மார்க்சிசம் தோற்றுப்போன ஒரு கருத்தியலா?

மார்க்சிசம் தோற்றுப்போன ஒரு கருத்தியல் என்று கூறுபவர்கள் யார்? அது தோற்றுப்போகவேண்டும் என்று விரும்பியவர்கள், விரும்புகின்றவர்கள் ! இதை இன்று அல்ல … 100 ஆண்டுகளுக்குமேலாக அவர்கள் கூறிவருகிறார்கள்! ”தோற்றுப்போய்விடவேண்டும்” என்று ”உளமார” அவர்கள் விரும்புகிறார்கள்! அதைத் திருப்பித் திருப்பிக் கூறி, தங்கள் ”ஆசையை” தங்கள் மனதிற்குள் ”நிறைவேற்றிக்கொள்கிறார்கள்”! இதில் வியப்பு இல்லை!

இவர்கள் ஏன் அவ்வாறு கூறுகிறார்கள்? இதனால் அவர்களுக்கு என்ன ஆதாயம்? உறுதியாக அவர்களது ”விருப்பத்திற்கு” பின்னால் ஒரு வர்க்க நலன் ஒளிந்துகொண்டுதான் இருக்கும்! இதில் ஐயம் இல்லை!

காரல் மார்க்ஸ், அவரது தத்துவத்தோடு பயணித்த … பயணிக்கின்றவர்கள் ஆகியோரின் ”மூளையில்” உதித்த ஒரு தத்துவம் இல்லை மார்க்சியம்! ஒரு அறிவியல் விதியை ஒரு விஞ்ஞானி உருவாக்கினார் என்று அறிவியலில் கூறமாட்டார்கள்! அந்த விதியைக் ”கண்டறிந்தார்” என்றுதான் கூறுவார்கள்! அமெரிக்கக் கண்டத்தைக்கூட கொலம்பஸ் ”உருவாக்கவில்லை”! மாறாக, ”கண்டறிந்தார்”!

இந்த எல்லாக் ”கண்டுபிடிப்பும்” அவற்றிற்கான சமூகத் தேவை ஏற்படும்போதுதான் கண்டறியப்படும்! ஜன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு 20 ஆவது நூற்றாண்டில்தான் தோன்றமுடியும்! 10 ஆம் நூற்றாண்டில் தோன்றியிருக்கமுடியாது ஐன்ஸ்டீன் அப்போது பிறந்திருந்தாலும்கூட! சமூகத் தேவைமட்டுமல்ல, அந்தக் கண்டுபிடிப்பிற்குத் தேவையான வசதிகளும் தோன்றி நிலவுவது தேவையானது!

இயற்கையில் நிலவுகிற பல்வேறு இயக்கங்களில் – நகர்விசை இயக்கம் (Mechanical motion) பற்றிய ஆய்வைவிட இயற்பியல் இயக்கம் (Physical motion) பற்றிய ஆய்வு சற்றுச் சிக்கலானது; அதுபோன்று இயற்பியல் இயக்கத்தைவிட வேதியியல் இயக்கம் (Chemical motion) பற்றிய ஆய்வு மேலும் சிக்கலானது; அதைவிடச் சிக்கலானது உயிரியல் இயக்கம் (biological motion).

ஆனால் மேற்கூறிய அனைத்துவகை இயக்கங்களைவிட மிக மிகச் சிக்கலானது சமூக இயக்கம் (social motion) பற்றிய ஆய்வாகும். மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை நிலவிவருகிற மனித சமுதாயத்தின் இயக்கத்தை – வளர்ச்சியை – வளர்ச்சி விதிகளை – ஆய்ந்தறிந்து , அதை அடுத்த உயர்கட்டத்திற்கு இட்டுச்செல்கிற சமூக விதிகளைக் கண்டறிய வேண்டிய தேவை 19 ஆம் நூற்றாண்டில் ஏற்படுகிறது. அப்போது மேலைநாடுகளில் நிலவிய முதலாளித்துவ சமுதாயத்தின் நெருக்கடியானது அப்படிப்பட்ட ஒரு தேவையை உருவாக்கியது; அத்தேவையை நிறைவேற்றிக்கொள்ளத் தேவையான ஆய்வுமுறைகளும் பிற அறிவியல் துறைகளிலிருந்து (தத்துவத்துறை உட்பட) கிடைக்கப்பெற்றன.

அவற்றைப் பயன்படுத்தி , காரல் மார்க்சும் பிரடரிக் எங்கல்சும் மனித சமுதாய வரலாற்றை – வரலாற்றின் ஊடேயான இயக்கத்தை – அறிவியல் ஆய்வு முறைகளின் துணைகொண்டு கண்டறிந்தனர். அவர்கள் காலத்திய முதலாளித்துவ சமுதாயம் தனது உள் நெருக்கடி காரணமாக ஒரு சோசலிச சமுதாய அமைப்பை நோக்கி முன்னேறும் என்பதைக் கண்டறிந்தனர். அதுவே மார்க்சியம்! இது அந்த இருவரின் கனவுகள் இல்லை! அவர்களது சொந்த விருப்பங்கள் இல்லை! சமுதாயத்தின்மீது அவர்கள் ”திணித்த” கற்பனைகள் இல்லை! காடுகளில் ”தவம் இருந்து” பெற்ற ”வரம்” அல்லது ” அறிவு ” இல்லை! சமுதாய இயக்கம்பற்றிய ஒரு அறிவியல் பூர்வமான ஆய்வு அவர்களுடையது!

அத்தத்துவத்தை நன்கு உள்வாங்கிய லெனின் ரசிய சமுதாயத்தின் அரசியல் பொருளாதார நெருக்கடிகளை மேலும் ஆய்வுசெய்து, தனது காலகட்டத்தின் வரலாற்றுத் தேவையை நிறைவேற்றும் பணிக்குத் தலைமை தாங்கினார்! அப்பணிகளை ஸ்டாலினும் தொடர்ந்தார்! புறவயமான முதலாளித்துவ சமூக அமைப்பை – சமூக இயக்கத்தின் விதிகளுக்கு ஏற்ப – ஒரு சோசலிச சமுதாய அமைப்பாக மாற்றுவதில் முன்னணி வகித்தனர் அவர்கள்!

ஆனால் அதே வேளையில் அங்கே நிலவிவந்த முதலாளித்துவ சமுதாயத்தின் வேர்கள் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள அனைத்துவழிகளிலும் முயன்றன! வர்க்கப் போராட்டம் தொடர்ந்தது! கற்கால சமுதாயம் அதற்கு அடுத்த கட்ட சமுதாயமாக மாறுவதற்குப் பல நூற்றாண்டுகள் ஆகின! அதுபோல ஒவ்வொரு சமுதாய அமைப்பும் தனக்கு அடுத்த கட்ட சமுதாய அமைப்பாக மாறுவதற்குப் பல நூற்றாண்டுகள் ஆகும்!

அதுபோன்றே ரசியாவில் நிலவிய முதலாளித்துவ சமுதாயம் தனக்கு அடுத்தகட்ட சோசலிச சமுதாயமாக ஒரு சில பத்தாண்டுகளில் மாறிவிடமுடியாது! பல முனைகளில் பழைய முதலாளித்துவ சக்திகள் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள மிகக் கடுமையாக போராடும்; போராடியது. ரசியாவைச் சுற்றி ஏகாதிபத்திய நாடுகள்! ரசியாவின் உள்நாட்டுப் பொருளாதாரமும் பலவீனமாக இருந்தது. உலக யுத்தங்கள் வேறு! இதற்கிடையே உள்நாட்டு முதலாளித்துவ சக்திகள் பொதுவுடமைக் கட்சிக்குள்ளேயே ஊடுருவல்!

மேற்கூறிய போராட்டங்களில் (1917-1952) அங்கே பொதுவுடமைக்கட்சி சிறப்பான பங்கை வகித்தது! கட்சிக்குள்ளேயே ஊடுருவிய முதலாளித்துவ சக்திகளுக்கு எதிராகப் போராடியது! இருப்பினும் ஒரு கட்டத்தில் பொதுவுடமைக் கட்சிக்குள் முதலாளித்துவ சக்திகளின் ஆதிக்கம் தற்காலிக வெற்றியைப் பெற்றது! ரசியாவின் சோசலிச சமுதாயத்திற்கான கட்டமைப்புப் பணிகள் தற்காலிகமாக பின்னடவைகளைச் சந்தித்தன! ஆனால் இது பின்னடைவுகளே! மார்க்சின் – மார்க்சியத்தின் – தோல்வி இல்லை! வெறும் 35 ஆண்டுகளே சோசலிசக் கட்டுமானத்தைத் தொடர்ந்த பொதுவுடமைக் கட்சி பின்னடைவுக்கு உட்பட்டது!

நாம் முன்பே பார்த்தமாதிரி … ஒரு சமுதாயக் கட்டமைப்பு தனது அடுத்த கட்ட சமுதாய வளர்ச்சியைப் பெற .. பல பத்தாண்டுகள் ஆகும் ! இதற்கிடையில் பல தற்காலிகப் பின்னடைவுகள் ஏற்படலாம்! ஆனால் ஒருபோதும் சமுதாய வரலாற்றுச் சக்கரம் தான் முன் நோக்கி நகர்வதை நிறுத்திவிடாது! இது சமுதாய வளர்ச்சியின் ஒரு புறவய வளர்ச்சி விதி!

இங்கு நாம் கவனிக்கவேண்டியது …. இந்தப் பின்னடைவால் மார்க்சிய ஆய்வுமுறையோ அல்லது கோட்பாடுகளோ நிரந்தரமான தோல்விகளை அடைந்துவிட்டது என்று கருதக்கூடாது! அனைத்துத் துறைகளிலும் அவ்வப்போது பல பின்னடைவுகள் ஏற்படும்!

எவ்வளவோ மருத்துவ அறிவு இந்த நூற்றாண்டில் வளர்ந்து இருந்தாலும் ஒரு கரோனாத் தொற்றைச் சமாளிக்கமுடியாமல் பல இழப்புக்களுக்கு மனித சமுதாயம் உள்ளாகியுள்ளது! இதனால் மருத்துவ அறிவியல் தோல்வியடைந்துவிட்டது என்று கூறமுடியுமா? முடியாது ! மாறாக, பின்னடைவுகளை ஒதுக்கித் தள்ளி , அறிவியல் முன்னேறத்தான் செய்யும்!

எனவே, ரசியாவிலோ சீனாவிலோ தற்போது சோசலிசக் கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை முன்னிலைப்படுத்தி, மார்க்சின் அறிவியல் ஆய்வுமுறை, அரசியல் பொருளாதாரக் கோட்பாடுகள் தோல்வியடைந்துவிட்டன என்று முதலாளித்துவ சக்திகள் ”முழக்கம்” இட்டால், அது அவர்களது ”சொந்த விருப்பமே” ஒழிய , அறிவியல் அடிப்படையில் அமைந்த ஒன்று இல்லை!

எந்தவொரு பொருளின் மாற்றத்திலும் வளர்ச்சியிலும் எப்போதும் எதிர்பாராத பின்னடைவுகள் ஏற்படலாம்! ஆனால் அதற்காக அப்பொருளின் உண்மையான வளர்ச்சிச் சக்கரம் அடுத்த கட்டத்திற்கு நகராமல் இருக்காது!

மார்க்சியத் தத்துவம் ”தோற்றுவிட்டது” என்று ”கவலைப்படுபவர்கள்” முதலில் அத்தத்துவத்தை – சமூக அறிவியலை – நன்கு உள்வாங்கவேண்டும்! அதனடிப்படையில் சமுதாய வளர்ச்சிகளை – பின்னடைவுகள் உட்பட – ஆய்வுசெய்யவேண்டும்! சிக்கல் எங்கே என்பதைக் கண்டறியவேண்டும் !

அறிவியல் விதிகளுக்குத் தோல்வி கிடையாது! மாறாக, அந்த விதிகளைச் செயல்படுத்தும்போது, சில பின்னடைவுகள் ஏற்படலாம்! அவற்றையும் அறிவியலே சமாளித்து, தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்குச் செல்லும்!

  • பேரா. தெய்வசுந்தரம் நயினார்

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *