மார்க்சியமும் நாத்திகமும்-2

மார்க்சியம் நாத்திகத்தை அடிப்படையாக் கொண்டது என்பதில் ஐயமில்லை. ஆயினும் நாத்திகம் மட்டுமே மார்க்சியமாகிவிடாது. வரட்டுத்தனமான பொருள்முதல் வாதமும் இயந்திரரீயான ஆய்வுமுறைகளும் மார்க்சியத்துக்கு முரணானவை. முதலாளித்துவமும் நாத்திகத் 
தன்மையுடையது. அதன் நாத்திகம் மிகவும் வஞ்சகமானதும் நேர்மையற்றதுமாகும். முதலாளித்துவம் மனித சமுதாயம் பேணி வந்த உயர் பண்புகளையும் விழுமியங்களையும் சிதைக்கும் தன் முயற்சிக்குத் துணையாகக் கடவுளையும் மதங்களையும் விகாரப்படுத்திப் பயன்படுத்துகிறது. உண்மையாகவே மத நம்பிக்கையும் மனிதாபிமானமும் உள்ள எவரும் எதிர்க்க வேண்டியது முதலாளித்துவத்தையும் அது மதங்களைப் பயன்படுத்தும் முறையையுமே அன்றி மார்க்ஸியத்தை அல்ல. மார்க்ஸியத்தையும் மாக்ஸிய இயக்கங்களையும் மதங்களுடனும் மத நம்பிக்கையுடையவர்களுடனும் மோதவிடமுனைவோர் பரப்பி வரும் சில தவறான கருத்துகளை நாம் அடையாளம் காண்போமானால், மக்களின் மத நம்பிக்கைக்கும் வழிபாட்டுச் சுதந்திரத்துக்கும் எதிரிகள் யாரென்று அறிவது எளிது.
மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கவும் விதி, தெய்வசித்தம் என்றவாறான விளக்கங்களை ஏற்றுச் சமுதாயப் பிரச்சனைகட்குரிய விடைகளை உரிய இடத்திற் தேடாதவாறு திசைதிருப்பவும் ஆளும் வர்க்கங்கள் மதத்தைப் பயன்படுத்தியுள்ளன. நிஜ உலகில் துன்பங்கட்கு முகங்கொடாது தப்பிச் செல்லும் முயற்சியில் அபின் எவ்வாறு பயன்படுகிறதோ அவ்வாறே மதமும் பயன்படுத்தப்படும் நிலையையே மார்க்ஸ் குறிப்பிட்டார். பாட்டாளி வர்க்கம் ஒரு புதிய சமுதாய சக்தியாக வளர்ந்து அதன் அரசியல் உணர்வும் ஸ்தாபனப்படுத்தலும் வேகமாக விருத்தியடைந்து வந்த நிலையில், முதலாளித்துவம் தன்னால் முன்பு நிராகரிக்கப்பட்ட மத நிறுவனங்களுடன் தன் உறவுகளைச் சீர்செய்ய முற்பட்டது. நிலமான்ய சமுதாயத்தின் நிலப்பிரபு வர்க்க நலன்களைப் பேணி நின்ற மத நிறுவனங்கள், புதிய ஆளும் சுரண்டல் வர்க்கத்துடன் உறவுகளைப் புதுப்பிக்கத் தயங்கவில்லை. ஆளும் வர்க்கங்களும் மத நிறுவனங்களும் சமுதாய மாற்றத்தை மறிக்கும் ஒரு கருவியாக மதத்தைப் பயன்படுத்தி வந்த சூழ்நிலையிலேயே, பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கும் மத நிறுவனங்கட்குமிடையே முரண்பாடுகள் வளர்ந்தன. மத நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம், மதநம்பிக்கை, வழிப்பாட்டுச் சுதந்திரம் ஆகிய விஷயங்களில் குறுக்கிடும் துர்ப்பாக்கிய நிலை சில சமயங்களில் ஏற்பட்டதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆயினும் இந்த நிலை ஏற்படுவதற்கு மத நிறவனங்கள் பிற்போக்குவாதி களுடன் தொடர்ச்சியாகக் கொண்டிருந்த நெருக்கமான உறவு ஒரு முக்கியக் காரணம் என்பதை நாம் மறக்கக் கூடாது.