லெனினிசத்தின் வரலாற்று அடித்தளம்.
லெனினிசத்தின் வரலாற்று அடித்தளம்.

லெனினிசத்தின் வரலாற்று அடித்தளம்.

லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள். பகுதி-2. ஸ்டாலின்.

லெனினிசத்தின் வரலாற்று அடித்தளம்.

ஏகாதிபத்திய சூழ்நிலைமைகளில் முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் மிகவும் தீவிரம்
அடைந்து இருந்தபோது, தொழிலாளி வர்க்கப் புரட்சி என்பது உடனடியாக நடைமுறைப்
பிரச்சனையாக ஆகிவிட்டபோது, தொழிலாளி வர்க்கத்தைப் புரட்சிக்கு ஆயத்தப்படுத்தும்
காலம் முடிவுற்று, ஒரு புதிய காலம் தொடங்கிவிட்டபோது, அதாவது முதலாளியத்தை
நேரடியாகத் தாக்க வேண்டிய காலம் தொடங்கிவிட்டபோது, லெனினியம் வளர்ந்து உருவம்
பெற்றது.

ஏகாதிபத்தியத்திற்கு, 'அழுகி செத்து மடியப்போகிற முதலாளியம்' (Moribund Capitalism) என்று
பெயரிட்டார் லெனின். ஏன்? எனென்றால், முதலாளியத்தின் முரண்பாடுகளை எந்த
அளவுக்குத் தீவிரமாக்க முடியுமோ, அந்த அளவுக்கு – எந்த எல்லையைத் தாண்டியவுடனே
புரட்சி ஆரம்பமாகுமோ அந்த எல்லையைத் தொடும் அளவுக்கு ஏகாதிபத்தியம்
தீவிரமாக்குகிறது. இந்த முரண்பாடுகளில் மூன்று மிகமிக முக்கியமானவையாகக் கருத்தப்பட
வேண்டும்.

முதலாவது முரண்பாடு, மூலதனத்திற்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையே உள்ள
முரண்பாடு ஆகும். ஏகாதிபத்தியம் என்றால், இயந்திரத் தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளில்
உள்ள ஏகபோக டிரஸ்டுகள், சிண்டிகேட்டுகள், வங்கிகள், நிதி மூலதனக் குறுங்குழுக்கள்
முதலியவற்றில் சர்வ வல்லமை பெற்ற சக்தியாக விளங்குவதாகும். இத்தகைய சர்வ வல்லமை
பெற்ற சக்தியை எதிர்க்கும் போராட்டத்தில், தொழிலாளி வர்க்கத்தின் மரபு வழிப்பட்ட
சகஜமான போராட்ட முறைகள் – தொழிற்சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள், பாராளுமன்றக்
கட்சிகள், பாராளுமன்றத்துக்குள்ளே போராட்டம் – முற்றிலும் போதாமையாக உள்ளன
என்பது நிரூபிக்கப்பட்டது. இரண்டே வழிகள்தாம் உண்டு. ஒன்று, முதலாளியத்தின்
கருணையை வேண்டி நின்று, முன்பு மாதிரியே துன்பத்தில் அமிழ்ந்து போக வேண்டும்;
அல்லது, புதிய ஆயுதத்தை ஏந்த வேண்டும். இந்த இரண்டில் ஒன்றைக் கடைப்பிடிக்குமாறு
பரந்துபட்ட தொழிலாளர் திரள்முன் ஏகாதிபத்தியம் வைக்கிறது. ஏகாதிபத்தியம், தொழிலாளி
வர்க்கத்தைப் புரட்சிக்குக் கொண்டு செல்கிறது.

இரண்டாவது முரண்பாடு, மூலப் பொருட்கள் கிடைக்கக் கூடிய இடங்களையும், அந்நிய
நாட்டுப் பிரதேசங்களையும், கைப்பற்ற நடக்கும் போராட்டத்தில் வெவ்வேறு பணக்
கோஷ்டிகளுக்கும், ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கும் இடையே உண்டாகியிருக்கும் முரண்பாடு
ஆகும். ஏகாதிபத்தியம் என்றால், மூலப் பொருட்கள் கிடைக்கிற மூல ஸ்தானங்களுக்கு
முலதனத்தை ஏற்றுமதி செய்வதாகும். இதற்காக மூலப்பொருள் கிடைக்கின்ற இடங்களை
தமக்காக மட்டுமே ஏகபோகமாக வைத்துக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் மற்றவருக்கு
எதிராகப் போராடுவதாகும். ஏற்கனவே பங்கிட்டுக் கொள்ளப்பட்ட உலகத்தை திரும்பவும் புதிய முறையில் பங்கிட்டுக் கொள்ள அவர்களுக்குள்ளே நடக்கும் போராட்டமாகும்.
ஏற்கனவே கைப்பற்றி தம் உடமையாக ஆக்கிக் கொண்டுவிட்ட, இனி யாருக்கும்
விடமுடியாது என்று உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிற, பழைய பணக்
கோஷ்டிகளையும், வல்லரசுகளையும் எதிர்த்து, 'இவ்வுலகில் எங்களுக்கும் ஒரு இடம்
வேண்டும்' என்று வாதித்து நாடு பிடிக்க முயற்சிக்கிற புதிய பணக் கோஷ்டிகளும்,
வல்லரசுகளும் மூர்க்கத்தனமாக நடத்துகிற போராட்டம் ஆகும். வெவ்வேறு முதலாளிய
கோஷ்டிகளுக்கு இடையே நடக்கும் இந்த வெறிகொண்ட போராட்டம், தவிர்க்க
முடியாதவாறு, ஏகாதிபத்திய யுத்தங்களை மூட்டும் அம்சம் பொருந்தியதாக இருக்கின்றது.
அந்நிய நாட்டுப் பிரதேசங்களைக் கைப்பற்றும் பொருட்டு யுத்தம் மூளுவதற்கு வலிகோலக்
கூடியதாக இருக்கிறது. அப்படி யுத்தத்தை மூட்டும் இந்த அம்சம் அதன் விளைவாக
இன்னொரு குணாம்சத்தையும் வெளிப்படுத்துகிறது. அது பரஸ்பரம் ஏகாதிபத்தியவாதிகள்
பலவீனம் அடைவதில் கொண்டுபோய் விடக் கூடியதாகவும், பொதுவாகவே
முதலாளித்துவத்தை பலவீனப்படுத்துவதாகவும், தொழிலாளி வர்க்கப் புரட்சியின் வருகையை
துரிதப்படுத்தக் கூடியதாகவும், அப்புரட்சியைத் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆக்கக்
கூடியதாகவும் இருக்கிறது.

மூன்றாவது முரண்பாடு, அடிமைப்படுத்தி அரசாட்சி புரிகிர, விரல்விட்டு எண்ணத்தக்க =
ஒருசில 'நாகரீக' நாடுகளுக்கும் அடிமைப்பட்டும், குடியேற்ற நாடுகளாயும் கிடக்கிற
கோடானுகோடி உலக மக்களுக்கும் இடையேயுள்ள முரண்பாடு ஆகும். ஏகாதிபத்தியம்
என்றால், அடிமைப்பட்டுக் கிடக்கும் ஏராளமான குடியேற்ற நாடுகளிலும், சார்பு நாடுகளிலும்
வசிக்கிற கோடானுகோடி மக்களை வெட்கங் கெட்டத்தனமாகச் சுரண்டுவதும் மிகமிக
அரக்கத்தனமாக ஒடுக்குவதுமாகும். இந்தச் சுரண்டலின் மற்றும் ஒடுக்கலின் நோக்கம்
கொள்ளைக்காரத்தனமான லாபங்களை கசக்கிப் பிழிந்து மூட்டை கட்டிச் செல்வதாகும்.
ஆனால் இந்த நாடுகளை அதிகமாகச் சுரண்டுவதற்காக, இந்த நாடுகளில் புகைவண்டிப்
பாதைகள், தொழிலகங்கள் மற்றும் ஆலைகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக மையங்கள்
ஆகியவற்றை நிறுவுவது கட்டாயமாகிறது. அவசியத்தின் நிர்பந்தத்தால் கையாளும் இந்தக்
கொள்கையின் தவிர்க்க முடியாத விளைவுகள் என்னவென்றால், இயந்திரத்
தொழிலாளிகளுடைய வர்க்கம் உதயமாகிறது; சுதேசி படிப்பாளிக் கூட்டம் தோன்றுகிறது;
தேசிய உணர்வு விழிப்படைகிறது; விடுதலை இயக்கம் வளர்கிறது. இது முழுக்க முழுக்க
உண்மை என்பதை விதிவிலக்கின்றி எல்லா குடியேற்ற நாடுகளிலும், சார்பு நாடுகளிலும்
வளர்ந்திருக்கும் புரட்சி இயக்கங்கள் நன்கு நிருபிக்கின்றன. இந்த சூழ்நிலை,
பாட்டாளிவர்க்கத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் குடியேற்ற நாடுகளையும்
சார்பு நாடுகளையும் ஏகாதிபத்தியத்தின் பின்புலமாக (Reserve) இருக்கும் நிலையை மாற்றி
பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குப் பின்புலமாக ஆக்குவதன் மூலம் இது முதலாளியத்தின்
நிலையை மிகவும் பலவீனப்படுத்தி, முற்றிலும் மாற்றி அமைத்து விடுகிறது

பொதுப்படையாகப் பார்த்தால், இவைகள்தான் ஏகாதிபத்தியத்தின் பிரதான முரண்பாடுகள்.
ஒரு காலத்தில் தழைத்து செழித்த முதலாளியத்தை, அழுகி மடியப்போகும் முதலாளித்துவமாக
மாற்றியிருக்கும் முரண்பாடுகள் இவைதான்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மூண்ட ஏகாதிபத்திய யுத்தத்தின் விசேஷம் என்ன?
ஏகாதிபத்தியத்தின் மேற்கண்ட முரண்பாடுகள் அனைத்தையும் அது ஒன்றாகக் குவித்து
முடிச்சுப்போட்டு சாவா, பிழைப்பா என்ற நிலைமையை உண்டாக்கியது. அதனால் அது
தொழிலாளி வர்க்கப் புரட்சிப் போராட்டங்களை துரிதப்படுத்தியதோடு அல்லாமல்,
அவற்றிற்கான வசதியையும் செய்து கொடுத்தது. இன்னொரு விதமாக கூறுவதானால், ஏகாதிபத்தியம் அந்த யுத்தத்தை மூட்டிவிட்டதன் மூலமாக புரட்சியானது காரிய சாத்தியமானதும், தவிர்க்க முடியாததுமான
விஷயமாகிவிட்டது; அதோடல்லாமல், முதலாளித்துவ கோட்டை கொத்தளங்களை
நேரடியாகத் தாக்குவதற்கு வாய்ப்பான சந்தர்ப்பத்தையும் உண்டாக்கி கொடுத்தது.

இத்தகைய ஒரு சர்வதேச நிலைமைதான் லெனியத்துக்குப் பிறப்பு அளித்தது.

சிலர் கேட்கலாம்; இதெல்லாம் ரொம்பவும் சரி, ஆனால் இதற்கும் ரஷ்யாவுக்கும் என்ன
சம்பந்தம்? ஏகாதிபத்தியத்தின் சிறப்பான உறைவிடமாக ரஷ்யா இருக்கவில்லையே?
சிறப்பான உறைவிடமாக ரஷ்யா இருந்திருக்க முடியாதே! ரஷ்யாவில் பிரதானமாக
ரஷ்யாவுக்காகப் பாடுபட்ட லெனினுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? லெனினியத்துக்குத்
தாயகமாக விளங்கும் பெருமையை தொழிலாளி வர்க்கப் புரட்சியின் தத்துவம்,
போர்த்தந்திரங்கள் ஆகியவற்றின் பிறப்பிடமாக விளங்கும் பெருமையை, மற்றெல்லா
நாடுகளையும்விட ரஷ்ய நாடு மட்டும் எவ்விதம் பெற்றது?

ஏனெனில், ஏகாதிபத்தியத்தின் மேற்கண்ட முரண்பாடுகள் அனைத்துக்கும் கேந்திர மையமாக
விளங்கிற்று ரஷ்ய நாடு.

ஏனெனில், மற்றெந்த நாட்டையும் விட ரஷ்யாவில் புரட்சிகரமான நிலைமை
பக்குவப்பட்டிருந்தது. அதனால் அது ஒன்று மட்டுமே மேற்கண்ட முரண்பாடுகளை
புரட்சிகரமான வழியில் தீர்க்கக் கூடிய நிலையில் இருந்தது.

இதை விளக்க தொடங்குவோம். முதலாளித்துவ ஒடுக்குமுறை, குடியேற்ற நாட்டு
ஒடுக்குமுறை, இராணுவக் கொடுமை என்ற அத்தனை விதமான சுரண்டல், ஒடுக்கல்
முறைகளும் ரஷ்யாவை இருப்பிடமாகக் கொண்டிருந்தன. அதுவும் சாதாரணமாக அல்ல;
எவ்வளவு அநாகரிகமாகவும் மூக்கத்தனமாகவும் இருக்கமுடியுமோ, அவ்வளவு
அநாகரிகமாகவும் மூக்கத்தனமாகவும் இருந்தது. முதலாளித்துவத்தின் வல்லமை, ரஷ்யாவில்
ஜாரியத்தின் எதேச்சிகாரத்துடன் கூடிக் கலந்தது என்பது யாருக்குத்தான் தெரியாது? ரஷ்ய
தேசிய வாதத்தின் ஆக்கிரமிப்பு போக்கு ரஷ்யர் அல்லாத பிற தேசிய இனத்தைச் சேர்ந்த
மக்களை அழிக்கும் நோக்கத்துடன் ஜாரியத்துடன் கூடிக் கலந்தது என்பதும் யாருக்குத்தான்
தெரியாது? துருக்கி, பாரசீகம், சீனா போன்ற பகுதிகளைச் சுருண்டும் போக்கு, இந்தப்
பகுதிகளை ஆக்கிரமித்து கைப்பற்றும் ஜாரியத்துடன் கூடிக் கலந்தது என்பதும் யாருக்குத்தான்தெரியாது? “இராணுவ வெறியும் நிலப்பிரபுத்துவ சுரண்டலும் கலந்த ஏகாதிபத்தியம்” என்று
அதை லெனின் குறிப்பிட்டது மிகவும் சரியாகும். உண்மையில், ஏகாதிபத்தியத்தின்
சகலவிதமான மிகவும் கேடான அம்சங்களையும் தன்னகத்தே தாங்கி உச்ச நிலையில்
காணப்பட்டது தான் ஜாரியம்.

மேலே செல்வோம், மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு பிரமாண்டமான பின் பலமாகவும் ஜாரிய
ரஷ்யா விளங்கியது. நிலக்கரி, பெட்ரோல் போன்ற எரிபொருள் உற்பத்தி, உலோகத் தொழில்
போன்றவை ரஷ்ய தேசிய பொருளாதார அமைப்பின் ஆதாரத் தொழில்களை அந்நிய தேச
மூலதனம் தன் கைக்குள் அடக்கி வைத்திருந்தது. ரஷ்யாவில் விருப்பப்படி நுழையவும்
கொள்ளையடித்துச் செல்லவும் ஜாரியம் அந்நிய மூலதனத்தை அனுமதித்தது. அதோடு
மட்டுமல்லாமல், அதனுடைய சொந்தக்காரர்களான மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளுக்கு
ஜார் அரசாங்கம் இலட்சக்கணக்கான இராணுவ வீரர்களையும் பொறுக்கி அனுப்பிற்று.
ஆங்கிலேய, பிரஞ்சு முதலாளிகளின் மலைபோல் குவிந்துள்ள லாபங்களைப் பாதுகாக்கும்
பொருட்டு, ஒருகோடியே இருபது லட்சம் பேர்களைக் கொண்ட ரஷ்ய ராணுவம்
ஏகாதிபத்தியங்களின் போர் முனைகளில் இரத்தம் சிந்திய காட்சியை நினைத்துப் பாருங்கள்.

மேலும் பார்ப்போம். ஜாரியம், கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ஏகாதிபத்தியத்தின் சார்பாகக்
கண்காணித்த காவல் நாயாக இருந்தது மட்டுமின்றி, ஏகாதிபத்தியத்தின் சார்பில் ரஷ்ய
மக்களிடம் வட்டி வசூலித்த முகாமையாளனாகவும் (ஏஜெண்டாகவும்) அது வேலை செய்தது.
பாரீஸ், லண்டன், பிரஸல்ஸ் முதலிய ஏகாதிபத்தியத் தலைநகரங்களில் வாங்கப்பட்ட
கோடிக்கணக்கான கடன் தொகைக்கு வட்டி வசூலித்துச் செலுத்தும் முறையில்
கோடிக்கணக்கான ரஷ்ய மக்களின் இரத்தத்தை அது உறிஞ்சி எடுத்ததன் மூலம் இத்தகைய
முகாமையாளனாக இருந்தது.

இறுதியாக, துருக்கி, பாரசீகம், சீனா முதலிய நாடுகளைத் துண்டாடியதில், மேற்கத்திய
ஏகாதிபத்தியத்தின் மிகவும் விசுவாசமுள்ள துணைவனாக இருந்தது ஜாரியம். ஏகாதிபத்திய
கூட்டுறவுடன் சேர்ந்து நின்று ஏகாதிபத்திய யுத்தத்தில் ஜாரியம் போரிட்டது என்பதும், அதில்
முக்கியமான சக்தியாக ரஷ்யா விளங்கிற்று என்பதும் யாருக்குத் தெரியாது?

இந்த காரணத்தினால்தான், ஜாரியத்தின் நலன்களும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின்,
நலன்களும் ஒன்றோடொன்று இணைந்து, இறுதியில் இரண்டறக் கலந்தன. ஏகாதிபத்திய
நலன்கள் என்ற வலைப் பின்னலில் ஜாரியம் என்பது ஒரு பிரிக்க முடியாத இழையாக ஆகி
விட்டது.

கிழக்குக் கண்டத்தில் தனக்கு இவ்வளவு வலுமிகுந்த ஆதாரத் தூணாகவும் தனக்கு இவ்வளவு
பலத்தையும், செல்வாதாரங்களையும் அளிக்கும் களஞ்சியமாகவும் விளங்கும் இந்த
பழமையான, ஜாரிய, முதலாளிய ரஷ்யா மறைந்து ஒழிவதை மேல்நாட்டு ஏகாதிபத்தியம்
பார்த்துக்கொண்டு கைக்கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? ஜாரியத்தைப் பாதுகாத்து

நிலைநிறுத்த வேண்டி, ரஷ்யப் புரட்சியை எதிர்த்து தனது சர்வசக்தியையும் செலவழித்து ஒரு
ஜீவ மரணப் போராட்டத்தை நடத்தாமல் சும்மா இருக்க முடியுமா? முடியவே முடியாது.

ஜாரியத்தைக் காப்பாற்ற மேற்கத்திய ஏகாதிபத்தியம் முனைய வேண்டியிருந்தது என்றால்,
இதிலிருந்து இன்னொரு விஷயமும் புலப்படுகிறது. அதாவது யார் யார்? ஜாரியத்தை அழிக்க
விரும்புகிறார்களோ அவர்கள் எல்லோரும் அதே சமயத்தில் ஏகாதிபத்தியத்தை அழிக்க
கையை ஓங்கியாக வேண்டிய நிர்பந்தம் இருந்தது. யார் யார் ஜாரியத்தை எதிர்க்க கிளர்ந்து
எழுந்தார்களோ, அவர்கள் எல்லோரும் அதே சமயத்தில், ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும்
கிளர்ந்து எழ வேண்டியவர்களாக ஆயினர். ஏனெனில், ஜாரியத்தை முறியடிப்பதோடு நின்று
கொள்ளாமல் அதை அடியோடு வழித்து எறியவும் யாராவது சங்கற்பம் செய்து
கொண்டிருந்தால், ஜாரியத்தை வீழ்த்தும்போதே அவர்கள் ஏகாதிபத்தியத்தையும் வீழ்த்த
வேண்டியிருந்தது. இவ்விதம் ஜாரியத்தை எதிர்த்துக் கிளம்பிய புரட்சி, ஏகாதிபத்தியத்தை
வீழ்த்தக்கூடிய புரட்சியின் எல்லையை எட்டியதோடு மட்டுமின்றி, அந்த எல்லையைத்
தாண்டியும் சென்று ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியாக, ஒரு தொழிலாளி வர்க்கப் புரட்சியாக
பனிணமிக்க வேண்டியிருந்தது. (ஸ்டாலின்)

எமது விளக்கம்.

“ஏகாதிபத்தியங்கள் உருவாகி அவற்றுக்கு இடையே முரண்பாடுகள் கூர்மையடைந்து
மோதல்கள் வெடித்தபோது, தொழிலாளி வர்க்கங்களுக்கு இடையில் இந்த முதலாளித்துவ
ஆட்சியைத் தூக்கியெறிந்து தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற
உணர்வு மேலோங்கி வருகின்ற காலத்தில், அதாவது அந்த வரலாற்றுக் கட்டத்தில்
தொழிலாளர்களுக்கு வழிகாட்டும் தத்துவ மெய்ஞானக் கண்ணோட்டமாக லெனினியம்
வரலாற்று வழியில் தோன்றியது என்கிறார் தோழர் ஸ்டாலின்”.

“ஒரு வயதான மனிதன் எப்படி மரணப்படுக்கையில் கிடப்பானோ, அதுபோலவே
கிழடுதட்டிப்போன ஏகாதிபத்தியமும் அழுகி செத்துக்கொண்டிருக்கிறது என்றார் லெனின்.
ஏனென்றால் முதலாளித்துவ சமுதாயத்தில் காணப்படும் அனைத்து முரண்பாடுகளும் இந்த
ஏகாதிபத்தியவாதிகளின் அரசியல் பொருளாதார செயல்பாடுகளின் காரணமாக
தீவிரமடைந்து வருகிறது. உழைக்கும் மக்களுக்கும் பெருமுதலாளிகளுக்குமான முரண்பாடு,
ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கும் பிற சாதிகளைச் சேர்ந்த ஒடுக்கும், சுரண்டும்
வர்க்கங்களுக்கும் இடையிலான முரண்பாடு, தேசிய இனப்பிரச்சனை, சிறுபாண்மை
மதத்தவர்களின் பிரச்சனை, ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான பிரச்சனைகள்,
ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்கள் போன்ற பலப் பிரச்சனைகளும் தற்போதும்
தீவிரமடைவதை நாம் பார்க்கிறோம். இந்தச் சூழலில் இந்த பிரச்சனைகளை லெனினிய
முறையில்தான் தீர்க்கமுடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் மக்களுக்காகப்
பாடுபடுவதாகச் சொல்லும் அரசியல் தலைவர்கள் இந்த லெனினிய முறைகளை கற்று
உள்வாங்கவும் இல்லை, அதன் அடிப்படையில் திட்டமிட்டு தங்களது அரசியல் வழியை
வகுத்துக்கொண்டு செயல்படத் தவறியதால் அழுகி செத்துக்கொண்டிருக்கும்
ஏகாதிபத்தியத்தை வீழ்த்த முடியவில்லை. இவர்கள் லெனினைப் பின்பற்றுவதற்கு மாறாக சீர்திருத்தவாதத்தை பின்பற்றுவதால், இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டு
மரணப்படுக்கையில் இருக்கும் கிழடுதட்டிப்போன ஏகாதிபத்திற்கு இந்த ஆட்சியாளர்கள்
உயிர் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே உண்மையான கம்யூனிஸ்டுகள்
லெனினது வழிகாட்டுதலைப் பின்பற்றி உழைக்கும் மக்களைத் திரட்டிப் போராடினால்
வெற்றி நிச்சயம். தற்போது அது சாத்தியமில்லை என்றபோதும் வரும்காலத்தில் இளைஞர்கள்
லெனினைப் பின்பற்றி ஏகாதிபத்தியங்களை சவக்குளிக்குள் அனுப்புவார்கள்” “இங்கே லெனினியத்தை விளக்கும்போது ஸ்டாலின் முதலாவது முரண்பாடு மூலதனத்திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்குமான முரண்பாட்டைக் குறிக்கிறார். இந்த முரண்பாடு ஏகாதிபத்தியவாதிகளின் நாடுகளில் மட்டுமல்லாமல், ஏகாதிபத்தியமல்லாத இந்தியா போன்ற நாடுகளிலும் இந்த முரண்பாடு உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்கே ஏகாதிபத்தியம் என்றால் என்ன என்பதை ஸ்டாலின் விளக்குகிறார். இயந்திரத் தொழில்
வளர்ச்சியடைந்த நாடுகளிலுள்ள ஏகபோக டிரஸ்டுகள், சிண்டிகேட்டுகள், வங்கிகள், மற்றும்
நிதி மூலதனக் கும்பல்கள், இவர்கள்தான் ஏகாதிபத்திய அரசுகளைத் தோற்றுவிக்கும் சர்வ
சக்தி படைத்த வல்லவர்களாக உள்ளனர் என்கிறார் ஸ்டாலின். இத்தகைய சர்வ வல்லமை
படைத்த சக்திகளை எதிர்த்து தொழிலாளர்கள் போராட வேண்டுமானால் மரபு வழிப்
போராட்டங்களான தொழிற்சங்கப் போராட்டங்கள், பாராளுமன்ற கட்சிகளால் நடத்தப்படும்
போராட்டங்கள் போதுமானவை இல்லை என்கிறார். அதற்காக அத்தகைய சட்டப்பூர்வமான
போராட்டங்களே நடத்தக்கூடாது என்று பொருள் கொள்ளக் கூடாது. அத்தகைய
போராட்டங்கள் மட்டும் போதுமானது அல்ல என்பதே இதன் பொருளாகும். ஆகவே
இத்தகையப் போராட்டங்களோடு கூடவே புதிய வகையிலான போராட்டங்களையும் நாம்
நடத்த வேண்டும் என்று லெனின் வழிகாட்டினார். அந்த வழிகாட்டுதலை ரஷ்யத் தொழிலாளி
வர்க்கம் பின்பற்றி அங்கு ஒரு புரட்சியின் மூலம் தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சி
ஏற்படுத்தப்பட்டது. ஆகவே நாம் லெனினிய வழியைப் பின்பற்றி மரபு வழிப்
போராட்டங்களோடு புதிய வழிமுறையை நமது நாட்டிற்குப் பொருத்தமான முறைகளை
கையாண்டு போராடுவதன் மூலமே ஏகாதிபத்தியங்களின் ஆட்சிக்கு முடிவுகட்டி தொழிலாளி
வர்க்கத்தின் ஆட்சியை உருவாக்க முடியும், உருவாக்க வேண்டும். இதற்கு மாறாக மரபு வழிப்
போராட்டங்களை மட்டும் நடத்திக்கொண்டிருந்தால் உழைக்கும் வர்க்கமானது பசி பட்டினிச்
சாவுகளின் மூலம் அழிந்து போவதைத் தவிர வேறு வழியில்லை”.

“இங்கே அந்நிய நாட்டுப் பிரதேசங்களை கைப்பற்றி அங்குள்ள இயற்கை வளங்களையும்
உழைப்புச் செல்வங்களையும் கொள்ளையடிப்பதற்காக கொள்ளைக்கார
ஏகாதிபத்தியங்களுக்கு இடையே நடக்கும் போராட்டங்கள் மற்றும் போர்களின்
அடிப்படையிலான முரண்பாட்டைப் பற்றி ஸ்டாலின் இது லெனினிசத்தின் கோட்பாடு என்று”
பேசுகிறார்.

இந்த லெனினியக் கோட்பாடு இப்போதும் உண்மையில் நிலவக் கூடியதாக இருப்பதை நாம்
காணலாம். ஏகாதிபத்தியவாதிகள்தான் தற்காலத்தில் உலகத்தில் நடைபெறும் போர்களுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கிறார்கள். இந்த உண்மையை நவீன டிராட்ஸ்கியவாதிகள் ஏற்றுக்கொள்வதில்லை. நூறு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்றும் தற்காலத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது என்றும். இப்போது ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக் கொள்கைகள் காலாவதியாகிவிட்டது என்று டிராட்ஸ்கியின் கொள்கையை அவர்கள் பரப்பி வருகிறார்கள். ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்பும் உலகில் யுத்தங்கள் நடந்தது. உதாரணமாக இந்தியா பாக்கிஸ்தான் யுத்தம், இந்தியா சீனா யுத்தம் போன்ற யுத்தங்கள் நடந்தன. ஆனால் இந்த யுத்தங்கள் எல்லாம் ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடக்கவில்லை என்ற நொண்டிச் சாக்கை முன்வைத்து யுத்தம் பற்றிய லெனினியக் கொள்கையை நவீன டிராட்ஸ்கியவாதிகள் மறுத்தார்கள். ஆனால் அதற்குப் பின்பு அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும் நேட்டோ அமைப்பைச் சேர்ந்த ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளும் கூட்டு சேர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கின் மீது யுத்தம் தொடுத்தார்கள். இந்த யுத்தத்தில் ஏகாதிபத்தியவாதிகளே நேரடியாக போர் தொடுத்து ஆப்கானையும் ஈராக்கையும் கைப்பற்றி அடிமைப் படுத்தினார்கள். எனினும் போட்டி ஏகாதிபத்தியவாதிகளான ரஷ்ய ஏகாதிபத்தியவாதிகள் இந்த யுத்தத்தில் ஈடுபடவில்லை மேலும் பாதிக்கப்பட்ட ஈராக்குக்கு உதவியும் செய்யவில்லை. இதைத் தொடர்ந்து தற்போது ரஷ்ய ஏகாதிபத்தியம் உக்ரேன் மீது ஆக்கிரமிப்பு யுத்தம் தொடுத்திருக்கிறது. அதே வேளையில் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் ரஷ்ய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உக்ரேனுக்கு ஆதரவாக இராணுவ உதவி செய்து
வருகின்றனர். இவையெல்லாம் எதைக் காட்டுகிறது. லெனின் சொல்லியவாறு
ஏகாதிபத்தியங்கள் தங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை யுத்தத்தின் மூலமாகவே
தீர்த்துக்கொள்ள முயற்சிப்பார்கள் என்ற லெனினிய உண்மையைத்தானே காட்டுகிறது.
ஆகவே லெனின் சொல்லியது போல அனைத்து ஏகாதிபத்தியங்களையும் அவர்களது
ஆட்சியை ஒழித்துக்கட்டுவதன் மூலமே உலகில் போரற்ற சமாதானத்தை கொண்டுவர முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். லெனினது இந்தக் கொள்கையை ஏற்க மறுக்கும் டிராட்ஸ்கியவாதிகள் ஏகாதிபத்தியங்களுக்கு இடையே மறைமுகமான யுத்தங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் இந்த யுத்தங்களில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஆதரித்து அதனை நியாயப்படுத்தும் நிலைக்குச் சென்றுள்ளார்கள்.

ஏகாதிபத்தியவாதிகளால் உலகை மறுபங்கீடு செய்வதற்கான இந்த யுத்தங்களால் இன்னொரு
விளைவும் ஏற்படுகிறது என்கிறார் ஸ்டாலின்.” அதாவது யுத்தங்களில் ஈடுபடும்
ஏகாதிபத்தியவாதிகளின் நாடுகள் பலவீனமடையும். பொருளாதார ரீதியில் பொருளாதார
நெருக்கடியை சந்திப்பார்கள். அரசியல் ரீதியாக அவர்களது மக்களிடம் வெறுப்பை
சம்பாதிப்பார்கள். அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும், ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய
சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளதை நாம் காணலாம். அந்த நாடுகளில் லெனினியத்தைப்
பின்பற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் இருந்திருக்குமானால் ரஷ்யாவில் அன்று நடந்தது போல்
அந்த நாடுகளிலுள்ள தொழிலாளர்கள் திரட்டப்பட்டுப் போராடி அந்த நாடுகளில்
ஏகாதிபத்தியவாதிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டியிருக்க முடியும். அதே போலவே உக்ரேனில்
ஒரு சரியான மார்க்சிய லெனினிய அமைப்பு இருக்குமானால் ஏகாதிபத்திய சார்பு
முதலாளித்துவ அரசை போராடி வீழ்த்திவிட்டு எந்த ஏகாதிபத்தியத்தையும் சாராத ஒரு சுதந்திர
அரசை உருவாக்கியிருக்க முடியும். ஆகவே உலகம் முழுவதிலும் உள்ள கம்யூனிஸ்டுகள்
டிராட்ஸ்கியம் போன்ற லெனினிய எதிர்ப்புக் கொள்கைக்குப் பலியாகாமல் லெனினியக்
கொள்கையைப் பின்பற்றினால் ஏகாதிபத்தியங்களை ஒழித்துக்கட்ட தொழிலாளி வர்க்கத்தால்
முடியும் என்பதை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்”.

“இங்கே ஸ்டாலின் மூன்றாவது முரண்பாடாகக் குறிப்பது ஏகாதிபத்தியங்களுக்கும் காலனி
(குடியேற்ற) நாடுகளுக்கும் இடையிலான முரண்பாட்டைக் குறிப்பிடுகிறார். வரலாற்றில்
குறிப்பாக இந்தியா போன்ற காலனி நாடுகளை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியங்கள் போன்ற
ஏகாதிபத்தியங்கள் அடிமைப்படுத்தி ஆண்ட காலத்தில் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து
ஏராளமான செல்வங்களை ஏகாதிபத்தியவாதிகள் சுரண்டிச் சென்றனர். இப்போதும்கூட
இங்கிருந்து பல ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த கார்ப்பரேட் முதலாளிகள்
கொள்ளையடித்துச் செல்வதை நாம் பார்க்கலாம். இந்த நாடுகளின் சொத்துக்களை
கொள்ளையடிப்பதற்காக இங்கு புகைவண்டிப் பாதைகள் அமைப்பது 8வழிச் சாலைகள்
அமைப்பது போன்றவற்றிற்கு உலகவங்கி, ஐ.எம்.எப். போன்ற நிதி நிறுவனங்களின் மூலம்
இந்திய அரசுக்கு கடன் கொடுப்பது, இங்கு சில தொழிற்சாலைகள் அமைப்பது போன்ற
நடவடிக்கைகளில் ஏகாதிபத்தியவாதிகள் ஈடுபடுகிறார்கள். மேலும் இங்குள்ள
பெருமுதலாளிகளுக்கு தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி உதவி போன்றவற்றையும் செய்து
கொண்டிருக்கிறார்கள்”.

பிரிட்டீஷ் ஆட்சியின்போது இங்கு தொழிலாளர்களும் படிப்பாளிப் பிரிவினரும் உருவாகி
இங்கு தேசிய உணர்வு வளர்ந்து சுதந்திரத்திற்கானப் போராட்டங்கள் நடந்தது. அதன்
விளைவாக பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் பலவீனம் அடைந்தது. இறுதியாக பிரிட்டீஷ் அரசின்
கட்டுப்பாட்டிலுள்ள இந்திய இராணுவ வீரர்களே பிரிட்டீஷ் அரசை எதிர்த்துப் போராடும்
நிலையில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகள் மிகவும் பலவீனமடைந்து இந்தியாவை விட்டு
வெளியேறும் நிலைமை உருவானது. இவ்வாறு பல காலனி அல்லது குடியேற்ற
நாடுகளிலிருந்து ஏகாதிபத்தியவாதிகள் அவர்களது நேரடியான ஆட்சி அதிகாரத்தை கைவிட்டு
விட்டு வெளியேறினார்கள். இதன் மூலம் ஸ்டாலின் சொல்வது போல
ஏகாதிபத்தியவாதிகளுக்குப் பின்புலமாக இருந்த குடியேற்ற நாடுகளைச் சேர்ந்த
இராணுவத்தை ஏகாதிபத்தியவாதிகள் இழந்து இராணுவ ரீதியாகவும் பொருளாதார
ரீதியாகவும் பலவீனமடைந்தார்கள். இவ்வாறு பலவீனமடைந்த ஏகாதிபத்தியங்களை எதிர்த்து
தொடர்ந்து இந்தியா போன்ற முன்னால் காலனி நாடுகளிலுள்ள கம்யூனிஸ்டுகளும், பாட்டாளி
வர்க்கமும் போராடியிருந்தால் உலக வரைபடத்திலிருந்து ஏகாதிபத்தியங்களை ஒழித்திருக்க
முடியும்.

ஆனால் ஸ்டாலினுக்குப் பிறகு அதிகாரத்திற்கு வந்த குருஷேவ் ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சியின்
20ஆவது காங்கிரசில் திருத்தல்வாதக் கொள்கையை கொண்டுவந்து நிறைவேற்றினார். அதன்
மூலம் இனிமேல் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான போராட்டங்களும், காலனி ஆதிக்கத்திற்கு
எதிரான போராட்டங்களையும் கைவிடச் சொன்னார். இந்தக் கொள்கையை முன்னால்
காலனி நாடுகளிலுள்ள கம்யூனிஸ்டுகள் ஏற்றுக்கொண்டு பின்பற்றிய காரணத்தில் காலனி
ஆதிக்க ஏகாதிபத்தியவாதிகள் எவ்விதமான தடைகளும் இல்லாமல் செத்துமடிய
வேண்டியவர்கள் உயிர்பெற்று மீண்டும் எழுந்துவந்து தங்களைப் பலப்படுத்திக்
கொண்டார்கள். இதனால் உலகம் முழுவதிலும் வளர்ந்து வந்த பாட்டாளிவர்க்க இயக்கம்
பலவீனமடைந்து ஏகாதிபத்தியவாதிகளை எதிர்க்கும் பலம் குன்றி மிகமிக பலவீனமாக
அடிமைப்பட்டுக் கிடக்கிறதை நாம் பார்க்கலாம். ஆகவே இப்போதும் ஏகாதிபத்தியம் பற்றி
லெனினது கொள்கையைப் பின்பற்றி பாட்டாளி வர்க்கமும் கம்யூனிஸ்டுகளும்
செயல்படுவதன் மூலமே தொழிலாளர்களின் வறுமை ஒழிந்து அவர்களுக்கு நல்ல வாழ்வு
கிடைக்கும் என்பதை நாம் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்”.

இங்கே மேலே குறிப்பிட்ட இந்த மூன்று முரண்பாடுகள்தான் ஒரு காலத்தில் செழித்து வளர்ந்த
முதலாளித்துவமானது ஏகபோக முதலாளித்துவமாக மாறி கிழடுதட்டிப் போய் அழுகி செத்து
மடியும் நிலைக்கு வந்ததற்கான காரணமாக ஸ்டாலின் குறிப்பிடுகிறார். “சாகப்போகும் ஒரு
மனிதனிடம் சில சமயங்களில் பிரகாசம் தோன்றுவதைப் போல இந்த
ஏகாதிபத்தியவாதிகளிடம் மூலதனம் மேலும் மேலும் குவிந்து மிகப்பெருவாரியான மக்கள்
வறுமையில் பட்டினிச் சாவிலும் வீழ்வதன் காரணமாக வறுமையில் வாடும் உழைக்கும் மக்கள்
இந்த ஏகாதிபத்திய கொள்ளைக்காரர்களை வீழ்த்தி அவர்களை சவக்குழிக்குள் தள்ளி அடக்கம்
செய்வார்கள்”. என்பதை லெனினியம் சரியாக வரையறுத்து நம்முன் வைத்துள்ளதை
நம்பிக்கையோடு ஏற்றுப் லெனினியத்தை பின்பற்றுவதன் மூலம் நம்மால் ஏகாதிபத்தியங்களை
வீழ்த்தி உழைக்கும் மக்களுக்கான ஆட்சியை உருவாக்க முடியும் என்ற லெனினது கருத்தை
அவரது மாணவரான ஸ்டாலின் இங்கு விளக்குகிறார்;

.”இங்கே முதல் உலக யுத்தத்தைப் பற்றி ஸ்டாலின் பேசுகிறார். வரலாற்றில் இந்த முதல் உலக
யுத்தத்தின் பயனாகவே ரஷ்யாவில் பாட்டாளி வர்க்கமானது கம்யூனிஸ்டுகளின் தலைமையில்
ஒன்றுதிரண்டு ஜாரின் எதேச்சிகார ஆட்சியையும், கெரன்ஸ்கியின் முதலாளித்துவ
ஆட்சியையும் தூக்கியெறிந்து தொழிலாளர் ஆட்சியை நிறுவியது. இந்த அடிப்படை
நிகழ்வுகளிலிருந்தே ஸ்டாலின் ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்கம் நிலவும் போது அனைத்து
முரண்பாடுகளும் ஒன்றாக குவிந்து தொழிலாளி வர்க்கம் கிளர்ந்தெழுந்து போராட
முன்வருகிறது என்கிறார் ஸ்டாலின். இப்போதும் உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்கள்
இந்த ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக போராடிக்கொண்டு இருக்கிறார்கள். உதாரணமாக
தற்போது இலங்கையிலுள்ள மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்தப்
போராட்டங்களுக்கு லெனினியத்தை ஏற்றுக்கொண்ட போராளிகள் தலைமைதாங்கவில்லை.
மாறாக லெனினியத்தை மறுப்பவர்களின் தலைமையிலேயே போராட்டங்கள் நடக்கின்றது.
அதன் காரணமாகவே இந்தப் போராட்டங்கள் தோல்வியடைகின்றன. அதைத் தொடர்ந்து
மக்கள் சோர்ந்து போகிறார்கள். மேலும் உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் போராட்டங்களின்
மீதே நம்பிக்கை இழக்கின்றனர். ஆகவே லெனினியத்தை உயர்த்திப்பிடிக்கும்
கம்யூனிஸ்டுகள், லெனினிசத்தின் அடிப்படைகளை மக்களிடம் கொண்டு சென்று மக்களுக்கு
நம்பிக்கை ஊட்ட வேண்டும். அத்தகைய நம்பிக்கையை நமக்கு ஊட்டி வளர்த்து
டிராட்ஸ்கியத்தை விரட்டியடித்த தலைவர்தான் தோழர் ஜோசப் ஸ்டாலின் ஆவார். ஆகவே
நாம் பாட்டாளி வர்க்கத்தின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் நவீன டிராட்ஸ்கியவாதிகளைப்
புறக்கணித்து லெனின் ஸ்டாலின் வழியை உயர்த்திப் பிடித்து ஏகாதிபத்தியங்களை ஒழிக்க
நமக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி போராட வேண்டும். இது ஒரு
நீண்டகால யுத்தமாகும். உடனடியாக நாம் வெற்றிபெற முடியாது. ஆனால் தொடர்ந்து
நீண்டகாலமாக கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திப் போராடுவதன் மூலமே
ஏகாதிபத்தியத்தை வீழ்த்த முடியும் என்ற லெனினியப் பாதையை நாம் பின்பற்ற வேண்டும்.
இதற்கு மாறாக உலகம் முழுவதும் பாட்டாளிகளைத் திரட்டி ஒரே சமயத்தில் உலகப் புரட்சி
நடத்த வேண்டும் என்ற லெனினியத்திற்கு எதிரான நவீன டிராட்ஸ்கியவாதிகளின் பாதையை
நாம் புறக்கணிக்க வேண்டும். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற்ற
பாதைதான் லெனினியப் பாதை என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்”.

“இங்கே புரட்சி பற்றி ஸ்டாலின் கூறும்போது, ஏகாதிபத்தியவாதிகள் அன்று முதல் உலக
யுத்தத்தத்தை மூட்டிவிட்டதன் காரணமாகவே ரஷ்யாவில் புரட்சி காரிய சாத்தியமானது
என்கிறார். இதனை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதோடு மட்டுமல்லாமல்
முதலாளித்துவத்தின் கோட்டை கொத்தளங்களை நேரடியாக தாக்குவதற்கு வாய்ப்பான
சந்தர்பத்தை தொழிலாளர்களுக்கும் ரஷ்ய கம்யூனிஸ்டுகளுக்கும் ஏற்படுத்திக் கொடுத்தது
என்கிறார் ஸ்டாலின். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்ன?
ஏகாதிபத்தியத்தை தாக்கி வீழ்த்துவதற்கு தேவையான சந்தர்ப்பத்தை ஏகாதிபத்தியவாதிகளே
நமக்கு உருவாக்கி கொடுப்பார்கள் என்பதையும் அத்தகைய சந்தர்ப்பத்தை ஒரு புரட்சிகரமான
கம்யூனிஸ்டு கட்சியானது சரியாக மதிப்பிட்டு முதலாளித்துவத்தின் கோட்டை
கொத்தளங்களின் மீது தாக்குதல்கள் தொடுக்க வேண்டும்; அத்தகைய சந்தர்ப்பங்கள்
ஏற்படாதவரை முதலாளித்துவத்தை தாக்கி வீழ்த்துவதற்கான தயாரிப்புப் பணிகளில் அதாவது
தொழிலாளர்களை திரட்டி அவர்களுக்கு அரசியல் போதனை அளிப்பது பொருளாதாரம்
மற்றும் அரசியல் போராட்டங்களில் ஈடுபடுத்தி தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பது
போன்ற பணிகளில் கம்யூனிஸ்டுகள் ஈடுபட வேண்டும். அதற்கு மாறாக
பொருளாதாரவாதிகள் பின்பற்றிய தொழிற்சங்கவாதப் போராட்டங்களில் மட்டும் ஈடுபட்டு
தொழிலாளர்களின் போர்க்குணத்தை மழுங்கச் செய்வது திருத்தல்வாத முறையாகும் என்பதை
நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே லெனினியமாகும் என்றே ஸ்டாலின் நமக்கு
வழிகாட்டுகிறார்”.

“இத்தகைய சர்வதேச சூழலில்தான் லெனினியம் உருவாகியது என்கிறார் தோழர் ஸ்டாலின்”.

“இத்தகைய சர்வதேசத்திற்கும் ரஷ்யாவின் விடுதலைக்காகப் பாடுபட்ட லெனினுக்கும் என்ன
சம்பந்தம் என்று சிலர் கேள்வி கேட்கிறார்கள். அதற்கு ஸ்டாலின் பதில் கொடுக்கும் போது
அன்றைய ரஷ்யாவில் அனைத்துவகையான பிற்போக்கு ஒடுக்குமுறையும் ஜாரின் ஆட்சியில்
குவிந்திருந்தது என்றும், ஏகாதிபத்தியங்களின் முரண்பாடுகள் அனைத்திற்கும் ரஷ்யா கேந்திர
மையமாக விளங்கியது என்றும், உலகில் வேறு எந்த நாடுகளையும் விட ரஷ்யாவில்தான்
தொழிலாளர்கள் விழிப்புணர்வு பெற்று புரட்சிகரமான முறையில் போராடிக்கொண்டிருந்தனர்
என்றும் ரஷ்யாவிலுள்ள பிற தேசிய இனங்களை மிகக் கடுமையாக ஜார் ஆட்சியில்
ஒடுக்குமுறை செய்யப்பட்டது என்றும் துருக்கி, பாரசீகம், சீனா போன்ற பகுதிகளை
ஆக்கிரமித்து ரஷ்யா சுரண்டிக்கொண்டு இருந்தது என்றும் சுருக்கமாகச் சொன்னால்
இராணுவ வெறியும், நிலப்பிரபுத்துவ சுரண்டலும், கலந்த ஏகாதிபத்தியமாக ரஷ்யா இருந்தது
என்று லெனினால் வரையறுக்கப்பட்ட நிலையில் ரஷ்யா இருந்தது. இத்தகைய பிற்போக்கு
ரஷ்யாவில் ஜாரின் ஆட்சியை வீழ்த்திய சிறப்புத் தன்மை கொண்டதுதான் லெனினியமாகும்.
அந்த வகையில் ரஷ்யப் புரட்சியானது ரஷ்யாவுக்கு மட்டுமல்லாமல் உலகத் தொழிலாளி
வர்க்கத்திற்கே வழிகாட்டும் தத்துவமாக இன்றும் லெனினியம் திகழ்கிறது என்பதையே
தோழர் ஸ்டாலின் இந்த நூலின் வாயிலாக நமக்கு விளக்குகிறார்”.

“இங்கே ரஷ்ய ஜாரின் அரசாங்கத்துக்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் இடையிலுள்ள
உறவை படம்பிடித்துக் காட்டுகிறார் ஸ்டாலின். ஜார் அரசாங்கமானது ஏகாதிபத்தியங்களுக்கு
பின்பலமாக இருந்து ரஷ்யாவிலிருந்து நிலக்கரி போன்ற எரிபொருள்களை
ஏகாதிபத்தியங்களை கொள்ளையடித்துச் செல்ல உதவி செய்தது. இப்போதும் இந்தியாவிலிருந்து ஏராளமான இயற்கை வளங்களை அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடித்துச் செல்ல இந்திய ஆட்சியாளர்கள் ஏகாதிபத்தியங்களை அனுமதித்துக்கொண்டு இருப்பதை நாம் பார்க்கலாம். மேலும் ரஷ்ய ஜார் அரசாங்கமானது ரஷ்ய மக்களிடமிருந்து வட்டி வசூலித்து ஏகாதிபத்தியங்களுக்கு கப்பம் கட்டியதாக ஸ்டாலின் குறிப்பிடுகிறார். அன்றைய ஜார் அரசாங்கம் போலவே இன்றைய இந்திய அரசாங்கமானது
உலகவங்கி, ஐஎம்எப் போன்ற ஏகாதிபத்திய நிதி நிற்வனங்களிடமிருந்து கடன் பெற்று அந்தக்
கடனுக்கான வட்டியை ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டின் மூலம் மக்களிடமிருந்து வரி வசூல்
செய்து ஏகாதிபத்தியங்களுக்கு கப்பம் கட்டிக்கொண்டு இருப்பதை நாம் பார்க்கலாம்.
ஏகாதிபத்தியங்களும் அதனை சார்ந்த அரசுகளும் (ரஷ்ய ஜாரின் அரசுகள் போன்ற
அரசுகளும்) தற்போதும் நிலவுவதை நாம் பார்க்கலாம். இது போன்ற சூழலில் ரஷ்ய ஜார்
அரசாங்கம் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்த அரசாங்கமாக இருந்த
காரணத்தால் ஜார் அரசாங்கத்தை புரட்சியின் மூலம் வீழ்ந்துவிடாமல் மேற்கத்திய
ஏகாதிபத்தியங்கள் பாதுகாத்தன என்கிறார் ஸ்டாலின். இத்தகைய சூழலிலும் லெனினது
போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரங்களின் மூலம் ஜாரின் ஆட்சி வீழ்த்தப்பட்டதுதான்
வரலாறு. அதுபோலவே ஏகாதிபத்தியங்களைச் சார்ந்து இந்திய மக்களுக்கு தொடர்ந்து
துரோகம் இழைத்துவரும் இந்தியப் பெருமுதலாளிகளின் ஆட்சியும் லெனினிய முறைகளைக்
கையாண்டு தூக்கியெறிய முடியும்”.

“அன்று ரஷ்யாவில், ரஷ்யாவை ஆண்ட ஜார் மன்னனின் எதேச்சிகார ஆட்சியை வீழ்த்த
விரும்பியவர்கள் அனைவரும் ஜாரின் ஆட்சியை வீழ்த்துவதோடு தங்களது போராட்டத்தைக்
குறுக்கிக்கொள்ளக் கூடாது மாறாக அந்தப் போராட்டங்களை விரிவுபடுத்தி ரஷ்யாவிற்குள்
ஊடுருவி ஆதிக்கம் செலுத்திய ஏகாதிபத்தியங்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய
அவசியம் இருந்தது என்று தோழர் ஸ்டாலின் விளக்குகிறார். ரஷ்ய வரலாற்றில் நவம்பர்
புரட்சிக்குப் பின்பு உருவான சோசலிச சோவியத்து குடியரசு ஆட்சியை வீழ்த்துவதற்க
ஏகாதிபத்தியவாதிகள் ரஷ்யாவை சுற்றிவளைத்து தாக்க முயன்றார்கள், மேலும் ரஷ்யாவில்
செயல்பட்ட எதிர்ப்புரட்சிகர முதலாளித்துவவாதிகளுக்கு ஆயுத உதவிகள் செய்தார்கள். இந்த
அனுபவத்திலிருந்தே உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்டுகளுக்கும் உலகம் முழுவதிலுமுள்ள
தொழிலாளர்களுக்கும், உலகம் முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த
மக்களுக்கும் முதன்மையான எதிரிகளாக உலகம் முழுவதிலுமுள்ள ஏகாதிபத்தியங்களே
முதன்மையான எதிரிகளாக இருக்கிறார்கள் என்ற எதார்த்த உண்மையை நடைமுறை
அனுபவத்திலிருந்தே புரிந்துகொண்ட லெனின், உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்டுகளுக்கு
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தையும் ஏகாதிபத்திய காலனி ஆதிக்கத்திற்கு எதிரான
போராட்டங்களை நடத்திட வேண்டும் என்ற வழிகாட்டுதலை மூன்றாம் அகிலத்தின் மூலம்
லெனின் வழங்கினார். லெனினது அந்த கொள்கை கோட்பாட்டையே ஸ்டாலின் இங்கே
விளக்குகிறார். இந்தக் கொள்கையைத்தான் ஸ்டாலின் மறைவிற்குப் பின்பு அதிகாரத்திற்கு
வந்த குருஷேவ் கும்பல் மறுத்துவிட்டு உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்டுகளை
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களையும், காலனி ஆதிக்க எதிர்ப்புப்
போராட்டங்களையும் கைவிட்டுவிட்டு ஏகாதிபத்திய முதலாளிகளிடமும் அதன் சார்பு
முதலாளிகளிடமும் சமரசம் செய்துகொண்டு சமாதானமான முறையில் பாராளுமன்றப்
பாதையில் பயணம் செய்து சோசலிசத்தை அடைய வேண்டும் என்று குருஷேவ் கும்பல்
வழிகாட்டியது. இந்தியாவிலுள்ள திருத்தல்வாத கம்யூனிஸ்டுகள் உட்பட உலகம்
முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்டுகள் இந்த குருஷேவின் பாதையைப் பின்பற்றி லெனினியத்தை
கைவிட்டார்கள். தற்போதும் இந்த கம்யூனிஸ்டுகள் உலகம் முழுவதிலும் லெனினியத்தைப் பின்பற்றத் தயாரில்லை, மாறாக குருஷேவின் வழியையே பின்பற்றிக்கொண்டு
இருக்கிறார்கள். தற்போதும் புதிதாக உருவாகி வருகின்ற சில குழுத்தலைவர்களும் இதே
குருஷேவின் வழிக்கு பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி என்ற பெயரில் வக்காலத்து
வாங்கிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் தோழர் ஸ்டாலின் லெனினிசத்தின்
அடிப்படைகளை விளக்கி எழுதிய நூல்களை நாம் படிப்பதன் மூலம் லெனினியத்தை
உயர்த்திப் பிடித்து டிராட்ஸ்கியம், மற்றும் குருஷேவ் கும்பலின் மார்க்சிய லெனினியத்திற்கு
எதிரான மக்கள் விரோத கருத்துகளை புரிந்துகொண்டு புறக்கணித்து லெனினிய முறையில்
ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய காலனி ஆதிக்க எதிர்ப்புக் கொள்கையின்
அடிப்படையில் செயல்பட வேண்டிய நிலை உள்ளது. இந்தக் கொள்கையை உலகப்
பாட்டாளி வர்க்கத்திற்கு எடுத்துச் சொல்லி வழிகாட்டும் ஆசானாக ஸ்டாலின் திகழ்கிறார்.
ஆகவே நாம் உண்மையான கமயூனிஸ்டாக மாறி வளர வேண்டும் என்று விரும்பும்
ஒவ்வொருவரும் லெனினிசத்தின் அடிப்படைகளைப் பற்றி தோழர் ஸ்டாலின் அவர்களது
விளக்கத்தை விரிவாகப் படித்து உள்வாங்கி செயல்பட வேண்டும் என்று இலக்கு உங்களை
கேட்டுக்கொள்கிறது”…….. தொடரும். தேன்மொழி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *