மார்க்சியவாதிகளது நிலைப்பாடு பகுத்தறிவுவாதிகள் எனப்படுவோரதும் அவர்களைச் சார்ந்தோரதும் நிலைப்பாட்டினின்று மிகவும் வேறுபட்டது. இந்த வேறுபாடு அடிப்படையான சிந்தனை முறை சார்ந்தது. சில சமயங்களில் நடைமுறைப் பிரச்சனைகளை மார்க்சியவாதிகள் அணுகும் முறையும் கையாளும் விதமும் மரபு சார்ந்ததாகவே சிலருக்குத் தென்படலாம். பகுத்தறிவுவாதிகள் எனப்படுவோர் இதன் காரணமாக மார்க்சியவாதிகளுடன் பெரிதும் முரண்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. ஆயினும், பகுத்தறிவு இயக்கத்தின் நடைமுறை, தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அவர்களையே தம் சிந்தனை முரண்பாடுகளது கைதிகளாக்கிவிட்டதை நாம் காணலாம்.
மனித வாழ்க்கையை நாம் உற்று கவ்னித்தால், எத்தனையோ, பகுத்தறிவுக்கு ஒவ்வாத, தேவையற்ற காரியங்களைக் காணலாம். இவை இல்லாமற் போவதால் மனிதனது நேரமும் உழைப்பும் பெருமளவில் மீதப்படுத்தப்பட்டுப் பயனுள்ள வழிகளில் செலவளிக்களம் என்ற வாதம், மேலோட்டமாக நோக்கும்போது, மிகவும் சரியாகவே படலாம்.
ஆயினும் இது மனிதன் என்கிற சமுதாய விலங்கின் தன்மையை அதன் வரலாற்றுச் சூழலினின்று பிரித்துப் பார்ப்பதன் விளைவேயாகும். இந்த இடத்தில்தான் மரபுவாதியும் பகுத்தறிவுவாதியும் தமது மாறா நிலையியலில்(இயக்க மறுப்பியலில்) ஒருமை காண்கிறார்கள். மரபுவாதி சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நிரந்தரமான நியதிகளாக, சமுதாயச் சூழலுக்கு அப்பாற்பட்ட உண்மை சார்ந்தவையாகவே எண்ணுகிறான். பகுத்தறிவுவாதியும் அவற்றைச் சமுதாயத்தின் வரலாற்றுச் சூழலுக்குப் புறம்பாகவே வைத்து நோக்குகிறான். பண்டைய இந்தியப் பொருள் முதல்வாதம் (லோகாயதம்) நால் வேதங்களின் அடிப்படையிலான மதங்களை இவ்வாறே அணுகியது. மரபின் வலிமையும், மரபை எதிர்த்தோர்க்கு அதனை முழுதாக விளங்கிக்கொள்ளும் ஆற்றல் இல்லாமையும் பொருள் முதல்வாதிகளது வீழ்ச்சிக்குக் காரணமாயின. இந்திய மெய்யியல் வரலாற்றில் அவர்களது தோல்வி அவர்களது மாறாநிலையியல் அணுகுமுறையின் தோல்வியே எனலாம். இன்றைய பகுத்தறிவுவாதியின் நிலைப்பாடு பழைய லோகாயதவாதியினதினின்றும் அதிகம் முன்னேறிய ஒன்றல்ல.
