”ஊரடங்கால் பொருளாதார இழப்பினை மீட்டெடுக்க சுயசார்பு இந்தியா திட்டம் மூலம் பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டத்தை அறிவித்தார். இதனையடுத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 கட்டங்களாகப் பிரித்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.விவசாய மேம்பாட்டிற்கும் கடன் குறித்தான அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே விவசாயிகள் பெற்ற வாராக் கடன்களுக்கான வட்டி தள்ளுபடி செய்வதாகவும், கடன் கொடுக்கும் அளவை உயர்த்துவதாகவும் அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். குறிப்பாக நபார்டு மூலம் உடனடிக் கடன் வழங்க ரூ.30 ஆயிரம் கோடி என்று அறிவித்துள்ளார்.இது மோசடி அறிவிப்பாகும். காரணம், ஏற்கெனவே 2015-ம் ஆண்டு முதல் வறட்சி மற்றும் வர்தா, தானே, ஓகி, கஜா புயல்கள் தாக்குதல்களால் 2018-ம் ஆண்டு வரை உற்பத்தியை இழந்தனர். அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடன் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர்.இந்நிலையில், கரோனா தாக்குதலால் இந்தியா முடங்கி உள்ள நிலையில் காய்கனி உள்ளிட்ட விவசாய உற்பத்தி பொருட்கள் 80 சதவீதம் முற்றிலும் உற்பத்தி செய்த நிலத்திலேயே அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கண்ணெதிரிலேயே அழிந்துள்ளது. இதனைப் பார்த்து மனமுடைந்து செய்வதறியாது முடங்கி உள்ளனர் விவசாயிகள்.இதனைக் கருத்தில் கொண்டு உடனடியாக இழப்பிற்கு நிவாரணம் வழங்கி, நிலுவைக் கடன் முழுமையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்வார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், மறுத்து விட்டனர். கரோனா மட்டுமின்றி கடந்த 5 ஆண்டுகள் தொடர்ந்து இயற்கை சீற்றத்தால் விவசாயம் அழிந்ததால் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாமல் புதிய கடன் பெறுவதற்கான தகுதியை 80 சதவீத விவசாயிகள் இழந்துள்ளனர். இந்நிலையில் புதிய கடன் கொடுப்பதற்கு தொகையை உயர்த்துவதால் எந்த பயனுமளிக்காது.விவசாயிகள் உற்பத்தி பொருளுக்கு தானே விலை நிர்ணயம் செய்யும் வாய்ப்பை உருவாக்குவோம், குறைந்தபட்ச விலை குறித்து கண்காணிக்க சட்ட அங்கீரத்துடன் கூடிய அமைப்பு உருவாக்கப்படும், மாநிலங்களுக்கிடையே பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்ய விதிக்கப்பட்டிருந்த தடைகள் முழுமையும் நீக்கப்படும், ஏற்றுமதி செய்ய உரிய அனுமதி வழங்கப்படும், கிடங்குகளில் இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும், என்பதாகவும், கொள்முதல் செய்வதற்கென்று நிதி ஒதுக்கப்படும் என்றெல்லாம் அறிவித்தார்கள்.இதனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளாக எண்ணி வரவேற்றோம். ஆனால், முடிவில் ஆன்லைன் வர்த்தகம் அனுமதிக்கப்படும் என அறிவித்ததால் ஒட்டுமொத்தமாக அறிவித்த அனைத்து சலுகைகளும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், விளை நிலங்களில் நிலக்கரி சுரங்கங்கள், மீத்தேன் எரிவாயு கிணறுகள் அமைக்க தனியாருக்கு உடனடியாக அனுமதி வழங்குவதாகவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் செய்வதற்கான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ள நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் அனைத்தும் எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்று மத்திய அரசு நினைப்பது போல தோன்றுகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுகளை களமிறக்குவதற்கு கரோனாவை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி இந்தியாவை கூறுபோட்டு விற்பனை செய்யும் மோசடியில் மோடி அரசு ஈடுபடுவது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.எனவே, நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை மறுபரிசீலினை செய்ய வேண்டும். விவசாயிகள் கடன் நிலுவை முழுவதும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும். மறு உற்பத்திக்கு நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும். அழிந்துள்ள காய்கனி, பழவகைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உற்பத்திப் பொருளுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்திட வேண்டும். உற்பத்திக்கும், சந்தைப்படுத்து வதற்கும் மத்திய – மாநில அரசுகளே முழு பொறுப்பேற்க வேண்டும். விளை நிலங்களில் பேரழிவு திட்டங்களை அனுமதிப்பதை கைவிட வேண்டும்”.இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.