களுக்காகச் ‘சமாதான வழியில்’ தயாரிப்புகள் செய்துகொள்ளும் கட்டத்தினுள் மேற்குலகு அடியெடுத்து வைத்தது. அடிப்படையில் பாட்டாளி வர்க்கத் தன்மையதான சோஷலிசக் கட்சிகள் எங்கும் அமைக்கப்பட்டன. இவை முதலாளித்துவப் பாராளுமன்ற முறையை உபயோகித்துக்கொள்ளவும் தமது சொந்த நாளேடுகளை, தமது கல்வி போதனை நிலையங்களை, தமது தொழிற் சங்கங்களை, தமது கூட்டுறவுக் கழகங்களை நிறுவிக்கொள்ளவும் கற்றுக் கொண்டன. மார்க்சின் தத்துவம் முழுநிறை வெற்றி பெற்றுப் பரவத் தொடங்கிற்று. பாட்டாளி வர்க்கத்தினுடைய சக்திகளின் தேர்வாய்வும் அணிதிரட்டலும், வரவிருந்த போராட்டங்களுக்கான அதன் தயாரிப்பும், மெதுவாகத்தான் என்றாலும், இடையறாது முன்னேறின.
மார்க்சியத்தின் தத்துவார்த்த வெற்றியால் நிர்ப்பந்திக்கப்பட்ட அதன் பகைவர்கள், மார்க்சியவாதிகளாய்த் தமக்கு வேஷமிட்டுக் கொண்டனர். -வரலாற்றின் இயக்கவியல் போக்கு அத்தகையதாய் இருந்தது. உள்ளுக்குள் உளுத்துப் போய்விட்ட மிதவாதமானது சோஷலிச சந்தர்ப்பவாதத்தின் வடிவில் தனக்குப் புத்துயிர் அளித்துக் கொள்ள முயன்றது. மாபெரும் போர்களுக்காகச் சக்திகளை ஆயத்தமாக்கிக் கொள்வதற்குரிய இந்தக் காலக்கூறு, இந்தப் போர்கள் கைவிடப் படுதலைக் குறிப்பதாய் அவர்கள் வியாக்கியானம் செய்தனர். கூலி அடிமைமுறையை எதிர்த்துப் போராடுவதற்கு அடிமைகளின் நிலைமைகளில் ஏற்பட்ட மேம்பாடு, இந்த அடிமைகள் சுதந்திரத்துக்கான தமது உரிமையை அற்பக்காசுக்காக விற்றதைக் குறித்ததாய் அவர்கள் கொண்டனர். கோழைத் தனமாய் அவர்கள் ‘சமூக அமைதி’ (அதாவது அடிமை யுடைமையாளர்களுடன் அமைதி), வர்க்கப் போராட்டத்தைக் கைவிடுதல் முதலானவற்றை உபதேசித்தனர். பாராளுமன்றத்தில் சோஷலிச உறுப்பினர்களிடையிலும், தொழிலாளி வர்க்க இயக்கத்தின் பல்வேறு அதிகாரிகளிடையிலும், “அனுதாபங் கொண்ட” அறிவுத்துறையினரிடையிலும் அவர்கள் மிகப் பல ஆதரவாளர்களைப் பெற்றிருந்தனர்.
ஆனால் சந்தர்ப்பவாதிகள் ‘சமூக அமைதி’ குறித்தும் ‘ஜனநாயகத்தில்’ புயல் அவசியமற்றதாகிவிட்டது குறித்தும் வாழ்த்துரைத்துத் தம்மைத் தாமே போற்றிக் கொண்ட மறுகணமே, மாபெரும் உலகப் புயல்களுக்கான ஒரு புதிய ஆதாரம் ஆசியாவிலே உதித்தெழுந்தது. ருஷ்யப் புரட்சியைத் தொடர்ந்து துருக்கியிலும் பாரசீகத்திலும் சீனுவிலும் புரட்சிகள் மூண்டன. புயல்களுக்கும் ஐரோப்பாவில் அவற்றின் “எதிரொலிகளுக்கும்” உரிய ஒரு சகாப்தத்தில் தான் இப்பொழுது நாம் வாழ்ந்து வருகிறோம். மாபெரும் சீனக் குடியரசுக்கு ‘நாகரிகமடைந்த’ பல்வேறு கழுதைப்புலிகளும் இன்று பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டு இக்குடியரசை எதிர்த்துக் கிளம்புகின்றன ஏற்படும் கதி எதுவாயினும், உலகில் எந்தச் சக்தியாலும் ஆசியாவில் பழைய பண்ணையடிமை நிலையைத் திரும்பவும் நாட்டவோ, ஆசிய நிலை, அரை-ஆசிய நிலை நாடுகளில் பெருந்திரளான மக்களின் வீரம் செறிந்த ஜனநாயகத்தை அழித்தொழிக்கவோ முடியப் போவதில்லை.
வெகுஜனப் போராட்டத்துக்குத் தயார் செய்வதற்கும் அதை வளர்த்துச் செல்வதற்குமான நிலைமைகளில் கவனம் செலுத்தாமலிருந்த சிலர், ஐரோப்பாவில் முதலாளித்துவத்துக்கு எதிரான தீர்மானகரமான போராட்டத்தில் ஏற்பட்ட நீண்டகாலத் தாமதங்களால் நம்பிக்கையற்ற நிலைக்கும் அராஜக வாதத்துக்கும் இழுத்துச் செல்லப்பட்டு விட்டனர். இந்த அராஜகவாத நம்பிக்கையற்ற நிலை எவ்வளவு கிட்டப்பார்வை கொண்டது, நெஞ்சு உரமில்லாதது என்பதை இப்பொழுது நாம் காண முடியும்.
எண்பது கோடி மக்கள் தொகை கொண்ட ஆசியா, இதே ஐரோப்பிய இலட்சியங்களுக்கான போராட்டத்தினுள் ஈர்க்கப்பட்டிருக்கும் இவ்வுண்மை, நமக்கு நம்பிக்கையற்ற நிலையையல்ல, நன்னம்பிக்கையை ஊட்டி ஆர்வமளித்திட வேண்டும்.
ஆசிய நிலைப் புரட்சிகள் மிதவாதத்தின் திராணியின்மையையும் இழிநிலையையும், ஜனநாயக வெகுஜனங்களுடைய சுயேச்சையின் விசேஷ முக்கியத்துவத்தையும், பாட்டாளி வர்க்கத்தாருக்கும் எல்லா வகையான முதலாளித்துவ வர்க்கத்தாருக்கும் இடையிலுள்ள எடுப்பான பிரிவினைக் கோட்டையும் திரும்பவும் நமக்குக் காட்டியுள்ளன. ஐரோப்பா, ஆசியா இரண்டின் அனுபவத்துக்குப் பிற்பாடு, வர்க்கமல்லாத அரசியல் குறித்தும் வர்க்கமல்லாத சோஷலிசம் குறித்தும் பேசுகிறவர் எவரும் கூண்டிலே வைத்து ஆஸ்திரேலியக் கங்காரு அல்லது அதையொத்த ஒன்றின் பக்கத்தில் கண்காட்சியில் காட்டப்பட வேண்டியவரே ஆவார்.
ஆசியாவை அடுத்து ஐரோப்பாவும்-ஆசியநிலை வழியில் இல்லாவிட்டாலுங்கூட-அதிரத் தொடங்கிவிட்டது. 1872-1904ம் ஆண்டுகளின் ‘சமாதானக்’ காலக்கூறு இனி ஒரு போதும் திரும்ப வழியின்றிக் கடந்து சென்றுவிட்டது. உயர்ந்துவிட்ட வாழ்க்கைச் செலவும் டிரஸ்டுகளின் கொடுங்கோன்மையும் என்றுமே கண்டிராத அளவுக்குப் பொருளாதாரப் போராட்டத்தைக் கூர்மையாக்கி வருகின்றன. இந்த நிலைமை, மிதவாதத்தால் மிக அதிகமாய்ச் சீரழிக்கப்பட்டிருக்கும் பிரிட்டிஷ் தொழிலாளர்களையுங்கூட இயக்கத்தில் செயல்பட வைத்திருக்கிறது. ‘வைரம் பாய்ந்த’ பிற்போக்குவாத முதலாளித்துவ-ஜங்கர் நாடான ஜெர்மனியிலுங்கூட அரசியல் நெருக்கடி சூடேறி வருவதைக் காண்கிறோம். ஜன்னிவேகங் கொண்ட படைக்கலப் பெருக்கமும், ஏகாதிபத்தியக் கொள்கையும் தற்கால ஐரோப்பாவை வெடிமருந்துப் பீப்பாயையே அதிகம் ஒத்த ‘சமூக அமைதியாக’ மாற்றி வருகின்றன. இவற்றுக்கிடையில் எல்லா முதலாளித்துவக் கட்சிகளும் அழுகிக் கெடும் நிகழ்ச்சிப் போக்கும் பாட்டாளி வர்க்கத்தின் முதிர்ச்சியும் ஓயாத முன்னேற்றம் கண்டு வருகின்றன.
மார்க்சியம் தோன்றியது முதல் உலக வரலாற்றின் மூன்று பெரும் காலக்கூறுகளில் ஒவ்வொன்றும் மார்க்சியத்துக்குப் புதிய உறுதிப்பாடும் புதிய வெற்றிகளும் கிட்டச் செய்திருக்கிறது. ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் தத்துவம் என்ற முறையில் மார்க்சியத்துக்கு, வரலாற்றின் வருகிற காலக் கூறினில் இன்னும் பெரிய வெற்றி கிட்டப் போகிறது.
பிராவ்தா , இதழ் 50, நூல் திரட்டு,
1913 மார்ச் 1 தொகுதி 23,
ஒப்பம். வி. இ.
மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்
மார்க்சின் போதனை, நாகரிக உலகெங்கிலும் (அதிகாரத் தரப்பினதும், மிதவாதிகளதும் ஆகிய இரு வகையான) முதலாளித்துவ விஞ்ஞானம் அனைத்திடமிருந்தும் அளவற்ற பகைமையையும் வெறுப்பையும் கிளப்பிவிடுகிறது. மார்க்சியம் ஒரு வகையான ‘நச்சுத்தன்மை கொண்ட குறுங்குழுவாதம்’ என்று அது கருதுகின்றது. அதனிடமிருந்து வேறு எந்த விதமான போக்கையும் எதிர்பார்க்க முடியாதுதான். ஏனெனில், வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு சமுதாயத்தில் ஒருசார்பற்ற சமுதாய விஞ்ஞானம் எதுவும் இருக்க முடியாது. அதிகாரத் தரப்பைச் சேர்ந்த விஞ்ஞானம் அனைத்தும், மிதவாதிகளது விஞ்ஞானம் அனைத்தும் ஏதாவதொரு விதத்தில் கூலி அடிமை முறை யை ஆதரிக்கிறது. மார்க்சியமோ கூலி அடிமை முறையை ஈவிரக்கமின்றி எதிர்த்துப் போர்ப் பிரகடனம் செய்துள்ளது. மூலதனத்துக்குக் கிடைக்கும் இலாபத்தைக் குறைப்பதன் மூலம் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தலாமா என்ற பிரச்சினையில் முதலாளிகள் ஒருசார்பற்றவர்களாய் இருப்பார்களென எதிர்பார்ப்பது எப்படி அசட்டுத் தனமாகுமோ, ஏமாளித்தனமாகுமோ, அப்படித்தான் கூலி அடிமைமுறைச் சமுதாயத்தில் விஞ்ஞானம் ஒருசார்பற்றதாய் இருக்குமென எதிர்பார்ப்பதும் அசட்டுத்தனமாகும், ஏமாளித்தனமாகும்.
இது மட்டுமல்ல. தத்துவஞானத்தின் வரலாறும் சரி, சமுதாய விஞ்ஞானத்தின் வரலாறும் சரி, மார்க்சியத்தில் குறுங்குழுவாதம் போன்றதெதுவும் கிடையாது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன. அதாவது, அது ஓர் இறுகிப்போன வறட்டுப் போதனையல்ல; உலக நாகரிக வளர்ச்சியின் ராஜபாட்டையின் வழியே வராமல் அதனின்று விலகி வேறொரு வழியே முளைத்த போதனை அல்ல. மாறாக, மனித குலத்தின் முன்னணிச் சிந்தனையாளர்கள் ஏற்கெனவே எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மார்க்ஸ் விடைகள் தந்தார் என்பதில் தான் குறிப்பாக அவருடைய மேதாவிலாசம் அடங்கியுள்ளது. தத்துவஞானம், அரசியல் பொருளாதாரம், சோஷலிசம் ஆகியவற்றின் தலைசிறந்த பிரதிநிதிகளுடைய போதனைகளின் நேரடியான, உடனடியான தொடர்ச்சியாகத்தான் மார்க்சின் போதனை எழுந்தது.

மார்க்சின் போதனை மெய்யானது, அதனால் தான் அது எல்லாம் வல்ல தன்மை பெற்றிருக்கிறது. அது முழுமையான, உள்ளிணக்கம் கொண்ட போதனை. ஓர் ஒன்றிணைந்த உலகப் பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது. எந்த வடிவத்திலுமமைந்த மூடநம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு ஆதரவோ இந்த உலகப் பார்வையுடன் ஒத்துவர முடியாது. ஜெர்மானியத் தத்துவஞானம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோஷலிசம் என்ற வடிவத்தில் 19-ஆம் நூற்றாண்டில் மனித குலம் உருவாக்கித் தந்த தலைசிறந்த படைப்புகளின் உரிமை பெற்ற வாரிசுதான் மார்க்சியம்.
இவை மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களாகும், மூன்று உள்ளடக்கக் கூறுகளாகும். இவற்றைச் சுருக்கமாகக் கவனிப்போம்.
1
பொருள்முதல்வாதம்தான் மார்க்சியத்தின் தத்துவஞானமாகும். பொருள்முதல்வாதம் ஒன்றுதான் முரணற்ற தத்துவஞானமாகும். இயற்கை விஞ்ஞானங்களுடைய எல்லாப் போதனைகளுக்கும் ஏற்புடையதாகும். மூட நம்பிக்கைகளுக்கும் பகட்டுக்கும் பசப்புக்கும் இன்ன பிறவற்றுக்கும் தீராப்பகையாகும் என்பது ஐரோப்பாவின் நவீன கால வரலாறு பூராவிலும், இன்னும் முக்கியமாய் மத்திய காலக் குப்பைக் கூளங்களை எதிர்த்தும், நிறுவனங்களிலும் கருத்துகளிலும் ஆட்சி புரிந்த பிரபுத்துவத்தை எதிர்த்தும் நடைபெற்ற முடிவான கடும் போரின் களமாயிருந்த பிரெஞ்சு நாட்டில் 18ம் நூற்றாண்டின் இறுதியிலும் தெளிவாக மெய்ப்பிக்கப்பட்டது. ஆகவே பொருள்முதல்வாதத்தை மறுப்பதற்கும், பலவீனப்படுத்துவதற்கும், பழிப்பதற்கும், ஜனநாயகத்தின் எதிரிகள் முழுமூச்சுடன் முயன்று பார்த்தார்கள். தத்துவஞானக் கருத்து முதல் வாதத்தின் பல வகை வடிவங்களை இவர்கள் ஆதரித்தனர். இவ்வகைக் கருத்துமுதல்வாதம் ஏதாவது ஒரு வழியில் எப்பொழுதும் மதத்தைப் பாதுகாக்கவோ ஆதரிக்கவோதான் செய்கிறது.
மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞானப் பொருள்முதல் வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனர். இந்த அடிப்படையிலிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறாயிருப்பதை அவர்கள் அடிக்கடி விளக்கி வந்தார்கள். எங்கெல்ஸ் எழுதிய லுட்விக் ஃபாயர் பாஹ், டூரிங்குக்கு மறுப்பு என்கிற நூல்களில் அவர்களுடைய கருத்துக்கள் மிகத் தெளிவாகவும் முழுமையாகவும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை என்கிற நூலைப் போலவே இவ்விரண்டு நூல்களும் வர்க்க உணர்வு பெற்ற ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவசியமான கைப்புத்தகங்களாகும்.
18ம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதத்துடன் மார்க்ஸ் நின்றுவிடவில்லை. அவர் தத்துவஞானத்தை முன்னேறச் செய்தார். மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானம் திரட்டிய செல்வங்களைக் கொண்டு, குறிப்பாக ஹெகலின் தத்துவ முறை – இதிலிருந்தே ஃபாயர்பாஹின் பொருள்முதல்வாதம் தோன்றியது – திரட்டிய செல்வங்களைக் கொண்டு, அவர் பொருள்முதல்வாதத்தை வளப்படுத்தினார். இந்தச் செல்வங்களில் பிரதானமாக விளங்குவது இயக்கவியல் தான். இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான, ஒரு தலைப்பட்சமில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளக்கி விவரிக்கும் போதனையாகும், நிரந்தரமாக வளர்ச்சியற்ற வண் ணமுள்ள பருப்பொருளை நமக்குப் பிரதிபலித்துக் காட்டும் மனித அறிவின் சார்புநிலையை வலியுறுத்தும் போதனையாகும். ரேடியம், மின்னணுக்கள், தனிமங்களில் ஒன்று மற்றொன்றாக மாறுவது-இவை போன்ற இயற்கை விஞ்ஞானத்தின் மிக நவீன கண்டுபிடிப்புகளெல்லாம் மார்க்சின் இயக்கவியல் பொருள்முதல்வாதமே சரியானது என்று வியக்கத்தக்க முறையில் உறுதிப்படுத்தியுள்ளன. அழுகிப்போன பழைய கருத்து முதல்வாதத்தைப் பற்றிய ‘புதிய’ மறு வியாக்கியானங்களைக் கொண்டு முதலாளித்துவத் தத்துவஞானிகள் தந்த போதனைகளால் இதைத் தடுக்க முடியவில்லை .
தத்துவஞானப் பொருள்முதல் வாதத்தை மார்க்ஸ் ஆழமாக்கி வளர்த்து நிறைவு பெறச் செய்தார். இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதலாகவும் விரிவாக்கினார். மார்க்சின் வரலாற்றுத் துறைப் பொருள்முதல்வாதம் விஞ்ஞானச் சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும் அரசியலையும் பற்றிய கருத்துகளில் குழப்பமும் தான் தோன்றித் தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது அவை போய், வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த முழுமையும் உள்ளிணக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவம் வந்துவிட்டது. வரலாற்றுத் துறைப் பொருள்முதல்வாதம் என்ற இந்தத் தத்துவம் காட்டுவதென்ன? உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக ஒரு சமுதாய அமைப்பு முறையிலிருந்து அதைவிட உயர்தரமான இன்னொரு சமுதாய அமைப்புமுறை எப்படி வளர்கிறது என்பதை உதாரணமாக, நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பு முறையிலிருந்து முதலாளித்துவச் சமுதாய அமைப்புமுறை எப்படி வளர்கிறது என்பதை – அது காட்டுகிறது.
இயற்கை என்பது – அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கும் பருப்பொருள் என்பது மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து வருகிறது. இந்த இயற்கையை மனித அறிவு பிரதிபலிக்கிறது. அதே போலதான் மனிதனின் சமுதாய அறிவு எனப்படுவதும் (அதாவது தத்துவஞானம், மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களும் போதனைகளும்) சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையைப் பிரதிபலிக்கிறது. அரசியல் நிறுவனங்கள் என்பவையெல்லாம் பொருளாதார அடித் தளத்தின் மீது நிறுவப்பட்ட மேல் கட்டுமானமேயாகும். உதாரணமாக, நவீன ஐரோப்பிய அரசுகளின் பல்வேறு அரசியல் வடிவங்கள் எல்லாம் பாட்டாளி வர்க்கத்தின் மேல் முதலாளி வர்க்கம் செலுத்தி வரும் ஆதிக்கத்தைப் பலப் படுத்த எப்படிப் பயன்படுகின்றன என்பதை நாம் பார்க்கிறோம்.
மார்க்சின் தத்துவஞானம் முழுநிறைவு பெற்ற தத்துவ ஞானப் பொருள்முதல்வாதமாகும். இந்தப் பொருள் முதல் வாதம் மனித குலத்திற்கு, குறிப்பாகத் தொழிலாளி வர்க்கத்துக்கு, மகத்தான அறிவுச் சாதனங்களை வழங்கியிருக்கிறது.
பொருளாதார அமைப்பு முறை என்ற அடித்தளத்தின் மீதுதான் அரசியல் மேல் கட்டுமானம் கட்டப்படுகிறது என்று ஏற்றுக் கொண்டவுடன், மார்க்ஸ் தமது பெரும்பாலான கவனத்தை இந்தப் பொருளாதார அமைப்புமுறையின் மீது செலுத்தினார். மார்க்சின் பிரதான நூலாகிய மூலதனம் நவீன காலத்திய-அதாவது, முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையை ஆராயும் நூலாகும்.
மார்க்சுக்கு முற்பட்ட மூலச்சிறப்புள்ள அரசியல் பொருளாதாரம் முதலாளித்துவ நாடுகள் எல்லாவற்றிலும் அதிக வளர்ச்சி பெற்றிருந்த இங்கிலாந்திலே உருவாயிற்று. ஆடம் ஸ்மித்தும் டேவிட் ரிக்கார்டோவும் பொருளாதார அமைப்பு முறையை ஆராய்ந்து மதிப்பு பற்றிய உழைப்புத் தத்துவத்துக்கு அஸ்திவாரமிட்டார்கள். அவர்களுடைய பணியை மார்க்ஸ் தொடர்ந்து நடத்தினார். இந்தத் தத்துவத்தை அவர் திட்டமாக நிரூபித்து முரணற்ற வகையில் விவரித்தார். ஒவ்வொரு பண்டத்தின் மதிப்பும் அதை உற்பத்தி செய்வதில் செலவழிக்கப்பட்ட சமுதாய ரீதியில் அவசியமான உழைப்பு நேரத்தின் அளவைக் கொண்டுதான் நிர்ணயிக்கப்படுகிறது என்று அவர் விளக்கிக் காட்டினார்,
முதலாளித்துவப் பொருளாதாரவாதிகள், பொருட்கள் இடையிலான (ஒரு பண்டம் மற்றென்றுடன் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும்) உறவு என்பதாக விவரித்ததில் மனிதர்கள் இடையிலான உறவு நிலவுவதை மார்க்ஸ் புலப்படுத்தினார். பண்டப் பரிமாற்றம் தனித்தனியான உற்பத்தியாளர்களிடையே சந்தை மூலமாக ஏற்படும் பிணைப்பைக் காட்டுகிறது. பணம் என்பது இந்தப் பிணைப்பு தனிப்பட்ட உற்பத்தியாளர்களின் பொருளாதார வாழ்க்கை முழுவதையும் பிரிக்க முடியாதபடி முழுமொத்தமாக இணைத்து மேலும் மேலும் நெருக்கமாவதைக் குறிக்கிறது. மூலதனம் என்பது இந்தப் பிணைப்பு மேலும் வளர்ச்சியுறுவதைக் குறிக்கிறது; அதாவது மனிதனின் உழைப்புச் சக்தியே ஒரு பரிமாற்றப் பண்டமாகிவிடுவதைக் குறிக்கிறது. கூலி பெறும் உழைப்பாளி நிலம், ஆலைகள், உழைப்புக் கருவிகள் ஆகியவற்றின் சொந்தக்காரர்களிடம் தனது உழைப்புச் சக்தியை விற்கிறான், தொழிலாளி வேலை நாளின் ஒரு பகுதியைத் தன்னையும் தனது குடும்பத்தையும் பராமரித்துக் கொள்வதற்கு வேண்டிய செலவுக்காக (அதாவது, கூலிக்காக) உழைப்பதில் கழிக்கிறான், மறு பகுதியில் ஊதியமின்றியே உழைத்து முதலாளிக்கு உபரி மதிப்பை உண்டாக்கித் தருகிறன் இந்த உபரி மதிப்புத்தான் இலாபத்துக்குத் தோற்றுவாய், அதுதான் முதலாளி வர்க்கத்தின் செல்வத்துக்குத் தோற்றுவாய்,
உபரி மதிப்பைப் பற்றிய போதனைதான் மார்க்சின் பொருளாதாரத் தத்துவத்துக்கு மூலைக்கல் ஆகும்.தொழிலாளியின் உழைப்பால் உண்டாக்கப்பட்ட மூலதனம் சிறு உற்பத்தியாளர்களை அழித்து வேலையில்லாதோர் பட்டாளத்தைப் படைப்பதின் மூலமாகத் தொழிலாளியை நசுக்குகிறது. தொழில் துறையில், பெருவீத உற்பத்தி பெறுகிற வெற்றி பளிச்சென்று தெரிகிறது. ஆனால், இதே நிகழ்ச்சியை விவசாயத் துறையிலும் நாம் பார்க்க முடியும். பெருவீத முதலாளித்துவ விவசாயத்தின் மேநிலை அதிகமாகிக் கொண்டே போகிறது : விவசாயத்தில் இயந்திரங்களை உபயோகிப்பதும் அதிகரிக்கிறது; பண மூலதனத்தின் சுருக்குக் கயிற்றில் விவசாயப் பொருளாதாரம் சிக்கிக் கொள்கிறது; அது தனது பிற்பட்ட தொழில் நுணுக்கத்தின் சுமையால் அழுத்தப்பட்டு அழிகிறது. விவசாயத் துறையில் சிற்றளவான உற்பத்தியின் சீர்குலைவுக்குரிய வடிவங்கள் வேறாயிருப்பினும், இச்சீர்குலைவு ஏற்படுவது மறுக்கமுடியாத உண்மையாகும்.
மூலதனம் சிற்றளவான உற்பத்தியை ஒழிப்பதன் மூலம், உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதற்கும் பெரிய முதலாளிகளின் கூட்டுகளுக்கு ஏகபோக நிலையைப் படைப்பதற்கும் வகை செய்கிறது. உற்பத்தியே மேலும் மேலும் சமுதாயத் தன்மை பெறுகிறது : ஒரு முறையான பொருளாதார ஒழுங்கமைப்பிலே இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பிணைக்கப்பட்டு விடுகின்றனர். ஆனால் அந்தக் கூட்டு உழைப்பின் உற்பத்திப் பொருளை விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில முதலாளிகள் உடைமையாக்கிக் கொள்கிறார்கள். உற்பத்தியில் அராஜகம் வளர்கிறது; அதேபோல் நெருக்கடிகளும் வளர்கின்றன; சந்தைகளைப் பிடித்துக்கொள்வதற்கான ஆவேச வேட்டையும் அதிகமாகிறது; திரளான மக்களின் வாழ்க்கைக் காப்புறுதியின்மையும் அதிகரிக்கிறது. தொழிலாளர்கள் மூலதனத்தை அண்டிப் பிழைக்க வேண்டிய நிலையை முதலாளித்துவ முறை தீவிரப்படுத்தும் அதே சமயத்தில் ஒன்றுசேர்ந்த தொழிலாளர் எனும் மாபெரும் பலத்தையும் பிறப்பித்துவிடுகிறது.
பரிமாற்றப் பண்டப் பொருளாதாரத்தின் ஆரம்ப வித்துகளிலிருந்து, சாதாரணப் பரிமாற்றத்திலிருந்து தொடங்கி, மிக உயர்ந்த வடிவங்கள் வரையில், பெருவீத உற்பத்தி வரையில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியை மார்க்ஸ் ஆராய்ந்து காட்டினார்.
பழையவையும் புதியவையும் அடங்கலான எல்லா முதலாளித்துவ நாடுகளின் அனுபவமும் இந்த மார்க்சியப் போதனை பிழையற்றதாகும் என்பதை ஆண்டு தோறும் மேலும் மேலும் கூடுதலான தொழிலாளர்களுக்குத் தெளிவாக நிரூபித்துக் காட்டி வருகிறது.
உலகெங்கும் முதலாளித்துவம் வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் இந்த வெற்றி முதலாளித்துவத்தின் மீது தொழிலாளர் காணப் போகும் வெற்றியின் முன்னறிவிப்பே ஆகும்.
நிலப்பிரபுத்துவ அமைப்புமுறை வீழ்த்தப்பட்டு “சுதந்திரமான” முதலாளித்துவச் சமுதாயம் இப்பூவுலகில் தோன்றிய பொழுது இந்தச் சுதந்திரம் உழைப்பாளிகளை ஒடுக்கவும் சுரண்டவும் அமைந்த புதியதோர் அமைப்புமுறையையே குறித்தது என்பது உடனே தெளிவாக விளங்கலாயிற்று. இந்த ஒடுக்குமுறையின் பிரதிபலிப்பாகவும் இதற்கான கண்டனமாகவும் பல்வேறு சோஷலிசப் போதனைகள் உடனே தலை தூக்கத் தொடங்கின. ஆனால் ஆரம்ப காலத்திய சோஷலிசம் கற்பனை சோஷலிசமாகத்தான் இருந்தது. அது முதலாளித்துவச் சமுதாயத்தை விமர்சித்தது. கண்டித்தது, சபித்தது; அந்தச் சமுதாயத்தை ஒழிக்க வேண்டும் என்று கனவு கண்டது; அதை விட மேலான ஓர் அமைப்புமுறையைப் பற்றி ஆகாயக் கோட்டை கட்டி வந்தது; சுரண்டுவது ஒழுக்கக்கேடான செயல் என்று பணக்காரர்களுக்கு உணர்த்த முயற்சித்தது.
ஆனால் கற்பனா சோஷலிசத்தினால் விடுதலைக்கான மெய்யான வழியைக் காட்ட முடியவில்லை. முதலாளித்துவத்தில் நிலவும் கூலி அடிமைமுறையின் சாராம்சத்தை அதனால் விளக்க முடியவில்லை. முதலாளித்துவ முறையின் வளர்ச்சி பற்றிய விதிகளை அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு புதிய சமுதாயத்தின் படைப்பாளியாக அமையவல்ல சமுதாயச் சக்தியை அதனால் சுட்டிக் காட்டவும் முடியவில்லை. இதற்கிடையில், நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சியையும் பண்ணை அடிமை முறையின் வீழ்ச்சியையும் தொடர்ந்து ஐரோப்பா முழுவதிலும், குறிப்பாக பிரான்சில், ஏற்பட்ட புயல் வேகப் புரட்சிகள், வர்க்கங்களின் போராட்டம்தான் எல்லா வளர்ச்சிக்கும் ஆதாரமாயும் உந்து விசையாகவும் உள்ளது என்பதை மேலும் மேலும் தெளிவாக வெளிப்படுத்தின.
நிலப்பிரபுத்துவ வர்க்கத்துக்கெதிராய் அரசியல் சுதந்திர இலட்சியத்துக்குக் கிடைத்த எந்த ஒரு வெற்றியும் அவ்வர்க்கத்தின் மூர்க்கமான எதிர்ப்பில்லாமல் கிடைத்து விடவில்லை. முதலாளித்துவச் சமுதாயத்தின் பல்வேறு வர்க்கங்களிடையே ஜீவமரணப் போராட்டம் இல்லாமல் எந்த முதலாளித்துவ நாடும் ஓரளவு சுதந்திரமான, ஜனநாயக அடிப்படையில் வளர்ச்சியுற்று விடவில்லை.
வேறு எவருக்கும் முன்பாக மார்க்சுக்குத்தான் உலக வரலாறு போதிக்கும் படிப்பினையை இதிலிருந்து கண்டறியவும், அந்தப் படிப்பினையை முரணின்றிச் செயல்படுத்தவும் முடிந்தது, இதில் தான் அவருடைய மேதாவிலாசம் இருக்கிறது. வர்க்கப் போராட்டத்தைப் பற்றிய போதனைதான் அந்த முடிபாகும். நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவிதச் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டு கொள்ள மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாள்களாக்கிக்கொண்டேயிருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன? பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைப் படைக்கவும் திறன் பெற்றவையும் சமுதாயத்தில் தங்களுக்குள்ள நிலையின் காரணமாக அப்படிப் படைத்துத் தீரவேண்டிய கட்டாயத்திலிருக்கிறவையுமான சக்திகளை நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்திற்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு அறிவொளியூட்டிப் போராட்டத்திற்கு ஒழுங்கமைத்துத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி.
மார்க்சின் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களெல்லாம் அது வரை உழன்று கொண்டிருந்த ஆன்மிக அடிமைத்தனத்திலிருந்து வெளியேறும் வழியைப் பாட்டாளி வர்க்கத்திற்குக் காட்டியிருக்கிறது. மார்க்சின் பொருளாதாரத் தத்துவம் ஒன்றுதான் பொதுவான முதலாளித்துவ அமைப்பு முறையில் பாட்டாளி வர்க்கத்தின் உண்மை நிலையை விளக்கியுள்ளது.
அமெரிக்காவிலிருந்து ஜப்பான் வரை, ஸ்வீடனிலிருந்து தென்னாப்பிரிக்கா வரை, உலகமெங்கும் பாட்டாளி வர்க்கத்தின் சுயேச்சையான நிறுவனங்கள் பெருகிக்கொண்டேயிருக்கின்றன. தனது வர்க்கப் போராட்டத்தை நடத்திச் செல்வதன் வாயிலாகப் பாட்டாளி வர்க்கம் அறிவொளியும் கல்வியும் பெற்று வருகிறது; முதலாளித்துவச் சமுதாயத்திற்குரிய சார்புக் கருத்துக்களினின்று தன்னை விடுவித்துக் கொண்டுவருகிறது; தன் அணிகளை நெருக்கமாகத் திரட்டிச் சேர்த்து வருகிறது; தனது வெற்றிகளின் வீச்சை அளந்தறியக் கற்றுக் கொண்டு வருகிறது; தன் சக்திகளை எஃகு போல் திடப்படுத்தி வருகிறது; தடை செய்ய முடியாதபடி வளர்ந்துவருகிறது.
1913 மார்ச்சில் நூல் திரட்டு ,
புரோஸ்வெஷேனியே, தொகுதி 23,
இதழ் 3-ல் வெளிவந்தது பக்கங்கள் 40-48
கார்ல் மார்க்ஸ்
(மார்க்சியத்தைப் பற்றிய விரிவுரையுடன்
அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்)
முன்னுரை
இன்று தனியாக அச்சேறி வெளிவரும் கார்ல் மார்க்ஸ் பற்றிய கட்டுரையை நான் (என் நினைவுக்கு எட்டியவரையில்) 1913-ஆம் ஆண்டில் கிரனைட் என்ஸைக்ளோபீடியா என்ற கலைக் களஞ் சியத்திற்காக எழுதினேன். அந்தக் கட்டுரையின் முடிவில் மார்க்ஸ் பற்றி வெளிவந்த, பெரும்பாலும் வெளிநாடுகளைச் சேர்ந்த நூல்களை ஓரளவுக்கு விரிவாகக் குறிக்கும் பட்டியலையும் இணைத்திருந்தேன். இந்தப் பதிப்பில் இந்த நூல் பட்டியல் விடப்பட்டுள்ளது. மார்க்ஸ் பற்றிய கட்டுரையின் இறுதிப் பகுதி அவருடைய புரட்சிகரமான போர்த்தந்திரங்களை விளக்கும் பகுதியாகும். தணிக்கை முறையை உத்தேசித்துக் கலைக்களஞ்சியத்தின் ஆசிரியர்கள் அந்த இறுதிப் பகுதியைத் தாங்களாகவே வெட்டியெடுத்து விட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக அந்தப் பகுதியை மீண்டும் வெளியிட இயலாத நிலைமையில் இருக்கிறேன். காரணம், அதன் முதல் நகல் கிராக்கள் நகரில் அல்லது ஸ்விட்சர்லாந்தில் எங்கோ என் தஸ்தாவேஜுகளுடன் தங்கிவிட்டது. ஒன்றுதான் எனக்கு நினைவு இருக்கிறது: அக்கட்டுரையின் கடைசிப் பகுதியில், மற்ற விஷயங்களைச் சொன்னது போக, 1856-ஆம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்திலுள்ள ஒரு வாசகத்தை மேற்கோள் காட்டியிருந்தேன். அதில் மார்க்ஸ் எழுதியதாவது: ‘ஜெர்மனியின் நிலைமையெல்லாம் விவசாயப் போர் இரண்டாம் தடவையாக ஏற்பட்டுப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குப் பின்புலம் அளிக்க வாய்ப்பு ஏற்படுமா என்பதைத்தான் பொறுத்திருக்கிறது. அப்படி ஏற்படுமேயானால் நிலைமை அற்புதமாக இருக்கும்.’ சோஷலிசத்துக்கு முற்றாகத் துரோகம் செய்வதிலும், முதலாளி வர்க்கத்தின் பக்கம் கட்சி மாறிச் சென்று விடுவதிலும் இன்று இறங்கியிருக்கும் நமது மென்ஷிவிக்குகள் இதைத்தான் 1905ம் ஆண்டு முதல் புரிந்து கொள்ளத் தவறினார்கள்.
மாஸ்கோ, நி. லெனின்
1918, மே. 14
கார்ல் மார்க்ஸ் (ரைனிஷ் பிரஷ்யாவிலுள்ள) டிரியர் நகரில் 1818ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதியன்று பிறந்தார். அவரது தகப்பனார் ஒரு வழக்குரைஞர், ஒரு யூதர்; 1824ம் ஆண்டில் புரோட்டஸ்டென்ட் மதத்தில் சேர்ந்தார். இக்குடும்பம் வசதியான நிலையில் இருந்தது; நாகரிகப் பண்பாடு மிக்கதாய் இருந்தது. ஆனால் புரட்சி மனப்பான்மை கொண்டதல்ல. டிரியரில் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த பிறகு சட்டவியலைப் படிக்க மார்க்ஸ் முதலில் பான் பல்கலைக்கழகத் திலும் பிறகு பெர்லின் பல்கலைக்கழகத்திலும் சேர்ந்தார். ஆனால் முக்கியமாய் வரலாறும் தத்துவஞானமும் பயின்றார். 1841ம் ஆண்டில் படிப்பை முடித்து, எபிக்யூரஸ் தத்துவஞானத்தைப் பற்றி பல்கலைக்கழகப் பட்டத்திற்கு வேண்டிய தமது ஆராய்ச்சியுரையைச் சமர்ப்பித்தார். அந்தக் காலத்தில் தமது கருத்துப் போக்குகளில் மார்க்ஸ் ஹெகல் வகைப்பட்ட கருத்து முதல் வாதியாக இருந்தார். (புரூனோ பௌவர் என்பவரும் மற்றவர்களும் சேர்ந்திருந்த) “இடதுசாரி ஹெகல் வாதிகளின்” குழுவில் மார்க்சும், பெர்லினில் இருக்கையில், சேர்ந்திருந்தார். ஹெகலுடைய தத்துவஞானத்திலிருந்து நாத்திக முடிவுகளுக்கும் புரட்சிகரமான முடிவுகளுக்கும் வர இந்தக் குழுவினர் முயன்று வந்தார்கள்.

பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு மார்க்ஸ் பான் நகருக்குச் சென்றார். பேராசிரியராய்ப் பணியாற்றலாம் என்று நினைத்துத்தான் அவர் அங்குச் சென்றார். ஆனால் ஜெர்மன் அரசாங்கத்தின் கொள்கை பிற்போக்கானதாக இருந்தது. 1832-ல் அது லுட்விக் ஃபாயர்பாஹைப் பேராசிரியர் பதவியிலிருந்து நீக்கியது; மீண்டும் அந்தப் பல்கலைக்கழகத்துக்கு 1836-ல் அவர் திரும்பி வருவதை அனுமதிக்க மறுத்துவிட்டது. இளம் பேராசிரியராகிய புரூனோ பௌவர் பான் பல்கலைக் கழகத்தில் உரை நிகழ்த்தாதபடி அது 1841ல் தடை செய்தது. இந்தப் பிற்போக்கான கொள்கையின் காரணமாக, மார்க்ஸ் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றலாம் என்ற கருத்தைக் கைவிட வேண்டியதாயிற்று. அந்தக் காலத்தில் இடதுசாரி ஹெகல் வாதக் கருத்துக்கள் ஜெர்மனியில் வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருந்தன. குறிப்பாக 1836ம் ஆண்டுக்குப் பின் லுட்விக் ஃபாயர்பாஹ் இறையியலை விமர்சிக்கவும் பொருள்முதல்வாதத்தின் பக்கம் திரும்பவும் தொடங்கினார். 1841ல் அவரிடம் பொருள்முதல்வாதம் மேலோங்கி விட்டது (அவர் எழுதிய கிறித்தவ சமயத்தின் சாராம்சம் என்ற நூலைப் பார்க்க). எதிர்காலத் தத்துவஞானத்தின் கோட்பாடுகள் என்று தலைப்பிட்ட அவருடைய நூல் 1843ல் வெளியாயிற்று. இந்த நூல்களைப் பற்றி எங்கெல்ஸ் பின்னால் எழுதும் போது, இவை ‘தளை அறுத்து விடுவிப்பனவாய் இருந்ததை அவரவர் தாமே அனுபவித்து உணர வேண்டிய ஒன்றாகும்’ என்று எழுதினார். ‘நாங்கள் எல்லோரும்’ (அதாவது, மார்க்ஸ் உள்ளிட்ட இடது சாரி ஹெகல்வாதிகள்) ‘உடனே ஃபாயர்பாஹ்வாதிகளானோம்’ என்கிறார் எங்கெல்ஸ். அந்தக் காலத்தில் இடதுசாரி ஹெகல்வாதிகளுடன் சில விஷயங்களில் நெருங்கியிருந்த தீவிரவாத ரைனிஷ் முதலாளித்துவ வர்க்கத்தினர் (பூர்ஷ்வாக்கள்) கொலோன் நகரில் ஓர் எதிர்க்கட்சிப் பத்திரிகையை நிறுவினர். அதன் பெயர் Rheinische Zeitung (ரைனிஷ் பத்திரிகை) என்பதாகும் (1842 ஜனவரி 1ம் தேதி அதன் முதல் இதழ் வெளியாயிற்று. அதில் முக்கிய விஷயதானம் அளிப்பவர்களாக இருக்கும்படி மார்க்சும் புரூனோ பௌவரும் அழைக்கப்பட்டார்கள். 1842 அக்டோபர் மாதத்தில் மார்க்ஸ் அதன் தலைமை ஆசிரியராகி பான் நகரிலிருந்து கொலோன் நகருக்குப் போனார். மார்க்ஸ் ஆசிரியராய் இருந்த போது அந்தப் பத்திரிகையின் புரட்சிகரமான-ஜனநாயகப் போக்கு மேலும் மேலும் வெளிப்படையாயிற்று. அரசாங்கம் அந்தப் பத்திரிகையை இரட்டைத் தணிக்கைக்கும் மும்முறைத் தணிக்கைக்கும் முதலில் உட்படுத்தி, பிறகு 1843 ஜனவரி 1ம் தேதியன்று அதை அடியோடு தடை செய்து விடுவதென்று முடிவு செய்தது. அந்தத் தேதிக்கு முன்பே மார்க்ஸ் தமது ஆசிரியர் பதவியை விட்டு விலக வேண்டியதாயிற்று. ஆனால் அவர் விலகியுங்கூட அந்தப் பத்திரிகையைக் காப்பாற்ற முடியவில்லை . 1843 மார்ச்சு மாதத்தில் அது மூடப்பட்டுவிட்டது. Rheinische Zeitung என்ற பத்திரிகைக்கு மார்க்ஸ் எழுதிய முக்கியமான கட்டுரைகளில் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றோடு கூட (பார்க்க: நூல் பட்டியல்) மோசெல் பள்ளத்தாக்கில் திராட்சை பயிரிடும் விவசாயிகளின் நிலைமையைப் பற்றிய ஒரு கட்டுரையையும் எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார், பத்திரிகை வேலை, அரசியல் பொருளாதாரத் துறையில் அவருக்குப் போதிய பழக்கம் இல்லை என்று மார்க்சுக்குக் காட்டியது. அவர் அதைக் கண்ணுங்கருத்துமாகப் பயில்வதிலே முனைந்தார்.
1843ம் ஆண்டில் கிரைட் ஸ்நாக் நகரில் ஜென்னி வான் வெஸ்ட்ஃபாலன் என்ற மங்கையை மார்க்ஸ் மணம் புரிந்தார். பிள்ளைப் பிராயத்திலேயே அவ்விருவரும் நண்பர்களாக இருந்தவர்கள்; மார்க்ஸ் மாணவராக இருந்த காலத்திலேயே இருவரும் மண உறுதி ஒப்பந்தம் செய்திருந்தனர். அவரது மனைவியார் பிரஷ்யப் பிரபுத்துவ வம்சத்தின் ஒரு பிற்போக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர். திருமதி மார்க்சின் தமையனார் மிகப் பிற்போக்கான கட்டமான 1850-58ல் பிரஷ்யாவின் உள்நாட்டு அமைச்சராக இருந்தார். 1843 இலையுதிர் காலத்தில் மார்க்ஸ் பாரிஸ் நகருக்குச் சென்றார், அர்னேல்டு ரூகே (பிறப்பு 1802, மறைவு 1880; ஓர் இடதுசாரி ஹெகல்வாதி; 1825-30ல் சிறை வாசம், 1848க்குப் பின் அரசியல் காரணங்களுக்காக நாடுகடத்தப்பட்டவர்; 1886-70க்குப் பின் பிஸ்மார்க்கின் ஆதரவாளர்) என்பவருடன் சேர்ந்து தீவிரப் போக்குள்ள ஒரு சஞ்சிகையை வெளி நாட்டில் வெளியிடுவதற்காகத்தான் மார்க்ஸ் பாரிசுக்குப் போனார். Deutsch-Franzosische Jahrbicher (ஜெர்மன் – பிரெஞ்சு ஆண்டுச் சஞ்சிகை) என்ற இந்தச் சஞ்சிகையின் முதல் இதழ் மட்டும்தான் வெளியாயிற்று. ஜெர்மனியில் இரகசியமாக அந்தச் சஞ்சிகையை வினியோகம் செய்வதிலிருந்த கஷ்டத்தின் காரணமாகவும், ரூகேயுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டதின் காரணமாகவும் அந்தச் சஞ்சிகை நிறுத்தப்பட்டது. அதில் மார்க்ஸ் வரைந்த கட்டுரைகள் அவர் ஏற்கெனவே ஒரு புரட்சியாளராக இருந்தார் என்பதைக் காட்டின. ‘போராட்ட மூலம் விமர்சனம்’ செய்ய வேண்டும். நடப்பில் இருந்து வருகிற எல்லாவற்றையும் ஈவிரக்கமின்றி விமர்சனம் செய்ய வேண்டும்’, என்று அவர் வாதித்தார். பொது மக்களுக்கும், பாட்டாளி வர்க்கத்துக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
1844 செப்டம்பர் மாதத்தில் பிரெடெரிக் எங்கெல்ஸ் சில நாட்கள் தங்குவதற்கு என்று பாரிசுக்கு வந்தார். அது முதலாய் அவர் மார்க்சின் உயிருக்குயிரான நண்பரானார். பாரிசில் இருந்த புரட்சிகரக் குழுக்களின் கொந்தளிப்பான அன்றைய வாழ்வில் இருவரும் மிகத் தீவிரமாகப் பங்கு கொண்டார்கள் (அந்நாளில் புரூதோனின் போதனை சிறப்பான முக்கியத்துவம் பெற்றிருந்தது; 1847ல் வெளிவந்த மெய்யறிவின் வறுமை என்ற தமது நூலிலே மார்க்ஸ் இதைத் தகர்த்தெறிந்தார்). குட்டி முதலாளித்துவ சோஷலிசத்தின் பல்வேறு போதனைகளைத் தீவிரமாக எதிர்த்துப் போர் புரிந்தபடியே அவர்கள் புரட்சிகரமான பாட்டாளி வர்க்க சோஷலிசத்தின் அல்லது கம்யூனிசத்தின் (மார்க்சியத்தின் தத்துவத்தையும் போர்த்தந்திரங்களையும் உருவாக்கினார்கள். (நூல் பட்டியலில் 1844-48 காலப்பகுதியைச் சேர்ந்த மார்க்சின் நூல்களைப் பார்க்க.) பிரஷ்ய அரசாங்கத்தின் விடாப்பிடியான கோரிக்கையின் பேரில் மார்க்ஸ் ஓர் ஆபத்தான புரட்சியாளர் என்று 1845ல் பாரிஸ் நகரிலிருந்து நாடு கடத்தப்பட்டார். அவர் பிரஸ்ஸெல்ஸ் நகரம் போய்ச் சேர்ந்தார். 1847 வசந்த காலத்தில் மார்க்கம் எங்கெல்சும் ‘கம்யூனிஸ்டுகளின் லீக்’ என்ற இரகசியமான பிரச்சார சங்கத்தில் சேர்ந்தார்கள். (லண்டன் மாநகரில் 1847 நவம்பர் மாதத்தில் நடந்த அச்சங்கத்தின் இரண்டாம் பேராயத்தில் இருவரும் மிக முக்கியமான பங்குகொண்டு, அச்சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் புகழ் பெற்ற கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையை எழுதி முடித்தனர். அது 1848 பிப்ரவரி மாதத்தில் வெளியாயிற்று. இந்த நூல் மாமேதைக்குரிய தெளிவுடனும் பெருந்திறமையுடனும் ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை விவரிக்கிறது; சமுதாய வாழ்வுத் துறையையும் அணைத்து நிற்கும் முரணற்ற பொருள் முதல் வாதம், வளர்ச்சியைப் பற்றிய மிகவும் முழுமையான ஆழ்ந்த போதனையான இயக்கவியல், வர்க்கப் போராட்டத்தைப் பற்றியும், புதிய, கம்யூனிச சமுதாயத்தின் படைப்பாளி என்கிற வகையில் பாட்டாளி வர்க்கத்தின் உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, புரட்சிகரமான பாத்திரத்தைப் பற்றியும் அமைந்த ஒரு தத்துவம் ஆகியவை இந்த உலகக் கண்னேட்டத்தில் அடங்கியவை.
1848 பிப்ரவரி புரட்சி மூண்ட போது மார்க்ஸ் பெல்ஜியத்திலிருந்து நாடுகடத்தப்பட்டார். அவர் பாரிசுக்குத் திரும்பி வந்து, மார்ச்சு மாதப் புரட்சிக்குப் பிறகு அங்கிருந்து ஜெர்மனிக்கு , கொலோன் நகருக்குப் போனார். அங்கே 1848 ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து 1849 மே பத்தொன்பதாம் தேதிவரை Die Neue Rheinische Zeitung புதிய ரைனிஷ் பத்திரிகை) என்ற பத்திரிகை வெளியாகியது. மார்க்ஸ்தான் அதன் தலைமை ஆசிரியர். 1848-49ம் ஆண்டுகளில் நடந்த புரட்சி நிகழ்ச்சிகளின் போக்கு இப்புதிய தத்துவத்தை மிகச்சிறந்த முறையில் நிரூபித்து உறுதிப்படுத்தியது. அதேபோல் அக்காலம் முதல் உலக நாடுகளனைத்திலும் நிகழ்ந்த பாட்டாளி வர்க்க, ஜனநாயக இயக்கங்கள் எல்லாம் அதை மெய்ப்பித்து உறுதிப்படுத்தியுள்ளன. வெற்றி பெற்ற எதிர்ப்புரட்சியாளர்கள் முதலில் மார்க்ஸ் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் தூண்டிவிட்டார்கள் (1849 பிப்ரவரி 9ம் தேதி வழக்குத்தள்ளப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார். பிறகு அவர் ஜெர்மனியிலிருந்து (1849 மே 18ம் தேதியன்று) நாடுகடத்தப்பட்டார். மார்க்ஸ் முதலில் பாரிசுக்குச் சென்றார், அங்கே 1849 ஜூன் 13ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னால் மீண்டும் நாடுகடத்தப்பட்டார். பிறகு அவர் லண்டன் நகருக்கு வந்தார். மறைவெய்தும் நாள்வரை அவர் லண்டனிலேயே வாழ்ந்து வந்தார்.

அரசியலுக்காக நாடுகடத்தப்பட்டு அவர் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் கடுமையானது. (1913-ல் வெளியான) மார்க்ஸ், எங்கெல்ஸ் கடிதப் போக்குவரத்து இதைத் தெளிவாகக் காட்டுகிறது. மார்க்சும் அவர் குடும்பத்தினரும் கொடிய வறுமையில் சிக்கித் துன்பப்பட்டார்கள். எங்கெல்ஸ் மட்டும் தன்னலமறுப்புடன் எப்போதும் பண உதவி செய்து கொண்டே இருந்திராவிட்டால் மார்க்ஸ் மூலதனம் என்ற நூலை எழுதி முடித்திருக்க முடியாது என்பது மட்டுமல்ல, தவிர்க்க முடியாதபடி அவர் வறுமையால் மடிந்திருப்பார். மேலும் குட்டி முதலாளித்துவப் போக்குடைய சோஷலிசத்தின், பொதுவாகவே பாட்டாளி வர்க்கச் சார்பற்ற சோஷலிசத்தின் போதனைகளும் தத்துவப் போக்குகளும் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலைமையில் மார்க்ஸ் ஓர் இடையறாத, ஈவிரக்கமற்ற போரை நடத்திக் கொண்டிருக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்; சில சமயங்களில் தமக்கெதிரான மிகவும் காட்டுமிராண்டித்தனமான, வெறித்தனமான தனிப்பட்ட முறையிலான தாக்குதல்களையும் (Her Yog) அவர் முறியடிக்க வேண்டியிருந்தது. அரசியலுக்காக நாடு கடத்தப்பட்டுள்ளவர்களின் வட்டாரங்களிலிருந்து ஒதுங்கி இருந்துகொண்டு மார்க்ஸ் தமது பொருள்முதல்வாதத் தத்துவத்தை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல நூல்களில் (பார்க்க: நூல் பட்டியல்) விவரித்தார். அரசியல் பொருளாதாரத்தை ஆராய்ந்து அறிவதில் முதன்மையாகத் தமது முயற்சிகளை ஈடுபடுத்தி வந்தார். இந்த விஞ்ஞானத்தை மார்க்ஸ் புரட்சிகரமானதாக்கினார் ‘மார்க்சின் போதனை’ என்கிற பகுதியைக் கீழே பார்க்க). அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனவரைக்குச் செலுத்தும் ஒரு பங்கு (1850) என்ற நூல் வாயிலாகவும், மூலதனம் (முதல் தொகுதி, 1867) என்ற நூல் வாயிலாகவும் இதைச் செய்தார்.
1850-60 வருடங்களின் இறுதிக் கட்டமும் 1860-70க்கும் இடைப்பட்ட காலகட்டமும் ஜனநாயக இயக்கங்கள் புத்தெழுச்சி பெற்ற ஆண்டுகளாகும். அவை மார்க்சை மறுபடியும் நடைமுறை இயக்க வேலைகளில் ஈடுபடும்படி செய்தன. 184ல் (செப்டம்பர் 28ம் தேதி) லண்டன் நகரில் ‘சர்வதேசத் தொழிலாளர் சங்கம்’ – இதுதான் புகழ் பெற்ற முதலாவது அகிலம் – நிறுவப்பட்டது. மார்க்ஸ் இச்சங்கத்தின் இதயமாகவும் ஆன்மாவாகவும் விளங்கினார். அதன் முதல் அறிக்கையையும் எண்ணற்ற தீர்மானங்களையும், பிரகடனங் களையும், கொள்கையறிக்கைகளையும் அவர்தான் வரைந்தார். பல்வேறு நாடுகளின் தொழிலாளர் இயக்கத்தை ஒன்றுபடுத்தியும் (மாஜினி, புரூதோன், பக்கூனின், இங்கிலாந்திலுள்ள மிதவாதத் தொழிற்சங்கவாதம், ஜெர்மனியில் லஸ்ஸால் வாதிகளின் வலதுசாரிப் பக்கமான ஊசலாட்டங்கள் முதலான) பாட்டாளி வர்க்க ரீதியில் அமையாத, மார்க்சுக்கு முந்திய சோஷலிசத்தின் பல்வேறு வடிவங்களைக் கூட்டு நடவடிக்கைப் பாதையில் செயல்வழிப்படுத்த முயற்சித்தும், இந்தப் பிரிவுகள், போக்குகள் ஆகிய யாவற்றின் தத்துவங்களை எதிர்த்துப் போராடியும், பல்வேறு நாடுகளிலும் உள்ள தொழிலாளி வர்க்கப் பாட்டாளி போராட்டத்திற்குரிய ஒரே மாதிரியான போர்த்தந்திரங்களை மார்க்ஸ் உருவாக்கினர். பாரிஸ் கம்யூன் வீழ்ச்சியுற்றதை (1871) அடுத்தும் – இக்கம் யூனைப் பற்றி மார்க்ஸ் மிகவும் ஆழமாகவும், தெட்டத் தெளிவாகவும், ஒப்பற்றவகையிலும், பயன்மிக்கதான புரட்சிகரப் பகுத்தாராய்வை அளித்தார் (1871ல் வெளிவந்த பிரான்சில் உள்நாட்டுப் போர் என்ற நூலில்)- பக்கூனின் வாதிகள் முதலாவது அகிலத்தைப் பிளவுபடுத்தியதை அடுத்து இச்சங்கம் ஐரோப்பாவில் இருப்பது சாத்தியமில்லாமற்போயிற்று. (1872ல்) ஹேக் நகரில் நடந்த அதன் காங்கிரசுக்குப் பிறகு மார்க்ஸ் அதன் பொதுக் குழுவை (ஜெனரல் கவுன்சில்) நியூயார்க் நகருக்கு மாற்ற ஏற்பாடு செய்தார். முதலாவது அகிலம் தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை நிறைவேற்றிவிட்டது. உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் தொழிலாளர் இயக்கம் அளவிடற்கரிய முறையில் மாபெரும் வளர்ச்சி பெறுவதற்கான காலப்பகுதிக்கு அது வழிகோலிவிட்டது. இந்தக் காலப்பகுதி உண்மையிலே தொழிலாளர் இயக்கம் விரிவடைந்து வளர்ந்த காலப்பகுதியாகும்; தனித்தனி தேசிய அரசுப் பகுதிகளில் திரளான சோஷலிச தொழிலாளர் கட்சிகள் நிறுவப்பட்ட காலப்பகுதியாகும்.
அகிலத்தில் மார்க்ஸ் ஆற்றிய கடுமையான பணியும், அதைவிடக் கடுமையாக அவர் தத்துவத்துறையில் ஆற்றிய பணிகளும் அவருடைய உடல்நிலையை அடியோடு பலவீனப்படுத்திவிட்டன. அவர் அரசியல் பொருளாதாரத்துக்குப் புத்துரு அளித்திடும் பணியையும் மூலதனம் நூலை எழுதி முடிக்கும் பணியையும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். இவற்றுக்காக ஏராளமான புதிய விவரங்களைச் மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள் 37 சேகரித்தார், பல மொழிகளைப் (எடுத்துக்காட்டாக, ருஷ்ய மொழியை) பயின்று வந்தார். ஆனால் அவரது மோசமான உடல்நிலை மூலதனம் நூலை முழுமை செய்ய முடியாதபடி தடுத்துவிட்டது. 181ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதியன்று அவருடைய மனைவியார் காலமானார். 1883 மார்ச்சு 14ம் தேதியன்று நாற்காலியில் சாய்ந்தவாறே அமைதியோடு மார்க்ஸ் இயற்கை எய்தினார். லண்டனிலுள்ள ஹைகேட் இடுகாட்டில் அவர் தம் மனைவியின் கல்லறைக்கருகே அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டது. லண்டனில் கொடிய வறுமையால் அவர் குடும்பம் அல்லலுற்ற காலத்தில் மார்க்சின் குழந்தைகளில் சில இறந்து போயின. மூன்று புதல்வியர் ஆங்கிலேய , பிரெஞ்சு சோஷலிஸ்டுகளை மணந்து கொண்டனர். இப்புதல்வியர் வருமாறு: எலியனோர் ஏவ்லிங், லௌரா வஃபார்க், ஜென்னி லொங்கே. ஜென்னி லொங்கேயின் மகன் பிரெஞ்சு சோஷலிஸ்டுக் கட்சியின் அங்கத்தினராக இருக்கிறார்,
மார்க்சின் போதனை
மார்க்சின் கருத்துகள், போதனைகள் அடங்கிய முழுத் தொகுப்பே மார்க்சியம். 19ம் நூற்றாண்டில் மூன்று முக்கியமான தத்துவப் போக்குகள் இருந்தன. அவை மனித குலத்தின் மிகவும் முன்னேற்றமடைந்த மூன்று நாடுகளைச் சேர்ந்தவையாகும். அவை, மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானம், மூலச்சிறப்புள்ள ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பொதுவாக பிரெஞ்சுப் புரட்சிப் போதனைகளுடன் இணைந்த பிரெஞ்சு சோஷலிசம் என்பனவாம். இந்த மூன்று தத்துவப் போக்குகளையும் தொடர்ந்து ஆராய்ந்து, அவற்றிற்கு முழுநிறைவு அளித்த மேதைதான் மார்க்ஸ். மார்க்சின் கருத்துகள் குறிப்பிடத்தக்க முறையில் முரணற்ற தன்மையும் முழுமையும் பெற்றிருப்பவை. அவரது எதிரிகள் கூட இதை ஒப்புக் கொள்கின்றனர். இந்தக் கருத்துகள் முழுவதுமாகச் சேர்ந்துதான் நவீன காலத்திய பொருள்முதல்வாதமாகவும் நவீன காலத்திய விஞ்ஞான சோஷலிசமாகவும் அமைந்துள்ளன. இவ்விரண்டும் உலகிலுள்ள நாகரிக நாடுகளிலெல்லாம் தொழிலாளர் இயக்கத்தின் தத்துவமாகவும் வேலைத்திட்டமாகவும் திகழ்கின்றன. எனவே, மார்க்சியத்தின் முதன்மையான உள்ளடக்கமாகிய மார்க்சின் பொருளாதாரப் போதனையை விரித்துரைக்கு முன்னர், அவரது உலகக் கண்ணோட்டத்தைப் பற்றி பொதுப்படையான கட்டுரையைத் தீட்ட வேண்டிய கடமை நமக்கு ஏற்பட்டுள்ளது.
தத்துவஞானப் பொருள்முதல்வாதம்
1844-45 ஆண்டுக் காலத்தில் மார்க்சின் கருத்துகள் உருவம் பெற்றன. அக்காலம் முதல் அவர் ஒரு பொருள்முதல்வாதி; அவர் குறிப்பாயும் லுட்விக் ஃபாயர்பாஹ் என்பவரைப் பின்பற்றினார். ஃபாயர்பாஹின் பொருள்முதல்வாதம் போதுமான அளவுக்கு முரண்பாடின்றியும் முழுமை எய்தியும் இருக்கவில்லை என்பது மட்டுமே ஃபாயர்பாஹின் பலவீனமாகுமென்று பிற்காலத்திலுங்கூட மார்க்ஸ் கருதினர். ஹெகலின் கருத்து முதல்வாதத்திலிருந்து மனத்திண்மையுடன் தொடர்பை அறுத்துக் கொண்டு பொருள்முதல் வாதத்தை ஃபாயர்பாஹ் பிரகடனம் செய்தார். இந்தப் பொருள்முதல்வாதம் ஏற்கெனவே பதினெட்டாம் நூற்றாண்டில், குறிப்பாக பிரான்சில், அன்று இருந்து வந்த அரசியல் நிறுவனங்களையும். மதத்தையும் இறையியலையும் மட்டும் எதிர்த்துப் போர் புரிந்து கொண்டிருக்கவில்லை; மேலும். எல்லா இயக்க மறுப்பு இயலையும்’ (‘நிதானப் புத்தியுள்ள தத்துவஞானம்’ என்பதிலிருந்து திட்டமாக வேறுபட்டிருக்கும்படியான ‘போதையேறிய தத்துவ விசாரம்’ என்ற அர்த்தத்தைத்தான் இது இங்கே குறிக்கிறது) எதிர்த்து அது போர் புரிந்து கொண்டிருந்தது’ (Literarischen Nachlass (‘இலக்கியப் படைப்புகள்’) என்ற சஞ்சிகையில் புனிதக் குடும்பத்தைப் பார்க்க.) அதில் தான் ஃபாயர்பாஹின் வரலாற்றுச் சிறப்புள்ள சகாப்தகரமான முக்கியத்துவம் காணக்கிடக்கிறது என்று மார்க்ஸ் கருதினார். ஹெகலுக்கு சிந்தனையின் இயக்கப் போக்கு என்பது – அதற்கு ‘கருத்து’ என்று பெயர் சூட்டி அதை ஒரு சுயேச்சையான பொருளாக உருமாற்றி விடும் அளவுக்கு ஹெகல் சென்றுவிடுகிறார் – அக்கருத்தே எதார்த்த உலகின் படைப்பாளி மற்றும் இயற்றுவோனாக இருக்கிறது. என்னைப் பொருத்த வரை அதற்கு மாறாக, கருத்து என்பது மனித மனத்தில் பிரதிபலித்துச் சிந்தனையின் வடிவங்களாக உருவம் பெறும் பொருளாயத உலகமே தவிர வேறு எதுவுமல்ல’ என்று மார்க்ஸ் எழுதினர். (மூலதனம், தொகுதி 1, இரண்டாம் பதிப்பின் முன்னுரை.) மார்க்சின் இந்தப் பொருள்முதல்வாதத் தத்துவஞானத்தை முற்றாகப் பின்பற்றி எங்கெல்ஸ் விளக்குகையில், டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலில் இந்நூலின் கையெழுத்துப் பிரதியை மார்க்ஸ் வாசித்துப் பார்த்திருக்கிறார் பின்வருமாறு எழுதினார்: உலகின் ஒற்றுமை என்பது அதன் வாழ்நிலையில் அடங்கியிருக்கவில்லை. உலகின் உண்மையான ஒற்றுமை அதன் பொருளாயதத் தன்மையில் அடங்கியிருக்கிறது.
![Video] Dialectics: from Hegel to Marx](https://www.marxist.com/images/cache/c070594fdec8687e97a3c0cdd6ba2df8_w1000_h800.jpg)
தத்துவஞானம், இயற்கை விஞ்ஞானம் ஆகியவற்றின் நீண்ட நெடிய வளர்ச்சி இதை நிரூபிக்கிறது. இயக்கம் என்பது பருப் பொருளின் நிலைநிற்புப் பாங்காகும். இயக்கம் இல்லாமல் பருப்பொருள் எங்கும் என்றைக்கும் இருந்ததில்லை. அதேபோல் பருப்பொருளின்றி இயக்கம் எங்கும் என்றைக்கும் இருந்ததில்லை. அவ்வாறு இருக்கவும் முடியாது. ஆனல். சிந்தனை, உணர்வு என்பவை உண்மையில் என்ன, அவை எங்கிருந்து தோன்றுகின்றன என்று கேள்வி கேட்டுக் கொள்வோமேயானல், அவை மனித மூளையின் விளைவுகளே என்பதும், மனிதன் இயற்கையின் அதன் சூழலின் உள்ளும் உடனும் வளர்ந்து வந்திருக்கிற ஒரு விளைவே என்பதும் தெளிவாகத் தெரிந்து விடுகிறது. இதிலிருந்து இன்னொன்றும் வெளிப்படையாகிறது; அதாவது, இறுதியாகப் பகுத்தாராயும் போது, மனித மூளையின் விளைவுகள் இயற்கையின் விளைவுகளாகவே இருப்பதினால் அவை இயற்கையின் மற்றெல்லா பரஸ்பரத் தொடர்புகளோடும் முரண்பட்டிருக்கவில்லை; அதற்கு மாறாக அவற்றுக்குப் பொருத்தமாகவே அமைந்துள்ளன. ஹெகல் கருத்து முதல்வாதி. அதாவது, அவரது மனத்திற்குள் இருக்கும் எண்ணங்கள் யதார்த்தமான பொருட்களின், இயக்கப் போக்குகளின் ஓரளவு சூட்சும பிம்பங்கள் (Abbilder) என்றால் உரு நிழல்கள், (சில சமயம் எங்கெல்ஸ் பதிவுகள் என்றும் சொல்கிறார்) அல்ல என்பது அவர் கருத்து; அதற்கு மாறாக, உலகம் தோன்றுவதற்கு முன்பிருந்தே எங்கோ ஓர் இடத்தில் நிலவி வந்திருக்கிற கருத்து யதார்த்த வடிவம் பெற்றதின் உருவங்கள்தான் பொருட்களும் அவற்றின் வளர்ச்சியும் என்று அவர் கருதினார்.’ லுட்விக் ஃபாயர்பாஹ் என்ற தமது நூலில் எங்கெல்ஸ் ஃபாயர்பாஹின் தத்துவஞானத்தைப் பற்றித் தாமும் மார்க்கம் கொண்டுள்ள கருத்துகளை விளக்கி விவரித்துள்ளார். ஹெகல், ஃபாயர்பாஹைப் பற்றியும் மற்றும் வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டம் குறித்தும் 1844-கல் மார்க்சும் தாமும் சேர்ந்து எழுதியிருந்த பழைய கையெழுத்துப் பிரதியைத் திரும்பவும் படித்த பிறகுதான் எங்கெல்ஸ் இந்நூலை அச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். இந்நூலில் பிரெடெரிக் எங்கெல்ஸ் பின்வருமாறு எழுதுகிறர்: “எல்லாத் தத்துவஞானத்துக்கும், குறிப்பாக மிக அண்மைக்காலத்திய தத்துவஞானத்திற்கெல்லாம், அடிப்படையான மாபெரும் கேள்வியாக இருப்பது சிந்தனைக்கும் வாழ்நிலைக்குமிடையேயுள்ள உறவு சம்பந்தப்பட்ட விஷயமே, ஆன்மாவுக்கும் இயற்கைக்குமிடையேயுள்ள உறவு சம்பந்தப்பட்ட விஷயமே. இவ்விரண்டில் ஆன்மா முதலில் இருந்ததா, இயற்கை முதலில் இருந்ததா என்ற விஷயமேயாகும். இந்தக் கேள்விக்குத் தத்துவஞானிகள் தந்த விடைகள் அவர்களை இரண்டு மாபெரும் முகாம்களாகப் பிரித்துவிட்டன. ஆன்மாதான் இயற்கைக்கு முன் இருந்து வந்தது என்று அடித்துப் பேசி, அதன் காரணமாக, முடிவில், உலகம் ஏதாவது ஒரு வடிவத்தில் படைக்கப்பட்டது என்று அனுமானம் செய்து கொண்ட நபர்கள் எல்லோரும் கருத்து முதல்வாத முகாமைச் சேர்ந்தவர்கள். இயற்கைதான் முதலில் இருந்து வந்தது என்று கருதிய மற்றவர்கள் பொருள் முதல்வாதத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களாயினர்.” (தத்துவஞான ரீதியான) கருத்து முதல் வாதம், பொருள்முதல் வாதம் என்ற கருத்து வடிவங்களை வேறு எந்த விதத்தில் உபயோகித்தாலும் குழப்பம்தான் உண்டாகும்.
ஏதாவது ஒரு வழியில் மதத்தோடு எப்போதும் சம்பந்தப்பட்டிருக்கும்படியான கருத்து முதல் வாதத்தை மார்க்ஸ் தீர்மானமாகத் தள்ளிவிட்டார் என்பது மட்டுமல்ல; குறிப்பாக நம் காலத்தில் பரவலாகக் காணக்கிடக்கும் ஹியூம், கான்ட் என்போரின் கருத்துகளையும் பல்வேறு வடிவங்களிலுள்ள அறியொணாவாதத்தையும் விமர்சனவாதத்தையும் நேர்காட்சி வாதத்தையும் அவர் தீர்மானமாகத் தள்ளிவிட்டார். இந்த விதத் தத்துவஞானம் எல்லாம் கருத்துமுதல்வாதத்துக்கு விட்டுக் கொடுக்கும் ஒரு ‘பிற்போக்கான’ சலுகையேயாகும் என்று மார்க்ஸ் கருதினர்; அதிக பட்சம், இது பொருள் முதல்வாதத்தைப் பகிரங்கமாக மறுத்துவிட்டு இரகசியமாய் அதை ஏற்றுக்கொள்ளும் ‘வெட்ககரமான போக்காகும்’ என்று மார்க்ஸ் கருதினார். இந்தப் பிரச்சனை சம்பந்தமாக மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் மேலே சொன்ன நூல்களோடு கூடவே 1866 டிசம்பர் 12 என்று தேதியிட்டு மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய ஒரு கடிதத்தைப் பார்க்க. அந்தக் கடிதத்தில் மார்க்ஸ் ‘தாமஸ் ஹக்ஸ்லி’ என்ற பிரபலமான இயற்கை விஞ்ஞானி ஆற்றிய, வழக்கத்தை விட அதிக அளவு பொருள்முதல்வாதப் போக்கு கொண்ட உரையைக் குறிப்பிட்டு, அத்துடன் ‘உண்மையில் நாம் கவனித்துக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் இருக்கும் வரை பொருள்முதல்வாதத்திலிருந்து விலகிச் செல்வது சாத்தியமல்ல’ என்பதை அவர் ஏற்றுக்கொள்வதையும் சுட்டிக் காட்டி, ஹக்ஸ்லி அறியொணாவாதத்துக்கும் ஹியூம் வாதத்துக்கும் ‘தப்பிக்கும் வழி’ ஒன்றை விட்டுவைத்ததற்காக அவரை மார்க்ஸ் கடிந்து கொள்கிறார். சுதந்திரத்துக்கும் அவசியத்துக்கும் இடையேயுள்ள உறவு பற்றி மார்க்ஸ் கொண்டிருந்த கருத்தைக் குறிப்பிடுவது சிறப்பான முக்கியத்துவமுள்ளதாகும்.
‘அவசியத்தை அறிந்தேற்றுக் கொள்வதுதான் சுதந்திரம் என்பது. அவசியம் என்பது நாம் புரிந்துகொள்ளாத வரையில் மட்டுமே கண் மூடித்தனமானதாக இருக்கும்’ (எங்கெல்ஸ், டூரிங்குக்கு மறுப்பு). இதற்கு அர்த்தம், இயற்கையிலுள்ள புறநிலை வகைப்பட்ட நியதிகளின் விதியை ஏற்றுக் கொள்வது, அவசியம் என்பது இயக்கவியல் ரீதியிலே சுதந்திரமாக மாற்றம் பெறுவதை ஏற்றுக்கொள்வது என்பதுதான் அறியப்படாததாயிருந்தும், அறியப்படக் கூடிய தான ‘தன்னிலைப் பொருள்’ (athing initself) என்பது ‘தன் வயப் பொருளாக’ (a thing for us) எப்படி மாற்றம் அடைகிறதோ, ‘பொருட்களின் சாராம்சம்’ எனப்படுவது ‘புலப்பாடுகளாக’ எப்படி மாற்றம் அடைகிறதோ, அதுபோலத்தான்). ஃபாயர்பாஹின் பொருள்முதல்வாதத்தை (அதைவிட அதிக அளவில் புஹ்னர், ஃபோக்ட், மொலிஷோட் என்போர்களின் விஞ்ஞானக்கேடான பொருள்முதல்வாதத்தை) உள்ளிட்ட ‘பழைய’ பொருள்முதல்வாதத்தின் அடிப்படையான குறைபாடு பின்வருமாறு என்று மார்க்சும் எங்கெல்சும் கருதினர்: 1) இந்தப் பொருள்முதல்வாதம் ‘பெருமளவுக்கு இயாந்திரீகத் தன்மையது’ இரசாயனவியல் துறையிலும், உயிரியல் துறையிலும் (நம் காலத்திற்கு வரும்போது, பொருளைப் பற்றிய மின் தத்துவத்திலும் என்று சேர்த்துக்கொள்வது அவசியமாகும்) ஏற்பட்டிருக்கிற மிக மிக நவீனமான முன்னேற்றங்களை அது கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறுகிறது; 2) பழைய பொருள்முதல்வாதம் வரலாற்றுக்குப் புறம்பானது, இயக்க இயலுக்குப் புறம்பானது (இயக்க இயலுக்கு விரோதமானது என்ற அர்த்தத்தில் இயக்க மறுப்பு இயல் வகைப்பட்டது); வளர்ச்சியைப் பற்றிய கண்ணோட்டத்தை அது முரணின்றியும் முழுமையாகவும் பின்பற்றவில்லை; 3) ‘மானுட சாரம்’ என்கிற விஷயத்தைச் சூட்சுமமாகப் பார்த்ததேயொழிய, (வரலாற்று வகையில் ஸ்தூலமாக வரையறுக்கப் பெற்ற ‘சமுதாய உறவுகளின்’ ஒரு ‘தொகுதியே’ இந்த ‘மானுட சாரம்’ என்று அது கருதவில்லை; ஆகவே உலகத்தை “மாற்றியமைப்பதே” முதன்மையான வேலையாயிருக்கையில், அது உலகத்தைப் பற்றி இவ்வாறு வியாக்கியானம் செய்வதோடு நின்றுவிட்டது. அதாவது, புரட்சிகரமான நடைமுறைச் செயல்பாட்டின் முக்கியத்துவத்தை அது புரிந்துகொள்ளவில்லை.
இயக்கவியல்
ஹெகலின் இயக்கவியல், வளர்ச்சியைக் குறித்த மிகவும் முழுமையான, உள்ளடக்கத்தில் மிகமிக வளம் நிறைந்த, மிகுந்த ஆழமுள்ள போதனை என்ற முறையிலே மூலச் சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் மிகப் பெரிய சாதனையாகும் என்று மார்க்கம் எங்கெல்சும் கருதினர். வளர்ச்சி, பரிணாமம் சம்பந்தமான கோட்பாட்டைப் பற்றிய மற்ற வரையறுப்பு முறைகள் எல்லாம் ஒருதலைப்பட்சமானவை, உள்ளடக்கத்தில் வளக்குறைவுள்ளவை, இயற்கையிலும் சமுதாயத்திலும் உள்ள (அடிக்கடி திடீர்ப் பாய்ச்சல்கள் மூலமாக, பெருவிபத்துகள் மூலமாக, புரட்சிகள் மூலமாக முன்னே போகும்படியான வளர்ச்சியின் உண்மையான போக்கைத் திரித்துக் காட்டுபவை, உருக்குலைப்பவை என்று அவர்கள் கருதினார்கள். (ஹெகல் வாதம் அடங்கலான கருத்து முதல்வாதத்தால் அழிக்கப்படுவதிலிருந்து) “உணர்வு பூர்வமான இயக்க இயலைக் காப்பாற்றி அதனை இயற்கை பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்திலே நடை முறைக்குக் கொண்டுவந்தவர்கள் அநேகமாக மார்க்சும் நானும் மட்டும்தான்.” “இயக்கவியலுக்கு நிரூபணம் இயற்கைதான். அந்தச் சோதனைக்கு மிகவும் வளம் பொருந்திய விஷயாதாரங்களை, தினசரி பெருகிக் கொண்டே போகும் விஷயாதாரங்களை, நவீன கால இயற்கை விஞ்ஞானம் தந்து கொண்டேயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்” (ரேடியம், மின்னணுக்கள், தனிமங்கள் ஒன்று மற்றொன்றாக மாற்றப்படுவது, முதலானவை கண்டுபிடிக்கப்பட்ட காலத்துக்கு முன்பே எழுதப்பட்டது இது); “அப்படி விஷயாதாரங்களைத் தந்து, முடிவில் இயற்கையின் இயக்கப் போக்கு இயக்க இயல் வகைப்பட்டதே தவிர இயக்க மறுப்பு இயல் வகைப்பட்டதல்ல என்று நவீன கால இயற்கை விஞ்ஞானம் நிரூபித்துள்ளது என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.”

எங்கெல்ஸ் எழுதுகிறார். ‘அப்படியப்படியே தயார் நிலையில் உள்ள பொருட்களின் தொகுதியாக உலகத்தைப் புரிந்துகொள்ளக் கூடாது. இயக்கப் போக்குகளின் ஒரு தொகுதியாகத்தான் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்; இந்த இயக்கப் போக்குகளின் தொகுதியிலே மாற்றம் அடையாதவை போல் வெளிக்குத் தோன்றுகிற பொருட்களும், அதேபோல் அவைபற்றி மூளைக்குள்ளே நிழலாடுகிற சிந்தனை பிம்பங்களும், அதாவது கருத்துருவங்களும், தோன்றியபடியும் மறைந்தபடியும் இருக்கும்படியான இடையறாத மாறுதலுக்கு உட்படுகின்றன – இது மகத்தான அடிப்படைக் கருத்தாகும். குறிப்பாக ஹெகல் காலத்திற்குப் பிறகு இந்த மகத்தான அடிப்படைக் கருத்து மனிதர்களின் பொது உணர்வில் முற்றாகப் பரவிப் பதிந்து விட்டிருக்கிறபடியால் பொதுவான ரீதியிலே இதை யாரும் அநேகமாக மறுப்பதேயில்லை. ஆனால் இந்த அடிப்படைக் கருத்தைச் சொல்லளவிலே ஏற்றுக்கொள்வது ஒன்று, அதை ஒவ்வோர் ஆராய்ச்சித் துறையிலும் யதார்த்தத்தில் செயற்படுத்துவது வேறொன்று. இயக்க இயல் வகைத் தத்துவஞானத்துக்கு இறுதியானதோ, பரமமானதோ, புனிதமானதோ எதுவுமே கிடையாது. எல்லாவற்றின் தாற்காலிகத் தன்மையையும் அது வெளிப்படுத்துகிறது. உருவாகிக் கொண்டும் மறைந்து கொண்டும் இருக்கிற, கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு முடிவில்லாமல் ஏறிச் சென்ற படியேயிருக்கிற, இடையறாத இயக்கப் போக்கு ஒன்றைத் தவிர வேறு எதுவும் அதன் முன் நிலைத்து நிற்க முடியாது. மேலும் இயக்க இயல் வகைத் தத்துவஞானம் என்பதே சிந்திக்கும் மூளையில் தோன்றுகிற இந்த இயக்கப் போக்கின் பிரதிபலிப்பே தவிர வேறில்லை.’ எனவே, மார்க்சின் கருத்துப்படி, இயக்க இயல் என்பது ‘புற உலகு, மனித சிந்தனை என்ற இரண்டினதுமான இயக்கத்தின் பொதுவான விதிகளைப் பற்றிய விஞ்ஞானம்’ ஆகும்.
ஹெகல் தத்துவஞானத்தின் இந்தப் புரட்சிகரமான அம்சத்தை மார்க்ஸ் ஏற்றுக்கொண்டு அதை வளர்த்தார். இயக்க இயல் பொருள்முதல்வாதத்துக்கு ‘இதர விஞ்ஞானங்களுக்கு மேலே நின்று கொண்டிருக்கும்படியான தத்துவஞானம் ஒன்றும் இனிமேல் தேவையில்லை’. முந்திய கால தத்துவஞானத்தில் மிச்சமுள்ளது ‘சிந்தனை, அதன் விதிகள் பற்றிய விஞ்ஞானம் – அதாவது, விதிமுறைத் தர்க்க இயலும் இயக்கவியலும்தான்.’ மேலும் மார்க்சின் கருத்துப்படியும், ஹெகலுக்குப் பொருத்தமான விதத்திலும் இயக்க இயலில் இப்பொழுது அறிவுத் தத்துவம் அல்லது ‘எபிஸ்டமாலஜி’ என்று சொல்லப்படுவதும் அடங்கும். அறிவு பற்றிய இந்தத் தத்துவமுங்கூடத் தானெடுத்துக் கொள்ளும் ஆராய்ச்சி விஷயத்தை வரலாற்றுரீதியாகத்தான் கவனித்துத் தீர வேண்டும்; அறிவின் தோற்றுவாய், வளர்ச்சி, அறிவு இல்லாத நிலையிலிருந்து அறிவு நிலைக்கு மாறி வருவது ஆகியவற்றை அது பரிசீலித்துப் பயின்று பொதுமைப்படுத்த வேண்டும்.
இப்போதெல்லாம் வளர்ச்சி பற்றிய, பரிணாமம் பற்றிய கருத்து அநேகமாக சமுதாய உணர்வு முழுவதிலும் உள்நுழைந்து விட்டிருக்கிறது; ஆனால் ஹெகல் தத்துவஞானத்தின் வழியாக அல்ல; வேறான வழிகளில். எனினும் ஹெகலின் அடிப்படையில் மார்க்சும் எங்கெல்சும் வரையறுத்தப்படி அமைந்துள்ள இந்தக் கருத்து இன்று வழக்கிலுள்ள பரிணாமக் கருத்தை விட எவ்வளவோ முழுமையானது, உள்ளடக்கத்தில் எவ்வளவோ வளம் பொருந்தியது. ஏற்கெனவே தாண்டிவிட்ட கட்டங்களே திரும்ப வந்து கொண்டிருப்பது போலத் தோன்றினாலும் அந்தக் கட்டங்கள் வேறுவகையில், முந்தியதைவிட உயர்ந்த அடிப்படையில் திரும்ப வந்து கொண்டிருப்பதான வளர்ச்சி (‘நிலைமறுப்பின் நிலை மறுப்பு’); ஒரு வகையில் சொல்லப்போனால் நேர்கோடாக இல்லாமல் சுழன்று சுழன்று மேலேறும் வளர்ச்சி; -திடீர்ப் பாய்ச்சல்கள், பெருவிபத்துக்கள், புரட்சிகள் மூலம் ஏற்படும் வளர்ச்சி; “தொடர்ச்சியில் முறிவுகள்”; அளவு பண்பாக உருமாறுதல்; –குறிப்பிட்ட பொருளின் மீதோ, குறிப்பிட்ட புலப்பாட்டுக்குள்ளோ, குறிப்பிட்ட சமுதாயத்துக்குள்ளோ செயல்படுகிற பல்வேறு சக்திகள், போக்குகள் ஆகியவற்றின் முரண்பாட்டினாலும் மோதலினாலும் ஏற்படுகிற வளர்ச்சிக்கான உள்துண்டுதல்கள்;- (வரலாறு புதிய புதிய அம்சங்களை என்றென்றும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கையிலேயே) எந்தவொரு புலப்பாட்டின் எல்லா அம்சங்களும் ஒன்றையொன்று சார்ந்துநின்று ஒன்றோடொன்று மிகவும் நெருக்கமான, பிரிக்க முடியாத தொடர்பு கொண்டிருப்பது, இந்தத் தொடர்பு நியதிக்குட்பட்ட, சர்வப் பொதுவான இயக்கத்தின் நிகழ்ச்சிப் போக்கை ஏற்படுத்தித் தருகிறது இவையெல்லாம் வளர்ச்சியைப் பற்றிய (வழக்கமானவற்றைக் காட்டிலும்) அதிக வளம் பொருந்திய தத்துவமான இயக்க இயலின் இயல்புகளில் சிலவாகும். (1868 ஜனவரி 8ம் தேதி மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தைப் பார்க்க; அதில் அவர் ஷ்டைன் என்பவரின் ‘இறுகிப் போன முப்பிரிவுகள்’ பற்றிக் கேலி செய்கிறார்; அவற்றைப் பொருள்முதல்வாத இயக்க இயலுடன் போட்டுக் குழப்புவது அபத்தமாகும்).
வரலாற்றைப் பற்றிய
பொருள்முதல்வாதக் கருத்தோட்டம்
பழைய பொருள்முதல்வாதத்தின் முரண்பாடுள்ள தன்மையையும், முழுமையற்ற தன்மையையும், ஒரு சார்பான தன்மையையும் உணர்ந்து கொண்ட பிறகு மார்க்ஸ் ‘சமுதாயத்தைப் பற்றிய விஞ்ஞானத்தை. பொருள்முதல்வாத அடிப்படைக்கு இணக்கமாகக் கொண்டுவந்து இந்த அடிப்படை மீது அதை மீண்டும் அமைப்பது’ அவசியம் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றிக் கண்டார். வாழ்நிலையிலிருந்து உணர்வு தோன்றுகிறதேயன்றி உணர்விலிருந்து வாழ்நிலை தோன்றுவதில்லை என்று பொருள்முதல்வாதம் பொதுவாக விளக்குகிறதாகையால் மனிதகுலத்தின் சமுதாய வாழ்வு விஷயத்திலும், சமுதாய உணர்வு சமுதாய வாழ்நிலையிலிருந்தே தோன்றுகிறது என்று பொருள்முதல்வாதம் விளக்கித் தீர வேண்டியிருக்கிறது. மார்க்ஸ் எழுதுகிறார் (மூலதனம், தொகுதி 1): “தொழில்நுட்பவியல், இயற்கையுடன் மனிதன் கொண்டுள்ள தொடர்புகளுக்கான வழிமுறையை, மனிதன் உயிர்வாழ்வதற்குரிய நேரடியான உற்பத்தி முறையை வெளிப்படுத்துவதுடன், அதன் மூலம் அவனது சமுதாய உறவுகளின் அமைப்பு முறையையும் அந்த உறவுகளிலிருந்து தோன்றும் மனக் கருத்தோட்டங்களையும் புலப்படுத்துகிறது.” தமது அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனவரைக்குச் செலுத்தும் ஒரு பங்கு, என்கிற நூலின் முன்னுரையில் மனித சமுதாயத்தையும் அதன் வரலாற்றையும் பற்றிய பொருள்முதல்வாதத்தின் அடிப்படையான கோட்பாடுகளைக் குறித்துப் பின்வரும் சொற்களில் மார்க்ஸ் ஒரு முழுமையான வரையறுப்பைத் தருகிறார்:
“மனித வாழ்வில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமுதாய உற்பத்தியில் திட்டமிட்ட உறவுகளில் மனிதர்கள் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அத்தியாவசியமானவை; மனிதர்களின் சித்தத்தின்படி அமையாமல் சுதந்திரமாக அமைபவை. இந்த உற்பத்தி உறவுகள் அவர்களது பொருளாயத உற்பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியின் ஒரு திட்டவட்டமான கட்டத்துக்குப் பொருத்தமாக அமைகின்றன.”
‘‘இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டு மொத்தமே சமுதாயத்தின் பொருளாதார அமைப்பாக, உண்மையான அடித்தளமாக அமைகிறது. அதன் மீதுதான் சட்டம், அரசியல் வகைப்பட்ட மேல்கட்டுமானம் எழுகிறது. அந்த அடித்தளத்துக்குப் பொருத்தமாகத்தான் சமுதாய உணர்வின் குறிப்பிட்ட வடிவங்கள் ஏற்படுகின்றன. பொருளாயத வாழ்வின் உற்பத்தி முறைதான் பொதுவாகவே சமுதாய-அரசியல் அறிவுத்துறை வாழ்வின் இயக்கப் போக்கை நெறியாக்கம் செய்கிறது. மனிதர்களின் உணர்வு அவர்களின் வாழ்நிலையை வரையறுப்பதில்லை; அதற்கு மாறாக, அவர்களுடைய சமுதாய வாழ்நிலைதான் அவர்களின் உணர்வை வரையறுக்கிறது. சமுதாயத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடையும் போது, அவை நடப்பிலிருக்கும் உற்பத்தி உறவுகளுடன் அல்லது – அதையே சட்ட மொழியில் குறிப்பிடுவதென்றால்-அவை அதுவரை எவற்றுக்குள் இயங்கி வந்தனவோ அந்தச் சொத்து உறவுகளுடன் மோதுகின்றன. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினுடைய வடிவங்களாக இருந்து வந்த இந்த உற்பத்தி உறவுகள் அந்த உற்பத்திச் சக்திகளுக்கே விலங்குகளாக மாறிவிடுகின்றன. அதன் பிறகுதான் சமுதாயப் புரட்சியின் சகாப்தம் துவங்குகிறது. பொருளாதார அடித்தளத்தின் மாற்றத்துடன் கூடவே பிரம்மாண்டமான மேல் கட்டுமானம் முழுவதும் ஏறத்தாழ விரைவாக மாற்றமடைகிறது. இத்தகைய மாற்றங்களைக் கவனிக்கும் போதெல்லாம், உற்பத்தியின் பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் பொருளாயத மாற்றத்தையும்-இதை இயற்கை விஞ்ஞானமானது துல்லியமாக வரையறுக்க முடியும் சட்டம், அரசியல், மதம், அழகியல் அல்லது தத்துவஞானம் போன்றவற்றில்-சுருங்கச் சொன்னால், எந்தச் சித்தாந்த வடிவங்களில் மனிதர்கள் இந்த மோதலை உணர்ந்து போராடித் தீர்க்கிறார்களோ அந்தச் சித்தாந்த வடிவங்களில் –ஏற்படும் மாற்றத்தையும் வேறு பிரித்துக்காண வேண்டும்.”

‘ஒரு மனிதனைப் பற்றிய நமது கருத்து அவன் தன்னைப் பற்றித் தானே கொண்டிருக்கும் நினைப்புகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதில்லை. அதே மாதிரிதான், மாறுதலடைகிற இத்தகைய ஒரு காலப்பகுதியைப் பற்றியும் அக்காலப் பகுதிக்குரிய உணர்வைக் கொண்டு தீர்ப்புச் சொல்ல முடியாது. அதற்கு மாறாக, சரியான முறையில் விளக்குவதற்கு, பொருளாயத வாழ்விலுள்ள முரண்பாடுகளைக் கொண்டுதான், சமுதாய உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே இருந்து வருகிற மோதலைக் கொண்டுதான் அவ்வுணர்வை விளக்க வேண்டும். பொதுவாகப் பார்க்குமிடத்து, ஆசிய பாணி உற்பத்தி முறை, பண்டைக் கால உற்பத்தி முறை, நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை, நவீன – முதலாளித்துவ உற்பத்தி முறை ஆகியவற்றைச் சமுதாயத்தின் பொருளாதார அமைப்பில் வளர்ந்து முன்னேறிய சகாப்தங்கள் என்று கூறலாம். (1866 ஜூலை 7ம் தேதி மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் தந்துள்ள சுருக்கமான வரையறுப்பை ஒப்பு நோக்குக: உழைப்பின் ஒழுங்கமைப்பை உற்பத்திச் சாதனங்களே நிர்ணயிக்கின்றன என்ற நமது தத்துவம்.)”
வரலாறுபற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்தைக் கண்டுபிடித்ததானது, அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், பொருள்முதல்வாதத்தைச் சமுதாயப் புலப்பாடுகள் என்ற துறையிலும் தொடர்ந்து செலுத்தி விரிவுபடுத்தியதானது, முந்தைய வரலாற்றுத் தத்துவங்களிலே இருந்த இரண்டு முக்கியமான குறைபாடுகளை நீக்கிவிட்டது. முதலாவதாக, அந்த முந்தைய வரலாற்றுத் தத்துவங்கள் மிகச் சிறந்த நிலையிலுங்கூட மனிதர்களின் வரலாற்று நடவடிக்கைகளின் சித்தாந்த நோக்கங்களை மட்டுமே ஆராய்ந்தனவேயன்றி இந்த நோக்கங்கள் தோன்றுவதற்குக் காரணமாயிருந்தவற்றைப் பரிசீலிக்கவே இல்லை; சமுதாய உறவுகளின் அமைப்புமுறையின் வளர்ச்சியை ஆளும் புறநிலை விதிகளைப் புரிந்து கொள்ளவே இல்லை பொருளாயத உற்பத்தி அடைந்துள்ள வளர்ச்சி நிலையில் இந்தச் சமுதாய உறவுகளின் மூலவேர்கள் இருப்பதைக் கண்டறிந்து கொள்ளவே இல்லை. இரண்டாவதாக, முந்தைய தத்துவங்கள் மக்கள் திரளின் நடவடிக்கைகளைப் பரிசீலிக்கவேயில்லை. வரலாறு வகைப்பட்ட பொருள்முதல்வாதம்தான், மக்கள் திரளினுடைய வாழ்க்கையின் சமுதாய நிலைமைகளையும், இந்த நிலைமைகளில் ஏற்படும் மாறுதல்களையும் இயற்கை விஞ்ஞானத்தின் துல்லியத்துடன் பரிசீலித்தறிவதை முதன் முதலாகச் சாத்தியமாக்கியது. மார்க்சுக்கு முந்தைய ‘சமுதாய விஞ்ஞானமும்’, வரலாற்றியலும் – மிக உயர்வாகச் சொல்வதென்றால்-இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பொறுக்கிச் சேர்த்த பச்சையான விவரங்களின் ஒரு திரட்டைத் தந்தன; வரலாற்றின் இயக்கப் போக்கின் தனிப்பட்ட சில அம்சங்களைச் சித்தரித்தன. எதிரெதிரான எல்லாப் போக்குகளின் கூட்டு மொத்தத்தையும் பரிசீலித்ததின் மூலமாகவும், சமுதாயத்திலுள்ள பல்வேறு வர்க்கங்களின் வாழ்வு, உற்பத்தி பற்றிய திட்டமாக வரையறுக்கக் கூடிய நிலைமைகளாக அந்தப் போக்குகளை வகுத்துத் தந்ததின் மூலமாகவும், தனிப்பட்ட ‘மேலோங்கிய’ கருத்துகளின் தேர்வைப் பரிசீலித்தல், அல்லது அவற்றை விளக்குவதிலும் அகநிலைப் பார்வையையும் தான் தோன்றித்தனத்தையும் கைவிட்டதின் மூலமாகவும், விதிவிலக்கு எதுவுமின்றி எல்லாக் கருத்துகளும் பல்வகையான எல்லாப் போக்குகளும் பொருளாயத உற்பத்திச் சக்திகளின் நிலைமையிலேதான் வேர் கொண்டிருக்கின்றன என்பதை வெளிப்படுத்தியதின் மூலமாகவும், சமுதாய பொருளாதார அமைப்பு முறைகளின் தோற்றம், வளர்ச்சி, நலிவு என்ற இயக்கப் போக்கைப் பற்றி முழுதளாவிய, முழுமையான பரிசீலனைக்கு மார்க்சியம் வழிகாட்டியது. மக்கள் தங்களுடைய வரலாற்றைத் தாங்களே உண்டாக்கிக் கொள்கின்றனர். ஆனால் மனிதர்களின், மக்கள் பெருந்திரளின் செயல் நோக்கங்களை நிர்ணயிப்பது எது? எதிரெதிரான கருத்துக்கள், வேட்கைகளுக்கு இடையே மோதலை உண்டாக்கி வைப்பது எது? மனித சமுதாயங்களின் மொத்தத் திரளின் இந்த எல்லா மோதல்களினுடையவும் கூட்டு மொத்தம் எது? மனிதனின் வரலாற்று நடவடிக்கை எல்லாவற்றிற்கும் அடிப்படையாக அமைகிற பொருளாயத் வாழ்வின் உற்பத்திக்கான புற நிலைமைகள் யாவை? இந்தப் புறநிலைமைகளின் வளர்ச்சிக்குரிய விதி எது? – இவற்றின் மீதெல்லாம் மார்க்ஸ் நமது கவனத்தைத் திருப்பி, வரலாறு அளப்பரிய பல்வகை வேறுபாடுகளும் முரண்பாடுகளும் கொண்டிருந்த இயக்கப் போக்காயிருந்த போதிலும் அதை திட்டவட்டமான விதிகளால் ஆளுமை செய்யப்படும் ஒரு சீரான இயக்கப் போக்காக விஞ்ஞான அடிப்படையிலே பயில்வதற்கு வழி காட்டினார்,
வர்க்கப் போராட்டம்
எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திலும் அதன் சில உறுப்பினர்களின் வேட்கைகள், இதர உறுப்பினர்களின் வேட்கைகளுடன் மோதிக்கொள்கின்றன என்பதும், சமுதாய வாழ்வில் முரண்பாடுகள் மலிந்து கிடக்கின்றன என்பதும், தேசங்களுக்கிடையிலும் சமுதாயங்களுக்கிடையிலும் அதேபோல் அவற்றிற்கு உள்ளேயும் போராட்டம் நடப்பதை வரலாறு வெளிப்படுத்துகிறது என்பதும், அது தவிர, புரட்சிக் காலப்பகுதி, பிற்போக்குக் காலப்பகுதி ஆகியவை, போர்க் காலப்பகுதி, சமாதான காலப்பகுதி ஆகியவை, தேக்கக் காலப்பகுதி, வேகமான முன்னேற்றக் காலப்பகுதி அல்லது நலிவுக் காலப்பகுதி ஆகியவை என்று காலப்பகுதிகள் மாறிமாறி வருவதையும் வரலாறு வெளிப்படுத்துகிறது என்பதும் எல்லாரும் அறிந்த விவரங்களாகும். திகைப்பூட்டும் புதிர்போல், குழப்படிபோல் தோன்றும் இதை ஆளும் விதிகள் என்னவென்பதைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு வழிகாட்டியை, அதாவது வர்க்கப் போராட்டம் என்ற தத்துவத்தை , மார்க்சியம் தருகிறது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின், அல்லது சமுதாயத் தொகுதியின் எல்லா உறுப்பினர்களுடைய வேட்கைகள் மொத்தத்தையும் பரிசீலிப்பதின் வழியாகத்தான் இந்த வேட்கைகளின் விளைவைப் பற்றி ஒரு விஞ்ஞான வகைப்பட்ட வரையறுப்புக்கு வந்து சேர முடியும். மேலும், வர்க்கங்களாகப் பிளவுண்டிருக்கிற ஒவ்வொரு சமுதாயத்திலும் அந்த வர்க்கங்கள் வகிக்கும் நிலை, வாழ்க்கை முறை ஆகியவற்றிலான வேறுபாட்டில் தான் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் வேட்கைகள் கிளைத்தெழுகின்றன. ‘இதுநாள் வரையிலுமான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது வரலாறே ஆகும்’ என்று கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் மார்க்ஸ் எழுதினார் (புராதனச் சமுதாயத்தின் வரலாறு தவிர என்று பின்னால் எங்கெல்ஸ் சேர்த்துக் கொண்டார்). ‘சுதந்திரமுடையானும் அடிமையும், பட்ரீஷிய உயர்குலச் சீமானும் பிலெபியப் பாமரக் குடியோனும், நிலப்பிரபுவும் பண்ணையடிமையும், கைவினைச் சங்க ஆண்டானும் கைவினைப் பணியாளனும், சுருங்கக் கூறுமிடத்து ஒடுக்குவோரும் ஒடுக் கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப்பகை கொண்டோராய், ஒரு நேரம் மறைவாகவும் ஒரு நேரம் பகிரங்கமாகவும், இடையறாப் போராட்டம் நடத்தி வந்தனர்.’
இந்தப் போராட்டம் சமுதாயம் முழுவதன் புரட்சிகரப் புத்தமைப்பிலோ, அல்லது போராடும் வர்க்கங்களது பொது அழிவிலோதான் எப்போதும் முடிவுறலாயிற்று. பிரபுத்துவ சமுதாயத்தின் இடிபாடுகளிலிருந்து முளைத்தெழுந்துள்ள தற்கால முதலாளித்துவச் சமுதாயம் வர்க்கப் பகைமைகளுக்கு முடிவு கட்டிவிடவில்லை; பழையவற்றின் இடத்தில் புதிய வர்க்கங்களையும், புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும், புதிய போராட்ட வடிவங்களையும் நிலைநாட்டியிருக்கிறதே அன்றி வேறில்லை. ஆயினும் நமது சகாப்தமாகிய இந்த முதலாளித்துவ வர்க்கச் சகாப்தத்தின் ஒரு தனி இயல்பு என்னவெனில், வர்க்கப் பகைமைகளை இது சுருக்கி எளிமையாக்கியுள்ளது: சமுதாயம் ஒட்டுமொத்தமாய் மேலும் மேலும் இரு பெரும் பகை முகாம்களாய், எதிரும் புதிருமான இரு பெரும் வர்க்கங்களாய் – முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமுமாய் – பிளவுண்டு வருகிறது. மகத்தான பிரெஞ்சுப் புரட்சியின் காலந்தொட்டு ஐரோப்பிய வரலாறானது நிகழ்ச்சிகளுக்கு உண்மையிலே அடிப்பரப்பாக உள்ள வர்க்கப் போராட்டத்தை, பல நாடுகளிலே மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது. பிரான்சில் முடியரசு முறையை மீண்டும் ஏற்படுத்திய காலப்பகுதி, (தியோர், கிஸோ, மின்யே, தியேர் போன்ற) பல வரலாற்றாசிரியர்களை ஏற்கெனவே தோற்று வித்திருக்கிறது. அவர்கள் நிகழ்ச்சிகளின் ஆதாரத்தில் பொது உண்மைகளைக் காணப் புறப்பட்ட பொழுது வர்க்கப் போராட்டம்தான் பிரெஞ்சு வரலாறு முழுவதையும் புரிந்து கொள்வதற்குரிய அடிப்படை என்று ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. நவீன சகாப்தம் – முதலாளி வர்க்கத்தின் பூரண வெற்றியைக் குறிக்கும் சகாப்தமாகும்; பிரதிநிதித்துவ நிறுவனங்கள், (எல்லாருக்கும் இல்லாவிட்டாலும்) பரந்த அளவில் உள்ள வாக்குரிமை, மலிவான, மக்களைக் கவர்ந்த தினப் பத்திரிகைகள் முதலானவை இருக்கிற சகாப்தமாகும்; எப்போதும் விரிவடைந்து கொண்டே போகும், பலம் வாய்ந்த தொழிலாளர் சங்கங்கள், முதலாளிகள் சங்கங்கள் முதலானவை இருக்கிற சகாப்தமாகும். இந்தச் சகாப்தம் (சில சமயங்களில் மிகவும் ஒரு சார்பான, ‘அமைதியான’. ‘சட்ட அமைப்புக்குட்பட்ட’ வடிவத்திலே இருந்தாலும்), வர்க்கப் போராட்டம்தான் நிகழ்ச்சிகளின் மூலவிசை என்று முன்னை விட மிகத் தெளிவாக வெளிப்படுத்திவிட்டிருக்கிறது.
ஒவ்வொரு வர்க்கத்தின் வளர்ச்சிக்குரிய நிலைமைகளைப் பற்றிய பகுப்பாய்வு சம்பந்தமாக, நவீன சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு வர்க்கமும் வகிக்கும் நிலையைப் பற்றிய புறநிலைப் பகுப்பாய்வு விஷயத்தில் சமுதாய விஞ்ஞானம் என்ன செய்ய வேண்டுமென்று மார்க்ஸ் எதிர்பார்த்தார் என்பதை மார்க்சின் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையிலிருக்கிற பின்வரும் வாசகம் நமக்குக் காட்டுகிறது: ‘இன்று முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் எல்லா வர்க்கங்களிலும் பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் மெய்யாகவே புரட்சிகரமான வர்க்கமாகும். ஏனைய வர்க்கங்கள் நவீனத் தொழிலினது வளர்ச்சியின் முன்னால் நலிவுற்றுச் சிதைந்து முடிவில் மறைந்து போகின்றன. பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் நவீனத் தொழிலுக்கே உரித்தான அதன் நேரடி விளைவாய் அமைகிறது. மத்தியதரப் படிநிலைகளின் கீழ்ப் பகுதிகளாகிய சிறு பட்டறையாளர், கடைக்காரர், கைவினைஞர், விவசாயி – இவர்கள் எல்லாரும் தொடர்ந்து தாம் மத்தியதரப் படிநிலைகளின் கூறுகளாய் நீடித்திருப்பதற்காக முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். ஆகவே, இவர்கள் பழமைப் பற்றாளர்களே அன்றி புரட்சித்தன்மை வாய்ந்தோரல்லர். அது மட்டுமல்ல, இவர்கள் பிற்போக்கானவர்களும் கூட. ஏனெனில் வரலாற்றின் சக்கரத்தை இவர்கள் பின்னோக்கி உருளச் செய்ய முயலுகிறார்கள். சந்தர்ப்பவசமாய் இவர்கள் புரட்சிகரமாய் இருப்பார்களாயின்; இவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்குப் போய்விடும் தறுவாயில் இருக்கிறார்கள் என்பதே அதற்குக் காரணம், இவ்வாறு இவர்கள் பாதுகாப்பது தமது எதிர்கால நலன்களையே அன்றி நிகழ்கால நலன்களை அல்ல; பாட்டாளி வர்க்கத்தின் நோக்கு நிலையை ஏற்கும் பொருட்டு, தமது சொந்த நோக்கு நிலையைக் கைவிடுகிறார்கள்.’ வரலாற்றுத் துறையிலான பல நூல்களில் (பார்க்க நூல் பட்டியல்) பொருள்முதல்வாத வகைப்பட்ட வரலாற்றியலுக்கு ‘ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டமாக’ ஏன், எப்படி இருக்கிறது என்று தெளிவாகக் காட்டும் வண்ணம் ஒவ்வொரு தனித்தனி வர்க்கத்தின் நிலையைப் பற்றியும், சில சமயங்களில் ஒரே வர்க்கத்திற்குள்ளிருக்கும் பல்வேறு குழுக்களின், பகுதிகளின் நிலையைப் பற்றியும் பகுப்பாய்வதற்கு மார்க்ஸ் ஒளி மிகுந்த, ஆழம் மிக்க எடுத்துக்காட்டுகள் தருகிறார். வரலாற்று வளர்ச்சியின் மொத்த விளைவை நிர்ணயிப்பதற்காகச் சமுதாய உறவுகளையும் ஒரு வர்க்கத்திலிருந்து மற்றொரு வர்க்கத்துக்கு, இறந்த காலத்திலிருந்து வருங்காலத்துக்கு மாறும் போதுள்ள இடைநிலைப் பகுதிகளையும் கொண்ட எத்தகைய சிக்கலான வலைப் பின்னலை மார்க்ஸ் பகுத்தாராய்கிறார் என்பதற்கு மேலே காட்டிய வாசகம் ஓர் உதாரணமாகும்.
மார்க்சின் தத்துவத்தை மிகவும் ஆழ்ந்த, முழுமையான வகையிலும், விவரமாயும் உறுதிப்படுத்திச் செயல்படுத்த வழிகாட்டுவது அவருடைய பொருளாதாரப் போதனைதான்.
மார்க்சின் பொருளாதாரப் போதனை

மூலதனம் என்ற நூலின் முன்னுரையில் மார்க்ஸ் சொல்வதாவது: ‘நவீன சமுதாயத்தின்’ (அதாவது முதலாளித்துவ, பூர்ஷ்வா சமுதாயத்தின்) ‘இயக்கத்திற்குரிய பொருளாதார விதியை வெளிப்படுத்திக் காட்டுவதுதான் இந்நூலின் இறுதியான நோக்கமாகும்.’ வரலாற்றின் வழியே வரையறுக்கப்பட்ட, குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் உற்பத்தி உறவுகளை அவற்றின் தோற்றம், வளர்ச்சி, நலிவு ஆகிய கட்டங்களிலே பரிசீலனை செய்வது-இதுதான் மார்க்சின் பொருளாதாரப் போதனையின் உள்ளடக்கம். முதலாளித்துவ சமுதாயத்தில் ஆட்சி செலுத்துவது பண்டங்களின் உற்பத்திதான்; ஆகவே மார்க்சின் பகுப்பாய்வுப் பண்டத்தைப் பரிசீலிப்பதிலிருந்து தொடங்குகிறது.
மதிப்பு
பண்டம் என்பது. முதன்முதலாக மனிதத் தேவையை நிறைவாக்குகிற ஒரு பொருளாகும். இரண்டாவதாக, அது இன்னொரு பொருளுடன் பரிமாற்றம் செய்து கொள்ளக் கூடிய பொருளாகும். ஒரு பொருளின் பயனுடைமை அதை பயன் மதிப்பு ஆக்குகிறது. பரிமாற்ற மதிப்பு என்பது (அல்லது, வெறுமே மதிப்பு என்றே குறிப்பிடலாம்) முதலில் ஒரு வகைப்பட்ட குறிப்பிட்ட அளவிலான பயன் மதிப்பு களை மற்றொரு வகைப்பட்ட குறிப்பிட்ட அளவிலான பயன் மதிப்புகளுடன் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும் அளவு வீதம் அல்லது விகிதமாகவும் தென்படுகிறது. இப்படிப்பட்ட கோடானு கோடியான பரிமாற்றங்கள், எல்லா வகையான பயன் மதிப்புகளை, முற்றிலும் வேறு வேறானவையும் ஒப்பிடவே முடியாதவையுமான பயன் மதிப்புகளைக் கூட, ஒன்றுடன் ஒன்று எப்போதும் சமப்படுத்திய வண்ணமாயிருக்கின்றன என்பதை அன்றாட அனுபவம் நமக்குக் காட்டுகிறது. இனி, பலவகைகளைச் சேர்ந்த பொருட்களுக்கு , சமுதாய உறவுகளின் ஒரு குறிப்பிட்ட அமைப்பு முறையில் ஒன்றோடொன்று எப்போதும் சமப்படுத்தப்பட்டு வரும் இந்தப் பொருட்களுக்குப் பொதுவாயுள்ள அம்சம் எது? அவற்றின் பொது அம்சம் என்னவென்றால் அவை எல்லாம் உழைப்பின் உற்பத்திப் பொருட்களாக இருப்பதுதான். உற்பத்திப் பொருட்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளும் போது உழைப்பின் பல்வேறு வகைகளை மக்கள் ஒன்றோடொன்று சமப்படுத்துகிறார்கள். பண்ட உற்பத்தி என்பது சமுதாய உறவுகளின் அமைப்பு முறை; அந்த அமைப்பு முறையில் தனித்தனி உற்பத்தியாளர்கள் பலவகைப்பட்ட உற்பத்திப் பொருட்களைச் செய்கிறார்கள் (சமுதாய வழியிலான உழைப்புப் பிரிவினை), அந்த அமைப்பு முறையில் இந்த உற்பத்திப் பொருட்களெல்லாம் பரிமாற்றம் மூலமாக ஒன்றோடொன்று சமப்படுத்தப்படுகின்றன. ஆகவே, எல்லாப் பண்டங்களுக்கும் பொதுவாயுள்ள அம்சம் ஒரு திட்டவட்டமான உற்பத்தித் துறையைச் சேர்ந்த ஸ்தூலமான உழைப்பு அல்ல; ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த உழைப்பு அல்ல; ஆனால் அவற்றிற்குப் பொதுவாயுள்ள அம்சம் சூட்சுமமான மனித உழைப்புத்தான், அதாவது, பொதுப்படையான மனித உழைப்புத்தான். ஒரு குறிப்பிட்ட அனைத்துப் பண்டங்களின் மதிப்புகளின் கூட்டு மொத்தத்தில் உருவமைந்துள்ள சமுதாயத்தின் உழைப்புச் சக்தி முழுவதும் ஒரே மனித உழைப்புச்சக்திதான்.
கோடிக்கணக்கிலே நடைபெறும் பரிமாற்ற நடவடிக்கைகள் இதை நிரூபிக்கின்றன. ஆகவே, ஒவ்வொரு குறிப்பிட்ட பண்டமும், சமுதாய வழியில் அவசியமான உழைப்பு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. குறிப்பிட்ட பயன் மதிப்புள்ள ஒரு குறிப்பிட்ட பண்டத்தை உற்பத்தி செய்வதற்குச் சமுதாய வழியில் அவசியமான உழைப்பின் அளவைக் கொண்டுதான், சமுதாய வழியில் அவசியமான உழைப்பு நேரத்தின் அளவைக் கொண்டுதான், அம்மதிப்பின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. பரிமாற்றம் மூலமாக வகைவகையான நமது உற்பத்திப் பொருட்களை மதிப்புகளாகச் சமப்படுத்தும் பொழுதெல்லாம் அதே செய்கையின் வாயிலாக அவற்றின் உற்பத்திக்குச் செலவழிக்கப்பட்ட உழைப்பின் பல்வேறு வகைகளையும் மனித உழைப்பு என்ற முறையில் சமப்படுத்திவிடுகிறோம். இதை நாம் உணர்வதில்லை; இருந்தாலும் செய்கிறோம். பழைய பொருளாதாரவாதிகளில் ஒருவர் சொன்னது போல், மதிப்பு என்பது இரண்டு நபர்களிடையே இருக்கும் உறவுதான் அத்துடன், அந்த உறவு பொருளாயதப் போர்வைக்குள் மறைந்திருக்கும் உறவு என்றும் அவர் சேர்த்துச் சொல்லியிருக்க வேண்டும். குறிப்பிட்ட வரலாறு வகைப்பட்ட சமுதாய அமைப்பில் இருக்கிற சமுதாய உற்பத்தி உறவுகளின் அமைப்பை நோக்குநிலையாகக் கொண்டு பார்த்தால் மட்டுமே மதிப்பு என்பது என்ன என்று நாம் புரிந்து கொள்ள முடியும்; மேலும், இந்த உறவுகள் பெருவாரியாக நடைபெறுகிற பரிமாற்றப் புலப்பாட்டில் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன, இந்தப் புலப்பாடு கோடிக்கணக்கான முறை திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றது. மதிப்புகள் என்ற முறையில், எல்லாப் பண்டங்களுமே கெட்டியாக்கப்பட்ட உழைப்பு நேரத்தின் திட்டவட்டமான திரள்களே ஆகும்.’ பண்டங்களில் அடங்கியுள்ள உழைப்பின் இருவகைத் தன்மையை விவரமாகப் பகுத்தாராய்ந்த பின் மார்க்ஸ் மதிப்பின் வடிவத்தையும் பணத்தையும் பகுத்தாராய்வதில் முனைகிறார், மதிப்பின் பணவடிவத்தின் தோற்றத்தைப் பரிசீலிப்பது, (ஒரு பண்டத்தின் குறிப்பிட்ட அளவு மற்றொரு பண்டத்தின் குறிப்பிட்ட அளவுக்கு மாற்றிக் கொள்ளப்படுவதான ‘மதிப்பின் ஆரம்ப அல்லது தற்செயலான வடிவம்’ என்ற தனியான, தற்செயலான பரிமாற்றங்களிலிருந்து தொடங்கி, குறிப்பிட்ட ஒரு பண்டத்துக்குப் பல்வேறு வகையான பண்டங்கள் மாற்றிக் கொள்ளப்படுவதான, மதிப்பின் முழுதளாவிய வடிவத்திற்கும், பின்பு தங்கம் இந்தக் குறிப்பிட்ட பண்டமாக, முழுதளாவிய ஈடாக ஏற்பட்ட காலத்திலுண்டான மதிப்பின் பண வடிவத்திற்குமாகப் பரிமாற்றம் வளர்ந்து வந்தது பற்றிய வரலாறு வகைப்பட்ட இயக்கப் போக்கைப் பரிசீலிப்பதே இங்கு மார்க்சின் பிரதான நோக்கம். பரிமாற்றம், பண்ட உற்பத்தி ஆகியவற்றின் வளர்ச்சியில் மிக உயர்ந்த விளைவாயிருப்பதன் காரணமாக, பணம் என்ன செய்கிறது? எல்லாத் தனித்தனி வேலைகளிலும் அடங்கியிருக்கும் சமுதாயத் தன்மையை, சந்தையின் மூலம் ஒன்றாக்கப்பட்டுள்ள தனித்தனி உற்பத்தியாளர்களுக்கிடையே நிலவும் சமுதாய உறவை, அது மூடிமறைக்கிறது.
பணத்தின் பல்வேறு செயற்கூறுகளை மார்க்ஸ் மிகவும் விவரமாகப் பகுத்தாராய்கிறார். (பொதுவாக மூலதனத்தின் ஆரம்ப அத்தியாயங்களில் போலவே) இங்கே குறிப்பாக ஒன்றைக் கவனிப்பது அத்தியாவசியம் : அதாவது, இங்கே மார்க்சின் விளக்கமுறை சூட்சுமமானதாகத் தோன்றுகிறது; சில நேரங்களில் அது சுத்தமாக உய்த்தறியும் வகைப்பட்டதாயும் தோன்றும். ஆனால் உண்மையிலே அந்த விளக்கமுறை பரிமாற்றம், பண்ட உற்பத்தி ஆகியவற்றின் வளர்ச்சி வரலாற்றைப் பற்றிய உள்ள படியான விவரவிஷயங்களைப் பிரம்மாண்டமான அளவில் திரட்டித் தருகிறது. பணத்தைக் கவனிப்போமானால், அது வழக்கிலிருப்பது பண்டப் பரிமாற்றத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தையே உட்கிடையாகக் குறிக்கிறது. பண்டங்களின் வெறும் ஈடாக மட்டுமோ, புழக்கத்திற்குரிய சாதனமாகவோ, செலுத்துவதற்குரிய சாதனமாகவோ, சேமிப்பாகவோ, முழுதளாவிய பணமாகவோ பணம் புரியும் குறிப்பிட்ட செயற்கூறுகள் எல்லாம், அவற்றில் ஒவ்வொன்றின் அளவையும், ஒன்றைவிட மற்றொன்று எந்த அளவுக்கு மேலோங்கியிருக்கிறது என்பதையும் பொறுத்து, சமுதாய உற்பத்தி நடைமுறையின் மிகவும் வேறுபட்ட கட்டங்களையே குறிக்கின்றன. மூலதனம், தொகுதி 1.)
உபரி மதிப்பு

பண்ட உற்பத்தி வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பணம் மூலதனமாக மாறுகிறது. பண்டப் புழக்கத்தின் பொதுச் சூத்திரம் பின்வருமாறு: பண் பண்டம்)- ப(பணம்) – பண் (பண்டம்); அதாவது ஒரு பண்டத்தை வாங்குவதற்காக மற்றொரு பண்டத்தை விற்பது என்பதாகும். இதற்கு மாறாக, மூலதனத்தின் பொதுச் சூத்திரம் ப பண் -ப, அதாவது (இலாபத்துக்கு) விற்பதற்காகவே வாங்குவது என்பதாகும். புழக்கத்திற்குக் கொண்டு வரும் பணத்தின் ஆரம்ப மதிப்பில் ஏற்படுகிற அதிகரிப்பை மார்க்ஸ் உபரி மதிப்பு என்று அழைக்கிறார், முதலாளித்துவப் புழக்கத்தின் போது பணத்தில் இவ்வாறு ‘பெருக்கம்’ ஏற்படுகிறது என்ற உண்மை எல்லோரும் அறிந்ததே. இந்தப் ‘பெருக்கம்’ தான் பணத்தை மூலதனமாக மாற்றுகிறது; உற்பத்தியின் ஒரு தனி, வரலாற்று வழிப்பட்ட, சமுதாய உற்பத்தி உறவு என்ற முறையிலே அமைகிற மூலதனமாக மாற்றுகிறது. பண்டப் புழக்கத்திலிருந்து உபரி மதிப்பு தோன்ற முடியாது; ஏனெனில், பண்டப் புழக்கம் ஈடுகளின் பரிமாற்றத்தைத் தான் கண்டிருக்கிறது. விலையைக் கூட்டி விடுவதிலிருந்தும் உபரி மதிப்பு தோன்ற முடியாது; ஏனெனில் வாங்குபவர்கள், விற்பவர்களுடைய பரஸ்பர நஷ்டங்களும் இலாபங்களும் ஒன்றையொன்று சமமாக்கிச் சரி செய்துவிடும். ஆனால் இங்கே நாம் பார்ப்பது ஒரு தனிப்பட்ட புலப்பாடு அல்ல; பெருந்திரளாய் நடந்தேறும் சராசரியான, சமுதாய புலப்பாடாகும். உபரி மதிப்பு பெறுவதன் பொருட்டு, பணத்தின் சொந்தக்காரன் ‘மதிப்பைத் தோற்றுவிக்கும் ஆதாரமாய் அமையும் சிறப்பு இயல்புடைய பயன் மதிப்புள்ள ஒரு பண்டத்தைச் சந்தையில் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்’ – அதாவது, அந்தப் பண்டத்தின் நுகர்கிற இயக்கப் போக்கு மதிப்பைப் படைக்கும் இயக்கப் போக்காயும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பண்டம் ஒன்று உண்டு. அதுதான் மனிதனின் உழைப்புச் சக்தி. அதன் நுகர்வு தான் உழைப்பு : உழைப்பு மதிப்பைப் படைக்கிறது. பணத்தின் சொந்தக்காரன் உழைப்புச் சக்தியை அதன் மதிப்புப்படி வாங்கிக் கொள்கிறான். மற்ற ஒவ்வொரு பண்டத்தின் மதிப்புப் போலவே இந்த மதிப்பும் இதன் உற்பத்திக்கு வேண்டிய, சமுதாய வழியில் அவசியமான உழைப்பு நேரத்தினாலேயே நிர்ணயிக்கப்படுகிறது (அதாவது, அது அந்தத் தொழிலாளியும் அவனது குடும்பமும் பிழைத்திருப்பதற்கு வேண்டிய செலவு ஆகும்), உழைப்புச் சக்தியை வாங்கிய பணச் சொந்தக்காரனுக்கு அதைப் பயன்படுத்திக் கொள்ள உரிமையுண்டு. அதாவது, அந்த உழைப்புச் சக்தியை நாள் முழுவதும் – பன்னிரண்டு மணி நேரம் என்று வைத்துக் கொள்வோம் – வேலை வாங்க அவனுக்கு உரிமையுண்டு. இருந்தாலும், ஆறு மணி நேரத்தில் அவசியமான’ உழைப்பு நேரம்) தொழிலாளி தனது பிழைப்புச் செலவைச் சரிக்கட்டுமளவுக்கு உற்பத்திப் பொருளைச் செய்கிறான்; அடுத்த ஆறு மணி நேரத்தில் (உபரி உழைப்பு நேரம்) ‘உபரி ‘ உற்பத்திப் பொருளை அல்லது உபரி மதிப்பைச் செய்கிறான். இதற்கு முதலாளி அந்தத் தொழிலாளிக்குப் பணம் கொடுப்பதில்லை.
எனவே உற்பத்தியின் இயக்கப் போக்கிலிருந்து பார்க்கையில் மூலதனத்தில் காணக்கூடிய இரு பகுதிகளை வேறுபடுத்துவது அவசியமாகும். அதாவது, (இயந்திரங்கள், உழைப்புக் கருவிகள், கச்சாப் பொருட்கள் முதலிய) உற்பத்திச் சாதனங்களுக்காகச் செலவாகிற நிலையான மூலதனம்; இதன் மதிப்பு கொஞ்சமேனும் மாறுபடாமல் (ஒரே மொத்தமாகவோ பகுதியாகவோ) தயாரான உற்பத்திப் பொருளின் பால் மாற்றப்படுகிறது; அடுத்தது, மாறுபடும் மூலதனம்: இது உழைப்புச் சக்திக்காகச் செலவழிக்கப்படுகிறது. இந்த மூலதனத்தின் மதிப்பு ஒரு நிலையாயிருப்பதில்லை; உழைப்பின் இயக்கப் போக்கில் அது உபரிமதிப்பைப் படைத்த வண்ணம் வளர்கிறது. ஆகவே உழைப்புச் சக்தியை மூலதனம் சுரண்டுகிற அளவைக் காட்ட வேண்டுமானால் உபரிமதிப்பை மொத்த மூலதனத்தோடு ஒப்பு நோக்கலாகாது; மாறுபடும் மூலதனத்துடன் மட்டுமே ஒப்பு நோக்க வேண்டும். ஆகவே, நமது உதாரணத்தில், உபரி மதிப்பின் வீதம் என்று மார்க்ஸ் அழைக்கிற இந்த விகிதம் 6:6, அதாவது 100 சதவிகிதம் ஆகும். மூலதனத்தின் தோற்றத்திற்கு வரலாற்று வழிப்பட்ட முன் தேவைகளாவன: முதலாவதாக, தனிநபர்களின் கையிலே ஒரு குறிப்பிட்ட அளவுக்குப் பணம் குவியவும், அதே சமயத்தில் பொதுவாகவே பண்ட உற்பத்தியின் வளர்ச்சி சார்பு நோக்கில் உயர்ந்த தரத்திற்கு வளர்ந்திருக்கவும் வேண்டும்; இரண்டாவதாக, இரண்டு அர்த்தங்களில் ‘சுதந்திரமான’ உழைப்பாளி இருக்க வேண்டும் – அதாவது, தனது உழைப்புச் சக்தியை விற்பதில் எல்லா விதமான கட்டுப்பாடுகளிலிருந்தும் தடைகளிலிருந்தும் விடுபட்டவன் என்ற அர்த்தத்திலும், நிலத்திலிருந்தும் பொதுவாக எல்லா உற்பத்திச் சாதனங்களிலிருந்தும் விடுபட்டவன் என்ற அர்த்தத்திலும் யாருடனோ எதனுடனோ இணைக்கப்படாத கட்டறுந்த உழைப்பாளி, அதாவது தனது உழைப்புச் சக்தியை விற்பதைத் தவிர வேறெந்த வழியிலும் பிழைக்க முடியாத ‘பாட்டாளி’ இருக்க வேண்டும்.
இரண்டு அடிப்படையான முறைகளின் மூலமாக உபரி மதிப்பை அதிகப்படுத்த முடியும். அதாவது, வேலை நேரத்தை அதிகப்படுத்துவது (தனிமநிலை உபரி மதிப்பு), அவசியமான வேலை நேரத்தைக் குறைப்பது (சார்புநிலை உபரி மதிப்பு). முதல் வழியை மார்க்ஸ் பகுத்தாராய்கையில், வேலை நேரத்தைக் குறைப்பதற்காகத் தொழிலாளி வர்க்கம் நடத்திய போராட்டத்தைப் பற்றியும், வேலை நேரத்தை அதிகமாக்குவதற்காகவும் (14ம் நூற்றாண்டிலிருந்து 17ம் நூற்றாண்டு வரை) வேலை நேரத்தைக் குறைப்பதற்காகவும் (நூற்றாண்டின் ஆலைச் சட்டங்கள்) அரசாங்கம் தலையிட்டு வந்ததைப் பற்றியும் ஆழப்பதியும் சித்திரம் ஒன்றை நமக்குத் தருகிறார். மூலதனம் வெளிவந்த காலந்தொட்டு இந்தச் சித்திரத்தை மேலும் விரிவாக்கும் விதத்திலே பல்லாயிரக்கணக்கான புதிய விவரங்களை எல்லா நாகரிக நாடுகளிலுமுள்ள தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு தந்திருக்கிறது.
சார்புநிலை உபரி மதிப்பின் உற்பத்தியைப் பகுத்தாராய்கையில் மார்க்ஸ், முதலாளித்துவம் எந்த மூன்று கட்டங்கள் மூலமாக உழைப்பின் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்திருக்கிறதோ, அந்த மூன்று வரலாற்றுக் கட்டங்களையும் பரிசீலிக்கிறார். அவையாவன: I) சாதாரணக் கூட்டுறவு; 2) உழைப்புப் பிரிவினையும் பட்டறைத் தொழிலும்; 3) இயந்திரங்களும் பெருவீதத் தொழிலும். முதலாளித்துவ வளர்ச்சியின் அடிப்படையான, எடுத்துக்காட்டான முனைப்புக் கூறுகளே மார்க்ஸ் இங்கே எவ்வளவு ஆழமாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை ருஷ்யாவின் ‘குடிசைத் தொழில்’ என்று சொல்லப்படுவதைப் பற்றிய ஆராய்ச்சிகள் மேலே குறித்துள்ள முதல் இரண்டு கட்டங்களை விளக்கிக் காட்டுவதற்கு ஏராளமான விவரங்களைத் தந்துள்ளன என்ற உண்மையைப் போகிற போக்கில் குறிக்கலாம். பெருவீத இயந்திரத் தொழிலின் எந்தப் புரட்சிகரமாக்கும் செயல் தன்மையை மார்க்ஸ் 1887ல் விவரித்தாரோ, அந்தச் செயல் தன்மை (ருஷ்யா, ஜப்பான் முதலிய) பற்பல ‘புதிய’ நாடுகளிலே கடந்த அரை நூற்றாண்டில் வெளியாகியிருக்கிறது.

மேலே தொடர்வோம். மிகமிகப் புதுமையானதும் முக்கியமானதும் மூலதனத் திரட்சி பற்றிய மார்க்சின் பகுப்பாய்வாகும். மூலதனத்தின் திரட்சி என்றால் உபரி மதிப்பின் ஒரு பகுதி மூலதனமாக மாற்றப்படுவது; உபரி மதிப்பை முதலாளியின் சொந்தத் தேவைகளையோ, மன விருப்பங்களையோ நிறைவு செய்வதற்காகப் பயன்படுத்தாமல் புதிய உற்பத்திக்காகப் பயன்படுத்துவது. (ஆடம் ஸ்மித் முதல்) முந்தைய மூலச்சிறப்புள்ள அரசியல் பொருளாதாரவாதிகள் எல்லாரும் செய்த தவறை மார்க்ஸ் வெளிப்படுத்தினார், அவர்கள் எல்லாரும் மூலதனமாக மாற்றப்படும் உபரி மதிப்பு முழுவதும் மாறுபடும் மூலதனமாகும் என்று எண்ணிக் கொண்டார்கள். ஆனால் உண்மையிலேயே உபரி மதிப்பு உற்பத்திச் சாதனங்களுக்கு ஒரு பங்காகவும், மாறுபடும் மூலதனத்துக்கு மற்றொரு பங்காகவும் பிரிக்கப்படுகிறது. (மூலதனத்தின் மொத்தத் தொகையில் மாறுபடும் மூலதனத்தின் பங்கை விட நிலையான மூலதனத்தின் பங்கு அதிக வேகத்துடன் வளர்ச்சி பெறுவது முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கிலும், முதலாளித்துவம் சோஷலிசமாக மாறுவதற்கான இயக்கப் போக்கிலும் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
மூலதனத் திரட்சி தொழிலாளர்களுக்குப் பதிலாய் இயந்திரங்களைக் கொண்டு வேலைகளை முடித்துக் கொள்ளும் போக்கை விரைவுபடுத்தி, ஒரு கோடியில் செல்வத்தையும் இன்னொரு கோடியில் வறுமையையும் உண்டாக்கித் ‘தொழிலாளர்களின் ஒப்பியலான உபரி’ அல்லது முதலாளித்துவ மிகை மக்கள் தொகைப் பெருக்கு என்பதைக் காட்டி’ ‘தொழிலாளர்களின் சேமப்பட்டாளம்’ என்று சொல்லப்படும் ஒன்றை தோற்றுவிக்கிறது. இந்நிகழ்ச்சியானது பல வகைப்பட்ட வடிவங்களில் ஏற்பட்டு, மூலதனம் மிகமிக வேகமாக உற்பத்தியை விரிவாக்குவதைச் சாத்தியமாக்குகிறது. இங்கே ஒன்று சொல்லலாம். இந்நிலைமையும் கடன் வசதிகளும், உற்பத்திச் சாதனங்களிலே ஏற்படும் மூலதனத் திரட்சியும் முதலாளித்துவ நாடுகளில் அவ்வப்போது ஏற்பட்ட மிகை உற்பத்தி நெருக்கடிகளின் காரண காரியங்களைப் புரிந்து கொள்வதற்குத் தடயம் தருகின்றன. இந்த நெருக்கடிகள் முதலில் சராசரி பத்தாண்டுகளுக்கு ஒரு தடவையாக ஏற்பட்டுக் கொண்டிருந்தன; பிறகு, இதைவிட நீண்ட, அவ்வளவாகத் திட்டமாகச் சொல்ல முடியாத கால இடைவெளி விட்டு நிகழ்ந்தன. முதலாளித்துவத்தின் கீழ் ஏற்படுகிற மூலதனத் திரட்சி வேறு, புராதன மூலதனத் திரட்சி என்று சொல்லப்படுவது வேறு என்பதை நினைவிவிருத்திக் கொள்ள வேண்டும், புராதன மூலதனத் திரட்சி என்பது என்ன? உற்பத்திச் சாதனங்களிலிருந்து உழைப்பாளியைப் பலாத்காரமாகப் பிரித்துவிடுவது, நிலத்திலிருந்து விவசாயிகளைத் துரத்திவிடுவது, சமுதாயப் பொது நிலங்களைத் திருடிக் கொள்வது, காலணிகள், தேசியக் கடன்கள், காப்பு வரிகள் முதலான பல ஏற்பாடுகள் புராதன மூலதனத் திரட்சியின் முனைப்புக் கூறுகளாம். ‘புராதன மூலதனத் திரட்சி’ என்பது ஒரு கோடியில் ‘சுயேச்சையான’ பாட்டாளியைத் தோற்று வித்து, மற்றொரு கோடியில் பணச் சொந்தக்காரனை, முதலாளியைத் தோற்றுவிக்கிறது.
‘முதலாளித்துவ மூலதனத் திரட்சியின் வரலாற்று வழிப்பட்ட போக்கைப்’ பின்வரும் புகழ் பெற்ற சொற்களில் மார்க்ஸ் விவரிக்கிறார். “நேரடியான உற்பத்தியாளர்களின் சொத்தைப் பறிமுதல் செய்யும் வேலை, ஈவிரக்கமற்ற படு மூர்க்கத்துடன், மிகமிக வெட்கக்கேடான, மிகமிக ஆபாசமான, மிகமிக அற்பத்தனமான, மிகமிக இழிவான, அருவருக்கத்தக்க வெறியுணர்ச்சிகளால் தூண்டப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. தனியான, சுயேச்சையான உழைப்பாளியும், அவனுடைய உழைப்புக்குரிய நிலைமைகளும் ஒன்றாக இணைவதை அடிப்படையாகக் கொண்ட தென்று சொல்லக்கூடிய சொந்த சம்பாத்தியமாகிய தனிச்சொத்து” (விவசாயி, கைத்தொழில் செய்வோன் ஆகியோரின் தனிச்சொத்து) “நீக்கப்பட்டு அதன் இடத்தில் முதலாளித்துவத் தனிச்சொத்து ஏற்றி வைக்கப்படுகிறது. இந்த முதலாளித்துவத் தனிச்சொத்து, பிறருடைய, பெயரளவில் சுயேச்சையான உழைப்பைச் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இப்பொழுது சொத்து பறிமுதல் செய்யப்பட வேண்டியவன் தனக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் உழைப்பாளியல்ல, பல தொழிலாளிகளைச் சுரண்டிக் கொண்டிருக்கிற முதலாளிதான். முதலாளித்துவ உற்பத்தியின் இயல்பான உள் விதிகள் செயல்படுவதன் மூலமாக, மூலதனம் ஒரு மையத்தில் சேகரிக்கப்படும் போக்கின் மூலமாக, இந்தச் சொத்துப் பறிமுதல் நிறைவேற்றப்படுகிறது. எப்பொழுதுமே ஒரு முதலாளி பல முதலாளிகளைக் கொல்கிறான். இவ்வாறு ஒரு மையத்தில் மூலதனம் சேகரிக்கப்படும் போக்கோடு கூடவே, அல்லது பல முதலாளிகளின் சொத்தைச் சில முதலாளிகள் பறிமுதல் செய்வதோடு கூடவே, உழைப்பு முறையின் கூட்டுறவு வடிவமும், விஞ்ஞானத்தை உணர்வு பூர்வமான தொழில்நுட்பப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதும், விளைநிலத்தைத் திட்டப்படி பண்படுத்தி வருவதும், உழைப்புக் கருவிகள் எல்லோரும் பொதுவாக உபயோகிக்கும்படியாக மட்டுமே அமைந்த உழைப்புக் கருவிகளாக மாற்றம் அடைவதும், எல்லா உற்பத்திச் சாதனங்களையும் ஒன்றிணைந்த, சமுதாயமயமான உழைப்பின் உற்பத்திச் சாதனங்களாக உபயோகிப்பதன் மூலமாக அவற்றைச் சிக்கனம் செய்வதும், உலகச் சந்தை என்ற வலையில் எல்லா நாடுகளைச் சேர்ந்த மக்களையும் சிக்க வைப்பதும், அத்துடன் முதலாளித்துவ அரசாட்சியின் சர்வதேசத் தன்மையும், மேலும் மேலும் விரிவான அளவில் வளர்கின்றன. மூலதன அதிபர்களின் எண்ணிக்கை இடையறாது குறைந்து கொண்டே போகிறது இந்த மாற்றத்தினால் கிடைக்கிற அனுகூலங்கள் எல்லாவற்றையும் அவர்களே கைப்பற்றி ஏகபோகமாக்கிக் கொள்கின்றனர்.
இந்தப் போக்குடன் கூடவே , வறுமையும் ஒடுக்குமுறையும் அடிமைத்தனமும் இழிநிலையும் சுரண்டலும் மலை போல் வளர்கின்றன. ஆனால், இத்துடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் கிளர்ச்சியும் வளர்கின்றது. தொழிலாளி வர்க்கம் எப்போதும் எண்ணிக்கையில் பெருகிக்கொண்டேயிருக்கும் வர்க்கமாகும்; மேலும் முதலாளித்துவ உற்பத்திப் போக்கின் ஏற்பாடாலேயே அந்த வர்க்கம் கட்டுப்பாடும் ஒற்றுமையும் ஒழுங்கமைப்பும் பெறுகிறது. எந்த உற்பத்தி முறை மூலதனத்தின் ஏகபோகத்துடன்கூடவே முளைத்து, அதனுடனேயே, அதன் அடியிலேயே தழைத்துச் செழித்ததோ, அந்த உற்பத்தி முறைக்கு மூலதனத்தின் ஏகபோகமே விலங்காகிவிடுகிறது. உற்பத்திச் சாதனங்களின் ஓரிடக் குவியலும், உழைப்பு சமுதாயமயமாக்குதலும் கடைசியிலே ஒரு நிலையை எட்டியதும் அவற்றிற்கும் அவற்றின் முதலாளித்துவ மேலோட்டுக்கும் பொருத்தமற்றுப் போய்விடுகிறது. இந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனிச்சொத்துக்குச் சாவுமணி அடிக்கப்படுகிறது. உடைமை பறித்தோர் உடைமை நீக்கம் செய்யப்படுகின்றனர்.” (மூலதனம், தொகுதி 1)

மூலதனத்தின் இரண்டாம் தொகுதியில் மொத்த சமுதாய மூலதனத்தின் மறு உற்பத்தியைப் பற்றி மார்க்ஸ் செய்யும் பகுப்பாய்வு மிகமிக உயர்ந்த அளவிலே புதுமையாயும் முக்கியமானதாயும் உள்ளது. இங்கேயும் கூட மார்க்ஸ் தனியொரு புலப்பாட்டை ஆராயாமல் வெகுவாகக் காணக்கிடக்கிற புலப்பாட்டையே ஆராய்கிறார், சமுதாயத்தினுடைய பொருளாதாரத்தின் ஏதோ ஒரு சிறு பகுதியை ஆராயாமல் அந்தப் பொருளாதாரம் முழுவதையுமே ஆராய்கிறார். மூலச்சிறப்புள்ள பொருளாதாரவாதிகள் செய்த மேற்கூறிய தவறைத்திருத்தி, சமுதாய உற்பத்தி முழுவதையும் 1) உற்பத்திச் சாதனங்களின் உற்பத்தி, 2) நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி என்று இரண்டு பெரும் பகுதிகளாக மார்க்ஸ் பிரிக்கிறார்; மேலும், முந்தைய அளவுகளிலே மறு உற்பத்தி விஷயத்திலும் சரி; குவியல் விஷயத்திலும் சரி; மொத்த சமுதாய மூலதனம் புழங்கி வந்ததைப் பற்றி மார்க்ஸ் எண் கணித உதாரணங்களுடன் விவரமாகப் பரிசீலனை செய்கிறார். மதிப்பின் விதியை அடிப்படையாகக் கொண்டு, இலாபத்தின் சராசரி விகிதம் அமையும் பிரச்சனையை மூலதனத்தின் மூன்றாம் தொகுதி தீர்த்து வைக்கிறது. வெகுவாகக் காணக்கிடக்கிற பொருளாதாரப் புலப்பாடுகள் பார்க்கும் நிலையிலே தான், சமுதாயப் பொருளாதாரம் முழுவதையும் பார்க்கும் நிலையிலேதான், மார்க்ஸ் தமது பகுப்பாய்வை நடத்திச் செல்கிறார். விஞ்ஞானக்கேடான அரசியல் பொருளாதாரமோ, அல்லது நவீன காலத்திய இறுதிநிலைப் பயன்பாட்டுத் தத்துவமோ’ அடிக்கடி செய்வதுபோல, தனித்தனி விஷயங்களை எடுத்துக்கொண்டு, அல்லது போட்டியின் வெளித்தோற்றமாயுள்ள, மேலெழுந்தவாரியான அம்சங்களை மட்டும் எடுத்துக் கொண்டு பார்க்கும் நிலையுடன் மார்க்ஸ் நின்றுவிடவில்லை. பொருளாதார விஞ்ஞானத்தில் மார்க்ஸ் ஏற்படுத்திய பெருத்த முன்னேற்றம் இதில் அடங்கியிருக்கிறது. உபரி மதிப்பின் தோற்றத்தை மார்க்ஸ் முதலில் பகுத்தாராய்கிறார், பிறகு அது இலாபமாகவும், வட்டியாகவும், நில வாடகையாகவும் பிரிவதைக் கவனிக்கப் புகுகிறார். இலாபம் என்பது உபரி மதிப்புக்கும், ஒரு தொழில் நிலையத்தில் போடப்பட்ட மொத்த மூலதனத்திற்கும் இடையேயுள்ள விகிதமேயாகும்.
“உயர்வான உள்ளமைப்பு” (high organic composition) உள்ள (அதாவது, நிலையான மூலதனம் மாறுபடும் மூலதனத்தைக் காட்டிலும் சமுதாய சராசரிக்கும் மேல் அதிகமாயிருப்பதான) மூலதனம், சராசரியை விடக் குறைந்த இலாப விகிதத்தைத் தருகிறது. “தாழ்ந்த உள்ளமைப்பு” (low organic composition) உள்ள மூலதனம் சராசரியைக் காட்டிலும் அதிகமான இலாப விகிதத்தைத் தருகிறது. மூலதனங்களிடையேயுள்ள போட்டி, ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு அந்த மூலதனங்கள் மாறிச் செல்வதற்குப் பெற்றுள்ள சுதந்திரம்-இவையிரண்டும் இலாப விகிதத்தைச் சராசரிக்குச் சமப்படுத்திவிடுகின்றன. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் எல்லாப் பண்டங்களுடைய மதிப்புகளின் மொத்தத் தொகை பண்டங்களுடைய விலைகளின் மொத்தத் தொகையோடு ஒத்திருக்கிறது; ஆனால், போட்டியின் காரணமாக, தனித்தனித் தொழில் நிலையங்களிலும் தனித்தனி உற்பத்திக் கிளைகளிலும் அவற்றின் மதிப்புகளுக்குச் சமமாகப் பண்டங்கள் விற்கப்படுவதில்லை; அதற்குப் பதிலாக அவற்றின் உற்பத்தி விலைகளுக்குச் சமமாகத்தான் விற்கப்படுகின்றன. இந்த உற்பத்திவிலைகள், செலவழிக்கப்பட்ட மூலதனமும் சராசரி இலாபமும் சேர்ந்த கூட்டுத் தொகைக்குச் சமமாகும்.
இவ்வாறு விலைகளுக்கும் மதிப்புகளுக்குமிடையே வேற்றுமையுள்ளது, இலாபங்கள் ஒன்றோடொன்று சமப்படுத்தப்படுகின்றன என்ற மறுக்க முடியாத, எல்லாருக்கும் தெரிந்த உண்மையை மார்க்ஸ் மதிப்பின் விதியை அடிப்படையாகக் கொண்டு முற்றாக விளக்கிவைக்கிறார்; ஏனெனில், எல்லாப் பண்டங்களுடைய மதிப்புகளின் மொத்தத் தொகையும் விலைகளின் மொத்தத் தொகையோடு ஒத்திருக்கின்றது. ஆயினும் (சமுதாய) மதிப்பு (தனிப்பட்ட) விலைகளுடன் சரி சமமாக்கப்படுவது அவ்வளவு எளிதாக, நேரடியாக நடைபெறுகிற விஷயமல்ல; அது மிகச் சிக்கலான முறையிலே நடைபெறுகிற காரியமாகும். சந்தையால் மட்டுமே ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிற தனித்தனி பண்ட உற்பத்தியாளர்களைக் கொண்ட சமுதாயத்தில் விதியானது சராசரியான, சமுதாய அளவிலான, பெரு வழக்கான விதியாகத்தான் வெளிப்பட முடியும் என்பது மிகமிக இயல்பானதொரு விஷயமாகும்; இந்த விதியிலிருந்து இந்தப் பக்கமோ, அந்தப் பக்கமோ விலகிச்செல்லும் தனித்தனித் திரிபுகள் ஒன்றையொன்று சரிக்கட்டிக் கொள்கின்றன.
உழைப்பின் உற்பத்தித்திறன் உயர்கிறது என்பதின் உட்கிடை, நிலையான மூலதனம் மாறுபடும் மூலதனத்துடன் ஒப்பிடும் போது வேகமாக அதிகரிக்கிறது என்பதுதான். உபரிமதிப்போ , மாறுபடும் மூலதனத்தின் செயற்கூறு மட்டுமே; ஆகவே, இலாபவிகிதம் (உபரி மதிப்புக்கும் மொத்த மூலதனத்துக்கும் – அதன் மாறுபடும் பகுதிக்கு மட்டுமல்ல – இடையேயுள்ள விகிதத்தை இது குறிக்கிறது) இறங்கும் போக்குள்ளது வெளிப்படை. இந்த இறங்கும் போக்கையும், இதை மூடிமறைக்கிற, அல்லது இதற்கு எதிராகச் செயல்படுகிற பல சூழ்நிலைமைகளையும் மார்க்ஸ் விவரமாகப் பகுத்தாராய்கிறார். கடும் வட்டி மூலதனம், வியாபார மூலதனம், பண மூலதனம் ஆகியவற்றைப் பரிசீலிக்கும் மூலதனம் நூலின் மூன்றாம் தொகுதியிலுள்ள மிகமிகச் சுவாரசியமான பகுதிகளைப் பற்றிச் சொல்ல முற்படாமல், அதில் மிகமிக முக்கியமான பகுதியாகிய நில வாடகையின் தத்துவம் பற்றிய பகுதியைக் கவனிப்பதில் முனைவோம். நிலப்பரப்பு ஒரு வரை யறைக்குட்பட்டது; முதலாளித்துவ நாடுகளில் இந்த நிலப்பரப்பு முழுவதையும் தனித்தனி சொந்தக்காரர்கள் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காரணத்தினால் விவசாய விளைபொருட்களின் உற்பத்தி விலை நிர்ணயிக்கப்படுவது, சராசரி ரக விளைநிலத்தில் அல்ல, அடிமட்டரக விளைநிலத்தில் ஏற்படும் உற்பத்திச் செலவை வைத்தே, – விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்வதற்கான சராசரி வசதிநிலைமைகளின் கீழல்ல; மாறாக, படுமோசமான நிலைமைகளின் கீழிலாகும். இந்த விலைக்கும், மேலான விளைநிலத்தில் (அல்லது மேலான நிலைமைகளில்) ஆகும் உற்பத்தி விலைக்கும் உள்ள வேறுபாடுதான் வேற்றுமை நிலை வாடகை ஆகும். இதை விவரமாகப் பகுத்தாராய்ந்து, வெவ்வேறு நிலப்பகுதிகளின் செழுமையிலே இருக்கிற வேறுபாட்டிலிருந்தும் நிலத்தில் ஈடுபடுத்தும் மூலதனத்தின் அளவில் இருக்கிற வேறுபாட்டிலிருந்தும் இந்த வாடகை எப்படித் தோன்றுகிறது என்பதை எடுத்துக்காட்டிய மார்க்ஸ், ரிக்கார்டோவின் தவறை முற்றாக அம்பலப் படுத்துகிறார் (உபரிமதிப்பு பற்றிய தத்துவங்கள் என்ற நூலைப் பார்க்க இதிலுள்ள ரொட்பேர்டஸ் பற்றிய விமர்சனம் குறிப்பாகக் கவனிக்கத்தக்கது). நிலம் மேலான நிலையிலிருந்து படிப்படியாக மோசமான நிலைக்கு மாறிச் செல்லும் போதுதான் வேற்றுமை நிலை வாடகை பெறப்படுகிறது என்று ரிக்கார்டோ தவறாகக் கருதினார். இதற்கு மாறாக, கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கும் நிலங்கள் மாறக் கூடும் (விவசாயத் தொழில் நுணுக்கத்தில் ஏற்படும் முன்னேற்றம், நகரங்களின் வளர்ச்சி முதலிய காரணங்களால்) நிலம் ஒரு ரகத்திலிருந்து இன்னெரு ரகத்துக்கு மாறக் கூடும். “குன்றிச் செல்லும் விளைவு விதி (law of diminishing returns) இகழார்ந்த விதி முற்றிலும் தவறானதாகும். இது, முதலாளித்துவத்தின் குறைபாடுகளையும் வரையறைகளையும் முரண்பாடுகளையும் இயற்கையின் மீது சுமத்துகிறது. மேலும், தொழிலின் எல்லாத் துறைகளிலும், பொது வாக தேசியப் பொருளாதாரத்தின் எல்லாத் துறைகளிலும் இலாபம் சரிசமமாக்கப்பட வேண்டுமானால் போட்டியிடுவதில் முழுச்சுதந்திரமும் ஒரு கிளையிலிருந்து இன்னெரு கிளைக்கு மூலதனம் தங்குதடையின்றி ஓடிக் கொண்டிருப்பதும் அவசியம் இருந்து தீர வேண்டும். ஆனால் நிலத்திலுள்ள தனிச்சொத்து ஏகபோகத்தைத் தோற்றுவிக்கிறது. இந்த ஏகபோகம், இப்படி ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு மூலதனம் தங்குதடையின்றி ஓடுவதற்கு இடையூறாக அமைந்துவிடுகிறது.
தாழ்ந்த உள்ளமைப்புள்ள மூலதனத்தையும், அதன் பயனாகத் தனித்த முறையில் உயர்தர இலாப விகிதத்தையும் சிறப்பியல்பாகக் கொண்ட விவசாயத்தின் விளைபொருட்கள் இந்த ஏகபோகத்தின் காரணத்தால், இலாப விகிதத்தைச் சரிசமமாக்கி வைக்கும் முழுச் சுயேச்சையுள்ள இயக்கப் போக்கில் பங்கு கொள்வதில்லை. நிலச் சுவான்தார் ஏகபோக உரிமையாளனாக இருப்பதினால் விலையைச் சராசரிக்கு மேலாகவே உயர்த்தி வைத்திருக்க முடியும். இந்த ஏகபோக விலைதான் தனிம நிலை வாடகையை உண்டாக்குகிறது. முதலாளித்துவ முறையின் கீழ் வேற்றுமை நிலை வாடகையை ஒழித்துவிட முடியாது, ஆனால் தனிம நிலை வாடகையை ஒழித்துவிட முடியும்; உதாரணமாக, நிலத்தைத் தேசியமயமாக்குவதின் மூலமாக, நிலத்தை அரசு உடைமையாகச் செய்வதின் மூலமாக, அதை ஒழிக்க முடியும். நிலத்தை அரசு உடைமையாகச் செய்துவிடுவது தனி நிலச்சுவான்தார்களின் ஏகபோகத்தைப் பலவீனப்படுத்தும், விவசாயத் துறையிலும் போட்டியிடுவதற்குரிய சுதந்திரம் முன்னைவிட முரணின்றி முழுமையாகச் செயல்படுவதில் கொண்டு போய்விடும். எனவேதான், நிலத்தைத் தேசியமயமாக்க வேண்டும் என்ற இந்த முற்போக்கான முதலாளித்துவக் கோரிக்கையைத் தீவிரவாத முதலாளி வர்க்கத்தினர் வரலாற்றுப் போக்கிலே திரும்பத் திரும்ப வெளியிட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் இந்தக் கோரிக்கை பெரும்பாலான முதலாளி வர்க்கத்தினரைக் கிலியடைந்தோடச் செய்கிறது. ஏனென்றால் அது இன்னொரு ஏகபோகத்தை – தற்காலத்தில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவமுள்ள, ‘தொட்டால் சிணுங்கியான” ஏகபோகத்தை, அதாவது பொதுவாக உற்பத்திச் சாதனங்களிலுள்ள ஏகபோகத்தை மிகவும் நெருங்கிய முறையில் “பாதிக்கிறது” (மூலதனத்தின் மேல் கிடைக்கிற இலாபத்தின் சராசரி விகிதம் பற்றிய தமது தத்துவத்தைக் குறித்தும், தனிமநிலை நில வாடகை பற்றிய தமது தத்துவத்தைக் குறித்தும் 1862 ஆகஸ்ட் 2ம் தேதி எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் மக்களுக்குப் புரியும்படியாக, சுருக்கமான, தெளிவான விளக்கத்தைத் தருகிறார், (கடிதப் போக்குவரத்து, மூன்றாம் தொகுதி, 77-81ம் பக்கங்களைப் பார்க்க.)
மேலும் இதே தொகுதியில் 86-87ம் பக்கங்களில் தரப்பட்டுள்ள 1862 ஆகஸ்ட் 9ம் தேதியிட்ட கடிதத்தையும் பார்க்க .) உழைப்பு வாடகை எவ்வாறு படிப்படியாக மாறி முதலாளித்துவ வாடகையாக உருப்பெறுகிறது என்பதைக் காட்டும் மார்க்சின் பகுப்பாய்வைக் கவனிப்பதும் நில வாடகையின் வரலாற்றுக்கு முக்கியமானதாகும். விவசாயி நிலப்பிரபுவின் நிலத்தில் பாடுபட்டு உபரி விளைபொருளை உண்டாக்குவதான) உழைப்பு வாடகையானது, (விவசாயி தன் சொந்த நிலத்தில் உபரி விளைபொருளை உண்டாக்கி, ‘பொருளாதாரச் சார்பற்ற நிர்ப்பந்தம்’ காரணமாக அதை நிலப்பிரபுவிடம் ஒப்படைத்துவிடுவதான) விளைபொருள் வாடகை அல்லது பண்ட வாடகையாகவும், பின்பு (பண்ட உற்பத்தி வளர்ச்சியின் காரணமாக , பண்ட வாடகை பணமாக மாறுவதான, ருஷ்யாவில் வழங்கிய ‘ஒப்ரோக்’ முறை போன்ற) பண வாடகையாகவும் மாறுகிறது; முடிவில், கூலி உழைப்பின் உதவியால் சாகுபடி செய்யும் விவசாயத் துறை முதலாளி விவசாயியை அகற்றிவிட்டு அவன் இடத்தில் அமர்ந்து கொள்ளும் போது இது முதலாளித்துவ வாடகையாக மாறுகிறது என்று மார்க்சின் பகுப்பாய்வு காட்டுகிறது.
‘முதலாளித்துவ நில வாடகையின் தோற்றம்’ பற்றிய இந்தப் பகுப்பாய்வு சம்பந்தமாக மார்க்ஸ் விவசாயத் துறையில் முதலாளித்துவத்தின் பரிணாமம் பற்றித் தருகிற, (ருஷ்யாவைப் போன்ற பிற்பட்ட நாடுகளுக்குத் தனி முக்கியத்துவம் வாய்ந்த பல ஆழ்ந்த கருத்துகளைக் குறிப்பிட்டாக வேண்டும். ‘பண்ட வாடகை பண வாடகையாக மாறுவதுடன் கூடவே கூலிக்கு வேலை செய்பவர்களான, சொத்தில்லாத கூலி ஆட்களின் வர்க்கம் ஒன்று அவசியம் உருவாகிவிடுகிறது என்பது மட்டுமல்ல; அந்த வர்க்கம் உருப்பெறுவதே அதை முன்னறிவிக்கிறது. இந்தக் கூலி வேலையாட்கள் தோன்றிக் கொண்டிருக்கும் காலப்பகுதியில், இந்தப் புதிய வர்க்கம் இங்குமங்குமாய்த் தோன்றிக் கொண்டிருக்கையிலேயே, நல்ல நிலைமையிலுள்ள, மேல்வாரம் செலுத்தும் விவசாயிகளிடையே தங்களது சொந்த அனுகூலத்துக்காகவே விவசாய உழைப்பாளிகளைச் சுரண்டுகிற வழக்கமும், நிலப்பிரபுத்துவ காலத்தில் அதிகச் செல்வம் படைத்த பண்ணையடிமைகள் தங்களுடைய சொந்த அனுகூலத்துக்காக மற்ற பண்ணையடிமைகளை வேலைக்கு வைத்துக் கொண்டிருந்தது போலவே, அவசியமாக வளர்கிறது. இந்த முறையிலே அவர்கள் – நல்ல நிலைமையிலுள்ள, மேல்வாரம் செலுத்தும் விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட அளவுக்குச் செல்வத்தைச் சேகரிப்பதற்கும் எதிர் காலத்தில் முதலாளிகளாகக்கூட மாறிவிடுவதற்கும் படிப்படியாக வாய்ப்பு பெறுகின்றனர். சுயமாக உழைத்து வந்த பழைய நிலச் சொந்தக்காரர்கள் இப்படித்தான் தங்கள் மத்தியிலிருந்தே முதலாளித்துவக் குத்தகைதாரர்களை வளர்க்கும் ஒரு வளர்ப்புப் பண்ணையை உண்டாக்கி வைக்கிறார்கள். இந்த முதலாளித்துவக் குத்தகைதாரர்களின் வளர்ச்சி நாட்டுப்புறங்களுக்கு வெளியேயுள்ள முதலாளித்துவ உற்பத்தியின் பொது வளர்ச்சியைப் பொறுத்திருக்கிறது’. (மூலதனம், தொகுதி 3, பக்கம் 332.) ‘விவசாயி மக்களில் ஒரு பகுதியினரின் சொத்தைப் பறிமுதல் செய்து அவர்களை நிலத்திலிருந்து வெளியேற்றி விடுவதானது தொழில் மூலதனத்திற்கு வேண்டிய உழைப்பாளிகளும், அவர்களுடைய பிழைப்புக்கான சாதனங்களும், உழைப்பதற்குரிய பொருள்களும் ‘தங்குதடையின்றிக்’ கிடைக்கும்படி செய்தது. அது மட்டுமல்ல, அது உள்நாட்டு சந்தையையும் உண்டாக்கியது.” (மூலதனம், தொகுதி 1, பக்கம் 778.) விவசாயி மக்கள் ஏழ்மைப்பட்டுச் சீரழிந்ததன் விளைவாக ஏற்படுவது என்னவென்றால் மூலதனத்திற்கு ஒரு சேமத் தொழிலாளர் பட்டாளம் உருவாகிறது. ஒவ்வொரு முதலாளித்துவ நாட்டிலும் ‘விவசாயி மக்களின் ஒரு பகுதி, நகர, அதாவது பட்டறைத் தொழில் முறையைச் சேர்ந்த விவசாயம் தவிர மற்றெல்லாத் தொழில்களையும் இது குறிக்கும்) பாட்டாளி வர்க்கமாக மாறிப்போகும் நிலையில் எப்பொழுதும் இருந்து வருகிறது. இப்படியாக, சார்புநிலை மிகை மக்கள் தொகைப் பெருக்குக்குரிய இந்த ஊற்றுக்கண் எப்பொழுதும் பெருகியோடிக் கொண்டேயிருக்கிறது.
ஆகவே விவசாயத் தொழிலாளி எப்பொழுதுமே குறைந்த பட்சக் கூலிக்குத்தான் வேலை செய்ய வேண்டியதாகிறது; பஞ்சைத்தனம் என்ற சேற்றுக் குழியிலே ஒரு காலை வைத்துக்கொண்டிருக்கிற நிலையிலேயே அவன் எப்போதும் நிற்கிறான்’ (மூலதனம், தொகுதி 1, பக்கம் 668). தானே பாடுபடுகிற நிலத்தில் விவசாயிக்கிருக்கிற தனிச்சொத்து சிற்றளவான உற்பத்திக்கு அடிப்படையாயும், அது செழுமை பெறவும், சுத்தமான முழு வடிவம் பெறவும் தேவைப்படுகிற நிபந்தனையாகவும் இருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட சிற்றளவான உற்பத்தி ஒரு குறுகிய துவக்கக்கால் உற்பத்திக் கட்டுக்கோப்புக்கும் சமுதாயக் கட்டுக்கோப்புக்கும் மட்டுமே பொருத்தமுடையது. முதலாளித்துவத்தின்கீழ் ‘விவசாயிகளைச் சுரண்டுவது இயந்திரத் தொழிலில் வேலை செய்து வரும் பாட்டாளி வர்க்கத்தைச் சுரண்டுவதிலிருந்து வடிவத்தில் மட்டும்தான் மாறுபட்டிருக்கிறது. சுரண்டலாளர் ஒருவரே; அதாவது, மூலதனமே. தனித்தனி முதலாளிகள் தனித்தனி விவசாயிகளை அடமானம் மூலமாகவும், கடும் வட்டி மூலமாகவும் சுரண்டுகிறார்கள்; முதலாளி வர்க்கமானது விவசாயி வர்க்கத்தை அரசாங்க வரிகள் மூலமாகச் சுரண்டுகிறது.’ (பிரான்சில் வர்க்கப் போராட்டம்.) ‘விவசாயியின் சிறு நிலப் பண்ணையானது. இலாபங்களையும் வட்டியையும் வாடகையையும் முதலாளிகள் விளைநிலத்திலிருந்து பெறுவதை அனுமதிப்பதற்குரிய ஒரு சாக்காக மட்டுமே இன்று இருக்கிறது; அதே சமயத்தில், நிலத்தை உழுபவன் தனக்குக் கூலி எப்படிக் கிடைக்கும் என்பதைத் தானே பார்த்துக் கொள்ளும்படி விட்டுவிடப்படுகிறான்.’ (லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்.) சாதாரணமாகவே முதலாளித்துவச் சமுதாயத்துக்கு, அதாவது முதலாளி வர்க்கத்துக்கு, விவசாயி தனது கூலியிலும் கூட ஒரு பங்கை ஒப்படைத்து ‘அயர்லாந்து குத்தகை விவசாயியின் நிலைக்கு..’ இழிந்துவிடுகிறான், ‘…எல்லாம் தனிப்பட்ட நிலச் சொந்தக்காரன் என்ற வெளிப்பூச்சுக்குள்ளே.’ (பிரான்சில் வர்க்கப் போராட்டம்.) ‘முதலாளித்துவ உற்பத்தி முறை அமையப் பெற்றுள்ள நாடுகளைக் காட்டிலும் சிறு விவசாயிகள் மேலோங்கியிருக்கின்ற நாடுகளில் தானியங்களின் விலையைக் குறைத்து வைத்திருக்கிற காரணங்களில் ஒன்று’ எது? (மூலதனம், தொகுதி 3, பக்கம் 340) அந்தக் காரணம், விவசாயி தனது உபரி விளைபொருளின் ஒரு பகுதியைச் சமுதாயத்துக்கு (அதாவது, முதலாளி வர்க்கத்துக்கு இலவசமாக ஒப்படைத்துவிடுகிறான் என்பதுதான். (தானியங்கள், இதர விவசாய விளைபொருட்கள் ஆகியவற்றின்) இந்தக் குறைந்த விலையானது உற்பத்தியாளர்களின் வறுமையின் ஒரு விளைவே தவிர நிச்சயமாக அவர்களுடைய உழைப்பின் உற்பத்தித் திறனின் விளைவு அல்ல.
(மூலதனம், தொகுதி 3, பக்கம் 340.) சிறு நில உடைமை முறை என்பது சிற்றளவான உற்பத்தியின் சகஜமான வடிவமாகும். முதலாளித்துவத்தின்கீழ் அது சீர்குலைந்து, சரிந்து, நாசமடைகிறது. ‘சிறு விவசாயிகளின் சொத்து அதன் இயல்பின் காரணமாகவே உழைப்பின் சமுதாய உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கும், உழைப்பின் சமுதாய வடிவங்களுக்கும், மூலதனங்கள் சமுதாய வழியில் குவிவதற்கும், பரந்த அளவிலே கால்நடைகளை வளர்ப்பதற்கும், விஞ்ஞானத்தை மேலும் மேலும் செயல்படுத்துவதற்கும் இடம் கொடுப்பதில்லை. கடும் வட்டி முறையும் வரி விதிப்பு முறையும் அதை எங்கும் ஏழ்மைக்குள்ளாக்கித் தீர வேண்டும். நிலத்தின் விலைக்காக மூலதனத்தைச் செலவழிப்பதானது அந்த மூலதனத்தைச் சாகுபடியில் ஈடுபடுத்தாமல் தடை செய்கிறது. அத்துடன் உற்பத்திச் சாதனங்கள் அளவின்றி சிதறடிக்கப்பட்டு வீணாக்கப்படுகின்றன, அந்த உற்பத்தியாளர்களே தனிமைப்படுகிறார்கள்.’ (கூட்டுறவுச் சங்கங்கள், அதாவது சிறு விவசாயிகளின் சங்கங்கள், மிகவும் முற்போக்கான முதலாளித்துவப் பாத்திரத்தை வகித்து வருகிற பொழுதே, இந்தப் போக்கை ஒழிக்காமல் பலவீனப்படுத்துகின்றன, அவ்வளவுதான். மேலும், இந்தக் கூட்டுறவுச் சங்கங்கள் நல்ல நிலைமையிலுள்ள விவசாயிகளுக்கு நிறைய உதவுகின்றன; ஆனால் திரள் திரளான ஏழை விவசாயிகளுக்கு மிகச் சொற்பமாகத்தான் உதவுகின்றன. அநேகமாக உதவுவதில்லை என்றே சொல்லிவிடலாம்; பிறகு இந்தச் சங்கங்களே கூலியுழைப்பைச் சுரண்டுபவையாகவும் ஆகிவிடுகின்றன என்பதை மறந்துவிடக் கூடாது.) ‘மேலும், மனித சக்தி பிரம்மாண்டமான அளவுக்கு வீணாக்கப்படுகிறது. உற்பத்தி நிலைமைகள் மேலும் மேலும் சீர்குலைவதும் உற்பத்திச்சாதனங்களின் விலை ஏற்றப்படுவதும் சிறு விவசாயிகளுடைய உடைமை உரிமையின் தவிர்க்க முடியாத விதியாகும்.’ தொழில் துறையில் செய்வது போலவே விவசாயத் துறையிலும் ‘உற்பத்தியாளனைப் பலியிட்டுத்தான்’ விலையாகப் பெற்றுத்தான் முதலாளித்துவம் உற்பத்தியின் இயக்கப்போக்கை மாற்றியமைக்கிறது. கிராமப்புறத்து உழைப்பாளிகள் அதிகப் பரவலான பிரதேசங்களுக்குச் சிதறடிக்கப்படுதல் இந்த உழைப்பாளிகளின் எதிர்ப்புச்சக்தியை உடைத்தெறிகிறது; ஆனால் நகரத் தொழிலாளர்களிடையே குவியும் தன்மையோ அவர்களுடைய எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகிறது. நகரத் தொழில்களைப் போலவே நவீனகால விவசாயத்திலும் ஈடுபடுத்தப்படுகிற உழைப்பின் அதிகரித்த உற்பத்தித்திறனும் அளவும் உழைப்புச் சக்தியை வீணடித்தும், நோய்நொடிகள் மூலமாக நாசப்படுத்தியும் உண்டாக்கப்படுகின்றன. மேலும், முதலாளித்துவ முறையிலான விவசாயத்தில் ஏற்படும் முன்னேற்றமெல்லாம் உழைப்பாளியைக் கொள்ளையடிக்கும் கலையில் மட்டுமல்ல, விளைநிலத்தைக் கொள்ளையடிக்கும் கலையிலும் ஏற்படுகிற முன்னேற்றமாகும். ஆகவே, எல்லாச் செல்வங்களுக்கும் அசல் ஊற்றுக் கண்ணாயுள்ள விளைநிலத்தையும் உழைப்பாளியையும் உறிஞ்சிவிடுவதின் மூலமாக மட்டுமே முதலாளித்துவ உற்பத்தியானது தொழில் நுட்பத்தை வளர்க்கவும், பல்வேறு இயக்கப் போக்குகளை ஒரு சமுதாய முழுமையில் இணைத்து வைக்கவும் செய்கிறது.’ (மூலதனம், தொகுதி 1, 13ம் அத்தியாயத்தின் இறுதி.)
சோஷலிசம்

மேலே சொன்னதிலிருந்து வெளிப்படையாவது இதுதான்: முற்றிலும் தனிமுழுமையாயும் இன்றைய சமுதாயத்தின் பொருளாதார இயக்க விதியிலிருந்தே மார்க்ஸ், முதலாளித்துவச் சமுதாயம் சோஷலிஸ்டு சமுதாயமாக மாற்றமடைவது தவிர்க்க முடியாததாகும் என்ற முடிவுக்கு வருகிறார். உழைப்பு சமுதாயமயமாக்கப்படுவது பல்லாயிரக்கணக்கான வடிவங்களிலே முன்னைவிட அதிக வேகத்துடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது; மேலும் மார்க்ஸ் மறைந்தபின் கழிந்துள்ள இந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் பெருவீத உற்பத்தியின் வளர்ச்சியிலும், முதலாளிகளின் கார்டெல்கள், ஸிண்டிகேட்டுகள், டிரஸ்டுகளின் வளர்ச்சியிலும், நிதி மூலதனத்தின் அளவுகளிலும் சக்தியிலும் ஏற்பட்டுள்ள பிரம்மாண்டமான அதிகரிப்பிலும் இது – அதாவது, உழைப்பு சமுதாயமயமாக்கப்படுவது வெகுதெளிவாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது, தவிர்க்க முடியாதபடி சோஷலிசம் வந்து சேருவதற்கு இதுதான் முதன்மையான பொருளாயத அடிப்படையாகும். இந்த மாற்றத்திற்கு அறிவுத் துறையிலும் ஒழுக்கநெறித் துறையிலும் விசைச்சக்தியாக விளங்குவதும், நேரடியாக இருந்து இம்மாற்றத்தை நிறைவேற்றும் செயலாளியாக விளங்குவதும், பாட்டாளி வர்க்கமே . இந்த வர்க்கத்துக்கு முதலாளித்துவமே பயிற்சியளிக்கிறது. முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கம் நடத்துகிற போராட்டம் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது; அந்த வடிவங்களின் உட்பொருள் வளமும் மேலும் மேலும் அதிகரிக்கிறது; தவிர்க்க முடியாத முறையிலே இந்தப் போராட்டம் அரசியல் ஆட்சியதிகாரத்தைப் பாட்டாளி வர்க்கம் கைப்பற்றுவதை (பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நோக்கமாகக் கொண்ட அரசியல் போராட்டமாகின்றது. உற்பத்தி சமுதாயமயமாக்கப்படுவதன் விளைவாக உற்பத்திச் சாதனங்கள் சமுதாயச் சொத்தாக மாற்றப்படுவது, ‘உடைமை பறித்தோரை உடைமை நீக்கம் செய்வது நிகழ்ந்தே தீரும். உழைப்பின் உற்பத்தித்திறனில் மகத்தான அதிகரிப்பு, வேலை நேரத்தைக் குறைப்பது, துவக்கக்கால, சிதறிய நிலையிலேயுள்ள, சிற்றளவான உற்பத்தி அழிந்ததிலே மிஞ்சிக்கிடக்கிற மிச்ச சொச்சங்களை நீக்கிவிட்டு கூட்டு முறையிலமைந்த, மேம்படுத்தப்பட்ட உழைப்பை நிலைநாட்டுவது- இவையெல்லாம் இந்த மாற்றத்தினால் நேரடியாக அடையும் விளைவுகளாகும். விவசாயத்துக்கும் தொழிலுக்குமிடையேயுள்ள ஒட்டுறவை முதலாளித்துவம் இறுதியாக வெட்டிவிடுகிறது. அதே சமயத்தில், முதலாளித்துவம் அதன் ஆக உயர்ந்த வளர்ச்சியால் இந்த ஒட்டுறவிற்குரிய புதிய அம்சங்களையும் தயாரிக்கிறது; உணர்வுபூர்வமான விஞ்ஞானத்தை நடைமுறையில் செயல்படுத்துவது, கூட்டு முறையில் உழைப்பை இணைப்பது, உலக மக்கள் தொகையை மறுவினியோகம் செய்வது (கிராமப் புறங்களில் ஒதுங்கிக்கிடக்கிற நிலைக்கும், தனிமைப்பட்டிருக்கிற நிலைக்கும்.
அநாகரிக நிலைக்கும், அதே சமயத்தில் பெரியபட்டணங்களில் பெருந்திரளான மக்கள் தொகை இயற்கைக்கு விரோதமாய்க் குவிந்து கிடக்கிற நிலைக்கும் இது ஒருங்கே முற்றுப்புள்ளி வைக்கும்) இவற்றின் அடிப்படையில் தொழிலுக்கும் விவசாயத்துக்குமிடையே இணைப்புக்குரிய புதிய அம்சங்களை அது தயாரிக்கிறது. புதிய வடிவத்தில் அமைந்த குடும்பம், பெண்களின் நிலையிலும் இளந்தலைமுறையைப் பராமரித்து வளர்ப்பதிலும் புதிய நிலைமைகள் இவற்றை இன்றைய முதலாளித்துவத்தின் உச்ச வடிவங்கள் தயாரித்துக் கொண்டிருக்கின்றன. பெண் மக்கள், மற்றும் குழந்தைகளின் உழைப்பு, தந்தை வழிக்குடும்பத்தை முதலாளித்துவம் உடைத்தெறிவது – இவையெல்லாம் நவீன சமுதாயத்தில் தவிர்க்க முடியாதபடி மிக பயங்கரமான, நாசகரமான, வெறுக்கத்தக்க வடிவங்களைப் பெறுகின்றன. இருந்த போதிலும், குடும்பத் துறைக்கு வெளியே, உற்பத்தி முறையில், பெண்களுக்கும், இளைஞர்களுக்கும், ஆண் குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் ஒரு முக்கியமான பாத்திரத்தைத் தருவதின் மூலமாக நவீன இயந்திரத் தொழில் முந்தியதைவிட உயர்வான குடும்ப வடிவத்துக்கு, பால் உறவு வடிவத்துக்குப் புதிய பொருளாதார அடித்தளத்தை உண்டாக்குகிறது. பண்டைக்கால ரோமானிய, பண்டைக்கால கிரேக்க, அல்லது கிழக்கத்தியக் குடும்ப வடிவங்களைப் பரமமானவை, இறுதியானவை என்று கொள்வது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தமாகும் டியூட் டானிக் – கிறித்தவக் குடும்ப வடிவத்தைப் பரமமானதென்றோ இறுதியானதென்றோ கருதுவது. தவிரவும், மேலே சொன்ன குடும்ப வடிவங்களையெல்லாம் மொத்தமாக எடுத்துக் கொண்டு பார்த்தால் அவையெல்லாம் வரலாற்று வளர்ச்சியில் ஒன்றின் பின் ஒன்றாய்த் தோன்றிய ஒரு வரிசையாக அமைகின்றன. மேலும். கூட்டாகச் சேர்ந்து வேலை செய்யும் குழுவானது இரு பாலாராலும் எல்லா வயதினராலும் ஆனதென்னும் உண்மை தக்க நிலைமைகளில் மனித தத்துவ வளர்ச்சிக்கு நிச்சயமாய் ஒரு தோற்றுவாயாகிவிடும் என்பது தெளிவு.
ஆனால் அதன் தன்னியல்பாய் வளர்ந்த கொடிய முதலாளித்துவ வடிவத்தில் – உற்பத்தி வேலை முறைக்குத் தொழிலாளி இருக்கிறானே தவிர தொழிலாளிக்காக உற்பத்தி வேலை முறையில்லை என்ற முதலாளித்துவ வடிவத்தில் – அது ஊழலுக்கும் அடிமைத்தனத்துக்கும் கேடு தருகிற அபாயகரமான தோற்றுவாயாகிவிடுகிறது.’ (மூலதனம், தொகுதி 1, 13ம் அத்தியாயத்தின் இறுதி.) ஆலை முறையில் நாம் பார்ப்பது எதிர்காலத்தியக் கல்வியின் கரு, குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டிருக்கிற ஒவ்வொரு குழந்தை விஷயத்திலும் அந்தக் கல்விபாட போதனை, உடற்பயிற்சி ஆகியவற்றோடு உற்பத்தியாற்றலுள்ள உழைப்பையும் இணைத்து வைக்கும் உற்பத்தியின் வினைத் திறமையைக் கூடுதலாக்கு வதற்குள்ள வழிகளில் அதுவும் ஒன்று என்பதற்காக மட்டுமல்ல, முழு வளர்ச்சி பெற்ற மனிதர்களை உண்டாக்குவதற்கும் அது ஒன்றுதான் வழி என்பதற்காக” (அதே நூல்). தேசிய இனம், அரசு என்ற பிரச்சனைகளையும் அதே வரலாற்று அடிப்படையில் தான் மார்க்சினது சோஷலிசம் வைக்கிறது சென்ற காலத்தை விளக்குவது என்ற அர்த்தத்தில் மட்டுமல்ல; எதிர்காலத்தை அச்சமின்றி முன்னறிந்து கூறி, அதனைச் சாதிப்பதற்குத் தைரியமான நடைமுறைப் பணி மேற்கொள்வது என்ற அர்த்தத்திலும், தேசங்கள் என்பவை சமுதாய வளர்ச்சியைச் சேர்ந்த முதலாளித்துவ சகாப்தத்தில் தவிர்க்க முடியாதபடி உண்டாகிற ஒரு விளைவு, ஒரு வடிவம் ஆகும். தொழிலாளி வர்க்கம், ‘தன்னையும் தேசத்துக்குள் ஒரு பகுதியாக்கிக் கொள்ளாமல்,’ தானும் ‘தேசியத் தன்மை’ பெறாமல் (இந்தச் சொல்லின் முதலாளித்துவ அர்த்தத்தில் அல்ல), அது பலம் பெற முடியவில்லை, பக்குவம் பெற முடியவில்லை, உருவாக முடியவில்லை. ஆனால் முதலாளித்துவத்தின் வளர்ச்சி மேலும் மேலும் தேசியத் தடைகளை உடைத்தெறிகிறது, தேசியத் தனி வாழ்வை அழிக்கிறது, தேசியப் பகைமைகளுக்குப் பதிலாக வர்க்கப் பகைமைகளை ஏற்படுத்துகிறது. ஆகவே, வளர்ச்சியுற்ற முதலாளித்துவ நாடுகளில், ‘தொழிலாளிகளுக்குத் தேசம் ஒன்றும் கிடையாது’ என்பது முழுக்க முழுக்க உண்மையாகும்; மேலும், குறைந்த பட்சம் நாகரிகமடைந்துள்ள நாடுகளிலாவது இருக்கும்படியான தொழிலாளிகளின் ‘ஒன்றுபட்ட போராட்டம்’. பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்குத் தேவையான முதல் நிபந்தனைகளில் ஒன்றாகும் (கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை) என்பதும் முழுக்க முழுக்க உண்மை. அரசு என்பது ஒழுங்கமைக்கப் பெற்ற பலாத்காரம் ஆகும். சமுதாய வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமரசப்படுத்த முடியாத வர்க்கங்களாகச் சமுதாயம் பிளவுண்ட போது, வெளிப் பார்வைக்குச் சமுதாயத்துக்கு மேலே நின்றுகொண்டும் ஓரளவுக்குச் சமுதாயத்திலிருந்து விலகியும் இருக்கிற அதிகாரம் இல்லாமல் சமுதாயம் வாழமுடியாத போது, அரசு தவிர்க்க முடியாதபடி தோன்றியது.
அரசு என்பது, வர்க்க முரண்பாடுகளுக்குள்ளிருந்தே உதித்து, மிகவும் வலிமை வாய்ந்த, பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகிற வர்க்கத்தின் அரசாக ஆகிறது; அந்த வர்க்கம், அரசின் மூலமாக, அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கமாக ஆகிறது; இந்த வழியிலே ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை ஒடுக்கி வைத்துச் சுரண்டிக் கொண்டிருப்பதற்கு அது புதிய சாதனங்களைப் பெறுகிறது. இப்படித்தான் பண்டைக் காலத்திய அரசு, எல்லாவற்றிற்கும் மேலாக, அடிமைகளை ஒடுக்கி வைத்திருப்பதற்கமைந்த அடிமையுடைமையாளரின் அரசாக இருந்தது; அதேபோலத்தான் நிலப்பிரபுத்துவ அரசு என்பதும் பண்ணையடிமைகளாகிய விவசாயிகளையும் கொத்தடிமைகளையும் ஒடுக்கி வைத்திருப்பதற்கமைந்த பிரபுவம்சத்தினரின் அரசாக இருந்தது; அதே போலத்தான், நவீனகாலப் பிரதிநிதித்துவ அரசும் கூலியுழைப்பை மூலதனம் சுரண்டுவதற்கமைந்த கருவியாகும். (எங்கெல்ஸ் எழுதிய குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலைப் பார்க்க. இந்த நூலில் எங்கெல்ஸ், தம்முடைய கருத்துகளையும் மார்க்சின் கருத்துக்களையும் விளக்குகிறார்.) முதலாளித்துவ அரசின் மிகமிகச் சுதந்திரமான, மிகமிக முற்போக்கான வடிவம் என்றுள்ள ஜனநாயகக்குடியரசுகூட இந்த உண்மையை எந்த விதத்திலும் அழிக்கவில்லை, ஆனால் வெறுமனே அதன் வடிவத்தை மாற்றுகிறது (அரசாங்கத்துக்கும் பங்கு மார்க்கெட்டுக்கும் உள்ள தொடர்பு; அரசாங்க அலுவலர்களிடையேயும் பத்திரிகைக்காரர்களிடையேயும் – நேர் முகமாகவும் மறைமுகமாகவும் இருக்கிற ஊழல் முதலியன). வர்க்கங்களை ஒழிப்பதில் கொண்டு போய் விடுவதின் மூலமாக சோஷலிசம் அரசை ஒழிப்பதிலும் கொண்டு போய்விடும். ‘டூரிங்குக்கு மறுப்பு’ என்ற நூலில், ‘எந்த முதல் செய்கையிலே அரசானது உண்மையிலே சமுதாயம் முழுவதின் பிரதிநிதியாகத் தன்னைத்தானே அமைத்துக் கொள்கிறதோ – அதாவது, சமுதாயத்தின் சார்பில் உற்பத்திச் சாதனங்களைப் பறிமுதல் செய்கிறதோ அதே முதல் செய்கைதான் அரசு என்ற முறையில் அது சுதந்திரமாகச் செய்யும் கடைசிச் செய் கையுமாகும், ஒரு துறைக்குப் பின் ஒரு துறையாக, சமுதாய உறவுகளில் அரசாட்சி தலையிடுவது அனாவசியம் என்று ஆகிக் கொண்டு வந்து, பிறகு அது தானாகவே அற்றுப் போகிறது. மனிதர்களை ஆளுவது என்பது போய் அதன் இடத்தில் விவகாரங்களை நிர்வகிப்பது, உற்பத்தி இயக்கப் போக்குகளை நடத்துவது என்பது ஏற்படுகிறது. அரசு ஒழிக்கப்படுவதில்லை, அது தானாகவே உலர்ந்து உதிர்ந்து போகிறது. ‘உற்பத்தியாளர்களின் சுதந்திரமான, சமமான சங்கம் என்ற அடிப்படையில் உற்பத்தியை ஒழுங்கமைத்திடும் சமுதாயம் அரசு இயந்திரம் முழுவதையும் அப்போது அது இருக்க வேண்டிய இடத்தில், அதாவது பண்டைக் காலப் பொருட்களை வைத்திருக்கும் காட்சி சாலையில், கைராட்டை, வெண்கலக் கோடரி ஆகியவற்றின் பக்கத்தில் கொண்டு போய் வைத்துவிடும்.’
(எங்கெல்ஸ் எழுதிய குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்) கடைசியாக உடைமை பறித்தோரை உடைமை நீக்கம் செய்கிற காலப் பகுதியில் தொடர்ந்து இருந்து வரப்போகிற சிறு விவசாயிகளின் பால் மார்க்சினது சோஷலிசம் காட்டும் அணுகு முறை சம்பந்தப்பட்ட வரையில் மார்க்சின் கருத்துக்களை வெளியிடும்படியான எங்கெல்சின் ஒரு பிரகடனத்தை நாம் குறிப்பிட வேண்டும். அரசதிகாரம் எங்கள் கையில் இருக்கும் காலத்தில் நாங்கள் சிறு விவசாயிகளின் சொத்தைப் பலவந்தமாகப் பறிமுதல் செய்வதைப் பற்றிச் (நஷ்ட ஈடு கொடுத்துச் செய்வதா, கொடாமலே செய்வதா என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை) சிந்திக்கவும் மாட்டோம்; பெரிய நிலச்சுவான்தார்களின் விஷயத்தில் தான் நாங்கள் அப்படிச் செய்து தீர வேண்டும். சிறு விவசாயி சம்பந்தமாக நமது பணி என்னவென்றல், முதலில், அவனது தனியாள் உற்பத்தியையும் தனியுடைமையையும் கூட்டுறவு உற்பத்தியாகவும் கூட்டுறவு உடைமையாகவும் மாற்றுவது தான்; இதைப் பலாத்காரமாகச் செய்யாமல், உதாரணத்தைக் கொண்டும், இந்த நோக்கத்துக்காகச் சமுதாய உதவியைத் தந்தும் செய்து வைப்போம். அதன்பிறகு சிறு விவசாயிக்கு இன்றைக்குக்கூட வெளிப்படையாகத் தெரிந்திருக்க வேண்டிய எதிர்கால அனுகூலங்களைக் காட்டு வதற்கு நிச்சயமாக நம்மிடம் நிறைய வழிவகைகள் இருக்கத்தான் போகின்றன.” (பிரான்சிலும் ஜெர்மனியிலும் விவசாயப் பிரச்சனை என்ற எங்கெல்சின் நூல், பக்கம் 17, அலெக்சேயெவா பதிப்பு , ருஷ்ய மொழிபெயர்ப்பில் பிழைகள் உள்ளன. அசல் பிரதி Neue Zeit (புதிய காலம்’) என்ற பத்திரிகையில் உள்ளது.)
பாட்டாளிகளது வர்க்கப்
போராட்டத்தின் போர்த்தந்திரங்கள்

நடைமுறைப் புரட்சிச் செயல்பாட்டின் சூழ்நிலைமைகளைப் புரிந்து கொள்ளவோ, அதன் முக்கியத்துவத்தை மதிப்பிடவோ முந்தையப் பொருள்முதல்வாதம் திறனற்றிருந்தது; அதன் பிரதான குறைபாடுகளில் இதுவும் ஒன்றாகும். இந்தக் குறைபாட்டை மார்க்ஸ் 1844-45ம் ஆண்டுகளிலே ஆராய்ந்து விளக்கிவிட்டார். ஆகவே அவர் தத்துவ சம்பந்தமான தமது வேலையோடு கூடவே, பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் பற்றிய போர்த்தந்திரப் பிரச்சனைகளிலே தமது வாழ்க்கை நெடுகிலும் அயராத கவனம் செலுத்தி வந்தார். மார்க்சின் எல்லா நூல்களிலும், குறிப்பாக 1913ம் ஆண்டில் வெளியிடப்பட்ட மார்க்ஸ், எங்கெல்ஸ் கடிதப் போக்குவரத்தின் நான்கு தொகுதிகளிலும், இது பற்றி ஏராளமான விஷயாதாரங்கள் உள்ளன. இவ்விஷயாதாரங்களைத் திரட்டுவதும், தொகுப்பதும், ஆராய்வதும், பரிசீலிப்பதும் போதிய அளவில் செய்யப்படாமலே இருந்து வருகிறது. ஆகவே, இங்கே நாம் சில மிகமிகப் பொதுவான, மிகமிகச் சுருக்கமான குறிப்புகளைச் சொல்வதோடு நிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கும், இந்த அம்சத்தைத் தன்னகத்தே கொண்டிராத பொருள்முதல்வாதம் உறுதியற்றதாய், ஒருதலைப்பட்சமானதாய், உயிரற்றதாய் இருக்கும் என்று மார்க்ஸ் முழு நியாயத்தோடு கருதினார் என்பதை வலியுறுத்துகிறோம். மார்க்ஸ் தமது பொருள்முதல்வாத இயக்க இயல் உலகக் கண்ணோட்டத்தின் எல்லா ஆதாரக் கூறுகளோடும் கறாராகப் பொருந்தும் படியாகத்தான் பாட்டாளி வர்க்கப் போர்த்தந்திரங்களின் பிரதான கடமையை வரையறுத்தார். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் எல்லா வர்க்கங்களையும் விதிவிலக்கின்றி எடுத்துக் கொண்டு அவ்வர்க்கங்களிடையேயுள்ள பரஸ்பர உறவுகளின் கூட்டு மொத்தத்தை புறநிலை ரீதியிலே கருத்தில் கொள்வது – அதன் விளைவாக அந்தச் சமுதாயத்தின் யதார்த்த வளர்ச்சிக் கட்டத்தையும் அந்தச் சமுதாயத்துக்கும் இதர சமுதாயங்களுக்கும் இடையேயுள்ள பரஸ்பர உறவுகளையும் கருத்தில் கொள்வது இது ஒன்றுதான் முன்னணி வர்க்கத்தின் சரியான போர்த்தந்திரங்களுக்கு அடிப்படையாக இருக்க முடியும். அதே சமயத்தில், எல்லா வர்க்கங்களையும், எல்லா நாடுகளையும் நிலையமைதியில் பார்க்காமல் இயக்க நிலையில் பார்க்கிறோம்; அதாவது, அவற்றை அசையாத நிலையிலே பார்க்காமல் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையிலே பார்க்கிறோம் (இந்த இயக்கத்தின் விதிகளை நிர்ணயிப்பவை ஒவ்வொரு வர்க்கத்தின் பொருளாதார வாழ்வு நிலைமைகள்தான்).
பிறகு, இயக்கத்தைப் பார்க்கும் போதும் சென்ற காலத்தைப் பற்றிய பார்வையுடன் மட்டும் அதைப் பார்க்காமல் எதிர்காலத்தைப் பற்றிய பார்வையுடனும் இயக்கத்தைப் பார்க்கிறோம். அதே சமயத்தில், அப்படிப் பார்க்கையில், மெதுவாக நடைபெறுகிற மாறுதல்களை மட்டும் பார்க்கிற பரிணாமவாதிகளின்’ விஞ்ஞானக் கேடான கருத்தோட்டத்துக்கு இணங்க நாம் இயக்கத்தைப் பார்ப்பதில்லை; அதற்குப் பதிலாக, இயக்க இயல் வகையில் அதை நாம் பார்க்கிறோம்: “இத்தகைய பிரம்மாண்டமான வளர்ச்சிகளின் நிலையில் இருபது ஆண்டுகள் ஒரு நாளுக்குக் கூட ஈடாகா. இருந்தாலும், பின்னால் இருபது ஆண்டுகளைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள நாட்களும் வரக்கூடும் என்று மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதினார். (கடிதப் போக்குவரத்து, தொகுதி 3, பக்கம் 127.) வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு கணத்திலும் பாட்டாளி வர்க்கப் போர்த்தந்திரங்கள் புறநிலை ரீதியிலே, தவிர்க்க முடியாததாயுள்ள மனித வரலாற்றின் இயக்க இயலைக் கணக்கில் எடுத்துக்கொண்டாக வேண்டும் : ஒருபுறம், அரசியல் தேக்கம் உள்ள அல்லது மந்தமான, “அமைதியானதாகச்” சொல்லப்படும் வளர்ச்சி நிலவும் காலப் பகுதிகளை, முன்னணி வர்க்கத்தின் உணர்வையும் பலத்தையும் போர்த்திறனையும் வளர்ப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்; மற்றொரு புறம், இப்படிப் பயன்படுத்திக் கொள்ளும் வேலை அனைத்தையும் இந்த வர்க்கத்தினுடைய இயக்கத்தின் இறுதி இலட்சியத்தை அடைவதற்காக, இருபது ஆண்டுகளைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள மகத்தான நாட்களில், மகத்தான பணிகளை நடைமுறையில் நிறைவேற்றி வைப்பதற்குரிய திறனை அந்த வர்க்கத்தினிடையே உண்டாக்கி வைப்பதற்காக நடத்திக் கொண்டு போக வேண்டும். இந்தப் பிரச்சனை சம்பந்தமாக மார்க்சின் இரண்டு வாதங்கள் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தவை: அவற்றில் ஒன்று ‘மெய்யறிவின் வறுமை’ என்ற நூலிலே உள்ளது; அது பாட்டாளி வர்க்கத்தின் பொருளாதாரப் போராட்டம், பொருளாதார நிறுவனங்கள் சம்பந்தமானது; மற்றொரு வாதம் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் இருக்கிறது; இது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் பணிகள் சம்பந்தமானது. முதல் வாதம் பின்வருமாறு: ‘பெருவீத உற்பத்தி, ஒருவரை ஒருவர் அறிந்திராத மக்களைத் திரளாக ஓர் இடத்தில் குவிக்கிறது. போட்டி அவர்களின் நலன்களைப் பிரிக்கிறது. ஆனால், தங்கள் முதலாளிக்கு எதிராக அவர்களுக்கு இருக்கும் பொது நலனான கூலியைக் காப்பாற்றிக் கொள்வது என்பது, அவர்களை எதிர்ப்பு என்ற பொதுச் சிந்தனையிலே – இணைப்பிலே – ஒன்றுபடுத்துகிறது. முதலில் தனித்தனியாக இருந்து வந்த இணைப்புகள் குழுக்களாக அவர்களை அமைக்கின்றன.
எப்பொழுதுமே ஒன்றுபட்டு நிற்கிற மூலதனத்தின் எதிரே அவர்களுக்கு (அதாவது, தொழிலாளிகளுக்கு இந்த இணைப்பை நிலை நிறுத்துவது கூலியை நிலை நிறுத்துவதைவிட அதிக அவசியமாகிவிடுகிறது. இந்தப் போராட்டத்தில் – இது உண்மையிலே ஓர் உள்நாட்டுப் போர்தான் – வரப்போகும் போருக்குத் தேவையான எல்லா அம்சங்களும் ஒற்றுமைப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தக் கட்டத்தை எட்டிய மாத்திரத்தில் கூட்டணியானது அரசியல் தன்மை பெற்று விடுகிறது. இங்கேதான் பொருளாதாரப் போராட்டத் துக்கும், தொழிற்சங்க இயக்கத்துக்கும் வரப்போகும் சில பத்தாண்டுகளுக்கு வேண்டிய வேலைத்திட்டமும் போர்த்தந்திரங்களும் நமக்குக் கிடைக்கின்றன. பாட்டாளி வர்க்கம் வரப்போகும் போருக்குத் தனது சக்திகளைத் திரட்டிக் கொள்கிற நீண்ட காலப்பகுதி முழுவதற்கும் இவை போதும். இதன் பக்கத்திலேயே மார்க்கம் எங்கெல்சும் பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்தின் உதாரணத்தைப் பற்றித் தந்துள்ள பல மேற்கோள் குறிப்புகளை வைத்தாக வேண்டும். தொழில் துறையிலுள்ள செழுமை எப்படி தொழிலாளர்களை விலைக்கு வாங்குவதற்கான’ முயற்சிகளிலும் (கடிதப் போக்குவரத்து, தொகுதி 1, பக்கம் 136), அவர்களைப் போராட்டத்திலிருந்து திருப்புவதற்கான முயற்சிகளிலும் கொண்டு போய்விடுகிறது; எப்படி இந்தச் செழுமை பொதுவாகவே ‘தொழிலாளர்களை உறுதி குலையச் செய்கிறது’ (தொகுதி 2, பக்கம் 218); எப்படி பிரிட்டிஷ் பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ மனோபாவமுள்ளதாக ஆகிவிடுகிறது. – மற்றெல்லாவற்றையும் விட மிகமிக முதலாளித்துவத் தன்மை உள்ள இந்த தேசம் (இங்கிலாந்து) இறுதியிலே முதலாளி வர்க்கத்தோடு முதலாளித்துவப் போக்குள்ள பிரபுவம்சத்தையும் முதலாளித்துவப் போக்குள்ள பாட்டாளி வர்க்கத்தையும் அமைத்துக் கொள்வதிலே குறியாயிருக்கிறது போல் தோன்றுகிறது (தொகுதி 2, பக்கம் 290); எப்படி அந்த வர்க்கத்தின் ‘புரட்சிகரமான ஊக்கம்’ ஒழுகியோடிவிடுகிறது (தொகுதி 3, பக்கம் I24); எப்படி பிரிட்டிஷ் தொழிலாளர்கள் வெளித்தோற்றத்தில் தெரிகிற, தங்களைப் பீடிக்கும் முதலாளித்துவத் தொத்து வியாதியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதற்கு முன்பாக ஏறத்தாழ நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கும் (தொகுதி 3, பக்கம் 127); எப்படி பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்திடம் ‘சார்ட்டிஸ்டுகளின்’ வீரியம் இல்லை’ (1866; தொகுதி 3, பக்கம் 305); எப்படி பிரிட்டிஷ் தொழிலாளர்களின் தலைவர்கள் ‘தீவிர முதலாளி வர்க்கத்தாருக்கும் தொழிலாளிக்கும்’ இடைநிலையிலேயுள்ள ரகமாக ஆகி வருகிறார்கள் (இது ஹோலியோக் என்பவரைக் குறித்துச் சொன்னது; தொகுதி 4 பக்கம் 2000); பிரிட்டிஷ் ஏகபோகத்தின் காரணமாக, இந்த ஏகபோகம் இருக்கிற வரைக்கும், எப்படி ‘பிரிட்டிஷ் தொழிலாளி அசைந்து கொடுக்கமாட்டான்’ (தொகுதி 4, பக்கம் 433); என்றெல்லாம் அந்த மேற்கோள்கள் குறிக்கின்றன. தொழிலாளர் இயக்கத்தின் பொதுவான போக்கு (அதன் விளைவும் கூட) சம்பந்தமாக, பொருளாதாரப் போராட்டத்தின் போர்த்தந்திரங்கள் இங்கே மிகமிக விரிவான, முழுமையான, இயக்கவியல் முறையான, உண்மையாகவே புரட்சிகரமான நோக்கு நிலையிலிருந்து கருதிப் பார்க்கப்பட்டுள்ளது.
அரசியல் போராட்டத்தின் போர்த்தந்திரங்கள் சம்பந்தமான அடிப்படை மார்க்சியக் கோட்பாட்டைக் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை வெளியிட்டது: “உடனடியான இலட்சியங்களைச் சாதிப்பதற்காக, தொழிலாளி வர்க்கத்தின் தற்காலிக நலன்களை நிறைவேற்றுவதற்காகக் கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்கள்; ஆனாலும்கூட, நிகழ்கால இயக்கத்திலேயே அவர்கள் அந்த இயக்கத்தின் எதிர்காலத்தையும் பிரதிநிதித்துவப் படுத்திக் கவனித்துக் கொள்கிறார்கள். அதனால் தான் 1848-ம் ஆண்டில் போலந்தில் விவசாயப் புரட்சிக் கட்சியை, 1846ல் நடந்த கிராக்கள் எழுச்சியைத் தூண்டிய அந்தக் கட்சியை, மார்க்ஸ் ஆதரித்தார். 1848லும், 1840லும் ஜெர்மனியில் அதிதீவிரமான புரட்சிகர ஜனநாயகத்தை மார்க்ஸ் ஆதரித்தார்; அப்போது போர்த்தந்திரங்களைக் குறித்துத் தாம் சொன்னதைப் பின்னால் அவர் என்றைக்கும் மறுத்துத் திரும்பப் பெறவேயில்லை. ஜெர்மானிய முதலாளி வர்க்கத்தை ஆரம்பத்திலிருந்தே மக்களுக்குத் துரோகம் செய்யும் எண்ணங் கொண்டிருந்ததும்” (விவசாயி மக்களுடன் ஒன்றாக இணைந்திருந்தால் தான் முதலாளி வர்க்கம் தனது பணிகளை முழுமையாகச் சாதித்துக் கொள்ள முடிந்திருக்கும்) ‘பழைய சமுதாயத்தின் முடிசூடிய பிரதிநிதிகளுடன் சமரசம் செய்து கொள்ளும் எண்ணங்கொண்டிருந்ததுமான ஓர் அம்சமாகத்தான் மார்க்ஸ் கருதினார்.’ முதலாளித்துவ – ஜனநாயகப் புரட்சி சகாப்தத்தில் ஜெர்மன் முதலாளி வர்க்கம் வகித்த வர்க்க நிலை பற்றிய மார்க்சின் பகுப்பாராய்ச்சியின் சுருக்கத்தை இங்கே தருகிறோம்; இடையே ஒன்றைச் சொல்லலாம்; சமுதாயத்தை இயக்க நிலையிலே பரிசீலிக்கும் – அது மாத்திரமல்ல, பின்னோக்கிச் செல்லும் இயக்கத்தின் பக்கத்திலிருந்து மட்டுமின்றி பரிசீலிக்கும் – பொருள்முதல்வாதத்திற்கு இந்தப் பகுப்பாராய்ச்சி ஓர் எடுத்துக்காட்டு ஆகும். ‘தன்னிடத்திலும் நம்பிக்கை கிடையாது, மக்களிடத்திலும் நம்பிக்கை கிடையாது, மேல் நிலையிலுள்ளோரைக் கண்டு முணுமுணுப்பது, கீழ் நிலையிலுள்ளோரைக் கண்டு நடு நடுங்குவது; . . உலகப் புயலைக் கண்டு பயப்படுவது;. எந்தவிதத்திலும் ஊக்கம் கிடையாது, எல்லா விதங்களிலும் சிந்தனைத் திருட்டு; – முன்முயற்சியே கிடையாது; திடகாத்திரமான மக்களின் வாலிய இதயத்தின் துடிப்புகளைத் தனது சொந்தக் கிழட்டு நலன்களுக்காக வழிகாட்டித் தடம் புரளச் செய்யும் வேலை தனக்கு விதித்திருப்பதாகப் பாவித்துக் கொள்ளும் சாபத்தீடான கிழட்டுக் கட்டை . (De Neue Rheinische Zeitung, 1848: Literarischen Nachlass, தொகுதி 3, பக்கம் 212ஐப் பார்க்க.) இருபது ஆண்டுகளுக்குப் பின்னால் எங்கெல்சுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் தொகுதி3, பக்கம் 224) 1848ம் ஆண்டுப் புரட்சி தோல்வியுற்றதற்குக் காரணம், சுதந்திரத்துக்காகப் போராடுவதை விட அடிமைத்தனத்தோடு கூடிய சமாதானமே மேலென முதலாளி வர்க்கம் கருதியதுதான் என்று மார்க்ஸ் பிரகடனப்படுத்தினார்.

1848-49ம் ஆண்டுகளின் புரட்சி சகாப்தம் முடிவுற்றபோது புரட்சி செய்வது போலப் போக்குக் காட்டும் ஒவ்வொரு முயற்சியையும் மார்க்ஸ் எதிர்த்தார் ஷாப்பர், வில்லிஹ் என்பவர்களை எதிர்த்து மார்க்ஸ் செய்த போராட்டம்); மேலும், வெளிப்பார்வைக்கு அமைதியானதாகத் தோன்றும் வழியில் புதிய புரட்சிகளுக்குத் தயார் செய்ய வேண்டிய இந்தப் புதிய கட்டத்தில் வேலை செய்யத் திறமை பெற்றிருக்க வேண்டும் என்று மார்க்ஸ் வற்புறுத்தி வந்தார். இந்த வேலையை எந்த முறையிலே நடத்திக் கொண்டுபோக வேண்டுமென்று மார்க்ஸ் விரும்பினார் என்பதைப் பிற்போக்கின் இருள் மண்டிய காலமான 1856-ல் ஜெர்மனியிலிருந்த நிலைமையைப் பற்றி அவர் தந்த மதிப்பீடு காட்டுகிறது: “ஜெர்மனியின் நிலைமையெல்லாம் விவசாயப் போர் இரண்டாம் தடவையாக ஏற்பட்டுப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குப் பின்பலம் அளிக்க வாய்ப்பு ஏற்படுமா என்பதைத்தான் பொறுத்திருக்கிறது.” (கடிதப் போக்குவரத்து, தொகுதி 2, பக்கம் 108.) ஜெர்மனியில் ஜனநாயகப் (முதலாளித்துவ) புரட்சி முடிவு பெறாத வரையில், விவசாயிகளின் ஜனநாயக ஆற்றலை வளர்ப்பதற்கான போர்த்தந்திரங்களில் சோஷலிசப் பாட்டாளி வர்க்கத்தின் கவனத்தை ஒன்று குவியச் செய்து வந்தார். லஸ்ஸாலினுடைய கண்ணோட்டம் ‘யதார்த்தத்திலே தொழிலாளர் இயக்கம் முழுவதையும் பிரஷ்யாவுக்குக் காட்டிக் கொடுப்பதுதான்’ என்று மார்க்ஸ் கருதினார். (தொகுதி 3, பக்கம் 210), பிரஷ்யப் பெரு நிலப்பிரபுக்களுக்கும் தேசியவாதத்துக்கும் லஸ்ஸால் உடந்தையாக இருந்ததே இதற்குக் காரணம். பத்திரிகைகளுக்கு விடுவதற்கான ஒரு கூட்டறிக்கை விஷயமாக மார்க்சோடு கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் போது எங்கெல்ஸ் பின்வருமாறு எழுதினார். ‘’விவசாயமே மிகப் பெரும்பாலும் உள்ள ஒரு நாட்டில், மாபெரும் நிலப்பிரபுத்துவ வம்சத்தோரின் சாட்டையின் கீழ் கிராமப்புறப் பாட்டாளி வர்க்கம் தந்தை வழி முறையிலே சுரண்டப்படுவதைப் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் இயந்திரத் தொழிலில் வேலை செய்யும் பாட்டாளி வர்க்கத்தின் பேரால் முதலாளி வர்க்கத்தை மட்டும் தாக்கி வருவது நீசத்தனமாகும்.” (தொகுதி 3, பக்கம் 217.) ஜெர்மனியில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நிறைவுப்படுத்தும் சகாப்தம் முடிவுக்கு வந்து கொண்டிருந்த காலத்தில், இந்தப் புரட்சியை மேலே இருந்து ஏதாவதொரு வழியில் நிறைவுபடுத்துவதற்குப் பிரஷ்யாவையும் ஆஸ்திரியாவையும் சேர்ந்த சுரண்டும் வர்க்கங்கள் போராடிக் கொண்டிருந்த சகாப்தம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கையில், அதாவது 1864-ம் ஆண்டிலிருந்து 1870 ம் ஆண்டு வரை, பிஸ்மார்க்குடன் குலாவிக் கொண்டிருந்த லஸ்ஸாலை மார்க்ஸ் கண்டித்ததோடு மட்டுமல்லாமல், ஆஸ்திரிய பக்திவாதத்தின்’ பக்கமாகவும் தனித்தன்மைவாதத்தை ஆதரிப்பதின் பக்கமாகவும் சாய்ந்து கொண்டிருந்த லீப்க்னெஹ்டையும் கண்டித்துத் திருத்தினார். பிஸ்மார்க்கையும் ஆஸ்திரிய பக்திவாதிகளையும் எதிர்த்து ஒரே மாதிரியாக ஈவிரக்கமின்றிப் போர் புரிவதற்குரிய புரட்சிகரமான போர்த்தந்திரத்தை மார்க்ஸ் கோரினார்; வெற்றி வீரனான பிரஷ்ய ஜங்கருக்கு வேண்டிய மாதிரி அமைந்திராமல், அதற்குப் பதிலாகப் பிரஷ்ய ராணுவ வெற்றிகள் உண்டாக்கித் தந்த அடிப்படையிலே அவரை எதிர்த்து உடனடியாகப் புரட்சிப் போராட்டத்தை மீண்டும் நடத்துவதற்கேற்ற போர்த்தந்திரத்தையே மார்க்ஸ் கோரினார். (கடிதப் போக்குவரத்து, தொகுதி 3 பக்கங்கள் 134,136, 147,179, 204, 210, 215, 418, 437, 440-441.) அகிலத்தின் 1870 செப்டம்பர் 9ம் தேதிய பெயர்பெற்ற அறிக்கையில், காலப் பொருத்தமற்ற எழுச்சியைச் செய்யக் கூடாது என்று பிரெஞ்சுப் பாட்டாளி வர்க்கத்தை மார்க்ஸ் எச்சரித்தார்; ஆனால், அவர் சொல்லியிருந்த போதிலும் 1871ல் எழுச்சி நடைபெற்றபோது ‘விண்ணைச் சாடுகின்ற’ மக்களின் புரட்சிகரமான முன்முயற்சியை மார்க்ஸ் உற்சாகத்தோடு கொண்டாடி வரவேற்றார். (கூகல் மனுக்கு மார்க்ஸ் எழுதிய கடிதம்.)
இந்த நிலைமையிலும் சரி, இதர பல நிலைமைகளிலும் சரி, மார்க்சினது இயக்கவியல் வகைப்பட்ட பொருள்முதல்வாதத்தின் நிலையில் நின்று பார்க்கும் போது, ஏற்கெனவே கைப்பற்றியிருந்த நிலையைக் கைவிடுவதை விட, போராடாமலே சரணாகதி அடைவதை விட, புரட்சிகரமான போராட்டம் தோல்வியடைவதானது பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் பொதுவான போக்குக்கும் இறுதி விளைவுக்கும் குறைந்த தீங்கேயாகும். அப்படிப்பட்ட சரணாகதி பாட்டாளி வர்க்கத்தின் உறுதியைக் குலைத்திருக்கும், அதன் போர்த்திறனைப் பலவீனப்படுத்தியிருக்கும். அரசியல் தேக்கம் நிலவி முதலாளித்துவச் சட்டக் கட்டுப்பாடு மேலோங்கியிருக்கும்படியான காலப் பகுதிகளில் சட்டபூர்வமான போராட்ட வழிவகைகளைப் பயன்படுத்துவதை மார்க்ஸ் பூர்ணமாக உணர்ந்து கொண்டு, தனிப்பட்ட சோஷலிஸ்டு – எதிர்ப்புச் சட்டம் அமுலுக்கு வந்த பிறகு, 1877-1878 ஆண்டுகளில் மோஸ்த் என்பவருடைய ‘புரட்சிகரமான சொல்லடுக்குகளைத் தீவிரமாகக் கண்டித்தார்; ஆனால் அதை விடத் தீவிரமாயில்லாவிட்டாலும் அதற்கு எந்த விதத்திலும் குறைச்சலில்லாத தீவிரத்துடன் அதிகாரபூர்வமான சமூக-ஜனநாயகக் கட்சியில் தற்காலிகமாக ஆதிக்கம் பெற்றிருந்த சந்தர்ப்பவாதத்தையும் மார்க்ஸ் கண்டித்தார்; ஏனெனில் சோஷலிஸ்டு-எதிர்ப்புச் சட்டத்துக்குப் பதிலளிக்கும் முறையில், அந்தக் கட்சி உடனே மனோதிடத்தையும், உறுதியையும், புரட்சிகரமான உணர்ச்சியையும், சட்டவிரோதமான போராட்டத்தில் இறங்குவதற்குத் தயாராயிருக்கும் போக்கையும் வெளிப்படுத்தவில்லை . (கடிதப் போக்குவரத்து, தொகுதி 4, பக்கங்கள் 397,404, 418, 422, 424 ஸோர்கே என்பவருக்கு எழுதிய கடிதங்களையும் பார்க்க.)
- ஜூலை – நவம்பரில் எழுதப் பெற்றது. நூல் திரட்டு, தொகுதி 26, 1915-ல் சுருக்கமான வடிவில் கிரளுட் என்ஸைக்லோ (பக்கங்கள் 43-81) பீடியாவில் ஏழாம் பதிப்பு, தொகுதி 28-ல் வி. இலியீன் என்ற கைச்சாத்துடன் முதலில் பிரசுரிக்கப்பட்டது. முகவுரை 1918-ல் தி. லெனின் எழுதிய கார்ல் மார்க்ஸ்’ பிரிபோய் பிரசுரம், மாஸ்கோ என்ற சிறுவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.
பிரெடெரிக் எங்கெல்ஸ்
![Free download Marx Lenin Engels by systemdestroyer [1024x768] for ...](https://cdn.wallpapersafari.com/59/21/lASiKp.jpg)
‘எத்தகைய அறிவுச் சுடர் விளக்கவிந்தது; எத்தகைய அன்பு மலர் நெஞ்சு நின்றது’
1895ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரெடெரிக் எங்கெல்ஸ் லண்டன் மாநகரில் காலமானார். (1883ம் ஆண்டில் மறைந்த) அவருடைய நண்பர் கார்ல் மார்க்சுக்கு அடுத்தபடி நாகரிக உலகெங்கும் நவீன காலப் பாட்டாளி வர்க்கத்தின் தலைசிறந்த அறிஞராகவும் ஆசானாகவும் விளங்கியவர் எங்கெல்ஸ் ஆவார். கார்ல் மார்க்சையும் பிரெடெரிக் எங்கெல்சையும் விதி ஒன்று சேர்த்து வைத்த காலத்திலிருந்து அவ்விரு நண்பர்களும் தமது வாழ்வை இருவருக்கும் பொதுவான இலட்சியத்துக்கு அர்ப்பணித்துக் கொண்டனர். ஆகவே, பாட்டாளி வர்க்கத்திற்கு பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆற்றிய பணியைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் தற்காலத்தியத் தொழிலாளர் இயக்கத்தின் வளர்ச்சியில் மார்க்சின் போதனையும் பணியும் வகிக்கும் முக்கியத்துவத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். தொழிலாளி வர்க்கமும் அதன் கோரிக்கைகளும் இன்றையப் பொருளாதார அமைப்பு முறையிலிருந்து விளைந்த அவசியமான விளைவே என்றும், இந்தப் பொருளாதார அமைப்பு முறையும் முதலாளித்துவ வர்க்கமும் சேர்ந்து தவிர்க்கமுடியாத வகையிலே பாட்டாளி வர்க்கத்தை உண்டாக்கி, அதனை ஒழுங்கமைத்து அணி திரட்டுகின்றன என்றும் முதன் முதலாக எடுத்துக்காட்டியவர்கள் மார்க்ஸ் – எங்கெல்ஸ் இருவருமே. இன்று மனித குலத்தை ஒடுக்கி வதைத்து வரும் தீமைகளிலிருந்து அதை விடுவிக்கவல்லது ஒழுங்கமைத்துக் கொண்டு அணிதிரண்டு நிற்கும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமே தவிர உயர்ந்த சிந்தனை படைத்த தனிநபர்கள் சிலரின் நல்லெண்ண மிக்க முயற்சிகள் அல்ல என்று அவ்விருவரும் எடுத்துக் காட்டினார்கள். ‘சோஷலிசம் என்பது ஏதோ கனவு காண்பவர்களுடைய கற்பனைப் பொருள் அல்ல; நவீன சமுதாயத்தில் உற்பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியின் கடைசிக் குறிக்கோளும், தவிர்க்க முடியாத விளைவும் ஆகும் அது’ என்று தங்கள் விஞ்ஞான நூல்களிலே மார்க்சும் எங்கெல்சும் முதன் முதலாக விளக்கினர்.
இது வரை ஏட்டிலேறியுள்ள வரலாறெல்லாம் வர்க்கப் போராட்டத்தின் வரலாறு தான். ஒன்றன் பின்னொன்றாய்த் தொடர்ந்து சில சமுதாய வர்க்கங்கள் மற்ற வர்க்கங்களின் மீது வெற்றி கொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளதின் வரலாறுதான். வர்க்கப் போராட்டத்துக்கும், வர்க்கத்திற்குரிய ஆதிக்கத்துக்கும் அடிப்படைகளாயுள்ள தனிச்சொத்தும், அராஜகமான சமுதாய உற்பத்தியும் மறைந்தொழிகிற வரையில் இது நீடித்தே தீரும். இந்த அடிப்படைகளை அழித்துவிட வேண்டும் என்று பாட்டாளி வர்க்கத்தின் நலன்கள் கோருகின்றன. எனவே, ஒரே அணியில் திரண்ட தொழிலாளிகளின் உணர்வு பூர்வமான வர்க்கப் போராட்டம் இவ்வடிப்படைகளுக்கு எதிராகச் செலுத்தப்பட வேண்டும். மேலும், ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் அரசியல் போராட்டமேயாகும்.
இவை மார்க்ஸ், எங்கெல்சின் கருத்துக்களாகும். பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காகப் போராடும் பாட்டாளிகள் அனைவரும் இந்தக் கருத்துக்களை ஏற்றுத் தமதாக்கிக் கொண்டுள்ளனர். ஆனால், 1840-ம் ஆண்டுகளில், இவ்விரு நண்பர்களும் அந்தக் காலத்திய சோஷலிஸ்டு இலக்கியத்திலும் சமுதாய இயக்கங்களிலும் பங்கு கொண்ட பொழுது இப்படிப்பட்ட கருத்துகள் முற்றிலும் புதியனவாயிருந்தன. அந்தக் காலத்தில் திறனுள்ளவர்களாயும் திறனற்றவர்களாயும், நேர்மையுள்ளவர்களாயும் நேர்மையற்றவர்களாயும் இருந்த பல பேர் அரசியல் விடுதலைப் போராட்டத்தில், ஜார் மன்னர்களின், போலீசின், பாதிரிமார்களின் யதேச்சாதிகாரத்தை எதிர்க்கும் போராட்டத்தில் முழுக்க ஈடுபட்டிருந்த போதிலும் முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்கும் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கும் இடையேயுள்ள பகைமையைப் பார்க்கத் தவறினார்கள். சுதந்திரமான சமுதாயச் சக்தியாகத் தொழிலாளர்கள் செயல் புரிவதென்ற கருத்துக்கு அவர்கள் இடங்கொடுக்க மறுத்தார்கள். மற்றொரு பக்கத்தில் கனவு காண்போர் பலர் இருந்தார்கள்; அவர்களில் சில மேதைகள்கூட நவீன சமுதாய அமைப்பு முறை அநியாயமானது என்று ஆட்சியாளர்களுக்கும் ஆட்சி செலுத்தும் வர்க்கங்களுக்கும் புரியவைப்பது ஒன்றுதான் வேலை, அதைச் செய்துவிட்டால் பிறகு இந்த மண்ணுலகில் அமைதியையும் பொதுவான நல்வாழ்வையும் நிறுவுவது சுலபம் என்று அவர்கள் எண்ணினார்கள். போராட்டமில்லாமலே சோஷலிசம் வரும் என்று அவர்கள் கனவு கண்டார்கள். கடைசியாக ஒன்று. அந்தக் காலத்தைச் சேர்ந்த அநேகமாக எல்லா சோஷலிஸ்டுகளும், பொதுவாகத் தொழிலாளி வர்க்கத்தின் நண்பர்களும், பாட்டாளி வர்க்கம் ஒரு சீழ்வடியும் புண் என்று கருதினர்; இயந்திரத் தொழிலின் வளர்ச்சிக்கு ஏற்ப இந்தப் புண்ணும் வளர்ந்து கொண்டே போவதை அவர்கள் பீதியுடன் கவனித்தார்கள். ஆகவே, இயந்திரத் தொழிலின் வளர்ச்சியையும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சியையும் எப்படித் தடுத்து நிறுத்துவது, ‘வரலாற்றின் சக்கரத்தை ‘ எப்படித் தடுத்து நிறுத்துவது என்பதிலேயே அவர்கள் அனைவரின் கவனமும் சென்றது.
பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சியைப் பற்றிப் பொதுவாக நிலவிய பயபீதிகளுக்கு ஆளாவதற்குப் பதிலாக மார்க்சும் எங்கெல்சும் பாட்டாளி வர்க்கத்தின் இடைவிடாத வளர்ச்சியின்மீதே தங்கள் நம்பிக்கைகளனைத்தையும் வைத்தார்கள். பாட்டாளிகளின் எண்ணிக்கை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு புரட்சிகரமான வர்க்கம் என்ற வகையிலே அவர்களின் வலிமை அதிகமாகும், அவ்வளவுக்கவ்வளவு சோஷலிசம் நெருங்குவது சாத்தியமாகும். தொழிலாளி வர்க்கத்துக்கு மார்க்சும் எங்கெல்சும் ஆற்றிய பணியைப் பற்றி ஒரு சில சொற்களிலே பின்வருமாறு சொல்லிவிடலாம். தொழிலாளி வர்க்கம் தன்னைத்தானே அறிந்து கொள்ளுமாறு, தன்னைப் பற்றிய உணர்வு கொள்ளுமாறு அவர்கள் போதித்தார்கள், மேலும், கனவுகள் இருந்த இடத்தில் விஞ்ஞானத்தை நிலைநாட்டினர்.
ஆகவேதான் எங்கெல்சின் பெயரும் வாழ்க்கையும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெரிந்திருக்க வேண்டும். நமது எல்லா வெளியீடுகளையும் போலவே இந்தச் சஞ்சிகையின் நோக்கமும் ருஷ்யத் தொழிலாளர்களிடையே வர்க்க உணர்வைத் தூண்டுவதேயாகும். அதனால் தான் இச்சஞ்சிகையில் நவீன காலப் பாட்டாளி வர்க்கத்தின் மகத்தான இரு ஆசான்களில் ஒருவராகிய பிரெடெரிக் எங்கெல்சின் வாழ்க்கையையும் பணியையும் நாம் சித்தரித்துக்காட்ட வேண்டும்.
எங்கெல்ஸ் பிரஷ்ய முடியரசில் ரைன் மாகாணத்தைச் சேர்ந்த பார்மென் என்ற ஊரில் 1820 ஆம் ஆண்டில் பிறந்தார். அவருடைய தகப்பனார் ஓர் ஆலைச் சொந்தக்காரர். உயர்நிலைப் பள்ளியில் தமது கல்வியை முடிக்காமலே குடும்ப நிலைமைகளின் நிர்ப்பந்தம் காரணமாக 1838-ல் எங்கெல்ஸ் பிரெமணில் ஒரு வர்த்தக நிலையத்தில் குமாஸ்தாவாகச் சேர்ந்தார். வர்த்தக விவகாரங்கள் விஞ்ஞான – அரசியல் கல்வியைப் பயில்வதினின்று எங்கெல்சைத் தடுத்துவிடவில்லை. உயர் நிலைப் பள்ளியில் இருந்த காலத்திலேயே யதேச்சாதிகாரத்தையும் அரசாங்க அதிகாரிகளின் தான்தோன்றித்தனத்தையும் எங்கெல்ஸ் வெறுக்கலானர். தத்துவஞானப் பயிற்சி அவரை மேலும் முன்னுக்குக் கொண்டு சென்றது. அந்தக் காலத்தில் ஜெர்மன் தத்துவஞானத்தில் ஹெகலின் போதனை ஆதிக்கம் வகித்தது. எங்கெல்ஸ் ஹெகலைப் பின்பற்றிச் சென்றார், பிரஷ்ய அரசின் சேவகத்தில் பெர்லின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த ஹெகல் யதேச்சாதிகாரத்தனமான பிரஷ்ய அரசை நடப்பில் மெச்சிக் கொண்டாடி வந்த போதிலும் ஹெகலின் போதனை புரட்சிகரமானது. மனித அறிவின் மீதும் மனித உரிமைகள் மீதும் ஹெகல் நம்பிக்கை கொண்டிருந்தார். உலகம் இடையறாத மாறுதலுக்கும் வளர்ச்சிக்கும் உட்பட்டது என்பது ஹெகல் தத்துவஞானத்தின் அடிப்படையான ஆய்வுரையாகும். இந்தப் பெர்லின் தத்துவஞானியின் சீடர்களிலே, நடப்பு நிலைமையை ஏற்க மறுத்தவர்கள் இருந்தார்கள், நடப்பு நிலைமையை எதிர்த்துப் போராட வேண்டும், நடப்பிலிருந்த அநீதியையும் மேலோங்கியிருந்த தீமையையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்பதும் முடிவின்றி நிரந்தரமாய் வளர்ந்து செல்வதென்ற அனைத்துலகத்துக்கும் பொதுவான விதியிலே வேர்கொண்டுள்ளது என்ற கருத்தை ஹெகலின் மேற்கூறிய நம்பிக்கையும் ஹெகலின் தத்துவஞானத்தின் மேற்கூறிய அடிப்படை ஆய்வு ரையும் இச்சீடர்களின் மனத்திலே உருவாகச் செய்தன.
எல்லாமே வளர்ச்சியுறுகின்றன என்றால், சில நிறுவனங்கள் மறைந்து அவையிருந்த இடத்தில் வேறு நிறுவனங்கள் அமைகின்றன என்றால், பிரஷ்ய மன்னனின் யதேச்சாதிகாரமோ, ருஷ்ய ஜார் மன்னனின் யதேச்சாதிகாரமோ, மிகப் பெரும்பான்மையோராயுள்ளவர்களைச் சுரண்டி அற்பசொற்பமான ஒரு சிறுபான்மைக் கூட்டத்தார் செல்வர்களாவதோ, மக்களின் மீது முதலாளி வர்க்கம் ஆதிக்கம் வகிப்பதோ ஏன் நிரந்தரமாக நீடிக்க வேண்டும்? ஹெகலுடைய தத்துவஞானம் ஆன்மாவின் வளர்ச்சியைப் பற்றி, கருத்துகளின் வளர்ச்சியைப் பற்றிப் பேசிற்று. இந்தத் தத்துவஞானம் கருத்து முதல் வாத ரீதியானது. ஆன்மாவின் வளர்ச்சியிலிருந்து அது இயற்கையின் வளர்ச்சியையும், மனிதனின் வளர்ச்சியையும், மனித, சமுதாய உறவுகளின் வளர்ச்சியையும் அனுமானித்தது. மார்க்சும் எங்கெல்சும் வளர்ச்சியின் நிரந்தரமான இயக்கப் போக்கு பற்றிய ஹெகலின் கருத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு முன் சிந்தனைப்படி அமைந்த கருத்து முதல்வாதக் கருத்தை நிராகரித்து ஒதுக்கி விட்டார்கள். வாழ்வின் உண்மைகளை ஆராய்ந்து, இயற்கையின் வளர்ச்சியை விளக்குவது மனத்தின் வளர்ச்சியல்ல என்றும், அதற்கு மாறாக மனத்தைப் பற்றிய விளக்கமே இயற்கையிலிருந்துதான் பருப்பொருளிலிருந்துதான் பெறப்பட வேண்டும் என்றும் அவர்கள் கண்டார்கள். ஹெகலையும், ஹெகலைப் பின்பற்றும் மற்றவர்களையும் போலல்லாமல், மார்க்சும் எங்கெல்சும் பொருள் முதல்வாதிகள். உலகத்தையும் மனிதகுலத்தையும் அவர்கள் பொருள்முதல்வாத நிலையிலிருந்து பார்த்து இயற்கையின் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அடிப்படையாகப் பொருளாயதக் காரணங்கள் எப்படி அமைந்துள்ளனவோ, அதேபோல் மனிதச் சமுதாயத்தின் வளர்ச்சியும் பொருளாயத வகைப்பட்ட உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினால் வரையறுக்கப்படுகிறது என்று அறிந்து கொண்டனர். மனிதத் தேவைகளை நிறைவு செய்வதற்குரிய பொருட்களை உற்பத்தி செய்வதிலே மனிதர்கள் பரஸ்பரமாக ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைப் பொறுத்திருக்கின்றன. சமுதாய வாழ்வின் எல்லாத் தோற்றங்களுக்கும், மனித ஆவலாதிகளுக்கும், கருத்துக்களுக்கும், சட்டங்களுக்கும் உரிய விளக்கம்

“தங்களுடைய அறிவு வளர்ந்து விரிவடைவதிலே மகத்தான ஜெர்மன் தத்துவஞானிகளுக்கு – ஹெகலுக்கு – தாங்கள் மிகவும் கடன்பட்டிருப்பதாக மார்க்சும் எங்கெல்சும் அடிக்கடி குறிப்பிட்டுள்ளனர். ‘ஜெர்மன் தத்துவஞானம்’ இல்லாமல் விஞ்ஞான வழிப்பட்ட சோஷலிசம் தோன்றியேயிருக்காது” என்கிறார் எங்கெல்ஸ்,
இந்த உறவுகளிலேதான் பொதிந்திருக்கிறது. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியானது தனிச்சொத்தின் அடிப்படையில் அமைந்த சமுதாய உறவுகளைப் படைக்கிறது. ஆனால், உற்பத்திச் சக்திகளின் அதே வளர்ச்சி பெரும்பான்மையானவர்களின் சொத்தைப் பறித்து அற்பசொற்பமான சிறுபான்மையோரிடம் அதைச் சேர்த்துக் குவித்து வைக்கிறதை நாம் இன்று காண்கிறோம். நவீன காலத்திய சமுதாய அமைப்பு முறைக்கு அடிப்படையாக உள்ள சொத்து என்பதை அது அழிக்கிறது; சோஷலிஸ்டுகள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட அதே இலட்சியத்தை நோக்கி அதுவும் தானாகச் செல்ல முயற்சிக்கிறது. சோஷலிஸ்டுகள் செய்ய வேண்டியிருப்பதெல்லாம் – சமுதாயச் சக்திகளில் எது நவீன சமுதாயத்தில் தான் வகிக்கும் நிலையின் காரணமாக, சோஷலிசத்தை நடை முறைக்குக் கொண்டு வருவதில் அக்கறை கொண்டிருக்கின்றது என்பதை அறிந்து கொண்டு அந்தச் சக்திக்கு அதன் நலன்களைப் பற்றிய உணர்வையும், அதன் வரலாற்று வழிப்பட்ட கடமையைப் பற்றிய உணர்வையும் ஊட்டுவதேயாகும். இந்தச் சக்திதான் பாட்டாளி வர்க்கம். அதை இங்கிலாந்தில், பிரிட்டிஷ் இயந்திரத் தொழிலுக்குக் கேந்திரமாயிருந்த மாஞ்செஸ்டரில், எங்கெல்ஸ் அறியலானார். மாஞ்செஸ்டரில் அவர் 1842ஆம் ஆண்டில் குடியேறி, தமது தகப்பனார் பங்குதாரராகச் சேர்ந்திருந்த வர்த்தக நிலையத்தில் வேலையில் அமர்ந்தார். அங்கே சும்மா அலுவலகத்தில் எங்கெல்ஸ் உட்கார்ந்து விடவில்லை. தொழிலாளர்கள் அடைந்து கிடந்த ஆபாசமான சேரிகளில் சுற்றி அலைந்தார். அவர்களின் வறுமையையும் துன்பதுயரங்களையும் கண்கூடாகக் கண்டார். ஆனால் சுயமாகக் கண்டறிவதோடு அவர் நின்றுவிடவில்லை. பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை பற்றி ஏற்கெனவே வெளியாகியிருந்த விஷயங்களையெல்லாம் அவர் படித்தார்; கைக்கு அகப்பட்ட அதிகார பூர்வமான எல்லா ஆவணங்களையும் அவர் கவனமாகப் பரிசீலித்துப் படித்தார்.
இப்படிப் பார்த்தறிந்தவற்றின், படித்தறிந்தவற்றின் பலனாக விளைந்ததுதான் 1845ம் ஆண்டில் வெளியான ‘இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை’ என்ற நூல் ஆகும். இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்னும் நூலின் ஆசிரியர் என்ற முறையில் எங்கெல்ஸ் ஆற்றிய முக்கியமான பணியைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். எங்கெல்சுக்கு முன்பே மிகப் பலர் பாட்டாளி வர்க்கத்தின் துன்பதுயரங்களை வர்ணித்து, அதற்கு உதவி புரிய வேண்டியதின் அவசியத்தை எடுத்துச் சொல்லியுள்ளனர். பாட்டாளி வர்க்கம் துன்பதுயரங்களை அனுபவிக்கும் வர்க்கம் மட்டுமல்ல, உண்மையிலே பாட்டாளி வர்க்கத்தின் வெட்கக் கேடான பொருளாதார நிலைமை தடுக்க முடியாத வகையில் அதை முன் தள்ளிச் செல்கிறது, தனது இறுதி விடுதலைக்காகப் போராடும்படி நிர்ப்பந்திக்கிறது என்று எங்கெல்ஸ் தான் முதன் முதலாகச் சொன்னவர். மேலும், போராடும் பாட்டாளி வர்க்கம் தன் கையையே தனக்குதவியாகக் கொள்ளும், தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் இயக்கம் தங்களது விமோசனம் சோஷலிசத்தில் மட்டுமே உள்ளது என்று தொழிலாளர்கள் அறியும் நிலைக்குத் தவிர்க்க முடியாதபடி கொண்டுபோய்விடும். மறு பக்கத்தில், தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் போராட்டத்தின் இலட்சியமாக ஆகும் போதுதான் சோஷலிசம் ஒரு சக்தியாக ஆகும். இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை பற்றிய எங்கெல்ஸ் நூலிலுள்ள பிரதான கருத்துகள் இவைதான். சிந்தனையுள்ள, போராடிக் கொண்டிருக்கிற பாட்டாளிகள் எல்லாரும் இந்தக் கருத்துகளை இப்போது ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்தில் அவை முழுக்க முழுக்கப் புதியனவாயிருந்தன. சிந்தனையைக் கவரும் நடையில் எழுதப்பட்ட இந்நூலில் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. பிரிட்டிஷ் பாட்டாளி வர்க்கத்தின் துன்பதுயரங்களைப் பற்றிய முற்றிலும் உண்மையான, அதிர்ச்சியுண்டாக்கத்தக்க சித்திரங்கள் இந்நூலிலே நிறைந்துள்ளன.
இந்த நூல் முதலாளித்துவ அமைப்பின் மீதும் முதலாளி வர்க்கத்தின் மீதும் மிகப் பயங்கரமான குற்றச்சாட்டாக விளங்கியது. மக்களின் மனத்தில் அது பசுமரத்தாணி போல் பதிந்தது. எங்கெல்சின் நூல் நவீன காலப் பாட்டாளி வர்க்கத்தின் நிலைமையைப் பற்றிய மிகச் சிறந்த சித்திரத்தை வழங்குகிறது என்று இதிலிருந்து எங்கும் மேற்கோள் காட்டத் தொடங்கினார்கள். உண்மையிலே பார்த்தால், 1845 ஆண்டுக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி, தொழிலாளி வர்க்கத்தின் துன்பதுயரங்களைப் பற்றி இவ்வளவு வியக்கத்தக்க உண்மையான சித்திரம் வெளிவந்தது கிடையாது.
இங்கிலாந்துக்கு வந்த பிறகுதான் எங்கெல்ஸ் சோஷலிஸ்டு ஆனார். அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் தொழிலாள இயக்கத்தின் தலைவர்களுடன் மாஞ்செஸ்டரில் எங்கெல்ஸ் தொடர்பு கொண்டார்; பிரிட்டிஷ் சோஷலிசப் பத்திரிகைகளில் எழுதத்துவங்கினார். 1844ஆம் ஆண்டில், ஜெர்மனிக்குத் திரும்பி வரும் வழியில், பாரிஸ் நகரில் அவர் மார்க்சைச் சந்தித்துப் பழகினார். மார்க்சுடன் ஏற்கெனவே அவர் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்தவர்தான். பாரிசில் பிரெஞ்சு சோஷலிஸ்டுகளின், பிரெஞ்சு வாழ்க்கையின் செல்வாக்கின்கீழ் மார்க்சும் சோஷலிஸ்டு ஆகிவிட்டார். இங்கே அவ்விரு நண்பர்களும் சேர்ந்து புனிதக் குடும்பம் அல்லது விமர்சன வகைப்பட்ட விமர்சனத்தின் விமர்சனம் என்று தலைப்பிட்ட ஒரு நூலை எழுதினார்கள். இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை’ என்ற நூல் வெளியாவதற்கு ஒரு வருடத்துக்கு முன்பே இது வெளிவந்தது. இதன் பெரும் பகுதியை மார்க்ஸ் தாம் எழுதினார். இந்நூலில் புரட்சிகரமான பொருள்முதல்வாத சோஷலிசத்தின் அடிப்படைகள் – அதன் முதன்மையான கருத்துக்களை மேலே விளக்கிச் சொல்லியிருக்கிறோம் – அடங்கியுள்ளன. புனிதக் குடும்பம்’ என்பது தத்துவஞானிகளான பௌவர் சகோதரர்களையும், அவர்களைப் பின்பற்றியோரையும் குறிக்கும் கேலிப் பெயராகும். எல்லா வகையான யதார்த்தத்திற்கும் அப்பாற்பட்ட, கட்சிகளுக்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்ட ஒரு விமர்சனத்தை இந்தக் கனவான்கள் பிரச்சாரம் செய்தார்கள்.

எல்லாவிதமான நடை முறை நடவடிக்கைகளையும் அது நிராகரித்தது; நம்மைச் சூழ்ந்துள்ள உலகையும், அதில் நடந்து வரும் நிகழ்ச்சிகளையும் பற்றி அந்த விமர்சனம் வெறுமே விமர்சனக் கண் கொண்டு பார்ப்பதோடு நின்று விட்டது. இந்தக் கனவான்கள் – பௌவர் சகோதரர்கள் – பாட்டாளி வர்க்கம் விமர்சனப் பார்வையற்ற கும்பல் என்று இழிவுபடுத்தினார்கள். சுத்த அபத்தமான, தீங்கு விளைவிக்கக் கூடிய இந்தப் போக்கை மார்க்சும் எங்கெல்சும் தீவிரமாக எதிர்த்தார்கள். ஆளும் வர்க்கங்களாலும் அரசாலும் மிதித்து நசுக்கப்பட்டு வரும் தொழிலாளி என்ற அசல் மனிதப் பிறவியின் சார்பாக வீண் சிந்தனை அல்ல, மேம்பட்ட சமுதாய அமைப்பு முறைக்காகப் போராட்டம் நடத்த வேண்டும் என்று மார்க்சும் எங்கெல்சும் கோரினார்கள். இந்தப் போராட்டத்தை நடத்துவதில் அக்கறை கொண்டுள்ள சக்தியாக, இந்தப் போராட்டத்தை நடத்துவதற்குத் திறன் பெற்றுள்ள சக்தியாக, பாட்டாளி வர்க்கத்தை அவர்கள் கருதினார்கள் என்பதில் ஐயமில்லை. புனிதக் குடும்பம் வெளிவருவதற்கு முன்பே, மார்க்சும் ரூகேயும் நடத்திய Deutsch-Franzosische Jahrbiicher அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனவுரைக்கு ஒரு நகல் என்ற தொடரை எங்கெல்ஸ் வெளியிட்டார். அக்கட்டுரைகளில் தனிச்சொத்தின் ஆதிக்கத்தால் ஏற்பட்டுத் தீரும் விளைவுகள் என்ற முறையில், நவீன காலப் பொருளாதார அமைப்பு முறையின் முதன்மையான தோற்றங்களை சோஷலிச நோக்குநிலையிலிருந்து பரிசீலித்தார். அரசியல் பொருளாதாரத்தைப் பயில்வதென்று மார்க்ஸ் முடிவு செய்ததற்கு அவர் எங்கெல்சுடன் தொடர்பு கொண்டிருந்தது ஒரு காரணம் என்பதில் சந்தேகமேயில்லை. அரசியல் பொருளாதாரம் என்ற விஞ்ஞானத் துறையில் மார்க்ஸ் அசல் புரட்சியையே உண்டாக்கிவிட்டார்.
1845லிருந்து 1847 வரை எங்கெல்ஸ் பிரஸ்ஸெல்சிலும் பாரிசிலும் வாழ்ந்தார். விஞ்ஞானப் பயிற்சியோடு கூடவே பிரஸ்ஸெல்ஸ், பாரிஸ் நகரங்களிலுள்ள ஜெர்மன் தொழிலாளர்களிடையே நடைமுறை நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார். இங்கே இரகசியமாயிருந்த ஜெர்மன் ‘கம்யூனிஸ்டுகளின் லீக்’ என்ற நிறுவனத்துடன் மார்க்சும் எங்கெல்சும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் வரையறுத்து விவரித்துள்ள சோஷலிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கும்படி அந்த லீக் அவர்களைப் பணித்தது. இவ்வழியேதான் மார்க்சும் எங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை என்ற புகழ்பெற்ற நூல் 1848-ல் வெளிவந்தது. இந்தச் சிறு பிரசுரம் மிகப் பெரிய நூல் தொகுதிகளுக்குச் சமமானது. அதன் உணர்ச்சி நாகரிக உலகில் ஒழுங்கமைப்பு பெற்று அணிதிரண்டு போராடி வரும் பாட்டாளி வர்க்கம் முழுவதையும் இன்றைக்கும்கூட ஊக்குவித்து இயக்கிச் செல்கிறது.
முதன் முதலாக பிரான்சில் தோன்றி, பின்னர் மற்ற மேலைய ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவிய 1848ம் ஆண்டுப் புரட்சி மார்க்சையும் எங்கெல்சையும் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பி வரச் செய்தது. இங்கே, ரைனிஷ் பிரஷ்யாவில், கொலோன் நகரிலிருந்து வெளிவந்த ஜனநாயகத் தன்மையுள்ள Die Neue Rheinische Zeitung என்ற பத்திரிகையை அவர்கள் தங்கள் பொறுப்பில் எடுத்து நடத்தினார்கள். ரைனிஷ் பிரஷ்யாவில் எல்லாப் புரட்சிகர ஜனநாயக வேட்கைகளின் இதயமாக, ஆன்மாவாக இவ்விரு நண்பர்களும் விளங்கினர். மக்களின், சுதந்திரத்தின் நலன்களைப் பாதுகாத்து அவர்கள் பிற்போக்குச் சக்திகளைக் கடைசிவரை எதிர்த்துப் போராடினர்; பிற்போக்குச் சக்திகளின் கை மேலோங்கியது என்பது நாமறிந்த சங்கதிதான். Die Neue Rheinische Zeitung தடை செய்யப்பட்டது. நாடு கடத்தப்பட்ட காலத்தில் தமது பிரஷ்யக் குடியுரிமையை இழந்து விட்டிருந்த மார்க்ஸ் பிரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆயுதந்தாங்கிய மக்கள் எழுச்சியில் எங்கெல்ஸ் பங்கு கொண்டார், சுதந்திரத்துக்காக மூன்று முனைகளில் போர் புரிந்தார். கலகக்காரர்கள் தோல்வியுற்ற பிறகு சுவிட்சர்லாந்து வழியே லண்டனுக்கு வந்து சேர்ந்தார்.
மார்க்சும் அங்கேயே குடியமைத்துக் கொண்டார். எங்கெல்ஸ் மீண்டும் ஒரு குமாஸ்தா ஆகிவிட்டார். கொஞ்ச காலம் கழித்து, தாம் 1840 – 18ம் ஆண்டுகளில் வேலை பார்த்த அதே மாஞ்செஸ்டர் வர்த்தக நிலையத்திலேயே பங்குதாரராக ஆனார். 1870 வரை அவர் மாஞ்செஸ்டரிலேயே வாழ்ந்து வர, மார்க்ஸ் லண்டனில் வாழ்ந்து வந்தார். இருந்த போதிலும் அவ்விருவரும் பரஸ்பரம் உற்சாகம் பொங்கும் அறிவுத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதை அது தடுக்கவில்லை. அநேகமாக தினந்தோறும் ஒருவருக்கொருவர் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கடிதப் போக்குவரத்து மூலம் இவ்விரு நண்பர்களும் தங்கள் கருத்துகளையும் கண்டு பிடிப்புகளையும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டார்கள், விஞ்ஞான சோஷலிசத்தை வகுத்துக் கொடுப்பதில் இணைந்து பணி புரிவதைத் தொடர்ந்தார்கள். 1870-ம் ஆண்டில் எங்கெல்ஸ் லண்டனுக்கு வந்து அங்கேயே தங்கிவிட்டார். கடும் உழைப்பு நிறைந்த அவர்களுடைய பொதுவான அறிவுத் துறை வாழ்க்கை 1883ம் ஆண்டு வரை நீடித்தது. 1883-ம் ஆண்டில் மார்க்ஸ் காலமானார். மார்க்ஸ் பங்குக்கு இந்தப் பொதுவான அறிவுத் துறை வாழ்க்கையின் பலன் மூலதனம் என்ற நூலாகும். நமது சகாப்தத்திலேயே அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய நூல்கள் யாவற்றிலும் தலைசிறந்த நூல் இதுதான். எங்கெல்சைப் பொறுத்தமட்டில் அதன் பலன் பல பெரிய, சிறிய நூல்கள் எழுதியதுதான். முதலாளித்துவப் பொருளாதாரத்தின் சிக்கல் நிறைந்த தோற்றங்களைப் பற்றிய பகுப்பாராய்ச்சியிலே மார்க்ஸ் ஈடுபட்டார். எங்கெல்ஸ் எளிய நடையில் எழுதிய நூல்களில், அடிக்கடி எதிர்வாதங்களைச் சந்திக்கிழுத்துத் தாக்கும் நூல்களில் வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்தையும் மார்க்சின் பொருளாதாரத் தத்துவத்தையும் செயல்படுத்திய வழியிலே, மிகப் பொதுவான விஞ்ஞானப் பிரச்சனைகளையும், பலவகைப்பட்ட சென்றகால, நிகழ்கால நிகழ்ச்சிகளையும் விளக்கினார். எங்கெல்சின் இந்நூல்களில் பின்வருவனவற்றைக் குறிப்பிடுவோம்: டூரிங்குக்கு மறுப்பாக எழுதிய வாத வடிவங் கொண்ட நூல் (இந்நூலில் தத்துவஞானம், இயற்கை விஞ்ஞானம், சமுதாய விஞ்ஞானங்கள் ஆகிய துறைகள் சம்பந்தப்பட்ட மாபெரும் பிரச்சனைகள் ஆராயப்பட்டுள்ளன.)

குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூல் (இது ருஷ்ய மொழியில் பெயர்க்கப்பட்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் வெளியிடப்பட்டது. மொழிபெயர்ப்பின் மூன்றாம் பதிப்பு 1895-ல் வெளிவந்தது); லுட்விக் ஃபாயர்பாஹ் என்ற நூல் (இதன் ருஷ்ய மொழிபெயர்ப்பு கி. பிளெஹானவ் குறிப்புகளுடன் ஜினிவாவில் 1892-ல் வெளிவந்தது); ருஷ்ய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய ஒரு கட்டுரை (ஜினிவாவில் வெளிவந்த Der Sozialdenakra (‘சமூக ஜனநாயகவாதி’) என்ற பத்திரிகையின் 1, 2 இதழ்களில் ருஷ்ய மொழியில் பெயர்க்கப்பட்டது); குடியிருப்புப் பிரச்சினையைப் பற்றிய சில குறிப்பிடத்தக்க கட்டுரைகள்; கடைசியாக, ருஷ்யாவின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி எழுதப்பட்ட இரண்டு சிறிய , ஆனால் மதிப்பு மிகுந்த கட்டுரைகள் (ருஷ்யாவைப் பற்றி பிரெடெரிக் எங்கெல்ஸ் என்ற நூல், ருஷ்ய மொழியில் வேரா ஸசூலிச் பெயர்த்தது, ஜினிவா, 1894). மூலதனத்தைப் பற்றிய தமது விரிவான வேலையை முடிக்கு முன்னர் மார்க்ஸ் காலமானார். இருந்தாலும், நகல் குறிப்புகள் வடிவத்தில் அது ஏற்கெனவே எழுதி முடிக்கப்பட்டிருந்தது. தமது நண்பர் மறைந்த பிறகு மூலதனத்தின் இரண்டாவது, மூன்றாவது தொகுதிகளைத் தயாரித்து வெளியிடும் சிரமமிக்க வேலையை எங்கெல்ஸ் மேற்கொண்டார். அதன் இரண்டாம் தொகுதியை 1885-ம் ஆண்டிலும், மூன்றாம் தொகுதியை 1894-ம் ஆண்டிலும் அவர் வெளியிட்டார் (அவரது மரணம் நான்காம் தொகுதியைத் தயாரிப்பதைத் தடுத்துவிட்டது.) இவ்விரு தொகுதிகள் விஷயத்தில் எங்கெல்ஸ் அபாரமாக உழைக்க வேண்டியிருந்தது. மூலதனத்தின் இரண்டாவது, மூன்றாவது தொகுதிகளை வெளியிட்டதன் மூலம் எங்கெல்ஸ் தமது நண்பராகிய மேதைக்கு மாண்புமிக்க நினைவுச் சின்னம் நிறுவினார்; அந்த நினைவுச் சின்னத்தில் தம்மையறியாமலேயே தமது பெயரையும் அழியாத வகையில் பொறித்துவிட்டார் என்று ஆஸ்திரிய சமூக ஜனநாயகவாதி ஆட்லெர் குறிப்பிட்டது மிகவும் சரி. உண்மையிலே மூலதனத்தின் இவ்விரு தொகுதிகளும் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருடைய பணியேயாகும். மனத்தையுருக்கும் நட்பைக் குறித்துப் பல உதாரணங்கள் காட்டும் பழங்கதைகள் உண்டு. ஐரோப்பியப் பாட்டாளி வர்க்கம் தனது விஞ்ஞானத்தைப் படைத்தவர்கள் இரண்டு அறிஞர்கள், இரண்டு போராட்ட வீரர்கள், அவர்களிடையே நிலவிய உறவு முன்னோர்கள் மனித நட்பு பற்றி எழுதியுள்ள நெஞ்சையள்ளும் கதைகளையெல்லாம் மிஞ்சக் கூடியதாயிருந்தது என்று சொல்லிக் கொள்ளலாம். எங்கெல்ஸ் எப்பொழுதுமே – மொத்தத்தில், நியாயமாகத் தான் – மார்க்சுக்கு முதன்மை கொடுத்தார். பழைய நண்பர் ஒருவருக்கு எழுதுகையில் “மார்க்ஸ் வாழ்ந்திருந்த காலத்தில் நான் அவருக்குப் பக்கவாத்தியம் வாசித்துக் கொண்டிருந்தவன் தான்” என்று எங்கெல்ஸ் குறிப்பிட்டார். மார்க்ஸ் உயிரோடிருக்கும் போது அவர்மீது எங்கெல்ஸ் வைத்திருந்த பாசத்துக்கும், மறைந்த மார்க்சின் நினைவு பற்றி அவர் வைத்திருந்த புனித மதிப்புக்கும் எல்லையே கிடையாது. இந்தக் கடின சித்தமுள்ள போராட்ட வீரருக்குள், கட்டுப்பாடு மிகுந்த சிந்தனையாளருக்குள், ஆழ்ந்த அன்பு செலுத்தும் இதயம் இருந்தது.
1848-1849ம் ஆண்டுகளில் நடைபெற்ற இயக்கத்துக்குப் பிறகு நாடுகடத்தப்பட்ட காலத்தில் மார்க்சும் எங்கெல்சும் விஞ்ஞானத்தைப் பயில்வதோடு நின்றுவிடவில்லை. 1864ல் மார்க்ஸ் சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தை நிறுவினார். அதைப் பத்தாண்டுக் காலத்துக்கு அவர் தலைமை வகித்து நடத்தினார். அதன் விவகாரங்களில் எங்கெல்சும் தீவிரமாகப் பங்கு கொண்டார். மார்க்சின் கருத்துப்படி அந்தச் சர்வதேச சங்கம் எல்லா நாட்டுப் பாட்டாளிகளையும் ஒன்றுபடுத்தியது; தொழிலாளர் இயக்கத்தை வளர்த்ததில் அது ஆற்றிய பணி பிரம்மாண்டமான முக்கியத்துவம் கொண்டது. 1870-ம் ஆண்டுகளில் அந்தச் சங்கம் மூடப்பட்ட பின்னரும்கூட மார்க்சும் எங்கெல்சும் ஆற்றிய, ஒற்றுமை ஏற்படுத்தும் பணி முடிந்துவிடவில்லை . மாறாக, தொழிலாளர் இயக்கத்தின் அறிவுத் துறைத் தலைவர்கள் என்ற வகையிலே அவர்களின் முக்கியத்துவம், இயக்கம் இடையறாது எந்த அளவுக்கு வளர்ந்ததோ அந்த அளவுக்கு மேலும் மேலும் வளர்ந்தது. மார்க்ஸ் மறைந்த பிறகு எங்கெல்ஸ் தனியே நின்று ஐரோப்பிய சோஷலிஸ்டுகளின் ஆலோசகராகவும் தலைவராகவும் விளங்கினார். ஜெர்மன் அரசாங்கத்தின் அடக்குமுறை இருந்த போதிலும் வேகமாக இடையறாது மேன்மேலும் வலுவடைந்த ஜெர்மன் சோஷலிஸ்டுகளும், அதே போல் தமது முதல் நடவடிக்கைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து எடைபோட்டுத் தீர வேண்டியிருந்த ஸ்பெயின், ருமேனியா, ருஷ்யா போன்ற பிற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் அவரது ஆலோசனை களையும் வழிகாட்டலையும் நாடினர். வயது முதிர்ந்த எங்கெல்சின் வளமான அறிவு அனுபவக்களஞ்சியத்தை அவர்கள் எல்லாரும் பயன்படுத்தினர்.
மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருக்கும் ருஷ்ய மொழி தெரியும்; ருஷ்ய நூல்களைப் படித்தார்கள். இருவருமே ருஷ்ய விஷயத்தில் உற்சாகத்துடன் அக்கறை காட்டி வந்தார்கள், ருஷ்யப் புரட்சி இயக்கத்தை அனுதாபத்துடன் கவனித்து வந்தார்கள், ருஷ்யப் புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள். சோஷலிஸ்டுகளாக ஆவதற்கு முன் அவ்விருவரும் ஜனநாயகவாதிகளாக இருந்தவர்கள். எனவே, அரசியல் கொடுங்கோன்மையின் மீது பகைமை கொள்ளும் ஜனநாயக உணர்ச்சி அவ்விருவரிடமும் மிகவும் பலமாக இருந்தது. இந்த நேரடியான அரசியல் உணர்ச்சியும் அரசியல் கொடுங்கோன்மைக்கும் பொருளாதார ஒடுக்குமுறைக்குமிடையேயுள்ள தொடர்பு பற்றிய ஆழ்ந்த தத்துவ ரீதியான அறிவும், அதோடு வாழ்க்கையில் அவர்கள் பெற்றிருந்த வளமிக்க அனுபவமும் சேர்ந்து மார்க்சையும் எங்கெல்சையும் குறிப்பாக அரசியல் வழியில் அசாதாரண நுண்ணுணர்வுடன் செயல்படுவோராக்கின. அதனால் தான், மிகப் பலம் வாய்ந்த ஜாரிஸ்ட் அரசாங்கத்தை எதிர்த்து விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில ருஷ்யப் புரட்சியாளர்கள் நடத்திய வீரமிக்க போராட்டம் இவ்விரு முதிர்ந்த அனுபவம் வாய்ந்த புரட்சியாளர்களின் இதயத்திலே அனுதாபமிக்க எதிரொலியைக் கிளப்பியது.
மறுபுறத்தில், கானல் நீர் போன்ற பொருளாதார அனுகூலங்களை உத்தேசித்து, ருஷ்ய சோஷலிஸ்டுகளின் மிக உடனடியான, முக்கியமான இலட்சியமாகிய அரசியல் சுதந்திரம் போராடிப் பெறுவது எனும் இலட்சியத்தைக் கைவிட்டு விலகிச் செல்லும் போக்கு அவர்களுக்குச் சந்தேகங்களை உண்டாக்கியது இயல்புதான்; அது சமுதாயப் புரட்சி என்ற மகத்தான இலட்சியத்துக்கு நேரடியாகத் துரோகம் புரிவதாகும் என்றுகூட அவர்கள் கருதினார்கள். ‘பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை பாட்டாளி வர்க்கத்தின் பணியாகவே இருக்க வேண்டும்’ என்று மார்க்சும் எங்கெல்சும் இடையறாது போதித்து வந்தார்கள். மேலும் பாட்டாளி வர்க்கம் தனது பொருளாதார விடுதலைக்குப் போராட வேண்டுமென்றால் தனக்கென்று சில அரசியல் உரிமைகளைப் பெற வேண்டும். தவிரவும், ருஷ்யாவில் ஏற்படும் அரசியல் புரட்சி மேற்கு ஐரோப்பியத் தொழிலாளர் இயக்கத் துக்கும் பிரம்மாண்டமான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மார்க்கம் எங்கெல்சும் தெளிவாகக் கண்டார்கள். யதேச்சாதிகார ருஷ்யா ஐரோப்பியப் பிற்போக்குக்கெல்லாம் எப்பொதும் ஓர் அரணாக இருந்து வந்தது. 1870ல் நடந்த போர் ஜெர்மனிக்கும் பிரான்சுக்குமிடையே நீண்ட காலத்துக்குப் பிணக்கு ஏற்படுத்திவிட்டது. அந்தப் போரின் விளைவாக ருஷ்யா ஒரு மிக அனுகூலமான சர்வதேச நிலையை வகித்து வந்தது.
அதனால் பிற்போக்கான சக்தி என்ற வகையில் யதேச்சாதிகார ருஷ்யாவின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கவே செய்தது. சுதந்திரமான ருஷ்யாதான், போலிஷ் மக்களையும், பின்னிஷ் மக்களையும், ஜெர்மானியர்களையும், ஆர்மீனியர்களையும், பிற சிறிய இனத்தவர்களையும் ஒடுக்க வேண்டிய தேவையில்லாத ருஷ்யா தான், அல்லது பிரான்சையும் ஜெர்மனியையும் பரஸ்பரம் சண்டையிட்டுக் கொள்ளும்படி எப்பொழுதும் தூண்டிக்கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லாத ருஷ்யா தான், நவீன ஐரோப்பா தன்னை போர்ச் சுமைகளிலிருந்து விடுவித்துக்கொள்வதைச் சாத்தியமாக்கும், ஐரோப்பாவிலுள்ள எல்லாப் பிற்போக்கு அம்சங்களையும் பலவீனப்படுத்தும், ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தின் சக்தியை அதிகரிக்கச் செய்யும். எனவேதான், மேற்கத்திய தொழிலாளர் இயக்கத்தின் வெற்றிக்காக ருஷ்யாவில் அரசியல் சுதந்திரம் நிலைநாட்டப்படுவதை எங்கெல்ஸ் ஆர்வத்துடன் விரும்பினார். அவரது மறைவால் ருஷ்யப் புரட்சியாளர்கள் தமது மிகச் சிறந்த நண்பரை இழந்துவிட்டனர்.
பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் போராட்ட வீரரும் ஆசானும் ஆகிய பிரெடெரிக் எங்கெல்சின் நினைவு என்றென்றும் பசுமையாய் நிலைத்திடுக
1895 இலையுதிர்காலத்தில் நூல் திரட்டு,
எழுதப் பெற்றது தொகுதி 2,
பக்கங்கள் 5-14
பெயர்க் குறிப்பகராதி
ஆட்லெர் Adler) வீக்தர் (1852-1918) ஆஸ்திரிய சமூக-ஜனநாயகத்தின் நிறுவகர்கள் மற்றும் தலைவர்களில் ஒருவர், பின்னால் இரண்டாம் அகிலத்தில் சீர்திருத்தவாதத்தின் தலைவர்களில் ஒருவர்.
எங்கெல்ஸ் (Engels], பிரெடெரிக் (1820-1895) – 14, 22, 29,31,34-36, 39 44,45,47,66-67,60-76,83,84-98
எபிக்யூரஸ் (Epicurus) (சுமார் 341-270கி.மு.)-கிரேக்க பொருள்முதல்வாதத் தத்துவவியலாளர்.
ஏவ்லிங் (Aveling) எலியனோர் (1855 – 1898) – மார்க்சின் புதல்வி, ஆங்கிலேய சோஷலிஸ்டான எடுவார்டு எவ்லிங்கின் மனைவி; பிரிட்டிஷ் மற்றும் சர்வதேசத் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் கலந்து கொண்டார்.
ஃபாயர்பாஹ் (Feuerbach), லுட்விக் (1804-1872) – ஜெர்மனியின் தலைசிறந்த பொருள்முதல்வாதத் தத்துவஞானி , மார்க்சியத்தின் முன்னோடிகளில் ஒருவர். – 22, 30, 31, 38, 39, 41.
ஃபோக்ட் (Vogl) கார்ல் (1817-1895)- ஜெர்மன் விஞ்ஞானக்கேடான பொருள்முதல்வாதி, தொழிலாளர் மற்றும் கம்யூனிச இயக்கத்தின் கடும் விரோதி.
கான்ட். Kantl இம்மானுயேல் (1724-1804) – மாபெரும் ஜெர்மன் தத்துவஞானி. 18ம் நூற்றாண்டு இறுதி -19ம் நூற்றாண்டின் துவக்கத்திய ஜெர்மன் கருத்து முதல் வாதத்தின் ஆரம்பகர்த்தா.
கிஸோ (Guizot), பிரான்சுவா கியோம் (1787-1874)- பிரெஞ்சு பூர்ஷ்வா வரலாற்றாசிரியர், அரசுப் பிரமுகர்.
கூகல்மன் (Kugelinaril), லுட்விக் (1830-1902) – ஜெர்மன் மருத்துவர். 1848-49 புரட்சியில் பங்குபற்றியவர், முதலாம் அகிலத்தின் உறுப்பினர்.
டூரிங் (Dihring), ஒய்கென் (1833-1921) – ஜெர்மன் விஞ்ஞானக்கேடான பொருள்முதல்வாதி, நேர்காட்சிவாதி, பிற்போக்கு பிலிஸ்டைன் சமனாக்கும். சோஷலிசத்தின் பிரதிநிதி.
தியேர் (Thierry), ஒகுஸ்தேன் (1795-1856)- பிரெஞ்சு மிதவாத வரலாற்றாசிரியர்.
தியேர் (Thiers), அடோல்ப் (1797-1877) – பிரெஞ்சு பூர்ஷ்வா அரசியல்வாதி, வரலாற்றாசிரியர், பாரிஸ் கம்யூனைக் கொடுமையாக நசுக்க ஏற்பாடு செய்தவருள் ஒருவர்.
பக்கூனின், மிஹயில் அலெக்சாந்திரவிச் (1814-1876)- அராஜகவாதத்தின் மூலவர்கள், சித்தாந்தவாதிகளில் ஒருவர்; முதலாவது அகிலத்தின் உறுப்பினராக, மார்க்சியத்தின் கடும் பகைவராக நடந்து கொண்டார்.
பிளெஹானவ், கியோர்கி வலென்தீனவிச் (1856-1918)- ருஷ்யாவின் மற்றும் சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தலை சிறந்த தலைவர், ருஷ்யாவில் மார்க்சியத்தின் முதல் பிரசாரகர் பிளெஹானவின் தத்துவஞானப் படைப்புகளையும் ருஷ்யாவில் மார்க்சியத்தைப் பரப்பியதில் இவரது பங்கையும் லெனின் உயர்வாக மதிப்பிட்ட அதே நேரத்தில் மார்க்சியத்திலிருந்து பின்வாங்கியதற்காகவும் அரசியல் நடவடிக்கையில் செய்த பெரும் தவறுகளுக்காகவும் பிளெஹானவை வன்மையாகக் கண்டித்தார்.
பிஸ்மார்க் (Bismark], ஒட்டோ எடுவார்டு லியப்போல்டு (1815-108) பிரஷ்யா, ஜெர்மன் அரசுத் துறையாளர், அரசுறவாளர்; சிதறிக் கிடந்த சிறிய ஜெர்மன் அரசுகளை வலுக்கட்டாயமாக ஒன்றிணைத்து ஜங்கர் பிரஷ்யாவின் மேலாதிக்கத்தின் கீழ் ஒரே ஜெர்மனியைத் தோற்றுவிக்க ஏற்பாடு செய்தார்; 1871-1800ம் ஆண்டுகளில் ஜெர்மன் பேரரசின் சான்ஸ்லர். ஐங்கர்கள் பெரும் பூர்ஷ்வாவுடன் கூட்டாகச் செயல்பட வேண்டுமென்ற கொள்கையைப் பின்பற்றினார்.
புருதோன் (Proudhon), பியேர் ழொஸேப் (1800-1865) – பிரெஞ்சுப் பொருளியலாளர், குட்டி முதலாளித்துவச் சித்தாந்தவாதி, அராஜகவாதத்தின் மூலவர்களில் ஒருவர்.
புஹ்னர் (Btichner), லுட்விக் (1824-1899) – ஜெர்மன் தத்துவஞானி , உடலியல் விஞ்ஞானி, விஞ்ஞானக் கேடான பொருள்முதல்வாதி.
பௌவர் (Bauer), ஏட்கர் (1820-1886)- ஜெர்மன் வரலாற்றாசிரியர், தத்துவஞானி , கருத்து முதல்வாதி.
பெளவர் (Bauer), புரூனோ (1809-1882) – ஜெர்மன் தத்துவஞானி, கருத்து முதல்வாதி, பிரபல இளம் ஹெகலியவாதிகளில் ஒருவர். – 30, 31, 91.
மார்க்ஸ் (Marx), கார்ல் (1818-1883)- 14, 16, 22-29, 30, 31, 33-83, 84-98.
தத்தின் கட்டி வெப் (18
மார்க்ஸ் (Marx), ஜென்னி (திருமணத்திற்கு முன் வான் வெஸ்ட்ஃபாலன்) (1814-1881) – கா. மார்க்சின் மனைவி. -32, 36.
மாஜினி (Martini), ஜபஸேப்பெ (1805-1872) – இத்தாலியப் புரட்சியாளர், முதலாளித்துவ ஜனநாயகவாதி; இத்தாலி விடுதலை பெற்று சுதந்திர பூர்ஷ்வா குடியரசு என்ற முறையில் இணைய வேண்டும் என்பதன் தலைவர்கள், சித்தாந்தவாதிகளில் ஒருவர்; ‘உழைப்பையும் மூலதனத்தையும் ஒத்துழைக்க வைப்பதன்’ மூலம் தொழிலாளர் பிரச்சினையைத் தீர்க்கலாம் என்ற கற்பனைவாத குட்டி முதலாளித்துவத் திட்டத்தைப் பிரச்சாரம் செய்தார் – 35.
மின்பே (Mignet), பிரான்சுவா ஒகுஸ்ட் (1796-1884) – பிரெஞ்சு மிதவாத வரலாற்றாசிரியர். – 50.
மோலிவோட் (Moleschott) , யாக்கப் (1822-183) – டச்சு உடலியல் நிபுணர், விஞ்ஞானக்கேடான பொருள் முதல் வாதத்தத்துவவியலாளர். – 41.
மோஸ்த் Most, இயோஹான் ( 1&16 1906) – ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதி, டூரிங்கின் விஞ்ஞானக் கேடான பொருள்முதல்வாதத் தத்துவ ஞானத்தின் ஆதரவாளர், பிற்காலத்தில் அராஜகவாதியானார்.
ரிக்கார்டோ (Ricardo), டேவிட் (1772-1823)- பிரிட்டிஷ் பொருளியலாளர், சம்பிரதாய முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் முக்கிய பிரதிநிதி. – 24,65
ரூகே (Ruge), அர்னோல்டு (1802-150) – ஜெர்மன் பத்திரிகையாளர். -32, 92.
ரொட்பேர்டஸ் பாகெட்ஸோவ் (Rodbertus-Jagetzow), யோஹன் கார்ல் (1805-1875)- ஜெர்மன் பொருளியலாளர், பிரஷ்ய-ஐங்கர் ‘அரசு சோஷலிசத்தின்’ பிற்போக்குக் கருத்துக்களின் ஆதரவாளர். – 64.
லக்போர்க் (Lafarguel], லௌரா ( 1845-191) மார்க்சின் புதல்வி, பிரெஞ்சு சோஷலிஸ்ட் போல் லஃபார்கின் மனைவி. – 37
வஸ்ஸால் [Lassalle), ஃபெர்டினைண்டு (1825 – 1864) – ஜெர்மன் சோஷலிஸ்ட், ஜெர்மன் தொழிலாளர் பொதுச்சங்கத்தின் ஸ்தாபகர், முக்கிய அரசியல் பிரச்சனைகளில் சந்தர்ப்பவாத நிலை வகித்தார், இதற்காக மார்க்சும் எங்கெல்சும் இவரைக் கண்டிப்புடன் விமரிசித்தனர். – 81, 82.
லீப்க்னெஹ்ட் (Liebknecht), வில்ஹெல்ம் (1826-1900)- ஜெர்மன் சமூகே ஜனநாயகம் மற்றும் இரண்டாம் அகிலத்தின் ஸ்தாபகர்கள், தலைவர்களில் ஒருவர். – 82.
லொங்கே (Longuet), ஜென்னி (1844-1883)- கார்ல் மார்க்சின் மூத்த புதல்வி, பிரெஞ்சு சோஷலிஸ்ட் ஷார்ல் லொங்கேயின் மனைவி. -37
வில்லிஹ் (Willich), ஒளகுஸ்ட் (1810-1878)- பிரஷ்ய இராணுவ அதிகாரி, 1849) ஆண்டு பாதென் எழுச்சியின் போது தொண்டர் படைப்பகுதியின் தலைவர், லண்டனில் கம்யூனிஸ்டுகளின் லீகின் மத்தியக் கமிட்டி உறுப்பினர், மார்க்சிற்கு எதிராய் போரிட்ட “இடது சாரியினர் பிரிவின் தலைவர். – 84.