மார்க்சிய ஆசான் ஸ்டாலின் பற்றி
மார்க்சிய ஆசான் ஸ்டாலின் பற்றி

மார்க்சிய ஆசான் ஸ்டாலின் பற்றி

பெட்ரோ கிராட் லெனின் கிராட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. லெனினது படைப்புக்களைத் தொகுத்து உலகின் அனைத்து மொழிகளிலும் வெளியிட லெனின் இன்ஸ்டிடியூட் அமைக்கப்பட்டது. மாஸ்கோவிலும் மற்ற நகரங்களிலும் லெனின் நினைவிடங்கள் அமைக்கப்பட்டது. தோழர் ஸ்டாலின் தன்னை லெனினது மாணவன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொண்டார். அவர் எழுதியிருந்த விமர்சனங்களைக் கணக்கில் கொண்டு செயல்பாடுகளை அமைத்துக் கொண்டார்.

லெனினிசம்

இக்காலத்தில் லெனினிசத்தின் அடிப்படைகள் என்ற நூலை ஸ்டாலின் எழுதினார். நாம் வாழும் காலத்தின் மார்க்சியமே லெனினியம் என்று நிறுவினார். ஒரு நாட்டில் மட்டுமே சோசலிசம் வெற்றி பெற முடியாது என்று ட்ராட்ஸ்கி குறிப்பிட்டதை மறுத்தார். சோவியத் யூனியன் தனது சொந்த உழைப்பின் மூலம் சோசலிசத்தைத் தம் நாட்டில் நிறைவேற்ற முடியும் என்று குறிப்பிட்டார்.

1925 ஏப்ரல் 27, 28, 29 தேதிகளில் நடைபெற்ற கட்சியின் 12 ஆவது மாநாட்டிலும் இதனை முன்வைத்து கட்சியை இதன் கீழ் அணி திரளச் செய்தார். சோவியத் புரட்சிக்குப்பின் அதனை வீழ்த்த அணி திரண்ட முதலாளித்துவ சக்திகள் தவிர்க்க முடியாமல் சோவியத் யூனியனுடன் உறவு கொள்ள முயன்றன. பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளுடன் தூதரக உறவுகள் ஏற்பட்டன.

கட்சிக்குள் கருத்துப் போர்

தோழர் லெனின் புதிய பொருளாதார கொள்கையை உருவாக்கினார் அல்லவா? அதனை ஏற்றுச் செயல்பட்டு வந்த காலத்தில் புதிய கடுமையான இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. இது முதலாளித்துவ வளர்ச்சிக்குத்தான் இட்டுச் செல்லும். சோசலிச உற்பத்தி முறைக்கு உதவாது என்றனர்.

1925 டிசம்பர் 18 அன்று 14 ஆவது கட்சிக் காங்கிரஸ் துவங்கியது. கட்சிக்குள் பதற்றமும் இனக்கமற்ற போக்கும் இருந்தது. ஸ்டாலின் அறிக்கை சமர்ப்பித்தார். லெனினது வழிகாட்டுதல் எவ்வளவு பொருத்தமானது என்பதையும் அதனை எதிர்ப்பது பொருத்தமற்றது என்பதையும் வெளிப்படுத்தினார். இயந்திரங்களையும் பிறவற்றையும் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். நாம் நமது சொந்தக்காலில் இருந்து முன்னேறி ஏற்றுமதி செய்யும் நாடாக மாற உறுதி பூணுவோம் என்றார்.

கட்சியின் பெயர் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்) என்று மாற்ற காட்சியின் 15 ஆவது காங்கிரஸ் 1926 அக்டோபர் 26 முதல் நவம்பர் 3 முடிய நடைபெற்றது. கட்சியில் ஒற்றுமை வேண்டும் லெனினியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தைக் கட்சி அங்கத்தினர்களில் பெரும்பான்மையினர் ஏற்றனர்.

சைபீரியப் பயணம்

விவசாய உற்பத்தி பற்றியும் பேசப்பட்டது. உற்பத்தியின் உபரியில் அரசுக்குத் தராமல் பதுக்குவோர் பற்றிய விவாதத்தில் கடும் நடவடிக்கை வேண்டும் என்று ஒரு கருத்து இருந்தது. சட்ட நடவடிக்கை மட்டும் உதவாது. கருத்துப் பிரச்சாரமும் தேவை என்று ஸ்டாலினும் பிறரும் கூறினர். மாற்றாரும் ஏற்றனர். இதன்படி தோழர் ஸ்டாலின் சைபீரியப் பகுதிகுச் சென்றார். விவசாயத்தில் கூட்டுப் பண்ணையின் அவசியத்தை விளக்கினார்.

இக்காலத்தில் கட்சித் தலைவர்கள் பற்றியும் உறுப்பினர்கள் பற்றியும் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறை குறித்தும் ஏராளமாக எழுதினார். உலகக் கம்யூனிட்டுகளுக்கு இன்றளவும் வழிகாட்டுவதாக இது அமைந்துள்ளது.

தோழர் லெனின் மறைவிற்குப் பின் அவரது கருத்துக்களை எதிர்த்தோரை அரசியல் சித்தாந்த ரீதியில் எதிர்ப்பதில் முன் நின்றார். தனி ஒரு நாட்டில் சோசலிசம் சாத்தியமே என்பதை கட்சிக்குள்ளும் வெளியிலும் பேசி எழுதி அணி திரட்டினார்.

லெனினிசத்தின் அடிப்படைகள் என்னும் நூலை எழுதினார். இது உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு இன்றளவும் உதவுகிறது. லெனினிசத்திற்கு மாற்றாக ட்ராட்ஸ்கியிசம் முன் வைக்கப்பட்டதை இந்நூலில் முறியடித்தது.

வாழ்க்கை முறை

கடசியிலும் ஆட்சியிலும் உயர் பொறுப்பில் இருந்த தலைவன் எத்தகைய இன்ப வாழ்வையும் அமைத்துக் கொள்ள முடியும். ஆனால், அவர் ஒரு எளிய பணியாளர் குடியிருப்பில் தான் வசித்தார். அவரது மனைவி நாடியா, மூத்த மனைவிக்கு பிறந்த மூத்த மகன் யாக் கோபு, நாடியாவுக்குப் பிறந்த மகள் வாசிலி அடுத்துப் பிறந்த ஸ்வாட்லானா ஆகியோர் இதில் தான் இருந்தனர். ஏராளமான செயலாளர்களை வைத்துக் கொள்ளவில்லை. அன்றைய எழுத்தாளர்கள் பலரும் இது குறித்து வியந்து எழுதினர்.

ஊருக்குத்தான் உபதேசம்
உனக்கும் எனக்கும் இல்லை

என்று நம் ஊரில் ஒரு வழக்கு மொழி இருப்பதை அறிவோம். ஆனால் ஸ்டாலின் உதட்டுக்கும் உள்ளத்திற்கும் உறவு கொண்டவராகவே திகழ்ந்தார்.

நான் லெனினின் மாணவன் அவரது தகுதி படைத்த மாணவனாக வாழவே விரும்புகிறேன் என்றார். 1924 டிசம்பர் 21 அன்று அவரது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

எனது வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்கள் நலனுக்காகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காகப் உலகக் கம்யூனிசத்துக்காக என்னை அர்ப்பணிப்பேன். உடலில் ஒரு துளி இரத்தம் உள்ள வரையிலும் பாடுபடுவேன் என்று இச்சமயம் செய்தி விடுத்தார். தன்னை வாழ்த்தியவர்களுக்கு அளித்த பதிலாக இதனையே தெரிவித்தார். ஆட்சியிலும் கட்சியிலும் தன்னலமற்றவராக, தன்னிகரற்றவராகத் திகழ்ந்தார்.

ஐந்தாண்டுத் திட்டம்

தொழில் துறையிலும், விவசாயத் துறையிலும் பின்தங்கியிருந்த நாட்டை முன்னேற்ற ஐந்தாண்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தோழர் லெனின் அவர்களின் புதிய பொருளாதாரக் கொள்கையை அடியொற்றி இத்திட்டம் உருவாக்கப்பட்டது. கட்சிக் காங்கிரஸ் ஏற்றது. கட்சி உணர்வாகவும், மக்கள் உணர்வாகவும் மாறியது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளுக்கும் சோவியத் யூனியனுக்கும் உள்ள மாபெரும் இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது.  மக்களுக்கு கல்வி புகட்டப்பட்டது. தொழிலாளர்களுக்குத் தொழில் நுட்பம் பயிற்றுவிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் இதனைக் கூர்ந்து நோக்கியது. முதலாளித்துவ அறிஞர்கள் இதனைக் கேலி பேசினர். இது இன்பக் கனவாக இருக்குமேயன்றி நனவாக முடியாது என்றனர்.

விவசாயத்தில் பழைய ஏர்களுக்குப் பதில் டிராக்டர்கள் வந்தன. கூட்டுப் பண்ணைகள் உருவாயின. கூட்டு உழைப்பு, கூட்டு சிந்தனை என்பது ஏற்பட்டது. குலாக்குகள் தொல்லை தந்தனர். அது விவசாய மக்களால் முறியடிக்கப்பட்டது. கிராமப்புற வேலையின்மை ஒழிக்கப்பட்டது. விளைச்சல் பெருகியது. பசியும், பஞ்சமும் நீங்கியது. பற்றாக்குறை மாறியது. உபரியாக விளைச்சல் ஏற்பட்டது.

தொழில்துறையில் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டது. கனரகத் தொழில்கள் ஏற்படுத்தப்பட்டன. 1930 ஜனவரிக்கும் 1933 அக்டோபருக்கும் இடைப்பட்ட காலத்தில் 6,60,000 தொழிலாளர் கம்யூனிஸ்ட்டுகள் புதிய தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெற்றனர்.

அறிவு ஜீவிகள் என்பர் தொழிலாளி வர்க்கத்திலேயே தோன்றினர். தோற்றுவிக்கப்பட்டனர். விவசாய நாடாக இருந்தது தொழில் வள நாடாக மாற்றப்பட்டது. 1928 இல் தொடங்கிய திட்டம் 1933 ஆம் ஆண்டு முடியும் முன்பே நிறைவேறியது. உலகம் வியந்தது. தோழர் ஸ்டாலின் 1933 ஜனவரியில் நடந்த மத்தியக்குழுவின் கூட்டத்தில் திட்டம் பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் அறிக்கை வைத்தார்.

இதனை சோவியத் யூனியனின் இரண்டாம் புரட்சி என்றும் மக்கள் மத்தியில் ஸ்டாலின் புரட்சி என்றும் அறிவியல், பொருளியல் வல்லுநர்களாலும் மக்களாலும் அழைக்கப்பட்டது. இவ்வெற்றி கண்டு தொழிலாளி வர்க்கம் ஆனந்தக் கூத்தாடியது. முதலாளித்தவ சக்திகள் இதனை நீடிக்காமல் தடுக்க தொடர்ந்து முயற்சி செய்தனர்.

கட்சிக்குள் தொல்லை

ட்ராட்ஸ்கி, ஜினோவியேவ் போன்றோர் இவ்வெற்றிக்குப் பின்பும் தங்களைத் திருத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து சீர்குலைவு வேலைகளில் ஈடுபட்டனர். இது சுரண்டும் வர்க்கத்திற்கு ஆதரவாக மாறியது. அவர்கள் இவர்களைப் பெரிய தியாகிகள் ஆகவும் ஸ்டாலின் பெரும் சர்வாதிகாரி என்றும் செய்திகளைப் பரப்பினர். இன்றளவும் அதனை வெளியிடுகின்றனர்.

கொலை

லெனின் கிராட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஆகவும் சோவியத்தின் தலைவர் ஆகவும் இருந்த தோழர் கெர்கிரோவ் படுகொலை செய்யப்பட்டார். இவர் போல்ஷ்விக் தியரியில் உறுதியாக இருந்து ட்டிராட்ஸ்கியத்தை எதிர்த்துப் போராடிய தலைவர். ஸ்டாலின் அவ்வியக்கத்திற்கு நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தினார். இது ஸ்டாலினுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக கருதப்பட்டது. இந்தக் கொலை 1934 ஜனவரி முதல் நாள் நடைபெற்றது. கட்சிக்குள் விழிப்புணர்வு தேவை என்றும் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

புதிய அரசியல் சாசனம்

1935 பிப்ரவரி 6 ஆம் நாள் சோவியத் யூனியன் ஏழாவது காங்கிரஸ் கூடியது. 1917 புரட்சி முடிந்தது. 1924 முதலாவது அரசியல் அமைப்பு சாசனம் ஏற்கப்பட்டது. தற்போதைய புதிய சூழலில் புதிய அரசியல் அமைப்புச்சட்டம் தேவை என்ற முடிவு செய்யப்பட்டது. அரசியல் சாசன நகல் தயாரிக்கும் குழுவிற்கு ஸ்டாலின் தலைமையேற்றார். அரசியல், அறிவியல், வரலாறு, பொருளியல் ஆகியவற்றில் வல்லுநர்கள் இக்குழுவில் இருந்தனர். இக்குழு ஓராண்டு காலம் ஆய்வு செய்து நகல் தயாரிக்கப்பட்டது.

மக்களிடையே கருத்து கேட்கப்பட்டது. ஆறு மாத காலம் விவாதம் நடந்தது. 6 கோடி பிரதிகள் அனுப்பப்பட்டன. 1,54,000 திருத்தங்கள் முன்மொழியப் பட்டன. பல கருத்துக்கள் ஒரே மாதிரி இருந்தன. இறுதியில் 43 திருத்தங்கள் செய்யப்பட்டன. 1936 டிசம்பர் அன்று இக்கூட்டம் சோவியத் காங்கிரசால் ஏற்கப்பட்டது. அரசையும் அதன் அதிகாரத்தையும் வலுப்படுத்த மக்களின் வாழ்வை மேம்படுத்த இச்சட்டம் உதவியது. மக்கள் மத்தியில் இது ஸ்டாலின் கட்டம் என்று அழைக்கப்பட்டது.

எதிரிகளின் ஆத்திரம்

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியர் திண்ணியராகப் பெரின் என்ற குறளுக்கேற்ப தெளிவான சித்தாந்தப் பின்புலமும் தின்மையான நுண்ணிய அறிவும் கொண்ட கட்சி உறுப்பினர்களும் தலைவர்களும் தோழர் ஸ்டாலின் தலைமையில் ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெறுவதை எதிரிகள் பொறுத்துக் கொள்ள முடியாமல் துடித்தனர். லெனின் கிராட் செயலாளர் படுகொலையில் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சியான விபரங்கள் வெளிவந்தன. கட்சிக்குள் பதவி ஆசை கொண்டோரின் மலிவான வர்க்க விரோதப் போக்குகள் கண்டறியப்பட்டன. ஏராளமான தனி நபர் படுகொலைகளுக்கு ஏராளமான தனிநபர்களுக்கு கொலைகளுக்கு அந்நிய உளவாளிகளுடன் திட்டமிடப்பட்டிருந்தது தெரிய வந்தது. தோழர் ஸ்டாலின் கட்சி அங்கத்தினர்களை உஷார்படுத்தினார். கட்சிக் கல்வியை மேலும் மேலும் ஊக்கப்படுத்தினார். எதிரி வர்க்கக் கருத்துக்களால் கவரப்பட்டு கட்சிக்குள் இருப்பவர்களைக் களையடுக்கும் முடிவு கட்சியில் கொடுக்கப்பட்டது. இதில் கவனமாகவும் நிதானமாகவும் ஈடுபட முடியு செய்யப்பட்டது. தோழர் ஸ்டாலின் விரிவாக எழுதினார். 1930-38 ஆம் ஆண்டுகளில் இவ்வியக்கம் நடத்தப்பட்டது. இந்தக் கடுமையான இயக்கத்தில் பல இடங்களில் விவாதங்களும் நடந்தன. இதனை ஸ்டாலின் தலையிட்டு சரிபடுத்தினார். இவ்வியக்கம் சோசலிசத் தாய் நாட்டைக் காப்போம் என்கிற முறையில் தேச பக்த உணர்வுடன் நடத்தப்பட்டது.

இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் ஹிட்லரது நாஜிப் படையினருக்கு சோவியத் நாட்டில் உளவாளிகளின் கிடைக்கவில்லை. பல்வேறு நாடுகளில் அவர்களுக்கு காட்டிக் கொடுப்போர் இருந்தனர். சோவியத்தில் ஒருவர் கூட கிடைக்கவில்லை. கட்சிக்குள்ளும் வெளியிலும் நடத்தப்பட்ட களையெடுப்பு அல்லது நெறிப்படுத்தும் இயக்கம் இதற்கு மிகவும் பயன்பட்டது.

கல்வி

இக்காலத்தில் தோழர் ஸ்டாலின் தமது உரைகளில் எழுத்துக்களில் மார்க்சிய-லெனினியம் பற்றி ஏராளமாக குறிப்பிட்டார். இதில் பெற வேண்டிய ஞானம் சோசலிச கட்டுமானத்தில் இதனைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் பற்றியும் குறிப்பிட்டார். சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்) வரலாறு என்ற நூலை எழுதினார். இதிலேயே இயக்கவியல் வரலாற்றியல் பொருள் முதல்வாதம் பற்றியும் எழுதியிருந்தார். 1938 இல் இந்நூல் கட்சியின் மத்தியக்குழுவால் ஏற்றக்கப்பட்டு வெளிவந்தது. உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு இந்நூல் இன்றளவும் துணை புரிகிறது.

போர்முகம்

1914 இல் துவங்கி 1918 வரை முதலாம் உலகப் போர் நடந்ததும் அதன் மத்தியில் 1917 நவம்பரில் சோவியத் யூனியன் தனது புரட்சியை முடித்து புரட்சிகர அரசை அமைத்ததும் நாம் அறிந்ததே!

இந்த அரசு நீடிப்பதையும், நிலைபெறுவதையும் விரும்பாத முதலாளித்துவ சக்திகள் இதற்கு எதிரான கருத்துக்களை விதைத்துக் கொண்டே இருந்தன. அதே சமயம் உலக நாடுகளைக் கொள்ளையடிக்க தங்களுக்குள் மோதிக் கொண்டும் இருந்தன. கம்யூனிச அபாயத்தில் இருந்து உலகைக் காக்கப் போகிறோம் என்று கூறிக் கொண்டன.

ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் இதில் முன்னின்றன. 1935 இல் ஹிட்லர் ஜெர்மனியை இராணுவமயமாக்கினார். கம்யூனிஸ்ட் எதிர்ப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் ஜெர்மனியும், ஜப்பானும் கையொப்பமிட்டன. ஜெர்மனும், இத்தாலியும் இதனைச் சொல்லிக் கொண்டே ஸ்பெயின் நாட்டை ஆக்கிரமிப்பு செய்தன.

1937 இல் இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகியவை இணைந்து கூட்டணியை அமைத்தன. ரோம், டோக்கியோ, பெர்லின் கூட்டணி என்று இது அழைக்கப்பட்டது.

1939 மார்ச் 10 அன்று கம்யூனிஸ்ட் கட்சியின் பதினெட்டாவது மாநாட்டில் தோழர் ஸ்டாலின் அறிக்கை சமர்ப்பித்தார். போர் மேகங்கள் சூழ்ந்திருப்பதையும், முதலாளித்துவ சூழ்ச்சிகளையும், பாசிச சக்திகளின் அபாயத்தையும் அவர் குறிப்பிட்டார். இதனை வெற்றி கொள்ள கட்சி ஊழியர்களைப் பயிற்றுவிக்க வேண்டுமென்றார்.

1939 மார்ச்சில், பாசிச எதிர்ப்புக் கூட்டணி அமைக்க பிரிட்டனும், பிரான்சுடனும் பேசினார். இரு நாடுகளும் இழுத்தடித்தன. காலதாமதம் செய்தன இது ஹிட்லருக்கு சாதகமானது. நாம் சோவியத் யூனியனைத் தாக்கினால் இவர்கள் மௌனமாக இருப்பார்கள் எனக் கருதினான். 1939 மார்ச் 15 அன்று செக்கோஸ்லோவேகியாவைத் தாக்கிக் கைப்பற்றினான்.

முதல் உலக மகாயுத்தம் முடிந்த காலத்தில் 1919 ஆம் ஆண்டு போர்தடுப்பு முயற்சிக்காக சர்வதேச சங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இது ஆங்கிலத்தில் League of Naboro என்று அழைக்கப்பட்டது. இதன் ஆதரவோடு மகா கூட்டணி அமைக்கலாம் என ஸ்டாலின் யோசனை தெரிவித்தார். இதனைப் பிற முதலாளித்துவ நாடுகள் ஏற்கவில்லை.

1939 ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் பிரிட்டனும், ஜெர்மனியும் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டன. பிரிட்டனும் ஹிட்லரும் மோதக் கூடாது. வேறு எங்கும் தாக்கலாம் என்பது இதன் உள்ளடக்கம்.

சோவியத் எதிர்ப்பு முன்னணி உருவாவதை ஸ்டாலின் அதிர்ந்தார். பாசிச எதிர்ப்பு முன்னணி உருவாக நாம் முயன்றால் நிலைமை தலைகீழ் ஆகிறதே என்று கவலை கொண்டார். சோவியத்தை காக்க வேண்டுமென்று கவலை கொண்டார்.

ஹிட்லர் சோவியத் யூனியனுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள தூது அனுப்பினார். முதலில் ஸ்டாலின் தயங்கினார். பிரிட்டனும், பிரான்சும் அவனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதால் தன் நாட்டை தற்காக்க வேறு வழியின்றி ஸ்டாலின் இசைவு தெரிவித்தார்.

1939 ஆகஸ்ட் 24 அன்று சோவியத் – ஜெர்மன் ஒப்பந்தம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் ஆக்கிரமிக்கக் கூடாது என்பது இதன் சாரம். இது அனாக்கிரமிப்பு ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது. பத்தாண்டு காலம் இவ்வொப்பந்தம் நீடிக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டது. ஹிட்லரின் வாக்குறுதிகள் நீர் மேல் எழுத்து போன்றவை தான் என்பது ஸ்டாலினுக்குத் தெரியும். ஸ்டாலின் தமது கொள்கையின் பரமவைரி என்பது ஹிட்லருக்கும் தெரியும். ஆயினும் இவ்வொப்பந்தத்தில் இருவரும் கையொப்பமிட்டனர்.

சோவியத் யூனியன் இக்காலத்தைப் பயன்படுத்தி ஸ்டாலின் தற்காப்புப் பணிகளை முடுக்கிவிட்டார். கட்சி அணிகளை எச்சரிக்கை செய்தார். பாசிச வெறியனாலும் ஆபத்து உண்டு. ஏகாதிபத்திய நாடுகளாலும் ஆபத்து உண்டு. அனைவரையும் ஒரு சேர உடனடியாக எதிர்க்க வழியில்லை. ஆகவே இந்த ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன என்றார். கட்சி அணிகள் இதன் உணர்வைப் புரிந்து கொண்டு மக்களை அணி திரட்டினர்.

இரண்டாம் உலகப் போர்

1939 செப்டம்பர் 1 அன்று போலாந்து நாட்டை ஹிட்லரின் ஜெர்மனி தாக்கியது. அடுத்த தாக்குதல் நமக்கு வரும் என்று பிரிட்டனும் பிரான்சும் கருதின. ஜெர்மனி மீது போர் தொடுத்தன. வரலாற்றில் இடம் பெற்ற இரண்டாம் உலகப் போர் துவங்கியது.

பின்லாந்து

சோவியத் யூனியனில் உள்ள லெனின் கிராட் பின்லாந்துக்கு மிக அருகாமையில் இருந்தது. இதனைக் காக்க வேண்டுமென்றால் பின்லாந்தின் சில பகுதிகள் சோவியத் வசம் தேவை. பின்லாந்திடம் ஸ்டாலின் சில பகுதிகளை குத்தகைக்கு கேட்டார். இதற்காக பல ஆயிரம் சதுரமைல் பரப்பளவை சோவியத் தரும் என்றார். பின்லாந்து முதலாளித்துவ நாடுகளின் பேச்சைக் கேட்டு மறுத்தது. வேறு வழியின்றி சோவியத் யூனியன் பின்லாந்தில் நுழைந்தது. உடனே பின்லாந்துக்கும் உதவி என்ற பெயரில் பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் போரில் இறங்கின. சர்வதேச சங்கம் என்று பார்த்தோம் அல்லவா? அதில் இருந்து சோவியத் யூனியன் விலக்கப்பட்டது.

பின்லாந்துடனான போர் 1940 மார்ச் 13 அன்று முடிவடைந்தது. மார்ச் 14 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்லாந்தை முழுவதுமாக விழுங்கும் எண்ணம் இல்லையென்பதும், சோவியத்தையும் பின்லாந்தையும் ஹிட்லரிடம் இருந்து காப்பது தான் நோக்கம் என்பதும் நிறுவப்பட்டது.

தயார்நிலை

1939க்கும் 41க்கும் இடையே 2900 தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. ஏற்கனவே 9000 பெருந் தொழிற்சாலைகள் 1928க்குப் பின் உருவாக்கப்பட்டிருந்தன. அத்துடன் இவையும் சேர்ந்தன. மின்உற்பத்தி நிலையங்கள், சுரங்கங்கள் ஆகியவையும் அமைக்கப்பட்டு மாபெரும் தொழில்வள நாடாக சோவியத் யூனியன் மாற்றப்பட்டது. ஏராளமான ஆயுதங்களும் தயாரிக்கப்பட்டன. 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் இராணுவ சேவை புரிய வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டது. சிறப்பான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இராணுவ அதிகாரிகள் கூட்டங்களில் ஸ்டாலின் கலந்து கொண்டார். கட்சியையும் தயார்படுத்தினார். போரில் வெற்றி பெற நவீன இராணுவம் தேவை தான். ஆயுதங்கள் தேவை தான். அதைப் பிரயோகம் செய்யும் நுண்ணறிவும் தேவை தான். அதே சமயம் இவை மட்டும் போதாது. அனைவரையும் அரசியல் ரீதியாகத் தயார் செய்வதும் அவசியம் என்றார். பாசிஸ்டுகள் முதலாளித்துவ நாடுகளைத் தாக்குவார்கள். அவர்களும் திருப்பித் தாக்குவார்கள். ஆனால் பாசிஸ்ட்டுகள் கம்யூனிஸ்ட்டுகளைத் தான் முக்கிய எதிரிகளாகத் கருதுவார்கள். ஈவு இரக்கம் இன்றி நம்மை அளிக்க நினைப்பார்கள் என்று எச்சரிக்கை செய்தார்.

பாசிசத்தில் கோரத் தாக்குதல்

1941 ஜூன் 23 அன்று காலை 3 மணிக்கு ஹிட்லரின் ஜெர்மன் படைகள் சோவியத் யூனியனில் அத்து மீறி நுழைந்தன. போர் அறிவிப்பு செய்யாது போர் துவங்கிவிட்டது. சோவியத்துக்குள் ஹிட்லருக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் ஹிட்லாரால் மீறப்பட்டது.

உள்ளத்துக்கும் உதட்டுக்கும் சம்பந்தம் இல்லாதவனுடன் தான் நாம் பேசுகிறோம். ஒப்பந்தம் போடுகிறோம் என்பது ஸ்டாலினுக்குத் தெரியும். ஆனாலும் இவ்வளவு விரைவில் ஒப்பந்தம் மீறல் வரும் என்பது அவர் எதிர்பாராதது.

மலையே புரண்டாலும் நிலை குலையாத மாமனிதன் தனது வாழ்நாளில் நிலைகுலைந்த தருணம் என்று இச்செய்தியைக் கேள்விப்பட்ட தருணம் என்று வரலாற்றாசிரியர்க்ள் குறிப்பிடுகின்றனர்.

வந்து விட்டது சந்திப்போம் என்ற உணர்வை விரைந்து பெற்றார். கட்சி அணிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். போரின் ஆரம்ப நிலையில் சோவியத் யூனியன் பல இழப்புகளுக்கு ஆளாகியது. ஜெர்மனி ஆதாயம் அடைந்தது.

ஜெர்மன் இராணுவத்தில் இருந்த வீரர்களில் ஆகப் பெரும் பகுதியினர் சோவியன் யூனியனில் இறக்கிவிடப்பட்டனர். ஆயுதங்களும் அப்படியே. இத்துடன் ருமேனியா, பின்லாந்து, இத்தாலி, ஹல்கேரி, ஸ்பெயின், ஸ்லாவோகியா நாட்டுப் படைகளும் ஹிட்லருக்கு ஆதரவாக இறங்கின.

இராணுவத்தில் அணிதிரளுங்கள் என்று கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இளம் கம்யூனிஸ்ட்டுகள் என்ற பெயரில் இயங்கி வந்த தோழர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். அதன்படியே சேர்ந்தனர். இவர்கள் ஆயுத வீரர்களாக மட்டும் இன்றி அரசியல் வீரர்கள் ஆகவும் இருந்தனர்.

தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன என்று பார்த்தோம் அல்லவா? அவைகள் எல்லாம் இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டது. 1923 தொழிற்சாலைகள் இடம் மாற்றப்பட்டன. இது மனித சக்தியை மீறிய அமானுஷ்ய சக்தி ஆகும். இதனால் உற்பத்தி பாதித்தது. நிலைமையை மக்களுக்குப் புரிய வைத்து சமாளிக்கப்பட்டது.

வானொலி உரை

1941 ஜூலை 3 அன்று ஸ்டாலின் வானொலி மூலம் உரையாற்றினார். போரின் நோக்கத்தை விளக்கினார். லெனினது மேற்கோள்களை எடுத்துரைத்தார். பாசிசத்தை எதிர்க்கும் மக்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அவர்கள் நமக்கு ஆதரவாக உள்ளனர்

என்றார் இவ்வுரை மக்களை அவருடன் இணைத்தது.

தளபதி

போர் தொடர்ந்து உச்சிகரமாக நடைபெற்றுக் கொண்டே இருந்தது. சோவியத் தலைமைக்குழு ஜோசப் ஸ்டாலின் பாதுகாப்பு அமைச்சகர் ஆகவும் தளபதி ஆகவும் தேர்வு செய்தது.

முதலாளித்துவ நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டார். பாசிச எதிர்ப்புக்காக அணி திரள வேண்டுகோள் விடுத்தார். 1941 ஜூலை 12 அன்று ஜெர்மனுக்கு எதிராக சோவியத் யூனியனுடன் பிரிட்டன் ஒப்பந்தம் செய்தது. படிப்படியாக சோவியத் வீரர்கள் பலம் பெற்றனர். ஜெர்மன் படைகளுக்கு ஈடுகொடுத்தனர். ஜெர்மனியை பின்வாங்கச் செய்தனர்.

1941 நவம்பர் 6 அன்று உரையாற்றுகிறார். இவ்வுரை ஒலிபரப்பப்பட்டது. போரில் அப்போதைய நிலவரம் விளக்கப்பட்டது. பாசிச வெறியர்களின் குணம் பற்றியும் முதலாளித்துவ நாடுகள் கடைப்பிடிக்ககும் போக்கு பற்றியும் விளக்கப்பட்டது.

லெனின் உடல் அருகே

1941 நவம்பர் 7 அன்று செஞ்சேனை அணி வகுப்பு நடந்தது. 1917 ஆம் ஆண்டில் நடைபெற்ற புரட்சியின் 24 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியாக இது அமைந்திருந்தது. போரில் செம்படை அடையும் வெற்றியின் உலக முக்கியத்துவத்தை விளக்கினார். தோழர் லெனின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து உரை நிகழ்த்தினார். 6 ஆம் நாளும் 7 ஆம் நாளும் அவர் ஆற்றிய உரை இலட்சக்கணக்கில் பிரதி எடுக்கப்பட்டது. நாடெங்கும் விநியோகிகப்பட்டது. போராடும் மக்களுக்கு உத்வேகம் ஊட்டக் கூடியதாக அமைந்திருந்தது.

வெறிநாய் போல

மாஸ்கோ அருகில் ஜெர்மன் படைகள் சூழ்ந்திருந்தன. பீரங்கிச் சத்தமும் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. இதன் மத்தியில் தான் செஞ்சேனை அணி வகுப்பும் தோழர் ஸ்டாலின் உரையும் திகழ்ந்தது. ஜெர்மன் படைகள் விரட்டப்பட்டன. ஆனாலும் அவர்கள் விடவில்லை. அடிபடும் வெறிநாய் மீண்டும் மீண்டும் கடிக்க வருவது போல் வந்து கொண்டே இருந்தனர்.

தொடர் முயற்சி

ஐரோப்பிய அரசுகளின் ஆதரவைக் கோரி லண்டன் வாஷிங்டன் ஆகிய நகர்களுக்கு மாலடேங் என்ற தோழரை அனுப்பி வைத்தார். இப்பயணம் பயன்பட்டது. ஐரோப்பாவில் இருந்து வேறொரு பகுதியில் ஹிட்லர் படைகளைத் தாக்குவது என்ற முடிவு நிறைவேறவில்லை. இது ஹிட்லருக்குத் தெம்பு ஊட்டியது. அதே சமயம் பிரிட்டன் அமெரிக்க போன்ற நாடுகளில் இருந்த சோவியத் எதிர்ப்பு உணர்ச்சி குறைந்தது. 1942 ஆகஸ்ட் 12  அன்று பிரிட்டன் தலைவர் சர்ச்சில் மாஸ்கோ வந்தார். தோழர் ஸ்டாலினைச் சந்தித்தார்.

ஸ்டாலின் கிராட் போர்:

1942 நவம்பர் 19 முதல் 1943 பிப்ரவரி 2 வரை ஸ்டாலின் கிராட் பகுதியில் போர் நடந்தது. ஜெர்மன் முயற்சி முறியடிக்கப்பட்டது. ஆனாலும் ஸ்டாலின் செஞ்சேனையையும் மக்களையும் எச்சரித்தார். எதிரி தோல்வியால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் முற்றாக அழிந்துவிடவில்லை என்றார். இக்காலத்தில் ஜெர்மனியர்களைப் பற்றி இருந்த சோவியத் பகுதிகள் பெருமளவு விடுவிக்கப்பட்டன.

1941 ஜூன் 1944 மே ஆகிய காலத்திற்கு இடையில் சோவியத் யூனியனில் இருந்து ஜெர்மனியாளர்களால் கைது செய்யப்பட்டோர் பசிக் கொடுமையாலும் சித்திரவதைகளாலும் கொல்லப்பட்டனர்.

ஸ்டாலினது முதல் மனைவிக்குப் பிறந்த மகன் இராணுவத்தில் இருந்தார். போரின் போது ஜெர்மனியர்களால் கைது செய்யப்பட்டார். ஸ்டாலின் பேரம் பேசுவார் என்று ஜெர்மன் எதிர்ப்பார்த்தது. ஸ்டாலின் அவ்வாறு பேசவில்லை. ஜெர்மனிப் படையில் கைது செய்யப்பட்ட முக்கிய அதிகாரியை ஸ்டாலின் விடுவித்தால் அவர் மகனைவிடலாம் என்று எதிர்பார்த்தனர். அது நடக்கவில்லை.

முக்கிய சந்திப்பு

1943 நவம்பர் 29 அன்று பிரிட்டன் தலைவர் சர்ச்சில் அமெரிக்க தலைவர் ரூல்வெல்ட் சோவியத் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் டெஹ்ரான் நகரில் சந்தித்தனர். இது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. காலனியாதிக்கம் பற்றியும் பேசினர். காலனியாதிக்க கொள்கையை கைவிட ஸ்டாலின் வற்புறுத்தினார். இந்திய சுதந்திரம் பற்றியும் குறிப்பிட்டார். சர்ச்சில் பிடிவாதத்துடன் முரண்டு செய்தார்.

வீரவாள்

அதே சமயம் ஸ்டாலின் கிராட் போரில் பாசிசப் படைகளைத் தோற்கடிப்பபதில் அவர்களுக்கு கடும் சேதாரம் ஏற்படுத்தியதில் மாபெரும் இழப்புகளைத் தாங்கி வெற்றி பெற்ற மக்களுக்கு இப்பரிசை பிரட்டன் நாட்டின் மாட்சிமை பொருந்திய மன்னின் சார்பில் இப்பரிசை வழங்குகிறோம் என்று சர்ச்சில் ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார். ஸ்டாலின் உணர்ச்சி பொங்கிட வாளை முத்தமிட்டார்.

இரண்டாவது போர் முனை

1944 ஜூன் மாதம் ஹிட்லரது ஜெர்மன் படையைத் தாக்குதவற்குத் திட்டமிட்டு களத்தில் இறங்கின. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டதை இப்போது தான் நிறைவேற்ற முனைந்தனர். ஒரு புறம் சோவியத் தாக்குதால் மறுபுறம் அமெரிக்க பிரிட்டன் தாக்குதல் என்று இருமுனைத் தாக்குதலால் ஜெர்மன் திணறியது. சோவியத் செஞ்சேனைப் படிப்படியாக முன்னேறியது. ஜெர்மன் படைகள் பின்வாங்கின. அவர்கள் பிடியிலிருந்த பகுதிகள் விடுவிக்கப்பட்டன.

1945 ஏப்ரல் மாதம் சோவியத் படைகள் ஜெர்மனியில் நுழைந்தன. சிங்கத்தை அதன் குகையிலேயே அதைச் சந்திக்கத் துவங்கினர். ஜெர்மனியின் தலைநகர் பெர்லினை நெருங்கி விட்டனர். பெர்லின் வீழ்ந்தது. அங்கிருந்த நாடாளுமன்ற கட்டிடம் கைப்பற்றப்பட்டது. அதன் பெயர் ரீச்ஸ்டாக் என்பது அதன் மீது மே முதல் தேதி சோவியத் யூனியனில் செங்கொடி ஏற்றப்பட்டது. “Fall of ——“ என்று ஒரு திரைப்படம், “பெர்லின் வீழ்ச்சி” என்று அதன் பெயர். உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஒன்றாக இன்றும் போற்றப்படுகிறது. ஏப்ரல் 30 மே தினத்தில் ஹிட்லர் பயந்து தற்கொலை செய்து கொண்டான். மே 24 அன்று செஞ்சேனையின் படைத் தலைவர் உரையாற்றினார். போர்க்காலத்தில் 200க்கும் அதிகமான கூட்டங்கள் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. தோழர் ஸ்டாலின் அனைத்திலும் பங்கு கொண்டார்.

இக்காலத்தில் ஜப்பான் நாட்டில் ஹிரோசிமா நாகசாகி ஆகிய நகர்களில் அமெரிக்கா தனது அணுகுண்டை வீசியது. இதுபற்றி ஸ்டாலினுக்குத் தெரிவிக்கப்படவில்லை. இரண்டரை லட்சம் அப்பாவி மக்கள் பலியானர்.

போர் முடிவு

1945 செப்டம்பர் 2 அன்று ஜப்பானும் சரணாகதி அடைந்தது. ஜெர்மன் ஜப்பானிய கொடுங்கோல் அரசுகளிடம் இருந்து மக்கள் விடுபட்டனர். உலகப் போர் முடிந்து அமைதி திரும்பியது. சோவியத் 1945 இல் போர் முடிந்தது. ஸ்டாலின் மகன் ஸ்வெட்லான தனது தந்தையைக் சந்திக்க வந்தார். அது சமயம் பெல்ஜிய நாட்டு அதிகாரி ஒருவர் அனுப்பிய செய்தியைத் தெரிவித்தார். அவரது மூத்த மனைவியின் மகனை ஸ்வெட்லானாவின் அண்ணனை ஹிட்லரின் பாசிசப் படைகள் கொலை செய்து விட்டனர் என்பதை துயரம் தோய்ந்த குரலில் கூறினார்.

1952 அக்டோபர் 5 அன்று சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 ஆவது மாநாடு நடத்தப்பட்டது. ஸ்டாலின் கலந்து கொண்டார். ஆனால் அறிக்கை சமர்ப்பிக்க முடியவில்லை. மாலங்கோங் சமர்பித்தார். இவ்வறிக்கை தயாரிப்பில் ஸ்டாலின் இருந்தார். இது உலகப் பெருமை வாய்ந்த அறிக்கை.

மறைவு:

1953 மார்ச் 5 அன்று இரவு 9.50 க்கு ஸ்டாலின் மரணமடைந்தார். உலகம் கலங்கியது. கண்ணிர் வடித்தது. சோவியத் வானொலி பின்வருமாறு ஒலிபரப்பியது.

தோழர் லெனினுடன் தோளோடு தோல் நின்ற தோழரும் அவரது பணிகளை ஊக்கத்துடன் தொடர்ந்து வரும் ஞானமிக்க தலைவரும் சோவியத் மக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆசானும் ஆகிய ஜோசப் விகாரியோனிவிச் ஸ்டாலினின் இதயம் சுவாசிப்பதை நிறுத்தி விட்டது.

முற்றும்

http://marxist.tncpim.org/joseph-stalin-5/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *