மார்க்சியத்தின் பெயரால் மார்க்சியத்தை சிதைக்கும் மார்க்சிய  விரோதிகள்
மார்க்சியத்தின் பெயரால் மார்க்சியத்தை சிதைக்கும் மார்க்சிய விரோதிகள்

மார்க்சியத்தின் பெயரால் மார்க்சியத்தை சிதைக்கும் மார்க்சிய விரோதிகள்

மார்க்சியத்தின் பெயரால் அதை சிதைக்கும் தளையசிங்கம் நீங்களாகவும் இருக்கலாம்…!
தளையசிங்கம் எனும் முதிரா இளைஞர் குறித்து “நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்” நூலில், இலக்கியத்தில்‌ மார்க்சிய எதிர்ப்பு – ஒரு புத்திசீவியின்‌ இரண்டகநிலை
என்ற கட்டுரையில் பேராசிரியர் கைலாசபதி பின்வருமாறு நிறுவுகிறார்… முதிரா இளைஞர் இலங்கையின் தளையசிங்கம் மட்டுமா? என கேள்விகள் எழுகின்றன….!
தளையசிங்கம் அடிக்கடி வற்புறுத்திக் கூறுகிற திருப்தியின்மையைக் கோட்பாட்டு ரீதியில் விளக்க முற்படும்போது ஏறத்தாழ எல்லாச் சந்தர்ப்பங்களிலும் மேல்நாட்டு எழுத்தாளர் சிலரையே அவர் உதாரணம் காட்டுவது கவனிக்கத்தக்கது.
ஹேபர்ட் மார்க்குஸெ, கொலின் வில்ஸன், ஜீன் போல் சாத்ரே, நோர்மன் மெய்லர் முதலிய அமெரிக்க, ஐரோப்பிய எழுத்தாளர்களையும் பஸ்டர்னெக், சொல்சனிற்சின் முதலிய ரஷ்ய எழுத்தாளர்களையும் அவர் போன்றோரையுமே அடிக்கடி எடுத்தாள்கிறார். இவர்கள் எல்லாரையும் அவர் அப்படியே ஏற்றுக் கொள்கிறார் என்று நான் கூறவில்லை எனினும் நவீன உலக இலக்கியகர்த்தாக்களில் இவர்களே தளையசிங்கத்துக்குப் பிரதான எழுத்தாளராய்த் தோன்றுகின்றனர் என்பது வெளிப்படை.
இவ்வெழுத்தாளரை மொத்தமாக நோக்குமிடத்து ஓருண்மை உடனடியாகவே தெளிவாகிறது. மேலே விதந்துரைக்கப்பட்டவர்களோடு, தளையசிங்கம் ஆங்காங்கு குறிப்பிடும் பெக்கெற், அயனெஸ்கோ, அலன் கின்ஸ்பெர்க் முதலியோரையும் சேர்த்துக் கொண்டால், விதிவிலக்கற்ற முறையில் இவர்கள் அனைவரும் (வெவ்வேறு வகையிலும் வடிவத்திலும்) கம்யூனிஸ எதிர்ப்பாளர்கள் அல்லது கம்யூனிஸத்தைத் திரித்துக் கூறுபவர்கள் என்பதைக் கண்டுகொள்ள அதிகநேரம் செல்லாது. இதனை அழுத்திக்கூற விரும்புகிறேன். ஏனெனில் *(தவிர்க்க இயலாத காரணத்தாலோ, சகவாசதோஷத்தாலோ அல்லது யாது காரணத்தாலோ) தளையசிங்கம் தனது பேச்சிலும் எழுத்திலும் மார்க்சீய சித்தாந்தத்தை (வெளிப்படை யாகவும், முற்றாகவும்) நிராகரிக்காதவர் போல நடந்து கொண்டாலும், அவரது சிந்தனை வளர்ச்சியையும் போக்கையும் பாதித்த ஒரு பகுதி மூலங்களை அணுகிப் பார்த்தால், அவை அப்பழுக்கற்ற கம்யூனிஸ எதிர்ப்பு நூல்களாகவே இருப்பதைக் கண்டு கொள்ளலாம். இதனைப் பலர் போதியளவு அவதானித்திருப்பதாய்த் தெரியவில்லை. குறிப்பாக முற்போக்கு அணியைச்சார்ந்த எழுத்தாளர் சிலர் தத்துவத் தெளிவின்மை காரணமாக இதனைக் கண்டுகொள்ளத் தவறியுள்ளனர்,
இரண்டாவது உலகப் போருக்குப் பின் சோவியத் யூனியனுக்கு எதிரான கெடுபிடி யுத்தத்தை அமெரிக்கா மேற்கொண்ட காலப்பகுதியில், கற்றோர் மத்தியில், கம்யூனிஸ எதிர்ப்புக் கருத்துக்களை வளர்ப்பதற்கும் உருவாக்குவதற்குமாக அமெரிக்கா நிறுவிய சர்வதேச ஸ்தாபனங்களில் ஒன்று Congress For Cultural Freedom என்று வழங்கப்படும் கலாச்சார சுதந்திர காங்கிரஸ் ஆகும். அதன் பிரதான ஆங்கில வெளியீடு என்கௌண்டர் (Ecouter) என்னும் ஆய்வறிவுக் “கலை இலக்கிய சஞ்சிகை, கல்வி கற்றோரிடையே ஆய்வறிவு மொழியாக ஆங்கிலம் வழங்கிவரும் நாடுகளில் இச்சஞ்சிகையினதும், இதன் வழித்தோன்றிய இந்திய சஞ்சிகையான Queit
போன்றவற்றினதும் செல்வாக்கு குறிப்பிடத்தக்களவு இருந்து வந்துள்ளது. (க. நா. சுப்பிரமண்யம், 1950ல் இந்தக் கலாசார சுதந்திர காங்கிரஸ் மாநாட்டிற் கலந்து கொள்வதற்காகப் பாரிஸ் சென்றார் என்பது மனங்கொள்ளத்தக்கது. அதனைத் தொடர்ந்தே சென்னையில் ‘ஜனநாயகப் பாதுகாப்புக் கழகம் என்ற கம்யூனிஸ எதிர்ப்பு நிறுவனத்தைச் சில வருடங்கள் நடாத்தினார் என்பதும் நினைவுகூரத்தக்கதேயாகும்.)
தளையசிங்கம் அடிக்கடி மேற்கோள் காட்டும் மேல்நாட்டு எழுத்தாளரெல்லாம் கடந்த இரு தசாப்தங்களாக இந்த Excounter சஞ்சிகையின் மூலம் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு அறிமுகமானவர்களே. தளையசிங்கத்தின் கட்டுரைகளிற் பல பகுதிகள், அச்சஞ்சிகையில் வெளிவந்த விஷயங்களின் தழுவலாகவும் அவற்றைப் படித்த அருட்டுணர்வில் பிறந்தனவாகவும் இருப்பதைப் பலர் அவதானித்திருக்கமாட்டார்கள், அதுமட்டுமல்ல. தளையசிங்கத்தின் அபிமானிகள் பலருக்கு அச்சஞ்சிகை இருப்பதே தெரியாமலிருக்கவும் கூடும்.
Encounter உருவாக்கிய கம்யூனிஸ எதிர்ப்பு இருவகையானது: ஒருபுறம் கம்யூனிஸத்தைச் சித்தாந்த அடிப்படையில் நேருக்குநேர் எதிர்ப்பவர்கள் எழுதினார்கள்; மறுபுறம், கம்யூனிஸத்தின் சிற்சில பகுதிகளை ஏற்றுக் கொண்டு (அதனால் அதனைக் கொன்று) அதனைக் கடந்து ஆன்மீக மதிப்புகளைத் தேடுபவர்கள் போலச் சிலர் எழுதினார்கள். (தமிழிலக்கிய உலகில் அடிபடும் “ஆன்மீகப் பொதுவுடைமை’ என்னும் சொற்றெடர் இத்தகையோரின் குரலேயாகும்.) ஆக, இருவகைகளிலும் கம்யூனிஸத்திலே திருப்தியின்மை ஏற்பட்டமையை இவர்கள் எண்ணற்ற வழிகளில் வெளிப்படுத்தினர். ஆசியாவில் வாழும் புத்திசீவிகள் பலரிடையே இப்பிரசாரம் வெற்றி பெற்றது.
இக்காலப்பகுதியிலே “பொய்த்த தெய்வம்” (The God that Failed), ‘உச்சிப் பொழுதில் இருள்” (Darkness At Noon), “அம்மணமான தெய்வம்’ (The Naked God) முதலிய பல நூல்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வெளிவந்தன. ஆர்தர் கெஸ்லர், ஸ்டீஃபன் ஸ்பென்டர், இக்னேஸியோ சிலோனி, றிச்சர்ட் ரைட், லூயி ஃபிஷர், ஹாவர்ட் ஃபாஸ்ற் முதலிய எழுத்தாளர்கள் தாம் கம்யூனிஸத்தை நிராகரித்தற்குரிய காரணங்களை விவரிக்கும் கட்டுரைகளும் நூல்களும் புற்றீசல் போல வெளிப்பட்டன, அனைத்துலக அளவில் இப்பெரும் பிரசார இயக்கம் நடத்தப்பட்டது. கம்யூனிஸம் ஒரு பொய்த் தேர்வாக நிரூபிக்கப்பட்டுவிட்டதாக இவர்கள்-இந்த ‘மாஜி’ கம்யூனிஸ்டுகள்-ஆரவாரத்துடன் எழுதினர். ”இனி வர இருக்கும் போராட்டம் கம்யூனிஸ்டுகளுக்கும் முன்னாள் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையிலேயே நடைபெறும்” என்று ஆர்தர் கெஸ்லர் கூறிய ஒரு பொன்மொழியும் பல இடங்களில் எடுத்துரைக்கப்பட்டது. உலகமெங்கும் மாஜி கம்யூனிஸ்டுகளுக்குத் திடீர் மவுசு ஏற்பட்டது. பிரம்மாண்டமான சோவியத் எதிர்ப்பு திட்டமிட்டு நடத்தப்பெற்றது. கம்யூனிஸத்தை எதிர்ப்பவர்கள் யாராயிருந்தாலும் அவர்களுக்குப் பிரசுர வசதி செய்து கொடுக்கப்பட்டது. மினுமஸானி போன்றாருடைய நூல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டன. இந்தகைய நூல்களிற் பெரும்பாலானவை ‘கய அனுபவ’ வெளிப்பாடுகளாய் அமைத்தன. இதே காலத்தில்தான் Encounter போன்ற சஞ்சிகைகளில் எரிக் வோகெலின் (Eric Voegelin), கார்ல் பொப்பர் (Karl Popper) ஆகிய இருவரினது சிந்தளைகளும் தத்துவங்களும் மார்க்சீயத்திற்குக் கல்லறை சமைப்பனவாகப் பிரகடனஞ் செய்யப்பட்டன. இந்நூற்றாண்டின் தலையாய சிந்தனையாளராக இவர்கள் கொண்டாடப்பட்டனர். மதம், விஞ்ஞானம் முதலியன மார்க்சீயத்தை மறுதலிப்பதாக இந்த இயக்கத்தினர் இடைவிடாது கூறிவந்தனர். இதற்காக நூற்றுக்காக்கான நூல்களும் கட்டுரைகளும் வெளியிடப்பட்டன; சில சஞ்சிகைகளும் துவக்கப்பட்டன. இவற்றால் பாதிக்கப்பட்ட முதிரா இளைஞர்களில் ஒருவர்தான் மு. தளையசிங்கம்.
—கைலாசபதியின் நூலிலிருந்து
All reactions:

Maniam Shanmugam and சரவணன் செல்வா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *