மணியம்மாவை நாம் மறக்கக்கூடாது
கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல தோழர் மணியம்மா. பெண்ணியம், சாதி ஒழிப்பு பேசும் அனைவரும் மணலூர் மணியம்மாவை பேச மறக்கக்கூடாது.
கீழத்தஞ்சை சமர்க்கள நாயகர்களின் வேங்கை அவர். சாதி தீண்டாமை, பண்ணையடிமை முறையை ஒழிக்கும் பொதுவுடைமையின் போர்வாளாய் காவிரி வளநாட்டை காத்திட்ட ஒரு மாபெரும் களப் போராளி.
கணவரை இழந்த வைதீக பார்ப்பன பெண்ணாக மொட்டை அடித்தும் காலில் செருப்பு அணியாமலும் தொடக்கத்தில் காந்தியின் கொள்கையில் தேசிய விடுதலையில் ஈடுப்பட்டார்.
பிறகு அவரை சுற்றி நடந்த பண்ணையடிமை முறைக்கு எதிராக பண்ணையார்களை எதிர்த்து போராடியபோது அவரின் சொந்த குடும்பத்தினரால் தள்ளி வைக்கப்பட்டார். அதனால் அடங்கி போகவில்லை மணியம்மா, தோழர்களுடன் சேர்ந்து செங்கொடி ஏந்தினார் இன்னும் வீரியமாக பண்ணையார்களை எதிர்த்தார். முழு நேர கம்யூனிஸ்ட் ஆனார்.
ஒற்றை காளை மாடு பூட்டப்பட்ட வண்டியில் தன்னந்தனியாக,
செங்கொடியுடன்,
கையில் உள்ள குடைக் கம்பியில் எப்போதும் மறைத்து வைக்கப்பட்ட குறுவாள்,
கதர் வேட்டி,
தானே தைத்த மேல் பாக்கெட்டோடு ஜிப்பா போன்ற அரைக்கை சட்டை,
தோளில் துண்டு,
கிராப்பு வெட்டிய தலை,
தோல்ப்பை. இது தோழர் மணியம்மாவின் அடையாளம்.
கீழத்தஞ்சை முழுவதும் ஒரு பெண் நிலவுடைமையாளர்களுக்கு சிம்மசொப்பனமாகவும், ஒடுக்கப்பட்ட விவசாயத்தொழிலாளர்களுக்கு தோழமையின் அடையாளமாகவும் இருந்தார் என்றால் அது தோழர் மணியம்மாதான்.
தனது சொந்தப் பண்ணையிலேயே சாதி அடிமைத் தனத்தை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்தினார். ஜஸ்டீஸ் கட்சிக்காரர்களும், காங்கிரஸ்காரர்களும் பண்ணையார்களுக்கே சார்புடையவர்களாக இருக்கிறார்கள் என்று சொந்த அனுபவத்தை மக்களிடையே பரப்புரை செய்தார்.
அவரின் பண்ணை அடிமைக்கு எதிரான போராட்டத்தாலும், வர்க்க அணிதிரட்டலாலும் ஆத்திரமடைந்த ஆதிக்கசாதி பண்ணையார்களும், அரசும் அவரைக் கொல்ல பலமுறை முயன்று கொண்டே இருந்தது.
சிலம்பம் கற்று கையில் சிலம்பத்தோடு தனி ஒருவராகவே தஞ்சைப் பகுதியெங்கும் சென்று விவசாய சங்கங்களைக் கட்டி வளர்த்தார். அவர் இயற்பெயர் வாலாம்பால், அவரின் செல்ல பெயர் மணி. அவரை மணி என்றே அனைவரும் அழைத்தனர். பிறகு அவரை உழைக்கும் மக்கள் ‘மணி அம்மா’ என்று அழைத்ததால் பிறகு தோழர் மணியம்மா ஆனார்.