இந்திய மரபும், வாழ்க்கை முறையும் பற்றிய ஆராய்வை அதற்குரிய வரலாற்றுப் பின்னணியில் மேற்கொள்வதன் மூலமே மரபை சரியாக விளங்கிக் கொள்ளவும் இந்தியத் துணைக் கண்டச் சமுதாயத்தை அதன் சீரழிவினின்று மீட்கவும் முடியும். மரபுடன் குருட்டுத்தனமாக மோதுவது, இறுதி ஆராய்வில் பிற்போக்கான சக்திகளையே ஆதரித்து நிற்கிறது. இந்திய சமுதாயத்தின் மரபுகட்கு அடிப்படையாக அமைந்துள்ள நால் வேதங்களையும், அதற்குப் பிற்பட்ட பழம் நூல்களையும் மரபுவாதிகள் தெய்விகமானவையாகப் போற்றினர். காலப்போக்கில் சமுதாய மாற்றங்கள் அவற்றை வியாக்கியானம் செய்வதில் புதிய பிரச்சனைகளை உண்டாக்கின. இதன் விளைவாக வேத நூல்கள் வேத மரபு சார்ந்தவர்கள் மத்தியில் முரண்பாடான கருத்துகளை உருவாக்கியது மட்டுமன்றி, வேத நூல்களை முற்றாகவே நிராகரிக்கும் சிந்தனை முறைகளும் ஏற்படுத்தப்பட்டன. வேதங்கள் சொல்வன சரியா தவறா, சரியாயின் அதன் உண்மைப் பொருள் என்ன என்ற விதமாக வாதங்கள் வளர்ந்தனவேயொழிய, நவீன சிந்தனையும் மார்க்சிய வரலாற்று அணுகுமுறையும் பரிச்சயமாகும் வரை, வேதங்கள், தம் ஆரம்பத்தில் கூற முனைந்தவை யாவை, அவை எதைப் பிரதிபலித்தன என்பதில் அதிகம் தெளிவு பிறக்கவில்லை எனலாம்.
எல்லாமே ஒரு கூட்டு சமுதாய வாழ்க்கை முறையினின்றும் உருவானவை என்று தெளிவுபடுத்தினர். சமுதாய வளர்ச்சி , வர்க்க சமுதாயத்தின் வளர்ச்சி என்பன நீதிகள், சாஸ்திரங்கள் ஆகியவற்றுக்கு வழிகோலின. ஒரு சுரண்டல் சமுதாய அமைப்பு ஸ்திரமானபோது இவ்வாறான மரபுகள் எல்லாம் ஆளும் வர்க்கத்தினருக்குச் சாதகமான முறையில் அச்சமுதாய அமைப்பைப் பேணும்விதமாக ஒரு நிரந்தரத் தன்மை எய்தின. அந்த அமைப்பு, ஒரு நீண்ட வரலாற்றுக் காலக்கட்டத்துக்குப் பின்பு, சமுதாய மாற்றங்கட்கு ஈடுகொடுக்க முடியாமலும் சமுதாய மாற்றங்களை வேண்டி நின்ற சூழ்நிலைகட்கு முரண்பட்டும் நின்றது. இதன் விளைவாக, இம்மரபுகள் அவற்றின் சாராம்சத்தின்ன்று விடுபட்டு யந்திர ரீதியாகவே பின்பற்றப்பட்டு வந்துள்ளன. சில சூழ்நிலைகளில் சமுதாயச் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் இவற்றைக் குரூரமாக விகாரப்படுத்தியதும் உண்டு. இவ்வாறான விகாரப்படுத்தல் ஆளும் வர்க்கத்தின் குறுகிய கால நலனையொட்டி அமைவதும் பெரும்பாலும் தவிர்க்க முடியாததே.
மரவு வழியாக வந்த விஷயங்கள் எல்லாமே சரியானவை - உள்ளபடியே பேணப்பட வேண்டியவை என்ற வாதம், சமுதாய மாற்றங்களின் விளைவாகத் தம் வர்கக் நலன்களும் அதிகாரங்களும் அழிந்துவிடுமே என்று அஞ்சும் ஒரு வர்க்கத்துக்கு உரியன. எனினும், மனித சமுதாயத்தின்மீது மரபின் பிடிப்பு மிகவும் பலமானது: பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள், நம்பிக்கைகள் போன்றன காலப் போக்கில் மக்கள் மத்தியில் ஊறிப் போய்விடுகின்றன. சமகாலச் சூழலில் அவசியமற்றன மட்டுமன்றிக் கெடுதலானவை என்று பரவலாகவே தெரிந்த சில மரபுவழிப் பயிற்சிகளும் கடைபிடிக்கப்படுகின்றன. நீண்ட கால நடைமுறையும் சமுதாய மாற்றங்களின் நிர்ப்பந்தங்களுமே மனிதனை அவற்றின் பிடிப்பினின்று மெல்ல மெல்ல விடுவிக்கின்றன. அப்படியுங்கூடச் சில காரியங்கள் குறைந்தபட்சம் பாசாங்காகவேனும் கடைபிடிக்கப்படுவதை நாம் உணராம். இத்தகைய சூழ்நிலையில் மரபை அப்படியே பேண விரும்புவோர், அது சாத்தியமற்றது என்று தெரிந்தும் அதன் காரணங்களை உணரவோ, ஆராயவோ முடியாமல் 'கலி முற்றிவிட்டது, காலம் கெட்டுப் போயிற்று என்று முணகிக்கொண்டே நைந்து சிதைந்த மரபைத் தம்மால் முடிந்தவாறு பேண முனைகிறார்கள். சில சூழ்நிலைகளில் சமுதாயச் சிக்கல்கள் இவர்கட்குச் சாதகமாக அமையும்போது வேதகாலத்தை நோக்கிச் சமுதாயத்தைச் செலுத்தப் போராடுவார்கள். இவர்கள் கூறும் வேதகாலம் என்னவென்று இவர்கட்குத் தெரியுமா என்பது வேறு விஷயம். ஆயினும் படுபிற்போக்குச் சக்திகள் இவர்களுடன் ஒன்றிணைவது மட்டும் தவிர்க்க முடியாதது.
மரபு வழி வந்த மூட நம்பிக்கைகளையும் பகுத்தறிவுக்கொவ்வாத பழக்க வழக்கங்களையும் களைந்தொழிய முனையும் பகுத்தறிவுக் காரர்கள், அவற்றைச் சமுதாய முழுமையின் கூறுகளாகவும் வாழ்க்கையினின்று ஒரேயடியாகப் பிரித்து நோக்கமுடியாத விஷயங்களாகவும் கவனிப்பதில்லை. எனவே, இவர்கள் சமுதாயத்தைப் பகுதி பகுதியாகக் கழற்றிச் சீர்திருத்த முனையும் "மெக்கானிக்குகளாகி விடுகிறார்கள். இந்தப் பழுதுப் பார்த்தல் சீர்திருத்தத் திருமணம், 'கலப்புத் திருமணம்', 'பிள்ளையார் சிலை உடைப்பு, ராகு காலத்தில் சுப காரியங்கள் செய்வது போன்று துண்டு துண்டாக நடைபெறும். இதன் ஒட்டுமொத்தமான விளைவு என்னவென்றால், ஒரு சடங்கின் இடத்தில் இன்னொரு சடங்கும் ஒரு சமுதாய ஊழலின் இடத்தில் இன்னொரு சமுதாய ஊழலும் வந்து அமைவதுதான். மரபின் பொருந்தாமை காரணமாக ஏற்படும் பிரச்சினைகளையே பிரதான முரண்பாடு என்று இனங் காண்பதால் இவர்களால் பெரும்பான்மை மக்களை வென்றெடுக்க முடிவதில்லை. முடிவில் இவர்களது வைத்தியமே ஒரு நோயாகி விடுகிறது. சாதி எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பாகி இன்று அதுவே பிராமணரல்லாத உயர்சாதியினரின் பார்ப்பணியமாகி விட்டமை இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
பகுத்தறிவுவாதிகள் தாம் தூக்கியெறிய முனைந்த பழைமையின் இடத்தில் எதை வைப்பது என்பது பற்றிய தெளிவில்லாமலே இருந்தார்கள். இவர்களது வரலாறு சாராத கண்ணோட்டம் முழுமையும் தெளிவுமற்ற ஒரு சிந்தனை போக்குக்கே இடமளித்தது. ஆரம்ப காலங்களில் (பல்வேறு அரசியல், சமுதாய காரணங்களால்) இவர்களை நோக்கி வந்த இளைஞர்களை இவர்களால் வழிகாட்டி வளர்த்தெடுக்க முடியவில்லை. புராணப் படத்தின் இடத்தில் எம்.ஜி.ஆர். சிவாஜி பாணியில் காதல், சரித்திர, சமுதாயச் சீர்திருத்த அரை வேக்காடுகளையே இவர்களால் தர முடிந்தது. சமஸ்கிருத எதிர்ப்பு தனித் தமிழுக்குப் போக முனைந்து திசை தெரியாமல் திண்டாட நேர்ந்தது. கலை இலக்கியத் துறையிலும் மேடைப் பேச்சிலும் கூட இவர்கட்கு தாமே உருவாக்கிய ஒரு போலித்தனத்தின் விளிம்பைத் தாண்ட முடியாமல் போய் விட்டது. இன்றைய அரைகுறை முதலாளித்துவ வளர்ச்சி, புதியகாலனித்துவத் தாக்கத்தின் விளைவுகளைச் சரிவர அடையாளங் காண முடியாமை இவர்களது அணுகுமுறையின் இயங்கியல் சாராத தன்மையையும் அதன் தோல்வியையுமே குறிக்கின்றது.
மார்க்சியவாதிகளது அணுகுமுறை எப்போதுமே சரியாக இருந்தது என்றோ அவர்களது நடைமுறை தவறுகட்கு அப்பாற்பட்டது என்றோ மார்க்சியத்தின் பேரில் வரட்டுத்தனமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வில்லை என்றோ வாதிட நான் முனையவில்லை. ஆயினும் மனித அறிவின்
வரையறைகளையும், ஆராய்வு முறைகள் தவறுகட்கு உட்படலாம் என்பதையும் மார்க்சியம் மறுக்கவில்லை. வரட்டுத்தனமான
பகுத்தறிவுவாதம் மார்க்சியத்துக்கு என்றுமே உடன்பாடானதல்ல. தவறுகளும், தோல்விகளும்கூட ஒரு மார்க்சியவாதியின் அறிவுத் தேடலில் பயன்படவே செய்கின்றன. எனவே மார்க்சியவாதி தன் அறிவை என்றைக்குமே சரியானதாகவும், முழுமையானதாகவும், மாற்ற முடியாத ஒன்றாகவும் கருதுவதில்லை. புதிய தகவல்களுக்கும் அனுபவங்கட்கும் சூழ்நிலைகட்கும் வரவேற்புள்ள மனத்தில் மூடப்பட்ட சிந்தனைக்கு இடமில்லை.
மார்க்சியவாதிகள் மரபை மனித சமுதாய வரலாற்றின் அடிப்படையில் வைத்து நோக்குவதால் அங்கு ஒருபுறம் சம காலத்துக்குப் பயனுள்ள வரலாற்றுவழிச்சாதனைகளையும், இன்னொருபுறம் வளர்ச்சியின் போக்கிற்கு இசையாமல் இன்னும் ஒட்டிக் கொண்டு இருக்கும் விஷயங்களையும் வேறுபடுத்தி அடையாளம் காணமுடிகிறது. பயனுள்ள அம்சங்கள் என்பவைகூட முற்றாகவே ஏற்ககூடிய வடிவில் குறைபாடுகள் இல்லாமல் இருப்பவையும் அல்ல பயனற்றவை யாவுமே ஒரே வீச்சில் பாரதூரமான எதிர் விளைவுகள் இல்லாமல் நீக்கப்படக்கூடியனவும் அல்ல. எனவே சமுதாய யதார்த்தத்தை மனத்தில் வைத்துக்கொண்டே மரபு சார்ந்த விஷயங்களை அணுக வேண்டியுள்ளது. கழிக்கப்பட வேண்டிய எந்த அம்சமும் பரவலான சமுதாய அங்கீகாரமின்றிக் கழிக்கப்படுவதில்லை. எனவே பரந்துபட்ட மக்களது நலன்களுக்கு விரோதமாக அமையும் அம்சங்களைத் தெளிவாக இனங்காண்பதும் எடுத்துக்காட்டுவதும் ஒரு முக்கியத் தேவையாகிறது. அது மட்டுமன்றி நிராகரிக்கப்படும் ஓர் அம்சம் போவதால் ஏற்படும் வெற்றிடத்தை எவ்வாறு நிரப்புவது என்ற கேள்வியும் முக்கியமாகிறது. இந்த அடிப்படையில்தான் மத சுதந்திரம், வழிபாட்டுச் சுதந்திரம், மரபுகட்கு மதிப்பளித்தல் என்பன சோஷலிச சமுதாய அமைப்பில் வலியுறுத்தப்படுகின்றன.
மரபு வழியாக வந்த் தொழில்நுட்பம், மருத்துவம், கைத்திறன், கலை வடிவங்கள் என்பன சமுதாய மாற்றத்தின்போது வெவ்வேறு அளவுகளில் பாதிப்புக்கு உள்ளாகின்றன. நம்முடையதுபோன்ற சமுதாயத்தின் வளர்ச்சிப்
போக்கில் நிகழ்ந்த குறுக்கீடு காரணமாகவே சமுதாய மாற்றம் ஏற்பட்டதால், நம் பாரம்பரியத்தின் சகல அம்சங்களும் தேக்கத்துக்கோ பெரும் வரலாற்று முறிவுக்கோ உட்பட நேர்ந்தது. இதன் தீய விளைவுகளினின்று மீள்வது மரபுவாதிக்கு வரலாற்றில் பின்னோக்கிப் போவதன் மூலமே சாத்தியமென்று படுகிறது. மரபுவாதியின் கண்ணில், நவீன சமுதாயத்தின் பிழைகளை யெல்லாம் அகற்றிவிட்டு ஐநூறோ ஆயிரமோ ஐயாயிரமோ ஆண்டுகள் முன்பிருந்ததாகக் கருதப்படும் ஓர் அமைப்பின் அடிப்படையில் பழைய விஞ்ஞானக் கலை வடிவங்களை மீண்டும் உயிர்ப்பிப்பதன் மூலமே சமுதாயம் உருப்பட முடியும் என்று தெரிகிறது ஓரிரண்டு விஷயங்களில் பழைமை எதையாவது விட்டுக் கொடுக்கலாம் என்ற சலுகை போக பழைமை மீது இவர்களது நம்பிக்கை அசைக்க முடியாத ஒன்றாகவுள்ளது.
பகுத்தறிவுவாதி மரபைச் சிதைந்து போன அதன் சமகால வடிவில் நோக்குகிறான். அது அவனுக்கு முற்றாக அகற்றப்பட வேண்டிய ஒன்றாகவே படுகிறது. அங்கே அதன் வரலாற்று முக்கியத்துவமோ மனித உணர்வுகள் சார்ந்த தேவைகளோ, பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயங்களாகி விடுகின்றன. ஜடத்தன்மையானவையாகவே விஷயங்களைக் கருதுகிறான்.
மார்க்சியவாதியைப் பொறுத்தவரை, மரபானது மனித குலத்தின் சாதனை என்ற வகையில் மதிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறதே ஒழிய வணக்கத்துக்குரிய ஒன்றாக அல்ல. அதேபோல் மரபு எத்தனை இழிந்து விட்டாலும் அதில் மனித மனம் கொண்டுள்ள ஈடுபாடு காரணமாக, மனித உணர்வுகள் மதிக்கப்படவேண்டும் என்பதற்காக, அது கவனத்துடனேயே கையாளப்படுகிறது. அது மட்டுமின்றி மரபு வழியான விஞ்ஞான, கலைச்சாதனைகளையும் பாரம்பரிய அறிவையும் ஒட்டு மொத்தமாக நிராகரிக்கும் போக்கோ புறக்கணிக்கும் தன்மையோ மார்க்சியவாதிக்கு ஏற்புடையதல்ல. ஆயினும், சமகால விஞ்ஞானம், கலை என்பன மேற்கிலிருந்து திணிக்கப்பட்டவை' என்பதற்காக மட்டுமே அவற்றை நிராகரித்து, நம் பாரம்பரியத்தின் அடிப்படையிலேயே புதிய ஆக்கங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் மார்க்சியவாதிகள் கருதுவதற்கில்லை. எதுவுமே 'புதியது' என்பதாலோ 'பழையது என்பதாலோ மட்டுமே ஏற்கத்தக்கதாகிவிட முடியாது. சமகாலச் சூழலுக்கும் வரலாற்றுப் போக்குக்கும் சார்பாகவே ஒவ்வொரு விஷயமும் மதிப்பிடப்படுகிறது. இங்கே இயந்திர ரீதியான அணுகுமுறைக்கு இடமே இல்லை.
மரபு சார்ந்த விஷயங்களைக் கையாளும் நடைமுறையான பிரச்சனைகட்கு அப்பாற்பட்டதல்ல. சில அரசியற் சூழல்களும் சமுத
நெருக்கடிகளும் நிர்ப்பந்தங்களும் தவறான முறையில் விஷயங்களைக் கையாளும் நிலையை உருவாக்கி விடுகின்றன. ஆயினும் விழிப்புணர்வோடு செயற்படும் மார்க்சிய இயக்கத்திற்கு இவை நிவர்த்தி செய்ய முடியாத தவறுகள் அல்ல. ஆயினும் மார்க்சியத்தின் பேரால் தவறான அணுகுமுறைகள் முன் வைக்கப்படுவதை நாம் என்றுமே எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.
நன்றி சிவசேகரம்.