மதமும் மார்க்சியமும்
மதமும் மார்க்சியமும்

மதமும் மார்க்சியமும்

மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கவும் விதி, தெய்வசித்தம் என்று விளக்கங்களை கூறிச் சமுதாயப் பிரச்சனைகட்குரிய விடைகளை கண்டறியாது திசைதிருப்பவும் ஆளும் வர்க்கங்கள் மதத்தைப் பயன்படுத்தியுள்ளன. நிஜ உலகில் துன்பங்கட்கு காரணமானவற்றை மூடி மறைக்க தற்காலிக கற்பனை சுகமளிக்கும் முயற்சியில் அபின் எவ்வாறு பயன்படுகிறதோ அவ்வாறே மதமும் பயன்படுத்தப்படும் நிலையையே மார்க்ஸ் குறிப்பிட்டார். பாட்டாளி வர்க்கம் ஒரு புதிய சமுதாய சக்தியாக வளர்ந்து அதன் அரசியல் உணர்வும் ஸ்தாபனப்படுத்தலும் வேகமாக வளர்ச்சியடைந்து வந்த நிலையில், முதலாளித்துவம் தன்னால் முன்பு நிராகரிக்கப்பட்ட மத நிறுவனங்களுடன் தன் உறவுகளைச் சீர்செய்ய முற்பட்டது. நிலமான்ய சமுதாயத்தின் நிலப்பிரபு வர்க்க நலன்களைப் பேணி நின்ற மத நிறுவனங்கள், புதிய ஆளும் சுரண்டல் வர்க்கத்துடன் உறவுகளைப் புதுப்பிக்கத் தயங்கவில்லை. ஆளும் வர்க்கங்களும் மத நிறுவனங்களும் சமுதாய மாற்றத்தை தடுக்கும் ஒரு கருவியாக மதத்தைப் பயன்படுத்தி வந்த சூழ்நிலையிலேயே, பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கும் மத நிறுவனங்கட்குமிடையே முரண்பாடுகள் வளர்ந்தன. மத நிறவனங்கள் பிற்போக்குவாதி களுடன் தொடர்ச்சியாகக் கொண்டிருந்த நெருக்கமான உறவு ஒரு முக்கியக் காரணம் என்பதை நாம் மறக்கக் கூடாது.
ரஷ்யப் புரட்சியின்போதும் அதனையடுத்து நிகழ்ந்த போராட்டங்களிலும் ரஷ்யாவின் பிரதான கிறிஸ்துவ மத பீடம், பிற்போக்குச் சக்திகளையே பகிரங்கமாகச் சார்ந்து நின்றது. எனவேதான் அங்கு பாட்டாளிவர்க்க அரசுக்கும் கிறிஸ்தவ மத பீடத்திற்குமிடையில் பகைமை ஏற்பட அவசியமாயிற்று. ஒருபுறம் மக்களின் வழிபாட்டு மத நம்பிக்கைச் சுதந்திரங்களைப் பேணவும், மறுபுறம் அதே சுதந்திரங்களின் பேரால் மத பீடங்கள் எதிர்ப் புரட்சிகர நடவடிக்கைகளில் இறங்குவதையும் மத சுதந்திரம் வெகுஜனங்கட்கு விரோதமான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும் தடுப்பது அவசியமாயிற்று. இதைச் சரிவரக் கையாள்வதில் உள்ள பிரச்சினைகள் சோவியத் யூனியனின் உள்ளும் வெளியிலும் இருந்த சூழ்நிலைகளால், முக்கியமாக ஏகாதிபத்தியவாதிகளதும் பிற்போக்குவாதிகளதும் செயல்களால் பல தவறான கருத்துகள் ஊதிப் பெருக்கப் பட்டன.
அரசின் தவறுகளை விமர்சிக்கின்ற எவரும் ஐரோப்பாவின் அண்மைக்கால வரலாற்றில் வத்திக்கான் அதிகாரபீடம் எப்படி நடந்து கொண்டது என்பதை மறந்து விடக்கூடாது. இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஹிட்லரை எதிர்க்கத் தயங்கிய வத்திக்கான் அதிகார பீடம் பிராங்கோவுடனும் பிற பாஸிஸ் எதிர்ப்புரட்சியாளர்களுடனும் குலாவத் தயங்கவில்லை என்ற உண்மையை இன்றைய உலகின் முதலாளித்துவ நாடுகளின் தாராளவாதிகளும் முதலாளித்துவ ஜனநாயகவாதிகளும் எளிதாக மறந்து விடுகிறார்கள்.
வரலாற்றில் ஒரு காலத்தில் புரெட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள் முற்போக்கான பணியொன்றை ஆற்றினார்கள். கத்தோலிக்கத் திருச்சபை முதலாளித்துவம் உருவாவதை எதிர்த்து நின்றபோது, திருச்சபையில் ஏற்பட்ட பிளவுகள் சமுதாயத் தேவையால் உந்தப்பட்டன. திருச்சபையினுள்
நடந்த ஊழல்களும் சதிகளும் அப்பிளவுகளை நியாயப்படுத்தப் பயன்பட்டாலும், பிளவுகளின் அடிப்படைக் காரணங்கள் சமுதாய அரசியல் தன்மையுடையன. பிற்காலத்தில் பல்வேறு புரொட்டஸ்தாந்து மத அதிகாரபீடங்களும், பொதுவாகத் தத்தமது நாடுகளின் ஆளும் வர்க்க நலன்களைச் சார்ந்து நின்றதோடு காலனித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்க்கத் தயக்கங்காட்டின. இவை சில தீவிரமான சூழல்களில் உதாரணமாக, தென்னாப்பிரிக்காவின் டச்சுச் சீர்திருத்த திருச்சபை நிறவெறியை நியாயப்படுத்தியதுபோன்று படு பிற்போக்கான நிலைப்பாட்டை மேற்கொண்டும் உள்ளன. இன்று சில புரொட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத நிறுவனங்களும் அவை சார்ந்த அற நிறுவனங்களும் பல மூன்றாமுலக நாடுகளின் பிரச்சனைக்குக் காரணம் ஏகாதிபத்தியமே என்ற உண்மையை உணர்வதோடு, இடையிடையே பகிரங்கமாகச் சுட்டிக்காட்டவும் முற்படுவது வரவேற்கத்தக்க ஒரு போக்காகும். அதே சமயம் சமுதாயச் சார்புள்ள கிறிஸ்துமதம் கிறிஸ்துவ ஆன்மிகத்துக்கு விரோதமானது எனக்கூறி, கிறிஸ்துவ அடிநிலைவாதிகள் என்று தம்மை வர்ணிக்கும் இயக்கங்களும் விருத்தியடைந்து வருகின்றன. அமெரிக்காவில் உள்ள இவாஞ்ஜெலிஸ்டுகள் தமது கத்தோலிக்க விரோதத்தையும் கம்யூனிஸ விரோதத்தையும் பகிரங்கமாகவே பிரகடனம் செய்து, அமெரிக்காவின் படு பிற்போக்குச் சக்திகளது குரலாக ஒலிக்கிறார்கள். நிக்கர குவால படுகொலைக்கும் கூசாத கொன்ட்றா எதிர்ப்புரட்சியாளர்கட்கு ஆயுத உதவி பெற்றுத் தருவதில் இவர்களது செயற்பாடு முக்கியமானது. அமெரிக்காவில் கிறிஸ்துவம் பொதுவாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனையும், கம்யூனிஸ எதிர்ப்பையும் தன் பணிகளில் உள்ளடக்க முக்கியக் காரணம், அமெரிக்கச் சமுதாயத்தின் ஏகாதிபத்தியத் தன்மையே ஆகும். எனவே, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சரிவின் போக்கிலேயே அமெரிக்காவின் கிறிஸ்துவம் தூய்மையடைய முடியும்.
சீனப் புரட்சியின்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் மதங்கள் பற்றிய சரியான நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. மத நம்பிக்கைக்கும், வழிபாட்டுச் சுதந்திரத்துக்கும் உரிமை வழங்கப்பட்டதோடு மத நம்பிக்கையில்லாதிருக்கவும் வழிபடாது விடவும் அதே அளவு உரிமை வழங்கப்பட்டது. கத்தோலிக்க மக்கள் சீனத் தேசிய அடிப்படையில் தமது மதத்தைக் கடைபிடிக்குமாறு உற்சாகமூட்டப்பட்ட, அதே தருணம் சீனக் கத்தோலிக்கர்கள்மீது வத்திக்கானின் இறைமையைச் சீன அரசாங்கம் ஏற்க மறுத்தது மிகவும் சரியானதே. திபெத்தில் நிலப்பிரபு வர்க்கத்துக்கும் பெளத்த அதிகார பீடத்திற்குமிடையிலிருந்த நெருக்கம் காரணமாக அங்கு மதபீடத்துக்கும் மார்க்ஸியப் புரட்சிக்குமிடையில் முக்கிய முரண்பாடுகள் இருந்தன. எனினும் சீனப் புரட்சியை அடுத்து திபெத் விடுவிக்கப்
 
மதமும் மார்க்ஸியமும் பட்டபோது கீழ்மட்டப் பெளத்த குருமார் சமுதாய மாற்றத்தை ஆதரித்தனர். மிகவும் பின்தங்கிய பண்ணையடிமை முறையைப் பேணிய திபெத் சமுதாயத்தில் பெளத்த மத பீடத்தினுள்ளேயே வர்க்க வேறுபாடும் சுரண்டலும் கடைபிடிக்கப்பட்டு வந்ததே இதன் காரணமெனலாம். 1959இல் தூக்கியெறியப்பட்ட நிலப்பிரபு வர்க்கத்தினரின் தூண்டுதலின் பேரில் ஒரு கிளர்ச்சி நடைபெற்றது. அப்போது திபெத்தின் இரண்டு முக்கியமான மதத் தலைவர்களுள் முதல்வரான தலாய் லாமா பிற்போக்கு வாதிகளின் தரப்பில் அயல் ஊடுறவல்காரர்களது ஆதரவுடன் நடந்த அக்கிளர்ச்சியை ஆதரித்தார். சமுதாய உணர்வுமிக்க பஞ்சன் லாமா கிளர்ச்சியை எதிர்த்தார். மக்கள் ஆதரவு இல்லாத கிளர்ச்சி தோல்வியடைந்தது. ஆயினும் இந்தியா தன் வஞ்சகமான சீன விரோத நோக்கங்களை நிறைவேற்றுமுகமாக தலாய் லாமாவுக்குத் தஞ்சமளித்து உற்சாகமூட்டியது. சீனா திபெத்தினுள் மதம் பற்றிய சரியான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்த காரணத்தால், திபெத்தினுள் குறுகிய தேசியவாதமோ தீவிரமான மதவெறியோ வளரவில்லை. ஆயினும் சீனக்கலாச்சாரப் புரட்சியின்போது இடது தீவிரவாத சக்திகள் மதங்களை ஒழிப்பதையும் கலாச்சாரப் புரட்சியின் ஓர் இலக்காகக் கருதி சீனாவினுள் இருந்த சகல மதங்கட்குமெதிரான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டன. இதன் விளைவாக மத வழிபாட்டுச் சுதந்திரங்கள் மட்டுமன்றி ஆலயங்களும் வழிபாட்டுக்குரிய தலங்களும் சேதப்படுத்தப்பட்டன. இதன் விளைவாகச் சிறுபான்மை இன மக்களது தேசிய, மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டன. அண்மையில் திபெத்தில் நடைபெற்ற கலவரங்களைத் தூண்டிய சக்திகட்கு இந்தத் தவறுகள் மிகவும் உதவி உள்ளன. எனினும் சீன மத நடைமுறை பற்றிய சரியான மார்க்ஸிய நிலைப்பாட்டைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்க உறுதி கொண்டிருப்பதால், கலாச்சாரப் புரட்சியின்போது இழைக்கப்பட்ட தவறுகளும் அவற்றின் தீய விளைவுகளும் திருத்தப்பட்டு வருகின்றன.
இந்தியத் துணைக் கண்டத்தில் கத்தோலிக்கத் திருச்சபையுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு அதிகாரமுள்ள மதபீடங்கள் எதுவுமில்லை. கேரளத்தின் முதலாவது கம்யூனிஸ்ட் மாநில அரசாங்கத்தைக் கவிழ்த்ததில் கத்தோலிக்கத் திருச்சபையின் பங்கு முக்கியமானது ஆயினும், இன்று கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகார பீடத்தின் கம்யூனிஸ் விரோத அரசியல் மக்கள் மத்தியில் முன்னைய அளவுக்கு எடுபடாதவாறு நிலைமைகள் மாறியுள்ளன. இந்துக்கள் மத்தியில் மத அதிகார பீடங்கள் என எதுவும் இல்லாதபோதும், இந்துமத வெறியையும் பிற மதங்கட்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் எதிரான தாக்குதல்களையும் நடத்தும் அரசியல் ஸ்தாபனங்களும் குண்டர் படைகளும் பெருகி வருகின்றன.
ஆர்.எஸ்.எஸ். சிவசேனை போன்ற ஸ்தாபனங்கள் இந்து முஸ்லிம் பகையை ஆதாரமாக வைத்து வட இந்தியாவில் விருத்தியடைந்துள்ளன. இன்று ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து மதவெறி நிறுவனங்கள் தென் இந்தியாவிலும் வேரூன்றி இந்து கத்தோலிக்க, உயர் சாதி தாழ் சாதி மோதல்கட்கு ஊக்கமளிக்கின்றன. இது மட்டுமன்றி, மக்களின் அறியாமையையும் பணக்காரர்களது பேராசையையும் ஆதாரமாகக் கொண்டு பகவான்கள் எனவும் 'அவதாரங்கள் எனவும் தம்மைப் பிரகடனம் செய்யும் ஏமாற்றுக்காரர்களும் பெருகி வருகிறார்கள். மார்க்ஸியவாதிகள் இத்தகைய சமூக விரோதச் செயல்களை எதிர்க்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
மார்க்ஸியவாதிகள் மூடநம்பிக்கைகளை எதிர்க்கக் கையாளும் முறைகளும் திராவிட இயக்க நாத்திகர்கள் ஒரு காலத்திற் கையாண்ட முறைகளையும் ஒப்பிட்டால் மார்க்ஸியவாதிகள் மக்களின் உணர்வுகள் புண்படாத விதமாகவேச் செயற்பட்டு வருவது புலனாகும். மறுபுறம் சாதி அடக்குமுறையை எதிர்ப்பதில் மார்க்ஸியவாதிகள் முனைப்புடன் செயல்பட்டு வருவதுபோல, இன்றைய திராவிட இயக்கத்தினர் செயற்படாததோடு அவர்கள் பிராமணரல்லாத உயர்சாதியினரின் நடுத்தர-உயர்வர்க்க நலன்களையே பேண முற்படுவதையும் காணலாம். எனவே மார்க்ஸியவாதிகள் மக்களின் மத, வழிபாட்டுச் சுதந்திரங்களை மதிக்கும் அதேவேளை, மதத்தின் பேரில் இன்றும் தொடரும் சமுதாய அநீதிகளை எதிர்க்கிறார்கள் என்பது புலனாகும். ஆயினும் ஆர்.எஸ்.எஸ். போன்ற ஸ்தாபனங்களும் பிற்போக்கு அரசியற் கட்சிகளும் தொடர்ந்தும் மார்க்ஸியவாதிகளை இந்து மதத்தின் விரோதிகளாகச் சித்தரித்து வருகின்றன. மார்க்ஸியத்தை மத விரோத சக்தியாகக் காட்டுவோர் யார் என்று நாம் அடையாளங் காண்போமானால், உண்மையான சுதந்திரத்தின் விரோதிகள் தீவிர மதவாதிகளே என்பது புலனாகும். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட காலத்தில் அதற்குப் பக்கபலமாக பெளத்த குருமார் இருந்துள்ளனர். இலங்கையில் பேரினவாதம் எழுச்சி பெற்றதையும் பழைய இடதுசாரிப் கட்சிகளின் சரிவையும் அடுத்து பெளத்த குருமாருக்கு கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொடர்புகள் குறைந்துவிட்டன. எனினும், இன்றும் சாதாரண பெளத்த பிக்குகள் பலரிடையே இடதுசாரிச் சிந்தனைகள் நிலவுகின்றன. மார்க்ஸியத்தைப் பெளத்த விரோத சக்தியாக யூ.என்.பி. தொடர்ந்தும் சித்தரித்து வருகிறது. ட்ரொட்ஸ்கிவாதியான கொல்வின் ஆர்.டி. சில்வா முன்பு ஒரு தடவை பெளத்த விகாரைகளை இடித்து அவற்றின் இடத்தில் பொதுலசலக் கூடங்கள் கட்டுவோம் என்ற பொருட்படப் பேசியதை வலதுசாரிகள் பலமுறை எடுத்துக் காட்டியுள்ளார்கள். அது ட்ரொட்ஸ்கியத்தின் இடது தீவிர
நிலைப்பாட்டிற்குரிய கருத்தன்றி மார்க்ஸியத்துக்குரியதல்ல. (அதே கொல்வின் ஆர்.டி. சில்வா 1970இன் பின் பெளத்தத் தலங்களில் வழிபாடுகளில், அரசியற் காரணங்கட்காகப் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு ட்ரொஸ்கியவாதி களினதினின்றும் வேறுபட்டது. மத நிறுவனங்கள் தேசிய வெகுஜன நலன்கட்கும் சமுதாயத்தின் முன்னோக்கிய வளர்ச்சிக்கும் ஊறு ஏற்படுமாறு செயற்படும்போது, அவர்கள் மத நிறுவனங்களைக் கண்டிக்கத் தயங்கவில்லை. தனி மனிதர்களது மத சுதந்திரத்துக்கும் மத நிறுவனங்களின் அதிகார வேட்கைக்குமிடையிலான வேறுபாட்டை அவர்கள் சரிவர அடையாளங் கண்டுள்ளனர். தீவிர இடதுசாரிப் போக்குகளின் விளைவாக மக்களின் மத உணர்வுகள் புண்படுமாறான தவறுகள் ஏற்பட்டுள்ளன. இவற்றை ஏற்றுக் கொள்ளவும், திருத்தவும் மார்க்ஸிய லெனினியவாதிகள் என்றும் தயங்கியதில்லை.
மதங்கள் பற்றிய மார்க்ஸியப் பார்வை மதங்களின் அடிப்படையான சிந்தனை முறையை நிராகரிக்கிறது; மதங்களின் அடிப்படையில் சமுதாயத்தின் பிரச்சனைகட்குத் தீர்வு காண இயலாது என வலியுறுத்துகிறது. மதங்களின் பேரில் முன்வைக்கப்படும் காலத்துக்கொவ்வாத நடைமுறைகளை மறுப்பதோடு, அவை சமுதாய நலனுக்குத் தீங்காக அமையும்போது எதிர்க்கிறது. ஆயினும் மதத்தைத் தன் பரம எதிரியாகக் கருதிச் செயற்படும் தேவை மார்க்ஸியத்துக்கு இல்லை. மார்க்ஸியம் மதத்தை மட்டுமன்றி தேசியவாதத்தையும் நிராகரிக்கின்றது. ஆயினும் கொலனித்துவ, நவகொலனித்துவ ஏகாதிபத்திய அதிகாரம் நிலவும் சமுதாயச் சூழல்களில் தேசியவாதத்திற்கு ஒரு முற்போக்கான பங்கு இருப்பதை அது ஏற்றுக்கொள்கிறது. தேசியவாதத்தில் முற்போக்கான தன்மையும் பிற்போக்கான தன்மையும் உள்ளதை ஏற்று. முற்போக்கான தேசியவாதத்தையும் பிற்போக்கான தேசியவாதத்தையும் வேறுபடுத்துகிறது. ஒரு மார்க்ஸியவாதியால் ஏககாலத்தில் தேசபக்தனாகவும் சர்வதேசியவாதி யாகவும் திகழ முடியும் என மாக்ஸியம் ஏற்றுக் கொள்கிறது. மதங்கள் பற்றிய மார்க்ஸியப் பார்வையும் இவ்வாறே மதங்களின் சமுதாய நடைமுறையில் முற்போக்கானதையும் பிற்போக்கானதையும் வேறுபடுத்தி சமுதாயத்தின் முற்போக்கான வளர்ச்சியில் மத நடைமுறை அளிக்கக்கூடிய பங்கை ஏற்றுகொள்ள வல்லது. தேசிய உணர்வுகளும் மத நம்பிக்கையும் ஒரு குறிப்பிட்ட மனித சமுதாயச் சூழலுக்கு உரியன. மார்க்ஸியத்தின் நோக்கு, அச்சூழலை மாற்றுவதே அல்லாமல் அச்சூழலின் நிழல்களுடன் போரிடுவதல்ல.
தாயகம் 19 - 1988

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *