விக்கிலீக்ஸ் மற்றும் ஜூலியன் அசான்ஜ்
விக்கிலீக்ஸ் மற்றும் ஜூலியன் அசான்ஜ்

விக்கிலீக்ஸ் மற்றும் ஜூலியன் அசான்ஜ்

விக்கிலீக்ஸ் மற்றும் ஜூலியன் அசான்ஜ் ஈராக் போர் ஆவணங்களைப் பிரசுரித்ததில் இருந்து பத்தாண்டுகள்.1970 களில் பென்டகன் ஆவணங்கள் (Pentagon Papers) வியட்நாமில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் அளவை வெளிப்படுத்தியதற்குப் பின்னர் இருந்து, அனேகமாக எந்த காலத்தையும் விட, ஏகாதிபத்திய குற்றகரத்தன்மையையும் நவகாலனித்துவ சூறையாடல்களையும் மிகவும் விரிவாக அம்பலப்படுத்தி விக்கிலீக்ஸ் ஈராக் போர் ஆவணங்களைப் பிரசுரித்ததில் இருந்து இன்று ஒரு தசாப்தம் ஆகிறது.சிறிய விபரக் குறிப்புகளில், அந்த ஆவணங்கள் ஈராக் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட எல்லா பொய்களையும் அம்பலப்படுத்தியதுடன், அப்பாவி மக்கள் அன்றாடம் கொல்லப்பட்டதிலும், சித்திரவதை செய்யப்பட்டதிலும், ஒடுக்கப்பட்ட மக்களை இலக்கில் வைத்து ஏகாதிபத்திய அடாவடித்தனத்தின் எண்ணற்ற நடவடிக்கைகளிலும், அமெரிக்க மற்றும் கூட்டு இராணுவ கட்டளையகங்களின் உயர்மட்டம் வரை நீண்டிருந்த மூடிமறைப்புகளிலும் சம்பந்தப்பட்டிருந்த காட்டுமிராண்டித்தனமான செயல்பாடுகளாக அந்நடவடிக்கையை அவை எடுத்துக்காட்டின.அந்த ஆவணம் மிகுந்த வலியுடன் சூழ்நிலைக்கு தகுந்த முறையில் மீளாய்வு செய்யப்பட்டிருந்ததுடன், அனைத்திற்கும் மேலாக ஜூலியன் அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸில் உள்ள அவரின் சிறிய சக பத்திரிகையாளர் குழுவால் அதன் அரசியல் உள்நோக்கங்கள் விளங்கப்படுத்தப்பட்டன.அசான்ஜ் 2006 இல் விக்கிலீக்ஸை ஸ்தாபித்த போது அவர் அபிவிருத்தி செய்திருந்த அந்த அமைப்பின் வடிவத்தில் பொதிந்திருந்த மிகவும் சக்தி வாய்ந்த பயன்பாடுகளில் அந்த ஆவணங்களும் ஒன்றாக இருந்தன. அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களால் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த, அந்த கசியவிடப்பட்ட ஆவணங்களின் பிரசுரம், உலக அரசியலையும் மிகப் பெரியளவில் மக்கள் வாழ்வையும் வடிவமைத்த அரசாங்கங்களினது அன்றாட இரகசிய சதிகளையும் நிஜமான இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளையும் மக்களுக்கு அம்பலப்படுத்த இருந்தது. நிஜமாக என்ன நடந்து வருகிறது என்பதை அறிவதன் மூலமாக மட்டுமே, போருக்கு முடிவு கட்டுவதற்காக போராடுவது உட்பட சாமானிய மக்களால் பரிச்சயமான அரசியல் நடவடிக்கையை எடுக்க முடியும்.இத்தகைய அறிவொளி கருத்துக்களை தீவிரமாக எடுத்து அவற்றின் மீது செயல்பட்டதற்காக, அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸை அமெரிக்க ஆளும் உயரடுக்கும், அல்லது பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள அதன் கூட்டாளிகளும் ஒருபோதும் மன்னித்துவிடவில்லை. அசான்ஜிற்கான ஆதரவுக்குக் குழிபறிக்க பயன்படுத்தப்பட்ட எல்லா பொய்கள் மற்றும் அவதூறுகளுக்குப் பின்னால், “அவர் எங்களின் குற்றங்களை அம்பலப்படுத்திவிட்டார், ஆகவே நாங்கள் அவரை அழிப்போம்,” என்பதே அந்த விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு எதிரான நிஜமான பிரச்சாரத்தின் தாரக மந்திரமாக உள்ளது.நாஜி ஆட்சியின் பயங்கரங்களுக்குப் பின்னர் அளவிலும் ஆழத்திலும் ஒருபோதும் பார்த்திராத, போர் குற்றங்களை அவர் அம்பலப்படுத்தி பத்தாண்டுகளுக்குப் பின்னர், அசான்ஜ் இப்போது பயங்கரவாதிகளையும் படுகொலையாளர்களையும் அடைக்க கட்டப்பட்ட ஓர் இடமான இலண்டனின் அதிகபட்ச காவல் கொண்ட பெல்மார்ஷ் சிறைச்சாலையின் ஓர் சிறையறையில் தனியாக அடைக்கப்பட்டுள்ளார். ஈராக் போர் ஆவணங்கள் உட்பட உண்மையை பிரசுரித்ததற்காக தேசத்துரோக சட்டத்தின் கீழ் வழக்கில் இழுக்கப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதையும் மற்றும் ஒரு பயங்கரமான சிறைச்சாலையில் 175 ஆண்டுகால தண்டனையையும் அவர் முகங்கொடுத்துள்ளார்.அந்த ஆவணங்களை வெளியிட்ட தைரியமான இரகசிய ஆவண வெளியீட்டாளர் செல்சியா மானிங், ஐக்கிய நாடுகள் சபை எதை அரசு சித்திரவதை என்று குறிப்பிடுகிறதோ அத்தகைய சிறை தண்டனையை உள்ளடக்கிய தசாப்த கால பெருந்துயரத்திற்கும், அசான்ஜிற்கு எதிராக பொய் வாக்குமூலம் வழங்க கட்டாயப்படுத்தப்படும் முயற்சிகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார், என்றாலும் தீரத்துடன் அதை அவர் அதை எதிர்த்துள்ளார்.ஆனால் ஈராக் சீரழிவை முடுக்கிவிட்ட அந்த குண்டர்களோ சுதந்திரமாக திரிகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் மற்றும் ஊழல்பீடித்த தாராளவாத பத்திரிகைகளால் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் அரசியல்ரீதியில் மறுவாழ்வு பெற்றுள்ளார், முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயர் மத்திய கிழக்கின் ஏகாதிபத்திய சதிகளில் இப்போதும் தலை நுழைத்துள்ளார், அவரின் ஆஸ்திரேலிய சமதரப்பினர் ஜோன் ஹோவர்ட் அருமையான ஓய்வு காலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நடவடிக்கையானது, “பாரிய பேரழிவு ஆயுதங்கள்,” குறித்த பொய்கள், பின்னர் ஈராக்கின் எண்ணெய்யை கொள்ளையடித்து அந்நாட்டைச் சூறையாடவும் ஆக்கிரமிப்பு படைகளிலேயே “உள்ளடக்கப்பட்டிருந்த” பொய்களின் அடிப்படையில் ஈராக் மீதான சட்டவிரோத படையெடுப்பை ஊக்குவித்த அதே ஆமாம் சாமி போடுகிற பெருநிறுவன ஊடங்களையே சார்ந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் அல்லது ஆஸ்திரேலியாவின் ஒரேயொரு மிகப்பெரிய பிரசுரம் கூட ஈராக் போர் ஆவணங்களின் பத்தாண்டு நினைவுதினத்தைக் குறித்து ஒரு குறிப்பையும் வழங்கவில்லை என்ற உண்மையிலேயே இந்த உடந்தைத்தனம் தொகுத்தளிக்கப்படுகிறது.ஆனால் இந்த ஆவணங்களின் முக்கியத்துவமும் மக்கள் நனவில் அவை ஏற்படுத்திய வெடிப்பார்ந்த தாக்கமும் நினைவூட்டப்பட வேண்டும்.2004 இல் இருந்து 2009 வரையில் அமெரிக்க ஆயுதப்படையின் 391,832 கள அறிக்கைகளை உள்ளடக்கி இருந்த அந்த பிரசுரம் அமெரிக்க இராணுவ வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆவணக் கசிவாக அதை ஆக்குகிறது. அவை 109,000 ஈராக்கியர் மரணங்களைப் பதிவு செய்திருந்தன.அமெரிக்க ஆயுதப்படையால் குறைந்தபட்சம் 66,081 பேர் அப்பாவி ஜனங்களாக விவரிக்கப்பட்டிருந்தது. இந்த பிரசுரிப்புக்கு முன்னதாக அப்பாவி மக்கள் மரணங்கள் மீது தங்களின் எந்த ஆவணமும் இல்லை என்று வாதிட்ட அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் முற்றிலுமாக மூடிமறைக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்ட சுமார் 15,000 பேரும் இதில் உள்ளடங்குவர். விக்கிலீக்ஸ் மற்றும் அசான்ஜ் இல்லாமல் இருந்திருந்தால், ஒரு சிறிய நகரின் மக்கள்தொகைக்கு சமமான அளவில், இந்த தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மூத்த குடிமக்களின் படுகொலைகளைக் குறித்து ஒருபோதும் வெளியே தெரியாமலேயே போயிருக்கும்.அந்த படுகொலைகள் மக்களுக்குத் தெரிய வந்த போது, அமெரிக்க இராணுவம் அவர்களை எப்போதும் “கிளர்ச்சியாளர்கள்” என்றே விவரித்திருந்ததை அந்த ஆவணங்கள் எடுத்துக்காட்டின. விக்கிலீக்ஸின் “சமகாலத்திய படுகொலை” (Collateral Murder) காணொளியில் ஆவணப்படுத்தப்பட்டவாறு, பாக்தாத்தில் நடத்தப்பட்ட இழிவார்ந்த 2007 அப்பாச்சி ஹெலிகாப்டர் தாக்குதல் விடயமும் இதுபோன்ற ஒன்றாக இருந்தது, இதில் இரண்டு ராய்டர் பத்திரிகையாளர்கள் உள்ளடங்கலாக 19 அப்பாவி மக்கள் படுகொலையும் உள்ளடங்கி இருந்தது. அந்நேரத்தில் வெளியிடப்பட்ட ஓர் அமெரிக்க இராணுவ பத்திரிகை குறிப்பு அதை போலியான “கிளர்ச்சியாளர்களுடன் நடந்த துப்பாக்கிச்சண்டை” என்று விவரித்தது.ஓர் இராணுவ சோதனைச்சாவடிக்கு “மிகவும் நெருக்கமாக வந்தமைக்காக” அமெரிக்கா மற்றும் கூட்டு படைத் துருப்புகள் சுமார் 700 அப்பாவி மக்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர் என்பதை அந்த போர் ஆவணங்கள் அம்பலப்படுத்தின. அவர்களில் குழந்தைகளும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் இருந்தனர். குறைந்தபட்சம் ஆறு சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் கர்ப்பிணி மனைவியரைப் பிரசவத்திற்காக மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல விரைந்திருந்தனர்.அந்த மனிதப் படுகொலை அமெரிக்க ஆக்கிரப்பின் அதிரடி துருப்புகளாக செயல்பட்ட தனியார் ஒப்பந்தந்தாரர்களாலும் நடத்தப்பட்டிருந்தன. ஒரு IED வெடிகுண்டு தாக்குதலுக்குப் பின்னர் பிளாக்வாட்டர் பணியாளர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி இருந்ததை ஓர் அறிக்கை விவரித்தது. அமெரிக்க சிப்பாய்கள் பாக்தாத்தில் “இராணுவ வாகனத்தில் இருந்தவாறு பிளாக்வாட்டர் PSD ஒருவர் சுடுவதைக் கண்காணித்ததாக” மற்றொருவர் தெரிவித்தார். மே 2005 தாக்குதல் ஓர் அப்பாவி மனிதரைக் கொன்றதுடன், அவர் மனைவி மற்றும் மகளை ஊனப்படுத்தியது.கைது செய்தவர்களை அமெரிக்கா சித்திரவதைக்காக அவர்களின் கைப்பாவை ஈராக்கிய பாதுகாப்பு படைகளிடம் வழமையாக ஒப்படைத்ததை அந்த ஆவணங்கள் எடுத்துக்காட்டின. பாக்தாத் பொலிஸ் நிலையம் ஒன்றில் கைதிகள் மீது மின்சாரம் செலுத்த பயன்படுத்தப்பட்ட “வயர் கொக்கிகளுடன் கூடிய கையடக்க ஜெனரேட்டர்” ஒன்று இருந்ததைக் குறித்து ஓர் அறிக்கை குறிப்பிட்டது. அந்த ஆவணங்கள் எடுத்துக்காட்டியவாறு, கூட்டுப்படை துருப்புகளின் உத்தியோகப்பூர்வ கொள்கை அதுபோன்ற சம்பவங்களை விசாரிப்பதாக இருக்கவில்லை.ஒட்டுமொத்தமாக எடுத்துப் பார்த்தால், உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த அரசாங்கங்கள், அவற்றின் இராணுவங்கள் மற்றும் பினாமிகள் சம்பந்தப்பட்ட, ஒரு மறுக்கவியலாத திட்டமிட்ட குற்றகரத்தன்மையின் சித்திரத்தைச் சித்தரித்தது.அசான்ஜை நாடு கடத்துவதற்காக கடந்த மாதம் பிரிட்டனில் நடந்த கண்துடைப்பு விசாரணைகளில் சாட்சியம் அளித்த, Iraq Body Count அமைப்பின் துணை ஸ்தாபகர் பேராசிரியர் ஜோன் ஸ்லோபோடா கூறுகையில், அந்த ஆவணங்கள் ஈராக்கிய மக்கள் கொல்லப்பட்டதை “ஒரேயொரு வெளியீட்டில் மிகப்பெரியளவில் உலகளாவிய மக்களுக்கு” கொண்டு வந்து காட்டியிருந்தது… “2010 இல் அந்த ஆவணங்களின் தனித்துவமாக இருந்த [பதிவு செய்யப்பட்ட அப்பாவி மக்களின் மரணங்கள்” அனைத்தும் இன்னமும் தனித்துவமாக உள்ளன… ஈராக்கிய போர் ஆவணங்கள் மட்டுமே அந்த சம்பவங்களின் ஒரே ஆதாரமாக உள்ளன,” என்றார்.இவற்றை ஒரு பரந்த அரசியல் உள்ளடக்கத்தில் நிறுத்தினால் இவற்றின் முக்கியத்துவம் இன்னும் கூர்மையாக ஆகிறது. மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய போர்-எதிர்ப்பு இயக்கமாக, 2003 இல், மில்லியன் கணக்கானவர்கள் ஈராக் படையெடுப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் இணைந்தனர்.அந்த போராட்டங்களில் அரசியல்ரீதியில் மேலோங்கியிருந்த போலி-இடதினர், பசுமைக் கட்சியினர் மற்றும் தொழிற்சங்க சக்திகள் அந்த இயக்கத்தை அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி மற்றும் ஆஸ்திரேலியாவில் தொழிற்கட்சி அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் பலவீனமான முறையீடுகளுக்குப் பின்னால் அடிபணிய வைக்க அவர்களால் ஆன அனைத்தையும் செய்தனர். 2008 இல், அவர்கள், ஒட்டுமொத்த எட்டாண்டு பதவி காலத்திலும் போரில் ஈடுபடவிருந்த, வோல் ஸ்ட்ரீட்டின் பிரதிநிதியான அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை அமைதியைக் கொண்டு வருபவராக அறிவித்து, அவரைத் தேர்ந்தெடுப்பதை ஆதரித்தனர்.விக்கிலீக்ஸ் பிரசுரித்த அந்த போர் ஆவணங்கள் போர்-எதிர்ப்பு இயக்கத்தின் மீதான இந்த ஒடுக்குதலைக் குறுக்காக வெட்டியதுடன், ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கு எதிராக ஒரு புதுப்பிக்கப்பட்ட போராட்டத்தின் அவசியத்தையும் உயர்த்தியது. இந்த நிகழ்வுபோக்கில், உலகெங்கிலுமான இளைஞர்கள், பலர் விடயத்தில் இது முதல்முறையாக, ஈராக் நடத்தப்பட்டு வந்த கொடூரங்களைக் குறித்தும் அரசியல்ரீதியில் அவை செயல்படுத்தப்பட்டதைக் குறித்தும் விழிப்புணர்வு அடைந்தனர்.போர் ஆவணங்களை வெளியிட்டதில் நியூ யோர்க் டைம்ஸூம் கார்டியனும் விக்கிலீக்ஸூடன் பங்கு வகித்தனர். விளக்கங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதும் விறுவிறுப்பை ஏற்படுத்துவதுமே அவற்றின் நோக்கமாக இருந்தது. ஆனால் அந்த பிரசுரங்கள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஓர் அரசியல் தீவிரப்படலுக்குப் பங்களிக்கின்றன என்பதும், விக்கிலீக்ஸ் அமெரிக்க அரசின் முழு பலத்தை முகங்கொடுக்கிறது என்பதும் தெளிவானதும், அவை மிகவும் அவதூறான வார்த்தைகளில் அசான்ஜைக் கண்டிக்கத் தொடங்கின.அசான்ஜை நோக்கி ஒவ்வொரு நாட்டிலும் ஒட்டுமொத்த அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகத்தின், குறிப்பாக அதன் போலி-இடது மற்றும் தாராளவாத பிரிவுகளின் படுமோசமான வெறுப்புக்கு, இத்தகைய அடிப்படை காரணம் இருந்தது. தங்களின் சொந்த தனிச்சலுகை கொண்ட சுயநலமான உயர்மட்ட நடுத்தர வர்க்க இருப்பை அவர்கள் எதன் மீது வைத்திருந்தனரோ அசான்ஜூம் விக்கிலீக்ஸூம் அந்த “படகை சாய்த்தனர்.” அனைத்திற்கும் மேலாக அந்த போர்கள் மொத்தத்தில் அவர்களின் பங்கு சொத்துக்களைப் பாதிக்கவில்லை என்பதால், லிபியா மற்றும் சிரியாவில் ஏகாதிபத்திய தாக்குதல்களுக்கு இந்த வட்டாரங்களின் பகிரங்க ஆதரவுக்கு அவை பங்களிப்பு செய்தன.ஆனால் போர் ஆவணங்களின் அந்த பிரசுரிப்பானது மனிதகுலத்திற்கும் மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்திற்கும் காலத்திற்கும் அழியாத பங்களிப்பைச் செய்தது, அதற்காக மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் அசான்ஜ் மிகச் சரியாக ஒரு மாவீரராக பார்க்கப்படுகிறார். இப்போது அசான்ஜின் சுதந்திரம், விக்கிலீக்ஸ் பணியாளர்கள் அனைவரது பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்தமாக ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுப்பது சர்வதேச தொழிலாள வர்க்கத்தைச் சார்ந்துள்ளது.இது அமெரிக்க போர் அச்சுறுத்தல்கள் உட்பட தீவிரமடைந்து வரும் போர் முனைவுக்கு எதிரான போராட்டத்திலிருந்தும், மற்றும் ஏகாதிபத்திய வன்முறை மற்றும் எதேச்சதிகாரவாதத்திற்குப் பொறுப்பான இந்த முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவு கட்டுவதற்குமான போராட்டத்திலிருந்தும் பிரிக்கவியலாததாகும்.- Oscar Grenfell(World socialist website)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *