விவசாயம் காப்போம்-7
விவசாயம் காப்போம்-7

விவசாயம் காப்போம்-7

விவசாயத்தின் எதிர்காலம்

விவசாய எதிர்காலத்தின் மீது அக்கறையும் ஆசையும் கொண்டு, கடந்த காலத்தை திரும்பி பார்த்து, நிகழகாலத் தேவையாய் நான் உணரந்ததை எழுதுகிறேன். இதுதான் சரி என்று வாதிடவில்லை. விவசாயம் பற்றி நிறைய அறிந்தவர்களும் அனுபவம் உள்ளவர்களும் பலர் இருக்கின்றனர். எனது கட்டுரையின் எழுத்துக்களை, அதன் உண்மைகளை நீ்ங்கள் அராய்ந்து பார்க்கவேண்டும். எப்படிபட்ட கருத்துக்களையும் வரவேற்கிறேன்.

இன்றைய விவசாயம்.

இன்றைய சூழலில் விவசாயம் என்றாலே இராசயன உரம், வீரிய ஒட்டுவிதை, பூச்சி கொள்ளி, களைக்கொள்ளி என்ற வேளாண்முறையை தான் நினைவுகூற வேண்டியுள்ளது. நமது வேளாண்முறையை மாற்றி அமைத்த பசுமை புரட்சியையும் அது சார்ந்த மாற்றங்களையும் உற்றுநோக்கும் போது அது தந்த பலன்களை விட பாதிப்புகளே பெரிதாக தெரிகிறது. பசுமை புரட்சியினால் வேளாண் முறையில ஏற்பட்ட மாற்றம் விவசாயத்தின் வளர்ச்சியா?. என்று கணக்கிட்டு பார்த்தால் அது நிலைத்த நீடித்த வளர்ச்சியாக இல்லை என்பதும், இன்றைய விவசாயத்தின் வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம் என்பதையும் உணர முடியும்.

விவசாயப் பாரம்பரியம்.

நமது விவசாய முறை பாரம்பரியம் நிறைந்தது, நம் முன்னோர்கள் எத்தனையோ ஆண்டுகளாய் விவசாயம் செய்து வந்தவர்கள். அறிஞர்களும் அறிவியலார்களும் நம் நாட்டில் நிறையவே இருந்தனர், அதற்கு போதுமான அளவு சான்றுகளும் இருக்கின்றன. விவசாயத்தை முதன்மையாக கொண்ட நாட்டில் விவசாயம் பற்றிய புரிதலும் அது சார்ந்த அறிவியல் ரீதியான அணுகுமுறைகளும் இல்லாமல் இருந்திருக்க முடியாது. அப்படி வழிவழியாக விவசாயம் பார்த்து வரும் விவசாயிகளுக்கு நாம் விவசாயம் பற்றிய பாடம் கற்றுதர நேர்ந்தது மிகவும் வருத்திற்குரியது.

வஞ்சக வரலாறு.

1960ல் பசுமை புரட்சி கொள்கை கொண்டுவரபட்டதாகவும். 1990ல் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்ற கொள்கை முன்மொழிய பட்டதாகவும். வரலாற்றின் குறிப்பு சொல்கிறது. பசுமை புரட்சி ஏற்பட்டதிற்கு அன்றைய உணவு பற்றாக்குறை என்பதை தாண்டிய பல அரசியல் உள்நோக்கமும், ஆதாயமும் இருந்ததாக சில வரலாற்று கட்டுரைகள் விளக்குகின்றன.

வெறும் உள்நாட்டு அரசியல் அல்ல உலக அரசியல் அதற்கு பின்னால் செயல்பட்டதாக கட்டுரை விளக்குகின்றது. 1990களில் ஏற்பட்ட தாராளமயமாதல், உலகமயமாதல் கொள்கைகளிலும் உலக அரசியலின் பங்கு இருப்பதாகவும், சுயநல சிந்தனையாளர்களின் வஞ்சகம் மறைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இன்றளவும் மத்திய அரசின் தாராளமயமாக்கல் கொள்கைகள் அதன் அடிப்படையில்தான் என்றால் தவறிருக்காது.

அரசின் கொள்கைகள்.

பசுமை புரட்சியனால் ஏற்பட்ட இரசாயன விவசாய முறை கொஞ்சம் வளர்ச்சியடைவது போல் இருந்தாலும் பின்னர் வந்த பல அரசின் கொள்கைகளால் முதன்மை துறையான விவசாயம் பின்னுக்கு தள்ளப்பட்டது. இரண்டாம் துறையான உற்பத்தி துறை முக்கியத்துவம் பெற்றது, பின்னர் மூன்றாம் துறையான சேவைத்துறை முக்கியத்துவம் பெற்று விவசாயம் பின்னுக்கு தள்ளப்பட்டது.

பசுமை புரட்சியின் கோர முகம்.

பசுமை புரட்சியின் கோர முகம் காலப்போக்கில் வெளிப்பட ஆரம்பித்தது. “ஆரோக்கியமான விளையாட்டு வீரனுக்கு ஊக்கமருந்து கொடுத்தால் இன்னும் சிறப்பாக செயல்படுவான் என்று நம்பிய பயிற்சியாளர், ஊக்கமருந்தை கொடுக்க உண்மையரியாத வீரனும் உட்கொண்டான். ஆரம்பத்தில் நன்றாகவே விளையாடினான். ஆனால் காலப்போக்கில் அவன் உடல்நலம் குன்றி பாதிக்கபட்டானாம்”. அதுபோல் தான் இந்திய விவசாயமும், பசுமை புரட்சியில் வேளாண் விஞ்ஞானி என்ற பயிற்சியாளர் ஊக்க மருந்து என்கிற பெயரில் இரசாயன உரம், வீரய ஒட்டுரக விதை, பூச்சிகொள்ளி, களைக்கொள்ளிகளை கொடுத்தனர்.

உண்மையறியாத விவசாயி தன் வளமான நிலத்தில் அவற்றை இட்டான். ஆரம்பத்தில் விளைச்சல் நன்றாகவே இருந்தது. நாளடைவில் அது மண்னை மலடாக்கிவிட்டது. மேலும் பலவகையான நோய்கள், பூச்சி தாக்குதல் என்ற பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது. இதை உணராத விவசாயி இன்னும் அதையே நம்புகிறான்.

அதே சமயம் உண்மையறிந்த பயிற்சியாளனை போல அரசாங்கம் ஊக்க மருந்தையே விவசாயிடம் திணித்து வருகிறது. காரணம் கேட்டால் நாட்டின் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், நவீன முறை வேளான்மை என்று ஏதோ சொல்கின்றனர். ஊக்கமருந்தால் பாதிக்கப்பட்டவன் ஒருவனாக இருக்கலாம் ஆனால் இரசாயன முறை விவசாயத்தால் பாதிக்கபட்டது விவசாயி மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியனும்தான்.

தற்சார்பை இழந்த விவசாயம்.

விதை, உரம், உற்பத்தி முறை என்று எல்ல விதங்களிலும் தற்சார்பு கொண்டிருந்த விவசாயத்தை பசுமை புரட்சி என்ற பெயரால் விதை, உரம், களைக்கொள்ளி, பூச்சிகொள்ளி என்ற விவசாய இடுபொருட்களின் உற்பத்தி அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்தோம். முதலீடு இல்லாமல் உற்பத்தி செய்து வந்த விவசாயி இடுபொருட்களுக்கு செலவு செய்தான். தற்சார்பாய் இருந்தவனை, பன்னாட்டு நிறுவனங்களை சார்ந்திருக்க செய்தது அரசின் கொள்கை.

உற்பத்தி செலவு அதிகரித்தது. உற்பததிற்கு போதிய விலை கிடைக்கவில்லை. விவசாயி நஷ்டம் அடைந்தான். கடன் பட்டான். இன்று செய்தி தாள்களில் வரும் விவசாயிகளின் தற்கொலை செய்திகள் விவசாயித்தின் கோரத்தை வெளிப்படுத்துகிறது.

பாதிக்கபட்ட குடிமக்கள்.

விவசாயிகள் இப்படியிருக்க இரசாயன முறை வேளாண்மையில் விளைந்த விவசாய உற்பத்தியை உட்கொள்ளும் ஒவ்வொரு இந்தியனும் பாதிக்கபடுகிறான். விவசாயத்தில் பயன்படுத்தும் இரசாயனங்கள் மண்ணை கெடுப்பதோடு நின்றுவடுவதில்லை, உற்பத்தியாகும் பொருட்களில் எங்சியுள்ள விஷத்தன்மை மனிதனுக்கு பல உடல் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. காற்றையும் தண்ணீரையும் மாசுபடுத்துகின்றன. என்டோசல்பான் என்ற பூச்சிகொள்ளியின் பாதிப்பை யாரும் மறந்திருக்க மாட்டோம்.

அரசாங்கத்தின் அணுகுமுறை.

அரசாங்கம் விவசாயத்தின் மீது கவனம் செலுத்துவதேயில்லை. நாட்டின் மொத்த உற்பத்தியில்(GDP) விவசாயத்தின் பங்கு குறைவாக இருக்கிறது (அதற்கும் அரசின் கொள்கை தான் காரணம்) என்று கூறி பஜ்ஜெட்டில் விவசாயத்திற்காக ஒதுக்கபடும் நிதியை குறைத்து கொண்டே போகிறது. இங்கே நான் படித்த ஒரு செய்தியை பகிர்கிறேன். தொழல்நுட்பங்களில் சிற்ந்த வல்லரசான அமெரிக்க நாடு கொண்டிருக்கும் விவசாய மானியக் கொள்கை பற்றய செய்தி, “இந்த ஆண்டு நாட்டில் குறிப்பிட்ட உற்பத்தி பொருளின் தேவை குறைவாக இருக்கும் என்பதால், அந்த பொருளை உற்பத்தி செய்யாமல் இருக்க அந்த உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்கியுள்ளது”. விவசாயத்தை முதன்மை துறை என கொண்டுள்ள இந்திய நாட்டில் அரசின் நிலைப்பாடு பற்றி நமக்கு தெரியாமல் இல்லை.

சமூக மாற்றம்.

மாறிவந்த சமூக மாற்றமும் விவசாயத்தின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம்.

  1. இந்த காலகட்டத்தில் நாட்டின் பண்பாடு கலாச்சாரம் நாகரீகம் ஆகியன மாறத்தொடங்கின. ஒவ்வொருவரும் வசதியான சொகுசான வாழ்க்கை என்று கருதப்படும் வாழ்க்கையை வாழ ஆசைபட்டனர். பெரிய அளவில் விவசாயம் செய்தவர்கள் கூட உற்பத்தி மற்றும் சேவை துறையில் முதலீடு செய்தனர். தங்களை வளப்படுத்தி கொள்ள முற்பட்டனர். நாளடைவில் கல்வியறிவு வளர்ந்து வந்தது. விவசாயம் லபகரமான தொழிலாக இல்லை. பணம் சம்பாதிப்பது. பெரிய வீடு கட்டுவது, வாகனங்கள் வாங்குவது என சொகுசான வாழக்கை பற்றிய கனவு மக்களிடையே வளர்ந்தது. பிள்ளைகளை தங்கள் கனவினூடே வளர்த்தனர். வளர்த்து வருகின்றனர். படித்து முடித்ததும் தொழில்துறைகளை தேடி ஓடி தன்னை வளப்படுத்த முயற்சிக்கிறான். வளர்ந்து விட்ட நுகர்வு கலாச்சாரத்தால் எவ்வளவு ஈட்டினாலும் போதுவதில்லை.
  2. வெறும் வியாபாரம் ஆகிபபோன கல்வியால் பட்டம் பெறும் இளைஞர்கள் பொருளாதார வாழ்வோடு போட்டியிடுகையில் சமூகம் பற்றின அக்கறை கொள்ள அவர்களுக்கு அவகாசமில்லை. எது வாழக்கை என்பது புரியாமலேயே ஓடிக்கொண்டிருக்கின்றனர்.. இங்கேதான் பலவிதமான சமூக குற்றங்கள் பெருகியது.
  3. அண்மைகாலங்களில் படித்த இளைஞர்கள் விவசாயம் செய்வது என்பது கௌரவ குறைச்சல், படிப்பில் இயலாமை என்பன போன்ற மாய தோற்றங்களை சமூகம் உருவாக்கியுள்ளது. அனைவருக்கும் கல்வியென அரசாங்கம் முழங்குகிறது, கல்வியறிவு கொண்டவன் விவசாயம் செய்தால் இழிவு என சமூகம் உரைக்கிறது. கல்வியறிவற்ற, இளைஞர்கள் இல்லாத விவசாயம் எப்படி வளர்ச்சியடைய முடியும்.?

விவசாயிகளின் கல்லாமை.

இந்திய விவசாயம் வீழ்ச்சியடைந்ததிற்கு இன்னமொரு காரணம் கல்லாமை. எந்த உழவனும் விடிந்ததும் செய்தித்தாள் படித்துவிட்டு உழவுக்கு செல்வதில்லை, இரவு தொலைக்காட்சி செய்தி கேட்டுவிட்டு உறங்குவதில்லை. இதற்கு விதிவிலக்காய் சிலர் இருக்கலாம் ஆனால் விடிந்ததும் ஆங்கில செய்தித்தாள் படித்துவிட்டு, இரவில் உலகசெய்தி பார்த்துவிட்டு உறங்கும் கற்றவன் விவசாயம் பற்றி நினைப்பதேயில்லை. இன்றும் விவசாயத்தில் ஈடுபடுபவர்களில் 90சதவீதம் பேர் கல்வியறிவு இல்லாதவர்கள். வெறுமனே எழுத்து கூட்டி படிக்க தெரிந்தவன் கல்வியறிவு பெற்றவன் அல்ல, சரளமாக படிக்க தெரிந்தவன் சிந்தனையாளனும் அல்ல. ஆராய்ந்து அறியும் அறிவு வேண்டும். அரசியல் பொருளாதாரத்தில் இந்தியாவை தாண்டிய உலக அறிவு வேண்டும். அரசியல், பொருளாதாரம், அறிவியல் தெரிந்த இளைஞர்கள் விவசாயத்திற்கு வர வேண்டும். விவசாயத்தின் மீது புதிய அணுகுமுறையை கொண்டுவர வேண்டும்.

தற்காலிக பாதிப்பு.

மேலே சொன்ன சமூக, அரசியல், பொருளாதார பாதிப்புகளை தாண்டி இன்றைய விவசாயம் சுற்றுசூழல் பாதிப்புகளையும் எதிர்கொள்கிறது. சுற்றுசூழல் மாறுபாட்டால் குறைந்துவிட்ட மழையின் அளவு, பருவ மாற்றம், வற்றிப்போன நிலத்தடிநீர், மாசுபட்ட காற்று, குறைந்துபோன மண்வளம் இவற்றையெல்லாம் தாண்டி தறகாலிக பிரச்சனையாக விளைவித்த பொருட்களுக்கு கிடைக்காத சரியான விலை, இடைத்தரகர்களின் சுரண்டல், ஆள் பற்றாக்குறை, இடுபொருட்களின் விலையுயர்வு என்று பல சிக்கலை எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது.

பன்னாட்டு தொழிற்சாலைகளின் வரவு மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற வணிக போக்கால் வளமான விவசாய நிலங்கள் அபகரிக்கபட்டு வருகின்றன.அழிந்துவரும் விவசாயத்தை காப்பாற்ற அவசரமான நடவடிக்கை தேவைப்படுகிறது என்பதை கற்ற எல்லோரும் உணர்ந்து கொள்வோம். செயல்படுவோம்.

இயற்கை வேளாண்மை.

நாட்டின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் அதற்காக அண்டை நாட்டை சார்ந்திருக்கும் எந்தவொரு நாடும் முன்னேரவே முடியாது.. இந்தியாவின் பெருகி வரும் மக்கள் தொகைக்கும், பல பொருளாதார பிரச்சனைகளான விலைவாசி உயர்வு, வேலையின்மை, உணவு பற்றாக்குறை, வறுமை போன்றவற்றிக்கு சிறந்த தீர்வு விவசாயத்தை வளப்படுத்துதல்.

விவசாயத்தை வளப்படுத்த சிறந்த தீர்வு பாரம்பரிய வேளாண்முறை- இயற்கை விவசாயம். இரசாயம், வேதிப்பொருளற்ற இயற்கை முறை விவசாயத்தின் தேவையை பற்றி நிறைய அறிந்திருப்போம்.

இதன் முக்கிய அம்சம்

  1. மக்கள் உண்ணும் உணவு அரோக்கிமானதாக இருக்கும்.
  2. சுற்றுச்சூழல் மாசபடாமல் இருக்கும்.
  3. விவசாயி வேளாண் உற்பத்தி முறையில் தற்சார்பு அடைவான்.

இயற்கை சார்ந்த விவசாய முறை என்பது உலகளவில் எல்ல நாடுகளிலும் கடைபிடிக்கபடடு வரும் முறை தான். நமது நாட்டிலும் நம் தமிழகத்திலும் சில தன்னார்வ அமைப்புகள் இதை பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. வெகுசில விவசாயிகள் அதை செயல்படுத்தியும் வருகின்றனர். ஆனால் இயற்கை வேளாண்மை பற்றின கட்டுரைகள் வெறும் கட்டுரைகளாகவே இருக்கின்றன. நாம் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும், வெறும் எழுத்துக்கள் பாமர மக்களிடையே விழிப்புணர்வையோ மாற்றத்தையோ ஏற்படுத்திவிடாது. விவசாயிகள் கல்லாதவர்கள். முன்னோர்கள் செய்த அதே தவறை(அவர்களுக்கு விளங்காது என விட்டுவிடுவது) நாமும் செய்ய வேண்டாம். இளைஞர்கள் ஒன்றுகூடுவோம் செயல்படுவோம். கண்டறிந்ததையும், கற்றரிந்ததையும் பாமர மக்களுக்கு சொல்லிக் கொடுப்போம். விழிப்புணர்வை அவர்களது கழனிக்கு எடுத்து செல்வோம். சிதறி கிடக்கும் தீப்பொரிகளை இணைத்து ஒரு தீப்பந்தம் செய்வோம்.

இந்தியா விவசாய நாடு

ஒவ்வொரு இந்தியனும்-இளைஞனும் விவசாயம் பற்றிய அடிப்படைகளை அறிந்திருக்கவேண்டும். அவர் எந்த துறையில் வல்லுனராக இருந்தாலும் விவசாயம் தான் உணவளிக்கிறது. விவசாயம் வெறும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனையல்ல. அது இந்தியர்களின் உடல்நலம் சார்ந்த பிரச்சனையும் கூட, எனவே ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். பள்ளிகூடங்களில் விவசாயத்திற்கென்றே தனியொரு பாடம் வைத்தால் சிறப்பாக இருக்கும்.

தேவை ஓர் புரட்சி.

தோல்வியடைந்த தொழிலாய் விவசாயிகளாலேயே கருதப்படும் விவசாயத்தை செழிப்படைய செய்யவும் மாசுபட்டுபோன விவசாயத்தை துய்மை செய்யவும் கண்டறியப்பட்டுள்ள ஒரு தீர்வு இயற்கை விவசாயம். அந்த இயற்கை வேளாண்முறைக்கு விவசாயிகளை திருப்ப நமக்கு தேவை ஓர் புரட்சி.

இப்பெரும் முயற்சியை ஒரு தனிமனிதாக செய்ய இயலாது, வெற்றிகரமான விவசாய முறைறை ஒரு இளைஞனால் வகுக்க முடியாது. ஒருங்கினைந்த முயற்சி வேண்டும். சமூகத்தின் மீது அக்கறை கொண்டோர் முன்வரவேண்டும்.

ஒன்றுபடுவோம்… திட்டமிடுவோம்.. செயல்படுவோம்..

இது எனது பதிவு அல்ல…         வலைதளத்தில் சமூக ஆர்வலரின் கட்டுரை. இதனை வெட்டி சுருக்கி உள்ளேன் தேவையான பகுதியை எஉத்துக் கொண்டேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *