நடைபெற்றுவரும் விவசாயிகளுடைய போராட்டத்திற்கு ஆதரவாக சனவரி 16 ஆம் தேதி புது தில்லியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு மாநாட்டை நடத்தின. அந்த மாநாட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்டு) விடுதலை, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி கூட்டாக இணைந்து நடத்தின.
சிபிஐ-யின் டி.வர்ஷ்னி, சிபிஐ (எம்) இன் கே.எம். திவாரி, சிபிஐ (எம்எல்)-விடுதலையின் ரவி ராய், சிஜிபிஐ-இன் சந்தோஷ் குமார் மற்றும் ஆர்எஸ்பி-யின் சத்ருஜீத் சிங் ஆகிய தோழர்களின் முன்னிலையில் தோழர் ரவி ராய் கூட்டத்தை நடத்தினார்.
விவசாயிகளுடைய போராட்டத்திற்கு ஆதரவாக கூட்டாக வெளியிடப்பட்ட வரைவுத் தீர்மானத்தை முன்வைப்பதன் மூலம் மாநாடு தொடங்கியது. தீர்மானத்தை தோழர் திவாரி வாசித்தார்.
இந்த மூன்று சட்டங்களும் விவசாயிகளின் நலன்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களின் நலன்களுக்கும் எதிரானது என்று தீர்மானம் விளக்கியது. மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தபடி குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பதற்கான ஒரு சட்டத்திற்காகவும், கொள்முதல் மையங்களைத் திறப்பதற்காகவும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்றும் அது கோரியது. போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் அடக்குமுறைக்கும், ஆளும் பாஜக விவசாயிகளுடைய போராட்டத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதற்கும் எதிராக வலுவான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அது அழைப்பு விடுத்தது. போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டுமென்ற விவசாயிகளுடைய வேண்டுகோளுக்கு அது ஆதரவு அளித்தது.
தீர்மானத்தை மாநாடு ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
சிபிஐ(எம்)-இன் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிஜிபிஐ-யின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ராவ், சிபிஐ தேசிய செயலகத்தின் உறுப்பினர் கே.நாராயணா, சிபிஐ(எம்)-இன் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரட், சிபிஐ (எம்எல்)-விடுதலையின் பொலிட்பீரோ உறுப்பினர் கவிதா கிருஷ்ணன் மற்றும் ஆர்.எஸ்.பி-யின் மத்திய குழு உறுப்பினர் ஆர்.எஸ்.டாகர் ஆகிய தோழர்கள் மாநாட்டில் உரையாற்றினர்.
மிகப் பெரிய முதலாளித்துவ ஏகபோகக் குடும்பங்களின் நலன்களுக்காக, விவசாயிகளின் அழிவுக்கு வழிவகுக்கும் மூன்று சட்டங்களை பேச்சாளர்கள் வன்மையாகக் கண்டித்தனர். மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்கு சேவை செய்வதில் அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதையும், நாடு முழுவதும் உள்ள கோடி விவசாயிகளின் கோரிக்கைகளை கொடூரமான அலட்சியத்துடன் புறக்கணிப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். எதிர்க்கட்சிகளும், பல மாநில அரசாங்கங்களும் எழுப்பிய எதிர்ப்புகளை அப்பட்டமாக புறக்கணித்துவிட்டு, இந்தச் சட்டங்களைக் கொண்டு வருவதற்கு, சனநாயகத்திற்கு முற்றிலும் விரோத முறையில் பாராளுமன்றத்தில் தன்னுடைய பெரும்பான்மையை பாஜக அரசாங்கம் பயன்படுத்தியிருப்பதை அவர்கள் எடுத்துரைத்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடெங்கிலும் தொழிலாளிகளும், பெண்களும், இளைஞர்களும் ஏற்பாடு செய்து நடத்திவரும் ஆர்பாட்ட நடவடிக்கைகளை அவர்கள் பாராட்டினர். விவசாயிகளின் ஆர்பாட்டத்திற்கு ஆதரவாக, ஒவ்வொரு பகுதியிலும் தீவிரமாக மக்களை அணிதிரட்டுமாறு மாநாட்டில் பங்கேற்ற அனைத்து கட்சியினருக்கும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். போராட்டத்தில் வீரமான பங்கு வகிக்கும் பெண்களுக்கு ஆதரவாக ஜனவரி 18 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பெண் விவசாயிகள் நாளில் அதிகபட்சமாக பெண்கள் பங்கேற்க வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர். சனவரி 26 ஆம் தேதி தலைநகரில் நடைபெற இருக்கும் டிராக்டர் பேரணிக்கான திட்டங்களையும் அவர்கள் அறிவித்தனர்.
தீர்மானம்
மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்வதற்காக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவாக 2021 சனவரி 16 அன்று புதுதில்லியில் நடைபெற்ற இந்த ஒற்றுமை மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு அரசியல் கட்சிகள் நாங்கள், பிரதமருக்கு அனுப்ப இருக்கும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி இருக்கிறோம் :
எங்களுடைய உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் மற்றும் பரவலான மக்களின் கருத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாங்கள் –
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான விவசாயிகளுடைய போராட்டத்திற்கு எங்களுடைய ஐக்கியத்தையும் ஆதரவையும் வெளிப்படுத்துகிறோம்.
விவசாயிகளோடும் அவர்களுடைய அமைப்புகளோடும் எந்தவொரு ஆலோசனையும் இன்றி மசோதாக்களை சட்டங்களாக நிறைவேற்றப்பட்டிருப்பது, விவசாயிகள் பெயரில் எந்தவொரு சட்டமும் கொண்டு வருவதற்கு முன்னர் அவர்களோடு கலந்தாலோசிக்க வேண்டுமென்ற சனநாயக உரிமை மீதான தாக்குதலென நாங்கள் கருதுகிறோம். இது, மத்திய அரசின் ஏதேச்சையதிகாரத் தன்மையைப் பிரதிபலிக்கிறது.
வேளாண்மையும் அது தொடர்பான பிரச்சினைகளும் ஏழாவது அட்டவணையின் கீழ் மாநில பட்டியலில் இருப்பதால், இந்தச் சட்டங்கள் மாநிலங்களின் உரிமைகள் மற்றும் அதிகார வரம்பை மீறுவதாக இருக்கின்றன. இது, அரசியலமைப்பு விதிகளுக்கு எதிராகவும், மிகவும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையிலும் மத்திய அரசின் கைகளில் அதிகாரத்தை மையப்படுத்தும் நடவடிக்கையைக் காட்டுகிறது.
மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு மட்டுமின்றி, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் நலன்களுக்கும் எதிரானவையாகும்.
விவசாய விளைபொருட்கள் சந்தை (ஏ.எம்.பி.சி) தொடர்பான சட்டமானது, விவசாய சந்தையில் நேரடியாக பெரும் வேளாண் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பல சலுகைகள் மூலம் அவற்றின் மேலாதிக்கத்திற்கு வழிவகுக்கும். இதன் விளைவாக குறைந்த பட்ச ஆதரவு விலையிலாவது தானியங்களை கொள்முதல் செய்யும் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகள் பலவீனமடைகின்றன. இது உணவு தானியங்கள் அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்படுவது குறைய வழிவகுக்கும், அது பொது விநியோக முறையை மோசமாக பாதிக்கும். இவ்வாறு விவசாயிகள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், பொது வினியோக முறையைச் சார்ந்திருக்கும் மக்களும் பாதிக்கப்படுவார்கள். தனியாருடனான வர்த்தகத்தில், குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு உத்திரவாதமளிக்கும் சட்டமியற்ற மறுப்பதன் மூலம், அதானி மற்றும் அம்பானி போன்ற நிறுவனங்களுக்கும் அவற்றைப் போன்ற உலகளாவிய பிற நிறுவனங்களுக்கும் உதவுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
ஒப்பந்த விவசாயம் தொடர்பான சட்டத்தில், ஒப்பந்த உடன்படிக்கையில் உத்திரவாதமளிப்பவராக இருப்பதற்கு அரசாங்கம் மறுத்துவிட்டதால், விவசாயிகள் பெரும் விவசாய வேளாண் நிறுவனங்களின் தாக்குதலுக்கு ஆளாகுமாறு விடப்பட்டுள்ளனர். ஒப்பந்தக்காரர் உடன்படிக்கையை மீறினால் அல்லது ஏமாற்றினால் விவசாயிக்கு சட்டரீதியான தீர்வு இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. விலைக்கு உத்திரவாதங்கள் இல்லாத இந்த சட்டம், விவசாயியை நிறுவனங்களுக்கு முன்னால் பலமற்றவர்களாக ஆக்கும். இந்த இரண்டு சட்டங்களிலும், குறைந்தபட்ச விலை இல்லாமல், விவசாயிகளின் பொருளாதார துயரம் தீவிரமடையும். இதுதான் விவசாயிகளை தங்களுடைய முக்கிய சொத்தாக இருக்கும் நிலத்தை விற்க கட்டாயப்படுத்துகிறது.
வேளாண் பொருட்களை பெருமளவில் கையிருப்பு வைக்க அனுமதிக்கும் மூன்றாவது சட்டம், பதுக்கலை சட்டப்பூர்வமாக்குவதற்கான ஒரு சட்டமே தவிர வேறில்லை. பெரும் நிறுவனங்கள் தானியங்கள் அல்லது உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற பிற வேளாண் பொருட்களை அதிக அளவில் சேர்த்து வைத்து, செயற்கையாக ஒரு பற்றாக்குறையை உருவாக்கி பின்னர் அதிக விலைக்கு விற்று இலாபம் ஈட்ட முடியும், இது நுகர்வோரை மிகவும் மோசமாக பாதிக்கும்.
ஆளும் பாஜக கட்சியின் தலைவர்களும், அமைச்சர்களும் விவசாயிகள் மீது நடத்திவரும் தொடர்ச்சியான அடக்குமுறையையும், விவசாயப் போராட்டத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதையும் கடுமையாக எதிர்க்கிறோம்.
மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் கொடுக்கும் ஒரு சட்டத்திற்காகவும், சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி கொள்முதல் மையங்களைத் திறப்பதற்காகவும் விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமெனவும் கோருகிறோம்.
போராட்டம் தீவிரப்படுத்த வேண்டுமென விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு முழு ஆதரவளிப்போமென உறுதி கூறுகிறோம்.
நன்றி கெதர் கட்சியின் இணையம்.