1928-இல் கூடிய கம்யூனிச அகிலத்தின் ஆறாம் மாநாடு ”இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர்கள் காங்கிரசுக் கட்சியிலிருந்து விலகி, எல்லாப் பொதுவுடைமைக் குழுக்களும் தனிநபர்களும் இணைந்து ஒன்றுபட்ட சட்டவிரோதமான கட்சியைக் கட்ட வேண்டும்” என்று அறிக்கை நிறைவேற்றியது. ஆனால் அதை அப்போதைய சி.பி.ஐ நிராகரித்து விட்டது. 1930 இல் மீண்டும் அகிலத்தின் அதிகார பூர்வ பத்திரிக்கை இந்தியாவுக்கான விமர்சனமும் செயல்திட்டமும் எழுதியது. இதை கல்கத்தா மையம் ஏற்ற போதும் டாங்கே தலைமையிலான பம்பாய் மையம் ஏற்கமறுத்து, காந்தி – காங்கிரசு தலைமையிலான இயக்கங்ளில் இணைந்து செயல்பட்டது.

இந்தியாவில் குடியேறி செயல்பட்டு வந்த பிரிட்டன் பொதுவுடைமையாளர்களும், கல்கத்தா மையமும் அகிலத்துக்கு அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் 1932-இல் இ.பொ.க.வின் தவறுகளைக் கடுமையாக விமர்சித்து பிரிட்டன், சீனா, ஜெர்மனிப் பொதுவுடைமைக் கட்சிகள் ஒரு பகிரங்கக் கடிதம் அனுப்பின. 1933-இல் மீண்டும் சீனப் பொதுவுடைமைக் கட்சி, இ.பொ.கவின் அமைப்பு – நடைமுறைகள் மீது விமர்சன அறிக்கை அனுப்பியது.
வெளியிலிருந்து வந்த இத்தகைய இடையறாத முயற்சிகளின் விளைவாக 1933-இல் கூடிய இ.பொ.க வின் இரகசிய மாநாடு, பொதுவுடைமை அகிலத்தில் இணைவது என்றும் அதன் வழிகாட்டுதல்களை ஏற்பது என்றும் முடிவு செய்தது. டாங்கே தலைமையிலான காந்திய – காங்கிரசுக் கம்யூனிஸ்டுத் திட்டத்துக்கு மாற்றாக ஒரு புதிய புரட்சிகர அறைகூவலை அந்த மாநாடு அமைத்த மத்தியக் குழு விடுத்தது.
ஆனால், ஆறாவது மாதமே கட்சியையும் அதன் துணை அமைப்புகளையும் ஏகாதிபத்திய அரசு தடை செய்தது. டாங்கே போன்ற ”மண்ணுக்கேற்ற மார்க்சியவாதிகள்” எல்லாம் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் காங்கிரசு சோசலிசக் கட்சி என்கிற அமைப்பை காங்கிரசுக்குள்ளாகவே நிறுவி, அதில் இணைந்தனர். சிங்காரவேலருக்குப் பிறகு தமிழ்நாட்டில் பொதுவுடைமை இயக்கத்தின் பொறுப்பேற்ற ஜீவா தலைமையிலான மண்ணுக்கேற்ற மார்க்சியவாதிகளும் அவர்களைப் பின்பற்றினர்.
மார்க்சியமோ, தனிச்சிறப்பான கூறுகளுக்கும், பருண்மையான நிலைமைகளுக்கும் ஒருங்கிணைந்த வழியையையும் தீர்வையும் கோருகிறது. அதற்கு மாறாக, சந்தர்ப்பவாத அரசியலையே நடைமுறையாகக் கொண்டவர்கள் வெவ்வேறு பிரச்சினைக்கு வெவ்வேறு தீர்வுகளைக் கூறும் தத்துவங்களைக் கலவையாக்கி, இதுதான் “மண்ணுக்கேற்ப மார்க்சியம்” என்கின்றனர். இந்த வகையில் தமிழின, தலித்தியவாதிகள் மட்டுமல்ல, இந்துமதவெறி பாசிச- பார்ப்பன சனாதனிகள் கூட “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” பேசமுடியும் என்பதுதான் சமீபத்திய முன்னேற்றம்!