அரசியல் பொருளாதாரம் என்றால் என்ன வகுப்பில் வாசித்த பொழுது தெரிந்துக் கொண்டதை பகிர்கிறேன் தோழர்களே….
உண்மையில் மூலதனம் பொருள் அல்ல இது முதலாளித்துவ வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கதிற்கும் இடையிலான குறிப்பிட்ட பொருளாதாரம் உறவாகும்.
மூலதனம் என்பது கூலியுழைப்பைச் சுரண்டுவதன் மூலம் தன் உடமையாளனுக்கு உபரி மதிப்பைக் கொண்டு வரும் மதிப்பாகும்.
உபரி மதிப்பை தோற்றுவிப்பதில் மூலதனத்தின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு பங்காற்றுகின்றன.
இதில் மாறா மதிப்பான தொழிற்சாலைக்கான கட்டிடம் கட்டுதல் இயந்திரங்கள் உபகரணங்கள் மூலப்பொருட்கள் எரிபொருள்கள் போன்றவற்றுக்கான செலவீடுகள் இந்த உற்பத்தி சாதனங்களின் மதிப்பு (இவைகளே மாறா மூலதனம்) பண்டம் உற்பத்தி செய்யும் போது தொழிலாளியின் ஸ்தூலமான உழைப்பின் (மாறும் மூலதனம்) மூலம் தயாரான பொருளும் சேர்க்கப்படுகிறது.மார்க்ஸ் மூலதனத்தை மாறும் மூலதனம் மாறா மூலதனம் என்று பிரித்ததானது உபரி மதிப்பை தோற்றுவிப்பதில் மூலதனத்தின் உட்பகுதிகளின் வெவ்வேறான பங்கை தெளிவுபடுத்தியது. மார்க்ஸ் உபரி மதிப்பு ரகசியத்தை கண்டுபிடித்தார். உபரி மதிப்பு என்பது கூலி உழைப்பை சுரண்டப்படுவதன் விளைவு என்று இவர் நிரூபித்தார்.
நமது முன்னோடிகள் என்ன சொல்கிறார் புரிந்துக் கொள்ளுங்கள்.
சொல் அகராதி: மாறா மூலதனம் (Constant Capital) – மாறும் மூலதனம் (Variable Capital)
கே.சுவாமிநாதன்
மூலதனத்தின் சேர்மானம் மிக முக்கியமான குறியீடு ஆகும். சரக்கு உற்பத்தியில் இரண்டு வகையான மூலதனங்கள் உள்ளடங்கியுள்ளன. ஒன்று மாறா மூலதனம். இன்னொன்று மாறும் மூலதனம்.
கடந்த இதழில் சமூக அவசிய உழைப்பு நேரம், கூலி உழைப்பு, உபரி உழைப்பு, மூலதன உருவாக்கம் ஆகியவை பற்றி நாம் பார்த்தோம்.
மூலதனத்தின் சேர்மானமும் (CC – Composition of Capital) இன்னும் நமது புரிதலுக்கு தேவைப்படுகிற ஒன்றாகும்.
ஒரு சரக்கு உற்பத்தியில் கச்சா பொருட்கள், இயந்திரம், உழைப்பு சக்தி ஆகியவை ஈடுபடுத்தப்படுகின்றன. இவற்றில் எவை எவை சரக்கு இறுதி வடிவம் பெறும் போது அப்படியே மதிப்பு மாறாமல் அதற்கு மாற்றப்படுகிறது? எது இறுதி சரக்கு வடிவம் பெறும் போது கூடுதல் மதிப்பை அதற்கு தருகிறது? என்ற வித்தியாசமே மேற்கூறிய இரு வகை மூலதனத்தை வகைப்படுத்துகிறது.
உதாரணத்திற்கு, ஒரு பஞ்சாலையில் கச்சாப் பொருளாக பருத்தி (x) பயன்படுத்தப்படும். இயந்திரங்கள் (d) ஈடுபடுத்தப்படும். பின்னர் உழைப்பு சக்தி (v) ஈடுபடுத்தப்பட்டு சரக்கு உற்பத்தி நடைபெறும். அவர் இம் மூன்றுக்காகவும் செலவழிப்பதை இப்படி நாம் கூறலாம்.
M 1 = x+ v+ d
இந்த நிலையில் மூன்றும் புதிய மதிப்புகளை உருவாக்காததால்
M1 = C 1 (மூன்றின் மதிப்பு)
ஆனால் இறுதி சரக்கின் மதிப்பு இந்த M 1 ஐ விட அதிகமாக உள்ளது என்பதே உண்மை. காரணம் இந்த மூன்றோடு உழைப்பு சக்தி உருவாக்குகிற உபரி மதிப்பும் சேர்ந்து இறுதி சரக்கின் மதிப்பு (C 2) அதிகமாக இருக்கிறது.
அதாவது கச்சா பொருள் உற்பத்தி வழிமுறைக்கு ஆளாகும் போது உரு மாறுகிறதே தவிர, அது கூடுதல் மதிப்பு எதையும் உருவாக்குவதில்லை. அதன் மதிப்பு அப்படியே இறுதி சரக்கிற்கு மாற்றப்படுகிறது. இயந்திரம் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும்போது தேய்மானம் அடைகிறது. அந்த தேய்மானம் சரக்கின் இறுதி மதிப்பில் அப்படியே இடம் பெறுகிறது. அதுவும் கூடுதல் மதிப்பு எதையும் சேர்ப்பதில்லை.
ஆனால் உழைப்பு சக்தி சரக்கை உருவாக்கும்போது கூலி உழைப்பிற்கும் மிகுதியாக உபரி உழைப்பை தருகிறது. அதுவே உபரி மதிப்பாக (s) இறுதி சரக்கிற்கு அது கூடுதல் மதிப்பை தருகிறது. இதுவே மூலதன உருவாக்கத்தின் ஊற்றுக் கண் ஆகும்.
இதை இப்படி நாம் கூறலாம்.
C 2 = x + v + s + d
மீண்டும் தெளிவிற்காக சொல்வதானால்
x – கச்சா பொருள்
v – உழைப்பு சக்தி
s – உபரி மதிப்பு
d – தேய்மானம்
C 1 ன் மதிப்பை விட C 2 மதிப்பு அதிகமாக இருக்கிறது. இச் சரக்கு விற்கப்படும் போது கிடைப்பதை M 2 என்று கொண்டால் C 2 = M 2 ஆக கொள்ளலாம்.
இதில் லாபம் எது எனில் இறுதி சரக்கின் விலையான M 2 க்கும் மூன்று உள்ளடக்கமான – கச்சா பொருள், இயந்திர தேய்மானம், உழைப்பு சக்தி – ஆகியவற்றை வாங்க செலவழித்த தொகையான M1க்குமான வித்தியாசம் ஆகும்.
அதாவது லாபம் M 2 – M 1 = s
இப்போது மாறா மூலதனம் என்றால் என்ன என்பதற்கு வருவோம். கச்சா பொருளும், இயந்திர தேய்மானமும் இறுதி சரக்கு உருவாகும்போது உரு மாறினவே தவிர எந்த புதிய மதிப்பையும் கூடுதலாக தரவில்லை. ஆகவே அவற்றை மாறா மூலதனம் (CONSTANT CAPITAL) என்கிறோம். இதை C என வைத்து கொள்வோம்.
ஆனால் உழைப்பு சக்தி மட்டும் கூடுதல் மதிப்பை இறுதி சரக்கின் மதிப்பிற்கு தருகிறது. கூலி உழைப்பிற்கு மிகுதியாக அது தருகிற உபரி உழைப்பின் பங்களிப்பு அது. அதனால் v என்பது v + s ஆகிறது. ஆகவே உழைப்பு சக்தியின் பங்களிப்பை “மாறுகிற மூலதனம்” (Variable Capital) என்கிறோம். இதை V எனக் கொள்வோம்.
கச்சா பொருள், இயந்திரம் ஆகியவற்றுக்குள்ளும் உழைப்பு இருக்கிறது. ஆனால் அது உறைந்து போன “செத்த உழைப்பு”. ஆனால் புதிய சரக்கை உற்பத்தி செய்யும் போது அதில் ஈடுபடும் உழைப்பு சக்தி ” உயிருள்ள உழைப்பாக” புதிய கூடுதல் மதிப்பை தருகிறது.
இப்படி மூலதனத்தின் சேர்மானத்தை எதற்காக ஆய்வு செய்ய வேண்டும்? இது தொழில் நுட்ப பயன்பாட்டின் அளவை, பங்களிப்பை பற்றிய குறியீடு என்பதே அதன் முக்கியத்துவம். ஒரு பெரும் தொழிலில் இயந்திரங்கள் பயன்பாடு அதிகம் இருக்கும். சிறு தொழில்களில் இயந்திர பயன்பாடு குறைவாக இருக்கும்.
மூலதன சேர்மானம் (CC) = மாறா மூலதனம்/ மாறும் மூலதனம் (C / V)
மேற்கண்ட விகிதம் அதிகமாக இருந்தால் உற்பத்தியில் தொழில் நுட்ப பயன்பாடு அதிகமாக இருக்கிறது என்று பொருள். இவ் விகிதம் குறைவாக இருந்தால் உற்பத்தியில் தொழில் நுட்ப பங்களிப்பு குறைவாக இருக்கிறது என்று பொருள். இக் கருத்தாக்கத்தை கொண்டு ஒரு தொழிற்சாலையில், தொழிலில், சமூகத்தில் மூலதன சேர்மானம் எவ்வாறு இருக்கிறது என்பதை அறிய முடியும்.
இயந்திரம் அதிகமாக பயன்படுத்தப்படும்போது சமூக அவசிய உழைப்பு நேரம் இன்னும் குறையும். ஆனால் தொழிலாளியின் வேலை நாள் அளவு குறைக்கப்படுவதில்லை. முதலாளித்துவ சமூகம் அதை அதிகரிக்க வாய்ப்பு கிடைக்குமா என்றே அலைவதை பார்க்கிறோம். அப்படியெனில் C/V அதிகமாக இருந்ததெனில் உழைப்பு சக்தி பயன்பாட்டில் கூலி உழைப்பை குறைத்து உபரி உழைப்பை அதிகமாக்குகிறார்கள்; அதிகமான உபரி மதிப்பு முதலாளிகளால் ஈட்டப்படுகிறது என்பதே அதன் பொருள். ஆகவே மூலதன சேர்மானத்தில், மாறா மூலதன உள்ளடக்கம் அதிகரிக்கும் போது சுரண்டல் அதிகரிக்கிறது என்று பொருள். தொழில் நுட்பம் அதிகமாக பயன்படுத்தப்படும் பெரு நிறுவனங்களின் ஊழியர்க்கு அதிக சம்பளம் கிடைக்கலாம். ஆனால் அவர்கள் செலுத்துகிற உபரி உழைப்பு மிகுவதால் சுரண்டலும், மூலதனக் குவிப்பும் அதிகமாகிறது என்பதே உண்மை.
தற்போது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் பெருந்தரவு (Big data) பயன்பாடு ஆகியன விரிவாக்கம் பெறும் காலம் ஆகும். ஆகவே அவை உபரி மதிப்பை எவ்வாறு அதிகரிக்கும்; மேலும் மேலும் குவிக்கும் என்ற புரிதலுக்கு இச் சொற்கள் பற்றிய புரிதல் முக்கியமானது ஆகும்.

தாமஸ் பிக்கெட்டின் மூலதனமும், கார்ல் மார்க்சும்
Audio Player
(குரல்: யாழினி)
வி. மீனாட்சிசுந்தரம்
தாமஸ் பிக்கெட்டி என்ற பிரெஞ்சு ஆய்வாளர் 15 வருடமாக சிரமப்பட்டு பொருளுற்பத்தி சம்மந்தமான புள்ளிவிவரங்களை சேகரித்திருக்கிறார். கடந்த 200 ஆண்டுகளில் மூலதனம் சொத்துக்களை ஒருபக்கமாக குவித்து வருகிறது. தனிநபர் வருமானத்தின் ஏற்றத்தாழ்வு இடைவெளியை அதிகப்படுத்தி வருகிறது என்பதை அந்த தரவுகள் காட்டுவதாக நிரூபிக்கிறார். முதலாளித்துவம் பேரழிவை சந்திக்கும் என்று மார்க்ஸ் கூறியதாகவும் அதனை இன்றைய முதலாளித்துவம் பொய்ப்பித்துவிட்டது என்றாலும் அவர் நம்பின வருமான ஏற்றத்தாழ்வு இடைவெளி விரியும் என்பது உண்மையாகிவிட்டது. அதன் விளைவாக நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவுகிற நாடுகளில் மக்களாட்சி மாண்புகள் சிறுமைப்படுத்தப்படுகிறது என்றும் அவர் வருத்தப்படுகிறார்.
முதலாளித்துவ உற்பத்தி முறையையும் பேணி மக்களாட்சி மாண்புகள் சிறுமைப்படாமல் காப்பாற்றுவது எப்படி என்பதே இந்த புத்தகம் முழுவதும் விரவிக் கிடக்கிறது.
இந்த புத்தகத்தின் தனித்துவம் என்னவென்றால் மார்க்சின் உபரிமதிப்பு மற்றும் மூலதன சுழற்சி கோட்பாடுகளையும் அமெரிக்க நாட்டு பொருளாதார நிபுணர்கள் திணித்த கட்டுத்தறியற்ற தனியார்மய சுதந்திர சந்தைமய மூலதனக் கோட்பாட்டையும் நிராகரிக்க மார்க்சின் பகுப்பாய்வு வழியை பின்பற்றுகிறது. அதற்கு புள்ளிவிரங்களை ஆதாராமாக கொள்கிறது. .
(தனியார் மூலதனத்தின் குவிப்பால் உருவாகும் தொழில்நுட்பங்களின் முன்னேற்றத்தையும் படிப்படியாக அதிகரிக்கும் உற்பத்தி திறனையும் முற்றிலும் மார்க்ஸ் புறக்கணித்ததாக குறிப்பிடும் பிக்கெட்டி மார்க்சின் மூலதன பகுப்பாய்வு முறையை பயனுள்ளது என்கிறார்.(பிக்கெட்டின் 21ஆம் நூற்றாண்டு மூலதனம் பக்கம் 23)
.இந்த புத்தகம் இன்னொன்றையும் காட்டுகிறது.
1971ல் அமெரிக்க பொருளாதார நிபுணர் சைமன் சுமித் குஸ்னே புள்ளிவிவரங்களை வைத்து வரைபடம் மூலம் தனிநபரின் வருமான ஏற்றத்தாழ்வு இடைவெளி சுருங்கி வருவதாக காட்டியதையும் 200 ஆண்டு புள்ளி விவரங்களையும் பிக்கெட்டி ஒப்பிட்டு அந்த முடிவு தவறானது என்று நிரூபிக்கிறார். நோபிள் நினைவுப்பரிசு பெற்ற ஒரு கண்டுபிடிப்பை தவறு எனக் காட்டிய பிக்கெட்டி இதனை தடித்த புத்தகத்தில் வடித்து 2013ம் ஆண்டு மேலைநாட்டு பணபுழக்க கோட்பாட்டு உலகை கலக்கி விட்டார்.
புத்தகத்தின் முதல்பகுதி துவக்கத்திலே மூலதனத்திற்கும்- உழைப்பிற்குமிடையே இருக்கும் முரணைத் தீர்ப்பது பற்றி விவாதிக்கிறது. மூலதனம் பற்றிய மேலைநாட்டு பொருளாதார நிபுணர்களின் மரபுசார்ந்த பார்வையை பிக்கெட்டி நிராகரிக்கிறார். பொருளுற்பத்திக்கான காரணிகளாக மூலதனம் உழைப்பு என்று இரண்டையும் வகைப்படுத்தி மூலதனத்திற்கு லாபம்- உழைப்பிற்கு சம்பளம் என்று பாகுபடுத்துவதே முரண்பாட்டை உருவாக்குகிறது. என்கிறார்.
கூலிஉயர்வு கேட்காதே – குண்டடிபட்டு சாகாதே என்ற 19ம் நூற்றாண்டு பழைய நிலை முதலாளித்துவ நாடுகளில் இன்றும் நிலவுகிறது என்பதை தென்ஆப்பிரிக்காவில் 2012ல் கூலிஉயர்வு கேட்ட தொழிலாளர்களை துப்பாக்கிச்சூட்டில் கொன்றதை காட்டியே தொடங்குகிறார். அந்த பகுதியின் இறுதியில் திறந்தவெளிசந்தையும் தனியார் சொத்தையும் அடிப்படையாக கொண்ட ஒரு பொருளாதாரம் மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான முரணை போக்குமா? நேசஉறவாக்க எப்படி சிந்திக்க வேண்டும் என்ற கேள்விகளை கேட்டு ஒரு நூதன பணப்புழக்க கோட்பாட்டை விவாதிக்கிறார்.
தனியார் சொத்து பெருக்கம் – மூலதன பெருக்கம் இரண்டையும் ஒன்றாகவே பாவித்து முன்மொழிகிற வாதங்களை படித்தால் பரம்பரை சொத்துரிமை அடிப்படை உரிமையாக இருக்கமுடியுமா என்ற கேள்வியை இந்த புத்தகம் நம்மை கேட்க வைக்கிறது
நாடுகளின் தேச மொத்த வருமானம் கணக்கிடுவதில் உள்ள குறைபாட்டை இந்த புத்தகம் விவாதிக்கிறது. தேச மொத்த வருமானத்தை கணக்கிட ஒரு வரலாற்றுப்பார்வை அவசியம் என்கிறது. அதாவது தேச மொத்த வருமானத்தை எந்திரங்கள், கட்டிடங்கள் இவைகளின் தேய்மானங்களை கழித்தே கணக்கிட வேண்டும் என்பது இவரது வாதமாகும். தேச மொத்த வருமானத்தின் வளர்ச்சி விகிதத்திற்கும் மூலதனத்தின் லாபவிகிதத்திற்கும் உள்ள உறவை ஆய்வு செய்வதே இந்த புத்தகத்தின் முக்கிய நோக்கமாக தெரிகிறது.
இந்த புத்தகம் தனிநபர் வருமான ஏற்றத்தாழ்வு இடைவெளி விரிவதை அளக்க ஒரு சூத்திரத்தை முன்மொழிகிறது. மூலதனம் சம்பாதிக்கும் லாபவிகிதம் தேச மொத்த வருவாயின் வளர்ச்சி விகிதத்தைவிட கூடுதலாக இருக்கிறது(r.>g) இதுவே தனிநபர் வருமான ஏற்றத்தாழ்வை விரித்துக்கொண்டே போகிறது.
இதனை நிரூபிக்கவே 200 ஆண்டு புள்ளிவிவரங்களை ஆதாரமாக காட்டியுள்ளார்.
இதன்மூலம் அவர் சொல்லவருவது மூலதனத்தின் லாபவிகிதமும் தேச மொத்த வருவாயின் வளர்ச்சி விகிதமும் சமமாக இருந்தால் தனிநபர் வருமான இடைவெளி அதிகமாகாது என்பதாகும். மூலதனம் உழைப்பாளிகள் ஒன்றிணைந்து உருவாக்கும் உபரிமதிப்பை நேரடியாகவும் சந்தைவழியாக மறைமுகமாகவும் சுரண்டுவதாலேயே வருமான ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது என்ற மார்க்சிய கோட்பாட்டை இந்த சூத்திரம் மறுக்கிறது என்பது வெளிப்படை. அதேவேளையில் வருமான இடைவெளி விரிவதால் நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவுகிற நாடுகளில் ஜனநாயக மாண்புகள் சிறுமைப்படுகிறது என்பதை ஏற்கிறார். மூலதன இயக்கத்தை கட்டுப்படுத்த என்ன செய்வது என்ற கேள்வியை விவாதிக்கிற இந்த புத்தகம் சீனா வெற்றிகரமாக மூலதனத்தை கட்டுப்படுத்துகிறது என்று பாராட்டிவிட்டு அது மேலைநாட்டிற்கு பொருந்தாது என வாதிடுகிறது.
இந்த புத்தகம் இன்றைய உலகமய அரசியல் பொருளாதார பிரச்சினைகளை கோடிட்டு காட்டுவதால் மார்க்சிஸ்டுகள் விவாதித்து தெளிவுபெற மிகவும் பயன்படும்.
.அதேவேளையில் பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் டேவிட் ரிக்கார்டோ(1772-1823) முன்மொழிந்து கார்ல் மார்க்சால் மேன்மைப்படுத்தப்பட்ட சரக்கின் மதிப்பு சமூக உழைப்பு நேரத்தை சார்ந்தது என்ற கோட்பாட்டை இந்த புத்தகம் நிராகரித்து நூதன பணபுழக்க கோட்பாட்டை முன்மொழிகிறது.
இன்றைய மேலைநாடுகள் அரசாங்க கடன்சுமையை குறைக்க சிக்கன முறையை கையாள்வதை கடுமையாக சாடுகிறார். அதற்கு மாற்றாக சொத்துவரி மற்றும் பணவீக்கத்தை நடைமுறைப்படுத்த சொல்கிறார். இதற்கு அவர் சொல்லுகிற காரணம் நாடாளுமன்ற ஜனநாயகம் வர்க்க சார்பு தன்மையை இழந்து நடுநிலை வகிப்பதாக கூறியே இந்த தீர்வு சாத்தியமென முன்மொழிகிறார். இது தவிர வேறு சில பிரச்சினைகளையும் இந்தப் புத்தகம் விவாதிக்கிறது. சீனாவின் வெளிநாட்டு முதலீட்டு வேகம் ஒரு கட்டத்தில் மேலைநாடுகளின் சொத்துக்களை சீனவங்கி அபகரித்துவிடும் என்பது உண்மையல்ல என்பதற்கு சில புள்ளிவிவரங்களை காட்டுகிறார். அந்நிய முதலீடுகளால் ஒரு நாட்டின் சொத்து இன்னொரு நாட்டின் கட்டுப்பாட்டில் போகாது என்பது இவரது வாதமாகும்.
மூலதன ஏற்றுமதி செய்வதை விட ஒவ்வொரு நாடும் உழைப்பாளிகளை இறக்குமதி செய்வது நல்லது என்கிறார்.
இயற்கைவளம் பூமிப்பந்தில் ஒரேமாதிரியாக இல்லை. இது உருவாக்கும் பிரச்சினைகளை சிந்திக்க இந்த புத்தகம் நம்மை தூண்டுகிறது.
மார்க்சிஸ்டுகளுக்கு இந்த புத்தகம் பழைய சவாலை புதுப்பிக்கிறது. அதாவது முதலாளித்துவ உற்பத்தி முறையில் லாபவிகிதம் சரியும் போக்குள்ளது என்ற மார்க்சின் கண்டுபிடிப்பை தவறு என்கிறது. இந்த சவாலால் மார்க்சின் மூலதன நூலை வரலாற்று ஆவணமாக பார்க்காமல் அதன் வரையறைகள் சரிதானா என்பதை இன்றைய புள்ளிவிவர அடிப்படையில் பரிசீலிக்க தூண்டுகிறது.
பணபுழக்கத்தை நெறிப்படுத்துவதின் மூலம் ஜனநாயக மாண்புகளை காக்கமுடியும் என்பதே இந்த புத்தகத்தின் ஜீவநாடியாகும். மார்க்சிய பொருளாதார கோட்பாடுகளுக்கு இது ஒரு சவாலாகும். கீழ்கண்ட காரணங்களால் இதனை மார்க்சிஸ்டுகள் படிப்பது அவசியம்.
- .முதலாளித்துவ உலகில் நடைபெறும் பொருளாதார கோட்பாட்டு சர்ச்சைகளை புரிந்து கொள்ள இந்தப் புத்தகம் உதவுகிறது.
- அமெரிக்க முதலாளித்துவ மாடலுக்கும் ஐரோப்பிய மாடலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிய உதவுகிறது.
- கார்ல் மார்க்சை மேலைநாட்டு பூர்சுவா பொருளாதார நிபுணர்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
- பணத்தின் வளர்சிதைமாற்றம் பற்றிய மார்க்சிய பார்வைக்கும் முதலாளித்துவ நிபுணர்களின் அணுகுமுறைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள இது உதவுகிறது. பாமரன் கையிலிருந்தால் பரிவர்த்தனை கருவி. இதுவே சேமிப்பானால் சொத்துக்களை மடக்கும் பங்குப்பத்திரம்- மற்றும் முன்பேரதாள். இதுவே வங்கியில் இருந்தால் நிதிமூலதனம் பணமென்றால் தங்கம்- வெள்ளி என்று இருந்த நிலைமாறி சொத்துக்களை அடிப்படையாக கொண்ட அருவமான டிஜிட்டல் பணபுழக்கம் எப்படி வந்தது என்பதை புரிய உதவுகிறது.
- எக்னாமிஸ்ட் என்ற பிரிட்டிஷ் இதழ்தான் தாமஸ் பிக்கெட்டியை 21ம்நூற்றாண்டு மார்க்ஸ் என்று விளம்பரப்படுத்தியது. அமெரிக்க பாணி தாராளமயப் பொருளாதாரத்தை பிக்கெட்டி தாக்குவதோடு மார்க்சையும் நிராகரித்து ஐரோப்பியபாணி முதலாளித்துவமே சிறப்பானது என்று காட்டுவதால் ஒருகல்லில் இரண்டு மாங்காய்கள் என்று மகிழ்கிறது.
- பணப்புழக்கத்தை சமூக உறவாக அணுகி பொருளாதாரத்தின் திசையை அரசியலே தீர்மானிக்கிறது என்ற மார்க்சின் கண்டுபிடிப்பை பிக்கெட்டி பார்க்க மறுக்கிறார் . அதேவேளையில் பணத்தின் நடமாட்டத்தை வரலாற்றுரீதியாக புரிந்து கொள்ள வாசகனை வேண்டுகிறார். இந்த ஒரு இடத்தில்தான் அவருக்கும் மார்க்சிற்கும் வேற்றுமை மறைகிறது.. மூலதனத்தை இயக்குகிற சமூகஉறவு, அந்தஉறவை தீர்மானிக்கிற அரசியல், அந்த அரசியலை தீர்மானிக்கிற வர்க்கப்போராட்டம் இவைகளையும் பணத்தின் வடிவங்கள் மாறுவதையும் இணைத்து பார்க்க மறுக்கிறார். வர்க்கப் போராட்டத்திற்கும் பொருளாதாரத்திற்கும் உறவு எதுவுமில்லை என்பதே அவர்களது பார்வையாகும்.
- அமெரிக்கா உலகநாடுகளின் தலையில் திணிக்கும் கட்டுத்தறியற்ற தாராளமய, தனியார்மய பொருளாதார கோட்பாட்டை பிக்கெட்டி ஆதாரங்களுடன் நிராகரிக்கிறார். அது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்பதை புள்ளிவிவரங்களை காட்டி நிரூபிக்கிறார்
- அதேவேளையில் மார்க்சிய கோட்பாடான சமூக உற்பத்திக்கு சமூக கட்டுப்பாடு ( சோசியல் கன்ட்ரோல் ஓவர் சோசியல் புரடக்ஷன்) என்பதை ஏனோ கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
- .ஜனநாயக உரிமைகளை பறிக்காமல் முதலாளித்துவம் நீடிக்க இவர் கூறுகிற ஆலோசனையை பிரெஞ்சு அரசே ஏற்கத் தயாரில்லை.(சொத்துவரி- பணப்புழக்கத்தை அதிகரித்தல்)
- மார்க்ஸ் எந்த இடத்திலும் முதலாளித்துவம் பேரழிவை சந்திக்கும் என்று கூறியதாகத் தெரியவில்லை. மூலதனம் சொத்துக்குவிக்கும் கருவியாக இருப்பது மாறிவிடும். சமூகம் உருவாக்கும் சொத்துக்கள் வர்க்கப்போராட்டத்தால் வர்க்கமுரண்கள் மறைந்து அந்த சமூக உறுப்பினர்களிடையே பகிரப்படும் என்கிறார். அது ஒரு புரட்சி மூலமே சாத்தியம் என்கிறார்
- இன்றைய அரசியல் பொருளாதார கோட்பாடுகள் சர்ச்சைகள் பணம் சமூகத்தின் மையப்புள்ளியாகி பணத்தை வைத்து பொருளுற்பத்தி என்பது தலைகீழாக போய் உற்பத்திசக்தியை பணமாக ஆக்கும் முறை எப்படி முதலாளித்துவ உலகில் வந்தது என்பதைப் புரிய விரும்புவோர் படிக்கவேண்டிய புத்தகம்.
மார்க்சின் மூலதனம் என்ற மகத்தான நூலின் அதிகம் வாசிக்கப்படாத வால்யூம் இரண்டு மற்றும் மூன்றில் மூலதன இயக்கத்தை மார்க்ஸ் எப்படி பகுத்து ஆய்வு செய்தாரோ அதேவழியை பிக்கெட்டி பின்பற்றினாலும் இருவரும் வேறுபடுகின்றனர் .
மூலதன சுழற்சியின் பணமூலதன வடிவையே மையமாக வைத்து பிக்கெட்டி பகுப்பாய்வு செய்கிறார். . ஆனால் மார்க்ஸ் மூலதனத்தின் உட்கூறுகள் நுகர்பொருள் உற்பத்தியில் ஈடுபடும் மூலதனம்-உற்பத்தி கருவிகளை உருவாக்கும் மூலதனம் இந்த இரண்டின் சுழற்சியை பகுப்பாய்வு செய்ய முயல்கிறார். இயற்கையையும் மனிதனையும் மதிக்காத இந்த இருவகை மூலதனங்களின் சுழற்சிகளை வைத்து மார்க்ஸ் உருவாக்கிய கோட்பாடுகளை பிக்கெட்டி ஏன் நிராகரித்தார் என்பதற்கு விளக்கம் தேவையில்லை.
இருந்தாலும் இந்த புத்தகம் வாசகனோடு உரையாடுவதால் கனத்தை மறந்து படிக்கத் தூண்டுகிறது. மார்க்சிய கோட்பாடுகளை புள்ளிவிவரங்களோடு உரசிப் பார்க்க உதவுவதால் நமக்கு படிக்க வேண்டிய புத்தகமாகி விடுகிறது.

நவீன தகவல் யுகத்தில் மார்க்சை வாசித்தல்
தமிழில் : இளங்கோவன்
புகழ்பெற்ற மார்க்சிய அறிஞரும் நவீன ஊடக சித்தாந்தியுமான கிறிஸ்டியன் ஃபக்ஸ் தகவல் யுகத்தில் மார்க்சை வாசித்தல் என்றதொரு புத்தகத்தை எழுதியுள்ளார். வெஸ்ட்மினிஸ்டர் கம்யூனிகேஷன் அண்ட் மீடியா ரிஸர்ச் இன்ஸ்டியூட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும், இயக்குனராகவும் இருந்து வரும் கிறிஸ்டியன் ஃபக்ஸ் எழுதிய புத்தகத்தின் அறிமுகப் பகுதியை இங்கே தருகிறோம். அந்த புத்தகம் மூலதனம் முதல் பாகத்தின் மீதான ஓர் ஊடக, செய்தித் தொடர்பு ஆய்வுகளின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது. மூலதனத்தில் மார்க்சின் அச்சாணி கருத்துக்களை ஃபக்ஸ் இந்த புத்தகத்தில் ஊடக, செய்தித் தொடர்பு கண்ணோட்டத்தில், இன்றைய இணையம், டிஜிட்டல் உழைப்பு, சமூக ஊடகம், ஊடக தொழில் துறை, டிஜிட்டல் வர்க்கப் போராட்டம் ஆகியவற்றின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். இன்றைய அன்றாட சர்வதேச உதாரணங்களுடன் மார்க்ஸ் மற்றும் மார்க்சின் படைப்புகளின் தொடர்ச்சியான முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்துகிறார். உலக முதலாளித்துவத்தில் அமேசான், கூகுள், முகநூல் முதலிய பன்னாட்டு ஊடக வர்த்தக நிறுவனங்கள் அதிகரித்துவரும் முக்கியத்துவத்தை கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் மார்க்சின் படைப்புகளின் தொடர்ச்சியான முக்கியத்துவத்தை அவர் தனது புத்தகத்தில் வலியுறுத்துகிறார். அவர் தனது புத்தகத்தில் கொடுத்துள்ள அறிமுகப் பகுதியை இங்கே தமிழில் தருகிறோம்.
அறிமுகம்
தகவல் யுகத்தில் மார்க்சை வாசித்தல்:
மூலதனம் முதல் பாகத்தின் மீது ஊடக, தகவல் தொடர்பு ஆய்வுகளின் அடிப்படையிலான ஒரு கண்ணோட்டம்
- மார்க்சை நான் ஏன் வாசிக்க வேண்டும்?
மார்க்சை நான் ஏன் வாசிக்க வேண்டும்? அதைவிட நான் முகநூலில் நுழைந்து மகிழலாமே! என்று இந்த புத்தகத்தை படிப்பவர் கேட்கலாம். மூலதனம் முதல் பாகத்தை நான் ஏன் வாசிக்க வேண்டும்? அதுவும் தகவல் தொடர்பு விசயத்தில் அதன் பயன் என்ன? மார்க்ஸ் மூலதனத்தை மடிக்கணினியிலா எழுதினார்? என மேலும் கேள்விகளை எழுப்பலாம். அவருக்கு இணைய இதழோ (Blog) முகநூலோ கிடையாது. ட்விட்டரும் கிடையாது. அத்தகைய ஊடகங்கள் நமது இன்றைய வாழ்வில் நீக்கமற நிறைந்துள்ளன. நாம் நமது வேலையிலும், அரசியலிலும், அன்றாட வாழ்விலும் இவற்றை பயன்படுத்துகிறோம். அவர்களில் பெரும்பாலோர் தாங்கள் லாப நோக்குள்ள வர்த்தக நிறுவனங்களால் இணைக்கப்பட்டுள்ளோம் என்பதைத்தான் பகிர்ந்து கொள்கிறார்கள்.
மார்க்ஸ் “மூலதனச் சேர்க்கை” என்று பெயரிட்டதன் வெளிப்பாடுதான் அவை. அதே நேரத்தில் அவை நமக்குள் தகவல் பரிமாறிக்கொள்ளவதையும், சமூக உறவைப் பேணுவதையும் சாத்தியமாக்குகின்றன. தகவல், செய்தித் தொடர்பு, சமூக வாழ்வு ஆகியவை அவற்றின் “பயன் மதிப்பு” ஆகும். எப்படி பொருள்கள் மனிதத் தேவையை திருப்தி செய்கின்றன என்பதை விவரிக்க மார்க்ஸ் பயன்படுத்தும் சொற்றொடர்தான் இந்த பயன் மதிப்பு.
செய்தித் தொடர்பு வர்த்தக நிறுவனங்கள் தாங்கள் லாப நோக்கம் கொண்டவர்கள் என்பதை எப்போதும் முகத்தோற்றத்தில் காட்டுவதில்லை. அவற்றின் பயன் மதிப்பையே முன்னிலைப்படுத்துகின்றன. முகநூலையே எடுத்துக் கொள்வோம். அது சொல்வதென்ன? “உங்கள் வாழ்வில் மற்றவர்களுடன் இணைந்திடவும், பகிர்ந்து கொள்ளவும் இது உதவுகிறது”. ட்விட்டர் “உங்கள் நண்பர்களுடனும், இதர கவர்ச்சிக்குரியவர்களுடனும் இணைந்திட அனுமதிக்கிறது” என்று வாதிடுகிறது. இப்படி அவர்கள் உரிமை கொண்டாடுவது உண்மையற்றது என்று கூறிவிட முடியாது. ஆனால் அவை கதையின் ஒரு பக்கம்தான். மார்க்ஸ் சொல்வதைப் போன்று அவை மிகைப்படுத்தப்பட்ட தத்துவங்கள் ஆகும். அல்லது அவர் சொல்வது போல செய்தி தொடர்பு வர்த்தக நிறுவனங்கள் பரிவர்த்தனை மதிப்பிலிருந்தும், பெரும் செல்வம் கொழிக்கவே கிளம்பி இருக்கிறார்கள் என்ற உண்மையிலிருந்தும், நமது கவனத்தை திசை திருப்புவதற்காகவே அவர்கள் பயன் மதிப்புக்கு “மாந்திரீக சக்தியை கற்பிதம்” செய்கிறார்கள். மார்க்ஸ் மேலும் கவனத்துக்குரியவராக இருக்கிறார். ஏனென்றால் நாம் முதலாளித்துவ செய்தித் தொடர்பு உலகில் வாழ்கிறோம். செய்தித் தொடர்பின் பல வடிவங்கள் தத்துவங்களை பரப்புகின்றன. அவை லாபத்துக்கானது போன்ற வர்த்தகங்களாக ஒன்றிணைந்துள்ளன.
இன்றைய முதலாளித்துவம் என்பது மார்க்ஸ் வாழ்ந்த 19-ம் நூற்றாண்டு முதலாளித்துவம் போன்றதல்ல. சற்றே வித்தியாசமானது. அது உலக மயமாகி உள்ளது. நிதி, தொழில் நுட்பம், போக்குவரத்து, நுகர்வோர் கலாச்சாரம், விளம்பரம் ஆகியவை பெரும்பங்கு வகிப்பது போன்ற பல அம்சங்களில் அது வேறுபட்டது. இருந்தாலும் இந்த அனைத்து நிகழ்வுகளின் அடித்தளங்களையும் மார்க்ஸ் ஏற்கனவே பார்த்திருந்தார். அவற்றின் எதிர்காலப் பொருத்தப்பாட்டை எதிர்பார்த்திருந்தார். சமூகம் வரலாற்று பூர்வமானது என்பதை அவர் வலியுறுத்தினார். முதலாளித்துவம் வளர்கிறது. புதிய குணாம்சங்களை கைக்கொள்கிறது. சிலவற்றை தொடராமல் விடுகிறது. அதன் அடிநாதமான அடித்தளக் கட்டமைப்பான “மூலதனச் சேர்க்கை” என்ற கட்டமைப்பை புனர் நிர்மாணம் செய்வதற்காக இவற்றை செய்கிறது.
மார்க்ஸ் பண்பாட்டியல், அரசியல் ஆகியவை குறித்தும் கவனம் செலுத்தினார். சாத்தியமான சிறந்த உலகில் நாம் வாழவில்லை என்பதால் முதலாளித்துவத்திற்கு மாற்று நமக்கு தேவை என்பதில் மார்க்ஸ் நம்பிக்கை கொண்டிருந்தார். எனவே தற்கால முதலாளித்துவ ஊடகத்தின் சமூக கோணத்தை அவர் வரவேற்பார். ஆனால் அதன் முதலாளித்துவ உள்நோக்கத்திலிருந்தும் பயன்பாட்டிலிருந்தும் மாற்றி அதனை வெற்றி கொள்ள வேண்டும் என்று வாதிடுவார். அத்தகைய மாறுபட்ட உலகை படைப்பதற்கான போராட்டங்களையும் அவர் ஆதரித்திருப்பார். எனவே தற்கால செய்தித் தொடர்புகள் பற்றி சொல்வதற்கு மார்க்ஸ் ஏராளமான வகையில் நமக்கு பொருந்தி வருகிறார். மடிக்கணினிகள், கைபேசிகள், ட்விட்டர், முகநூல் போன்றவற்றை புரிந்து கொள்ள நாம் மார்க்சுடன் தொடர்பு கொள்ள வேண்டியிருக்கிறது. தகவல் மற்றும் இணைய யுகத்தை விமர்சன பூர்வமாக புரிந்து கொள்ள அவரது சிந்தனை இன்றியமையாதது ஆகும். எனவே மார்க்சும் முகநூலும் எதிரெதிரானவை அல்ல. முகநூலை மார்க்ஸ் இன்றி உங்களால் புரிந்து கொள்ள முடியாது. முகநூலின் மீதான மார்க்சின் விமர்சன பூர்வமான கண்ணோட்டத்தை நமக்கு தருகிறது. அப்படி புரிந்து கொள்வதற்கு இந்த புத்தகம் ஒரு தோழனாக விளங்கும். ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு கண்ணோட்டத்தில் மூலதனம் முதல் பாகத்தை எப்படி வாசிப்பது என்பதற்கு இது படிப்படியான வழிகாட்டியாகும்.
ஊடக, செய்தித் தொடர்புகள் கண்ணோட்டத்தில் மூலதனத்தை ஏன் வாசிக்க வேண்டும்?
1867ல் மூலதனம் முதல் பாகத்தின் முதல் பதிப்பு வெளியானதிலிருந்து அதற்கு பல அறிமுக நூல்கள் எழுதப்பட்டுள்ளன. மிகவும் பரந்து பட்டவர்களால் வாசிக்கப்பட்ட மார்க்சின் நூல் பற்றிய அறிமுகம் எப்படி சாத்தியமானது என்பதும், உதவிகரமானது என்பதும், ஒவ்வொருவரின் சொந்த முடிவுக்குரியது. உங்கள் கையில் உள்ள இந்த புத்தகம் சற்றே வேறுபட்ட நோக்கம் கொண்டது. இது இன்னொரு பொது அறிமுகமோ அல்லது துணை நிற்கும் வழிகாட்டியோ அல்ல.
முதலாளித்துவத்தில் ஊடகம், தகவல் தொடர்பு, செய்தித் தொடர்பு, கணினி, இணையம் ஆகியவற்றின் பங்கு குறித்து மார்க்சின் மூலதனம் முதல் பாகத்தை வாசிப்பவரிடையே கேள்விகள் எழுப்பிட உதவி செய்வதே இதன் பணியாகும். ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பில் அக்கறை கொண்டவர்களுக்கு இந்தப் புத்தகம் மூலதனம் முதல் பாகத்திற்கு ஒரு அறிமுகம் தருவதோடு, அதற்கு துணை நிற்கும் வழிகாட்டியாகவும் உள்ளது. ஊடகம், தகவல் தொடர்பு, செய்தித் தொடர்பு ஆகியவற்றின் அரசியல் பொருளாதார விமரிசனத்திற்கான அடிப்படைகளுக்கு இது ஒரு பங்களிப்பாகும்.
அப்படிப்பட்ட ஒரு புத்தகத்தின் தேவை என்ன? ஏன் ஒருவர் ஊடகம், செய்தித் தொடர்பை மையப்படுத்தி அதன் கண்ணோட்டத்தில் மார்க்சின் மூலதனத்தை வாசிக்க வேண்டும்? தகவல் தொடர்பு, அறிவு அல்லது வலைப்பின்னல் போன்ற பொருளாதாரத்திலும் சமூகத்திலும் நாம் வாழ்கிறோம் என்பவர்கள் மெய்யென வாதிடுவது பெரும்பாலும் மிகைப்படுத்த்ப்பட்ட கூற்றாகும். நாம் வாழும் பொருளாதாரமும் சமூகமும் முற்றிலும் புதியது. அதற்கும் மார்க்ஸ் பகுத்தாய்ந்த 19வது நூற்றாண்டு முதலாளித்துவத்துக்கும் பொதுவான அம்சங்கள் எதுவும் இல்லை என்ற கருத்தை அவர்கள்முன் வைக்கிறார்கள். இத்தகைய வலியுறுத்தல்கள் பெரும்பாலும் முதலாளித்துவத்தில் புதிய தொழில் நுட்பங்கள் ஒவ்வொருக்குமான மாபெரும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பதோடு முதலாளித்துவ உற்பத்தி முறை, ஜனநாயகம், செல்வம், சுதந்திரம், ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கான உள்ளார்ந்த ஆற்றல்களை கொண்டுள்ளது என்றும் பரப்புவதற்கும் தான் சேவை செய்கிறது. ஆனால் முதலாளித்துவ வரலாறு என்பது யுத்தங்கள், அசமத்துவம், ஆதிக்கம் (Hegemony), நெருக்கடி ஆகியவற்றின் வரலாறாகும். முதலாளித்துவ யதார்த்தம் முற்போக்கு கருத்துக்களை கீழறுக்கிறது. கேள்விகளுக்கு உட்படுத்துகிறது. தகவல் சமூக பெருமைப் பேச்சு ஒரு பட்சமானது. விமர்சன பூர்வமற்றது. அதை சந்தேகிக்க வேண்டும்.
முதலாளித்துவத்தில் தகவல் தொடர்பு, ஊடகம், செய்தித் தொடர்பு ஆகியவற்றின் பங்கை சிறுமைப்படுத்துவதும் உதாசீனப்படுத்துவதும் இருந்து வருகிறது. இது தகவல் சமூக பெருமைப் பேச்சுக்கு தவறான எதிர்வினையாகும். உலகில் உள்ள மிகப் பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் லாபங்கள், வரவுகள், மூலதனச் சொத்துக்கள், பங்குச் சந்தை மதிப்புகள் ஆகிய புள்ளி விபரங்களை நோக்கினால் அவற்றில் ஒரு சில நிறுவனங்கள்தான் கீழ்க்கண்ட பொருளாதார துறைகளிலும் பிரிவுகளிலும் உள்ளதைக் காண முடியும்.
விளம்பரம், ஒலிபரப்பு, கேபிள், செய்தித் தொடர்பு சாதனங்கள், கணினி வன்பொருள், கலாச்சாரம், பொழுது போக்கு, ஓய்வு நேரம், கணினி சேவைகள், கணினி சேமிப்புக் கருவிகள், மின்னணு இணைய மேடைகள், புத்தகம் அச்சிடல், வெளியிடுதல், செமி கண்டக்டர், மென்பொருள், தொலைத் தொடர்பு. தகவல் பொருளாதாரம் ஆகியவை முதலாளித்துவத்தின் ஆதிக்கம் செலுத்தும் பிரிவாக இல்லாமல் இருக்கலாம். என்றாலும் அது மற்ற முதலாளித்துவ தொழில்களைப் போலவே முதலாளித்துவத்தை புரிந்து கொள்ள முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நிதி முதலாளித்துவம், ஏகாதிபத்திய முதலாளித்துவம். நெருக்கடி முதலாளித்துவம், அதீத தொழில் முதலாளித்துவம் (புதை எரிபொருள் தொழில், ஓரிடத்தில் ஸ்திரமாக இல்லாது பல்வேறிடங்களுக்கு நகரும் தொழில் ஆகியவற்றின் முக்கியத்துவம்) முதலியவை போலவே தற்கால முதலாளித்துவம் என்பது தகவல் முதலாளித்துவமாகும்.
முதலாளித்துவம் என்பது பல பரிமாணங்கள் கொண்ட பொருளாதார சமூக அமைப்பாகும். தகவல் என்பது அதன் பல பரிமாணங்களில் ஒன்றுதான். தகவல் முதலாளித்துவத்தில் தகவலின் பங்கும் முரண்பாடுகளும் பற்றிய ஆய்வு என்பது சமூகத்தின் விமர்சன கண்ணோட்டத்தின் ஒரு முக்கிய பணியும் பரிமாணமுமாகும்.
ஊடகம், செய்தித் தொடர்பு ஆகியவற்றின் அரசியல் பொருளாதார விமர்சனம்
ஊடகம், செய்தித் தொடர்பு ஆகியவற்றின் ஆய்வுகளின் ஒரு துணைப் பிரிவுதான் அதன் அரசியல் பொருளாதார விமர்சன உரையும். இது குறிப்பிடத்தக்க வகையில் ஆய்விலும் அது சார்ந்த துறைகளிலும் அடித்தளக் கட்டுமானம் உருவாகிட காரணமாகியுள்ளது.
உதாரணமாக
@அறிமுக பாட புத்தகங்கள் (மோஸ்கோ 2009, ஹார்டி 2014)
@கற்றறிந்தவர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கல்விசார்ந்த வலைப் பின்னல் அமைப்பு (சர்வதேச ஊடக, செய்தித் தொடர்பு ஆய்வு சங்கத்தின் அரசியல் பொருளாதார பிரிவு)
@கையேடுகள் (வாஸ்கோ, முர்டோக், சௌசா 2011)
@இதழ்கள் (triple C: Communication, Capitalism &Critique – http://www.triple-c.at; The Political Economy of Communication – http://www.polecom.org);
@அறிமுக பாடங்கள் (Mattel art and Sidgelaub 1979, 1983; Golding and Murdock 1997)
@ மிக முக்கியமாக, சிறந்த உலகு தேவை எனும் அரசியல் அக்கறை உள்ள, முதலாளித்துவம், செய்தித் தொடர்பு பற்றி புரிந்து கொள்ளும் கல்வி அக்கறை உள்ள, ஒரு செயலூக்கமுள்ள அறிஞர்கள் சமூகம் உள்ளது. அவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அவர்களுடன் விவாதங்கள் செய்திருக்கிறேன். ஏராளமான விசயங்களை தெரிந்து கொண்டேன். அவர்களுக்கு பெரிதும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். ஊடக, செய்தித் தொடர்பு குறித்த அரசியல் பொருளாதார விமர்சனத்தை நிலை நிறுத்தவும் வளர்த்தெடுக்கவும் இந்த சமூகத்தின் முயற்சி முக்கியமானது. ஆர்வமூட்டுவது.
கிரகாம் முர்டோக், பீட்டர் கோல்டிங் (1993) ஆகிய இருவரும் “வெகுஜன செய்தித் தொடர்புகளின் அரசியல் பொருளாதாரத்திற்காக” என்ற கட்டுரையை வெளியிட்டார்கள். அதில் அவர்கள் செய்தித் தொடர்புகளின் அரசியல் பொருளாதார விமர்சனம் எனில் முதலாளித்துவத்தையும், செய்தித் தொடர்பையும் விமர்சன பூர்வமாக ஆய்வது என்பதே அதன் பொருள் என்றார்கள். “வெகுஜன செய்தித் தொடர்புகளின் அரசியல் பொருளாதாரத்திற்கு கண்கூடான தொடக்கப் புள்ளி எது? எல்லாவற்றுக்கும் முதன் முதலாக சரக்குகளை உற்பத்தி செய்து விநியோகிக்கும் தொழில் வர்த்தக நிறுவனங்கள், வெகுஜன ஊடகம் என்பதை அங்கீகரிப்பதுதான் அது.” (முர்டோக் மற்றும் கோல்டிங் 1993 பக்கம் 206-207)
முர்டோக், கோல்டிங் ஆகிய இருவரைப் பொறுத்தமட்டில் முதலாளித்துவத்தில் ஊடகம் என்பது சரக்கு மயமாக்குவதையும் தத்துவங்கள் பரப்புவதையும் ஊட்டி வளர்க்கும் இரட்டை வேடம் கொண்டதாகும். இந்த பகுப்பாய்வானது மூலதனம் முதல் பாகத்தில் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனத்துக்கு முக்கியமானது என்று மார்க்ஸ் சுட்டிக் காட்டிய இரண்டு முக்கிய அம்சங்களோடு ஒத்துப் போகிறது.
(அ) சரக்குகளின் தர்க்கம்
முதலாளித்துவ உற்பத்தி முறை பிரதான உற்பத்தி முறையாக நிலவுகிற சமூகங்களின் செல்வமானது “சரக்குகளின் அளவிட முடியாத திரட்சியாக” தோன்றுகிறது. தனிப்பட்ட சரக்கானது அதன் ஆதார வடிவமாக தோன்றுகிறது. எனவே நமது விசாரணை சரக்கை பகுப்பாய்வதிலிருந்து தொடங்குகிறது. செய்தித் தொடர்பின் அரசியல் பொருளாதார விமர்சகனானவன் எப்படி செய்தித் தொடர்புகளையும் முரண்பாடுகளையும், அதனுடன் தொடர்புடைய போராட்டங்களையும் சரக்கு வடிவம் வடிவமைக்கிறது என்பதைப் பற்றி கேள்விகள் எழுப்புகிறான்.
(ஆ) சரக்கின் மீது “மாந்திரீக சக்தி கற்பிதம் செய்தல்”
சரக்குகள் என்றும் இருக்கும். அவை மனிதன் வாழ்வதற்கு பரிபூரண தேவை. இத்தகைய நிகழ்வுகளை தத்துவங்கள் முன் வைக்கின்றன. சமூக நிகழ்வுகள் சமூக உறவில் மனிதனால் உருவாக்கப்படுபவை. எனவே அவற்றை மாற்றிட முடியும் என்பதை அவர்கள் தேவையற்றது என்று ஒதுக்கிவிடுகிறார்கள். முதலாளித்துவ ஊடகங்கள் முக்கிய இட வெளிகளாகும். அங்குதான் தத்துவங்கள் கட்டமைக்கப்படுகின்றன. பரப்பப்படுகின்றன. மறு உற்பத்தி செய்யப்படுகின்றன. மறுக்கப்படுகின்றன. விவாதத்தில் இழுக்கப்படுகின்றன.
“மனிதர்களுக்கிடையேயான திட்டவட்டமான சமூக உறவுதான் பொருள்களுக்கிடையேயான உறவாக எல்லையில்லா கற்பனை வடிவமாக அவர்கள் பார்வையில் உருவெடுக்கிறது. எனவே ஓர் ஒப்புமையை காணும் பொருட்டு நாம் பனி மூடிய மத ராச்சியத்தில் நுழைய வேண்டும். அங்கே மனித
மூளையின் உற்பத்திப் பொருட்கள் அவற்றுக்கே சொந்தமான ஒரு வாழ்வு பெற்று சுயேச்சையான வடிவங்களாக தோன்றுகின்றன. அந்தப் பொருட்கள் ஒன்றோடொன்றும் மனித இனத்தோடும் என இரு வகையிலும் உறவு கொள்கின்றன. சரக்குகளின் உலகத்தில் மனிதக் கரங்களின் உற்பத்திப் பொருட்களும் அப்படித்தான் தோன்றுகின்றன. இதை நான் கற்பிதம் செய்யப்பட்ட மாந்திரீக சக்தி (Fetishism) என அழைக்கிறேன். உழைப்பின் உற்பத்திப் பொருட்கள் சரக்குகளாக உற்பத்தி செய்யப்பட்ட தருணமே அதன் மீது இந்த சக்திதானே ஒட்டிக் கொள்கிறது. எனவே இந்த சக்தி சரக்கு உற்பத்தியானதிலிருந்து பிரிக்க முடியாதது.” (மூலதனம்)
மோஸ்கோ “செய்தித் தொடர்பின் அரசியல் பொருளாதாரம்” என்ற தான் தொடங்கிவைத்த அறிமுகப் புத்தகத்தில் இந்த ஆய்வுப் பிரிவுக்கு இப்படி வரையறை செய்கிறார். “செய்தித் தொடர்பு செல்வாதாரங்கள் உள்ளிட்ட அனைத்து செல்வாதாரங்களின் உற்பத்தி, விநியோகம், நுகர்வு ஆகிய ஒன்றுடன் ஒன்று இயைந்த, குறிப்பாக ஆளுகை உறவுகளான சமூக உறவுகளை ஆய்வது” என்பதே அது. (மோஸ்கோ,2009)
ஊடகம் செய்தித் தொடர்பு ஆகியவற்றின் விமர்சன பூர்வமான அரசியல் பொருளாதாரம் என்பது “ஊடகம் செய்தித் தொடர்பின் சூழலில் முதலாளித்துவ சமூகங்களுக்குள் செல்வாதாரங்களை ஒதுக்கீடு செய்வதோடு தொடர்புடையது என்றும், உடமை கட்டுப்பாடு, அதிகாரம், வர்க்கம், அமைப்பு ரீதியான அசமத்துவங்கள், முரண்பாடுகள், எதிர்ப்பு, தலையீடு ஆகியவற்றின் மீது அது சிறப்பு கவனம் செலுத்துகிறது” என்பதையும் ஜேனட் வாஸ்கோ வலியுறுத்துகிறார்.
முர்டோக், கோல்டிங் ஆகிய இருவரின் அணுகுமுறைப்படி செய்தித் தொடர்பின் அரசியல் பொருளாதார விமர்சனம் என்பது ஒவ்வொரு நாள் செயல்பாடுகளையும் உள்ளடக்கி வடிவம் தரும் விரிவான கட்டமைப்புகளை ஆராய்வதாகும். ஊடக தொழில் துறையின் பொருளாதார நிறுவனங்கள் அர்த்தங்களின் உற்பத்தி மற்றும் சுற்றுக்கு விடுவது ஆகியவற்றின் மீது நிர்ப்பந்தம் செலுத்துகிறார்கள் என்பதை இந்த ஆய்வு பார்க்கிறது. பொதுவான பொருளாதர அமைப்பில் தங்களது இடத்தை வைத்துக் கொண்டு மக்களின் கருத்துக்கள் நுகர்வுக்காகவும் பயன்பாட்டுக்காகவும் எத்தகைய வழிகளில் கட்டமைக்கப்படுகிறது என்பதை அது ஆய்வு செய்கிறது. சமூக உறவுகள் மற்றும் ஆதிக்கத்தின் ஆட்டத்துடன் அது தொடங்குகிறது. சமூக உறவுகளில் கட்டமைக்கப்பட்ட ஒத்திசைவுகள் மூலம் ஒவ்வொரு மட்டத்திலும் எப்படி அர்த்தம் உருவாக்கப்படுகிறது என்றும் பார்ப்பதில் அந்த ஆய்வு அக்கறை கொண்டுள்ளது. விமர்சன அரசியல் பொருளாதாரத்தை தனித்துவம் மிக்கதாக ஆக்குவதை குறிப்பது என்னவென்றால் அது எப்போதும் நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கைக்கும் அப்பால் சென்று எப்படி குறிப்பிட்ட நடப்பு சூழல்கள் பொதுவான பொருளாதார இயக்க ஆளுதலாலும் அவை தாங்கிப் பிடிக்கும் விரிந்த அமைப்புகளாலும் வடிவமைக்கப்படுகின்றன என்பதையும் காட்டுகின்றன.
- மூன்று அம்சங்கள்
மோஸ்கோ (2009) என்பவர் செய்தித் தொடர்பின் அரசியல் பொருளாதார விமர்சனமானது ஆய்வின் மூன்று அம்சங்களில் கவனம் செலுத்துகிறது என்கிறார். அவை சரக்குமயமாக்குதல் (Commodification),இடவெளி உடைத்தல்(Spatialisation) அமைப்புருவாக்கம் (Structuration) என்பதேயாகும்.
சரக்குமயமாக்குதல்
பயன்பாட்டில் மதிப்பு மிகுந்த பொருட்களை பரிவர்த்தனையில் அவை என்ன கொண்டு வருமோ அந்த வகையில் மதிப்பு மிகுந்த சந்தைப்படுத்துவதற்கேற்ற பொருளாக உருமாற்றும் போக்குதான் இது. ஊடக ராச்சியத்தில், உதாரணமாக, உள்ளடக்கத்தையும் ரசிகர்களையும் (Audidnce) உழைப்பையும், பயன்படுத்துவோரையும், நுழைவு உரிமையையும் (access), தொழில் நுட்பங்களையும் சரக்கு மயமாக்குவது நடைபெற்று வருகிறது.
இடவெளி உடைத்தல்
மற்றவர்களோடு வெகு ஜன ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு தொழில் நுட்பங்கள் துணை கொண்டு பூகோள இடை வெளி தடைகளை வெற்றி கொள்ளும் போக்குதான் இது. அதன் இந்த பரிமாணம் ஊடகத்தின் வணிகமயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், சர்வதேசிய மயமாக்கல் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அமைப்புருவாக்கம்
பிரதானமாக சமூக வர்க்கம், பால், இன அடிப்படைகளில் திரண்டிருப்பவர்களிடம் சமூக உறவுகளை உருவாக்கும் போக்கு, வர்க்கம், பால், இனம் அவை ஒன்றுடன் ஒன்று சந்திக்கும் புள்ளிகள் ஆகிய சூழலில் நவீன ஊடகம் கவனத்துக்குரியதாக உள்ளது.
நான்கு கொள்கைகள்
மோஸ்கோ, முர்டோக், கோல்டிங் ஆகியோரின் அரசியல் பொருளாதார விமர்சனமானது நான்கு அணுகுமுறை (methodological)கொள்கைகளை குறிப்பிடத்தக்கவிதத்தில் மையப்படுத்துகிறது என்று வலியுறுத்துகிறார்கள். அவை வரலாறு, சமூக முழுமை, தார்மீக நெறிகளின் தத்துவம், சமூக நடைமுறை ஆகியவையே ஆகும்.
- வரலாறு
பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றின் வரலாற்று பூர்வ வளர்ச்சி, முதலாளித்துவத்தின் இயக்க ஆற்றலும் அதன் மாற்றங்களும், ஊடகம், நாகரீக சமூகம், சரக்கு மயமாதல் அரசு ஆகியவற்றின் வரலாறு, அத்துடன் இந்த பரிமாணங்கள் எப்படி உட்தொடர்பு கொண்டுள்ளன என்பதில் இந்த ஆய்வு அக்கறை கொண்டுள்ளது.
- சமூக முழுமை
சமூகத்தைப் பற்றி பெரும் தோற்றம் உள்ளது. அரசியல் பொருளாதார நிபுணர் கேள்விகளை எழுப்புகிறார்! அதிகாரமும் செல்வமும் எப்படி தொடர்புடையன? அவை எவ்வாறு கலாச்சாரத்தோடும் சமூக வாழ்வோடும் தொடர்புடையன? இவை அனைத்தும் நமது வெகு ஜன ஊடகம், தகவல் தொடர்பு, மற்றும் பொழுது போக்கு சாதனங்களின் மீது எப்படி செல்வாக்கு செலுத்துகின்றன? இவற்றின் செல்வாக்கு அதிகாரம், செல்வம், கலாச்சாரம் சமூக வாழ்வை எப்படி பாதிக்கின்றன? என்று செய்தித் தொடர்பின் அரசியல் பொருளாதார நிபுணர் அறிந்து கொள்ள விரும்புகிறார். (மோஸ்கோ, 2009)
- தார்மீக நெறிகளின் தத்துவம்
அரசியல் பொருளாதாரம் “சமூக வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் ஜனநாயகத்தை விரிவுபடுத்த வேண்டும்” என்று வாதிடுகிறது. அரசியல், பொருளாதாரம், வேலையிட கலாச்சாரம், அன்றாட வாழ்வு அத்துடன் ஊடகத்துக்கும் விரிவுபடுத்திட வாதிடுகிறது. அது “நீதி, நடுநிலைமை, பொது நலன் பற்றிய அடிப்படை தார்மீக வினாக்களை” எழுப்புகிறது. இன்றைய முன்னோடி பிரதான நீரோட்ட பொருளாதார நிபுணர்கள் அவர்களது பொருளாதார உரைகளில் தார்மீக மொழிiயைப் பயன்படுத்துவதற்கு அவ்வளவு வெறுப்புடையவர்கள் அல்ல. ஆனால் பிரதான நீரோட்டத்திலிருந்து மாறுபடும் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்த அரசியல் பொருளாதார நிபுணர்கள்தான் தார்மீக கவலையை எழுப்புகிறார்கள். தார்மீக நெறி தத்துவத்தின் இடம் குறித்து மார்க்சிய நிபுணர்களும் நிறுவனமாகிப்போன பாரம்பர்ய நெறிமுறைககளும் விவாதங்களில் மூழ்கி உள்ளன.
- சமூக நடைமுறை
இருப்பதைவிட ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்காக, உலகை மாற்றும் நோக்கோடு நடக்கும் போராட்டங்களை ஆய்வு செய்யவும் அவற்றின் தகவலை பரப்பவும் இக்களம் அக்கறை கொண்டுள்ளது.
ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பின் அரசியல் பொருளாதார விமர்சனம் என்பது “செய்தித் தொடர்பின் மார்க்சிய தத்துவமாகும்”. (ஸ்மித், 1994) “பொதுவாக குணாம்சத்தில் மார்க்சிய அனுதாபிகள்” (அயசஒளையவே) அவர். (முர்டோக் மற்றும் கோல்டிங்) ஜோனேட் வாஸ்கோவின்படி (2014) , ஊடகம், செய்தித் தொடர்பின் அரசியல் பொருளாதாரம் என்பது பெரும்பாலான சமயங்களில் “மார்க்சிய அல்லது நவீன மார்க்சிய தத்துவார்த்த வரையறையை பயன்படுத்துகிறது.” 21ம் நூற்றாண்டில் இக்களம் குறித்த பரிசீலனையின் முடிவை இப்படி கூறுகிறார். “ஜீன் பால் சார்த்தர் ஒருமுறை சொன்னது போல “மார்க்சியம் நமது காலத்தின் தத்துவமாக விளங்குகிறது. ஏனென்றால் அது தோன்றுவதற்கு காரணமாக இருந்த சூழ்நிலைகளைத் தாண்டி நாம் போகவில்லை”. ஊடகத்தின் அரசியல் பொருளாதார ஆய்வுக்கும் அதே மாதிரியான வாதங்களை முன் வைக்க முடியும். (வாஸ்கோ, 2014)
கிரகாம் முர்டோக் (2006) மார்க்ஸ் நமது சம காலத்தவர் என வாதிடுகிறார். இன்றைய முதலாளித்துவத்தின் கலாச்சாரத்தின் பல பரிமாணங்கள் பற்றிய சரியான விமர்சனபூர்வமான பகுப்பாய்வு மார்க்ஸ் எழுத்துக்களின் மூன்ற மையக் கருத்துக்களோடு ஈடுபட்டு தொடங்க வேண்டும். சரக்குமயமாதல், முரண்பாடு, உலகமயம் ஆகியவையே அந்த மூன்று மையக் கருத்துக்கள். அத்தகைய ஒரு பகுப்பாய்வானது மார்க்சின் அனைத்து வகை எழுத்துக்களின் ஊடேயும் ஈடுபட்டு தொடங்கப்பட வேண்டும்.
வின்சென்ட் மோஸ்கோ சொல்கிறார்! மார்க்சின் எழுத்துக்கள் பல்வேறான வழியில் செய்தித் தொடர்பை விமர்சன பூர்வமாக புரிந்து கொள்ள பொருத்தமானது. “உலக செய்தித் தொடர்பை புரிந்து கொள்ள மார்க்சின் மூலதனம் அரசியல் பொருளாதாரம் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தது. இருந்தும் இன்னொரு மார்க்ஸ் இருக்கிறார். முதலாமவர்க்கு தொடர்பில்லாதவர் அல்ல. அவரது கலாச்சாரம், தத்துவம் குறித்த எழுத்துக்கள் ஜெர்மன் தத்துவம், பொருளாதார தத்துவார்த்த கைப்பிரதிகளில் பிரசுரிக்கப்பட்டது. இளைய மார்க்சின் இதர எழுத்துக்களும் கலாச்சார ஆய்வுகளிலும் விமர்சனத்திலும் பகுப்பாய்வை உத்வேகமூட்டின. அரசியல் பொருளாதாரம் மற்றும் கலாச்சார ஆய்வுகளின் மார்க்ஸ், செய்தித் தொடர்பு விமர்சன ஆய்வின் தூண்களை உயர்த்தி நிறுத்துகின்றன என்று தீர்மானிப்பது மிகைபடக் கூறுவதல்ல. அரசியல் பொருளாதார மார்க்ஸ், கலாச்சார ஆய்வுகளின் மார்க்ஸ் இதற்கும் கூடுதலாக புகழ்மிக்கதும் புகழுக்குரியதல்லாததுமான அவரது தி கிரன்டிரிஸ் குறிப்பு புத்தகங்கள் உள்ளன. ஒருதொழில்முறை பத்திரிக்கையாளன் மார்க்சும் இருக்கிறார். உண்மையில் தன் வாழ்நாள் முழுவதும் பத்திரிக்கையாளனாக செயல்பட்ட போதிலும் தி கிரன்டிரிஸ் மற்றும் மார்க்சின் பத்திரிக்கையாளனாக வாழ்ந்த சிறந்த பகுதி இண்டும் அவர் தொழிலின் முந்தைய மற்றும் பிந்திய முக்கிய காலகட்டங்களுக்கு பாலம் அமைத்தன. ஊடகம், செய்தித் தொடர்பின் அரசியல் பொருளாதார விமர்சனம் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்புகளின் ஆய்வுகளுக்கு குறிப்பிடத்தகுந்த பங்களித்திருக்கின்றன. முதலாளித்துவத்தில் ஊடகம் செய்தித் தொடர்பின் பங்கை வெளிச்சம் போட்டுக் காட்ட உதவியுள்ளது. மார்க்சின் படைப்புகள் அதன் மீது பெரும் செல்வாக்கு செலுத்தியுள்ளன. இந்த புத்தகம் இந்த பாரம்பரியத்துக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது. அந்த பாரம்பரியத்தின் பாகமாக தன்னை புரிந்து கொள்கிறது.
செய்தித் தொடர்புகள்: மார்க்சியத்தின் கண்ணுக்குப் புலப்படாத பகுதி
ஊடகம், செய்தித் தொடர்பின் அரசியல் பொருளாதார களத்தில் கலாச்சாரம், தகவல் தொடர்பு, செய்தித் தொடர்பு, ஊடகம்,
இணையம் ஆகியவற்றின் பங்கு அத்தோடு முரண்பாடுகளுக்கு தொடர்புடைய அம்சங்கள் விமர்சன பூர்வமாக பகுத்தாயப்பட்டுள்ளன. இருந்தாலும் அவை பெரும்பாலும் தீவிர அக்கறையுடன் கவனிக்கப்படவில்லை. மார்க்சிய தத்துவத்தில் சொல்வதானால் போதிய அக்கறையுடன் கவனிக்கப்படவில்லை. அவை மேற்கட்டுமானம், இரண்டாம் பட்சமானது, உற்பத்தியுடன் தொடர்பற்றது, வெறும் சுற்றுக்கு விடுவதற்கும் நுகர்வதற்குமான அம்சங்கள்தான், அடித்தளத்தால் தீர்மானிக்கப்பட்டது, பொருள்தன்மையில்லாத புறக்கணிக்கத்தக்கது, வெறும் கருத்துக்கள், சார்புடையது, சுரண்டலின் ஆதரவு கட்டமைப்பு என்றெல்லாம் கருதப்பட்டது. இந்த தகவல் தொடர்பு ராச்சியம் பற்றிய இந்த புறக்கணிப்பும் அவமதிப்பும்தான் டல்லஸ் டபிள்யு ஸ்மித் என்ற கனடாவின் அரசியல் பொருளாதார விமர்சகரை 1977ல் செய்தித் தொடர்பு மேற்கத்திய மார்க்சியத்தின் கண்ணுக்கு புலப்படாத பகுதி என்று சொல்ல வைத்தது.
“செய்தி தொடர்புகளின் வெகுஜன ஊடகமும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களான விளம்பரம், சந்தை ஆய்வு, பொதுமக்கள் உறவு, உற்பத்தி அது சார்ந்த பொட்டலங்களின் (packages) வடிவமைப்பு ஆகியவை ஐரோப்பிய மற்றும் அட்லாண்டிக் பகுதி நாடுகளில் மார்க்சிஸ்ட் தத்துவத்துக்கு கண்ணுக்குப் புலப்படாத பகுதிகளாக விளங்குகின்றன.” (ஸ்மித் 1977). பிரிட்டிஷ் மார்க்சிஸ்ட் கலாச்சார தத்துவ நிபுணர் ரேமண்ட் வில்லியம்ஸ் அதே ஆண்டு “கலாச்சார பொருள்முதல்வாதம்” என்ற சொற்றொடரை உருவாக்கினார். மார்க்சியமும் இலக்கியமும் என்ற அவரது கட்டுரையில் கலாச்சார படைப்பும் நடவடிக்கையும் மேற்கட்டுமானம் அல்ல என்ற கருத்தையும் முன் வைத்தார். (வில்லியம்ஸ், 1977)கலாச்சாரத் தொழில் தகவல் தொடர்பு பொருளாதாரம், தகவல் ஆகியவை கலாச்சாரமும் செய்தித் தொடர்பும் கவனத்துக்குரியவை, பொருளார்ந்தவை, முதலாளித்துவத்தின் உற்பத்திப் பொருளாதாரத்தின் பகுதி என்பதை கண்கூடாக காட்டியுள்ளன. (ஃபக்ஸ்,2015)
எனது வாழ்வில் பல மார்க்சிஸ்ட் விமர்சன ஆய்வு கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன். அங்கெல்லாம் ஊடகமும் செய்தித் தொடர்பும் எந்த பங்கும் ஆற்றவில்லை அல்லது இரண்டாம்பட்ச பங்கே ஆற்றின. ஒரு உதாரணம் போதும். மே 31, 2013ல் டேவிட் ஹார்வி ஒரு சொற்பொழிவு ஆற்றினார். கலக நகரங்களிலிருந்து நகர்ப்புற புரட்சிக்கு என்ற தலைப்பில் அந்த உரை. நூற்றுக் கணக்கானவர் கலந்து கொண்டிருந்தனர். விவாத பிரிவில் நான் ஒரு கேள்வி எழுப்பினேன். ஏன் ஹார்வியின் இட வெளியின் மார்க்சிஸ்ட் தத்துவத்தில் செய்தித் தொடர்பு என்பது கண்ணுக்கு புலப்படாத பகுதியாக இருக்கிறது. மனித செய்தித் தொடர்பில்தான் அதன் மூலமாகத்தான் சமூக இடவெளி இருக்க முடியும். அது சமூக இடவெளியால் (Social Space) வரையறுக்கப்பட்டு சமூக இட வெளியை உற்பத்தியும் மறு உற்பத்தியும் செய்கிறது. ஹார்வி தனது பதிலில் இடவெளி மற்றும் செய்தித் தொடர்பின் உறவை கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால் ஊடகம், செய்தித் தொடர்பு முழுவதும் அதீக அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளன என்றார். அரேபிய வசந்தம் என்பது முக நூல் புரட்சி அல்ல; தெருக்களிலும் சதுக்கங்களிலும் நடைபெற்றது என்றார். ஹார்வி எப்போதும் திருப்பித் திருப்பி செய்யப்படும் மார்க்சிஸ்ட் தவறைத்தான் செய்கிறார். மார்க்சிஸ்ட் அல்லாதவர்கள் அதன் பங்கை அதீத மதிப்பீடு செய்கிறார்கள் என்பதால் முதலாளித்துவத்தில் செய்தித் தொடர்பு குறித்த பகுப்பாய்வை ஹார்வி ஒதுக்கித் தள்ளுகிறார்.
எனது வாழ்வில் பல மார்க்சிஸ்ட் புத்தகங்களையும் கட்டுரைகளையும் வாசித்தேன். அவற்றில் ஊடகமும் செய்தித் தொடர்பும் எந்த பங்கும் வகிப்பதில்லை அல்லது இரண்டாம் பட்ச பங்கே வகிக்கும். இதனால்தான் triple C இதழின் ஆசிரியர்களான நாங்கள் மார்க்சின் படைப்புகளால் உத்வேகமுற்ற அல்லது அந்த படைப்புகளை பயன்படுத்துகிறவர்களுக்கு முதலாளித்துவத்தில் செய்தித் தொடர்பு குறித்த படைப்புகள் விவாதங்களுக்கு இடவெளி வழங்குகிறோம்.
தகவல் தொடர்பு, ஊடகம், செய்தித் தொடர்பு என்பவை என்ன?
தகவல் தொடர்பு, ஊடகம், செய்தித் தொடர்பு என்ற கலைச் சொற்கள் சுயவிளக்கம் தருபவை அல்ல. அவை பிரிக்கப்படுவதற்கான போக்குகள் உள்ளன. இதனால் தகவல் தொடர்பு விஞ்ஞானம், ஊடக ஆய்வுகள், செய்தித் தொடர்பு ஆய்வுகள் என்ற சிறப்புக் களங்கள் உருவாகி உள்ளன. எனது பார்வையில் இந்த நிகழ்வுகளின் ஆய்வு பிரிக்கப்பட முடியாதது. பிரிக்கவும் கூடாது. பிரிப்பதற்கான எந்த முயற்சியும் செயற்கையானது. அப்படி பிரிப்பது, உள்ளார்ந்து ஒன்றாக தொடர்புற்று இருந்து தோன்றும் நிகழ்வுகளை கிழித்தெறிகிறது.
பொருள் என்பது செயல்முறை. உலகின் உள்ளடக்கம். அதுவே அதன் காரணம். பொருள் தானே உற்பத்தி செய்கிறது. ஒன்று திரள்கிறது. உலகில் இருத்தலின் புதிய மட்டங்களை உருவாக்க அதற்கு சக்தி உள்ளது. இக்கருத்தை சொன்னதால் பொருளுக்கு வெளியே உலகை உருவாக்கியவர் இருப்பதாக கூறும் மதத்திற்குரிய, ஆவிக்குரிய விளங்காத விளக்கங்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று அவசியமில்லை. தகவல் தொடர்பு பொருளற்றது என்றோ அல்லது பொருளுக்கு வெளியே இருப்பது என்றோ கருதுவது ஒவ்வொரு நிகழ்வும் போதுமான காரணமும் அடித்தளமும் கொண்டிருக்க வேண்டும் என்ற பூமியின் தத்துவார்த்த விதியை மீறுகிறது. உலகில் இரு பொருள்கள் இருக்கின்றன என்போம். பொருளும் தகவலும் (உணர்வும்) அப்படி என்றால் இங்கே பூமியின் விதியை மீறுகிற, பூமியிலிருந்து விலக்கப்பட்ட இரு நிகழ்வுகள் இருக்க வேண்டும்.
ஒரு ஆன்ம சக்தி – கடவுள் – பொருளை உருவாக்கியது என்று கருதினால் அப்போது ஒரு வெளியிலுள்ள சக்தி உலகின் பூமியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அது ஏதுமில்லாததிலிருந்து ஒன்றை உருவாக்கியது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இருந்தாலும் கடவுளை படைத்தது யார் என்ற கேள்விக்கு பகுத்தறிவு பூர்வமான பதிலை கொடுக்க முடியாது. ஆகையினால் கூட கருத்து முதல்வாதமும் ஆன்மிக வாதமும் பூமியிலிருந்து விலக்கப்படுகின்றன. பூமியின் விதியை மீறுகிறது. தகவல் தொடர்பு என்பது ஸ்தூல உலகின் அங்கமாகும். அது இயக்கத்தில் உள்ள பொருளாகும். செயல்முறையாகும். குறைந்த பட்சம் இரு பொருள் சார் அமைப்புகளின் உறவும் ஒன்றுடன் ஒன்று இடைச் செயல்பாடும் ஆகும். அத்தகைய இடைச் செயல்பாடுகள் உற்பத்தி செய்பவையாகும். அதாவது பொருள்சார் அமைப்புகளின் மறு உருவாக்கத்துக்கு அவை உதவுகின்றன. இவ்வமைப்புகளின் புதிய அக குணங்களை உருவாக்குகின்றன. உலகில் புதிய பொருள் சார் அமைப்புகள் உற்பத்திக்கு தேவையான சக்தியை முன் நிறுத்துகின்றன. அது இருக்கும் பொருள் அமைப்புகளின் இடைச் செயல்பாடுகளிலிருந்து எழுகிறது.
மனிதர்கள் சமூகத்தில் இருக்கிறார்கள். சமூகம் மனிதர்களால் மறு உருவாக்கம் செய்யப்பட்டு தாங்கிப் பிடிக்கப்படுகிறது. சமூகம் பொருள் அமைவின் ஒரு மட்டம் ஆகும். சமூகத்தில் தகவல் தொடர்பு என்பது மனிதர்களின் சமூக இடைச் செயல்முறையாகும். மனிதர்கள் வேலை செய்கிற, சிந்திக்கிற பிராணி. அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். பண்பாட்டியல் முடிவுகளை எடுக்கிறார்கள். சமூகத்தை உருவாக்கவும் மறு உருவாக்கமும் செய்கிறார்கள். மனித மூளை அறியக்கூடிய தகவலை சேர்த்து பத்திரப்படுத்தி வைக்கும் அமைப்பாகும். அது சிக்கலான வகையில் உலக நிலைமையையும் மனித வியாக்கியானத்தையும் உலகின் அரசியல் மற்றும் தார்மீக மதிப்பீடுகளையும் பிரதிபலிக்கிறது. செய்தித் தொடர்பு செயல் முறையில் மனிதனின் அறிதலுக்குரிய தகவலின் பாகங்கள் இன்னொரு மனிதனுக்கு கிடைக்கச் செய்கிற அடையாள வடிவத்தில் உள்ளன. இந்த இன்னொரு மனிதர் உலகின் வியாக்கியானத்தின் தங்கள் பாகங்களை முதலில் தகவல் அளித்தவருக்கு கிடைக்கச் செய்கிறார்.
செய்தித் தொடர்பு மற்றவர்களின் அறியக்கூடிய தகவல்களில் அவை அங்கீகரிக்கப்பட்டவுடன் மாற்றங்களை உருவாக்குகிறது. அதாவது செய்தித் தொடர்பின் மூலம் புதிய அர்த்தங்களும், வியாக்கியானங்களும் முடிவுகளும் எழுகின்றன. அறிதலுக்குரிய தகவலும் செய்தித் தொடர்பும் பொருள் சார்ந்தவை ஆகும். அவை மூளையின் நரம்பு மண்டலத்தின் நிலைமையையும் செயல்பாட்டு முறைமைகளையும் மாற்றுகின்றன. நம்மால் தகவலை தொடவோ உணரவோ முடியாது. ஏனெனில் அது தொட்டுணர முடியாதது. பருண்மை அல்லாதது. இதனால் அதனை பொருளல்லாததாக ஆக்கிடவில்லை. தகவல் செயல் முறையின் விளைவுகளை நம்மால் கவனிக்க முடியும். எப்படி அர்த்தங்களின் மாற்றங்களையும் உலக வியாக்கியானங்களையும் கொண்டுவருகிறது என்பதை கவனிக்க முடியும். செய்தித் தொடர்பு காற்று என்ற ஊடகத்தின் உதவியுடன் ஒலியை கடத்தும். இணையம், தொலைக் காட்சி, வானொலி, புத்தகங்களும் இதர அச்சேறியவையும் மின்னணு புத்தகங்கள், சுவரொட்டிகள், ஸ்டிக்கர், ஓவியங்கள், கலை வேலைப்பாடுகள் ஆகியவை ஊடகங்களின் உதவியை எடுத்துக் கொள்கிறது. எங்கெல்லாம் செய்தித் தொடர்பு இருக்கிறதோ அங்கெல்லாம் ஒரு ஊடகம் இருக்கிறது.
செய்தித் தொடர்பை உருவாக்கி சாத்தியப்படுத்தும் கட்டமைப்புதான் ஊடகம். அவை மனிதர்களிடையே ஊடாடி செய்தியை பகிர வைக்கின்றன. மனித செய்தி தொடர்பு இடைவிட்டோ, அல்லது அதிக தொடர்ச்சியாகவோ நடக்கலாம். அனைத்து செய்தி தொடர்பும் சிந்தனை முறையில் மாற்றங்களை உருவாக்குகின்றன. தொடர்ச்சியான செய்தி தொடர்பு புதிய சமூக அமைப்பை உருவாக்குவதற்கான சக்தியைக் கூடுதலாக கொண்டிருக்கிறது. இருக்கிற சமூக அமைப்பிலும் கூட புதிதாக எழும் குணாம்சங்களை உருவாக்குவதற்கான சக்தியை கொண்டிருக்கிறது. அத்தகைய சமயங்களில் மனிதர்கள் புரிந்து கொண்டு, செய்தித் தொடர்பு கொள்வது மட்டுமின்றி, தங்களுக்குள் ஒத்துழைக்கவும் செய்கிறார்கள். ஒன்றிணைந்து புதிய சமூக அமைப்பையோ அல்லது சமூக அமைப்பின் புதிய கட்டமைவு குணாம்சங்களையோ உருவாக்குகிறார்கள். எனவே தகவல் தொடர்பு என்பது அறிதல், செய்தித் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகிய மூன்றடுக்கு கூட்டிசை செயல்முறையாகும்.
முதலாளித்துவம் உயிருடன் இருக்கும் வரை மார்க்ஸ் உயிருடன் இருக்கிறார்
நெருக்கடி, சுரண்டல், அசமத்துவம் ஆகியவை தற்கால சமூகத்தின் தொடர்ச்சியான அம்சங்களாக நீடிக்கின்றன. அவை தொடரும் வரை முதலாளித்துவத்தின் மீதான மார்க்சின் பகுப்பாய்வில் நமது அக்கறை நீடிக்கும். ஏனெனில் மக்கள் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு விளக்கமும் பிரச்னையிலிருந்து மீள வழி முறைகளையும் தேடுகிறார்கள். ஊடகம், தகவல் தொடர்பு, செய்தித் தொடர்பு, இந்த சூழ்நிலையில் முக்கியமானது. ஏனெனில் அவை முதலாளித்துவத்தின் குறிப்பிட்ட ஒரு தொழிலாக உள்ளன. கலாச்சாரம் என்பது சுரண்டலையும் ஆதிக்கத்தையும் நியாயப்படுத்தும் தத்துவங்களை பொதுமக்களிடையே பரப்பவும் அதே நேரத்தில் முதலாளித்துவத்தை விமர்சிக்ககூடிய கருவியாகவும் உள்ளது.
மார்க்சின் மூலதனத்தை ஊடக செய்தித் தொடர்பு ஆய்வு கண்ணோட்டத்தில் படிப்பது முதலாளித்துவ ஊடகத்தை புரிந்து கொள்ளவும் அதை விமர்சிக்கவும் நமக்கு உதவும். முதலாளித்துவ வணிக நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படாத ஆனால் மக்கள் தமக்கான மாற்று ஜனநாயக செய்தித் தொடர்பு அமைப்புக்கான போராட்டங்களுக்கான ஞானத்தை மூலதனம் வாசிப்பு நமக்கு கொடுக்கும்.
‘மூலதனம்’, ‘ஏகாதிபத்தியம்’ : சிதைபடும் கோட்பாடுகள்!
[பீப்பிள்ஸ் டெமாக்ரசி (04.09.2016) இதழில் பேராசிரியர் பிரபாத் பட்னாயக் Subversion of Concept என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை இங்கே தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. – தொகுப்பு : இ.எம். ஜோசப் ]
பொருளாதாரம் குறித்த விவாதங்களில் பொதுவாக இன்று இரண்டு விஷயங்கள் பேசப்படுகின்றன. ஒன்று, ‘மூலதனத்தின் ஆக்கிரமிப்பு, சிறு உற்பத்தியினை நசுக்கி விடுகிறது. இரண்டு, “ பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆக்கிரமிப்பு, சிறு உற்பத்தியினை நசுக்கி விடுகிறது.“.
மேற்கண்ட இரண்டு வாதங்களுமே ஏறக்குறைய ஒன்று தான் என்று சிலர் கருதக் கூடும். முதல் வாதத்தினை சற்று மேலும் கூர்படுத்திக் குறிப்பாகக் கூறுவதே, இரண்டாவது வாதம் எனவும் சிலர் கருதக் கூடும். ஆனால், அந்தக் கருத்து தவறானது. இரண்டிற்குமிடையில் பெருத்த வேறுபாடுகள் உண்டு.
அதே போன்று, “அமெரிக்க சாம்ராஜ்யம்” (American empire), “தீய சாம்ராஜ்யம்” (Evil Empire), “அமெரிக்க மேலாதிக்கம்” (US hegemony) போன்ற சொல்லாடல்களும், “ஏகாதிபத்தியம்” என்ற சொல்லாடலும், உள்ளடக்கத்தில் ஒரே பொருள் கொண்டவை அல்ல. இவை அனைத்தையும் குறித்தும் இங்கு சற்று விரிவாக விவாதிக்கலாம்.
மூலதனமும், முதலாளிகளும்!
சமூக உறவு எனும் வகையில், மூலதனம் சில உள்ளார்ந்த குணப் போக்குகளைக் கொண்டது. இது பல பொருளாதார முகமைகளின் (Economic Agents) செயலாக்கத்தின் அடிப்படையில் இயங்குகிறது. ஒவ்வொரு முகமையும், முதலாளித்துவ அமைப்பின் தர்க்க நியதிகளின் அடிப்படையிலேயே இயங்குகிறது.
எடுத்துகாட்டாக, முதலாளிகள் செல்வத்தைக் குவித்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்படித்தான் குவிக்க வேண்டும் என்று விரும்பி அவர்கள் செயல்படுகிறார்கள் எனக் கூற முடியாது. முதலாளித்துவ அமைப்பின் தர்க்க நியதி அவர்களை அப்படிச் செய்ய நிர்ப்பந்திக்கிறது. தாங்கள் நினைத்தவாறெல்லாம் செயல்படும் சுதந்திரம் முதலாளிகளுக்குக் கிடையாது. அவர்கள், முதலாளித்துவ அமைப்பு எழுதி இயக்கும் நாடகத்தின் கதாபாத்திரங்கள் மட்டுமே. அவர்களும் கூட, முதலாளித்துவ அமைப்பிற்குள் அந்நியப்பட்டு நிற்பவர்களேயாவர். எனவே தான், காரல் மார்க்ஸ் முதலாளிகளை “மூலதனத்தின் மனித வடிவம்” (Capital Personified) என்று அழைக்கும் நிலைக்குச் சென்றார்.
பன்னாட்டு நிறுவனங்கள்!
பன்னாட்டு கார்ப்பரேஷன்களையும், தனிப்பட்ட முதலாளிகளிடமிருந்து இந்த விஷயத்தில் வேறுபடுத்திப் பார்ப்பதற்கில்லை. அவர்களை முலதனத்துடன் சமப்படுத்தி அழைக்க முடியாவிட்டாலும், முதலாளித்துவ அமைப்பின் தர்க்க நியதிகளுக்கு உட்பட்ட இவர்களது செயல்பாடுகள், மூலதனத்தின் உள்ளார்ந்த போக்குகளைத் தீர்மானிக்கும் முகவர்களாக இவர்களை நிலை நிறுத்துகின்றன. இவர்களை “முலதன”த்துடன் சமப்படுத்திப் பார்ப்பது, மூலதனத்தின் உள்ளார்ந்த போக்குகள், முதலாளித்துவ அமைப்பின் தர்க்க நியதிகள், அந்த அமைப்பின் “தன்னெழுச்சித் தன்மை” (Spontaneity) குறித்த மூலதனத்தின் ஒட்டு மொத்த கோட்பாடுகள் என அனைத்தையும் புறந்தள்ளி விட்டு, வேறு ஒரு மாறுபட்ட கருத்தியல் தளத்திற்கு இட்டுச் சென்று விடும்.
ஆழமான அரசியல் விளைவுகள்!
இங்கு, கோட்பாட்டுப் பிரச்சினை (Conceptual subject), ஸ்தூலமான பிரச்சினை (Tangible Subject) என்ற இரண்டு அம்சங்கள் விளக்கப்பட வேண்டும். மூலதனம் என்பது கண்ணுக்குப் புலப்படாத பிரச்சினை. இது கோட்பாட்டுப் பிரச்சினை. ஆனால் அந்த மூலதனத்தின் பிரதிநிதிகளாக கண்ணுக்கு புலப்படுபவர்கள் முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள் போன்றவை. எனவே அவை எல்லாம் ஸ்தூலமான பிரச்சினைகள்.
கருத்தியல் தளத்தில், உருவமற்ற “கோட்பாட்டு பிரச்சினையை” உருவம் கொண்டதொரு “ஸ்தூலமான பிரச்சினையாக” அதாவது, பன்னாட்டுக் கார்ப்பரேஷன் என்ற தளத்திற்கு மாற்றுவது என்பது, வெறும் தளமாற்றமாக இராது. மாறாக, அது ஆழமான அரசியல் விளைவுகளை உள்ளடக்கியதாகும். மூலதனத்தை குவிமையப்படுத்தல், சமூக வாழ்க்கையின் அனைத்து துறைகளையும் தொடர்ந்து சரக்குமயமாக்கல், சிறு உற்பத்தியினை அழித்தொழித்தல், ஒரு முனையில் செல்வத்தையும், மறு முனையில் வறுமையினையும் உருவாக்குதல் என முதலாளித்துவத்திற்கு என்று சில உள்ளார்ந்த குணப்போக்குகள் உள்ளன. இந்தப் போக்குகளை எல்லாம், ஒரு சமூக அம்சம் என்ற வகையில் கடந்து போக வேண்டும் எனில், முதலாளித்துவத்தை முதலில் தூக்கி எறிந்தாக வேண்டும். மூலதனத்தை சமூக இயக்கவியலின் கோட்பாட்டு அடிப்படையிலான அம்சமாக அங்கீகரிக்கும் பட்சத்தில், மனிதகுல விடுதலைக்கு வழி வகுக்கும் சமூகப் புரட்சி தேவைப்படுகிறது. அத்தகைய புரட்சிக்கான ஒரு செயல் திட்டமும் தேவைப்படுகிறது. பன்னாட்டுக் கார்ப்பரேஷன்கள் தான் முதலாளித்துவத்தின் ‘இயக்கிகள்” (Drivers) அல்லது சமூக இயக்கவியலின் “மையப் பிரச்சினை” எனக் குறுக்கிப் புரிந்து கொண்டோம் என்றால், பன்னாட்டு நிறுவனங்களை கட்டுப்படுத்துவது, வசப்படுத்துவது, தாஜா செய்வது, சில நற்காரியங்களை செய்ய வைப்பது (“கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு”) போன்றவற்றின் மூலம் இந்த இயக்கவியலின் விளைவுகள் மற்றும் இயங்கு திசைகளை மேம்படுத்தி விட முடியும் என்ற தவறான உணர்வு ஏற்பட்டு விடும். அத்தகைய புரிந்துணர்வு சமூகப் புரட்சிக்கான செயல் திட்டத்தினைப் பின்னுக்குத் தள்ளி, சீர்திருத்தத்திற்கான செயல் திட்டத்தினை முன்னுக்குக் கொண்டு வந்து விடும். அத்தகைய திட்டம் ஒரு முற்போக்குப் பெருந்தன்மைத் திட்டமாக (Progressive liberal agenda) மாறி விடும். எனவே, ‘கோட்பாட்டு அம்சம்”, “உருவம் கொண்டதொரு அம்சமாக” மாறுவது என்பது வெறும் கருத்தியல் தளமாற்றம் அல்ல. அது செயல் திட்டத்தின் மாற்றம். சோஷலிச செயல் திட்டத்திலிருந்து, முற்போக்குப் பெருந்தன்மைத் திட்டத்திற்கு மாறிச் செல்லும் நடவடிக்கை அது என்பதை இங்கு மறந்து விடக் கூடாது.
அன்றாடப் பேச்சு வழக்கில்…
நாம் அன்றாடப் பேச்சு வழக்கில், ‘மூலதனம்’ என்ற பதத்தினை பயன்படுத்துவதில்லை. மாறாக, பன்னாட்டுக் கம்பெனிகள், பன்னாட்டு வங்கிகள் என்றும், தனியார் நிறுவனங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது டாட்டாக்கள், பிர்லாக்கள், அம்பானிகள் என்றும் தான் பேசி வருகிறோம். ஏனெனில், இவர்களுக்கு எதிராகத் தான் தொழிலாளர்கள் போராடுகிறார்கள். கண்ணுக்குப் புலப்படும் கம்பெனிகள் போன்ற ஸ்தூலமான பிரச்சினைகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும். ஆனால், கோட்பாட்டுப் பிரச்சினைகளை புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல.
நடைமுறையிலும் கூட, தொழிற்சங்க நடவடிக்கை உள்ளிட்ட அன்றாடப் போராட்டங்களில் கண்ணுக்குப் புலப்படும் நிறுவனங்களுக்கு எதிராகத் தான் பேசுகிறோமே தவிர, கோட்பாட்டு அடிப்படையில், அதாவது, முதலாளிகளை “மூலதனத்தின் மனித வடிவம்” என்று மார்க்ஸ் வர்ணித்ததன் அடிப்படையில், மூலதனத்திற்கு எதிராகப் பேசுவதில்லை. (வர்க்கப் போராட்டம் ஒரு புரட்சிகர நிலையினைத் தொடும் பொழுது தான், அந்த தெளிவான புரிதல் கிட்டும்.) நாம் இங்கு குறிப்பிட விரும்புவது என்னவெனில், கோட்பாடு அடிப்படையிலும், (அம்பானிக்கெதிரான போராட்டங்கள் போன்ற) நடைமுறை வழக்கிலும், நாம் பேசுவதில் சில மாறுபாடுகள் இருக்கலாம். எனினும், சித்தாந்த தளத்தில் கண்ணுக்குப் புலப்படும் ஸ்தூலமான அடிப்படையினை, கோட்பாட்டு அடிப்படைக்கு மாற்றாக அமைய அனுமதித்து விடக் கூடாது.
சித்தாந்த தளத்தில் …
சில வேளைகளில் சித்தாந்த தளத்தில் அத்தகைய மாற்று என்ற தவறு நிகழ்ந்து விடக் கூடும். அல்லது “கோட்பாட்டு அடிப்படையினை” முறையாக அங்கீகரித்துக் கொண்டே, ஏறக்குறைய ஸ்தூலமான பிரச்சினைகளிலேயே கால் பதித்து நிற்பதும் (ஊள்ளடக்கத்தில், இதுவும் சித்தாந்த தளத்தில் உருவாக்கப்படும் மாற்று தான்), அத்தகைய தவறேயாகும். இது இயல்பாகவே, சோஷலிசச் செயல் திட்டத்தை, முற்போக்கு பெருந்தன்மைத் திட்டமாக உருமாற்றி விடும். சோஷலிஸ்ட் அல்லாத முற்போக்குப் பெருந்தன்மையாளர்கள் (Progressive liberals) உள்ளனர். தங்களது அரசியல் சிந்தனைகளின் படி, அவர்கள் கோட்பாடு ரீதியான பிரச்சினைகளை அங்கீகரிப்பதில்லை. நாம் ஏற்கனவே குறிப்பிட்ட படி, “மூலதனத்தின் ஆக்கிரமிப்பு சிறு உற்பத்தியினை நசுக்கி விடுகிறது.” என்று சொன்னால் அவர்கள் அதை புறந்தள்ளி விடுவார்கள். ‘மூலதனம்’ என்ற புதிருக்கு, ‘பிரச்சினை’ (Subject) என்று உருவமும் அந்தஸ்தும் கொடுக்கும் வேலை அது என்று கூறிவிடுவார்கள். ஆனால், ஒரு சோஷலிஸ்டைப் பொறுத்த அளவில், சித்தாந்த தளத்தில், ‘கோட்பாட்டுப் பிரச்சினைக்கு’ மாற்றாக ‘ஸ்தூலமான பிரச்சினை’யினை முன்வைப்பது என்பது, அவரது சோஷலிச நம்பிக்கையின் ஆணி வேரையே அசைப்பதாகும்.
கூட்டுப் போராட்டங்களில்…
இன்றைய சூழலில், அத்தகைய தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நல்லெண்ணம் கொண்ட, போர்க்குணம் மிக்க பல சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பலவும் களத்தில் நிற்கும் காலம் இது. ஆனால், அவர்கள் சோஷலிஸ்டுகள் அல்லர். அவர்களுடைய எதிர் இலக்கெல்லாம் ‘ஸ்தூலமான பிரச்சினைகளே’. மக்களைப் பாதிக்கும் சில பிரச்சினைகளில் தீவிரமான போராட்டங்களில் ஈடுபடும் இவர்களோடு ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவை இடதுசாரிகளுக்கு இன்று உண்டு. அவர்களோடு அத்தகைய போராட்டங்களில் இணைந்து போராடும் போது, சித்தாந்தமும், அத்துடன் அனைத்து ‘கோட்பாட்டுப் பிரச்சினைகளும்’ பின்னுக்குத் தள்ளப்படும் அபாயம் உண்டு. சோசலிச லட்சியங்களில் உறுதியாக இருக்க வேண்டும் எனில், இடதுசாரிகள் இதில் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.
ஏகாதிபத்தியம் என்ற கோட்பாடு!
கோட்பாடு அடிப்படையில் சீர்குலைவு அச்சத்தில் ஆட்படும் மற்றொரு சொல்லாடல் ‘ஏகாதிபத்தியம்’. வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சி அடையாத நாடுகளுக்கு இடையிலான பல்வேறு பட்ட உறவுகளின் வலைப்பின்னல் குறித்ததெ ஏகாதிபத்தியம் என்ற சொல்லாடல். இந்த உறவுகள் காலப் போக்கில் பல மாற்றங்களைச் சந்திக்கின்றன. மூலதனத்தின் உள்ளார்ந்த குணப்போக்குகளால் மட்டுமல்லாது, மக்களுடைய போராட்டங்கள் காரணமாகவும் அத்தகைய மாற்றங்கள் நிகழ்கின்றன. ரீகன் நிர்வாகம், புஷ் நிர்வாகம், அல்லது ஒபாமா நிர்வாகம் என்பவை எல்லாம் நாம் ஏகாதிபத்தியம் என்று அழைக்கும் ‘கோட்பாட்டுப் பிரச்சினையின்’ ‘ஸ்தூலமான’ செயல் வடிவங்களே ஆகும்.
ஏகாதிபத்தியம் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் நடைமுறையில் செயல்படும் இந்த ஸ்தூலமான வடிவங்கள் தாம் கண்ணுக்குத் தெரிகின்றன. ‘மூலதனம்’ என்பதற்கு மாற்றாக எப்படி ‘பன்னாட்டு நிறுவனங்கள்’, ‘பன்னாட்டு வங்கிகள்’ போன்ற சொல்லாடல்கள் பயன்படுகின்றனவோ, அதே போன்று, ‘ஏகாதிபத்தியம்’ என்பதற்கு மாற்றாக இது போன்ற அரசு நிர்வாகங்களை பார்க்கும் போக்கும் நிலவுகிறது.
“அமெரிக்க சாம்ராஜ்யம்” (American empire), அல்லது “தீய சாம்ராஜ்யம்” (Evil empire), அல்லது “அமெரிக்க மேலாதிக்கம்” (US hegemony) அல்லது ஹார்ட் மற்றும் நெக்ரி (Hardt and Negri) தாங்கள் எழுதிய புகழ் பெற்ற நூலுக்கு தலைப்பிட்டதைப் போன்று, “சாம்ராஜ்யம்” (Empire). இவை எல்லாம் சில சமயங்களில், “ஏகாதிபத்தியம்” என்பதற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் சொல்லாடல்கள். அரசாட்சி ஏற்பாடுகளைக் குறிப்பிடும் “ஒபாமா நிர்வாகம்” போன்ற பொதுவான சொல்லாடல்கள் போலன்றி, இந்தச் சொல்லாடல்கள் சில குறிப்பிட்ட உறவுநிலைகளைக் குறிப்பவை எனபது சரியே. எனினும், மூலதனத்தின் உள்ளார்ந்த குணப் போக்குகளுடனான இணைப்பினை இத்தகைய சொல்லாடல்கள் உணர்த்துவதில்லை. இந்தச் சொல்லாடல்களைப் பயன்படுத்துவதில் நமக்கொன்றும் பிரச்சினை இல்லை. ஆனால், ஏகாதிபத்தியம் என்ற சொல்லுக்கு மாற்றாக இவற்றைப் பயன்படுத்தக் கூடாது. மூலதனத்தின் உள்ளார்ந்த குணப்போக்குகள் குறித்த புரிதலையும், அந்தப் புரிதலின் பின்னணியில், மனிதகுல விடுதலைக்கு, முதலாளித்துவத்தைக் கடந்து செல்வது ஒரு முன் நிபந்தனை என்ற சித்தாந்தப் புரிதலையும் இவ்வகையிலான சொல்லாடல்கள் பாழ்படுத்தி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, குறிப்பாக உலகின் பல பாகங்களில் அமெரிக்க ஆக்கிரமிப்பினை எதிர்க்கும் போராட்டங்களில், நாம் பல ஆர்வமிக்க போராட்டக் குழுக்களுடன் இணைந்து வினையாற்ற வேண்டியுள்ளது. ஆனால், அக்குழுவினர் அனைவரும் சோஷலிஸ்டுகள் அல்லர். மூலதனத்தின் உள்ளார்ந்த குணப்போக்குகள் என்ற இடத்தில் தொடங்கி நாம் சித்தாந்த ரீதியாகப் புரிந்து கொண்டிருக்கும் “ஏகாதிபத்தியம்” என்ற சொல்லுக்கு அவர்களைப் பொறுத்த மட்டில், பொருள் எதுவுமில்லை. இந்தக் கூட்டுப் போராட்ட அனுபவங்களின் பின்னணியில், சோஷலிசம் குறித்த நமது சித்தாந்த நிலையிலிருந்து வழுவி, முற்போக்குப் பெருந்தன்மையாளர்களின் அறிவுத்தளத்திற்குள் சென்று விழுந்து விடும் அபாயம் உண்டு.
அத்தகைய போராட்டங்கள் தேவைப்படுகின்றன. இடதுசாரிகள் மட்டும் அல்லாது, முதலாளித்துவத்தைக் கடந்து செல்ல வேண்டும் என விரும்பும் அனைவரும் அந்தப் போராட்டங்களில் இணைய வேண்டும் என்பதும் தேவையாகிறது. அத்தகைய தேவைகளை ஒன்றுமில்லை என ஒதுக்கித் தள்ளி விட முடியாது. சில போராட்டங்களில் முற்போக்குப் பெருந்தன்மையாளர்கள் இடதுசாரிகளை விட கூடுதல் தீவிரம் காட்டுவதுமுண்டு. இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், அத்தகைய நேரங்களில், இடதுசாரிகள் “கோட்பாட்டுப் பிரச்சினைகள்” அடிப்படையிலான தங்களது சித்தாந்தப் புரிதலை கைவிட்டு விடக் கூடாது என்பதே. .
சரியான புரிதல்!
இந்தப் புரிதலிலிருந்து வழுவுதல் கூடாது என்று சொல்வது, நாம் மார்க்ஸ் மற்றும் லெனின் சிந்தனைகள் குறித்த நமது விசுவாசத்தின் அடிப்படையில் அல்ல. மாறாக, அது தான் சரியான புரிதல் என்பதால் தான். “ஸ்தூலமான பிரச்சினைகள்” மீதான போராட்டங்கள் வெற்றி பெற்றாலும் கூட, அவை தற்காலிக வெற்றிகளே என்பதையும், அடுத்த கட்டத்தில் மூலதனத்தின் குணப்போக்குகள் மீண்டும் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதையும் பார்க்க முடிவதிலிருந்தே இந்த உண்மையினைப் பரிசோதித்து உணர்ந்து கொள்ள முடியும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், தொழிலாளி வர்க்கப் போராட்டங்களின் பின்னணியில், வேலைவாய்ப்புக்களையும், மக்கள் கைகளில் வாங்கும் சக்தியினையும் அதிகரிக்கும் தேவையும் நிர்ப்பந்தமும், முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டது. அவ்வகையில், “கிராக்கி நிர்வாகம்’ (Demand management) என்ற சமூகப் பொறியமைவு ( Social engineering) உத்திகளைக் கையாளுவதற்கு முதலாளித்துவம் நிர்ப்பந்திக்கப் பட்டது. ஜான் மேனார்ட் கீன்ஸ் என்ற பொருளியல் அறிஞர் முன்வைத்த இந்தக் கொள்கை உத்திகள் “முதலாளித்துவத்தின் பொற்கால’த்திற்கு இட்டுச் சென்றன. ஆனால் அதைத் தொடர்ந்து, மூலதனத்தின் உள்ளார்ந்த குணப்போக்குகளால் எழுந்து வந்த நிதி மூலதனம் ( அது மற்றொரு “கோட்பாட்டுப் பிரச்சினை’) கீன்ஸ் பொருளாதாரத் திட்டங்களை சுருட்டிப் பின்னுக்குத் தள்ளி விட்டது. அனுபவங்களின் தொடர் பின்னணியில் எழும் அடுத்தடுத்த புரட்சிகரமான போராட்டங்களின் மூலமே, ‘கோட்பாட்டுப் பிரச்சினைகளுக்கு’ எதிரான சவால்களை வெற்றி கொள்ள முடியும். குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கடந்து முன்னேற முடியும். அது வரை, “கோட்பாட்டுப் பிரச்சினை”களின் அடிப்படையிலான சித்தாந்தப் புரிதலில் உறுதியாக நிற்க வேண்டும். எனவே, சோஷலிஸ்டுகள், கோட்பாடுகளின் சிதைவிற்கு எதிராக எச்சரிக்கையுடன் இருத்தல் மிகவும் அவசியம்.

வெல்வதற்கோர் பொன்னுலகம்
‘கம்யூனிஸ்ட் பிரகடனம்’ பற்றிய இந்த நூல், அதன் நூற்றைம்பதாம் ஆண்டு நிறைவு விழாவினை ஒட்டி வெளியிடப்படுகிறது. 1998ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து பிரகடனத்தின் நூற்றைம்பது ஆண்டு நிறைவு விழா உலகளாவிய அளவில் கொண்டாடப்பட்டது.
- மகத்தானதொரு ஆவணமாகிய கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை மறுமதிப்பீடு செய்வதற்கு,
- மார்க்சியத் தத்துவத்தின் சமகால நிலைமை பற்றி விமர்சனப் பூர்வமான முறையில் கூர்மையாகப் பரிசீலிப்பதற்கு,
- 21 ஆம் நூற்றாண்டுக்குள் நுழையும் வேளை யில் உழைப்பாளி வர்க்க இயக்கம் பயணிக்க வேண்டிய புதிய திசைவழிகளை ஆராய்வதற்கு
இதுவே தக்க தருணம் என்று கருதப்பட்டது.
கம்யூனிச இயக்கத்தின் முதல் திட்ட அறிக்கை என்று இப்பிரகடனத்தைக் குறிப்பிடலாம். (மார்க்ஸ்- ஏங்கல்ஸ்) சிந்தனைகளின் பரிணாம வளர்ச்சியின் உரையான வரலாற்றுப் பொருள் முதல்வாதம் என்ற கோட்பாட்டின் வளர்ச்சி பெற்ற வடிவத்தின் வெளிப்பாடாக – ஒரு விளக்க உரையாக இப்பிரகடனம் அமைந்தது. கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் முக்கியத்துவத்தை லெனின் பின்வருமாறு தொகுத்துக் கூறுகிறார்:
“ஒரு மேதைக்கு உரிய தெளிவுடனும் மதிநுட்பத்துடனும் உலகத்தைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தைப் பிரகடனம் வழங்குகிறது.
சமூக வாழ்க்கைக் களத்தை உள்ளடக்கிய ஒரு முரண்பாடற்ற பொருள் முதல்வாதத் தத்துவ மாகவும்,
வளர்ச்சி பற்றிய விரிவான, மிகச் சிறந்த கோட்பாடாகிய இயக்கவியல் தத்துவமாகவும்,
வர்க்கப் போராட்டத் தத்துவமாகவும்,
ஒரு புதிய பொதுவுடைமைச் சமூகத்தின் படைப்பாளியாகிய உழைப்பாளி வர்க்கத்தின் (உலக) வரலாற்றுச் சிறப்புமிக்க புரட்சிகரப் பங்களிப்பை விளக்கும் தத்துவமாகவும் கம்யூனிஸ்ட் பிரகடனம் அமைந்துள்ளது”.
முதலாளித்துவ எதிர்ப்புப் புரட்சியின் புரட்சிகர சாசனமாக கம்யூனிஸ்ட் பிரகடனம் அமைந்துள்ளது. சோஷலிச சமுதாய அமைப்பு, கம்யூனிச சமுதாய அமைப்பு ஆகிய புதிய தரிசனங்களை – மாற்றுப் பார்வைகளை – உழைப்பாளி வர்க்கத்துக்கும், சமூகத்தின் பிற ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கும் வழங்கக்கூடிய செயல்திட்டமாக கம்யூனிஸ்ட் பிரகடனம் அமைந்துள்ளது. முந்தைய சோஷலிச கற்பனாவாத குட்டி முதலாளித்துவவாதிகளின் சோஷலிசம் போன்றதொரு திட்டம் அல்ல கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகடனம். சமுதாய அமைப்பின் யதார்த்த நிலைகளையும் வரலாற்று வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு முதலாளித்துவ அமைப்பைத் தூக்கி ஏறிந்துவிட்டு சோஷலிச சமூக அமைப்பை உருவாக்குவதற்கான பாதையை அது விளக்குகிறது. முதலாளித்துவத்திற்குக் கல்லறை கட்டக்கூடிய ஒரே புரட்சிகர வர்க்கம் என்ற வகையில் உழைப்பாளி வர்க்கத்துக்கு மையமான பாத்திரத்தை பிரகடனம் வழங்குகிறது. சுரண்டலிலிருந்து சமுதாயம் முழுமையையும் விடுவிக்காமல் உழைப்பாளி வர்க்கம் தன்னை மட்டும் விடுவித்துக் கொள்ள முடியாது என்பதைப் பிரகடனம் தெளிவுபடுத்துகிறது.
புரட்சிகர இயக்கத்தின் அடிப்படையான இலக்குத் திட்டமும், அறிவியல் ரீதியான தத்துவத்தின் வலிமையும் இணைந்து உருவாக்கப்பட்ட ஆவணமாக கம்யூனிஸ்ட் பிரகடனம் அமைந்துள்ளதால்தான் ஒரு உயிரோட்டமுள்ள ஆவணமாக அது தொடர்ந்து நீடிக்கிறது. எளிய நடையில், ஆனால் ஆழமாக பொருளுடன் எழுதப்பட்டிருப்பதால், புரிவதற்குக் கடினமான தத்துவம் கூட சாதாரணத் தொழிலாளியும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக, கச்சிதமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கம்யூனிச இயக்கம் உருவாக்கியுள்ள நூல்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்த நுலாக கம்யூனிஸ்ட் பிரகடனம் இன்றளவும் நீடிக்கிறது.
பிரான்ஸ் நாட்டுத் தொழிலாளர்கள் தங்கள் புரட்சியை ஒரு பிப்ரவரி மாதத்தில் துவக்கி னார்கள் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க காலத் தில் உருவானதான் கம்யூனிஸ்ட் பிரகடனம். ஆனால் இப்புரட்சி கருவிலேயே சிதைந்து போனது. இருபது ஆண்டுகள் கழித்து- 1871ஆம் ஆண்டில் ‘பாரிஸ் கம்யூன்’ (பாரிஸ் சமூக ஆட்சி மன்ற) புரட்சி அரங்கேற்றப்பட்டது. பாரிஸ் நகரின் உழைப்பாளி மக்கள் அமைத்த பாரிஸ் கம்யூன் சிறிது காலம் மட்டும் நீடித்தது. உழைப்பாளி வர்க்க இயக்கம் நிகழ்த்திய இந்த இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை களுக்கு இடைப்பட்ட காலத்தில்தான் விஞ்ஞான சோஷலிசம் என்ற தத்துவத்திற்கு மார்க்ஸ் – ஏங்கல்ஸ் இருவரும் இறுதி வடிவம் அளித்தனர். முதலாளித்துவம் பற்றிய முதிர்ச்சிமிக்க ஆய்வாக ‘மூலதனம்’ (முதல் பாகம்) 1867 ஆம் ஆண்டில் வெளியானது.
அதே காலகட்டத்தில் 1864 ஆம் ஆண்டில் ‘உழைப்பாளி மக்களின் சர்வதேச கங்கம்’ அமைக்கப்பட்டது. உழைப்பாளி வர்க்கத்தை ஒரு வர்க்க உணர்வு படைத்த சக்தியாகத் திரட்டுவதற் காக மார்க்சிய சிந்தனைகள் விரைவான முறையில் அக்காலத்தில்தான் வளர்ச்சி பெற்றன. இந்தியா உள்ளிட்ட காலனி நாடுகளின்பால் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. இது பற்றி கம்யூ னிஸ்ட் பிரகடனத்தில் குறிப்பிடப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
பாரிஸ் கம்யூன் தோல்வியைச் சந்தித்த பிறகு அடுத்த புரட்சி அலை ரஷ்யாவிலிருந்து கிளம்பும் என்று மார்க்சும் – ஏங்கல்சும் எதிர்பார்த்தனர். 1882 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் ரஷ்ய மொழிப் பதிப்புக்கு தாங்கள் கூட்டாக எழுதிய முன்னுரையில் அவர் களிருவரும் இது பற்றிக் குறிப்பிடுகின்றனர். மேற்கத்திய நாடுகளில் நிகழவிருக்கின்ற பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அடையாளமாக ரஷ்யப் புரட்சி அமையும் என்ற தங்கள் கணிப்பை அவர்கள் அப்போது வெளிப்படுத்தினர்.
முதலாளித்துவ வளர்ச்சி பற்றிய தத்துவ ஆய்வில் ஏகாதிபத்தியம் என்ற கருத்தைப் பற்றிய லெனின் அளித்த விரிவான விளக்கம் ஒரு முக்கியமான முன்னேற்றம் ஆகும். 1917 ஆம் ஆண்டு நிகழ்வுற்ற ரஷ்யப் புரட்சிக்கான களத்தை அமைத்த ஒருங்கிணைந்த தத்துவத்தில் இது இரண்டாவது சிகரம் என்று பிரபாத் பட்நாயக் தமது புரட்சி உலக அளவில் உருவாக்கிய பேரலைகளின் காரணமாக கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் செய்தி உலகம் முழுவதும் பரவியது.
1948 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றபோது, முற்றிலும் மாறுபட்ட நிலைக்கு உலகம் வந்திருந்தது. தீரமிகு தியாகங்களுக்குப் பிறகு சோவியத் யூனியன் பாசிச வீழ்ச்சிக்குக் காரணியாக இருந்தது; உலகம் சீனப் புரட்சியின் வெற்றியைக் காணும் தறுவாயில் இருந்தது; வியட்நாம் மற்றும் கொரியப் புரட்சிகளில் பெரும் முன்னேற்றங்களை உலகம் காணவிருந்தது. கிழக்கு ஐரோப்பாவின் பல நாடுகளில் “மக்கள் ஜனநாயக அரசுகள்” மலர்ந்திருந்தன. தேசிய விடுதலை இயக்கங்கள் அலையாக எழுந்திருந்தன – இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பிறகு அரங்கேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களாக இவை அமைந்திருந்தன.
சோவியத் யூனியனில் சோஷலிசப் பரிசோதனை முடிவுக்கு வந்ததை ஒரு சகாப்தத்தின் முடிவாகக் குறிப்பிடலாம். 1980களின் இறுதி ஆண்டுகளில் உலக அளவில் ஏற்பட்ட பிரதிபலிப்பின் பின்னணியில் முற்போக்கான வளர்ச்சிப் போக்குகள் அனைத்தும் தடைபட்டுப் போயின. ஒரு தத்துவம் என்ற அடிப்படையிலும் ஒரு அரசியல் என்ற வழிமுறை வகையிலும் மார்க்சியம் தனது நிலைத்திருத்தலுக்கும், நடைமுறைப்படுத்துதலுக்கும் ஒரு பெரும் சவாலை எதிர் கொண்டது.
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு கழிந்த ஒன்பதாண்டுகளில் இடையறாத பிரச்சாரம் ஒன்றை உலகம் சந்தித்து. “சோசலிசம் செத்துவிட்டது”, “மார்க்சியம் காலாவதியாகிவிட்டது” என்ற பிரச்சாரத்தை ஏகாதிபத்திய வட்டாரங்களும், அதன் தத்துவவாதிகளும் இடையறாமல் கட்டவிழ்த்துவிட்டனர். இந்த தத்துவார்த்தத் தாக்குதல் நடைபெற்றபோதே அதற்கு இணையான முறையில் உலக நிதி மூலதனம் தனது சாம்ராஜ்யத்தை விரிவாக்கும் முயற்சியிலும், உலகின் மூலைமுடுக்குகளிலெல்லாம் தனது தலையை நுழைப்பதற்கான முயற்சியிலும் மிகுந்த உறுதிப்பாட்டுடன் ஈடுபட்டு வந்தது. உலகமயமாக்கல் என்ற பெயரில், வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் என்ற பாகுபாடு இன்றி அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் வசிக்கும் உழைப்பாளி மக்களின் மீது கடுமையான தாக்குதல் தொடுக்கப்பட்டது. இந்த பாதகமான வளர்ச்சிப் போக்குகளின் தொடர் விளைவாக சில கம்யூனிஸ்ட் கட்சிகள் நிலை குலைந்துபோயின. மார்க்சியம்தான் வழிகாட்டும் தத்துவம் என்ற நிலைப்பாட்டை அவை கைகழுவின.
இத்தகைய பின்னணியில் கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் 150வது ஆண்டு நிறைவு விழா, தற்காலத்துக்குப் பொருத்தமற்றதாகிவிட்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணத்தின் நினைவைப் போற்றும் விழாவாகவோ, விஞ்ஞான சோஷலிசத்தைக் கருக்கொண்டிருந்த அந்த நூலில் என்ன தவறு நிகழ்ந்தது என்ற பரிசீலனையாகவோ நடந்திருக்கக்கூடும். மாறாக, உலக முதலாளித்துவத்தின் பலவீனங்களைப் பரிசீலனை செய்யும் விழாவாக, உலகளாவிய முதலாளித்துவ அமைப்பு முறையைப் பற்றிய மார்க்சின் ஆய்வுகள் எவ்வாறு பொருத்தமாக உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டும் விழாவாக அந்த விழா அமைந்தது. 1998-ல் நிகழ்ந்த தென்கிழக்கு ஆசிய நிதி நெருக்கடி உலக முதலாளித்துவ நெருக்கடியின் துவக்கமாகக் காணப்பட்டது. அது பின்னர் கிழக்கு ஆசியப் பகுதிக்குப் பரவி தென்கொரியாவைத் தாக்கியது. வலிமை மிக்க பொருளாதார நாடுகளின் வரிசையில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருந்த ஜப்பானில் நிதி நெருக்கடியையும், பொருளாதாரப் பின்னடைவையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ரஷ்ய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. பிரேசில் நாட்டின் பொருளாதார அடித்தளம் ஆட்டம் கண்டது.
இத்தகைய இருள் கவிந்த சூழலில உலக முதலாளித்துவம் தனது வெற்றிக் களிப்புக்கு விடைகொடுக்க நேரிட்டது. ஐ.எம்.எப். பின்பற்றி வரும் கொள்கைகள் பற்றி, உலகமயமாக்கலுக்குத் தொடங்கின. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் போக்கு வெளிப்படத் துவங்கியது. “பனிப்போர் முடிவடைந்த பிறகு உலகத்தை ஆட்கொண்ட சுதந்திரச் சந்தை பற்றிய ஆச்சாரக் கோட்பாடுகள் சந்தித்த மிகப் பெரிய சவாலாக இந்தக் கொள்கைப் பின்னடைவு அமைந்திருந்தது” என்று ‘வால் ஸ்ட்ரீட ஜர்னல்’ என்ற இதழ் குறிப்பிட்டது. இதற்கு நேர் மாறான நிலையில் 90களின் மத்திய காலத்தில் உழைப்பாளி வர்க்கப் போராட்டங்கள் புதிய உத்வேகம் பெற்று எழுந்தன. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் தொழிற்சங்க இயக்கம் நீண்ட காலமாக சந்தித்து வந்த பின்னடைவு நிலைகள் மாறத் தொடங்கின. பிரான்ஸ் நாட்டுத் தொழிலாளர்கள் 1995 ஆம் ஆண்டில் நடத்திய வேலை நிறுத்தம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. உழைப்பாளி வர்க்கத்தின் எதிர்ப்பு இயக்கத்தை மேலும் மேலும் எழுச்சி மிக்கதாக அது மாற்றி அமைத்தது.
இத்தகைய பின்னணியில்தான் கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் நூற்றைம்பதாண்டு நிறைவு விழா நடைபெற்றது. உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான கூட்டங்கள், விவாதங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய ஒரு நிகழ்ச்சியாக பாரிஸ் மாநகரில் 1998 மே மாதத்தில் நடைபெற்ற மாநாடு அமைந்தது. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சமூக இயக்கங்கள், வேறு பல நிறுவனங்கள் ஆகியவை சார்பாக 1500 பேர் அந்த மாநாட் டில் கலந்து கொண்டனர். 300க்கு மேற்பட்ட ஆய்வறிக்கைகள் அந்த மாநாட்டில் வெளியிடப்பட்டன. அந்த நிகழ்ச்சிகளின் போது வெளியிடப்பட்ட அனைத்து ஆவணங்களைப் பற்றிய விபரங்களுக்குள்ளும் செல்வது இப்போது சாத்தியமானதல்ல. ஓராண்டு காலம் நடைபெற்ற 150 ஆம் ஆண்டு நிறைவு விழா 1999 பிப்ரவரியில் நிறைவடைந்தது. மாநாடுகள், கூட்டங்கள், கருத்தரங்கங்கள் ஆகியவற்றில் நடைபெற்ற விவாதங்களின் தன்மையையும், உள்ளடக்கத்தையும் கூர்மையாகப் பரிசீலிக்கும்போது ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் வெளிப்படையாகத் தெரிந்தது. மார்க்சியதைப் பின்பற்றுபவர்களிடையே 1991 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மை காணாமல் போயிற்று; மீண்டுமொருமுறை ஆழமாக சிந்திக்க வேண்டியதன் தேவை மையமான அம்சமாக வலியுறுத்தப்பட்டாலும் தத்துவார்த்த ரீதியாகப் புதுப்பித்துக் கொள்வதிலும் நடைமுறைக்கான வழியிலும் நம்பிக்கை உணர்வுகள் மேலோங்கத் தொடங்கின.
நூற்றாண்டு விழாவினையொட்டி இந்தியாவில் நடைபெற்ற விவாதங்கள் மற்றும் அறிவுத்தளப் பணிகள் பற்றிய ஒரு மதிப்பீட்டைப் பெறுவதற்காக மூன்று முன்னணி மார்க்சிய அறிஞர்களை இந்த நூலுக்குப் பங்களிப்புச் செய்யுமாறு கேட்டுக் கொண்டோம். அவர்கள் எழுதியுள்ள மூன்று கட்டுரைகள் பின்வரும் அம்சங்கள் குறித்து கவனம் செலுத்துகின்றன:
- மார்க்ஸ் – ஏங்கல்ஸ் சிந்தனைகளின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் பங்குப் பணி.
- மார்க்சிய தத்துவக் கருவூலத்தில் பிரகடனத்தின் முக்கியத்துவம்
- எதிர்காலக் கொள்கை மற்றும் செயற் முறைக்கான வழிகாட்டி என்ற முறையில் பிரகடனத்தின் பங்குப் பணி.
கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்று தொடர்பான கருத்தையும் அதன் பிந்தைய கால வளர்ச்சியையும் இர்ஃபான் ஹபீப் தனது கட்டுரையில் விளக்கியுள்ளார்.
மார்க்சிய தத்துவம் புதிய சிகரங்களை எட்டும் வகையில் செய்யப்பட வேண்டிய மறு கட்டுமானத்துக்கான முயற்சியில் தேவையை பிரபாத் பட்நாயக் விளக்குகிறார். இதற்காக சமகால உலகப் பொருளாதாரத்தில் உரிய முறையில் பரிசீலிக்கப்பட வேண்டிய வளர்ச்சிப் போக்குகளை அவர் ஆய்வு செய்துள்ளார்.
கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் இடம் பெற்றுள்ள, புரிந்து கொள்வதற்குக் கடினமான புரட்சிகரமான சிந்தனைகளை அய்ஜாஸ் அகமது தெளிவான முறையில் விளக்குகிறார்.
பொருளாதாரக் கட்டுமானம் மற்றும் தொடர்புடைய அரசியல் மற்றும் பண்பாட்டு அம்சங்களின் மீது அந்தப் புரட்சிகர சிந்தனைகள் ஏற்படுத்திய தாக்கத்தை அவர் மதிப்பீடு செய்துள்ளார்.
‘மூலதனம்’ நூலின் முதல் பாகத்தில் விவரிக்கப்பட்டுள்ள முதலாளித்துவ வளர்ச்சி பற்றிய கோட்பாடுகளில் காலனி ஆதிக்கம் குறித்து போதுமான அளவில் மார்க்ஸ் கவனம் செலுத்தவில்லை என்பதை சிந்தனையைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள மூன்று கட்டுரைகளும் சுட்டிக் காட்டுகின்றன. சோவியத் யூனியனில் சோஷலிசத்தைக் கட்டும்போது ஏற்பட்ட அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ளுதல் தொடர்பான பிரச்சனைகள் பற்றி இக்கட்டுரையில் பரிசீலிக்கப்படவில்லை. மார்க்சியத் தத்துவத்தையும், அதன் செயல்முறையை மறுஆய்வு செய்வதற்கும் புத்துயிர் ஊட்டுவதற்கும் சோவியத் யூனியன் அனுபவம் குறித்த பரிசீலனை தேவையான ஒரு அம்சமாகும். இந்த அம்சம் குறித்து தனியாகவும், விரிவாகவும் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.
முதலாளித்துவ அமைப்பு குறித்து கம்யூனிஸ்டு பிரகடனம் அளித்துள்ள விளக்கங்கள் இன்றைய முதலாளித்துவ அமைப்பு முறையைத் திகைப்பூட்டும் வகையில் துல்லியமான முறையில் பிரதிபலிக்கின்றன. இந்த அம்சம் மார்க்சியவாதிகளாலும் மற்றவர்களாலும் கவனிக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவ உறவு முறைகளின் விரிவாக்கம் பற்றிய பத்திகளில் கம்யூனிஸ்ட் பிரகடனம் 20 ஆம் நூற்றாண்டின் உலகமயமாக்கப்பட்ட முதலாளித்துவத்தை கூர்ந்த மதிநுட்பத் தெளிவுடனும், தீர்க்க தரிசனத்துடனும் படம் பிடித்துக் காட்டுகிறது. “முதலாளித்துவ வர்க்கத்தின் உற்பத்திப் பொருட்களுக்கு மேலும் மேலும் விரிவடையும் சந்தை தேவைப்படுகிறது. இந்தத் தேவை முதலாளித்துவம் வர்க்கத்தைப் புவிப் பரப்பு முழுவதும் தொடர்ந்து விரட்டுகிறது. முதலாளித்துவ தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அனைத்து இடங்களிலும் தனக்கென உறைவிடத்தையும் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்புகளையும், இணைப்புகளையும் உருவாக்கிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.”
1848 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வு முழுமை பெறவில்லை. ‘மூலதனம்’ நூலில் இந்த ஆய்வு முழு வடிவத்தைப் பெற்று முன்னேறியுள்ளது. அதன் பின்னர், ‘ஏகாதிபத்தியம்’ பற்றிய லெனினின் சிந்தனை கம்யூனிச இயக்கத்துக்கு புதிய முன்முயற்சிகளுக்கான பாதையைத் திறந்துவிட்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் கடைசி இருபதாண்டுகளில் ஏகாதிபத்தியக் கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிப் போக்குகள், குறிப்பாக ஊகச் சூதாட்ட சர்வதேச நிதி மூலதனத்தின் வளர்ச்சி, மார்க்சியத் தத்துவமும் உலகளாவிய உழைக்கும் வர்க்க இயக்கமும் பெரிய அளவில் கவனம் செலுத்த வேண்டியவையாகும்.
சர்வதேச நிதி மூலதனத்தின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது. உலகமயமாக்கப்பட்ட ஏகாதிபத்திய அமைப்பில் தேசிய அரசுகளின் பங்குப் பணி என்ன என்பதே புதிதாக முன்னுக்கு வந்துள்ள கேள்வி. இந்த அம்சம் வர்க்கப் போராட்டத்தின் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். சர்வதேச நிதி மூலதனம் கடுமையான ஏற்ற இறக்கங்களுடன் செயல்படும் தன்மை வாய்ந்தது. ஊகச் சூதாட்ட சர்வதேச நிதி மூலதனம் எத்தகைய கட்டுப்பாடுகளுக்கும் உட்படாமல், நாடுகளின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல் சுதந்திரமாகப் பயணம் செய்கிறது. இந்த சர்வதேச நிதி மூலதனத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோ அதன் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதோ தேசிய அரசுகளுக்கு இயலாத காரியமாக ஆகிவிட்டது. இதனால் தேசிய அரசுகளின் தன்னாளுமையே அரிக்கப்பட்டுவிட்டது. சர்வதேச நிதி மூலதனத்தின் இத்தகைய தன்மையும் அதன் பிரம்மாண்டமான வளர்ச்சியும் நம்முடைய ஆய்வுக்குக் குறுக்கே வரத் தேவையில்லைதான்.
ஆனால் நிதி மூலதனத்தின் இடம்விட்டு இடம் பாயும் தன்மை தேசிய அரசுகளுக்கு ஏற்படுத்தி வரும் ஏராளமான இன்னல்களை கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. தேசிய அரசுகளால் தமது நாடுகளுக்குள் நுழைந்து கொள்ளை லாபம் அடிக்கும் நிதி மூலதனத்தின் ஊடுருவலைத் தடுத்து நிறுத்த முடிவதில்லை. சர்வதேச நிதி மூலதனம் தனது ஏவல் அமைப்புகளாகச் செயல்படும் பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எப்.), உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றின் துணையோடு நாடுகளின் மீது திணிக்கும் கொள்கைகளை தேசிய அரசுகளால் எதிர்க்க முடிவதில்லை. தேசிய அரசுகளை பயன்படுத்தி சர்வதேச நிதி மூலதனத்தால் உருவாக்கக்கூடிய தீய விளைவுகளை எதிர்த்துப் போராட முடியுமா என்பதும், வர்க்கப் போராட்டத்தின் மையமான அம்சமாக தேசிய அரசுகளை மாற்ற முடியுமா என்பதுமே தற்போது எழுந்துள்ள கேள்விகள்.
தேசிய அரசுகளை வர்க்கப் போராட்டம் நிகழும் களமாகப் பயன்படுத்தவது பற்றிய முறையான பரிசீலனை தற்போது தேவைப்படுகிறது. முதலாளித்துவச் செயல்பாடுகளின் உலகளாவிய தன்மையினை விளக்குகின்ற கம்யூனிஸ்ட் பிரகடனம் அதேநேரத்தில் தேசிய எல்லைகளுக்குள் நடத்தப்பட வேண்டிய வர்க்கப் போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது? முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம் உள்ளடக்கத்தில் தேசியத் தன்மையுடன் இல்லை என்றாலும் வடிவத்தைப் பொறுத்த வரை முதலில் அது ஒரு தேசியப் போராட்டமாகவே அமையும். ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் தனது நாட்டின் முதலாளி வர்க்கத்துடன் முதலில் கணக்குத் தீர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. “கம்யூனிஸ்ட் பிரகடனம் வெளியிடப்பட்டு நூற்றைம்பது ஆண்டுகள் கழிந்துவிட்ட போதிலும், மூலதனம் விரிவான அளவில் மேலும் மேலும் அதிகமான அளவில் சர்வதேசியத் தன்மை பெற்றுவிட்ட நிலையிலும், வர்க்கப் போராட்டம் குறித்த இந்தக் கோட்பாடு இன்றும் செல்லத்தக்கதாக இருக்கிறது.
குறைவான அளவிலேயே வளர்ச்சி பெற்றுள்ள முதலாளித்துவ நாடுகளின் ஆளும் வர்க்கங்களின் பங்குப் பணி பற்றி புரிந்து கொள்வது தற்போது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நாடுகளின் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள், தங்களுடைய நாடுகள் சுயேச்சையான ஒரு முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவதற்கான முயற்சிகளை கைவிட்டுவிட்டன. எதிர்ப்பு அரணாகத் திகழ்ந்த சோவியத் யூனியன் உலக அரங்கில் இல்லாமல் போனது இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நிதி மூலதனத்தின் உலக ஒழுங்கமைப்பில் தங்களையும் இணைத்துக் கொள்வதுதான் தங்களின் வர்க்க வளர்ச்சிக்கான ஒரே பாதையாக அவை கருதுகின்றன. ஆனால், இதுவே ஒரு நிரந்தரமான நிகழ்ச்சிப் போக்காக இருக்க முடியாது. உலக முதலாளித்துவ அமைப்பில் முரண்பாடுகள் தீவிரமடையும்போது உள்நாட்டு ஆளும் வர்க்கங்களும் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.
சர்வதேச நிதி மூலதனத்தின் ஊடுருவலால் தேசிய அரசுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருவது உண்மையே. ஆனால் நிதி மூலதனத்தை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாதே என்ற நிலைக்கு அவை தள்ளப்பட்டுவிட்டதாக நாம் அதனை மிகைப்படுத்திவிடக் கூடாது. மூலதனத்தின் சுதந்திரமான இயக்கத்தை அனுமதிக்காமல் எந்தவொரு நாடும் உயிர்வாழ முடியாது என்றும், வளர்ச்சி அடைய முடியாது என்றும் ஐ.எம்.எப். உலக வங்கியின் ஆச்சார சீலர்கள் அடித்துப் பேசி வருகின்றனர். ஆனால், எத்தகைய கட்டுப்பாடுமற்ற முறையில் மூலதனப் பாய்ச்சலை அனுமதிப்பது தவறு என்று தென்கிழக்கு ஆசிய நாடுகள் சந்தித்த நிதி நெருக்கடிகள் தெளிவான முறையில் படம் பிடித்துக் காட்டியுள்ளன. நிதி மூலதனத்தின் தாக்குதலால் ஏற்படக்கூடிய சீரழிவுகளை கட்டுப்படுத்தக்கூடிய கருவியாக இருக்கக் கூடியது தேசிய அரசுகள் மட்டுமே என்பதும், சர்வதேச அமைப்புகளின் பரிசீலனைக்கு இதனைக் கொண்டு செல்லக் கூடிய நிலையில் தேசிய அரசுகள் மட்டுமே உள்ளன என்பதையும் தென்கிழக்கு ஆசியாவின் அனுபவங்கள தெளிவாக்குகின்றன. எடுத்துக்காட்டாக, மலேசியாவின் மகாதிர் ஆட்சி, தன்னை ஒரு முதலாளித்துவ ஆட்சிதான் எனக் கூச்சமின்றிக் கூறிக் கொண்டாலும்கூட, ஐ.எம்.எப் / உலக வங்கியின் நிர்ப்பந்தங்களுக்கு எதிராக சவால் விடுத்தது. நிதி மூலதனப் பாய்ச்சலுக்கு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது.
தேசிய அரசுகளையும் அவற்றின் ஆட்சி இயந்திரத்தையும் பயன்படுத்திக் கொண்டு உள்நாட்டு வர்க்கங்கள் சர்வதேச நிதி மூலதனத்தின் ஆணைகளைச் செயல்படுத்துவதை அனுமதிக்க முடியாது? உழைப்பாளி வர்க்கத்தின் உடனடி நலன்களைப் பேணிப் பாதுகாக்கவும், ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்துக்கு எதிராகப் போராடவும் ஏற்ற வகையில் தேசிய அரசுகளை சரியான திசைவழிக்கு நெறிப்படுத்துவதான போராட்டம் உறுதியுடன் நடத்தப்பட வேண்டும்.
இதற்கான அனைத்து வகைப் போராட்டங்களுக்கும் உழைக்கும் வர்க்க இயக்கம் தலைமைப் பாத்திரத்தை ஏற்க வேண்டும். “உழைக்கும் வர்க்கம் தேசத்தை வழிநடத்தும் இயக்கமாக உயர வேண்டும்”, “உழைக்கும் வர்க்கம் தன்னையே தேசமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அரசியல் மேலாதிக்கத்தை அது பெறமுடியும்” என்றெல்லாம் கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களின் போராட்டத்துக்கு உழைக்கும் வர்க்கம் தலைமைப் பாத்திரம் வகிக்க வேண்டும் என்ற பொருளில்தான் மேற்கண்டவாறு கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நாடுகளை அடிமைப்படுத்தும் ஏகாதிபத்தியத்தின் போக்குகளுக்கு எதிராக உழைப்பாளி வர்க்கத்தின் தலைமையில் நடைபெறும் ஜனநாயக இயக்கம் வர்க்க சக்திகளின் பலாபலன்களில் மாற்றங்களை ஏற்படுத்தும். அத்துடன் உள்நாட்டு ஆளும் வர்க்கங்கள் மத்தியில் உருவாகக் கூடிய ஏகாதிபத்திய ஆதரவுப் போக்கைத் தடுத்து நிறுத்தவும், அதனை எதிர்த்துப் போராடவும் அது வழிவகுக்கும்.
நாடுகளின் எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில்தான் வர்க்கப் போராட்டங்கள் பெருமளவில் நடைபெறுகின்றன. இவ்வாறு நிகழ்வது சர்வதேசியக் கோட்பாட்டுக்கு எதிரானது அல்ல. தனது கொள்கைகளை தேசிய அரசுகளின் மீது திணிப்பதற்காக லஞ்சம் கொடுப்பது உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளையும் ஏகாதிபத்தியம் வன்மத்துடன் கையாள்கிறது. உள்நாட்டு வர்க்கங்கள் மற்றும் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து தேசிய அரசுகள் செயல்படுவதற்கு ஏகாதிபத்தியம் அனுமதிப்பதில்லை. ஒரு நாடு தனது உயர் தன்னாளுமையை இழக்கிறது என்றால் அந்த நாட்டு மக்கள் தங்களைத் தாங்களே ஆளும் உரிமையையும் பிற உரிமைகளையும் இழக்கிறார்கள் என்றுதான் பொருள். தேசிய அரசுகளையும் அதன் குடிமக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய ஜனநாயக அமைப்புகள் மூலம்தான் ஒரு நாட்டின் மக்கள் தங்களின் சுயாதிபத்திய உரிமையை வெளிப்படுத்துகிறார்கள். உயர் தன்னாளுமை பறிபோகிறது என்றால் அது பொருளாதார அடிப்படையில் மட்டும் தாக்கம் ஏற்படுத்தும் என்று நினைக்கக் கூடாது. அது நாட்டில் அரசியல் அமைப்புகளையும், ஏன் அந்த நாட்டின் ஜனநாயகத்தையும் கூட சீர்குலைக்கும். பொதுக்கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பெறுவதற்கான மக்களின் உரிமைகளும் இதனால் பாதிக்கப்படும்.
குறிப்பாகச் சொல்லப்போனால் இந்தியா தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகள் மேலே குறிப்பிட்டுள்ள வகையைச் சேர்ந்தவைதான். மூன்றாம் உலக நாடுகளுக்குள்ளே வளர்ச்சியடைந்த ஒரு முதலாளித்துவ வர்க்கத்தையும், குடியரசுத் தன்மையுடன் கூடிய ஒரு அரசமைப்புச் சட்டத்தையும் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.
அந்த அரசமைப்புச் சட்டத்தில் அடித்தளமாக இருப்பது, குறைபாடுகளுடன் கூடிய, ஆனால் செயல்படக்கூடிய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறை. 1990களில் துவங்கி இந்திய ஆளும் வர்க்கம் பின்பற்றி வரும் உலகமயமாக்கல் திட்டம் இந்த ஜனநாயக வடிவத்தின் மீது நேரடியான தாக்குதலுக்கான பாதையைத் திறந்துவிட்டுள்ளது.
ஜனநாயக வடிவம் கொண்ட அரசியல் அமைப்பு முறை ஒருபுறம்; சமத்துவத்தன்மை அறவே இல்லாத சர்வாதிகாரத் தன்மை மிக்க பொருளாதாரக் கட்டுமானம் மறுபுறம்; இப்படிப்பட்ட முரண்பட்ட தன்மையைக் கொண்ட ஒன்றாகவே இந்தியா தொடர்ந்து காட்சி அளிக்கிறது. வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில்தான் இப்படிப்பட்ட முரண்பாடு சாதாரணமாகக் காணப்படும். மற்றொரு முரண்பட்ட தன்மையும் இந்திய அரங்கில் முன்னுக்கு வந்துள்ளது. மக்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சிக்கும் அரசாங்க முடிவுகள் எடுக்கப்படும் தன்மைக்குமான முரண்பாடுதான் அது. எந்த முதலாளித்துவ கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது பின்பற்றும் அடிப்படைப் பொருளாதாரக் கொள்கைகள் ஒரே மாதிரியான முறையில் அமைகின்றன. 1991 ஆம் ஆண்டு முதல் ஆட்சிக் கட்டிலில் ஏறிய தொடர்ச்சியான மூன்று அரசாங்கங்கள் – அவை வெவ்வேறு அரசியல் கட்சிகள் அல்லது கூட்டணிகளைச் சேர்ந்தவையாக இருந்தபோதிலும் – ஒரே மாதிரியான அடிப்படைப் பொருளாதாரக் கொள்கைகளைத்தான் பின்பற்றின. நவீன தாராளமயமாக்கல் கொள்கைகள், பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து அரசு விலகி நிற்பது போன்ற கொள்கைகளை முறியடிப்பதற்கு மூன்றாம் உலக நாடுகளின் ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கிடையே நிலவும் பொதுவான கருத்தொற்றுமை பெரும் தடையாக அமைந்துள்ளது.
இத்தகைய கருத்தொற்றுமையில் இடதுசாரிகள் தங்களை இணைத்துக் கொள்ள மறுத்து வருகிறார்கள். ஏகாதிபத்திய நிர்ப்பந்தங்களுக்கு எதிரான இயக்கங்களை உருவாக்க வருகிறார்கள் என்பது வெளிப்படை. அதேநேரத்தில், பொருளாதாரக் கொள்கை மாற்றங்களின் அடிப்படையில் மட்டுமே உண்மையான மாற்றுத் திட்டத்தை முன் வைத்துவிட முடியாது. பொருளாதாரக் கொள்கை மாற்றங்கள் முக்கியமானவைதான். ஆனால், அவை மட்டுமே போதுமானவை அல்ல. தன்னாளுமைக்கான போராட்டத்தை நடத்துவது, ஜனநாயகத்துக்கான போராட்டத்தை நடத்துவது மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது ஆகிய அனைத்துக்கும் ஒரு அரசியல் தத்துவார்த்த உள்ளடக்கம் தேவைப்படுகிறது.
கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல வர்க்கப் போராட்டம் என்பது உண்மையில் ஒரு அரசியல் போராட்டம்தான்? பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய வர்க்க போராட்டத்தை நாம் திறமையான முறையில் கையாள்வதை பொறுத்துதான் மூன்றாம் உலக நாடுகளில் – ஏகாதிபத்திய உலக நாடுகளில் – மார்ச்சியத் தத்துவத்தையும் அதன் செயல் முறைகளையும் முன்னுக்குக் கொண்டுவர முடியும்.
உலக முதலாளித்துவ ஆதிக்கத்தின் வெற்றிகரமான வளர்ச்சியை தீர்க்கதரிசனத்துடன் சரியாகக் கணித்துக்கூறிய பிரகடனம் மற்றொரு அம்சத்தில் மிகையான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியது. தேசியத் தடைகளை முறிக்கக் கூடியதாக உலக முதலாளித்துவத்தின் ஆற்றல் பற்றி மிகையான முறையில் மதிப்பீடு செய்தது. “நாடுகளுக்கிடையேயும், மக்களுக்கிடையேயும் நிலவிவந்த கருத்து வேறுபாடுகளும், பகைமைப் போக்குகளும் மேலும் மேலும் அதிக அளவில் மறைத்து வருகின்றன. முதலாளிகளின் வளர்ச்சி, வர்த்தகத்துக்கான சுதந்திரம், உலக அளவிலான சந்தை, உற்பத்தி முறையில் காணப்படும் ஒரே மாதிரியான தன்மை போன்றவையே இதற்குக் காரணம்” என்று பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஏகாதிபத்திய சகாப்தத்தில் இரண்டு உலகப் போர்களை இருபதாம் நூற்றாண்டு கண்ணுற்றது. ஆதிபத்திய நோக்கத்துடன் முடுக்கிவிடப்பட்ட தேசங்களுக்கிடையேயான போட்டிகளும், தேசங்களுக்கிடையே ஏற்பட்ட வேறு பல மோதல்களும் மிகப்பெரும் மனித பலிகளுக்கு இட்டுச்சென்ற அந்த இரு உலகப் போர்களுக்கு காரணமாயின. தேசங்களுக்கிடையோன முரண்பாடுகளை மேலும் கிளறிவிட்டுள்ளது. முதலாளித்துவத்திலிருந்து மாறி வந்த நாடுகளில் கூட அதன் விளைவுகள் தொடர்கின்றன என்பது வெளிப்படை.
இனக்குழுவாத அடிப்படையிலும், தேசிய அடிப்படையிலும், மத அடிப்படையிலும் எழுந்துள்ள எண்ணற்ற சிக்கல் மிகுந்த பிரச்சனைகள் மூன்றாம் உலக நாடுகளிலும் முன்னாள் சோஷலிச நாடுகளிலும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டங்களுக்குத் தடையாக அமைந்துள்ளன. சுதந்திரச் சந்தைக் கோட்பாடுகள் திணிக்கப்படுதல், சோஷலிச முகாமின் செல்வாக்கில் ஏற்பட்ட பின்னடைவுகள், சமுதாய மற்றும் கலாச்சார அரங்கங்களில் உலகமயமாக்கலால் ஏற்படும் சீரழிவுகள் ஆகியவை இனக்குழு மற்றும் மத அடையாளங்களையும் – உணர்வுகளையும் தூண்டிவிடுபவையாகவும் அவற்றை மேலும் மோசமடையச் செய்பவையாகவும் அமைந்துள்ளன. உலகின் அனைத்துப் பகுதியிலுமுள்ள தேசங்களிலும், பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய நாடுகளிலும் ஏற்பட்டு வரும் நெருக்கடிகள் பிற்போக்குத்தனமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த நாடுகளில் மத சகிப்புத் தன்மையற்ற இயக்கங்களும் இன மற்றும் சாதிய மோதல்களும் வளர்ந்து வருகின்றன. இத்தகைய சக்திகளுடன் இணக்கமான முறையில் செயல்படும் ஆற்றல் ஏகாதிபத்தியத்துக்கு கைவந்த கலையாக உள்ளது. தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானில் தாலிபான் என்னும் அடிப்படைவாத அமைப்புடனும், பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளுடனும், இந்திய நாட்டில் இத்து மதவாதிகளுடனும் இணைந்து செயல்படுவது அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சாத்தியமாகியுள்ளது. சிறுபான்மை மக்களின்பால் ஆளும் வர்க்கங்கள் காட்டக்கூடிய மதவெறிப் போக்கு மற்றும் ஜனநாயகத் தன்மையற்ற போக்குகளால் மக்களின் ஒற்றுமை சீர்குலைகிறது. ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் வளர்ந்து வரும் சகிப்புத் தன்மையற்ற சக்திகளும் மக்கள் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கின்றன. இதனையெல்லாம் உழைக்கும் வர்க்க இயக்கமும், இடதுசாரி சக்திகளும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.
இனக் குழுக்கள் மற்றும் மதச் சிறுபான்மையினருக்கும் உரிமைகளை வழங்கக்கூடிய, அவற்றுக்கு உத்தரவாதமளிக்கக் கூடிய ஒரு ஜனநாயக இயக்கத்தை, தேசிய அளவிலான தலைமைப் பாத்திரத்தை எதிர்பார்க்க முடியாது. ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்ட தேசியத்துக்கு தலைமைப் பாத்திரம் வகித்த உழைக்கும் வர்க்கம் விரும்பினால் அது சிறிய அளவிலான மத, இன, மொழி, பிராந்திய வாதப் போக்குகளுக்கு எதிராகவும், பெரிய அளவில் இத்தகைய போக்குகளுக்கெதிராகவும் போராட வேண்டியிருக்கும். சிறுபான்மை மக்களின் ஜனநாயக வேட்கைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அதேநேரத்தில் பிரிவினை வாதத்துக்கு எதிராகப் போராடுவதற்கும் இடதுசாரிகள் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக மாநில சுயாட்சிக் கோட்பாடுகளுக்கும் பிரதேச சுயாட்சி உரிமைகளுக்கும் இடதுசாரிகள் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தெற்கு ஆசிய நாடுகளில் கிடைத்துள்ள அனுபவங்கள் இதனையே உணர்த்துகின்றன. நிர்வாக அமைப்புகளிலும் பொருளாதார அம்சங்களிலும் முடிவு எடுக்கும் அதிகாரத்தைக் கீழ்மட்டத்துக்கு விரிவுபடுத்த வேண்டும் என்பதற்கான போராட்டம் தற்போது நடைபெற்று வருகின்றன. மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களின் பிரதிபலிப்பாகவே இவற்றை கருத வேண்டும்.
பல்வேறு தேசிய இனங்களைக் கொண்டிருந்த சோவியத் யூனியனும், யூகோஸ்லேவியாவும் பிளவுபட்டு உடைந்துபோன காட்சியை நாம் கண்டோம். பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளின் பிரச்சனை பற்றி மார்க்சியத் தத்துவம் மற்றும் நடைமுறைகள் காட்டும் வழிகாட்டுதல் குறித்த ஒரு புதிய பார்வையின் அவசியத்தை இந்த அனுபவங்கள் உணர்த்துகின்றன.
சமூக அமைப்பைப் புரட்சிகரமான முறையில் மாற்றிட நடத்தப்படும் இயக்கத்தின் தலைமைப் பாத்திரத்தை பாட்டாளி வர்க்கத்துக்கு கம்யூனிஸ்ட் பிரகடனம் வழங்குகிறது. பிரகடனம் அளிக்கும் இச்செய்தியை நிராகரிப்பதற்கான முயற்சிகள் அனைத்து வகையிலும் நடைபெற்று வருவதை நாம் காண முடிகிறது. கடந்த பத்தாண்டுகளில் சோஷலிசம் சந்தித்த பின்னடைவுகள் மார்க்சியத் தத்துவத்தின் இந்த அம்சங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த அம்சங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் திரிபுவாதப் போக்குகளுக்கு உரம் சேர்த்துள்ளன. உலகமயமாக்கலுக்கு எதிராக நடைபெற்றுள்ள அண்மைக்கால போராட்டங்களின் அனுபவங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள திரிபுவாதப் போக்குகளுக்கு எதிராக அமைந்துள்ளன. அவை பாட்டாளி வர்க்கத்தின் மையமான பாத்திரத்தின் தேவையை வலியுறுத்திக் கூறுவதற்கான போதிய அடிப்படைகளை உருவாக்கியுள்ளன. ஏகாதிபத்தியத் தாக்குதலைத் தொடர்ச்சியாக எதிர்த்து வரும் வர்க்கம் தொழிலாளி வர்க்கம் மட்டுமே. அந்த எதிர்ப்பு எவ்வளவு தற்காப்புத் தன்மையுடன் இருந்தாலும் கூட அதுதான் உண்மை நிலை. 1995 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரான்ஸ் நாட்டுத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும், 1996 ஆம் ஆண்டில் தென்கொரியாவில் ஒரு மாத காலம் நடைபெற்ற தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த வேலை நிறுத்தமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பெருமுதலாளி ஆதரவுக் கொள்கைகளுக்கு எதிராக மேற்கு ஐரோப்பாவில் வளர்ந்து வரக்கூடிய தொழிற்சங்கங்களின் புதிய ஒருங்கிணைந்த ஆரம்ப கட்டப் போராட்டங்களும் வரக்கூடிய காலங்களில் பாட்டாளி வர்க்கம் ஆற்றவுள்ள மையமான பங்களிப்பை உறுதி செய்துள்ளன.
உழைக்கும் வர்க்கம் இன்று ஒரு மறைந்துவரும் வர்க்கமோ, எண்ணிக்கையில் சுருங்கி வரும் வர்க்கமோ அல்ல என்பதை அய்ஜாஸ் அகமது தனது கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார். முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும் கூட இதே நிலைதான் காணப்படுகிறது. உழைப்பாளி வர்க்கத்தின் கூட்டமைவுகளிலும் உள் கட்டமைவுகளிலும் முந்தைய நிலைகளிலிருந்து மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது உண்மையே. இந்திய நாட்டைப் பொறுத்த வரை தொழிலாளர்களின் உணர்வுகளில் சாதி மற்றும் இனக்குழு அடிப்படையிலான வேறுபாடுகள் இன்றும் தொடர்கின்றன. தொழிலாளர் வர்க்கத்தின் வர்க்க உணர்வை மேம்படுத்த அதன் அரசியல் மற்றும் ஸ்தாபன நடவடிக்கைகள் மட்டும் போதுமானவையல்ல. தத்துவார்த்த ரீதியிலும், கலாச்சார அடிப்படையிலும் குறுக்கிடுவதன் மூலம் வர்க்க உணர்வை மேலும் வளர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. ஆனால், இந்த அம்சத்தில் மிகச் சிறிய அளவுக்கே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தவிர தொழிற்சங்கங்களும் உழைக்கும் வர்க்க இயக்கமும் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு அம்சமும் உள்ளது. நாம் குறிப்பிடுவது – தொழிற்சங்க இயக்கத்தில் பெண் தொழிலாளர்களின் பங்குப் பணி பற்றய அம்சம். தொழில்துறை உழைப்பாளிகளின் அணியில் மேலும் மேலும் அதிக எண்ணிக்கையில் பெண் தொழிலாளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று பிரகடனம் முன்கூட்டியே மதிப்பீடு செய்திருந்தது. “நவீன தொழில்துறை மேலும் மேலும் வளரும் போது ஆடவரின் உழைப்பு மேலும் மேலும் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பெண் தொழிலாளர்கள் அமர்த்தப்படுவர்” என்று கம்யூனிஸ்ட் பிரகடனம் மதிப்பிடப்பட்டிருந்தது. மலிவான உழைப்புச் சக்தி என்ற வகையில் வளர்ந்து வரும் பாட்டாளிகளின் அணியில் பெண்களும் இணையும் நிலை உருவாகும் என்று கருதப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கின் படி முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் உழைப்பாளர் படையில் 60 சதம் பேர் பெண்கள் என்பது தெரிய வந்துள்ளது? பணித் துறையிலும், குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. பகுதிநேரப் பகுதிகளிலும்? ஒப்பந்தப் பணிகளிலும் மேலும் மேலும் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பெரிய அளவில் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். வளர்ந்து வரும் நாடுகளிலும்கூட இதே நிலையைக் காண முடிகிறது. இந்தியாவில் உள்ள பெண் தொழி லாளர்களின் எண்ணிக்கை சுமார் 12 கோடியே 70 லட்சம் பாட்டாளி வர்க்கத்தின் முக்கியமான அங்கமாக அவர்களும் விளங்குகின்றனர் என்பது உரிய அளவில் புரிந்து கொள்ளப்படவில்லை. பெண் தொழிலாளர்கள் சந்திக்கும் வர்க்க சுரண்டல், சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுடன் பாலியல் ரீதியில் அவர்கள் சந்திக்கும் பிரத்தியேகமான பிரச்சனைகளின் மீதும் உழைக்கும் வர்க்கக் கட்சி கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானதாகும். உழைக்கும் வர்க்க இயக்கத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக பெண் தொழிலாளர்கள் மாற்றப்படவில்லையானால் உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் மிகப் பெருமளவில் பெரும்பான்மை மக்களின் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை வென்றெடுப்பது என்ற பிரகடன நோக்கம் நினைத்து பார்க்கக்கூட முடியாத ஒன்றாகவே இருக்கும்.
ஜெர்மன் தொழிலாளர்களின் கட்சியாகிய கம்யூனிஸ்ட் லீகிற்காக கம்யூனிஸ்ட் பிரகடனம் எழுதப்பட்டது. (அக்கட்சி ஒரு சிறிய கட்சியே) கம்யூனிஸ்ட்டுகள் பின்பற்ற வேண்டிய இலக்கு, திட்ட முறைகள் பற்றியும் உடனடி நடைமுறைகளைப் பற்றியே அது விளக்குகிறது. கம்யூனிஸ்ட் இயக்கம் பிற்காலத்தில் பின்பற்றிய நடைமுறைகளுக்கு அவை முன்னோடியாக இருந்தன. அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட ஒரு கட்சியாக உழைப்பாளி வர்க்கம் மாற வேண்டியதன் தேவையை பிரகடனம் விளக்கியுள்ளது. பாட்டாளிகளை வர்க்கமாகத் திரட்டுவது பற்றியும், பின்னர் அதனை அரசியல் கட்சியாக மாற்றுவது பற்றியுமான கருத்து கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் அதன் ஆரம்பகட்ட வடிவத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த கருத்துக் கருவின் அடிப்படையில் ஒரு புரட்சிகரக் கட்சி பற்றிய முழுமையான கோட்பாட்டை லெனின் பின்னர் வடிவமைத்தார். “அனைத்து நாடுகளிலுமுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்குள்ள கம்யூனிஸ்ட்கள்தான் மிகவும் முன்னேறிய, மிகவும் நெஞ்சுறுதி படைத்த பகுதியினர்” என்று கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட்கள் உழைப்பாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற கோட்பாடு இந்த வாசகங்களின மூலம் பிரகடனத்திலேயே இடம் பெற்றுள்ளது என்று குறிப்பிடலாம். சிலர் இக்கருத்துக்கு எதிராக வாதிடுகின்றனர் என்ற போதிலும் இதுவே சரியான நிலை. அதேநேரத்தில் ஒவ்வொரு நாட்டிலும் பல தொழிலாளி வர்க்கக் கட்சிகள் உருவாகும் என்று மார்க்சும் ஏங்கல்சும் கருதினார்கள். சொத்துடைமை வர்க்கங்களின் கட்சிகளுக்கும் தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்கும் இடையே உள்ள அடிப்படை வேறுபாடுகளையும் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.
அப்படிப்பட்ட புரட்சிகரத் தத்துவார்த்த அடிப்படைகளை நிலைநாட்டுவதற்காகத்தான் கம்யூனிஸ்ட் பிரகனடத்தின் மூன்றாவது பகுதி சோஷலிசம் பற்றிய தவறான கண்ணோட்டங்களை நிராகரிப்பதில் முழுமையான கவனம் செலுத்தியுள்ளது. விஞ்ஞான சோஷலிசத்துக்கும் மற்ற தவறான சோஷலிசக் கோட்பாடுகளுக்கும் இடையே உள்ள பொருத்தமின்மையும், முரண்பாடுகளும் அப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளன. பல்வேறு வரலாற்றுக் காலங்களில் உழைப்பாளி வர்க்கக் கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்காத பல்வேறு விதமான சோஷலிசக் கோட்பாடுகள் உருவாகக்கூடும். இவற்றுக்கு எதிரான தொடர்ச்சியான தத்துவப் போராட்டங்கள் தேவையானவை என்பதை நினைவுபடுத்தும் வகையிலேயே கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் இப்பகுதி அமைந்துள்ளது.
ஐரோப்பாக் கண்டத்தின் பல்வேறு நாடுகளிலுமுள்ள எதிர்க் கட்சிகளின்பால் கம்யூனிஸ்ட்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறை பற்றி கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் கடைசிப் பகுதி விளக்குகிறது. தொழிலாளி வர்க்கத்தின் உடனடி நோக்கங்களை வென்றெடுப்பதற்கு கம்யூனிஸ்டுகள் பின்பற்ற வேண்டிய யுக்திகளைப் பற்றி, அதாவது ‘ஐக்கிய முன்னணித் தந்திரம்’ பற்றி இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சூழலில் தொழிலாளி வர்க்க நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பின்பற்றப்படும் உத்திகளாகவே அவை குறிப்பிடப்பட்டுள்ளதால் அத்தகைய சூழ்நிலை மாறும்போது அவற்றைக் கைவிட்டுவிட வேண்டியது அவசியமானது என்று புரிந்து கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் பிந்தைய காலப் பதிப்பு ஒன்றிற்கு எழுதியுள்ள முன்னுரையில் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உத்திகள் சில காலாவதியாகிவிட்டதைப் பற்றி மார்க்சும் ஏங்கல்சுமே குறிப்பிட்டுள்ளனர். கட்சியின் பங்குப் பணி, வர்க்கத்துடனான அதன் தொடர்பு, முதலாளித்துவ அரசின் தன்மை, புரட்சிகர இயக்கத்தின் இலக்குத் திட்டம் மற்றும் உடனடி நடைமுறைத் திட்டங்கள் ஆகியவை கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் அரசியல் சார்ந்த பகுதிகளாக இடம் பெற்றுள்ளன. இந்த வளமான சிந்தனை ஆதாரங்கள் பிற்காலத்தில் கட்சிகளின் வளர்ச்சி தொடர்பாகப் பெறப்பட்ட அனுபவங்கள், அகிலங்களின் வளர்ச்சியில் கிடைத்த அனுபவங்கள ஆகியவற்றின் அடிப்படையில் சிந்திக்கப்பட வேண்டியவை, பரிசீலிக்கப்பட வேண்டியவை. 20 ஆம் நூற்றாண்டில் உருவான சோவியத் யூனியன் மற்றும் இதர சோஷலிச நாடுகள் சந்தித்த அனுபவங்களின் அடிப்படையில் கட்சி பற்றியும், வர்க்கம் பற்றியும் அரசு பற்றியும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இன்றளவும் விடை காணப்படாதவையாகவே அவை நீடிக்கின்றன.
இந்த நூலில் இடம் பெற்றுள்ள படைப்புகள் மார்ச்சியத் தத்துவம் மற்றும் நடைமுறை பற்றிய பொதுவாக விளக்கங்களாக அமைந்துள்ளன. இருந்தபோதிலும் இந்தியச் சூழல் பற்றியும் தொடர்ச்சியான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்திய நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கம் தனது எழுபதாண்டு வரலாற்றில் ஏராளமான போராட்டங்களை நடத்தியுள்ளது. மதிப்புமிக்க பல அனுபவங்களைப் பெற்றுள்ளது. அவைகளெல்லாம் ஆழமான ஆய்வு செய்யப்பட்டு, அலசப்பட்டு கோட்பாடுகளாகத் தொகுக்கப்பட வேண்டியவை. 1991 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் (வேறு பல நாடுகளைப் போலன்றி) இந்திய நாட்டில் மார்சியத்தைப் பின்பற்றும் கட்சிகள் மக்கள் ஆதரவுத தளத்துடன் தொடர்ந்து நீடிக்கின்றன. இந்திய நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் குழுக்களிலுமுள்ள உறுப்பினர் எண்ணிக்கை 15 லட்சம். இது தவிர இடதுசாரி தன்மையுள்ள வர்க்க வெகுஜன ஸ்தாபனங்களில் 5.5 கோடி முதல் 6 கோடி பேர் வரை உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
இந்த செல்வாக்குடன் ஒப்பிடுகையில், தத்து வார்த்த ரீதியான பணிகள் கண்டு கொள்ளப்படவில்லை. தத்துவார்த்துவப் பணிகளை வலுப்படுத்துவதற்காக அடிப்படைகளில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. இந்திய மொழிகளில் வெளிவந்துள்ள மார்ச்சியப் படைப்புகள் பற்றி கருத்துப் பரிமாற்றங்கள் எதுவும் நடைபெறுவதில்லை. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட படைப்புகள் மட்டுமே விதி விலக்காக உள்ளன. இந்திய துணைக் கண்டத்தின் பல்வேறு மொழிகளில் கம்யூனிஸ்ட் பிரகடனம் வெளியிடப்பட்ட வரலாறு குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்பது இந்த நூலை தயாரிக்கும் போது உணரப்பட்டது. இது பற்றிய சில விபரங்கள் சேகரிக்கப்பட்டு அதற்கான குறிப்புகள் இந்த நூலின் இறுதிப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. இங்கு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திலும், இதர இயக்கங்களிலும் முனைப்புடன் ஈடுபட்ட சில மிகச் சிறந்த இந்திய உள்ளங்களை 1920 ஆம் ஆண்டுகளிலிருந்தே கம்யூனிஸ்ட் பிரகடனம் ஈர்த்துள்ளது.
சிறந்த தேசிய இயக்கத் தலைவரும் இஸ்லாமிய அறிஞருமாகிய அபுல் கலாம் ஆசாத், தலைசிறந்த சமூகச் சீர்திருத்தவாதியும் திராவிட இயக்க முன்னோடித் தலைவருமான பெரியார் ஆகியோர் முதல் பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களாக உருவான பி. சுந்தரய்யா, இ.எம்.எஸ். நம்பூதிபாட் வரை கம்யூனிஸ்ட் பிரகடனத்தால் ஈர்க்கப்பட்டவர்கள்தான். அவர்கள் அனைவருமே கம்யூனிஸ்ட் பிரகடனத்தை மொழிபெயர்ப்பதிலோ பதிப்பிப்பதிலோ தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். அந்தத் தலைவர்களின் மாறுபட்ட அரசியல் பின்னணிகளைப் பார்க்கும்போது, விடுதலைப் போராட்டக் காலத்தில் மார்ச்சியச் சிந்தனைகள் எத்தகைய விரிவான செல்வாக்கைக் கொண்டிருந்தன, எவ்வளவு விரிவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
கம்யூனிஸ்ட் பிரகடனம் பற்றிய இந்த நூலுடன் ‘லெஃப்ட் வேர்டு புக்ஸ்’ பதிப்பகம் துவங்கப்பட்டிருப்பது ஒரு நல்ல அறிகுறி. மார்க்சியத் தத்துவ மற்றும் செயல்முறைகள் குறித்துப் புத்தொளி பெறுகிற முயற்சியில் கம்யூனிஸ்ட் பிரகடனம் பேருதவியாக அமையும். முன்னோக்கிய பயணத்துக்கான பாதையைப் புரிந்து கொள்ள உதவும்.
இந்த நூலை உருவாக்குவதற்கான சிந்தனை 1998 ஆம் ஆண்டில் பிறந்தது. இந்த நூலுக்கான முன்னுரையை எழுதித் தருமாறு தோழர் இ.எம்.எஸ். அவர்களைக் கேட்டிருந்தோம். அந்த முயற்சியில் பெரும் ஆர்வம் காட்டிய அவர் முன்னுரையை எழுதித்தர ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால், அது நடைபெற முடியவில்லை. சில வாரங்களில் அவர் மறைந்துவிட்டார். அவரது நினைவுக்கு இந்த நூலைக் காணிக்கையாக்குகிறோம்.
குறிப்புகள்:
- வி.ஐ. லெனின் – தொகுதி நூல்கள் 21 பக்.48 (ஆங்கிலம்)
- வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் குறிப்பிட்டதாக ராபர்ட் வேட் மற்றும் ஃரபாக் வெனரசோ எழுதிய, ‘மூலதன ஆதிக்கத்திற்கான போராட்டம்’ என்ற நியூ லெஃப்ட் ரிவ்யூ பத்திரிகைக் கட்டுரை, பக்.231, செப்.4 1998.
- பிரபாத் பட்நாயக் மற்றும் அய்ஜாஸ் அகமது ஆகிய இருவருமே தேசிய அரசு மற்றும் உலகமயமாதல் குறித்து எழுதியுள்ளனர். பார்க் கவும் பட்நாயக்., ‘உலகமயமாகும் மூலதனமும், ஏகாதிபத்தியம் பற்றிய கோட்பாடும்’, ‘சோசியல் சயின்டிஸ்ட் 282-83, நவ.டிச.1996 மற்றும் அகமது ‘உலகமயமாக்கலும் தேசிய அரசும்’ செமினார் 437, ஜனவரி 1996..
- எல்லன் மெய்சின்ஸ்வுட் முதலாளித்துவ அமைப்பில் எவ்வாறு அரசியலும், பொருளா தாரமும் வேறுவேறாகப் பிரிக்கப் படுகின்றன என விளக்கியுள்ளார். அவருடைய ‘முதலாளித்துவத் துக்கு எதிராக ஜனநாயகம்: வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தைப் புதுப்பித்தல்’, (கேம்பிரிட்ஜ் 1995) என்ற நூலைப் பார்க்கவும்.
- ‘தொழில் வளர்ச்சி அடைந்த (OECD ) நாடுகளில் 1994 ஆம் வருட கணக்குப்படி மொத்தமாக 11.5 கோடி மக்கள் தொழிற்சாலைகளில் பணி புரிகிறார்கள். இது 1973-ல் 11.2 கோடி ஆகும்’. கிம் மூடி, ஒர்க்கர்ஸ் இன் எ லுன் வோர்ல்ட், லண்டன் 1997.
- OECD நாடுகளில் 15 முதல் 64 வயது வரை பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் எண் ணிக்கை 1980ல் 53 சதவீதமாக இருந்தது. 1990ல் 60 சதவீதமாக உயர்ந்தது என உலகத் தொழிலாளர் அமைப்பின் வேலை நியமன அறிக்கை (1994) குறிப்பிடுகிறது.
- “சொத்துடைமை படைத்த வர்க்கங்களுடைய ஒட்டுமொத்தமான சக்தியை எதிர்த்த தனது போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம், மற்ற அனைத்து சொத்துடைமை வர்க்கங்களி லிருந்தும் மாறுபட்ட, அவற்றை எதிர்த்து நிற்கக் கூடிய ஒரு அரசியல் கட்சியை உருவாக்காமல் ஒரு வர்க்கமாக நின்று போராட முடியாது.” ஹேக் நகரில் கூடிய உலகத் தொழிலாளர் அமைப்பில் 1872 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மார்க்ஸ், ஏங்கல்ஸ், தொகுதி நூல்கள் (ஆங்கிலம்) 23, பக்.243.

தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றுபடுத்துவோம், அவர்களின் வர்க்க உணர்வை மேம்படுத்துவோம்!
1964 ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று அன்றைய கல்கத்தா நகரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 7 ஆவது அகில இந்திய மாநாட்டில் கட்சித் திட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் நீண்ட காலமாக நடைபெற்று வந்த அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டத்திற்கு ஒரு முடிவு காணப்பட்டது. அந்தப் போராட்டம், இந்திய அரசின் வர்க்க குணாம்சம் குறித்தும் அத்துடன் இந்தியாவில் ஒரு சோசலிஸ்ட் அமைப்பை உருவாக்குவதற்கான புரட்சிகரப் போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் பங்களிப்பு குறித்ததுமாகும். மேலும் இது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்று புதியதொரு கட்சி உதயமானதையும் அறிவித்தது. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் வெளிவருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னதாகவே, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் கருத்து வேறுபாடுகள் உருவாகத் துவங்கியிருந்தன.
இந்திய அரசு அமைப்பில் இந்திய முதலாளிகளின் பங்கு குறித்து, கட்சித் திட்டத்தில் தீர்மானகரமாகக் கூறப்பட்டது. கட்சித் திட்டத்தின்படி, இந்திய அரசு, “பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்பட்ட முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் வர்க்க ஆட்சியாகவும், அது முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றுவதற்காக மேலும் மேலும் அந்நிய நிதி மூலதனத்துடன் நெருக்கமாக உறவை அதிகரித்துக் கொண்டும், செயல்பட்டு வருகிறது,’’ என்று இறுதிப்படுத்தப்பட்டது.
இந்தக் கட்சித் திட்டம், தொழிலாளர் வர்க்கத்தால் தலைமை தாங்கப்படும் மக்கள் ஜனநாயக அரசை நிறுவுவதுதான் கட்சியின் லட்சியம் என்றும், அதற்கான மக்கள் ஜனநாயகப் புரட்சியின் தலைமைப் பாத்திரம் தொழிலாளி வர்க்கத் தினுடையதுதான் என்றும் பறைசாற்றியது.
தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம் குறித்த இத்தகைய தெளிவான புரிதல்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இதரர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் பிரதான அம்சமாக உள்ளது.
வேறெந்த வர்க்கமும் தலைமை தாங்க முடியாது
கட்சித் திட்டம், தொழிலாளர் வர்க்கத்தின் முக்கியத்துவத்தை இவ்வாறு அடிக்கோடிட்டுக் காட்டியிருப்பதுடன், இந்தியாவில் தொழிலாளர் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் கட்சியின் கீழன்றி மக்கள் ஜனநாயக முன்னணியை வெற்றிகரமாகக் கட்டவோ, புரட்சியை வெற்றி பெறச் செய்யவோ முடியாது என்று அறுதியிட்டுக் கூறியது. வரலாற்று ரீதியில், “நவீன சமுதாயத்தில் தொழிலாளி வர்க்கத்தைத் தவிர வேறு எந்த ஒரு வர்க்கமும் இந்தப் பணியை ஆற்றக்கூடியதாக இல்லை என்ற உண்மையை நமது காலத்தின் மொத்த அனுபவமும் தெளிவாக உணர்த்துகின்றது,’’ என்றும் கட்சித் திட்டம் தெளிவுபடுத்தியது.
தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின் கீழ் கட்டப்பட வேண்டிய கூட்டணி குறித்து கட்சித் திட்டத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் வலுவான கூட்டணிதான் மக்கள் ஜனநாயக முன்னணிக்கு மையமானதும், அடித்தளமானதும் ஆகும். நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், நீண்ட கால விளைவுகளைத் தரக்கூடிய ஜனநாயக மாற்றத்தைக் கொணரவும், ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தை உறுதிப்படுத்தவும் இந்தக் கூட்டணி மிக முக்கியமான சக்தியாக இருக்கும். புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் இதர வர்க்கங்கள் வகிக்கும் பாத்திரம் தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணியின் வலிமை, ஸ்திரத்தன்மை ஆகியவற்றையே முக்கியமாக சார்ந்துள்ளது.’’
அதேசமயத்தில், கட்சியின் 7 ஆவது அகில இந்திய மாநாடு, தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்குத் தலைமை ஏற்க வேண்டிய, தொழிற்சங்கங்கள் மற்றும் இதர வெகுஜன ஸ்தாபனங்களில் பெருமளவுக்கு இருந்த பலவீனங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டது.
கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம், “கட்சி உறுப்பினர்கள், மக்களுக்கான நிவாரணங்களைப் பெற்றெடுக்கவும் அவர்களது வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவுமான திட்டமிட்டப் போராட்டங்களுக்கு உறுதியாகத் தலைமையேற்று செயல்பட வேண்டும்’’ எனவும் வலியுறுத்தியது. தீர்மானத்தில் மேலும், “வெகுஜன ஸ்தாபனங்களில், அதிலும் குறிப்பாக தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களில் நிலவும் பலவீனங்களினால் எழும் ஆழமான ஆபத்துக்களிலிருந்து முழுமையாக விடுபட்டு, எழாவிட்டால், இந்தப் பணியை வெற்றிகரமாக ஆற்றிட முடியாது’’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் தொழிற்சங்க இயக்கத்தின் நிலைமை என்னவாக இருந்தது? அரசாங்கமும், ஆளும் வர்க்கங்களும் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டும், அதன் விளைவாக உழைக்கும் மக்களின் மீதான சுமைகள் அதிகரித்துக் கொண்டும் இருந்த அதேசமயத்தில், சீர்திருத்தத் தலைமையின் கீழிருந்த தொழிலாளர்கள்கூட போராட்டக் களத்தில் முன்னேறிக் கொண்டிருந்தனர்.
அணிதிரள அறைகூவல்
கட்சி உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் கீழ்வரும் வழிகாட்டுதல்களை மாநாடு வழங்கியது. “சரியான மற்றும் நடைமுறை சாத்தியமான கோரிக்கைகளை வடித்தெடுத்து, தொழிலாளர்களை அவற்றின் கீழ் அணிதிரட்டிட வேண்டும். அதேசமயத்தில் இதர தொழிற்சங்கங்களின் கீழ் உள்ள தொழிலாளர்களையும் சகோதரப்பூர்வமான முறையில் அணுகிட வேண்டும். அவற்றின் தலைமைகளுடனும் ஒரு முறையான அணுகுமுறையை ஏற்படுத்திக் கொண்டு ஒன்றுபட்ட போராட்டங்களைக் கட்டவிழ்த்து விட வேண்டும்.’’
அதேசமயத்தில், தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக ஏற்படும் போராட்டங்களைச் சார்ந்திருக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்தி இருந்தது. ஸ்தாபனத்தை வலுப்படுத்துதல், தொழிற்சங்க அமைப்புகளுக்குள் வராது வெளியே இருக்கும் பெருவாரியான தொழிலாளர்களை ஸ்தாபனப்படுத்துதல், அவர்களின் அரசியல் உணர்வினை மேம்படுத்துதல் ஆகிய பணிகளின் முக்கியத்துவம் அடிக்கோடிட்டுக் கூறப்பட்டிருந்தது. அதேசமயத்தில், தொழிற்சங்க இயக்கத்தில் முன்பு நிலவிய இக்கட்டான நிலைமையினை அடிக்கோடிட்டுக் காட்டிட, கட்சியின் அகில இந்திய மாநாடு, தவறவில்லை. அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “தொழிற்சங்க இயக்கம் மிகவும் ஆழமான முறையில் பொருளாதாரவாதத்திற்குள் மூழ்கி இருக்கிறது. தொழிலாளர்களின் அரசியல் உணர்வினை வளர்த்தெடுக்கவும், மக்களின் இதர பகுதியினருக்கு, குறிப்பாக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்று அவர்களை அணிதிரட்டிடவும் நாம் தவறிவிட்டோம்,’’ என்றும் குறிப்பிட்டிருந்தது. `இந்த பலவீனத்தை மிகவும் விரைவில் சரி செய்திட வேண்டும் என்றும், அனைத்து வழிகளிலும் அரசியல் உணர்வினை மிகவும் விரைந்து, புகுத்திட வேண்டும்’ என்றும் கட்சியால் அறைகூவல் விடுக்கப்பட்டது.
கட்சி, தொழிலாளர் வர்க்க ஒற்றுமையைப் பாதுகாத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளத் தீர்மானித்திருந்தது. எனவே, ஏஐ டியுசி-இன் ஒற்றுமையை நிலைநிறுத்திடவும் அதனை வலுப்படுத்திடவும் அறைகூவல் விடுத்திருந்தது. ஏஐடியுசி-இன் ஒற்றுமையை சீர்குலைப் பதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் தொழிலாளர்களை அணிதிரட்டி முறியடித்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தது. தொழிற்சங்க ஜனநாயகம் மிகவும் பலவீனமாக இருப்பதையும், அது இயக்கத்தை எந்த அளவிற்கு மிகவும் ஆழமான முறையில் இடருக்குள்ளாக்குகிறது என்பதையும், அது எவ்வாறெல்லாம் தலைமையில் அதிகார வர்க்க செயல்பாட்டிற்கு இட்டுச் செல்கிறது என்பதையும் சுட்டிக் காட்டியதுடன், அவை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கட்சி அறைகூவல் விடுத்தது.
இவ்வாறு, ஏழாவது அகில இந்திய மாநாடு நிறைவேற்றிய தீர்மானத்திலேயே, தொழிற்சங்க அரங்கில் கட்சி ஆற்ற வேண்டிய பணிகள் சுருக்கமாகப் பட்டியலிடப்பட்டிருந்தன. தொழிற்சங்க இயக்கத்தின் திசைவழி மிகவும் தெளிவானதாகும். ஒற்றுமையை நிலைநாட்டுங்கள், ஸ்தாபனத்தை பலப்படுத்துங்கள், அதன் ஜனநாயக செயல்பாட்டை உத்தரவாதப்படுத்துங்கள், அரசியல் உணர்வை அதிகரித்திடுங்கள், வீரஞ்செறிந்த வெகுஜனப் போராட்டங்களை உருவாக்குங்கள் என்று மிகவும் தெளிவான முறையில் திசைவழி காட்டப்பட்டிருந்தது..
கடமைகள் குறித்த ஆவணம்
1967 இல் மத்தியக்குழுவால் நிறைவேற்றப்பட்ட `தொழிற்சங்க அரங்கில் ஆற்ற வேண்டிய கடமைகள்’ என்னும் ஆவணத்தில் இதற்கான கட்டளைகள் மேலும் விரிவான முறையில் கூறப்பட்டு, வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்மானம், தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் செயல்படும்போது ஆற்ற வேண்டிய அனைத்து அரசியல் கடமைகள், ஸ்தாபனக் கடமைகள் மற்றும் தத்துவார்த்தக் கடமைகள் குறித்தும் தொட்டுக்காட்டி இருக்கிறது.
பொருளாதாரப் போராட்டங்களில் கூட வர்க்க ஒற்றுமை மிகவும் பலவீனமாக இருந்ததைக் கவனத்தில் கொண்டு வர்க்க ஒற்றுமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. `கடமைகள்’ குறித்த ஆவணம், தொழிற்சங்கங்கள் தங்கள் பங்களிப்பினை வலுவான முறையில் ஆற்றிட வேண்டுமாயின், `அவை தொழிலாளர் வர்க்கத்தின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதில் ஒரு வலுவான கருவியாக மாறிட வேண்டும், இப்போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தை முழுமையாக ஒன்றுபடுத்திடும் வல்லமையைப் பெற்றிருக்க வேண்டும்’. இத்தகு ஒற்றுமையின் முக்கியத்துவம் மற்றும் வர்க்க உணர்வினை மேம்படுத்தக்கூடிய விதத்தில் வர்க்கப் போராட்டத்தை உக்கிரப்படுத்துதலுக்கும் அழுத்தம் தரப்பட்டிருந்தது.
முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் தாக்குதலைத் தடுத்து, முறியடித்திட ஐக்கிய முன்னணி அமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அதேசமயத்தில், `கடமைகள்’ குறித்த ஆவணம் இவ்வாறு `தாக்குதலைத் தடுத்து நிறுத்தும் பணியில் ஒரு வர்க்கமாக செயல்பட’ வேண்டியது தொழிலாளர் வர்க்கத்திற்கு அவசியமான ஒன்று என்பது குறித்தும் அழுத்தம் தந்திருந்தது. ஒன்றுபட்ட நடவடிக்கைகளை வளர்த்தெடுப்பது தொடர்பாக, 1967 ஆவணம் காட்டிய திசைவழி, இன்றைக்கும் பொருத்தம் உடையதாக இருப்பது, மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாகும்.
“மிகவும் உறுதியான முறையிலும், தீர்மானகரமான விதத்திலும் கீழிருந்து ஐக்கிய முன்னணியைக் கட்டும் உத்திகள் மக்களைத் திரட்டுவதில் உண்மையான போல்ஷ்விக் முறையை நிறுவுகிறது. ஐக்கிய முன்னணி குறித்து தலைமை மட்டத்திலிருந்தான முயற்சிகள் மூலம் இது வலுப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் கீழிருந்து கட்டப்படும் ஐக்கிய முன்னணி முயற்சிகளுக்கு இது ஒரு முன் நிபந்தனையாகும். ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியால் மட்டுமே, முதலாளித்துவத்தின் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் மத்தியில் தன்னெழுச்சியான முறையில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். இவ்வாறான முறையில் ஸ்தாபன ரீதியாகத் திரட்டப்பட்ட தொழிலாளர்களோடு, திரட்டப்படாத தொழிலாளர்களையும், முன்னேறிய தொழிலாளர்களோடு, பின்தங்கிய தொழிலாளர்களையும், அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் கீழ் உள்ள அனைத்துத் தொழிலாளர்களையும் தங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்காக வெற்றிகரமான முறையில் அணிதிரட்டிட முடியும்.’’
இந்த ஆவணமானது கடந்தகால நடைமுறைகளிலிருந்து முழுமையாக முறிவினை ஏற்படுத்திக் கொண்டு, வர்க்க ஒற்றுமை மற்றும் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய அவசியத்தைப் பறைசாற்றியது. இத்தகைய புரிதலின் அடிப்படையில்தான் கட்சி, தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் தன் பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறது.
ஆனாலும், ஏஐடியுசி-இன் பதாகையின் கீழ் வீரஞ்செறிந்த போராட்டங்களை வளர்த்தெடுப்பதோ, ஜனநாயக முறையில் செயல்படுவதை உத்தரவாதப்படுத்துவதோ, ஒற்றுமையைக் கட்டும் பணியை முன்னெடுத்துச் செல்வதோ சாத்தியமில்லாமல் இருந்தது. ஏஐடியுசி-க்குள்ளேயே ஒற்றுமையை நிலைநிறுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை மேற்கொண்ட முயற்சிகள் பலனளித்திடவில்லை. 1962 இலிருந்து ஏஐடியுசி-க்குள்ளேயே நடத்தி வந்த போராட்டம் 1969 வரை தொடர்ந்தது.
ஏஐடியுசி-இன் அப்போதைய முன்னணித் தலைமை, அதன் அரசியல் மற்றும் தத்துவார்த்த நிலைமைகள் காரணமாக, போராட்ட நடவடிக்கைகளுக்குத் திட்டமிடுவதிலும், தலைமை தாங்குவதிலும் முன்முயற்சி எடுக்கத் தயாராக இருக்கவில்லை. ஏதாவது காரணத்தைச் சொல்லி எவ்விதமான போராட்டத்திற்கும் தலைமையேற்கக் கூடிய விதத்தில் தயாரிப்புப் பணிகளைச் செய்யாதவிதத்தில் அமைந்திருந்தன. ஊதியங்கள், அகவிலைப்படி, போனஸ் போன்று நாட்டிலிருந்த உழைக்கும் மக்கள் எதிர்கொண்ட பல்வேறு முக்கியமான பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, அரசாங்கத்துடன் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரச்சனையாக இருந்தாலும் சரி, ஏராளமான வித்தியாசங்கள் தோன்றிக் கொண்டே இருந்தன. இவை அனைத்தையும் ஜனநாயக முறையில் தீர்த்திட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் சீர்குலைக்கப்பட்டன. இவை அனைத்தும் இப்போது தொழிலாளர் வர்க்க இயக்க வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.
`தொழிலாளர் வர்க்கம் முதலாளிகளிடமிருந்தும், அரசாங்கத்திடமிருந்தும் மூர்க்கத்தனமான முறையில் தாக்குதல்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு வந்த’ சமயத்தில்தான் இவை அனைத்தும் நடந்து கொண்டிருந்தன. 1967 தேர்தல்களுக்குப் பின்னரும், நாட்டில் எட்டு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோற்ற பின்னரும், மக்கள் மத்தியில் இருந்த கோபம் பல்வேறு வடிவங்களில் வெடித்தது. நாட்டில் பல்வேறு பிரிவினரின் தீவிரமான போராட்டங்களும் நடைபெற்று வந்தன. மத்தியிலிருந்த அரசாங்கம் உழைக்கும் வர்க்கத்தின் போராட் டங்களுக்கு எதிராகக் கடும் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் இருந்த மாநில அரசாங்கங்கள், தொழிலாளர்களின் பக்கம் நின்று, மத்திய அரசின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிய மறுத்தன. இந்தக் காலகட்டத்தில்தான் இம்மாநில அரசாங்கங்கள் ஆளும் வர்க்கங்களால் துவக்கப்பட்ட சதிகளின் மூலமாகக் கவிழ்க்கப்பட்டன.
புதிய ஸ்தாபனம் உதயம்
ஏஐடியுசி தலைமை, போராடும் தொழிலாளர்களின் விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறியதும், பல்வேறு மட்டங்களில் ஜனநாயக விரோத முறையில் செயல்பட்டதும், ஏஐடியுசி-க்குள் செயல்பட்டு வந்த கட்சியின் முன்னணி ஊழியர்களை, 1970 இல் இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) என்னும் புதியதொரு தொழிற்சங்கத்தை அமைத்திட, நிர்ப்பந்தித்தது.
சிஐடியு-வின் அமைப்பு மாநாடு, தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், `ஒன்றுபடு – போராடு’ — போராட்டங்களை வலுப்படுத்துவதற்காக ஒன்றுபடு, ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காகப் போராடு — என்னும் முழக்கத்தை உருவாக்கிக் கொடுத்தது. சிஐடியு-வின் நாடு தழுவிய அளவிலான பிரச்சாரங்கள் ஒற்றுமை வாரம் அனுசரிப்பதுடன் தொடங்கின.
சிஐடியு-வின் அமைப்பு மாநாட்டில் நிறைவுரையாற்றியபோது, நிறுவனத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் பி.டி. ரணதிவே, ஒற்றுமை மற்றும் ஒன்றுபட்ட போராட்டங்களின் முக்கியத்துவம் குறித்து மிகவும் விரிவாகக் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது: “உழைக்கும் வர்க்கம் ஒன்றுபட வேண்டிய தருணமிது. தாங்கள் ஒன்றுபடாவிட்டால், தங்கள் மீது ஏவப்பட்டுள்ள தாக்குதலைச் சந்திக்க முடியாது என்பதை, உழைக்கும் வர்க்கம் சொந்தமாகவே சிந்திக்கும் தருணமிது. நம்முடைய ஸ்தாபனமும் இந்தக் களத்தில் இறங்கி ஒவ்வொருவரிடமும், `ஒற்றுமைப் பதாகையை உயர்த்திப் பிடிப்போம், பொது செயல்பாடுகளிலும், கூட்டு செயல்பாடுகளிலும், ஒற்றுமைப் பதாகையை உயர்த்திப் பிடிப்போம்,’ என்று கூற வேண்டிய தருணமிது’’ என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும் இத்தகைய புரிதலுடன், “ஒன்றுபடுவோம் – போராடுவோம்’’ என்னும் முழக்கத்துடன் கடந்த ஐம்பதாண்டு காலமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
தொடர்ந்து வந்த அரசாங்கங்களின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டங்களை வளர்த்தெடுப்பதற்கான இடைவிடா முயற்சிகள் மூலமாக, தொழிற்சங்கங்களின் ஐக்கிய கவுன்சில் (UCTU), தேசியப் பிரச்சாரக் குழு (NCC), இந்தியத் தொழிற் சங்கங்களின் நடவடிக்கைக் குழு (Sponsoring Committee), தற்போதைய பதினொன்று மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் சுயேச்சையான தேசிய சம்மேளனங்களின் கூட்டுமேடை போன்ற பல்வேறு மேடைகள் படிப்படியாய்த் தோற்றுவிக்கப்பட்டன. கட்சி இந்நடவடிக்கைகள் அனைத்தையும் முழுமையாக ஆதரித்தது. அதன் செயல்வீரர்கள், இக்காலகட்டம் முழுவதும், பல்வேறு துறைகளிலும் மற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பல்வேறு வேலை நிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின்போதும், தொழிலாளர் களின் ஒற்றுமையை உருவாக்குவதில் முன்னணிப் பாத்திரம் வகித்தனர்.
புதிய சவால்கள்
நாட்டில் கடந்த இருபத்தைந்து ஆண்டு காலமாக நடைபெற்று வரும் நவீன தாராளமய ஆட்சியின் கீழ், உழைக்கும் மக்களுக்கு எதிராக மிகவும் கடுமையான முறையில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. கட்சியின் 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கையானது தொழிலாளர் படைப்பிரிவினரில் பெரும்பகுதியினரை மிகவும் மோசமான விதத்தில் முறைசாராப் பிரிவினராக மாற்றி அமைப்பது அதிகரித்திடும். அவ்வாறான `வளர்ச்சி’ என்றென்றும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். மூலதனம் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக, நிரந்தர வேலைவாய்ப்புகளை கேசுவல் மற்றும் ஒப்பந்தத் தொழில்களாக மாற்றுவதுடன், தொழிலாளர்களின் ஒற்றுமையை சிதைக்கும் மற்றும் சீர்குலைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. கேசுவல், தற்காலிக மற்றும் சுயவேலைவாய்ப்புத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.’’
நன்கு வளர்ந்த பெரிய நிறுவனங்களில்கூட, தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக இப்போது இருந்து வருகிறார்கள். இது, முறைசாரா மற்றும் அணிதிரட்டப்படாத ஊழியர்களையும் சேர்ந்து சுமார் 95 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான தீர்மானம் வலியுறுத்துவதாவது: “இத்தகைய சவால்களை விஞ்சி வெற்றிபெற, பொருத்தமான உத்திகளை உருவாக்க, அணிதிரட்டப்படாத தொழிலாளர்களையும் புரட்சிகர நடவடிக்கைக்குள் ஈர்ப்பதன் மூலம் தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்திடுவோம்.’’
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசாங்கம், இந்திய மற்றும் அயல்நாட்டுக் கார்ப்பரேட்டுகளின் முழு ஆதரவுடனும் ஆட்சியில் அமர்ந்ததைத் தொடர்ந்து, தொழிலாளர் வர்க்கம் கடுமையாகப் போராடிப் பெற்ற பல உரிமைகள் மீது புதிதாகத் தாக்குதல்கள் தொடுக்கப்படுவது தொடங்கி இருக்கிறது. ஆட்சிக்கு வந்த நூறு நாட்களுக்குள்ளேயே, தொழிலாளர் நலச்சட்டங்களில் பல முக்கியமான ஷரத்துக்கள் அரக்கத்தனமான முறையில் திருத்தப்பட்டு வருகின்றன. அதன்மூலம் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெரும்பான்மை தொழிலாளர்களை, தொழிலாளர் நலச்சட்டங்கள் மற்றும் தொழிற்சாலை ஆய்வாளர்களின் வரையறைக்குள் வராது விலக்கி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்தகைய சவால்கள் வலுவாக எதிர்கொள்ளப்பட வேண்டியவைகளாகும். மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் கூட்டுமேடை ஏற்கனவே இதனைக் கையில் எடுத்துக் கொண்டு, இது தொடர்பாக பிரச்சாரங்களையும், போராட்டங்களையும் தொடங்கிவிட்டது. இந்த முக்கியமான போராட்டம் குறித்து கட்சி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தொழிலாளர் வர்க்க இயக்கம் இன்றைய தினம் மிகவும் ஓர் இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தொழிற்சங்க அரங்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியமான கடமைகள் எனக் கட்சியால் அளிக்கப்பட்ட கடமைகளில் பல இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே இருக்கின்றன. தொழிற்சங்க இயக்கத்தில் மேல்மட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஒற்றுமை, கீழ்மட்ட அளவில் இன்னமும் முழுமையாகப் போய்ச் சேர வேண்டிய நிலை இருக்கிறது. தொழிற்சங்க அரங்கில் ஆற்ற வேண்டிய `கடமைகள்’ குறித்து 1967 மற்றும் 1983 ஆவணங்களிலும் மற்றும் கட்சி அமைப்புகள் மற்றும் மாநாடுகள் பலவற்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும் பட்டியலிடப்பட்ட பலவீனங்கள் பல இன்னமும் களையப்படாமலேயே இருக்கின்றன. தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் உணர்வுமட்டத்தை உயர்த்துவதிலும், இக்கடமையை வலுவான முறையில் நிறைவேற்றக் கூடிய விதத்தில் முன்னணி ஊழியர்களைத் தயார் செய்வதிலும் நாம் இன்னும் பின்தங்கியே இருக்கிறோம்.
தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் மக்கள் ஜனநாயக முன்னணியை அமைத்திடுவதற்கான முயற்சிக்கு ஏற்றவகையில், தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் முன்னணிப் பிரிவினரை ஈர்த்திட, இன்னும் ஏராளமான பணிகளைச் செய்ய வேண்டியது இருக்கிறது. இதற்கு, வர்க்கப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதும், தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் உணர்வை மேம்படுத்துவதும் தேவை. இதற்கு, தொழிற்சங்க அரங்கில் ஆற்ற வேண்டிய `கடமைகள்’ ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பலவீனங்கள் களையப்பட வேண்டியதும் அவசியம்.
கட்சியின் 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் வெளியிடப்பட்ட `சில தத்துவார்த்தப் பிரச்சனைகளின் மீதான தீர்மானத்தில்’ குறிப்பிடப்பட்டிருப்பதைப்போல, “தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின்கீழ், இந்திய மக்கள், விடுதலையை எய்திட உறுதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கட்சி என்ற முறையில், இந்தியாவில் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக, அதனால் சுரண்டப்படும் மக்கள் அனைவருக்கும் தலைமையேற்று முன்னேறிச் செல்லக்கூடிய விதத்தில், தொழிலாளர் வர்க்கத்தின் வர்க்க ஒற்றுமையையும், புரட்சிகர உணர்வையும், தொழிலாளர் வர்க்கத்தின் வலிமையையும் உயர்த்த வேண்டியது அவசியம்.”
சுதந்திர இந்தியாவில் மூலதனத்தின் ஆதிக்கமும் திட்டமிடலும்
(தோழர் பி.சுந்தரய்யா நினைவு கருத்தரங்கில் பேரா. சிரஸ்ரீ தாஸ் குப்தா அளித்த கட்டுரையினைத் தழுவியது)
தமிழில் சுருக்கம்: ஆர். எஸ். செண்பகம்
இந்த கருத்துத் தாளில் இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகான முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் 1950 முதல் 1966 வரையிலான காலகட்டத்தில் முதலாளித்துவ ஒருங்கிணைப்பு மற்றும் அதன் பல்வேறு செயல் உத்திகள் பற்றி ஆய்வு செய்யப்படுகிறது; அதே காலகட்டத்தில் சமூக உறவுகளின் கட்டமைப்பில் அது எத்தகைய உறவினைக் கொண்டிருந்தது என்பன போன்ற விஷயங்களும் விவாதிக்கப்படுகின்றன.
அதேபோல இந்திய நாட்டின் வளர்ச்சி குறித்தும், அந்த வளர்ச்சியின் மூலம் அரசாங்கத்திற்கும் இந்திய முதலாளி வர்க்கத்திற்கும் இடை யில் முதல் மூன்று ஐந்தாண்டு திட்டக்காலத்தில் ஏற்பட்ட உறவு குறித்தும் இந்தக் கருத்துத் தாள் குறிப்பிடுகிறது. இப்படி ஏற்பட்ட வளர்ச்சியும் உறவும் எவ்வாறு மிகப்பெரிய நெருக்கடியை முதல் இரு பத்து ஆண்டுகளிலேயே சந்தித்தது என்பதும் நம்முன் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியானது நமது நாடு சர்வதேச அளவில் பிற நாடுகளுடன் வைத்திருந்த வர்த்தக மற்றும் நிதி பரிவர்த்தனைகளில் (அந்நிய) பரிவர்த்தனை பட்டுவாடா நிலுவையாக மாறிப்போனது. இதனுடன் கூடவே மிகப்பெரிய பணவீக்கமும் சேர்ந்து கொண்டது. 1965-66ன் இறுதியில் (shortage of wage goods i.e. shortage of consumer goods i.e. final goods for mass market) நுகர்பொருட்களின் பற்றாக்குறையும் இதனுடன் சேர்ந்து கொண்டது. இந்த நெருக்கடி என்பது மிக ஆழமாக விவாதிக்கப்படுகிறது. அது இந்தியாவில் வளர்ந்து வந்த முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே இருந்த உறவின் தன்மையினை பற்றி தெரிந்து கொள்வதில் முக்கிய வழிகாட்டுதலாக இருந்தது.
மேலும் வரலாற்று, சமூக, பொருளாதார ஆய்வாளர்கள் இந்திய வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யும்போது அதற்கேற்றவாறு காலக்கட்டங்களை பிரித்து எழுதுவர். அதிலிருந்து மாறுபட்டு அரசுக்கும் மூலதனத்திற்கும் உள்ள 1947க்கும் 1967க்கும் இடைப்பட்ட காலத்தை 1947 முதல் 1956 வரை (திட்டமிடல்) என்றும், 1956 முதல் 1966 வரை (பாதுகாத்தல்) என்றும் இரு வேறு குறிப்பிட்ட கட்டங்களாக இந்தக் கட்டுரையின் கட்டுரையாளர் பிரித்துள்ளார். இந்த முறையில் காலக்கட்டங்கள் பிரிப்பதற்கான அவசியம் என்னவென்றால், முதல் பத்தாண்டுகளில் அரசாங்கத்தின் கொள்கைகள் தாராளமயத்தை மையமாகக் கொண்டிருந்தது. அதே நேரம் அரசு தலைமையிலான குறிப்பிடப்பட்ட திட்ட வளர்ச்சியினை (Indicative Planning) ஐ மையமாகக் கொண்டு அரசு நிறுவனங்கள் இரண்டாவது பத்தாண்டுகளில் உருவாக்கப்பட்டன.
அதே போல, முதலில் தாராளவாதக் கொள்கைகளுடன் செயல்பட்டு வந்த அரசு தன்னுடைய நிலையில் இருந்து மாறி, நேரடி தலையீட்டுக் கொள்கைகள் மற்றும் திட்டங்களுடன் செயல்படத் தொடங்கியது என்ற மிக முக்கியமான விவாதத்தினை இந்த கருத்துத் தாள் நம் முன்னே வைக்கிறது. இந்த மாற்றம் என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் பெரும் ஆதரவுடன் நடைபெற்றது என்பதையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. எனவே இந்த மிக முக்கியமான காலக்கட்டங்களில் நிகழ்ந்தவற்றை ஆய்வு செய்து நம்முன்னே விஷயங்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அவ்வாறு தொகுக்கப்படும் போது இந்தக் கட்டுரையாளர் தன்னுடைய கருத்துக்களுக்கு ஆதாரமாக பல்வேறு ஆய்வாளர்களை, அவர்களது நூல்களை, அந்த நூல்களின் காலக்கட்டங்களை, அரசாங்க புள்ளி விவரங்களை, அமைப்புகளின் அறிக்கைகளை, நாடாளுமன்றப் பதிவுகளை மேற்கோளிட்டு காட்டியுள்ளார். இந்தக் கட்டுரையில் மூன்று பாகங்கள் உள்ளன. முதல் பாகம் நாட்டின் முன்னேற்றம் என்பது அரசு தலைமையேற்று நடத்துவது என்பதே தனக்குப் பாதுகாப்பானது என்ற புரிந்துணர்வுடன் அந்தப் புரிந்துணர்வின் அடிப்படையில் முதலாளித்துவம் தனக்குள்ளேயே ஒரு கருத்தொற்றுமைக்கு வந்ததை விளக்குகிறது.
இரண்டாவது பாகம் 1947ம் ஆண்டில் இருந்து முதல் ஐந்தாண்டு திட்டத்தின் இறுதிப் பகுதியான 1956ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத் தில் அரசிற்கும் மூலதனத்திற்கும் இடையில் இருந்த உறவு பற்றிய ஆய்வாக அமைகிறது.
மூன்றாவது பாகம் 1956க்கும் 1966க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தின் ஆய்வாக அமைகிறது. இந்தக் காலக்கட்டத்தில் நேரு மஹாலா னோபிஸ் மாதிரித் திட்டத்தின் நகல் வடிவத்தில் Indicative Planning என்பதை மையமாகக் கொண்டு அரசின் செயல்பாடுகள் எவ்வாறு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டன என்பது குறித்து இந்தக் கருத்துத் தாள் விளக்குகிறது.
பாகம் 1
அரசு தலைமையில் வளர்ச்சி என்பதில் கருத்தொற்றுமை
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே இரண்டாம் உலகப் போரின் காரணமாகவும், இந்தியாவில் நடைபெற்ற பெரிய அளவிலான இந்திய தேசிய சுதந்திரப் போராட்டத்தின் காரணமாகவும் காலனிய முதாலாளித்துவ மூலதனம் பலவீனமடையத் தொடங்கிவிட்டது. ஆனால், இந்தக் காலக்கட்டம் இந்திய முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு மிகச் சரியான சந்தர்ப்பமாக அமைந்தது. அவர்கள் இந்த சந்தர்ப்பத்தினை தங்களுடைய வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும், பல்வேறு துறைகளில் கால்பதிப்பதற்குமான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டனர். 1947ல் தனியார் தொழில் மூலதனம் என்பது இந்தியாவில் அதிக லாபத்துடன் வளர்ச்சி பெற்றது. அதே நேரம் இந்தியச் சமுதாயம் போர் மற்றும் பிரிவினையின் தழும்புகளுடன் இருந்தது. அதனால் பொருளாதாரம் சரிவினை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பணவீக்க விகிதம் மிகக் கடுமையாக இருந்தது.
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை என்பது நாட்டு மக்களை மிகக் கடுமையாகப் பாதித்தது. பல துன்பங்களுக்கு உள்ளாக்கியது. மக்கள் தங்கள் இடங்களை விட்டு புலம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே நிலைமை உருவாகிக் கொண்டிருக்கும் முதலாளிகளுக்கும் வேறுவகையில் ஏற்பட்டது. ஆனால், அவர்கள் இதையும் தங்கள் லாபத்தினை பெருக்குவதற்கு ஏதுவாகப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் வளர்ச்சியினை பார்த்துக் கொண்டார்கள். உதாரணமாக ரான்பாக்சியின் ஸ்தாபகரான பாய் மோகன் சிங்கின் வரலாற்றை எடுத்துக் கொள்ளலாம். அவருடைய அப்பா பாய் கியான் சந்த் ஒரு நிலக் கிழாரும் வட்டிக்குக் கடன் கொடுப்பவருமாவார். அவர் ராவல்பிண்டியில் இரண்டாம் உலகப் போரின் போது அரசாங்கக் காண்ட்ராக்டராக உருமாறி போர் முகாம்கள் கட்டுவது, சிறைக் கூடங்கள் கட்டுவது மற்றும் அஸ்ஸாமில் இருந்து ரங்கூனுக்கு நெடுஞ்சாலை போடுவது, விமான தளங்கள் அமைப்பது என தன்னுடைய செல்வத்தை பெருக்கிக் கொண்டார். பிரிவினையின் போது அப்போதிருந்த பாகிஸ்தான் அரசிற்கு பிரதிக்கிரய வரியாக ரூ. 5 கோடியினை செலுத்திவிட்டு ஒரு விமானத்தின் மூலம் இந்தியா வந்து இம்பீரியல் ஹோட்டலில் தங்கிய குடும்பம் தான் பாய் மோகன் சிங்கின் குடும்பம். மீண்டும் வட்டிக்குக் கடன் கொடுக்கத் துவங்கியது அந்தக் குடும்பம். பிருத்விராஜ் ரோட்டில் ஏராளமான பங்களாக்களை முதன் முதலில் கட்டியதும் இவர்கள் தான். பிற்காலத்தில் மருந்து விற்பனை மற்றும் உற்பத்தியிலும் முன்னணி நிலைக்கு வந்தது. எனவே, பிரிவினையைக் கூட சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு முதலாளித்துவம் வளர்ச்சி கண்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
சுதந்திரத்தின் போது, தேச வளர்ச்சிக்கு தொழில் வளர்ச்சி என்பது மிகவும் அவசியமானது என்று உணரப்பட்டது. அதே வேளையில் இந்திய நாட்டு வர்த்தக முதலாளிகளின் நலன்களுக்கு பங்கம் வந்துவிடாமலும் இந்த வளர்ச்சி அமைய வேண்டும் என்று இந்திய முதலாளி வர்க்கம் நினைத்தது. முக்கியத் துறைகளான கனரகத் தொழில் மற்றும் உள்நாட்டுக் கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்ய அதிக நிதி பலம் தேவைப்படும் என்பதாலும், அப்படி முதலீடு செய்யும்போது தேவையான உடனடி லாபம் என்பது ஈட்டப்பட முடியாது என்பதாலும், இந்திய முதலாளி வர்க்கம் இதில் முதலீடு செய்யத் தயாராக இல்லை. ஏதேனும் ஒரு வகையில் பொருளாதாரத்தில் ஆபத்தினையும், கட்டுப்பாட்டினையும் சந்திக்கத் தயக்கம் காட்டினர்; ஏனெனில் அது தென்கொரியாவில் நிகழ்ந்ததைப் போன்று அரசு வழிகாட்டலுடன் கூடிய நவீன வர்த்தகமுறை என்ற கட்டுப்பாட்டு முறைக்குள் அகப்பட்டுவிடக்கூடிய சூழல் ஏற்பட்டு விடும் என்று இந்திய முதலாளிகள் நினைத்தனர்.
அதே நேரத்தில், சுதந்திர இந்திய அரசினை முதலாளி வர்க்கம் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அவர்களின் அரசியல் அந்தஸ்து இருந்தது. சுதந்திர இந்திய அரசை மூலதனச் சேர்க்கைக்கான தளமாகப் பார்த்தது. அரசு-சமூக உறவுகளின் எழுந்து வரும் கட்டமைப்பிற்குள் மூலதன விரிவாக்கத்தை வேகப்படுவதாகவும் அதே நேரத்தில் தனிநபரின் சொத்துரிமை மற்றும் மூலதனத் திரட்டலுக்கு உதவும் சமூக வாழ்முறைகளின் புனிதமும் உறுதி செய்யப்படுகிறது. இதற்கு அப்போதைய இந்தியத் தொழில் வர்த்தகச் சபைகளின் கூட்டமைப்பும் ஆதரவளித்தது.
நேருவின் நவீன சமூகத்தைக் கட்டுவதற்கான பார்வை மற்றும் அதன் வளர்ச்சிக்கான செயல் திட்டம் என்பது அரசு முதலாளித்துவத்தை வளர்ப்பதாக இருந்தது.
இவ்வாறு அரசு தலைமையில் முதலாளித்துவம் என்பது மிக அருமையாக இந்திய தேசிய அரசு உருவானதில் வேர்விட்டிருந்தது. அப்போதிருந்த அரசியல் தலைமையில் மிகப் பெரும்பான்மையினக்கு சுதந்திரம் என்பது வெளிநாட்டு மூலதனம் மற்றும் சரக்குகளின் ஆதிக்கத்திலிருந்து கிடைத்த சுதந்திரமாகத் தெரிந்தது. சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கான கட்ட மைப்புகளை வளர்த்தெடுப்பது என்பது சுதந்திர இந்திய அரசின் கடமையாக பணிக்கப்பட்டது. உள்நாட்டு கட்டுமான வசதிகளை உருவாக்கிப் பலப்படுத்துவது, பொருளாதாரத்தை பலப்படுத்த அடிப்படைத் தேவையான உற்பத்தித்துறையை பலப்படுத்துவது, புதிய நிதி நிறுவனங்களை உருவாக்குவது, அவற்றின் நிதிச் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவது மற்றும் ஒருங்கிணைப்பது ஆகியவையே அரசின் மிக முக்கியப் பணியாக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய முதலாளி வர்க்கம் வர்த்தகம் மற்றும் தொழில் துறைகளின் மூலம் பெறப்படக்கூடிய லாபம் உத்தரவாதம் செய்யப்பட்டதில் மிகவும் திருப்தியுடனே இருந்தது. ஆனாலும், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் சோசலிஸ்டுகள் எப்போதுமே முதலாளித்துவ வர்க்கத்தின் சுயநலனை எதிர்ப்பவர்கள் என்பதால், இந்திய முதலாளிகள் – ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கமும் அவர்கள் எந்த இடத்திலும் தலையெடுத்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருந்தனர்.
இதற்கெல்லாம் பொதுநலம் பாதுகாக்கப்படு வது என்ற பெயரில் வர்க்க முரண்பாடுகள் தலையெடுத்துவிடாமல் தடுப்பதற்காக அரசு இயந்திரத்தின் சட்டம் ஒழுங்கு பயன்படுத்தப்பட் டது. அதே போல வறுமையை ஒழிப்பதற்கான எந்த நேரடி நடவடிக்கைகளும் முன்னுரிமை கடமையாக அரசாங்கத்தால் எடுக்கப்பட வில்லை. மாறாக சொட்டுச் சொட்டாக பலன் கள் கீழ் மட்டத்திற்குச் சென்றடையும் என்ற (TRICKLE DOWN THEORY) கோட்பாடு கோலோச்சியது. இதுதான் பொருளாதார நீதி மற்றும் உறுதித்தன்மை என்று சொல்லிக் கொள்ளப்பட்டது. ஆதிக்கம் செலுத்தும் மதிப்புகள் மற்றும் விதிகளை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு ஏற்ற வகையில் சட்டப்பூர்வமான கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டன. இந்தியா சுதந்திரம் அடைந்து 4 மாதங்கள் கழித்து நடைபெற்ற இந்தியத் தொழில் மற்றும் வர்த்தக சபையின் கூட்டத்தில் நேரு பேசும்போது இருக்கிற சொத்துக்களை நியாயமான முறையில் மறுவிநியோகம் செய்யும் முயற்சிகள் மனதில் கொள்ளப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அது உற்பத்தி, முதலீடு மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் புதிய தாராளமயவாதத்தின் விரிவான அதிகார வர்க்க கட்டுப்பாட்டினை விளக்கியது. ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி இறக்குமதிக்கான முதலீடு மற்றும் உற்பத்திக்கான செலவை சரிகட்ட முடியும் என்றும் கணக்கிட்டது.
இந்திய முதலாளித்துவம் கலப்புப் பொருளாதாரம் குறித்து பல்வேறு கருத்துக்களை கொண்டிருந்தது. (கலப்புப் பொருளாதாரம் என்பது மிகச் சுதந்திரமான தனியார் கம்பெனிகளும் நாட்டில் இருக்கும். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறைகளும் இருக்கும். அதாவது அடிப்படையான கனரகத் தொழில்களிலும் இராணுவத் துறையிலும் பொதுத்துறைகளே இருக்கும். அதே போல மிக அதிமான மூலதன முதலீடு தேவைப்படும் பெரிய தொழில் துறைகளிலும் பொதுத்துறைகளே இருக்கும். தேசியமயமாக்கல் என்பது முக்கியத் துறைகளில் மட்டும் இருந்து கொள்ளலாம். அதே நேரம் இந்தத் தேசியமயமாக்கல் என்பது சோஷலிசமாகப் பொருள் கொள்ளப்படக் கூடாது) இந்திய நாட்டில் இருந்த அந்நிய முதலாளிகளையும் இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பின் சில குறிப்பிட்ட நபர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் Associated Chambers of Commerce கல்கத்தா அமைப்பு ஒரு பாதுகாப்பின்மை இந்தக் கலப்புப் பொருளாதார அமைப்பு முறையில் இருப்பதாக தெரிவித்தது. நேரு டிசம்பர் 18,1947ல் சுதந்திரத்திற்குப் பிந்தைய முதல் தொழில்துறை மாநாட்டில் தனியார் நிறுவனங்களின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படும் என்றும், அந்நிய நிறுவனங்கள் வேறுபடுத்திப் பார்க்கப்படாது என்றும் உறுதியளித்தார்.
இதனால் இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தனர். இதுவே தேசிய திட்டக்குழுவின் அறிக்கையிலும் பிரதிபலித்தது. இந்தியத் தொழில் முதலாளித்துவ வர்க்கத்திற்கு அரசாங்கத்தின் ஆதரவும் பாதுகாப்பும் – அதன் மூலதனச் சேர்க்கைக்கும் சரி, அதன் நலனை பாதுகாத்துக் கொள்ளவும் சரி, – தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருந்தது. 1954 முதல் 1959 வரை நடைபெற்ற அனைத்திந்திய இந்தியத் தொழில் முதலாளிகளின் அமைப்பின் ஆண்டுப் பேரவைகளிலும், அறிக்கையிலும் அவர்களுடைய நலனில் அக்கறையுள்ள பல விஷயங்கள் இந்தியத் தொழிலாளர்களை ஒழுங்குபடுத்துவது உட்பட உள்ள பல அம்சங்களை அமல்படுத்துவதற்கான வரையறைகளை தீர்மானிக்கும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
திரட்டப்பட்ட மூலதனம் மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்களின் நலவிரும்பிகளின் ஊடுருவல் என்பது அரசுத்துறைகளில், அரசமைப்புகளில், அரசுக் குழுக்களில், சபைகளில், கமிஷன்களில், நாடாளுமன்றத்தில், அரசியல் நடவடிக்கைகளில் நேரடியாகத் தலையிடும் அளவிற்கு இருந்தது. இந்திய முதலாளித்துவ வர்க்கம் இந்தியத் தொழிலாளர்களை விட அதிகமாக நேரடியாக இல்லாவிட்டாலும் கட்சி நடவடிக்கைகளிலும், அதிகாரம் செலுத்தும் நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. இனி மூலதனத் திரட்டலுடன் தொழிலாளருடன் மோதுகின்ற பின்னணியில் மூலதனம் எவ்வாறு அரசியல் ரீதியாக அணிதிரண்டது என்பது பற்றியும் அது எப்படி இந்த கால கட்டத்தில் அரசியலில் ஒரு வர்க்க மாக அணி திரட்டிக் கொண்டது என்பதையும் பார்ப்போம்.
பாகம் 2
அரசும் மூலதனமும் 1947 முதல் 1956 வரை
அரசு முதலாளித்துவத்தை ஊட்டி வளர்த்த அதே நேரத்தில் இந்தியாவில் இருக்கும் சொத்துரிமை அமைப்பு தொடர உத்தரவாதப்படுத்திக் கொண்டே இருந்தது. சுதந்திரச் சந்தை நன்றாக செயல்பட வேண்டுமென்பதும் உத்தரவாதப்படுத்தப்பட்டது. இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக இறக்குமதிக்கு மாற்றான ஒரு கொள்கை அல்லது திட்டம் முறையாக அமலாக்கப்படவில்லை. உடைமை வர்க்கத்தின் நலன்கள் பறிக்கப்படாமல் பாதுகாப்பதற்கான பல்வேறு அம்சங்கள் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் புகுத்தப்பட்டன.
1948ம் ஆண்டு தொழிற்கொள்கையின் கீழ் கேந்திரமான துறைகளான இராணுவமும் தகவல் தொடர்பும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. இந்தத் தொழிற்கொள்கையின் கீழ் மூன்று துறைகள் அரசுத் துறைகளாகவும், 6 துறைகள் பொதுத்துறையின் கீழும் வைக்கப்பட்டன. இவற்றைத் தவிர, வேறு எந்த நிறுவனங்களும் தேசியமயமாக்கப்படாது என்று உத்தரவாதமளிக்கப்பட்டது. மேலும் அப்போதிருந்த தனியார் தொழில் நிறுவனங்களை குறைந்தபட்சம் இன்னும் 10 வருடங்களுக்காவது அரசுடைமையாக்காது என்று மிகத் தெளிவாக உத்தரவாதமளித்தது. முதல் 5 ஆண்டுத் திட்டமும் கூட புதிதாகத் துவங்கப்படும் நிறுவனங்களும் 10 வருடங்களுக்கு அரசு கையகப்படுத்தாமல் இருக்கும் என்பதை தெளிவுபடுத்தியது. அப்போது இந்தியாவில் இருந்த அன்னிய நிறுவனங்களுக்கு இந்திய நிறுவனங்களுக்குரிய அத்தனை சலுகைகளுடனும் செயல்படலாம் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டது. நிறுவன முகவாண்மை அமைப்புகளின் மூலம் வர்த்தக நிறுவனங்களின் மேல் உள்நாட்டு வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் செலுத்திய ஆதிக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை உடைக்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, முக்கியமான பிரிட்டிஷ் வர்த்தகக் குழுமங்களுடன் மேலும் இந்தியாவில் முதலீடு செய்யப்பட வேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
1955 டிசம்பர் 31ம் தேதி வெளியான ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரத்தின் படி, அந்நியக் கம்பெனிகளின் கிளைகளில் 18.1 சதமானம் அந்நிய முதலீடும், அந்நிய மூலதனக் கட்டுப்பாட் டின் கீழ் இருந்த நிறுவனங்களில் 70.8 சதமானமும், இந்தியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நிறுவனங்களில் 10 சதமானமும் அந்நிய முதலீடு இருந்தது. அப்போதைய மதிப்பீட்டின் படி ரூ. 4112 மில்லியன்கள் அந்நிய முதலீடு என்பது இந்தியாவிற்குள் (1 மில்லியன் என்பது 10 லட்சம்) இருந்தது. 1955ம் ஆண்டு தேசிய கணக்குப் புள்ளி விவரத்தின்படி இந்தத் தொகை அன்றைய இந்தியப் பொருளாதாரத்தில் இருந்த மொத்த மூலதனச் சேர்க்கையில் 38.7 சதமாகும். அந்தக் காலக்கட்டத்தில் நிறுவனங்களின் லாபப் பங்கு விகிதம் என்பது அந்நிய மற்றும் இந்திய முதலீட்டாளர்களிடையே 15.9 : 1 என்ற விகிதாச் சாரத்தில் இருந்தது.
1949ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி நேரு அந்நிய முதலீடு குறித்து வெளியிட்ட அறிக்கையில் அந்நிய முதலீட்டாளர்களுக்கு அவர்களுடைய முதலீடு இந்திய முதலீட்டிற்கு சமானமாகப் பாவிக்கப்படும் என்ற உத்தரவாதத்தினை அளித்திருந்தார். சுதந்திரத்திற்கு முன்பும் சரி பின்பும் சரி சுதேசி பற்றிய பேச்சையே எடுக்காத இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு இதனை பலமாக எதிர்த்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்ததைவிடவும் மிகவும் தாராளமான அணுகுமுறை என்பது அந்நிய முதலாளிகளுக்கும் தனியார்துறைகளும் சுதந்திர இந்தியாவில் நேருவின் தலைமையின் கீழ் வழங்கப்பட்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
1948ம் ஆண்டு நடைபெற்ற தெலுங்கானா விவசாயிகளின் போராட்டம், 1946ம் ஆண்டு நடைபெற்ற தேபாகா இயக்கம் போன்ற பல்வேறு அரசியல் ரீதியான தாக்கங்கள் இருந்த பிறகும் முழுமையான நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்பதில் இருந்து அரசாங்கம் பின்வாங்கியது. நிலச் சீர்திருத்தம் என்பதற்கான முழுமையான பலனோ பொருளோ அரசாங்கத்தால் உத்தரவாதப்படுத்தப்படவில்லை. மாறாக 1950 ஆண்டு வரையிலும் முக்கியமான பல்வேறு அரசியலமைப்பு ஏற்பாடுகளின் மூலம் முதலாளித்துவ சொத்துரிமை அதாவது நிலச்சுவான்தார்களின் சொத்துரிமைகள் பாதுகாக்கப்பட்டனவே தவிர விவசாய உற்பத்தி உறவுகளை மாற்றுவதில் அரசுக்குப் போதுமான அக்கறை இல்லை. விருப்பமும் இல்லை. நிலக்குத்தகைக்கான சீர்திருத்த நடவடிக்கைகள் ஒரு சில இடங்களில் அமலாக்கப்பட்டாலும் நில உச்சவரம்பு சட்டங்கள் நீர்த்த வடிவத்திலேயே இயற்றப்பட்டது. அரசிற்கும் பயிரீட்டாளர்களுக்கும் இடையிலான இடைத்தரகர்களை ஒழிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதாவது ஜமீந்தாரி முறையும் ஜாகிர்தாரி முறையும் ஒழிக்கப்பட்டது. ஆனாலும், அவர்களுக்கு நிலத்தின் மீதான உரிமை ஏதேனும் ஒரு வகையில் உத்தரவாதப்படுத்தப்பட்டது. நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது.
நிலம் என்பது பொருளாக்கப்பட்டது. பயிர்கள் சந்தைமயமாக்கப்பட்டன. சக்தி வாய்ந்த இடைத்தரகர்கள் மற்றும் நிலச்சுவான்தார்கள் அதிக பண பலத்துடன் இந்தியாவின் பல பகுதிகளில் வளர்ந்து வந்தனர். அரசாங்கத்தின் ஆதரவுடன் இவர்களின் வளர்ச்சி உத்தரவாதப்படுத்தப்பட்டது. விவசாய உறவுகளில் சாதி கோலோச்சியது. உதாரணமாக ஒரு நபர் நில உடைமையாளராக இருப்பதோ அல்லது நிலத்தின் மீதான கட்டுப்பாடு இருப்பது என்பதோ அவர் சார்ந்த சாதியைப் பொறுத்து அமைந்தது. சாதியும் வர்க்கமும் மிக நெருக்கமான உறவு கொண்டிருந்தன. ஒன்றையொன்று உத்தரவாதப்படுத்திக் கொண்டன.
முதல் ஐந்தாண்டுத் திட்டம் என்பது நீர்ப் பாசனம் மற்றும் மின்சார விநியோகத்தினை பலப்படுத்த ஏதுவாக போடப்பட்டது. முதல் ஐந்தாண்டுத் திட்டம் என்பது ஹாரட் டோமர் மாதிரியை பின்பற்றி போடப்பட்டது. (ஹாரட் டோமர் மாதிரி என்பது மூலதனச் சேர்க்கைக் கான முதலீடு பற்றியது. உற்பத்திக்கு மூலதனம் அவசியம், மூலதனம் முதலீட்டின் மூலம் கிடைக்கும் அதிகமான மூலதனச் சேர்க்கை அதிக வளர்ச்சியை உத்தரவாதப்படுத்தும்) அரசின் பட்ஜெட் என்பது பிரிவினையின் தாக்கத்தை பிரதிபலித்தது. மேலும் அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம் கொடுப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் இருந்தது. நாட்டின் பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையில் இருந்தாலும், மூலதனம் மட்டும் தடையில்லாமல் தன்னுடைய வளர்ச்சியை உறுதிப்படுத்திக் கொண்டே இருந்தது. ஆழப்படுத்திக் கொண்டது. பல துறைகளில் தன்னை வேரூன்றி விரிவுபடுத்திக் கொண்டது.
பழைய துறைகளான சிமெண்ட், ஸ்டீல், பேப்பர் மற்றும் சீனி போன்ற தொழில் துறைகள் ஆழமான வளர்ச்சியை கண்டன. தையல் மிஷின், டீசல் என்ஜின், சைக்கிள் போன்ற புதிய துறைகள் பரவலாக விரிவடைந்தன. முதல் பத்தாண்டுகளில் நுகர்வோருக்கான முக்கியமான தொழில் துறைகள் பலமடைந்தன. அரசின் கொள்கை தொழில்மயமாக்கலை லைசன்ஸ் வழங்கும் கொள்கை மூலமாகவும் ஆதரித்து வளர்த்து வந்தது. இந்தியச் சந்தைக்குள் நுழைவதற்கு என்று சில கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் வாடகை மற்றும் குத்தகைப் பணங்கள் கிடைப்பதை இந்திய முதலாளிகள் உத்தரவாதப்படுத்திக் கொண்டனர். ஐ.டி.ஆர்.ஏ. (தொழில்துறை அபி விருத்தி மற்றும் ஒழுங்கமைப்புச் சட்டம் ((IDRA Act)) என்பது தனியார் துறையில் முதலீட்டினை ஒழுங்குபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது. தனியார் மூலதனப் பொருளாதார நடவடிக்கைகளில் தலையிடுவதற்கு அரசாங்கத்திற்கான சட்ட வடிவம்) பதிவுகளின் படி 1952 முதல் 1955 வரை லைசன்சுகளை பெறுவதற்காக 1440 மனுக்கள் பெறப்பட்டு இதில் 363 புதிய திட்டங்களுக்கும், 657 விரிவாக்கத் திட்டங்களுக்கும், 122 அமைப்பு மாற்றங்களுக்கும் லைசன்சுகள் வழங்கப்பட்டது. லைசன்சின் முக்கியத்துவம் உணரப்படாமல் வெறுமனே வாடகை மற்றும் குத்தகை பெறு வதற்கான கருவியாக லைசன்ஸ் பயன்படுத்தப்பட்டது என்பதை ஹசாரி அறிக்கை வெளிக் கொணர்ந்தது. (ஹசாரி அறிக்கை 1967 என்பது தொழில்துறையில் லைசன்ஸ் வழங்குவது குறித்து சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் வாயிலாக தொழில் துறையில் லைசென்ஸ் முறையாக வழங்கப்படவில்லை என்பதும், முதலில் வந்தவர்க்கு முதலில் என்று வழங்கப்பட்டுள்ளது என்பதும், வழங்கப்பட்ட பின்பு சரியான கண்காணிப்பு இல்லை என்பதும், அது அந்நிய நிறுவனங்களுக்கு இந்தியாவில் வணிகம் செய்ய ஒரு பாஸ்போர்ட் மாதிரி பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதும் தெரிய வந்தது)
எனவே, இந்தக் காலக்கட்டத்தில் வளர்ச்சிக்கான திட்டமிடலாக அரசின் செயல்பாடுகள் இருக்கும் என்று கூறப்பட்டாலும், சுதந்திரச் சந்தை என்பது தான் முதலீடுகள் தொடர்பாக பின்பற்றப்பட்டது என்பதனை புள்ளிவிவரங்களும் அறிக்கைகளும் ஊர்ஜிதப்படுத்துகின்றன. உள்நாட்டு மற்றும் அந்நிய மூலதனங்களை பொறுத்த வரையில் அரசு மற்றும் மூலதனத்திற்கிடையேயான உறவு என்பது தாராளவாதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஆனாலும், பொருளாதாரத்தைப் பொறுத்த வரையில் மூலதனச் சேர்க்கை என்பதில் அப்படி ஒன்றும் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்திவிடவில்லை. மொத்த உள் நாட்டு உற்பத்தியில் மூலதனச் சேர்க்கை என்பது 12 முதல் 17 சதம் மட்டுமே. எனவே, தாராளவாதம் என்பது முதலாளித்துவச் சொத்துரிமையையும் சொத்து உறவுகளையும் பாதுகாப்பதைத்தான் உத்தரவாதப்படுத்தியது. அதே போல வெளிநாட்டு மூலதனம் இந்திய பொருளாதாரத்துடன் கொண்டிருந்த நேரடி தொடர்பினை மற்றும் முயற்சிகள் 1960களின் இடைக்காலம் வரை நடைபெற்றது. இருந்த போதும் குறிப்பிடத்தகுந்த மாற்றம் என்பது 1966க்கும் 1980க்கும் இடையில்தான் இருந்தது.
பாகம் -3
அரசும் மூலதனமும் -1956 முதல் 1966 வரை
1956ம் ஆண்டில், இரண்டாவது தொழிற் கொள்கையை இயற்றி, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தினை அமலாக்கும்போது பெல்ட் மேன்-மஹாலானோபிஸ் மாதிரியை பின்பற்றியது. (இது சோவியத் பொருளாதார நிபுணர் ஜி.ஏ. பெல்ட்மேன் 1928ல் உருவாக்கியது. இத்துடன் இந்திய புள்ளியியல் நிபுணர் பிரசந்த சந்த்ர மஹாலானோபிஸ் 1953ல் தன்னுடைய கருத்துக்களை இணைத்து உருவாக்கியது. இந்த மாதிரியின் படி தொழில்துறை முதலீடு என்பது உள்நாட்டு நுகர்பொருள் தொழில் துறைகளை உருவாக்குவதை நோக்கி நகர வேண்டும் என்பதுதான் முக்கிய அம்சம். அதாவது நுகர்வினை அதிகப்படுத்தும் வகையிலும், முதன்மைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும். தொழில்மயமாக்கலின் முதலீடு இந்தத் திசை வழியில் இருக்க வேண்டும் என்பது). எனவே, இதற்கு முந்தைய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது பொருளாதாரத்தின் உற்பத்தி அடிப்படையினை வலுப்படுத்துவது, புதிய நிதி நிறுவனங்களை உருவாக்குவது மற்றும் பொருளாதார செயல்பாட்டினை கட்டுப்படுத்தி ஒருங்கிணைப்பது என்பது இக்கொள்கையின் உள்ளடக்கமாக இருந்தது. இது ஒரு மாறுபட்ட தோற்றமாகும்.
அரசு என்பது சேமிப்பினை அதிகப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அப்படி அதிகரிக்கப்படும் சேமிப்புகளை பயன்படுத்தி கனரகத் தொழில்களில் குறிப்பாக இயந்திரங்களின் கருவிகளை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன் காரணமாக சர்வதேச மூலதனச் சந்தையை நம்பி சார்ந்திருப்பது கைவிடப்பட வேண்டும் என்றும், சர்வதேசப் பொருட்களை சார்ந்திருக்கக்கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதுதான் முதலாளித்துவத்தையே கூட வளர்த்தெடுக்க அவசியமானது என்று அனுமானிக்கப்பட்டது. இது தான் நேருவின் கொள்கை திட்டமிடலாகவும் இருந்தது. அதே போல அரசு என்பது செலவினங்களை அதிகரித்து உள்நாட்டுச் சந்தையை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அது அரசின் பொறுப்பு என்றும் முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக காலனியாதிக்கக் காலத்தில் இருந்து நுகர்பொருட்களில் (wage-goods constraint) இருந்த தட்டுப்பாடு என்பது நீக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தப்பட்டது. எனவே, பல்வறு வகையான முறைகளும் உத்திகளும் விடுதலைக்குப் பின் நாட்டிற்கு பொருத்தமான மூலதனச் சேமிப்பிற்கும் நுகர் பொருட்கள் உற்பத்திக்கான முதலீட்டிற்கும் கையாளப்பட்டன. அதேநேரம் சமூகக் கட்டுப்பாட்டை உத்தரவாதப்படுத்தும் மற்றும் இருக்கின்ற சொத்துரிமை உறவுகளை குறிப்பாக நிலஉரிமை உறவுகளை பாதுகாப்பதும் ஆகிய மிக முக்கியமான அரசின் பங்கு தொடரப்பட்டது. இதற்கு மிக முக்கியமான ஆதாரம் நிலச் சீர்திருத்தத்தை அமலாக்குவதில் அரசிற்கு இருந்த ஆர்வமின்மை. பல மாநிலங்களில் நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் அமலாக்கப்பட்ட பிறகும் மத்திய அரசாங்கம் இதில் போதிய அக்கறையை காட்டவில்லை, எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை. இது அரசு தலையிடாதிருக்கும் முக்கிய துறையாகும்.
அரசாங்கம் தொழில் உறவுகளில் பல்வேறு சிக்கல்களை சந்தித்தது. அனைத்திந்திய தொழில்துறை முதலாளிகளின் அமைப்பு தொழில் தகராறு கொள்கை அமலாக்கப்பட்திலும் கம்பெனிகள் சட்டம் அமலாக்கப்பட்டதிலும் மிகவும் வருத்தமடைந்தது. ஆனால், அமைப்பு ரீதியாகத் திரண்ட தொழிலாளர்களையும் உள்ளடக்கி அரசு செயல்பட வேண்டியிருந்ததாலும், வளர்ந்து வந்த தொழிற்சங்க இயக்கங்களாலும் அவர்களால் இந்தச் சட்டத்தின் அமலாக்கத்தில் எதையும் செய்ய முடியவில்லை. எனவே அரசு என்பது ஆதிக்க சக்திகள் மற்றும் வர்க்கப் பிளவுகளுக்கும் இடையில் இருந்த முரண்பாடுகளை களைய வேண்டியதாகவும், அவர்களுடைய பல்வேறு வகைப்பட்ட நலன்களை உத்தரவாதப்படுத்த வேண்டிய நிலையிலும், அவர்கள் ஒரு வருக்கொருவர் உதவக்கூடிய வகையில் அவர்களது உறவு முறையை பராமரிக்க வேண்டிய இடத்திலும் இருந்தது.
இரண்டாவது திட்டத்தில் இரண்டு புதிய தலையீடுகள் இருந்தன. முதலாவதாக ஏற்கனவே குறிப்பிட்ட Indicative Planning மற்றும் லைசென்சிங் முறை என்பது முக்கியமான ஆதாரங்களை அதாவது சேமிப்புகளை மற்றும் அந்நியச் செலாவணிகளை முதலீடு செய்வதில் தலையீடு செய்தது. இரண்டாவதாக, இந்திய மூலதனத்தின் பாதுகாப்பு என்பது சுங்க வரிகளை போடுவது மற்றும் போடாமலிருப்பது போன்ற வரையறைகளின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டது. கம்பெனிகள் சட்டம் 1956ன் கீழ் பன்னாட்டு கார்ப்பரேஷன் நிறுவனங்களில் மற்றும் துணை நிறுவனங்களில் உள்ள பன்னாட்டு மூலதனத்தை இந்திய மூலதனத்தில் இருந்து வேறுபடுத்திப் பார்க்காமல் இந்திய மூலதனங்களுக்குள்ள அத்தனை சலுகைகளோடும் பாவிப்பது என்ற முறையின் மூலம் சக்திவாய்ந்த பன்னாட்டு நிதி மூலதனத்தை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது என்ற நடவடிக்கையும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது.
அதேபோல இறக்குமதிக்குப் பதில் தொழில்மயமாக்கல் Import Substitution Industrialisation (ISI) என்பதில் சுங்கவரியை தீர்மானிப்பதிலும் இறக்கு மதிக்கான கட்டுப்பாடுகளை நிர்ணயிப்பதிலும் கூட பெருமுதலாளிகளின் நலன்கள் பாதுகாப்பது என்பது உத்தரவாதப்படுத்தப்பட்டது. மூலதனத்தின் விரிவாக்கத்தை உத்தரவாதப்படுத்துவதற்காக பொது முதலீடு என்பது போக்குவரத்து, தகவல் தொடர்பு, நீர்ப்பாசனம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான திட்டங்களில் ஊக்கப்படுத்தப்பட்டது.
இவ்வாறாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கம் வளர்ச்சிக்கான முதலாளித் துவப் பாதையை கலப்புப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு அமல்படுத்தியது. (கலப்புப் பொருளாதாரம் என்பது மிகச் சுதந்திரமான தனியார் கம்பெனிகளும் நாட்டில் இருக்கும். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறைகளும் இருக்கும். அதாவது அடிப்படையான கனரகத் தொழில்களிலும் இராணுவத் துறையிலும் பொதுத்துறைகளே இருக்கும். அதேபோல மிக அதிகமான மூலதன முதலீடு தேவைப்படும் பெரிய தொழில் துறைகளிலும் பொதுத் துறைகளே இருக்கும். தேசியமயமாக்கல் என்பது முக்கியத் துறைகளில் மட்டும் இருந்து கொள்ளலாம். அதேநேரம் இந்தத் தேசியமயமாக்கல் என்பது சோஷலிசமாகப் பொருள் கொள்ளப்படக் கூடாது) இந்தப் பாதையில் மூன்று முக்கிய விஷயங்கள் தெளிவாகின. ஒன்று – இது அதிக மாக மூலதனத் திரட்டலை அரசு உத்தர வாதப்படுத்துவதையும் அப்படி திரட்டப்பட்ட மூலதனங்கள் முக்கியத்துவத்தின் அடிப்படை யில் முதலீடு செய்யப்படுவதையும் சார்ந்திருந் தது. இரண்டு இந்தக் கொள்கை என்பது இந்த வளர்ச்சி என்பது யாருக்காக அமலாக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானித்தது. அவர்களது பொருளாதார, சமூக, அரசியல் கலாச்சார மற்றும் தத்துவார்த்த சக்திகளை பலப்படுத்தத் தேவையான சூழல்களை நிர்ப்பந்தங்களை வரையறைகளையும் தீர்மானித்தது. மூன்று வளர்ச்சிக்கான முகவாண்மை நிறுவனங்கள் என்று யாரெல்லாம் பார்க்கப்படுகிறார்களோ அந்த வர்க்கத்தினரை சிறப்பாகக் கவனிப்பது மற்றும் ஊக்கப்படுத்துவது என்ற வகையில் அரசாங்கத்தின் கொள்கைகள் தீர்மானிக்கப்பட்டன.
குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் பெரிய நிறுவனங்கள் உற்பத்தித் துறையில் கவனம் செலுத்தின. பன்னாட்டு நிறுவனங்களுக்கிருந்த சமதள ஆடுகளம் என்பது போட்டியை உருவாக்கியது என்று சொல்ல முடியாது. அரசின் ஆதாரங்கள் அனைத்தும் புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட துறைகளில் உற்பத்தியை அதிகரிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஆளும் கட்சிக்குள் முதலாளிகளுக்கு இருந்த அதிகாரத்தின் காரணமாக குறைந்தபட்ச கட்டுப்பாட்டினை கூட முதலாளித்துவ வர்க்கத்தின் மீதோ மூலதனத்தின் மீதோ வைக்க முடியாத நிலை தொடர்ந்தது. அரசுதான் எந்தவொரு இடர்ப்பாட்டினையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தது.
ஒரே ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றம் என்ன வென்றால் பிரிட்டிஷ் முகவாண்மை நிறுவனங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இந்த அரசாங்கம் தனது புதிய கம்பெனிகள் சட்டம் 1956ன் மூலம் சக்தி இழக்க வைத்தது. இதனால் இந்திய வர்த்தகக் குடும்பங்கள் பலனடைந்தன. இருந்த போதும், நேரு மறுபடியும் தொழிற் கொள்கை 1956-னை அமலாக்கும்போது எந்த விதமான பாகுபாடும் இருக்காது என்று உறுதியளித்தார்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டக் காலங்களில் நிதித் திரட்டல் என்பது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இருந்தது. இதன் மூலம் கிராக்கியினை அதிகரிக்கும் முயற்சி எடுக்கப்பட்டது. கடன் கொடுப்பதற்கான மூலதனம் என்பது உருவாக்கப்பட்டு நிதி நிறுவனங்களின் மூலம் தனியார் முதலீடுகள் ஊக்கப்படுத்தப்பட்டன. விலைக்கட்டுப்பாட்டுக் கொள்கையின் மூலம் அரசாங்கம் தொழில் மற்றும் விவசாயப் பொருட்களுக்கான சந்தையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளும் மற்றும் ஒருங்கிணைப்புப் பணியை செய்து வந்தது. மேலும், மூலதனம் மற்றும் இடைப்பொருட்களை தனியார் உற்பத்தித்துறைகளுக்கு வழங்கும் பணியையும் அரசாங்கம் கவனித்து வந்தது. நிதித் திட்டமிடலுக்கு வெளியிலிருந்து உதவி மற்றும் வரி விதிப்பு முறைகள் முக்கிய ஆதாரங்களாக இருந்தன. நேரடி வரி விதிப்பு குறைவாக இருந்ததன் காரணமாக அதிகமாக மறைமுக வரிகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக 1948-49 காலக்கட்டத்தை விட 1963-64 காலக்கட்டத்தில் மறைமுகவரி என்பது இரண்டு மடங்கானது. இவ்வாறாக தொழில் மயமாக்கலுக்கான செலவினத்தின் ஒரு பகுதி பொதுமக்களின் தலையில் சுமத்தப்பட்டது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொதுத் துறையின் பங்கு தனியார் துறையின் பங்களிப்பை விட அதிகரித்தது. 1960ல் 9 சதமாக இருந்த பங்கு 1965-66ல் 13 சதமாக உயர்ந்தது. அரசு உரங்கள், வேதியியல், ஸ்டீல், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற துறைகளிலும் முதலீடு செய்தது. தனியார் முதலாளிகள் டை, பெயிண்ட், மருந்து போன்றவற்றில் முதலீடு செய்தனர். செங்குத்து ஒருங்கிணைப்பு என்பது தொடர்பு நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் உருவாக்கப்பட்டது. பெருமுதலாளிகள் அரசு பொதுத் துறைகளில் முதலீடு செய்வதை பிரச்சினையாகப் பார்க்கவும் இல்லை. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் துவக்கக் கட்டத்தில் எதிர்க்கவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் பொதுத்துறைகளும் தனியார் துறைகளும் போட்டி நிறுவனங்களாக பொருளாதாரத்தில் பார்க்கப்படவில்லை. உண்மையைச் சொன்னால் ஒவ்வொரு தேசியப் பொருளாதாரமும் கலப்புப் பொருளாதாரத்தின் பல்வேறு விகிதாச்சாரங்களின் வடிவத்திலேயே உள்ளன.
1959 முதல் பொதுத்துறை நிறுவனங்களில் மூலதனச் சேர்க்கை என்பது கணிசமாக உயர்ந்தது. 1960-61 ல் கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலதனச் சேர்க்கை என்பது குறைய ஆரம்பித்தது. 1966ல் அரசாங்கம் சார்பாக நடத்தப்பட்ட ஆய்வின்படி தொழில்துறை வளர்ச்சி என்பது மந்தமாகவே இருந்தது. அந்நியச் செலாவணி தட்டுப்பாடு இருந்தது. நாட்டின் ஏற்றுமதி வருமானம் என்பது குறைவாக இருந்தது. இறக்குமதி செய்யப் போதுமானதாக இல்லை. தொழிற்சாலைகளுக்கான தாதுப்பொருட்களின் இறக்குமதிச் செலவு அதிகரித்தது. விவசாயம், மின்சாரம் நீர்ப்பாசனம் என அனைத்திலும் எதிர்பார்த்த வளர்ச்சி என்பது இல்லை. விவசாயத்திற்கு போதுமான முதலீடு செய்யப்படவில்லை. இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதத்தை அளிக்கும் மூன்றில் இரண்டு பங்கினை விவசாயத் தொழிலாளர்கள் துன்பத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. இதுதான் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் அமலாக்கப்பட்ட Indicative Planning என்பதை மையமாகக் கொண்டிருந்த அரசின் செயல்பாடுகளின் குறைபாடாக இருந்தது.
தேசிய வருமானம் என்பது 14 சதமாக உயர்ந்தது. உற்பத்தித் துறையில் வளர்ச்சி என்பது இல்லை. மந்தமான நிலவரமே இருந்தது. 1960-களின் மத்தியில் பொருளாதார மந்தநிலை நீடித்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 1964-65-ல் குறைவாகவே இருந்தது. இதற்கு 1962-ல் சைனாவுடன் ஏற்பட்ட முரண்பாடு மற்றும் 1965-ல் பாகிஸ்தானுடன் நடந்த சண்டை மற்றும் மோசமான சீதோஷ்ண நிலை போன்றவைதான் விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட தேக்க நிலைக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. இவை முக்கியமானவை தான். ஆனாலும் பிற முக்கியமான பொருளாதாரக் கொள்கைகளின் குறைபாடுகளை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இருந்தது.
இங்கே நாம் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், மிகப்பெரும்பான்மை கிராமப்புற வேலையில்லாதோரும், தகுதி குறைவான வேலையில் இருந்தவர்களும் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலையிலேயே இருந்தனர். அவர்களைப் பொறுத்த வரையில் வளர்ச்சிக்கான எந்தத் திட்டங்களும் திட்டங்களின் பலன்களும் அவர்களைச் சென்றடையவில்லை. சொத்துக்கள் முறையாகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை. சுதந்திரத்திற்குப் பிந்தைய காலக்கட்டத்தில் வளர்ச்சி என்பது சில இடங்களில் வெளிப்பட்டாலும் வேலையற்றோருக்கும் வேலையில் இருந்தோருக்கும் இடையிலான இடைவெளி என்பதும், அமைப்பு சார்ந்த துறையில் பணியில் இருந்தவர்களுக்கும் அமைப்பு சாராத் துறையில் பணியில் இருந்தவர்களுக்கும் இடையேயான இடைவெளி என்பதும், தொழிலாளர் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கும் இடையிலான இடைவெளி என்பதும், எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாளர்களுக்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையிலான இடைவெளி என்பதும் 1947-க்கும் 1967-க்கும் இடையில் அதிகரித்துவிட்டது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் புள்ளிவிவரத்துடன் 1964-65 காலக்கட்டத்தில் நுகரப்பட்ட தொழில்பொருட்களை ஒப்பிடும்போதே இந்தப் பள்ளம் வெளிப்படையாகத் தெரிகிறது. மக்களின் நுகர்வு சக்தியில் விழுந்துள்ள பெரிய பள்ளம் வெளிப்படுகிறது.
இந்தக் காலக்கட்டத்தில் விவசாய உற்பத்தி என்பது குறைந்துள்ளது. திட்டமிடலில் நிறைய தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன. போதுமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. கிராக்கியை உருவாக்கக்கூடிய வகையிலான பொருளாதாரக் கொள்கைகள் பின்பற்றப்படவில்லை. விவசாயத்துறை அபிவிருத்தியில் போதுமான அக்கறை செலுத்தப்படவில்லை. செல்வந்தர்களின் மீது தேவையான அளவு வரி விதிக்கப்பட வில்லை. போதுமான பயிற்சி பெற்ற தொழில் வல்லுநர்கள் உருவாக்கப்படவில்லை. உண்மையில் திட்டமிடல் என்பது இந்திய முதலாளிகளுக்கு முதல் இரு பத்து ஆண்டுகளில் நல்ல பலனை அளித்தது. அதே நேரம் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான போதுமான வாழ்வாதாரங்களை வழங்கவில்லை, போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. பெருமுதலாளிகள் முற்போக்கு வரிக்கொள்கையை அதாவது வசதி படைத்தவர்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் முறையை எதிர்த்ததன் காரணமாக வரி ஏய்ப்பு என்பது இருந்தது.
அதேபோல அரசாங்கத்தின் லைசன்சிங் முறையை டாட்டாக்களும், பிர்லாக்களும், தாப்பர்களும் தங்களுடைய ஏகபோக நிறுவனங்களை உருவாக்க ஏதுவாகப் பயன்படுத்திக் கொண்டனர். அரசின் கொள்கைகளை பயன்படுத்தி ஏற்கனவே ஏராளமான நிதி பலத்துடன் இருந்த தொழில்துறை முதலாளிகள் பெரும் வளர்ச்சியடைந்தனர். அரசு சிறு முதலாளிகளுக்கும் பெருமுதலாளிகளுக்கும் இடையே ஒரு சமநிலையை உருவாக்க முனைந்தாலும் அது சாத்தியமாகவில்ல. நிதிப்பற்றாக்குறை என்பது தொடர்ந்து வளர்ந்து கொண்டே வந்தது. அரசு நிதி நெருக்கடியை சந்தித்துக் கொண்டே இருந்தது. 1965 இறுதியில் அரசு பணவீக்கத்தையும் பரிவர்த்தனை பட்டுவாடா பற்றாக்குறையையும் சந்தித்தது.
வளர்ச்சி என்பதை காட்டுவதற்காக அரசாங்கம் பெரும்பகுதி தொழிலாளர்களை மறைமுக வரியின் மூலமாகவும், விலையேற்றத்தின் மூலமாகவும் உறிஞ்சியது. 1966ம் ஆண்டில் பரிவர்த்தனை பட்டுவாடா பற்றாக்குறை என்பது உச்சத்திற்கு வந்து இந்திய அரசாங்கம் உலக நிதி நிறுவனத்திடம் இருந்து முதல் முறையாகக் கடன் வாங்கியது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் நேருவின் அரசு தலைமையிலான முதலாளித்துவ வளர்ச்சி என்பது சமூக உறவுகளின் கட்ட மைப்புகளில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருக்கிற அரை நிலப்பிரபுத்துவ முறையையும் முதலாளித்துவ முறையையும் அப்படியே வைத்துக் கொண்டு உற்பத்தியை மட்டும் அதிகப்படுத்துவதை குறியாகக் கொண்டு செயல்பட்டது. முதலாளித்துவ வர்க்கத்தின் மீது வரி விதித்து அதன் மூலம் வரி வருமானத்திற்கான எந்த வழி வகையும் செய்யப்படவில்லை. விவசாய மற்றும் தொழில் துறை பெருமுதலாளிகளை நிலச்சுவான்தார்களை கட்டுப்படுத்தும் எந்த அதிகாரமும் அரசிடம் இல்லை. அரசிற்கு அந்த தைரியமும் இல்லை. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் பொதுத்துறையை வளர்த்தெடுக்கவும் முடியவில்லை. எனவே இது ஆதிமூலதனத் திரட்டலுக்கான கனமாக அரசு தாக்குப்பிடிக்க இயலாது எழுந்த நெருக்கடியே தவிர பொருளாதாரத்தின் நெருக்கடியல்ல.
நேருவின் இந்த வளர்ச்சிக்கான மாதிரியை எதிர்த்து கம்யூனிஸ்ட்டுகளும், சோஷலிஸ்டுகளும் மிகக் குறைந்த காலமே இருந்த உடைமை வர்க்க நலனை பிரதிபலித்த சுதந்திரா கட்சியினரும், நிலச்சுவான்தார்களும் உடைமை இழந்த மன்னர்களும் குரல் கொடுத்தனர். கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்தவரையில் அமைப்பிற்குள் ஏற்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த பிளவு என்பது அவர்களை பலவீனப்படுத்தியது. இருந்தபோதும், அவர்கள் மக்கள் எதிர்ப்பு இயக்கங்களை உருவாக்குவதன் மூலமாக, தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு முதலாளிகளை அணிதிரட்டி தொடர்ந்து எதிர்த்துக் கொண்டுதான் இருந்தனர். 1970களில் சோஷலிஸ்டுகள் துண்டு துண்டாக உடைத்தப் பிறகு முழுவதுமாக மறைந்து போயினர். ஜாதியின் அடிப்படையில், இனத்தின் அடிப்படையில் திரண்ட எதிர்க்கட்சியினர் அந்தந்தப் பகுதி சார்ந்தவர்களாக இருந்தனர், அவர்களுடைய எதிர்ப்பும் அந்த மட்டத்திலேயே இருந்தது. இந்து தேசியத்தை முன் வைத்து ராஷ்ட்டிரிய ஸவயம் சேவா சங்கம் (ஆர்எஸ்எஸ்) உருவாக்கப்பட்டது. பாரதீய ஜனசங்கம் என்ற அரசியல் அமைப்பு உருவாகி கலாச்சார தளத்தில் மட்டும் இயங்கிக் கொண்டிருப்பதை முடிவுக்கு கொண்டு வந்தது. அதே போல மாணவர்களை அகில இந்திய அளவில் அணி திரட்டுவதற்கு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் உருவானது. 1955ல் தொழிலாளர்களை அணி திரட்டவென்று பாரதீய மஸ்தூர் சங்கம் உருவாக்கப்பட்டது.
1950கள் மற்றும் 60களில் காங்கிரசின் பன்முகத்தன்மையையும் தாண்டி அதன் பலம் குறையத் தொடங்கியது. 70 முதல் 80 சதவீத இடங்களைப் பெற்ற காங்கிரஸ் மக்களவை தேர்தலில் 40 முதல் 49 சதமான ஓட்டுக்களையே பெற்றது. 1971ல் எம்ஆர்டிபி சட்டம் இயற்றப்பட் டது. (எம்.ஆர்.டி.பி. சட்டம் 1971 என்பது சந்தை யில் ஏகபோக முதலாளிகளின் வர்த்தக நலன்களை பாதுகாப்பதற்காக அவை செய்யும் தவறான முயற்சிகளை கட்டுப்படுத்தும் சட்டம். ஏகபோக தனியார் நிறுவனங்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்து நுகர்வோர் நலன் காக்கும் சட்டம்.) ஏற்றுமதியுடன் கூடிய வளர்ச்சி மாதிரியை இந்திய பெருமுதலாளிகளோ அல்லது மத்திய வர்த்தக நிறுவனங்களோ விரும்பவில்லை. துணி போன்ற உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ததும், தேயிலை, ரப்பர், மற்றும் வாசனைப் பொருட்களை ஏற்றுமதி செய்ததும் செலவின ரீதியாக பங்கம் விளைவிப்பதாக மாறியது. அதிக இறக்குமதி வரிகள் என்பது வர்த்தகர்களை உற்பத்தியாளர்களாக மாற்றியது. அரசாங்கத்தின் நிர்ப்பந்தத்தின் காரணமாக உற்பத்தியாளர்களாக மாறும்போது தேவையான அரசாங்க உதவிகளோ மானியங்களோ வழங்கி உற்பத்தி என்பது ஊக்கப்படுத்தப்படவில்லை. 1951 முதல் 1976 வரையிலும் டாட்டாக்களும் பிர்லாக்களும் போன்ற பெரு வர்த்தக நிறுவனங்கள் மட்டுமே உயர்மட்ட நிலையில் இருந்தன. அவர்களிடம் மட்டுமே மூலதனச் சேர்க்கை என்பதும் இருந்தது. அதே நேரத்தில் ஏற்கனவே நடுத்தர நிலையில் இருந்த வர்த்தக நிறுவனங்கள் விரிவடைந்து பல துறைகளில் கால் பதித்து நுகர்வோருக்கான பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கியிருந்தது. இவர்கள் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினை சார்ந்து வளர்ந்து வந்தனர்.
எம்ஆர்டிபி சட்டத்தின் கீழ் பல நிறுவனங்கள் வரவில்லை. காரணம் அவர்கள் வெளியிட்ட சொத்து மதிப்பு என்பது அந்தச் சட்டத்தின் வரையறைக்குள் வரவில்லை. இந்த இடத்தில் இன்னொன்றும் கவனிக்கப்பட வேண்டியது. புதிய நிறுவனங்களின் வளர்ச்சி என்பது சரியாக இல்லை. லைசன்சிங் முறையில் இருந்த சில தடைகள் புதிய நிறுவனங்களின் முயற்சியை தடை செய்தது. இரண்டாவது அரசின் ஊக்கத் தொகைகளை பெறுவதற்கான வரையீடுகளில் இருந்த குளறுபடிகள், மூன்றாவது தொழில்நுட்பம் மற்றும் நிதி முதலீட்டினை பெறுவதில் இருந்த பிரச்சினை ஆகியவற்றால் புதிய தொழில்துறை நிறுவனங்கள் வளர முடியவில்லை.
முடிவாக, பெல்ட்மேன் மஹாலானோபிஸ் மாதிரியின் கீழ் இந்திய மூலதன ஆட்சி என்பது பின்வருவனவற்றை அடைந்தது.
- 1959 முதல் 1965 வரை பத்தாண்டுகளுக்கு மூலதனச் சேர்க்கையில் இருந்த தடைகளை இந்திய மூலதனம் உடைத்துவிட்டது. இருந்த போதும் நெருக்கடியை சந்தித்தது.
- பெரு முதலாளிகளின் கைகளில் சொத்துக் குவிப்பு என்பது நிகழ்ந்தது.
இந்தியத் திட்டமிடலின் மிக முக்கியமான பண்பாக தன்மையாக இது அமைந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. திட்டமிடல் அதன் வர்க்கத் தன்மையின் காரணமாக விவசாய நெருக்கடியாக மாறியது. வரி விதிப்பில் அது கடைபிடித்த வர்க்கக் குணாம்சம் ஆழமான நெருக்கடியாக 1965-66ல் முடிந்தது. முன்பும் சரி, தற்போதைய இந்தியாவின் தாராளமயமாக்கல் சூழலிலும் சரி அரசின் கொள்கை உருவாக்கத்தில் பிரதானமாக இருந்த, இருக்கிற அம்சங்கள் யாவை? அவைவட்ட முறையில் மாறி மாறி வரும் மூலதன உருவாக்கம், பெருமுதலாளிகளின் கையில் சொத்து குவிப்பு மற்றும் விவசாயத்திலும் வரிவிதிப்பு முறையிலும் நீடித்திருக்கும் வர்க்க நிர்பந்தம் ஆகியவைதான்.

தகர் நிலையில் உலக நிதி மூலதனம்!
மக்கள் ஜனநாயக கிளர்ச்சிப் பிரச்சாரத்திற்கு ஒரு கையேடு
336 பக்கங்களைக் கொண்ட தகர் நிலையில் உலக நிதிமூலதனம் என்ற நூல் மேலை நாட்டு பொருளாதார கோட்பாடுகளின் நச்சுத் தன்மையை புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த நூல் பொதுவாக இன்றைய பொருளாதார பிரச்சனைகளை புரிந்து கொள்ள விரும்புவோருக்கும், வாழ்நாள் சேமிப்பை கவர்ச்சிகரமான முதலீடு என்று ஏமாறாமல் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புவோருக்கும், நாட்டுப் பற்றுள்ள பத்திரிகை துறையினருக்கும் உதவும் தகவல் களஞ்சியமாகும். அதைவிட இந்த நூல் ஒரு மக்கள் ஜனநாயக கிளர்ச்சிப் பிரச்சாரகனுக்கு உதவும் கையேடு எனலாம்.
இந்த நூலின் சிறப்பு பொருளாதார, அரசியல் துறைகளைச் சார்ந்த ஏராளமான நூல்களையும், ஆவணங்களையும், பத்திரிகை செய்திகளையும் ஆழ்ந்து படித்து, பரிசீலித்து, சலித்து தேவையானதை தேர்வு செய்து எழுதப்பட்டுள்ளது என்பதே. இன்று பிரபலமாக இருக்கும் போன நூற்றாண்டு கீன்ஸ் முதல் நோபல் பரிசு பெற்ற சந்தை நிபுணர்கள் மில்ட்டன் பிரிட்மென், பால்க்ரெக்மென், ஸ்டிக்கிளிட்ஸ் மற்றும் ஜான் கால்பிரெயித் வரை உள்ள ஆங்கிலோ, அமெரிக்க பொருளாதார நிபுணர்கள், அவர்கள் எழுதிய நூல்கள், சொன்ன கருத்துக்கள் இவைகளை வைத்தே அந்த கோட்பாட்டு நச்சை இந்த நூல் வாசகனுக்கு காட்டுகிறது.
இந்த நூலின் இன்னொரு சிறப்பு இன்றையத் தேதிகளில் மேலைநாட்டு அரசியல் பொருளாதார நிபுணர்கள் நடத்தும் கோட்பாட்டு சண்டைகளை இலக்கிய நடையில் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. பொருளாதாரம் என்றாலே விளக்கெண்ணெய் என்று கருதுபவர்கள் கூட, தலைப்புக்களை பார்த்து படிக்கத் தொடங்கிவிடுவர், பின்னர் முழுவதையும் படித்து முடிக்காமல் புத்தகத்தை கீழேவைக்க மாட்டார்கள். இந்த நூலில் 27 தலைப்புக்களில் பொருளாதார பிரச்சனைகள் அலசப்படுகிறது. 27 தலைப்புக்களுமே படிப்பவர்களை மேலும் படிக்கத் தூண்ட வல்லது. சான்றாக சில தலைப்புக்களை பாருங்கள் உருகி அழியும் உலக நிதிச்சந்தை தத்துவத்தின் இறுதி யாத்திரை கீதம் (4), போன்சியை மிஞ்சும் போன்சி (14) டாலர் சாம்ராஜ்யத்தின் பிரசவ வேதனை (19) கடவுள் கைவிட்ட போது அன்றும் இன்றும் (1929-30 2008-2010) (23).
இந்த நூலில் போகிற போக்கில் குறிப்பிடுகிற சில விஷயங்கள் நம்மை அதை நோக்கி ஓடி தேட வைத்து விடுகிறது. உதாரணமாக இன்சூரன்ஸ் என்ற கேடயத்தை, எப்படி ஒரு நிறுவனம் ஏமாற்றுக்களை உருவாக்கி பாலிசிதாரிகளின் பணம் மாயமாக மறைந்ததை குறிப்பிடுகிற பகுதியில் (பக்கம் 71-97) ஜான்கிரிஷாம் எழுதிய ரெயின் மேக்கர் என்ற புதினம் குறிப்பிடப்படுகிறது. அந்த புதினம் அமெரிக்க பணம் பன்னிகள் (மனி மேக்கர்ஸ்) இன்சூரன்சை ஏமாற்று கருவியாக்கி மக்களை ஏமாற்ற கையாண்ட யுக்திகளை அம்பலப்படுத்துகிறது. இந்த குறிப்பு அந்த நாவலையும், சினிமாவையும் தேடும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. அது போல் அமெரிக்க தத்துவ மேதை ஜான் ராவ்ல்சின் மேற்கோளை படிக்கிற பொழுது அவர் எழுதிய நீதியின் கோட்பாடு (தியரி ஆப் ஜஸ்டிஸ்) என்ற நூலைச் தேட ஆர்வம் பிறக்கிறது.
மார்க்சை பொருத்த வரையில், அறிவியல் என்பது ஒரு வேகமிக்க, புரட்சிகர சக்தி என்றே கருதினார். ஏதேனும் ஒரு அறிவியல் துறையில் புதிய தத்துவார்த்தக் கண்டுபிடிப்பு ஏற்பட்டால், அதை மகிழ்ச்சியுடன் வரவேற்பார். அதே சமயம், ஒரு கண்டுபிடிப்பு உடனடியாக தொழில் துறையிலும் பொதுவாக வரலாற்று வளர்ச்சியிலும் புரட்சிகர முன்னேற்றத்தைக் கொண்டு வருமானால், அவரது மகிழ்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும். ஏனெனில், எல்லாவற்றுக்கும் முன்பாக, மார்க்ஸ் ஒரு புரட்சியாளர். அவரது வாழ்வின் நோக்கமே, ஏதாவது ஒரு வழியில் முதலாளித்துவ சமூகத்தையும் அது உருவாக்கியுள்ள அரசு அமைப்புகளையும் தூக்கி எறிவதாகும். மேலும், நவீன தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கு பங்காற்றுவதாகும். தனது சொந்த நிலையையும் தேவைகளையும் அந்த வர்க்கம் உணர்ந்திடவும், அதன் விடுதலைக்கான நிபந்தனைகளை அது உணர்ந்திடவும் முதல் முதலாகச் செய்தவர் மார்க்ஸ் தான்.
தனது காலத்தில் மிகப்பெரிய அளவிற்கு நிந்திக்கப்பட்டவர் மார்க்ஸ். வெறுக்கப்பட்டவர் மார்க்ஸ். சர்வாதிகார அரசுகளும் குடியரசுகளும் ஒருசேர அவரை வெறுத்தனர், நாடு கடத்தினர், முதலாளி வர்க்கங்கள், அவை பிற்போக்காக இருந்தாலும், அதிதீவிர ஜனநாயகவாதியாக இருந்தாலும், ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு மார்க்ஸ் மீது அவதூறுகளைப் பொழிந்தனர். இவற்றையெல்லாம் அவர் கண்டு கொள்ளவில்லை. தூசுகள் எனக் கருதினார். மிகவும் அவசியம் எனக் கருதியபொழுது மட்டுமே பதில் அளித்தார். மேலும், அவர் இறக்கும் பொழுது, சைபீரியாவின் சுரங்கங்களிலிருந்து கலிஃபோர்னியா வரை, அனைத்து ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பல பத்து லட்சம் தொழிலாளிகள் அவரை வணங்கினர், கண்ணீர் சிந்தினர். நான் ஒன்று சொல்ல முடியும். மார்க்ஸை எதிர்த்தவர்கள் பலர் இருந்தனர். ஆனால், அவருக்கு ஒரு நபர் கூட தனிப்பட்ட முறையில் எதிரி இல்லை. அவர் பெயரும் அவர் பணியும் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
இன்றைய மேலை நாடுகளின் உந்து சக்தியால் இயங்கும் உலகமய பொருளாதாரத்தின் விளைவுகளை பணம் பண்ணுகிற கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பது எவ்வளவு ஆபத்து என்பதை புரிய இந்த நூல் உதவுகிறது. பணம் என்ற ஒன்று வர்த்தக மூலதன வடிவிலும், தொழில் மூலதன வடிவிலும் சுழன்று, சுழன்று சரக்குகளை உருவாக்கி, பரிவர்த்தனை மூலம் பரவலாக்கி மக்கள் நுகர வழி வகுப்பதையே பொருளாதாரம் என்கிறோம். இந்த இரண்டு வடிவ வழிகளை புறம் தள்ளி பணத்தை (நிதி மூலதனம்) நேரடியாக பெருக்கும் முயற்சியில் ஈடுபடுத்தும் பணத்தின் அளவு கூடுகிற பொழுது பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகிறது, இது தான் இன்று மேலை நாடுகளை பிடித்திருக்கும் நோயாகும். ஒரு கட்டத்தில் அது குமிழியை உருவாக்கி நிதி மூலதன அமைப்பை தகர்த்துவிடுகிறது. அப்படி ஒரு நோய் மேலைநாடுகளின் செலவாணிகளுக்கு வந்துவிட்டது. அதன் விளைவாக பொருள் உற்பத்திபடுத்து குமிழி (பபுள்) தோன்றி தகர் நிலைக்கு உலக நிதி மூலதனத்தை தள்ளிவிட்டது என்று கூறும் மேலைநாட்டு பொருளாதார நிபுணர்களும், இது நோயல்ல வளர்ச்சியின் அறிகுறி, தனிமனித சுதந்திரத்திற்கு இது தேவை என்று கூறும் பொருளாதார வல்லுநர்களும் மோதும் நிலைமை இன்று அங்கே நிலவுகிறது. இந்த மோதலை பற்றி கட்டத்திற்கு கட்டம் கவனப்படுத்தும் விளக்கமாகவும் இந்த நூல் உள்ளது. அதே நேரம் இந்த நோய் ஒட்டுவார் ஒட்டி வகையானதால் உலகமயத்தால் எல்லா நாட்டு செலவாணிகளையும் எப்படி தொத்தி குமிழியாக வீங்க வைக்கிறது என்பதையும் இந்த நூல் விளக்குகிறது.
புத்தகத்தின் துவக்கமே வாஷிங்டன் போஸ்ட் என்ற அமெரிக்க பத்திரிகை அமெரிக்க நிதிநெருக்கடியை பற்றிய செய்தியை சொல்லி குமிழி (பபுள்) என்ற நவீன பொருளாதார நோயை விளக்குகிறது. முன்பெல்லாம் பணவீக்கம், (இன்பிளேசன்) தேக்க வீக்கம் (ஸ்டாக்பிளேசன்) என்ற நோய்களே ஒரு நாட்டு பொருளாதாரத்திற்கு வரும். அரசு அந்த நோயை போக்கிவிட முடியும். பபுள் என்ற புதிய பொருளாதார நோய் அரசாலும், யாராலும் குணப்படுத்த முடியாத புற்று நோய். இந்தபுற்று நோயால் பணம் பெருகிக் கொண்டே போகும். நோபல் பரிசு பெற்ற சந்தை நிபுணர் பால்கிரெக்மென்னை மேற்கோள் காட்டி இந்த பணத்திற்கு வந்த இந்த குமிழி நோய் சந்தையால் வருகிறது என்பதை இந்த பகுதி விளக்குகிறது. அதற்கு அடுத்த பகுதி சந்தையால் நோய் எப்படி வந்தது என்பதை விளக்குகிறது. கடவுள் கைவிட்ட போது (23வது) என்ற பகுதியிலும் சில விளக்கங்கள் உள்ளன. 1929-களில் இப்படி ஒரு நெருக்கடி பங்குச் சந்தையால் ஏற்பட்ட பொழுது மேலைநாட்டு அரசுகள் சில சந்தை நெறிமுறைகளை பின்பற்ற சட்டங்களை இயற்றின. அதில் சில நடவடிக்கைகளை கிரிமினல் குற்றமாக ஆக்கின, 1970-ல் நோபல் பரிசு பெற்ற சந்தை நிபுணர் மில்டன் பிரிட்மென்னின் பணம் பண்ணும் சுதந்திரம் கோட்பாடு மக்களை கவ்விப் பிடிக்கவே மூலதன அமைப்பே தகர்நிலைக்கு வந்தது என்பதை இப்பகுதிகள் காட்டுகின்றன. தங்கத்திற்கும் டாலருக்கும் உள்ள உறவை (பக்கம்107) நிக்ஷன் துண்டிக்க மில்டன் பிரிட்மென்னின் கோட்பாடே காரணமாகியது.
1980-களில் ரீகன், தாட்சர் ஆட்சிக் காலத்தில் இந்த சட்டங்களின் பற்கள் ஒவ்வொன்றாக பிடுங்கப்பட்டு புஷ் ஆட்சிக் காலத்தில் நெறிமுறைகளே புதைக்கப்பட்டன. சந்தை தாறுமாறாகப் போனாலும் அரசு தலையிட முடியாத நிலை வந்துவிட்டது.
சந்தைகளின் பேயாட்டம் (பக்கம் 49) என்ற பகுதி பணம் எப்பொழுது பேரழிவு ஆயுத மாகிறது என்பதை விளக்குகிற பகுதியாகும். வாரன் பபெட் என்ற அமெரிக்க பங்குசந்தை நிபுணர் அணுகுண்டை விட அதிக பேரழிவை கொண்டு வரும் ஆயுதமாக பணத்தை ஆக்கும் செயலை சுட்டிக் காட்டுகிறார். கடன் பத்திரங்கள், கடன் மாற்று பத்திரங்கள் பேரழிவை கொண்டு வரும் நிதி ஆயுதங்கள் (பைனான்சியல் வெப்பன் பார் மாஸ் டெஸ்டரக்ஷன்) என்று அவர் வர்ணிப்பதை மேற்கோளாக இந்நூல் காட்டுகிறது.
மேலைநாடுகளின் பணக் கோட்பாடுகள் பற்றிய சர்ச்சைகளை இந்த நூல் சுவாரஸ்யமாக விளக்குகிறது. தாமஸ் கிரஸ்ஹாம் குறிப்பிட்ட கெட்ட பணம் நல்ல பணத்தை விரட்டுகிறது, ஸ்டிக்கிளிட்ஸ விளக்கிய பணம் எப்போது குப்பையாகும் (பக்கம் 89) இவைகளை காட்டுவதோடு, பணம் எப்போது டைம் பாமாக ஆகிறது என்பதையும் குறிப்பிடுகிறது..
இந்த நூலின் 25-வது பகுதியை படிக்கிற பொழுது மனதிலே ஒன்றுபடுகிறது. அமெரிக்க கலாச்சார சீரழிவை அப்பகுதி படம் பிடித்துக் காட்டுகிறது. அதோடு அமெரிக்க நிபுணர்களும் அமெரிக்க நாடாளுமன்றமும் இன்றைய பொருளாதாரத்திற்கு வந்திருக்கும் நோயையையும் அது எவ்வாறு உலகளவில் பரவுகிறது என்பதையும் கண்டுபிடித்து விட்டனர், வேதனை என்ன வெனில் இதற்கான வைத்திய முறைதான் நோயைவிடக் கொடுமையாக உள்ளது என்ற உண்மை தெரிகிறது. இதற்கு ஆதாரமாக அமெரிக்க வங்கிகளின் அதிகார துஷ்பிரயோகம், மோசடி இவைகளை கண்காணிக்க செனட்டர் பிராங்சர்ச் தலைமையில் நியமிக்கப்பட்ட கமிட்டி அறிக்கையை இந்த பகுதி காட்டுகிறது. அந்த கமிட்டி கண்டுபிடிப்புகளில் ஒன்று பிற நாடுகளின் முதலீட்டை அமெரிக்க வங்கிகள் ஈடுபடுத்திய விதம் உலக சநதையில் நெருக்கடியை விளைவித்ததை கண்டதாகும். போன்சியை மிஞ்சிய போன்சி என்ற தலைப்பில் கூறுபவைகளை உள்வாங்கினால், அமெரிக்க மக்களின் கலாச்சாரத்தில் புரட்சிகர மாற்றங்களின் அவசியத்தை உணர முடிகிறது. எது உண்ணதமானது என்ற பார்வையே அங்கு கோளாறாக உள்ளது என்பதை பார்க்க முடிகிறது. பணம் பண்ணுவதற்கு எது உதவுமோ அது உண்ணதமானது என்ற பார்வையே அங்கு மக்களை அலைக்கழிக்கிறது.
இத்தகைய மேற்கத்திய பண்பாடுகளிலும், தத்துவப் பார்வையிலும் சமீப காலமாக ஏற்பட்ட திரிபுகளை எதிர்க்கும் கருத்துக்களுக்கும் அங்கு பஞ்சமில்லை என்பதை ஜாஜ் ராவ்ல்ஸ் என்ற தாராள மனப்பாங்கு கொண்ட அமெரிக்க தத்துவ ஞானியின் கருத்தை மேற்கோளாக இந்த நூல் காட்டுகிறது. சோசலிச மனப்பாங்கின் சில கூறுகள் அதில் இருப்பதையும் காட்டி நூல் நிறைவு பெறுகிறது. நூலாசிரியரின் மேற்கோள்கள் அனைத்தும் 1970-க்குப் பிறகு உருவான சுதந்திர சந்தையால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்கும் இருக்கிறார்கள் என்பதையும் ஏகாதிபத்திய ஆசைகளைக் கொண்ட அரசுகள் தனிமைப்படுகின்றன என்பதையும் காட்டுகிறது,
படித்து முடித்தவுடன் மேலைநாட்டு பொருளாதார கோட்பாடுகளையும், பணவியல் கோட்பாடுகளையும் பண்பாடுகளையும் நாம் காப்பி அடித்தால் உறுப்பட மாட்டோம் என்ற எண்ணம் உருதிப்படுவதோடு நிற்கவில்லை. மேலைநாட்டு முதலாளித்துவத்திற்கு இறுதி கீதம் பாடி புதைக் காமல்விட்டால் அது மானுடத்தை புதைத்து விடும் என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. ஜனநாயக அரசியலை நிலை நாட்டும் இயக்கங்களிலே பங்கு பெறும் ஆர்வம் பிறக்கிறது.
இந்த நூலின் ஆசிரியர் என்.எம்.சுந்தரம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைமைப் பொறுப்பை வகித்தவர் என்று மட்டும் சொல்வது அறிமுகமாகாது.1970-80-களில் சென்னை நகர தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்ட களத்தை வழிநடத்திய தளபதிகளில் இவர் ஒருவர். இன்சூரன்ஸ், அரசு ஊழியர், வங்கி ஊழியர், மத்திய அரசு ஊழியர், ஆயில் நிறுவனம், டிரான்ஸ்போர்ட், மின்சாரம், துறைமுகம் இந்த பாசறைகளில் உருவான இந்த தளபதிகளின் கிளர்ச்சிப் பிரச்சாரமே சென்னை நகரில் அன்று வர்க்க ஒற்றுமையை உருவாக்கியது. அவரது ஆழ்ந்த பொருளாதார ஞானமும், வர்க்க போராட்ட கள அனுபவமும் இந்த நூலின் ஒவ்வொரு வரியிலும் மிளிர்வதை வாசகன் என்ற முறையில் நான் உணர்ந்தேன்.
இந்த நூலின் ஒரு குறை இன்சூரன்ஸ் மாத இதழில் தொடராக வந்ததை அப்படியே தொகுத்து வெளியிட்டது. அதன் காரணமாக சில கருத்துக்கள் திரும்பத் திரும்ப வருவதாகத் தோன்றும் அதை எடிட் செய்து வெளியிட்டிருக்கலாம். என்.எம் சுந்தரத்தின் இலக்கிய நயம் கொண்ட ஆங்கிலக் கட்டுரைகளை நயம் குறையாமல் மொழிபெயர்த்த இ.எம்.ஜோசப் பாராட்டுதலுக்கு உரியவராகிறார். இந்த நூலை அடுத்த பதிப்பில் எடிட் செய்து வெளியிட்டால் பக்கங்களும் குறையும் படிக்க வேண்டிய மக்கள் கையில் மலிவு விலையில் சேரும்.
“தகர் நிலையில் உலக நிதி மூலதனம்”
ஆசிரியர்: என். எம். சுந்தரம்
கிடைக்குமிடம்: பாரதி புத்தகாலயம்

லாபம் லாபம் லாபம்..
முதலாளியின் மூலதனமும், தொழிலாளியின் உழைப்பும் சேர்ந்து உருவாக்கிய பொருளின் விற்பனையில் கிடைக்கும் லாபம் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதற்கான நியாயமான போராட்டங்களே தொழிலாளர்களின் போராட்டங்கள் என்று, வறுமையையும் ஏழ்மையையும் பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற இந்தியரான அமர்த்தியா சென் கூறியுள்ளார்.
இந்த உண்மை தொழிலாளர்களையும், மக்களையும் சென்றடைய வேண்டும். உழைப்பதற்கான கூலி மட்டும் கொடுக்கபட்டு, உழைப்பின் பயனாக உருவாகும் லாபத்தில் பங்கு மறுப்பது என்பது உழைப்பு சுரண்டல். உழைப்பினால் உருவான உபரியே லாபம். மூலதனமே அந்த லாபத்தை முழுமையாக எடுத்துக் கொள்வது என்ன நியாயம்? இது தான் முதலாளித்துவத்தின், உடமைவர்கத்தின், திட்டமிட்ட அடிப்படை. ஏமாற்று வேலை. லாபம் என்பது பொருளை வாங்கு பவனிடமிருந்து பெறப்படுவது அல்லது எடுக்கப்படுவது.
லாபத்தின் எல்லை
லாபத்தின் எல்லைதான் என்ன? மூலதனம் போட்ட முதலாளியின் ஆசையின் எல்லை தான் லாபத்தின் எல்லை. எந்தவிதக் கட்டு பாடும் இல்லை. போட்டிக்கு ஏற்ப சற்றே குறையலாம். ஆனால் கணிசமாக லாபம் இல்லாமல், எவ்வளவு போட்டிருந்தாலும், உற்பத்தியாளர்கள் விலையே குறைக்கமாட் டார்கள். ஏனென்றால் அவர்கள், தாங்கள் வாழ்வதற்கான தேவைக்காக மட்டும் லாபம் தேடவில்லை. மேலும் மூலதனத்தை உரு வாக்கிட, வெவ்வேறு முதலீடுகள் செய்து, அவையும் பலவாக பெருகிட, குறைந்த காலத்தில், அவர்களுக்குத் தேவை எல்லை யற்ற லாபம். நோக்கம் உறுதியானால், அதற்கான வழிபற்றி கவலையில்லை.
பொருள் உற்பத்தியின்றியே, ஊக வாணிபம் என்ற சூதாட்ட வழிகளை உருவாக்கி விரைவு லாபங்களை, உலகெங்கும் தேடும் குணம் கொண்டது மூலதனம். புதிய தாராளமயக் கொள்கை என்ற பெயரில் அவற்றின் மீது இருந்த கட்டுப்பாடுகள் முழுதும் நீக்கப்பட்டுள்ளன. இருக்கும் தொழிலில் அதிகலாபம் இல்லை என்றால் அதை மூடிவிட்டு, அதிக லாபம் கொடுக்கும் முதலீட்டுக்கு மூலதனம் சென்றுவிடும். மக்களின் வாழ்வுக்கு அத்தியாவசிய தேவை களைப் பற்றி அது கவலை கொள்ளாது. இதைத்தான் உலக முதலாளித்துவம், உலக நாடுகள் மீது திணித்து செயல்படுத்தி வரு கிறது. முதலாளித்துவ பொருளாதாரத்தில் அனைத்தும் சந்தை மயம். லாபம், மேலும் லாபம், மேலும் மேலும் லாபம் என்பதுதான் மையக்கோட்பாடு. அரசுகளும் இதில் அடக்கம்.
லாபம் எப்படி உயர்கிறது ?
ஒவ்வொரு காலாண்டு முடிந்த பின்னும், ஆண்டு முடிந்த பின்னும் நிறுவனங்கள் தங்கள் லாப-நட்ட கணக்கை பத்திரிக்கைகளில் வெளியிடுவதை படிக்கிறோம். சென்ற ஆண்டு அதே காலத்தில் இருந்த லாபத்தை ஒப்பிட்டு இந்த ஆண்டு லாபம் எவ்வளவு உயர்வு அல்லது குறைவு என்பது கூறப்பட்டிருக்கும். பெரும்பாலான நிறுவனகளின் லாபம் ஆண்டுதோறும் உயர்ந்து வருவதைப் பார்க்கிறோம். சில நிறுவனங்களின் லாபம் சிறிது குறைந்திருப்பதாகக் காட்டப்படுகின்றன. மிக அரிதாகவே நட்டம் என்று எப்போதாவது காட்டப்படும். பல மூலதன முதலீடு மாற்றங் கள் திட்டமிடப்பட்டு அத்தகைய நாட்டம் உருவாக்கப்படுவதுண்டு.
எந்த நிறுவனமும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தால்தான், காட்டப் படும் இந்த கணக்குகள் அந்த நிறுவனத்தின் உண்மை நிலையை பிரதிபலிக்கும். இது அந்த நிறுவனத்தை நடத்தும் தலைமை மற்றும் நிர்வாகிகளின் நேர்மையைப் பொருத்தே அமையும். சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பல ஆண்டுகளாய் கணக்கில் செய்யப்பட்ட மோசடி அம்பலமாக, அதன் பொறுப்பாளர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, சிறையில் இருந்து வருவது இதற்கு உதாரணம். அமெ ரிக்க நிறுவனம் என்ரான் திவாலா அறிவித்தது இதற்கு மற்றுமொரு உதாரணம்.
ஒரு நிறுவ னத்தின் லாபம் உயரக் காரணிகளானவை:
1. அதிக விற்பனை
2. விலையை உயர்த்துதல்
3. செலவீனங்களை குறைத்தல்
லாபத்தின் நிறம் சுரண்டல், ஊழல்
பல நிறுவனங்களின் கணக்குகளைப் பார்த்தால், விற்பனை வருவாய் உயர்வதைவிட, லாபம் பல மடங்கு உயர்ந்திருப்பதைக் காண லாம். இது எப்படி சாத்தியம்? ஒன்று விற் பனை விலையை உயர்த்திக் கொண்டே போவது. இரண்டாவது உற்பத்தி செலவீனங் களை குறைத்தல். வாடகை, மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், பயணச் செலவு, விளம்பரச் செலவு, விற்பனைக் கமிஷன் என இவற்றை குறைக்கவே முடியாது. ஏனென்றால் இவை விற்பனையைப் பெருக்கும் செயலோடு நேரடியாக தொடர்புள்ளவை. இவற்றை குறைத்தால் விற்பனை பாதிக்கும். இன்று பொருட்களின் விலை என்பதும் நாள்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது.
ஆகவே லாபத்தை அதிகரிக்க நிறுவனங் கள் ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளம் முதலான பயன்களின் ஒட்டுமொத்த அளவை குறைப்பது ஒன்றே வழியாக உள்ளது. அதாவது, வேலையின் தேவைக்கு ஏற்ப புதிய ஊழியர்களை நியமனம் செய்யாமலிருப்பது, வேலை நேரத்தை அதிகரிப்பது, குறைந்த சம்பளத்தில் தற்காலிக காண்ட்ராக்ட் ஊழியர் களை நியமித்தல், இருக்கும் நிரந்தர ஊழியர்களை விருப்பு ஓய்வு போன்ற திட்டங்கள் மூலம் குறைத்தல், பல படிகளை நிறுத்துதல் அல்லது குறைத்தல், ஓய்வுப் பாதுகாப்பு செலவீனங்களை தவிர்த்து, புதிய திட்டங்களை செயல் படுத்துதல் போன்ற வழிகளை கடைபிடிக்கின்றன.
இன்னொருபுறம், இரண்டு வகை கணக்கு களை கடைபிடித்து அரசின் வரியை ஏய்த்து கருப்புப்பண குவியலை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உருவாக்குகிறாகள். நாட்டின் அரசு திட்டமிட்டதை தோல்வி அடையச் செய்வதுடன், பொருளாதாரத் தையும் சீர் குழைக்கிறது. வளர்ச்சி, விலைவாசி, பணவீக்கம் எதுவும் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலை. பெரும்பகுதி மக்களின் அன்றாட துன்பங்கள் தனி ஆட்சி நடத்து கிறது. உற்பத்தி நிறுவனங்கள், ஒத்துக் கொண்ட சுற்று சூழல் மாசுகட்டுபாடுகளை செயல்படுத்தாமல், தங்கள் லாபத்தை மேலும் பெருக்கிக்கொள்கின்றன. குறுக்கே வரும் அரசியல் மற்றும் அதிகார வர்க்கங்கள். காவல் மற்றும் நீதி நிர்வாகங்கள், கருப்புப் பணத் தாலேயே அடித்து வீழ்த்தப்படுகின்றன. லாபத்தின் நிறம் சுரண்டல், ஊழல், கொழுத்தல்.
எங்கே செல்கிறோம்?
எதையும் செய்யும் திறமையுள்ளவன் வாழ்ந்து கொள்ளலாம். மற்றவர்கள் முடியு மட்டும் வாழ்ந்து போகலாம். சமுதாய நோக்கம் என்றெல்லாம் பேசுவது தேவையற்றது என்கிற நிலை. இந்திய அரசியல் சாசனம், பல்வேறு சட்டங்கள் அப்படியே இருந்து விட்டுப்போகட்டும். அரசுகளும், பணம் படைத்தோரையும் இவை எதுவும் ஒன்றும் செய்யாது என்ற நிலை. காரணம், பணம் படைத்தோர் கையில் இவற்றை செயல்படுத்த வேண்டிய ஆட்சியாளர்கள்.
இப்போது மக்கள் முன் உள்ள கேள்வி, இதை எவ்வளவு தூரம், எவ்வளவு நாள் அனுமதிக்கப் போகிறோம் என்பதுதான்.