மார்க்சியம் அவசியமான ஒன்றாக ஆகி இருக்கிறது.
மார்க்சியம் அவசியமான ஒன்றாக ஆகி இருக்கிறது.

மார்க்சியம் அவசியமான ஒன்றாக ஆகி இருக்கிறது.

சோவியத் ஒன்றியமும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சோஷலிசப் பாதையை கை விட்டு திருத்தல்வாத பாதையில் முதலாளித்துவத்தை தூக்கி நிறுத்தி மார்க்சியத்தை கைவிட்டதை போலவே சீனாவும் சோஷலிசப் பாதையில் இருந்து விலகி இப்பொழுது முழுவதுமாக முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பி விட்டது. சோஷலிசப் பாதையை மறுத்து முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பிய பின், பொருளாதார வளர்ச்சியில் சீனா மிகப் பெரும் சக்தியாக உருவெடுத்து இருக்கிறது. (இங்குள்ள திருத்தல்வாதிகள் பேசுவது போல் இன்று சீனா சோசலிச நாடல்ல)

இந்நிலையில் மார்க்சியம் தேவை தானா என்று முதலாளித்துவ அறிஞர்கள் வினாவை எழுப்புகின்றனர். அது மட்டுமல்லாமல் இனி மார்க்சியம் வெற்றி பெறாது என்றும், மார்க்சியத்தை நம்புசிறவர்கள் கானல் நீரை நம்புவதைப் போல் ஏமாற்றம் அடைவார்கள் என்றும் ஆருடம் கூறுகிறார்கள்.

அப்படியெனில் சோவியத்தில் நாம் கண்டவை என்ன?

சோவியத் ஒன்றியம் உலகிலேயே வலிமையான நாடாக அன்று இருந்தது. தன் தேவையை நிறைவு செய்து கொண்டதோடு மட்டுமல்லாமல், வளரும் நாடுகளுக்கு உயர்தொழில் நுட்பங்களை அளிக்கவும் செய்தது.

இந்தியாவில் இருந்து வெள்ளையர்கள் வெளியேறிய பின் இரும்புத் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று துடியாய்த் துடித்துக் கொண்டு இருந்த பொழுது, அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகள் இரும்புத் தொழில் நுட்பத்தை, பணம் பெற்றுக் கொண்டு அளிப்பதற்கும் மறுத்தன. ஆனால் சோவியத் ஒன்றியம் அதே தொழில் நுட்பத்தை இலவசமாக அளித்து, இந்தியாவில் இரும்புத் தொழிற் சாலைகள் அமைய உதவியது.

இப்பொழுது சோவியத் ஒன்றியம் சிதைந்து, அதன் உறுப்பு நாடுகள் முதலாளித்துவப் பாதைக்குத் தள்ளப்பட்ட பின் ஏறபட்டுள்ள நிலை என்ன?

வேலை உத்தரவாதம் செய்யப்பட்ட அந்நாடுகளின் மக்கள், இப்பொழுது வேலை தேடி உலகெங்கும் அலைந்து கொண்டு இருக்கின்றனர். சோவியத் ஒன்றியத்தில் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு இருந்த முதியவர்கள் தங்கள் தேவைகளுக்குச் செலவு செய்தது போக மீதம் இருந்த பணத்தில் தங்கள் பேரக் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்ந்து இருந்தனர்.

ஆனால் இன்று அவர்களுடைய ஓய்வூதியம் அவர்களுடைய அன்றாடத் தேவைகளை நிறைவு செய்வதற்கும் போதவில்லை. ஓய்வூதியக்காரர்களை விட்டு விடுங்கள்; பணியில் இருப்பவர்களுக்கே அவர்களுடைய ஊதியம் போதாமல் தவிக்க வேண்டியுள்ளது. தொழில் வளர்ச்சியில் முன்னணி நாடாகவும், மற்ற நாடுகளுக்கு உதவி புரியும் உயர்ந்த நிலையிலும் இருந்த நாடு, இன்று மூலப் பொருட்களை விற்றுப் பிழைப்பு நடத்த வேண்டிய கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது.

சோவியத் ஒன்றிய உறுப்பு நாடுகளின் நிலைமை இவ்வாறு என்றால், முதலாளித்துவ அறிஞர்களால் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் பெற்றுள்ளது என்று புகழப்படும் சீனாவின் நிலைமை என்ன? முன்பெல்லாம் சீனாவின் அனைத்து மொழிகளும் சமமாக மதிக்கப்பட்டன. ஆனால் இன்று சீன நாட்டில் முதலீடு செய்பவர்களின் வசதியை முன்னிட்டு, மாண்டரின் மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாத 50%க்கும் அதிகமான சீன மக்கள் அம்மொழியைப் பயில வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறார்கள்.

அன்று உழைக்கும் மக்கள பெற்ற ஊதியம் அவர்களுடைய தேவையை நிறைவு செய்யப் போதுமானதாய் இருந்தது. இன்று அது போதவில்லை; அது மட்டுமல்ல, ஊதிய உயர்வு வேண்டும் என்று கேட்பவர்கள் முதலாளிகளின் அடியாட்களால் தாக்கப்படுகிறார்கள்; சில சமயங்களில் கொலையும் செய்யப்படுகிறார்கள்.

இதைத் தடுத்து நிறுத்த முடியாதா? முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறை ஆட்சி செய்யும் போது இப்பேரழிவைத் தடுத்து நிறுத்த முடியவே முடியாது. ஏனெனில் முதலாளித்துவ முறை அதிக இலாபம் கிடைக்கும் தொழில்களில் தான் மூலதனத்தையும் இயற்கை மூலாதாரங்களையும் ஈடுபடுத்து வேண்டும் என்று வழிகாட்டுகிறது. வழி காட்டுவது மட்டுமல்ல; கட்டாயப்படுத்தவும் செய்கிறது.

ஆனால் சோஷலிச ஆட்சி முறையில் மக்கள் நலனே அடிப்படை என்பதால் பட்டினி கிடக்கும் மக்களுக்காகவும், ஊட்டச் சத்து இல்லாத மக்களுக்காகவும், வாழ்வு தொடர்வதை உறுதி செய்ய முடியும்.

மார்க்சியம் அவசியமான ஒன்றாக ஆகி இருககிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *