‘விவசாயி தற்கொலை’ என்பதை எவ்வாறு முடிவு செய்கிறார்கள்?
குறைந்தபட்சம் நிலம் வைத்து நேரடியான பயிர் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் தற்கொலைகளை மட்டுமே விவசாய தற்கொலைகள் என்று மாநில குற்றப்பதிவு ஆணையம் கணக்குக் காட்டுகிறது. விவசாய கூலிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் தற்கொலைகளை கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை. அரசு தரும் கணக்கின் படியே கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 62 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் – இதனை மொத்த மக்கள் தொகையில் உள்ள விவசாயிகளின் சதவீதம் எட்டுக்கும் குறைவானது என்கிற திட்ட கமிஷன் அறிக்கையோடு பொருத்திப் பார்த்தால் நாம் எதிர் கொண்டிருக்கும் அபாயத்தின் பரிமாணத்தை புரிந்து கொள்ள முடியும். நாடு ஒரு பெரும் நெருக்கடியை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டேயிருக்கிறது.
விவசாயத்தில் அழிவு என்பது கொஞ்சம் நஞ்சம் இருக்கும் இறையாண்மையை முற்றாக இழக்கும் நிலைக்கு நம்மை தள்ளி விடும்.
இன்றைய தேதியில் மொத்த மக்கள் தொகையில் 72 சதவீதம் பேர் ஊரகப் பகுதியில் வசிக்கிறார்கள் என்கிறது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு. எனில், விவசாயத் துறையின் வீழ்ச்சியென்பது 72 சதவீதம் மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கக் கூடியது. இந்நிலையில் தான் ஒவ்வொரு ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் துறையின் பங்களிப்பு படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. விவசாயத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 90-களின் துவக்கத்தில் 13 சதவீதமாக இருந்தது – தற்போது அது சுமார் 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.