வரலாற்றுப் பொருள்முதல்வாதம்
வரலாற்றுப் பொருள்முதல்வாதம்

வரலாற்றுப் பொருள்முதல்வாதம்

அன்பு மார்க்சிய மேடைத் தோழர்களுக்கு வணக்கம் மற்றும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்னை மீண்டும் ஒரு வகுப்பெடுக்க வாய்ப்பு தந்தமைக்கு இன்றைய தலைப்பான “ வரலாற்று பொருள்முதல்வாதம்”

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்பது

விஞ்ஞான சிந்தனையின் வளர்ச்சிக்கு மார்க்சும் எங்கெல்சும் அளித்த மகத்தான பங்களிப்பு என்னவெனில் அவர்கள் பகுதியளவு கட்டியிருந்த பொருள்முதல்வாதம் எனும் மாளிகையை முழுமை செய்தனர் .அதாவது அதை சமுதாயம் பற்றிய ஆய்வுக்குள் விரிவாக்கினர்.

தத்துவஞான பொருள்முதல்வாதத்தை மார்க்ஸ் ஆழமாக்கி வளர்த்து நிறைவு பெற செய்தார். இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதலாகவும் விரிவாக்கினார். அவரது வரலாற்றுப் பொருள்முதல்வாதம் விஞ்ஞான சிந்தனை கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது.

அதாவது மார்க்சிற்க்கு முந்தைய பல சிந்தனை யாளர்கள்

இயற்கைச் சூழல்களை மனதில் கொண்டு, பொருள் என்றால் என்ன? என்பதை பேசியிருக்கின்றனர். இயற்கை என்பதே பொருள் மயமானது,,அணுக்கள் பொருள் எனப்படுகின்றன,மனித உடல் பொருள்மயமானது, மனிதரின் மூளையும் நரம்பு மண்டலமும் பொருள் வடிவிலானவை தான், என்பது போன்ற பல பதில்களை நாம் மார்க்சுக்கு முந்திய பொருள்முதல்வாதத் தத்துவ வாதிகளின் எழுத்துக்களில் சந்திக்கிறோம்.

ஆனால் இயற்கையைக் கடந்து அல்லது இயற்கையை உள்வயப்படுத்தி மனித சமூகத்தினை நெருங்கி வரும்போது சமூக வாழ் வினுள் பொருட்சக்தியாக அமைவது எது? என்பது முதன்மையான கேள்வியாகிறது. வரலாற்றுப் பொருள் முதல் வாதம் இயங்கியல் பொருள்முதல்வாதத்தை சமூக வரலாற்றினுள் நின்று அர்த்தப்படுத்துகிறது. மார்க்சின் மிகப் பெரிய சாதனையே, இயற்கை என்ற புறவயமான எதார்த்தத்தைக் கடந்து, சமூக வாழ்வினுள் இயங்கியல் பொருள்முதல்வாதத்தைத் விரிவடைச் செய்தமைதான்.

சரி தோழர்களே இதனை விரிவாக பார்க்கும் முன் அதாவது  இன்றைய வகுப்பில் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் பற்றி பாக்கும் முன் முன்னர் வகுப்பில் இருந்து சற்று தெளிவடைவோமா? …

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் அதன் தலைப்புகளும்

அத்தியாயம் 1). வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஒரு விஞ்ஞானம்.

 அதன் உள்தலைப்புகள்

 a).வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?

b). வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தின் உள்ளடக்கம்.

அத்தியாயம் 2.

வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாத கருத்தோட்டம்

 a). வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் தோற்றம் சமுதாயம் பற்றிய கருத்தில் ஒரு புரட்சி b).ஒரு புறநிலை நிகழ்ச்சி போக்கே வரலாறு.

c). வரலாற்று அவசியம் மனிதன் செயற்பாடும்

d).சமுதாயத்தின் பொருளாயத நிலைமைகள்

அத்தியாயம் 3.பொருள் உற்பத்தியே சமுதாயத்தின் வாழநிலைக்கும் வளர்ச்சிக்குமான அடிப்படை

 உப தலைப்புகள்

a).பொருளாயத வஸ்துக்களின் உற்பத்திமுறை

b).சமுதாயத்தின் உற்பத்தி சக்திகள் c).உற்பத்தி உறவுகள்

d).உற்பத்தி முறைகள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வருவது விதிக்கு உட்பட்ட ஒரு நிகழ்ச்சிப் போக்கு

e). சமூக பொருளாதார அமைப்பு என்பது என்ன?

f) சமூக பொருளாதார அமைப்பின் பிரத்தியேக விதிகள்.

அத்தியாயம் 4.வர்க்கங்களும் வர்க்க உறவுகளும்

a). வர்க்கம் என்றால் என்ன?

b). சமுதாயம் ஏன் வர்க்கங்களாக பிளவுண்டிருக்கிறது ?

c).வர்க்கப் பகைமை

d).வர்க்கங்களின் வரலாற்று எதிர்காலம் .

அத்தியாயம் 5.அரசு

 a).அரசும் சமுதாயம் வர்க்கங்களாகங்களாக பிரிதலும்.

b) அரசின் வரலாற்று வடிவங்கள்

c).பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அதன் வடிவங்களும் வளர்ச்சியும்.

அத்தியாயம் 6 சமுதாயப் புரட்சி

a). சமுதாயப் புரட்சியின் வகைகள்.

 b). பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எவ்வாறு நிலை நிறுத்தப்படுகிறது.

அத்தியாயம் 7.

வெகுஜனங்களும் தனிநபர்களும் வரலாற்றில் வகிக்கும் பாத்திரம்.

a). மக்கள் என்றால் என்ன?

b). வரலாற்றில் மக்கள் வகிக்கும் பாத்திரம்

c).தலைசிறந்த தனிநபர்களின் பாத்திரம்

d).சமுதாய உறவுகளின் கூட்டுத்தொகுதிதான் மனிதன். e).கம்யூனிச சமுதாயத்தில் தனிநபர்.

அத்தியாயம் 8.

a). சமுதாய உணர்வின்ம் வடிவங்கள்

b)சமுதாய உளப்பாங்கு சித்தாந்தம் சமுதாய உணர்வும் ஒரு வடிவமே ஒழுக்கம் சமுதாய உணர்வின் ஒரு வடிவமே மதம் கலை புரட்சிகர தத்துவமும் புரட்சிகர இயக்கம்

ஒரு சுருக்கம்…..

வரலாறு என்றால் மாறுதல். சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கிற மாறுதல் என்று அர்த்தம். சமுதாயத்துக்கு ஒரு வரலாறு உண்டு; அது தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கிறது.

தங்களுடைய வரலாற்றை மனிதர்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொள்கிறார்கள். அதன் முடிவு எப்படிப் போனாலும் சரி, ஒவ்வொரு மனிதனும் தான் உணர்வு பூர்வமாய் விரும்பிய குறிக்கோளைப் பின்பற்றிச் செல்கிறார்கள். இப்படியே மனிதர்களின், பல சித்தங்கள் வெவ்வேறு திசைகளில் செயல்படுகின்றன. இவற்றால் வெளியுலகம் பலவகைகளில் பாதிக்கப்படுகின்றது. இதனால் கிடைக்கின்ற விளைவைத்தான் சரித்திரம் என்கிறோம்.

வர்க்கப் போராட்டம் வரலாற்றுக்கு விசைத்தரும் சக்தி:

சமுதாயத்தில் இரண்டே இரண்டு வர்க்கங்கள்தான் இருக்கின்றன என்பதல்ல எத்தனையோ வ்ர்க்கங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமாக முதலாளி வர்க்கமும் தொழிலாளி வர்க்கமும்தான் போராடிக் கொண்டிருக்கின்றன.

கருத்துக்களுக்கு அடியிலே தம்மிடையே போராடிக்கொண்டிருக்கிற வர்க்கங்களையும் நாம் பார்க்கிறோம். இதிலிருந்து தெரிவதென்ன? வர்க்கப் போராட்டம் தான் வரலாற்றுக்கு விசைத்தரும் சக்தி; அதாவது வர்க்கப்போராட்டம்தான் சரித்திரத்தை விளக்குகிறது.

ஒவ்வொரு வர்க்கப் போராட்டம்தான் விடுதலைக்காக நடைபெறும் வர்க்கப்போராட்டங்கள் எல்லாம் நிலைமையின் தேவையினால் ஒரு அரசியல் வடிவம் பெற்றிருக்கின்றன. அப்படி அரசியல் வடிவம் பெற்றிருக்கின்றன. அப்படி பெற்றிருந்த போதிலும், விடுதலைக்காக நடைபெரும் வர்க்கப் போராட்டங்கள் எல்லாம் கடைசியாக பொருளாதார விடுதலை என்ற பிரச்சினையைத்தான் சுற்றிச் சுற்றி வந்த வண்ணமிருக்கின்றன.

வர்க்கங்கள் எங்கிருந்து வந்தன அன்பதை அறிய வேண்டுமானால் சமுதாயத்தின் வரலாற்றைப் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும்போது வர்க்கங்கள் என்பவை எப்போதும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை, என்பது புலப்படும். பண்டைக்கால கிரேக்க நாட்டில் அடிமைகலும் எஜமானர்களும் இருந்தார்கள். மத்திய காலத்தில் பண்ணையடிமைகளும் நிலப்பிரபுக்களும் இருந்தார்கள். சுருக்கமாகக் குறித்தால் கடைசியில் முதலாலி வர்க்கமும் தொழிலாளி வர்க்கமும் தொழிலாளி வர்க்கமும் இருக்கிறார்கள்.

எங்கெல்ஸ்: உற்பத்திமுறை – உருமாற்றம் அடைந்ததின் விளைவாகத்தான் முதலாளி வர்க்கமும் தொழிலாளி வர்க்கமும் தோன்றின.

1.வரலாறு என்பது மனிதர்கள் சாதிக்கும் ஒரு சாதனை ஒரு செயல்.

2.வரலாற்றை உருவாக்கும் செய்கையை மனிதர்களின் சித்தம்தான் நிர்ணயிக்கிறது.

3.இந்தச் சித்தம் மனிதர்களுடைய கருத்துக்களின் ஒரு பிரதிபளிப்பு ஒரு வெளியீடு ஆகும்.

4.இந்தக் கருத்துக்கள் எனப்பட்டவை மனிதர்கள் வாழ்கிற சமுதாய நிலைமைகளின் ஒரு பிரதிபிம்பமே.

5.இந்தச் சமுதாய நிலைமைகள் தான் வர்க்கங்களையும் அவற்றின் போராட்டங்களையும் நிர்ணயிக்கின்றன.

6.இந்த வர்க்கங்களை நிர்ணயிப்பது பொருளாதார நிலைமைகளே.

இந்தச் சங்கிலித் தொடர் என்னென்ன வடிவங்களில் என்னென்ன நிலைமைகளில் வெளிபட்டுச் செயல்படுகிறது என்ற விசயத்தைத் திட்டமாகச் சொல்ல வெண்டும். எனவே நாம் சொல்கிறோம்.

1.கருத்துக்கள் என்பவை அரசியல் துறையில் வெளிபட்டு வாழ்க்கையின் நடைமுறை ஆகிறது.

2.அந்தக் கருத்துக்களுக்குப் பின் இருக்கிற வர்க்கப் போராட்டம் சமுதாயத் துறையில் வெளிபட்டுச் செயல்படுகின்றது.

3.பொருளாதார நிலைமைகள் பொருளாதாரத் துறையில் வெளிபட்டுச் செயல்படுகின்றன.

எனவே மார்க்சிய சிந்தனையைச் சரியாக அடையாளப் படுத்திப் புரிந்துகொள்ளுவதற்கு மார்க்சின் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் முக்கியமாகிறது.

இனி விரிவாக….

விஞ்ஞான சிந்தனையின் வளர்ச்சிக்கு மார்க்சும் எங்கெல்சும் அளித்த மகத்தான பங்களிப்பு என்னவெனில் அவர்கள் பகுதியளவு கட்டியிருந்த பொருள்முதல்வாதம் எனும் மாளிகையை முழுமை செய்தனர் .அதாவது அதை சமுதாயம் பற்றிய ஆய்வுக்குள் விரிவாக்கினர்.

அதாவது

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் ஏற்பட்ட மாபெரும் நிகழ்ச்சிகள் சமுதாயம் என்பது ஒற்றைக் கல்லில் செதுக்கிய அமைப்பு அல்ல மாறாக அது ஒரு உயிர்த்துடிப்புள்ள சமூக அமைப்பு இது மாறுதலுக்கு இலக்காகும் தனது வாழ்நிலையில் மற்றும் வளர்ச்சியில் மானுட சித்தம் மற்றும் உணர்வில் இருந்து சார்பின்றி நிற்கும் ஒரு சில புறநிலை விதிகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் என்பதனைப் புலப்படுத்தின.

தத்துவஞான பொருள்முதல்வாதத்தை மார்க்ஸ் ஆழமாக்கி வளர்த்து நிறைவு பெற செய்தார். இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதலாகவும் விரிவாக்கினார். அவரது வரலாற்றுப் பொருள்முதல்வாதம் விஞ்ஞான சிந்தனை கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும் அரசியலையும் பற்றிய கருத்துக்களில் குழப்பமும் தான்தோன்றித்தனம் ஆதிக்கம் செலுத்தி வந்தன .இப்போது அவை போய் வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த முழுமையும் உள்ளிணக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞான தத்துவம் வந்துவிட்டது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக ஒரு சமுதாய அமைப்பு முறையில் இருந்தது அதை விட உயர்வான இன்னொரு சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பது அது காட்டுகிறது” என்கிறார் லெனின்( மார்க்சியத்தின் மூன்று தோற்ளுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் தேர்வுநூல் தொகுதி 1 ல் பக்கம் 104.).

மானுட சமுதாயத்தின் வளர்ச்சி விதிகளை நாம் அறிய விரும்பினால் தத்துவமான பொருள்முதல் வாதத்தின் பொதுவான கோட்பாடுகளையும் இயற்கை இயலின் விதிகளையும் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது சமுதாய வரலாற்றிலும்

சமுதாய வாழ்விலும் அவை செயல்படும் பிரத்தியேக வடிவங்களையும் பயிலவேண்டும். பகைமையான கட்டமைப்பு உள்ள ஒரு சமுதாயத்தில் தான் ஒற்றுமை மற்றும் எதிர் நிலைகளின் மோதல் விதி வர்க்கப் போராட்ட வடிவத்தை எடுக்கிறது .பல்வேறு வரலாற்று சகாப்தங்கள் வர்க்கப் போராட்டம் எத்தனை பன்முக வடிவங்களில் போக்குகளில் தோற்றம் அளித்துள்ளது!.

சமுதாயத்துக்கு பிரயோகிக்கப்படும் இயக்கவியல் முறையும் வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தின் முறையும் சாரத்தில் ஒரே மாதிரியான கருத்துருவாக்களாகும். சமுதாயத்தின் பால் பிரயோகிக்கும்போது  இந்த இயக்கவியல் முறை ஸ்தூலமடைக்கிறது இதன் அர்த்தம் பொதுவான தத்துவஞான வகை இனங்களுக்கு கூடுதலாக சமுதாய வாழ்நிலை சமுதாய உணர்வு பொருள்வகை மற்றும் சித்தாந்த உறவுகள் உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவுகள் உற்பத்தி பாங்கு சமூக பொருளாதார அமைப்பு அடித்தளம் மேற்கட்டுமானம் சமுதாய வர்க்கங்கள் தேசங்கள் இத்தியாதி மற்றும் சமூகவியல் வகையினகளானவை நமக்கு கட்டாயம் வேண்டும் இந்த வகை இனங்கள் சமூக வாழ்நிலை மற்றும் சமூக வரலாற்று அறிவின் முக்கிய விதிகளை தொகுத்தளிக்கின்றன.

மார்க்சும் எங்கெல்சும் 1840 ஆம் ஆண்டுகளில் 1844 ஆம் பொருளாதாரத் தத்துவஞான ஏட்டுபடிகள், புனித குடும்பம், ஜெர்மன் சித்தாந்தம் மற்றும் குறிப்பாயும் மேலும் முதிர்ச்சியடைந்த வடிவிலும் தத்துவத்தின் வறுமை, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இவர் போன்ற நூல்களில் வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தின் அடிப்படை அறிதியுரைகளை வகுத்து முன்வைத்தனர் . வரலாற்றின் சமுதாய வளர்ச்சியின் புதியகண்ணோட்டம் முதலில் ஒரு கருதுகோளாக முறையாகவும் மட்டுமே இருந்தது ஆனால் இது முதல் தடவையாக வரலாற்றை விஞ்ஞான முறையில் அணுகுவது சாத்தியமாக்கும் கருதுகோள் மற்றும் முறையாக இருந்தது.

லெனின் எழுதிய படி அவர்கள் சமூகவியலை ஒரு விஞ்ஞானம் ஆக்கினார்கள் காரணம் அவை சமூக உறவுகளின் வளர்ச்சியில் மறு நிகழ்வையும் ஒழுங்கு முறையையும் வெளிப்படுத்துவதே சாத்தியமாக்கி பல்வேறு நாடுகளில் அதே மாதிரியான அமைப்புகள் சமூக பொருளாதார அமைப்புகளை கருத்துருவாக்கங்கள் ஆக பொதுமைப்படுத்த உதவின அவற்றை ஒன்று சேர்க்கும் போது கூரை வெளிப்படுத்தவும் அதே சமயம் அவற்றின் வளர்ச்சியும் பிரத்தியேக நிலைமைகள் காரணமாக உள்ளார்ந்து கிடக்கும் வேறுபாடுகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு அளித்தன.

1850ம் ஆண்டுகளில் மார்க்ஸ் மிகவும் சிக்கலான சமூக பொருளாதார அமைப்பான முதலாளித்துவம் பற்றிய ஆரவாரமான ஆய்வு மேற்கொண்டார் தமது மூலதனம் நூலில் அவர் இந்த அமைப்பின் துவக்கம் இயக்கம் மற்றும் வளர்ச்சியை எடுத்துக் காட்டினார் இதனுள் எப்படி உற்பத்தி சக்திகளும் உற்பத்தி உறவுகளுக்கும் இதயம் சமூகங்களுக்கு இடையேயும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன என்றும் பொருள் உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் இதற்கு இசைவான அரசியல் உயர் கட்டுமானம் ஒரு சில கருத்துக்கள்

ஒழுக்க நெறிகள் குடும்பம் மற்றும் அன்றாட உறவுகள் எழுகின்றன என்பதையும் அவர் நிலைநாட்டினார் மூலதனம் நூல் ஆக்கத்துடன் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஆதாரப் படுத்தப்பட்டதான விஞ்ஞான சமூகம் தத்துவம் ஆயிற்று.

பிராணி மற்றும் தாவர உயிரினங்களின் தொடர்பில்லாதவை எதிர்பாராதது நிகழ்வன கடவுளால் படைக்கப்பட்டவை மாற்றவொண்ணாதவை என்ற கருத்துக்கு டார்வின் முடிவு கட்டினர். உயிரினங்களின் மாறும் தன்மையையும் வரிசை தன்மையையும் நிலைநாட்டுவது மூலமாக உயிரியலை  முற்று முழுமையாக முதலாவதாக ஒரு விஞ்ஞான அடிப்படையில் நிறுவி வைத்தார் இதேபோன்று சமுதாயம் தனிநபர்களின் எந்திரகமான ஒரு திரட்சி நிலை எனவும் இது அதிகாரிகளின் ( சமுதாயத்தின் சித்தம் அல்லது அரசாங்கத்திஸ்தாபித்தா)எல்லாவிதமான மாறுதல்களுக்கும் இடம் தருவது என்றும் இது இஷ்டம் போல தோன்றும் மறையும் எனும் கருத்தை மார்க்ஸ் முடிவுக்கு கொண்டு வந்தார். முதன்முதலில் சமூகவியலை விஞ்ஞான அடிப்படையில் நிறுவினார். சமுதாயத்தின் பொருளாதார உருவாக்கமே சம்பந்தப்பட்ட உற்பத்தி உறவுகளின் ஒட்டுமொத்த மென்று ஸ்தாபித்தது மூலமும் இத்தகைய உருவாக்கங்கள் இன் வளர்ச்சி இயற்கை வரலாற்றின் நடைமுறை என்று நிறுவியும் இதைச் செய்தார். லெனில் (தொகுப்பு நூல் 1. பக்கம்)

18/12/20

சமுதாய வளர்ச்சியை ஆளுமை செய்யும் சக்தி எது என்று வெகு காலத்துக்கு முன்பிருந்தே மனிதர்கள் அறிய முயன்றார்கள் பாவிகளான மனிதர்கள் கடவுளின் பக்கம் தமது சிந்தனையைத் திருப்பி கடவுளிடமிருந்து கருணையும் மன்னிப்பும் வரும் என்று காத்திருக்க வேண்டும் என்று மதமும் மத ஸ்தாபனமும்  ஆலோசனை வழங்கின எல்லாம் வல்ல இறைவன் தனது கைகளில் மனிதர்களின் தலைவிதி ஏந்தி நின்றார். பணிந்து நின்று கீழ்படிந்து அடக்கத்துடன் தெய்வீக அருள் நலத்தை நம்பு என்று மத ஸ்தாபனம் போதிக்கிறது.

மார்ஸ்க்கு முந்திய மகத்தான பொருள்முதல்வாத தத்துவஞானிகள் இறுதியாக வந்தவரான லுதுவிக் பயர்பாக்ஸ் கருத்து முதல் வாதத்தையும் மதத்தையும் தீவிரமாக கண்டன விமர்சனம் செய்த அதே நேரத்தில் சமுதாய வரலாற்றில் அடித்தளமாக இருப்பது மதமே என்றும் மதத்தினுடைய வடிவங்களே சகாப்தத்தின் புறத்தோற்றத்தை நிர்மாணிக்கின்றன என்று கருதினார். சமுதாயம் மோசமாக இருக்கிறது என்றால் எந்த மதத்தை அடிப்படையாகக் கொண்டு சமுதாயம் விளங்குவது அந்த மதம் மோசமாக இருப்பதற்கு காரணம் என்று நினைத்தார் ஃபயர்பாக்ஸ்.

சமுதாயத்தில் நல்லதாக மாற்ற வேண்டுமானால் மோசமான மதத்தை உதாரணமாக கிருத்துவத்தை மாற்றி நல்ல ஒரு மதத்தை அந்த எடுத்துக் கொண்டு வரவேண்டும் என்றார் அவர் எனவே அன்பின் முழுநிறைவான மதம் எந்த ஒரு புதிய ஒன்றை பயன்படுத்தி மதத்தை அடிப்படையாகக் கொண்டு சமுதாயம் தானாக செம்மை அடையமுடியும் என்று எண்ணினார்.

ஆனால்

சமூகம் பற்றிய வரலாற்றை ஒரு விஞ்ஞானத்தின் அடிப்படையில் மார்க்ஸ் வலியுறுத்துகிறார், சமூகப் பொருளாதார அமைப்பு முறையின் வளர்ச்சி தான் வரலாற்றின் இயற்கையான நிகழ்ச்சியாக  நிறுவுகிறார்

       அதாவது, சமூக நடவடிக்கை அனைத்துக்குமான அடிப்படையாய் அமைவது பொருட்களின் உற்பத்தி நடவடிக்கையும் அப்போது ஏற்படுகின்ற உறவுகளுமே, சமூக வளர்ச்சிக்கு அடித்தளமாய் அமைகிறது. அந்த உறவுகளுக்கு ஏற்ப தோன்றும் தத்துவம், மதம், அரசியல் போன்ற அறிவுத்துறைகள் அனைத்தும் மேற்கட்டமைப்பாய் அமைகிறது.

       அடித்தளம் என்றழைக்கப்படுகின்ற உற்பத்தி நடிவடிக்கையின் போது ஏற்படுகின்ற உற்பத்தி உறவே சமூக வாழ்நிலையை உருவாக்குகிறது. இந்த வாழ்நிலையே மேற்கட்டமைப்பு என்றழைக்கப்படுகின்ற சமூக உணர்வுநிலையை தோற்றுவிக்கிறது.

சமூக வாழ்நிலை எப்படி தோன்றுகிறது என்பதைப் பார்ப்போம்.

       மனிதர்கள் முதலில் உணவுக்காகவும், உடுப்பிற்காகவும், உறைவிடத்துக்காவும் உழைக்கிறார்கள், அதன் பிறகே அரசியல், கலை போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். அதாவது மனிதர்கள் தமது வாழ்வாதாரங்களுக்கே, முதலில் போராடுகின்றனர், அவ்வாறு போராடும் போது அவர்களின் நலன்களுக்கு ஏற்பவே கலை, அரசியல், மதம் போன்றவை தோன்றுகிறது.

       மனிதனின் உழைப்பு நடிவடிக்கையே அதாவது அவனது வாழ்வாதார உற்பத்தி நடிவடிக்கை தான் சமூக வளர்ச்சியின் அடிப்படைச் சக்தியாகும்.

முதலாளித்துவ உற்பத்தி முறையில், ஏற்பட்ட உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலும், சந்தையை நோக்கி திட்டமிடாத வகையில் உற்பத்தி செய்யப்பட்டதாலும் உற்பத்தியில்  உபரி ஏற்பட்டு விடுகிறது. இந்த உபரி உற்பத்தி முதலாளித்துவ சமூகத்தில் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இந்தப் பொருளாதார நெருக்கடி எல்லாத் துறைகளிலும் ஏற்பட்டு பொது நெருக்கடியாய் மாற்றம் அடைவதை குறிப்பிடும் போது உற்பத்திச் சக்திகள் வளர்ச்சி அடைந்த நிலையையும் அதனைத் தொடர்ந்து நிகழப்போகும் சோஷலிசப் புரட்சியையும்  விவரிக்கிறார் எங்கெல்ஸ்.

       ஒவ்வொரு தரமும் நெருக்கடியின் போது சமூகம் அதனுடைய உற்பத்திச் சக்திகள் உற்பத்திப் பொருட்களது சுமையின் கீழ் திணறித்திக்குமுக்காடுகிறது. இந்த உற்பத்தி சக்திகளையும் உற்பத்திப் பொருட்களையும் முதலாளித்துவ சமூகத்தால் பயன்படத்திக் கொள்ள முடியாமல் போகிறது (டூரிங்குக்கு மறுப்பு பக்கம் 494)

       முதலாளித்துவம், நவீன உற்பத்தி சக்திகளைத் தொடர்ந்து நிர்வகிப்பதற்கான ஆற்றலை இழந்து விட்டதை இந்தப் பொருளாதார நெருக்கடிகள் எடுத்துக் காட்டுகின்றன. (டூரிங்குக்கு மறுப்பு பக்கம் 487) முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் இருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயமான உற்பத்திச் சாதனங்களை பாட்டாளி வர்க்கம் புரட்சியின் மூலம் சமூக சொத்தாக்கி சோஷலிச சமூகத்தை அமைக்கிறது.

       மேலும் எங்கெல்ஸ் கூறுகிறார், உலகளாவிய இந்த விடுதலைப் பணியைச் செய்து முடிப்பது நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையாகும். இந்தக் கடமையை செய்வதற்கான வரலாற்று நிலைமைகளையும் அதனோடு இதன் தன்மையையும் தீர்க்கமாய்ப் புரிந்து கொண்டு, தற்போது ஒடுக்கப்பட்டதாய் இருக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு, இந்த  நிலைகளையும் அது செய்து முடிக்க வேண்டிய சகாப்தகரமான இந்த சிறப்புடைய பணியின் முக்கியத்துவத்தையும் முழு அளவில் தெரியப்படுத்துவது தான் பாட்டாளி வர்க்கத்துக்கு கோட்பாட்டுரீதியான வெளியீடாகிய  விஞ்ஞான சோஷலிசத்தின் கடமையாகும். இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கான கண்ணோட்டத்தை வரலாற்றுப் பொருள்முதல்வாதம் பாட்டாளி வர்க்கத்துக்கு நல்குகிறது. (டூரிங்குக்கு மறுப்பு பக்கம் 500-501)

மார்க்ஸ்சும் எங்கெல்சும் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி கூறிய கருத்தாக்கத்தை மூன்று வகையில் பிரிர்த்து பார்ப்போம்.

முதலில், அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது என்பதையும். இரண்டாவதில், மேற்கட்டமைப்பு அடித்தளத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும், மற்றும் வடிவத்தை அமைப்பதில் பெரியதளவாயிருப்பதையும், முன்றாவதில், மேற்கட்டமைப்பின் இடைச்செயலை மறுத்திடவில்லை என்பதோடு, இறுதியில் பொருளாதார இயக்கம் மிகவும் வலிமையானதாகவும், ஆதிமூலமானதாகவும், தீர்மானகரமான சக்தியாகவும் இருப்பதையும் குறிப்பிடுகிறது.

மனிதர்கள் தமது வாழ்க்கைக்காக உற்பத்தி செய்திடும் போது, தவிர்க்க முடியாத வகையில் திட்டவட்டமான உறவுகளில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் மனிதர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து புறநிலையாக இருப்பவையாகும்.  இதுவரை வளர்ச்சியடைந்துள்ள  பொருளாதார உற்பத்திச் சக்திகளின் மட்டத்திற்கு ஏற்ப, உற்பத்தி உறவு ஏற்படுகிறது. இந்த உற்பத்தியின் கூட்டுமொத்தமே அன்றைய அரசியல் பொருளாதார அமைப்பாகும், அதுவே அச்சமூகத்தின் அடித்தளமாகும். இந்த அடித்தளத்தின் மீது சட்டம், அரசியல் போன்ற மேல்கட்டமைப்பு எழுப்பப்படுகிறது. இதற்கு பொருத்தமாக சமூக உணர்வின் வடிவங்கள் தோன்றுகின்றன.

மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை,  அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.. இந்த மாற்றம் விரைவிலோ அல்லது சற்றுதாமதமாகவோ நடைபெறலாம். மனிதர்களின் சமூக வாழ்நிலையே அவர்களது உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.  இவ்வகையில் தான் சமூக உணர்நிலையின் மாற்றத்தை புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு சமூக அமைப்பும் அதன்  உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை எட்டுவதற்குமுன்பாக மறைந்திடுவதில்லை. அச்சமூகத்திலுள்ள பழைய உற்பத்தி உறவுகள் அகற்ற வேண்டுமானால், புதிய உற்பத்தி உறவுகள் தோன்றுவதற்கான, பொருளாயத நிலைமைகள் அச்சமூகத்தில் தோன்றியிருக்க வேண்டும்.

உற்பத்தியும், மறுவுற்பத்தியும், அடித்தளத்தை நிர்ணயிக்கிற சக்தியாகும். ஆனால், மேற்கட்டமைப்பு அடித்தளத்தை தாக்கம் செலுத்துவதையும், இடைச்செயல் புரிவதையும் மார்க்சியம் மறுத்திடவில்லை. இந்த இடைத்தொடர்பு மிகவும்  தொலைவானதாக இருக்கிறது, முடிவில்லாத தற்செயல் நிகழ்வுகளுக்கு மத்தியில்,  முடிவில் பொருளாதார இயக்கம் இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறது. மேற்கட்டமைப்பு பலயினங்களில் வடிவத்தை நிர்ணயிப்பதில் பெரிதளவாயிருக்கின்றன. 

இரண்டாம் நிலையானாலும் சித்தாந்தங்கள் அடித்தளத்தின் மீது எதிர்ச்செயல் புரிவதை மார்ச்சியம் மறுக்கவில்லை. இதனை மறுப்பவர்கள் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை  இயக்கவியல் கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை, காரணத்தை ஒரிடத்திலும், விளைவை வேறோர் இடத்திலும் காண்கிறார்கள். ஆனால் இந்த இடைச்செயல் சார்பானதாகும், மேற்கட்டமைப்பு அடித்தளத்திற்கு கட்டுப்பட்ட வகையில் தனது செயற்பாட்டில் சுதந்திரம் பெற்று அடித்தளத்தில் தாக்கம் செலுத்துகிறது. இந்த சார்பான தாக்கம், மேற்கட்டமைப்பின் முழுச்சுதந்திரம் பெற்றதாகவோ, அடித்தளத்தை  நிர்ணயிக்கிற சக்தி உடையதாகவோ கணக்கிடமுடியாது. பொருளாதார இயக்கம் மிகவும் வலிமையானதாகவும், ஆதிமூலமானதாகவும், தீர்மானகரமான சக்தியாகவும் இருக்கிறது.

       அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானித்தால் அது பொருள்முதல்வாதம், மேற்கட்டமைப்பு அடித்தளத்தை தீர்மானித்தால் அது கருத்துமுதல்வாதம். இதனை ஏற்றுக் கொள்ளாமல், அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கும் சில நேரங்களில் மேற்கட்டமைப்பும் அடித்தளத்தை தீர்மானிக்கும், அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது, அதே போல் மேற்கட்டமைப்பு அடித்தளத்தை நிர்ணயிக்கிறது, அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பரம் நிர்ணயிக்கிறது, அடித்தளம் மேற்கட்டமைப்பை இறுதியில் தான் தீர்மானிக்கிறது. என்றெல்லாம் கூறுவது கருத்துமுதல்வாதக் கண்ணோட்டவயப்பட்டதேயாகும்.

       இயக்கவியல் பொருள்முதல்வாதம் அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கின்றது என்கிற நிர்ணயிப்பை ஏற்றுக் கொள்கிறது. புறநிலைத் தன்மையை ஏற்றுக் கொள்ளாத போக்கினர், அடித்தளத்தால் தீர்மானிக்கும் என்கிற நிர்ணயிப்பை மறுத்து, அடிப்படையில் ஏற்படுவதற்கு முன்பே, அதாவது புறநிலையின் அனுபவத்துக்கு முன்பே, புறநிலைத் தொடர்பின்றி அவனுக்கு வாய்த்த ஒன்றாக கருதுகின்றனர். இது அப்பட்டமான அகநிலைக் கருத்துமுதல்வாதத் தன்மைப் பெற்றதேயகும்.

அடித்தளத்துக்கும் மேற்கட்டமைப்புக்கும் உள்ள இயக்கவியல் தொடர்வை அறியாமலும், அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கும் என்பதில் உள்ள பொருள்முதல்வாத விளக்கத்தை புரியாமலும் மார்க்சியம் என்பதை சிலவார்த்தைக்குள்அடக்கப் பார்க்கின்றனர்.

       இங்கு ஒன்றை மட்டும் பார்வையிடுவோம்.

       மார்க்ஸ், ஒரு கோட்பாடு (Theory) மக்களைப் பற்றிப் பிடித்தவுடன் ஒரு பொருளாயத சக்தியாகிவிடுகிறது என்கிறார்.

       ஒரு கோட்பாடு மக்களுக்கானது என்பதை அது வெளிப்படுத்தும் போது அது மக்களைப் பற்றி பிடித்திடுகிறது. அது தீவிரமானதாக மாறும்போது, அது மனிதர்களுக்கானது என்பதை அது வெளிப்படுத்துகிறது. தீவிரமானது என்பதற்கு விஷயத்தின் வேரைப் புரிந்துகொள்வது என்பது பொருளாகும். மேலும் கூறுகிறார், எந்த அளவுக்கு மக்களின் தேவைகளை நிறைவு செய்வதாக இருக்கிறதோ, அந்த அளவுக்குத்தான் அந்த மக்களிடையே அக்கோட்பாடு பொருளாயத சக்தியாகும்.

       இதனை பலபேர் பலவாறு புரிந்துவைத்துள்ளனர். ஒரு கருத்தை மக்கள் பற்றிக் கொண்டால் அது பொருளாயாத சக்தியாகிறது. எந்த கருத்தானாலும் அதனை மக்கள் பற்றிக் கொண்டால் அது பொருளாயத சக்தியாகிறது. ஒரு கருத்து நல்லதோ கெட்டதோ அது மக்களைப் பற்றிக் கொண்டால் அது பொருளாயத சக்தியாகிறது என்று பலவாறு விரித்துக் கொண்டே செல்கின்றனர்.

       மார்க்ஸ் எதனைக்குறிப்பிடுகின்றார் என்பதை அறியாமல், மார்க்சின் சில வாக்கியங்களை மட்டும் படித்துவிட்டு இதுபோன்ற அபத்த முடிவிற்கு பலர்வருகின்றனர்.

       முதலில் இங்கு மார்க்ஸ் கருத்து என்று பொத்தாம்பொதுவாக கூறவில்லை குறிப்பிட்ட கோட்பாட்டையே குறிப்பிட்டுள்ளார். அந்தக் கோட்பாடு பொருளாயத சக்தியாக வேண்டுமானால், முதலில் அது மக்களுக்கானது என்பதை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும், மக்களை தீவிரமாக பற்றிப்பிடிக்க வேண்டுமானால் மக்களின் தேவைகளை நிறைவு செய்திடுவதாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்திடும்போது அது மக்களை பற்றிபிடித்து பொருளாயத சக்தியாக உறுவெடுத்து செயற்படுகிறது.

       இவைகளைக் குறிப்பிடுகின்ற முன்னுரையில், தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தை தத்துவத்திடம் காண்கிறது என்று எழுதியிருக்கிறார் மார்க்ஸ்.

       தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தில் – மூலதனத்துடன் நடத்தும் வாழ்வியலில் – காண்கிறது, பாட்டாளி வர்க்கம் தமக்குத் தேவையான அறிவார்ந்த ஆயுதத்தை தத்துத்தில் காண்கிறது. இதில் தத்துவத்துக்குத் தேவையான பொருளாயத சூழல் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. பாட்டாளி வாக்கத்தின் நலனை இத்தத்துவம் நிறைவேற்றப்படுவதால் மார்க்சிய தத்துவம் பாட்டாளி வார்க்கத்தை பற்றிப்பிடித்து பொருளாயத சக்தியாகிறது. பாட்டாளி வர்க்கத் தத்துவத்தை, முதலாளிகளிடம் பற்றிபிடிக்க வேண்டும் என்று என்ன முயற்சித்தாலும் முடியாது. ஏன் என்றால், அது முதலாளித்துவ நலன்களை  நிறைவேற்றாது, பாட்டாளி வர்க்கத்தின் நலன்களையே நிறைவேறுகிறது, இந்தத் தத்துவம் பொருள்முதல்வாதம் என்பதில் சந்தேகிப்பவர்கள் பாட்டாளி வர்க்கச் சிந்தனையுடையவர்கள் இல்லை.

       பாட்டாளி வர்க்கத்திடமிருந்து பொருள்முதல்வாதத்தை பிரிக்கின்ற முயற்சி, பாட்டாளி வார்க்கத்தின் விடிவுக்கு எதிரானதாகும்.

பொருளாயத உற்பத்தியே சமூக வளர்ச்சியின் அடிப்படை

சமூகஉற்பத்தி முறை தான், எல்லா வகையான சமூக உணர்வுநிலைகளையும் தீர்மானிக்கின்றன. உற்பத்தி முறை என்பது உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகிய இரண்டையும் உள்ளடங்கியவையாகும். இந்த பொருளாதார அமைப்பையே அடித்தளம் என்றழைக்கப்படுகிறது.

தத்துவயியல், மதம், அரசியல், சட்டம், அறநெறி, பண்பாடு, கலை போன்றவை குறிப்பிட்ட பொருளாதார அமைப்பிற்கு ஏற்ப தோன்றும் மேற்கட்டமைப்பாகும்.

அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையே ஒன்றுடனொன்றான தொடர்பு நிலவுகிறது. இந்தத் தொடர்பில் அடித்தளம் முதன்மையாகவும், மேற்கட்டமைப்பை தோற்றுவிக்கும் காரணமாகவும் இருக்கிறது. ஆகவே சமூகத்தின் அடித்தளத்திற்கு ஒத்த மேல்கட்டமைப்பு உருவாகிறது. இவ்வாறு கூறுவதால் மேற்கட்டமைப்பு என்பது தன்முனைப்பின்றி, அடித்தளத்தின் பிரதிபலிப்பாக மட்டும் செயல்படுவதாக சொல்லிவிட முடியாது. மேல்கட்டமைப்பின் தனிப் போக்கை மார்க்சியம் மறுத்திடவில்லை. அடித்தளத்தின் மீதான மேல்கட்டமைப்பின் தாக்கம், அடித்தளத்திற்கு பொருத்தமானதாக இருக்கும் என்பதைத்தான் வலியுறுத்துகிறது, இதனால் தான் மேல்கட்டமைப்பின் சுதந்திரம் சார்புநிலையானது என்ற கருத்தைத் தெரிவிக்கிறது. தீர்மானகரப் பங்காற்றுவது அடித்தளமேயாகும். அடித்தளத்தால் உருவாக்கப்பட்ட மேற்கட்டமைப்பு, அடித்தளத்தை உறுதிப்படுத்துகிறது. தோன்றிய அடித்தளத்தை வலுபடுத்த முடியுமே தவிர அடித்தளத்தில் எந்த மாற்றத்தையும், மேல்கட்டமைப்பால் உருவாக்க முடியாது.

மேற்கட்டமைப்பு என்பதின் தன்முனைப்பான செயற்பாட்டை மறுத்திடாமலும், இதன் செயப்பாட்டின் இன்றியமையாததை மார்க்சியம் அறிந்திடாமலும் இல்லை, அடித்தளத்தில் ஏற்படும் மாற்றம், மேற்கட்டமைப்பில் உடனே, தானாகவே ஏற்பட்டுவிடும் என்றும் கூறவில்லை, மேற்கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், அடித்தளத்தால் தீர்மானிக்கப்படுகிறது. மேற்கட்டமைப்பு, அடித்தளத்தால் நிர்ணயிக்கப்பட்ட வகையில் சுதந்திரத்தோடு செயல்படுகிறது என்பதைத்தான் மார்க்சியம் வலியுறுத்துகிறது. 

சமூக வாழ்வின் அடிப்படை பொருளுற்பத்தி முறையில் அடங்கியிருக்கிறது.  இந்த பொருள் உற்பத்திமுறை என்பது உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் என்ற இவ்விரண்டையும் உட்கொண்டுள்ளது.

உற்பத்திச் சக்திகள்  (Productive Forces)

பொருள் உற்பத்தியே சமூகத்தின் அடிப்படையாகும். மக்கள், வாழ்வதற்கு உணவு, உடை, உறைவிடம் போன்ற தேவையான பொருளை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. வாழ்விற்கான பொருட்களை  தோற்றுவிக்கும்,  மக்களின் செயற்பாடுதான் உற்பத்தி என்றழைக்கப்படுகிறது. இந்த உற்பத்தி நிகழ்த்துவதற்கு, உழைப்பின் குறிப்பொருள், உழைப்புக் கருவிகள், உழைப்பு ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது.

உழைப்பின் குறிப்பொருள் (Objects of labour)

                உற்பத்தியை தொடங்குவதற்கும், விளைபொருட்களைச் செய்வதற்கும் தேவைப்படும் பொருளை உழைப்பின் குறிப்பொருள் என்றழைக்கப்படும். அதாவது  எந்தப் பொருட்களின் மீது உழைப்பாளி, தமது உழைப்பை செலுத்துகிறாரோ, அந்தப் பொருள் உழைப்பின் குறிப்பொருள்.

உழைப்பின் குறிப்பொருள் இரண்டு வகைப்படும். ஒன்று இயற்கையில் நேரடியாக கிடைப்பவை, அவை பபூமியிலிருந்து கிடைக்கும் கனிமவளங்கள், நீரிலிருந்து கிடைக்கும் மீன்கள், வனப்பொருட்கள் மற்றும் நிலம் போன்றவை. சாகுபடிக்கு உகந்த நிலமே விவசாயத்திற்குரிய உழைப்பின் குறிப்பொருளாகும்.

மற்றது, ஏற்கெனவே உழைப்பிற்கு உட்படுத்தப்பட்டதான கச்சாப்பொருட்கள். நூற்பாலைக்குத் தேவையான பருத்தி, ஏற்கெனவே உருக்கி ஆயத்தமான நிலையிலுள்ள  இரும்பு, அதாவது இரும்பைக் கொண்டு உருவாக்கப்படும் பொருளுக்கு, இரும்பு கச்சாப்பொருளாகும், இது போன்றவை இவ்வகையினைச் சேர்ந்ததாகும்.

உழைப்புக் கருவிகள் (Instruments of labour)

கருவிகளைப் பயன்படுத்தாமல், உழைப்பை உற்பத்தியில் செலுத்த முடியாது. மனிதன், உழைப்புக் கருவிகளை, உழைப்பின் குறிப்பொருளின் மீது செயல்படுத்தியே பொருட்களை உற்பத்தி செய்கிறான். தொடக்க காலத்தில் கற்கோடாரி, மண்வெட்டி, வில் அம்பு ஆகியவையும், இன்றைய காலத்தில் இயந்திரம், சாலைகள், போக்குவரத்துச் சாதனங்கள்,  தொழில்நுட்பம் போன்றவையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். உழைப்புக் கருவிகளோடு சேர்ந்து இந்த தொழில்கூடம், கிடங்கு, ரயில்வே, கால்வாய், மின்சாரம் போன்ற சாதனங்களும் சேர்ந்து உழைப்புக் கருவிகளாகிறது.

உழைப்பு

இயந்திரமோ, கச்சாப்பொருளோ தானாகவே எதையும் உற்பத்தி செய்திட முடியாது. அதில், மனிதனது உழைப்பு நடவடிக்கை செலுத்தும் போதுதான் உற்பத்தி நடைபெறுகிறது. உழைப்பு என்பது இயற்கையிடமிருந்து கிடைக்கும் பொருட்களை, மனிதத் தேவைகளை நிறைவு செய்ய முற்படும் நடவடிக்கையாகும்.

மனிதயினம் தமக்குத் தேவையான வாழ்க்கைச் சானதங்களை உற்பத்திச் செய்துகொள்கிறது, இதுவே விலங்கினத்திடமிருந்து மனிதயினத்தைப் பிரித்துக் காட்டுவதாக இருக்கிறது.

உழைப்பு ஒருவகையில் மனிதனையே படைத்தது எனலாம். மனிதன் உழைப்பில் ஈடுபடும்போது திறமையும் தேர்ச்சியும் பெறுகிறான். உழைப்பு செற்பாட்டில் புதுப்புது மேம்பாட்டை புகுத்துகிறான்.

உற்பத்திச் சக்திகள்   

உழைப்பின் குறிப்பொருள், உழைப்புக் கருவிகள் இரண்டும் சேர்ந்து உற்பத்திச் சாதனங்கள்  (Means of Production) என்றழைக்கப்படும். இவைகள் கடந்த கால உழைப்பின் விளைபொருளாகும். இவை இரண்டும் தாமே பொருட்களை உற்பத்தி செய்திட முடியாது. உழைப்பைப் பயன்படுத்தாத உற்பத்திச் சாதனங்கள் உயிரற்ற பொருட் குவியலாக, பயனற்று வீணாய்க்கிடக்கும். மக்களின் உழைப்புச்சக்தி இதனோடு இணைந்து செற்பட்டால் தான் உற்பத்தியை நிகழ்த்த முடியும்.

உற்பத்தி அனுபவமும்,  திறமையும் கொண்ட மக்களின் உழைப்பு சக்தியும், உற்பத்திச் சாதனங்களும்  சேர்ந்து உற்பத்திச் சக்திகள் (Productive Forces) என அழைக்கப்படும்.  மக்கள் தான் சமூகத்தின்  முதன்மையான உற்பத்திச் சக்தியாகும். உற்பத்திச் சக்திகள் எப்போதும் சமூகத் தன்மை கொண்டவையாக இருக்கிறது.

உற்பத்தி உறவுகள் (Relation of Production)  

உற்பத்தியை நிகழ்த்தும் போது இயற்கையை மாற்றுகிற அதே நேரத்தில் மக்கள் ஒருவருடன் ஒருவர் இணைந்து செயல்படுகின்றனர், அப்போது  உறவுகள் ஏற்படுகிறது. அத்தகைய உற்பத்தி தொடர்பாக நடைபெறும் உறவுகள் தான் உற்பத்தி உறவுகளாகும். சமூகத்தில் நிகழும் உறவுகளில் இதுவே முதன்மை பெற்றவையாக இருக்கிறது. மற்ற உறவுகளை  இதுவே தீர்மானிக்கிறது.

உற்பத்தி சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான ஒற்றுமையே குறிப்பிட்ட சமூக பொருளாதார அமைப்பாக  நிலவுகிறது. உழைப்பு கருவிகளிலும், உழைப்பு திறமைகளிலும் ஏற்படும் படிப்படியான வளர்ச்சி உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை பெருக்குகின்றன. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிகளில் ஏற்படும் மாற்றங்களை ஒட்டி, உற்பத்தி உறவுகளிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும், ஆனால் உற்பத்திச் சக்திகளில் குறிப்பிடும்படியான மாற்றங்கள் ஏற்படும் பொழுது, சொத்துடைமை வர்க்கம் பழைய உற்பத்தி உறவுகளில் மாற்றம் ஏற்படுவதற்கு தடையாய் நிற்கிறது. இந்த உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான மோதல், சமூகப் புரட்சிக்கு வித்திடுகிறது. இதனைத் தொடர்ந்து பழைய சமூகப் பொருளாதார அமைப்பு மறுதலிக்கப்பட்டு, புதிய சமூக பொருளாதார அமைப்பாக உருவெடுக்கிறது.

உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான இயக்கவியல் தொடர்பு

உற்பத்திமுறையில் இரண்டு இன்றியமையாத தன்மை உற்பத்தி சக்திகளும், உற்பத்தி உறவுகளும் ஆகும்.  இவற்றில் ஒன்றை தனியே பிரித்து பார்க்க முடியாது. இவை இரண்டும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

உற்பத்திச் சக்திகளின் இயல்புக்கு பொருத்தமாக, உற்பத்தி உறவுகள் அமைந்திருப்பது, சமூக வளர்ச்சிக்கு, இன்றியமையாதவையாகும். ஆனால் இந்த பொருத்தம் தற்காலிகமானதே. உற்பத்தி வளர்ச்சியின் தொடக்க கட்டத்தில் மட்டுமே இசைவான முறையில் உற்பத்தி உறவுகள் நிலவுகிறது. வளர்ச்சி முதிரும் போது முரணும் பெருகுகிறது.

உற்பத்தியின் வளர்ச்சி என்பது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலிருந்தே தொடங்குகிறது. உழைப்புச் சக்தியின் வளர்ச்சி, முதன்மையாய் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியால் தோன்றுகிறது. உற்பத்தியைப் பெருக்குவதற்கு, உற்பத்திக் கருவிகளை செம்மைப்படுத்துவதும், தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் கூடவே மனிதர்களின் உழைப்புத் திறன் தேர்ச்சி பெறுகிறது, உற்பத்தி அனுபவம் வளமை அடைகிறது.

       உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி குறிப்பிட்ட கட்டம் வரை, உற்பத்தி உறவுகளை பெரிய அளவிற்கு பாதிக்கப்படாமல் கட்டுப்பட்டே காணப்படுகிறது. ஆனால் உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் பழைய உற்பத்தி உறவோடு முரண்பட வைக்கிறது. உற்பத்திச் சக்திகள் உற்பத்தி உறவுகளைக் காட்டிலும் விரைவாக மேம்பாடடைகிறது, பழைய உற்பத்தி உறவுகளோ, அந்த புதிய வளாச்சியடைந்த உற்பத்திச் சக்தியுடன் முரண்படுகிறது.

பழைய உற்பத்தி உறவுகள், புதிய உற்பத்திச் சக்தியை மந்தப்படுத்த முயற்சிக்கிறது, புதிய உற்பத்தி உறவுகள் வளர்ச்சியை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது.

சமூக உற்பத்தி முறையின் முரண்பாடு, பழைய உற்பத்தி முறையை மறுதலித்து, புதிய உற்பத்தி முறைக்கு மாற்றுகிறது.  புதிய உற்பத்தி சக்திகளுக்கு, பொருத்தமான உற்பத்தி உறவுகள,் பழைய அமைப்பின் உள்ளிருந்தே தோன்றுகிறது. உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகியவற்றின் இயக்கவியல் வளர்ச்சி என்பது ஒர் உற்பத்திமுறையிலிருந்து, மற்றொரு உற்பத்திமுறைக்கு மாற்றம் அடைவதாகும். அதாவது கீழ்நிலை உற்பத்திமுறையிலிருந்து, மேல்நிலை உற்பத்திமுறைக்குச் சென்றடைவதாகும்.

வரலாற்றியல் பொருள்முதல்வாதமும் கம்யூனிஸ்ட் இயக்கமும்

       இன்றைய முதலாளித்துவ சமூகம் உழைப்பாளிகளை சுரண்டி வளர்கிறது என்பது கண்கூடான ஒன்றாகும். உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் தனி முதலாளியின் அபகரிப்பு முறைக்கும் இடையேயுள்ள முரண்பாட்டின் உச்சமே இன்றைக்கு பாட்டாளிகளுக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையே வர்க்கப் போராட்டமாக காட்சியளிக்கிறது.

       உழைப்பாளிகளைச் சுரண்டி தனது செல்வங்களைப் பெருக்கிக் கொள்ளும் முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உழைப்பாளிகளுக்கென்று தனித்த இயக்கம் தேவைப்படுகிறது. இந்த இயக்கத்தை நடத்திச் செல்லும் கம்யூனிஸ்டுகள் தமக்கென எந்த குறுங்குழுவாத கண்ணோட்டத்தையும் வைத்திருக்கவில்லை. கம்யுனிஸ்டுகள் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிர்த்து வேறு நோக்கம் எதனையும் கொண்டவர்கள் இல்லை. முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம் சந்திக்க வேண்டிய வளர்ச்சிக் கட்டங்களை அறிந்து அதற்கான போராட்ட உத்திகளை வகுத்து அதனை நடைமுறைப்படுத்துகின்றனர்.

       கம்யூனிஸ்டுகள் தாம் நடத்தும் போராட்ட வழிமுறைகளை, மார்க்ஸ் வகுத்துக் கொடுத்த வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையில் உடனடி போராட்டத்தையும் இறுதி குறிக்கோளையும் அமைத்துக் கொள்கின்றனர். புரட்சிகரமான கோட்பாடு இல்லையேல் புரட்சிகரமான இயக்கம் இல்லை என்று லெனின் கூறியதற்கு இணங்க, தங்களுக்கான புரட்சிகரமான கோட்பாட்டை பொருள்முதல்வாத கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைத்துக்கொள்கின்றனர்.

        முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளின் முன்னணிப்படையாக கம்யூனிஸ்ட் இயக்கம் செயல்படுகிறது. முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிவதற்கும், அதனிடத்தில் தொழிலாளி வர்ககத்தின் ஆட்சியை அமைப்பதற்கும், தொழிலாளிகளை ஒன்றிணைக்கும் சக்தியாக கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் உறுதியோடு செயற்பட மார்க்சியம் உதவிடுகிறது.

       உற்பத்தியின் வளர்ச்சி என்பது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலிருந்தே தொடங்குகிறது. இந்த உற்பத்திச் சக்தியின் புரட்சிகர மாற்றம் உழைப்புக் கருவிகளின் வளர்ச்சியில் அடங்கியிருக்கிறது. உற்பத்திச் சக்திகள் எத்தகையதோ, அத்தகையதாக உற்பத்தி உறவுகள் அமைகிறது. உற்பத்திச் சக்திகள் உற்பத்தி உறவுகளைக் காட்டிலும் முன்னதாகவே வளர்ச்சியை எட்டுகிறது. இதன் விளைவாக புதிய உற்பத்திச் சக்திகள் பழைமையாகிவிட்ட உற்பத்தி உறவுகளிடம் முரணை அதிகப்படுத்துகிறது.

பழைய உற்பத்தி முறைக்குள்ளே புதிய உற்பத்தி முறை முதிர்வது மனிதர்களின் உணர்வை சாராமல் நிகழ்கிறது. இந்நிகழ்வு உற்பத்திச் சக்தியின் வளர்ச்சியால் ஏற்படுகிறது. சமரசப்படுத்த முடியாத இசைவின்மை வாக்கப் போராட்ட நிகழ்வில் உச்சத்தை அடைகிறது. இந்த சமூகப் பிணக்கு சமூகப் புரட்சியின் மூலமே தீர்க்கப்படுகிறது.

        இந்த சமூக வளர்ச்சியின் புறநிலை விதிகளை அறிந்து, அதனை ஆதாரமாகக் கொண்டு வரலாற்றின்  திசைவழியை தெரிந்து, அதனடிப்படையில் தனது செயல்தந்திரத்தை அமைத்து கம்யூனிஸ்ட் இயக்கம் செயற்பட வரலாற்றியல் பொருள்முதல்வாதம் வழிகாட்டுகிறது.

       இயற்கையைப் போன்றே சமூகத்திலும் புறநிலை விதிகளின் அடிப்படையில் வளாச்சி நடந்தேறுவதை மார்க்சியம்  நிறுவுகிறது. ஆனால் முதலாளித்துவ அறிஞர்கள் சமூகம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம்  விதிவாதத்துக்கு ஆட்பட்டதாக விமர்சிக்கின்றனர்.  சமூக வரலாற்று நிகழ்வுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மார்க்சியம் கருதுவதாக விமர்சிக்கினறனர். இதன் அடிப்படையில் முதலாளித்துவ அறிஞர்கள் முதலாளித்துவ சமூகத்தைத் தொடர்ந்து சோஷலிச சமூகம் வரும் என்பதை மறுக்கின்றனர். மேலும் அவர்கள், சூரியன் உதிப்பதற்கு எந்த கம்யூனிஸ்ட் கட்சியும் இயற்கைக்கு தேவைப் படாதது போல், சமூகம் புறநிலை  விதிப்படி செயற்படும்  என்றால் சோஷலிச சமூகத்துக்காக கம்யூனிஸ்ட் கட்சி ஏன் போராட வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

       வரலாற்று விதிகள் மக்களது நடவடிக்கையின் வழியே செயற்படுகின்றன என்பதே, இயற்கைக்கும் சமூக விதிக்கும் உள்ள வேறுபாடு என்பதை அறிதிருக்கிறது மார்க்சியம். மக்களே செயல்முனைப்போடு வரலாற்றைப் படைக்கின்றனர். மக்கள் எந்த செயற்பாட்டையும் உணர்வு பூர்வமாகவே தமது குறிக்கோளை அமைத்து, அதன்படியே செயற்படுத்துகின்றனர். இந்த உணர்வுபூர்வமான செயற்பாட்டை தன்னிச்சையாக அவர்கள் அமைத்துக் கொள்வதில்லை, புறநிலை விதிகளின் தாக்கத்தின் விளைவாக உருவாக்கிக் கொள்கின்றனர். இவைகள் வர்க்கங்களின் நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது.

புறநிலை  விதி என்கிற, சமூக வளர்ச்சியின் போக்கை உணர்ந்து அதன் வழியில் செல்வதே அவசியத்தை அறிந்து செயற்படுவதாக கூறுகிறது மார்க்சியம். புறிநிலை அவசியத்தைப் பற்றிய அறிவு மக்களுக்கு வரலாற்றில் செயற்பாட்டு சுதந்திரத்தைக் கொடுக்கிறது. இதனை அறிந்து கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைமை தமது செயற்பாட்டை வகுத்துக் கொள்கிறது.

       முற்போக்கு வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்றழைக்கின்ற இயக்கம், சில நேரங்களில் சமூகம் வழங்கிய வாய்ப்புகளை தவறவிட்ட நிகழ்வுகள் உண்டு. வரலாற்று அவசியத்தின் அடிப்படையில் சென்று, கம்யூனிஸ்ட் இயக்கம் வெற்றி பெறுவதற்கு, பாட்டாளி வாக்க உணர்வில் உறுதியும், அமைப்பின் கட்டுப்பாடும் பெற்றதாக இருக்க வேண்டும்.  

       இதனைக் காட்டிலும், கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு சமூக வளர்ச்சியைப் பற்றிய கண்ணோட்டத்தை அளித்திடும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் முதன்மையிடம் பெறுகிறது. தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தை தத்தவத்திடம் காண்கிறது என்று மார்க்ஸ் கூறுவார்.

பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் தான் பாட்டாளி வர்க்க உணர்வையும், கட்டுப்பாட்டையும் பெற்றுக்கொள்ள முடியும். மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனர். இந்த அடிப்படையிலிருந்து  விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறாகயிருப்பதை அவர்கள் அடிக்கடி விளக்கி வந்தார்கள் என்று லெனின் கூறுகிறார். இந்த மார்கசிய ஆசான்களின் வழிகாட்டுதலில் சென்றால் தான், முதலாளித்துவச் சுரண்டலின் காரணத்தையும், அதன் உள்முரண்பாட்டின் தீர்வாய், முதலாளித்துவம் தூக்கியெறியப்பட்டு சோஷலிச சமூகத்தை அமைக்கவும் முடியும்.

முதலாளித்துவ சமுதாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், வர்க்கங்கள் அற்ற சமுதாயத்தை உண்டாக்க வேண்டுமென்றால், எல்லாவற்றிக்கும் மேலான வடிவமாகிய கம்யூனிசத்துக்குப் போகவும் முடியும்.

இதனுடன் இந்த வகுப்பை நிறைவு செய்ய நினைக்கிறேன் தோழர்களே…

இதற்க்கு நான் பயன்படுத்திய நூல்கள்

(1). இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்று பொருள் முதல்வாதமும் NCBH தொடக்க நூல்

(2).மார்க்ஸீய மெய்ஞ்ஞானம் தத்துவத்திற்க்கான ஓர் அரிச்சுவடி- ஜார்ஜ் பொலிட்சர்

நன்றி தோழர்களே

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *