கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ்-ம் எங்கெல்ஸ்-ம்
“எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே”
என்று தான் சொல்கின்றனர்.அதிலொன்றும் சந்தேகமில்லை.
ஆனால் அதில் வரலாறு என்று ஆசான்கள் எதைச் சொல்கிறார்கள்?
சில அறிவுஜீவித் தோழர்கள் நினைப்பது போல் தனிப்பட்ட நபர்கள் ஒவ்வொருவரும் உயிர் வாழ்வதற்காக நடத்தும் போராட்டத்தைதான் ஆசான்கள் வரலாறு என்று சொல்கிறார்களா?
இல்லை.
ஆசான்கள் சொல்லும் வரலாறு என்பது அரசியல் வரலாறு தான்.
ஒவ்வொரு சமூகத்தின் காலகட்டத்திலும் ஆளும் வர்க்கத்துக்கும் ஆளப்படும் வர்க்கத்துக்கும் இடையிலான வர்க்கப் போராட்டத்தின் வரலாறு தான் சமூகத்தின் வரலாறு என்று சொன்னார்கள்.
எதற்காக இதைச் சொன்னார்கள்?
அதற்கு முன்பு வரலாறு என்றால்,இந்த ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை இந்த மன்னர் ஆண்டார்;அதன்பிறகு அந்த மன்னர் ஆண்டார்;
அந்த மன்னருக்கும் இந்த மன்னருக்கும் போர் மூண்டது;
அந்த மன்னரின் மனைவியை இந்த மன்னன் கடத்திச் சென்றதால் மனைவியை மீட்பதற்காக போர் தொடுத்தான்…
இப்படித்தானே வரலாறு எழுதப் பட்டுக் கொண்டிருந்தது.
ஆனால் மார்க்சும் எங்கெல்சும் முதன்முதலாக வரலாறு என்பது
மன்னர்களின் வரலாறு அல்ல . வர்க்கங்களுக்கு இடையிலான வர்க்கப் போராட்டத்தின் வரலாறு தான் வரலாறு என்று சொன்னார்கள்.
ஆனால் நம் அறிவுஜீவித் தோழர்கள் சொல்வது போல்,
மக்கள் வயிற்றுப்பிழைப்புக்காக நடத்தும் வாழ்க்கை போராட்டத்தை தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் வர்க்கப் போராட்டங்களின் வரலாறு என்று ஆசான்கள் சொல்லவில்லை.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் முன்னுரையிலும் அறிக்கைக்கு உள்ளும் வரலாற்றைப் பற்றியும் வர்க்கப் போராட்டத்தைப் பற்றியும் ஏராளமாக ஆசான்கள் சொல்லியுள்ளார்கள்.
அவை எல்லாவற்றையும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை அதன் முன்னுரையிலிருந்து இந்த கேள்வியோடு படித்துப்பார்த்தால்
இன்னும் தெளிவாக இது புரியவரும்.
ஆனால் தயவுசெய்து,
மனிதர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக நடத்திய போராட்டத்திற்கான வரலாறு தான் வர்க்கப் போராட்டத்தின் வரலாறு என்று மார்க்சிய ஆசான்கள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் சொல்லியுள்ளார்கள் என்று மட்டும்சொல்லி ஆசான்களை தரம் தாழ்த்திவிடாதீர்கள்.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை
புதிய, புதிய கேள்விகளுடன்
மீள்வாசிப்புக்கு
உட்படுத்துவோம்.