1991-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 84 கோடி. இன்றைய தேதியில் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 137 கோடி. கடந்த 30 வருடங்களில் இந்திய மக்கள் தொகை சுமார் 60% சதவீத வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இதே காலகட்டத்தில் பயிர் தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்திருப்பது மத்திய திட்ட கமிஷனின் அங்கமான ‘பயன்பாட்டு மனித வள ஆராய்ச்சி மையத்தின்’ (Institute of Applied Manpower research) ஆய்வில் தெரிய வந்துள்ளது.
1991-ம் ஆண்டு துவங்கி 2012 வரையிலான கால அளவில் சுமார் ஒன்றரை கோடி விவசாயிகள் ‘இல்லாமல்’ போயுள்ளனர். கடந்த பதினோரு ஆண்டுகளில் மட்டும் சுமார் 77 லட்சம் விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு ‘காணாமல்’ போயுள்ளனர். திட்ட கமிஷனின் இந்த அறிக்கை, விவசாயம் சாராத துறைகள் உள்ளிட்டு, பொதுவாகவே புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்காத வளர்ச்சி தொடர்ந்து நீடித்து வருவதை சுட்டிக் காட்டியுள்ளது. முன்பு விவசாயத்தில் ஈடுபட்டிருந்தோர் பலரும் தற்போது பல்வேறு சேவைத் துறைகளுக்கும், விவசாயக் கூலிகளாகவும் இடம் பெயர்ந்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
1981-லிருந்து 1991 வரையிலான கால கட்டத்தில் விவசாயிகளின் (பயிர்த் தொழிலில் நேரடியாக ஈடுபடுவோர்) எண்ணிக்கை 9.2 கோடியிலிருந்து 11 கோடியாக உயர்ந்துள்ளது. உலகமயமாக்கல் அமுல் படுத்தப்பட்டதற்கு பிந்தைய காலங்களில் தான் விவசாயிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த இருபத்திரண்டு வருட காலகட்டத்தில் நாளொன்றிற்கு சுமார் 2,035 விவசாயிகள் ‘காணாமல்’ போயுள்ளனர் என்பது தான் அரசின் இந்த அறிக்கையில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது. இன்றைய நிலையில், கடந்து செல்லும் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 85 இந்தியர்கள் விவசாயத்திலிருந்து விலகிச் சென்ற வண்ணம் உள்ளனர்.
ஆக, இன்றைய தேதியில் மொத்த மக்கள் தொகையில் பயிர் தொழிலில் எட்டு சதவீதத்திற்கும் குறைவானவர்களே ஈடுபட்டுள்ளனர். ஆனால், அரசு வேறு ஒரு மோசடியான புள்ளிவிவரக் கணக்கை முன்வைக்கிறது. அதாவது, விவசாயத்தில் நேரடியான பயிர் தொழிலில் இல்லாமல், அதைச் சார்ந்த கூலி வேலைகள், கால் நடைகள் வளர்ப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளோரையும் சேர்த்து மொத்த மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் விவசாயத்தில் இருப்பதாகச் சொல்கிறது. இவ்வாறு சொல்வதன் மூலம், கடந்த இருபதாண்டுகளில் நடந்துள்ள 2,70,940 விவசாயிகள் தற்கொலைகளின் முக்கியத்துவத்தைக் குறைத்துள்ளது.
தொடரும் தோழர்களே….