வர்க்கப் பார்வையானது
வர்க்கப் பார்வையானது

வர்க்கப் பார்வையானது

    ஒடுக்கப்பட்டவர்களை அரசியல்மயப்படுத்துவதென்பது, அவர்களோடு உரையாடுவது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மேலும் தமக்கும், ஒட்டுமொத்தமாக சமூகத்திற்கும் விடுதலை பெற்றுத்தர தேவைப்படும் அறிவினை வழங்குவது என்பதாகும். தாம் ஒடுக்கப்படுகிறோம் என்று உணர்ந்து அதற்கெதிராகப் போராடும் சாதி, இனம், வர்க்கம்  விடுதலை இயக்கங்கள் கட்டி அமைத்தல்.

வர்க்கப் பார்வையானது இன்றைய அமைப்புச் சூழல் பற்றிய கட்டமைப்பை விளக்குவதுடன் எதிர்காலத்தில் ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமுதாயமானது எந்தக் கட்டுமானத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதையும் விளக்குவது..

எந்தவொரு ஒடுக்குமுறை வடிவமும் இரண்டு தளங்களில் நிகழ்கின்றன, ஒன்று கருத்தியல் தளம் மற்றொன்று பொருளாதர தளம். இதனை அடியொட்டி நாம் ஒடுக்குமுறை எனும் பிரச்சினையை ஆய்வு செய்வோமானால் –  இனம், மதம், சாதி, திறன், குடியுரிமை, பாலியல் , கலாச்சாரம் போன்றவை – ஒடுக்குமுறைக்கான கருத்தியல் வடிவங்கள் என்பதும், வர்க்க ஒடுக்குமுறை என்பது பொருளாதார அடிப்படையிலானது என்பதும் விளங்கும். இருப்பினும், கருத்தியல் ரீதியான ஒடுக்குமுறையிலும் பொருளாதார பின்விளைவுகள் இருக்கும், ஏனென்றால் மேலாதிக்கத்தின் தோற்றுவாயே பொருளாதார அடிப்படையிலானது, அவ்வமைப்பிற்குள் பொதிந்திருக்கும் அதிகார உறவுகளானது மேல்மட்டத்தில் பிரதிபலிக்கின்றது. மேலாதிக்கம், ஆளும் வர்க்கத்தின் பொதுப்படுத்தும் விதிமுறைகளும், அதன் விளைவான ஆளும் வர்க்க அதிகாரத் தொடர்ச்சியும் வாழ்வனுபவத்தின் மூலம் வளர்த்தெடுக்கப்படுகிறது.

விடுதலைக்கான  போராட்டமானது ஒடுக்குமுறையை மையப்படுத்தி இருக்கவேண்டும், ஒடுக்குமுறைக்கு அடித்தளமாய் இருக்கும் பொருளாதார நிலைமைகளை புறக்கணிக்கவியலாது. ஆனால், முதன்மை அல்லது அடிப்படை பிரச்சினை என்று அவரவரின் குறைபட்ட பார்வையினால், நாம் குறுகிய அணுகுமுறைகளையே காண முடிகிறது. இந்த முற்சார்பானது ஒடுக்குமுறையின் ஒவ்வொரு வடிவத்தையும் ஒரு தனித்த பிரச்சினையாகக் கருத வழிகோலும், அதன் விளைவாக, பல்வகை ஒடுக்குமுறையினை பிணைக்கும் மூல காரணத்தை அடையாளம் காணத்தவறிவிடும் சூழல் உருவாகிறது. இதன் விளைவாக, தமக்குள்ளாகவும், மற்ற இயக்கங்களோடும் முரண்பாடுகளும், பகைமையும் வளர்ந்து, பெரும்பாலும் அது சுய-விரக்தியில் சென்று முடிகிறது.

 “தந்தை வழிச் சமூகம், அதாவது ஆணாதிக்க அமைப்பு ஒழிக்கப்பட்டுவிட்டால் இனரீதியான ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை, மதவாத ஒடுக்குமுறை மற்றும் திறன், பாலியல் அடிப்படையிலான ஒடுக்குமுறைகள் களையப்பட்டுவிடுமா?”

இல்லை. இல்லவே இல்லை! மேலும், அகவாத கண்ணோட்டத்தினால் சமூகப் பாகுபாட்டின் வேரை நம்மால் அடையாளம் காணவும் முடியாது, அதனால் கருத்தியல்ரீதியான உருமாற்றங்கள் நிகழக் காரணமாய் இருக்கும் அடித்தளத்தை மாற்றியமைக்கும் முயற்சி சாத்தியமற்ற ஒன்றாகத் தோன்றுகிறது. ஒவ்வொன்றாய் களைவோம் என்று நாம் முடிவெடுத்தால், தன்னளவில் அது பெரும் பின்விளைவுகளையும், முரண்களையும் கொண்டதாகிப் போகும். மேலும், அடித்தளம் மாறாத நிலையில் மேலாதிக்கமானது உருமாறிக்கொண்டே இருக்கும், குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு அது மேலெழும்.

ஒடுக்குமுறை, மேலாதிக்கத்தின் முகவரமைப்பானது தொன்றுதொட்ட காலம் முதல் இருந்திருக்க வாய்ப்பில்லை, ஆகவே அதன் வரலாற்று வளர்ச்சியை நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பல்வேறு காரணிகள் படிநிலை அமைப்பிற்கும், மேலாதிக்கத்திற்கும் காரணமாய் இருக்கின்றன.

கடந்தகால சமூகம் குறித்த சமூக விஞ்ஞான ஆய்வானது – அதாவது உற்பத்தி முறையின் அடிப்படையிலான சமூக ஆய்வானது – சந்தைக்கென உற்பத்தி நடைபெறவில்லை என்பதையும், அப்போது ‘சரக்கு’, ‘பணம்’ குறிப்பாக கூலி உழைப்பு இருக்கவில்லை என்பதையும் உணர்த்துகிறது. அதனால் அப்போது சுரண்டலோ மேலாதிக்கமோ நிலவவில்லை. “சமூகத்தின் ஆரம்ப கால உற்பத்திகள் அனைத்தும் கூட்டு உற்பத்தி முறையிலானவையே, அதேபோல் பெரிய அல்லது சிறிய அளவிலான கம்யூனிச சமுதாயங்களுக்குள்ளாக நேரடி விநியோகம் மூலமாகவே நுகர்வும் நிகழ்ந்தது.”

மனிதர்கள் வாழ்வதற்கு ‘பொருள்’ உற்பத்தி என்பது ஒரு அத்தியாவசியத் தேவையாகும். கச்சாப் பொருட்கள், கருவிகள் மற்றும் துணைக் கருவிகளின் பயன்பாடு அதற்கு முன்நிபந்தனையாகிறது. இவையெல்லாம் கிடைத்துவிட்ட போதிலும், ஒன்றுக்கொன்று அருகருகில் வைத்துவிட்டால் உற்பத்தியானது தானாக நிகழ்ந்துவிடாது. அதன் மீது யாரேனும் உழைப்பை செலுத்த வேண்டும் – ஆக, இங்கு நமக்கு உழைப்பு என்பது தேவைப்படுகிறது. இவ்வாறாக, ஒரு பொருளை உற்பத்தி செய்ய நமக்கு உற்பத்தி சாதனங்களும், உழைப்பும் தேவை. உற்பத்தி முறையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றமானது உழைப்புப் பிரிவினைக்கும், வர்க்க உருவாக்கத்திற்கும் வழிகோலியது. அப்போதைய பொருளாதார அமைப்பின் வளர்ச்சிக்குப் பங்களித்த சூழ்நிலைகளானது அப்போதைய சமூக ஒழுங்காகிப் போனது. சமூக விஞ்ஞானிகள் அவ்வமைப்புகளை முறையே புராதன (ஏறக்குறைய கம்யூனிச) அமைப்பு, அடிமையுடைமை சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம் மற்றும் முதலாளித்துவ சமூகம் என்று விளக்கியுள்ளனர். இன்றைய உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு உற்பத்தி முறையான முதலாளித்துவம் குறித்தும், நாம் விரிவாகக் காண்போம்.

அடிப்படை வாழ்வாதாரத்திற்கான உற்பத்தி என்பது முதலாளித்துவத்தின் கீழ் செல்வக் குவிப்பிற்கான உற்பத்தியாக மாறிப்போனது. இலாபம் என்பது இயற்கையான ஒரு விதியல்ல. செல்வக் குவிப்பிற்காக முதலாளித்துவத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றாகும். அதற்காக தொழிலாளர்கள் மிகவும் கொடூரமான பணிச் சூழல்களில், இரக்கமற்ற பணி நேரங்களுக்குக்கு ஆட்பட்டு கடுமையாக உழைக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அந்த உழைப்புச் சக்திகளின் அதிக உழைப்பு நேரத்தினால் ஈட்டப்படும் மதிப்பைத்தான் ‘உபரி மதிப்பு’ என்று காரல் மார்க்ஸ் விளக்குகிறார். அவ்வாறு அபகரிக்கும் அந்த உபரி மதிப்பைத்தான் முதலாளித்துவமானது இலாபம் என்று சொல்கிறது. இந்த உபரி மதிப்பு அதிகரிப்பே மேலாதிக்க சமூக உறவுகளுக்கும், அதன் படிநிலை வெளிப்பாடுகளுக்கும் காரணமாக அமைகிறது என்பதே அவரது விளக்கம்.

முந்தைய உற்பத்தி முறையிலும், முதலாளித்துவத்திலும் காணப்படும் இந்த உழைப்புப் பிரிவினையை மார்க்ஸ் தெளிவாக விளக்கியுள்ளார். அதன் சாராம்சம் பின்வருமாறு:

முதலாளித்துவத்தின் கீழ், தனியுடைமையின் அடிப்படையிலான உழைப்புப் பிரிவினையின் விளைவாக உருவாகும் உறவுமுறைகள் மேல் கீழ் அடுக்குமுறை அமைப்பிலானவை. எஜமானர் – தொழிலாளி என்று அது வரையறுக்கப்படுகிறது. முந்தைய அமைப்பிற்கும், முதலாளித்துவ அமைப்பிற்குமான முக்கிய வேறுபாடு என்னவெனில் உழைப்புக்கு ஈடாக கூலி (பணம்) எனும் புதிய முறையிலான ஒரு இழப்பீடு வழங்கப்படுகிறது; பொருட்கள் ‘சரக்கு’களாகின்றன; உற்பத்தி சாதனங்கள்2 ‘மூலதனம்’* ஆகின்றன, சுரண்டல்வாத சூத்திரம் இலாபம் என்று அழைக்கப்படுகிறது. உற்பத்தி சாதனங்களின் ‘எஜமானர்’ உழைப்புச் சக்தியை வாங்கி, உபரி மதிப்பை இலாபம் என்று அபகரிக்கும் இந்த முறையே உழைப்புச் சுரண்டல் எனப்படுகிறது. தனியுடைமையின் அடிப்படையிலான உற்பத்தி முறையும், அதன் கீழான பொருளாதார அமைப்பும் முதலாளித்துவம் எனப்படுகிறது. இதன் மூலம், முதலாளித்துவ பொருளாதாரமானது சுரண்டலின் அடிப்படையிலானது, ஏற்றத்தாழ்வு மிக்கது என்பதை சொல்லவும் தேவையில்லை.

வாழ்வதற்காக மனிதர்கள் பொருளை உற்பத்தி செய்யவும், நுகரவும் வேண்டும். உற்பத்தியும் அதனோடு தொடர்புடைய நடைமுறைகளும் பொருளாதார நடவடிக்கைகளாகும். அதனால், மனித வாழ்வின் நிர்ணய சக்தியாக அதுவே விளங்குகிறது. இவ்வாறாக, மனிதர்கள் தனிநபர் அளவிலும், சமூக அளவிலும், உற்பத்தி உறவுகளுக்கு உள்ளாகிறார்கள், அதன் மறுபெயர் உழைப்பு உறவுகள். உழைப்பு உறவுகள் சுரண்டல்தன்மை கொண்டவையாக, நியாயமற்றவையாக இருக்கின்ற போது, அதன் விளைவாக ஏற்படும் சமூக உறவுகளும் சுரண்டல்தன்மை கொண்டவையாக, நியாயமற்றதாகவே இருக்கும்.

மற்றவை நாளை தொட்ர்வோம்………………..சி.ப

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *