சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் உன்னத் தலைவர்களாக கருதப்படும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஸ்டாலின் போன்றவர்களுக்கு அடுத்தபடியாக விளங்கிய தலைவர் மாவோ அண்மை காலமாக வெளிவரும் கட்டுரைகள், செய்திகள் பெரும்பாலானவை மாவோவின் சாதனைகளை கொச்சைப்படுத்துபவையாகவும் திரிபுபடுத்துபவையாகவும் இருக்கின்றன.
தலைவர் மாவோவை நினைவு கூறும்பொழுது அவர் சாதித்தவை எவை, அவர் எத்தகைய சூழ்நிலைகளில் இவற்றைச் சாதித்தார். அவர் சீனமக்களுக்கும், உலக மக்களுக்கும் காட்டிச்சென்ற பாதை என்ன என்பவற்றை நாம் கற்றுணர்ந்தால் மட்டுமே நமது நாட்டிலும் நடந்துக் கொண்டிருக்கும் அடக்குமுறையை அறிந்து மத இனப்பாகுபாடு அற்ற சகலமக்களுக்கும் சமத்துவமான மக்கள் சமுதாயமொன்றைக் கட்டியெழுப்பும் பணியில் முன்னேறுவதற்கு அடித்தளம் அமைத்தவர்களாவோம்.
ஏனைய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் தலைவர் மாவோ அவர்கள் மார்க்சிச – லெனினியத்தை மிகவும் இலகுவான முறையில் சீனாவிற்கும் உலகிற்கும் விளங்கினார். சீனாவில் ஒரு சக்திமிகு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி, அதன் தலைமையில் ஒரு கட்டுப்பாடான விடுதலைப் படையை உருவாக்கி, பல்வேறு கருத்துக்களையும், கொள்கைகளையும் கொண்டிருந்த மக்களையும் கட்சிகளையும் பொது எதிர்க்கெதிராக ஒருபரந்த ஐக்கிய முன்னணி மூலம் அணிதிரட்டித் ஏகாதிபத்தியத்தையும், பிரபுத்துவத்தையும், தரகு முதலாளித்துவத்தையும் இறுதியில் தோற்கடித்தமை ஓர் அளப்பரிய சாதனையாகும்.
ஒரு நீண்ட மக்கள் யுத்தத்திற்கு தேவையான மூல உபாயங்களையும், தத்திரோபாயங்களையும் வகுத்து கிராமங்களை முதலில் விடுவித்து இறுதியில் நகரங்களை கைப்பற்றி முழுத் தேசத்தையும் விடுதலை செய்து மக்கள் ஜனநாயகத்தை ஏற்படுத்தியது மற்றுமொரு சாதனையாகும்.
அரைக்காலனித்துவ அரை நிலப்பிரபுத்துவ நாடொன்றில் சகல ஏகாதிபத்திய விரோத சக்திகளையும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் ஐக்கியப்படுத்தி ஜனநாயக புரட்சியை வென்றெடுத்து அதன் அடுத்தகட்டமான சோஷலிசத்தை ஏற்படுத்த வழிவகுத்தமை விடுதலைக்காகப் போராடும் அனைத்துலக மக்களுக்கும் ஒரு பாடமாக அமைகிறது.
சீனாவை சுயசார்பின் மூலம் ஒரு பலம் மிக்க சோஷலிச நாடாக்க நடவடிக்கை எடுத்தமை, சோவியத் யூனியன் தலைமையில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உருவெடுத்த நவீன திரிபு வாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன் எடுத்தமை என்பன மூலம் மாக்சியம் லெனினியத்தையும், புரட்சிகர இயக்கங்களையும் வளர்த்தெடுத்து உலகின் அடக்கியொடுக்கப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக மாவோ விளங்கினார்.
சீனாவில் அரசியல் அமைப்பின் முகவுரையிலேயே சீனா பல இனங்களைக் கொண்ட ஒரு நாடு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இனங்கள் யாவும் சமமானவை என்றும் ஒரு இனம் வேறு ஓர் இனத்தை அடக்கப்படாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சிறுபான்மை இனத்தவர்கள் முழுச் சனத்தொகையில் 8.04 வீதமானவர்கள் மட்டுமே இந்த 8.04 விதத்தினருள் 55 இனங்கள் உள்ளன. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாவோ அவர்கள் பெரும்பான்மை ஹான் இனத்தின் தலைவராக மட்டுமல்லாமல் சீனாவின் சகல இன மக்களின் ஒப்பற்ற தலைவராகவும், உலகின் சகல அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராகவும் விளங்கினார்.
சீனாவில் சிறுபான்மை இனத்தவர்கள் சனத்தொகையில் 8.04 வீதம் மட்டுமேயென்ற போதிலும் சுயாட்சி அமைப்புக்கள் வழங்கப்பட்ட பிரதேசங்களின் நிலப்பரபானது 62மூ (அறுபத்திரண்டு வீதம்) என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சீனாவின் சிறுபான்மை இனங்களை கிண்டல் செய்யும் அவமானம் செய்யும் முகவரிகள், இடப்பெயர்கள், குறியீடுகள் யாவும் முழுச்சீனாவிலிருந்தும் அகற்றப்பட வேண்டுமென்ற கட்டளையை சீன மத்திய அரசாங்கம் 1951 ஆம் ஆண்டிலேயே விடுத்திருந்தது. சகல அரசாங்க அமைப்புகளிலும் சகல சிறுபான்மை இனப் பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனர். ஆகச் சிறிய சிறுபான்மை இனமான ஷெசான் (சுமார் இரண்டாயிரம் பேர்) தேசிய மக்கள் காங்கிரசில் ஒரு பிரதிநிதியைக் கொண்டிருக்கிறது.
சீனா முழுமையாக விடுதலை அடையுமுன்பே உள்மொங்கோலிய சுயாட்சிப் பிரதேசம் 1947 மே மாதம் 1ந் திகதியே நிறுவப்பட்டது. இங்கு கவனிக்கத்தக்கது சீனாவின் சிறுபான்மை இனங்கள் மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின்பால் கொண்டிருந்த நம்பிக்கையை இது காட்டுகிறது. கிங்கியாங் உய்குர் சுயாட்சிப் பிரதேசம் பதினாறு (16) இலட்சம் சதுரகிலோ மீட்டர் பரப்புடையது – அதாவது சீனாவின் நிலப்பரப்பில் ஆறில் ஒன்று – சனத்தொகை ஒன்றரைக் 1 (½) கோடியளவேயாகும். தீபெத் சுயாட்சிப் பிரதேசத்தின் நிலப் பரப்பு பன்னிரண்டு (12) இலட்சம் சதுர கிலோ மீட்டராகும். இது சீனாவில் நிலப்பரப்பில் எட்டில் ஒன்றாகும் அதன் சனத் தொகையோ சுமார் இரண்டு கோடியாகும் சீனாவில் ஐந்து சுயாட்சிப் பிரதேசங்கள் உள்ளன. அவற்றிற்கு வெளியேயும் குறிப்பிட்ட ஐந்து இனங்களும் பரந்து வாழ்கிறார்கள். அங்கும்கூட இவர்களுக்கு சுயாட்சி அமைப்புகள் உள்ளன. இதுதான் சோஷலிசத்திற்கும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்குமிடையேயான வித்தியாசம்.
எனவே சீனாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது அதிகம் உள்ளது மாவோ வின் வழிகாட்டலில் சீனக் கம்யூனிஸ்ட் தலைமையில் உருவாக்கப்பட்ட சீனாவின் சுயாட்சி அமைப்புக்கான சட்டத்தை நாம் கற்றறிந்து நமது நாட்டின் சூழலுக்கு ஏற்றவகையில் நமது நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயலுவது நமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஐக்கியத்திற்கும் வழிவகுக்கும்.