சாணிப்பால், சவுக்கடிக்கு எதிராக பல ஊர்களில் விவசாயதொழிலாளர்களை ஒன்றிணைத்து போராடி ஒழித்தார். பல பண்ணையார்களிடம் கூலி உயர்வு பெறப்பட்டது. எந்த ஊரில் மணியம்மா செங்கொடி ஏற்றுகிறாரோ அங்கே போராட்டம் வெடிக்கும் என்று ஆண்டைகளும் காவல்துறையும் அஞ்சிய காலம். உழைக்கும் கூலி தொழிலாளர்களும், தலித் மக்களும் குடும்பத்தின் மூத்த அக்கா போலவே தோழரை பார்த்தனர். விவசாய தொழிலாளர்களின் நடவுப்பாடல்களில் இன்னமும் மணியம்மா பெயர் வாழ்கிறது. அதில் ஒரு பாடல்:
கோட்டை இடிஞ்சி விழ
கொடிபிடிச்சி அம்மா வந்தா
சாட்டையடிக்கு முன்னே
சாகசங்கள் செய்துவந்தா
மதிலுகள் சரிஞ்சு விழ
மணியம்மா அங்கே வந்தா
பதிலுகள்கேட்டு வந்தா
பட்டமரம் தழைக்க வந்தா
ஏழைக்குலம் குளிரும்
எங்கம்மா பேரு சொன்னா
மக்கள் குலம் குளிரும்
எங்கம்மா பேருசொன்னா
மக்கள் குலம் விளங்கும்
மணியம்மா பேரு சொன்னா
பெண் அடிமைத்தனமாக வாழ்வதையும், விதவைகள் கொடுமையையும் எதிர்த்து சாமானிய மக்களிடம் பிரச்சாரம் செய்தார். சிறுவர்கள் பொது இடத்தில் மண் அள்ளியதற்காக அவர்களை அடித்த கார்வாரியின் கையை வெட்டினார். பெண்களுக்கு சைக்கிள் ஓட்டவும், தற்காப்புக் கலைகளையும் தானும் கற்றுக்கொண்டு பிற பெண்களுக்கும் கற்பித்தார். நிலப்பிரபுக்களால் பண்ணையடிமைப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்வதை எதிர்த்து எச்சரிக்கை விடுத்தார்.
எண்ணிலடங்கா விவசாயப் போராட்டங்களில் பங்கெடுத்த அந்த இரும்புப் பெண்மணி, தொழிலாளர் மத்தியில் வேலை செய்யவும் தயங்கவில்லை. நாகப்பட்டிணம் பகுதியில் மணியம்மாவின் தொழிற் சங்கப் போராட்டம் இன்று வரை மக்களால் பேசப்பட்டு வருவது.
அவர் கொடும் சிறை வாசத்துக்கும் அஞ்சவில்லை. அடிதடி பஞ்சாயத்துக்கும் அஞ்சுவதில்லை. அதேபோல அனைத்து கட்சிகளின் கபட வேடங்களையும், நிலப்பிரபுத்துவ ஆதரவுப் போக்கையும் தோலுரிக்கவும் தயங்கவில்லை.
தோழர் மணியம்மா தீவிரமாக அமைப்புப்பணி செய்பவர். அவர் ஏற்றி வைத்த செங்கொடிகள் நாகையில் ஏராளம். அதன் காரணமாகவே 40, 50களில் மணலூர் சுற்றிய ஊர்களில் கம்யூனிஸ்ட் கட்சியை மணியம்மா கட்சி என்றுதான் அழைக்கப்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட போது தலைமறைவு வாழ்க்கை பிறகு ஒன்றரை ஆண்டு சிறை வாழ்க்கை. விடுதலையாகி வெளியே வந்து அரசால் சின்னாபின்னமாக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியை அதிகம் உழைத்து ஒன்றிணைத்தார்.
பூந்தாலங்குடி நிலக்கிழாரோடு விவசாய தொழிலார்களுக்காக பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வந்தபோது பண்ணையாரின் மானுக்கு மூக்கில் ஒரு குச்சியை நுழைத்து வெறி ஏத்தி அதன் கொம்பால் முட்டி மணியம்மாவின் குடலை சரித்தனர் ஆதிக்க வெறியர்கள்.