இன்றைய உலகில் மார்க்சியம் என்பது மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனையாகும்.
மார்க்சியம் உலகைப் புரிந்து கொள்வதற்கு மட்டுமல்ல. அதை மாற்றியமைப்பதற்கும் வழி காட்டும் தத்துவமாகும். பல்வேறு தத்தவப் போக்குகளுக்கிடையே முதன்முதலாக உலகைப் புரிந்துகொள்ளவும், மாற்றியமைக்கவும் வழிகாட்டிய தத்துவம் மார்க்சியமே.
மார்க்சியமென்பது வரட்டுக் கோட்பாடல்ல. அது வளரும் விஞ்ஞானமாகும். உலகில் புதிய நிலைமைகள் தோன்றும்போது அதைப் புரிந்துகொள்ளவும், புரட்சிகரமாக மாற்றியமைக்கவும் அது வழிகாட்டுவதோடு அதுவும் வளர்ச்சியடைகிறது.
உலகில் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடைந்த ஒரு புதிய நிலை தோன்றியபோது அதை மார்க்சிய அடிப்படையில் விளக்கி புரட்சிக்கு வழிகாட்டியது லெனினியம்.
அப்போது மார்க்சியம், மார்க்சிய-லெனினியமாக வளர்ச்சியடைந்தது. அறுபதாம் ஆண்டுகளிலிருந்து உலகில் சோசலிச நாடுகளில் முதலாளித்துவ மீட்சியும் அதற்கு எதிரான போராட்டமும் தொடங்கியிருக்கிறது.
ரசியாவில் குருசேவ் புரட்டல்வாதிகள் அதிகாரத்தைக் கைப்பற்றி முதலாளித்துவத்தை மீட்டமைத்து ஏகாதிபத்தியமாகச் சீரழித்திருக்கிறார்கள்.
இதை மார்க்சிய-லெனினிய அடிப்படையில் புரிந்து விளக்கி புரட்சிக்கு வழிகாட்டியது மாசேதுங் சிந்தனை.
அப்போது மார்க்சிய-லெனினியம், மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனையாக வளர்ச்சியடைந்தது.
மாசேதுங் சிந்தனை சோசலிச நாடுகளில் முதலாளித்துவப் பாதையாளர்களுக்கு எதிராகவும், முதலாளித்துவ மீட்சிக்கு எதிராகவும் பாட்டாளி வர்க்கத்தைத் தயார்படுத்துகிறது. பாட்டாளி வர்க்க சர்வதிகாரத்தின் கீழ் புரட்சியைத் தொடர்ந்து நடத்துவதன் மூலம் கம்யூனிச சமுதாயத்தைக் கட்டமைக்க வழிகாட்டுகிறது.
மாசேதுங் சிந்தனை சோசலிசப் போர்வையில் வரும் ஏகாதிபத்தியத்தை- சமூக ஏகாதிபத்தியத்தை –உலக மக்களுக்கும், நாடுகளுக்கும் அடையாளம் காட்டுகிறது. அவற்றின் கபடத்தனமான சோசலிசம் மற்றும் சமாதான முழக்கங்களை அம்பலப்படுத்தி சகலநாட்டு மக்களின் புரட்சிபாதையையும் பாதுகாக்கிறது.
மாசேதுங் சிந்தனை இன்றைய உலகைப் புரிந்துகொள்வதற்கும், புரட்சிகரமாக மாற்றியமைப்பதற்கான போராட்டத்தை நடத்துவதற்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு அவசியமான ஆயுதமாகும்.
எனவே இன்று பாட்டாளி வர்க்கம் மார்க்சிய- லெனினிய-மாசேதுங் சிந்தனையை தனது தத்துவார்த்த ஆயுதமாக ஏந்திக் கொண்டிருக்கிறது.
திரிபுவாதம் என்பது முதலாளித்துவ சித்தாந்தம் என்று மாவோ சொன்னார். மாசேதுங் சிந்தனையை எதிர்ப்பதில் பல வண்ணத் திரிபுவாதிகளும் தத்தமக்கு உரிய முறையில் செயல்படுகிறார்கள்.
கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களுக்கு எதிராக, வர்க்க எதிரிகளும், ஏகாதிபத்தியவாதிகளும் பயன்படுத்தும் அதே இழிமொழிகளையும் பழமொழிகளையும் தோழர் மாவோவுக்கு எதிராகப் பயன்படுத்துவதன் மூலம் மாசேதுங் சிந்தனையை மறுத்துவிட முயல்கிறார்கள்.
மாஸ்கோ ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களின் அடிவருடிகளாக உலகம் முழுவதும் இருக்கும் திருத்தல்வாத வலதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகளான முதலாளித்துவக் கட்யூனிஸ்டுகளும்.
மற்றொரு பிரிவினர் இருக்கிறார்கள் அவர்கள் புரட்சியை பேசிக் கொண்டே ஏமாற்ற செய்கின்றனர்.
இவர்கள் மாசேதுங்கை மாபெரும் பாட்டாளி வர்க்கத் தலைவர்களில் ஒருவர் என்று புகழ்பாடி அதே நேரத்தில் மாசேதுங் சிந்தனை என்ற பாட்டாளி வர்க்க தத்துவ ஆயுதத்தை தூக்கியெறிந்து விடுவதை இவர்கள் தந்திரமாகக் கொண்டிருக்கிறார்கள். சீனத்தில் டெங், இந்தியாவின் வி.மி. போன்ற மற்றொரு பிரிவினர் இருக்கிறார்கள். லெனினியத்தை தூக்கியெறிந்துவிட்டு லெனினியத்தையே பின்பற்றுவதாகக் குருசேவ்-கொர்பசேவ் கும்பல் கூறுவது போல் இவர்கள் மாசேதுங் சிந்தனையை உண்மையில் தூக்கியெற்ந்துவிட்டு அதைப் பின்பற்றுவதாகக் கபடத்தனமாக அறிவிக்கிறார்கள்.
இங்கு….
நக்சல்பாரி விவசாயிகளின் பேரெழுச்சிக்குப்பின் கட்சியை கட்டும் முயற்சியில் தத்துவார்த்தப் போராட்டத்தின் முக்கியத்துவத்தைப் புறக்கணித்ததன் எச்சங்களே இவை. இவை கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் சித்தாந்த ஒற்றுமைக்குத் தடையாக இருப்பதுடன் திரிபுவாதத்துக்குப் பலியாகும் அபாயம் கொண்டதும் ஆகும்.
மார்க்சிய-லெனினிய- மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடித்து சகல வண்ணத் திரிபுவாதத்துக்கும் எதிராக தீர்க்கமான போராட்டத்தை நடத்துவதன் மூலம் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களிடையே சித்தாந்த ஒருமைப்பாட்டை ஏற்படுத்தவேண்டும். தேசிய, சர்வதேசிய அளவில் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களை ஐக்கியப்படுத்த வேண்டும். இது இன்றுள்ள மிக முக்கியமான கடைமையாகும்.
“மாபெரும் விவாதமும்” பிற தத்துவார்த்த ஆவணங்களும் வெளியிடப்படுவது இதற்கு உதவும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.
‘மாபெரும் விவாதம்‘ நூல் முன்னுரை என்ற நூலிலிருந்து.
