இப்பதிவு வேறு தோழர் வாட்சாட்டில் பதிவிட்டது. வரலாற்று பதிவு ஆகையால் இங்கே பதிவு செய்துள்ளேன்.மார்ச் 8:பெண்களின் உரிமை குறித்துப் பேசப்படும் இந்நாளில் ஓர் மாபெரும் களப் போராளி பற்றி உங்களோடு பகிர்வது குறித்து நான் முதலில் பெருமை கொள்கிறேன். (இந்த பதிவை எழுதி முடித்துவிட்டு இதற்காக ஒரு படத்தை தெரிவு செய்ய முயன்ற போதுதான் அந்த லட்சியவாதப் பெண்மணிக்கென ஒரு புகைப்படம் கூட இல்லை என்பது தெரிந்தது)”அம்மா” எனும் அற்புத வார்த்தை அசிங்கப்பட்டு நிற்கும் இந்தச் சூழலில் இத்தகு உண்மையான அம்மாக்கள் எங்கோ ஓர் மூலையில் மறைத்து வைக்கப் பட்டு விட்டார்கள்.மணலூர் மணியம்மாள். __________________________சாதித் தீண்டாமைக்கு எதிராகவும்,தேச விடுதலைக்காகவும், பொதுவுடைமையின் போர்வாளாய் காவிரி வளநாட்டை காத்திட்ட ஓர் தவப் புதல்வி. இட்ட பெயரென்னவோ வாளம்மாள்தான் . மணி போன்ற அன்னையின் திருவடிவால் அவர் மணியம்மையானார்.பார்ப்பனக் குடும்பத்திலே பிறந்த மணியம்மாள் எல்லா பிராமணப் பெண்களைப் போல்தான் பூஜித்துக்கொண்டிருந்தார். அதுவும் 27 வயது இளம் விதவையென்றால் கேட்கவா வேண்டும்? தன்னை விடவும் 20 வயது மூத்த ஓர் நாகப்பட்டிணம் வக்கீலுக்கு வாக்கப்பட்ட மணியம்மாள் 10 ஆண்டுகளிலேயே விதவை எனும் கானகத்தில் வீழ்ந்து பட்டாள். பேராசை கொண்டவர்களான கணவனின் உறவினர்கள் முன்னால் சீமானான கணவனின் சொத்தில் சல்லிக்காசும் வேண்டாமென தூக்கி எரிந்துவிட்டு வந்தவள்.தனக்கே உரித்தான ஈர மனமும் சீர்தூக்கி ஆயும் கூர் குணமும் மெல்ல மெல்ல விதவை எனும் கொடுங்காட்டிலிருந்த அவரை வெளியே கூட்டிவந்தன. காந்தியின் தேசிய இயக்கத்தின்பால் ஈடுபாடு கொண்ட மணியம்மை காந்தி தஞ்சைப் பகுதிக்கு வந்த போது அவரைச் சந்தித்து காங்கிரசில் இணைகிறார். மாகாணக் கமிட்டி உறுப்பினர் பதவிவரை உயர்ந்த அவர் இதர காங்கிரஸ் காரர்களைப் போலல்லாமல் பண்ணை அடிமை முறையை எதிர்த்து தனது சொந்தப் பகுதியில் உறுதி வாய்ந்த போராட்டம் நடத்தினார்.ஜஸ்டீஸ் கட்சிக்காரர்களைப் போலவே காங்கிரஸ்காரர்களும் பதவிமோகம் கொண்டவர்கள் என்றும் பண்ணையார்களுக்கே காங்கிரசில் பெரு மதிப்பு என்றும் அவர் தனது சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்து கொண்டார். மெல்ல மெல்ல ஜனசக்தி இதழ் தொடங்கி பொதுவுடைமை கொள்கைகளின் பால் ஈடுபாடு கொண்ட மணியம்மை; ஒரு முழுநேர கம்யூனிஸ்ட் ஆனார். சீனிவாசராவ், மணலி கந்தசாமி போன்ற முன்னோடி போராளிகளின் தொடர்பின் மூலம் தனது அரசியல் அறிவை வளர்த்துக் கொண்ட அவர் பெரும் அமைப்பாளராகவும், செல்வாக்கு மிகுந்த தலைவராகவும் உயர்ந்தார். அவரின் பண்ணை அடிமைக்கு எதிரான போராட்டத்தாலும், வர்க்க அணிதிரட்டலாலும் ஆத்திரமடைந்த அதிகார வர்க்கம் அவரை கொல்ல முயன்று கொடும் தாக்குதலில் உயிர் தப்பினார்.பெண்மையின் உடை உள்ளிட்ட பல்வேறு குறியீட்டு அம்சங்களை அடிமைத்தனத்தின் அடையாளம் எனக் கருதிய அவர் அவற்றைத் துறந்து தனது கூந்தலை வெட்டிக் கொண்டார். கிருதா வைத்துக்கொண்டு ஆண்களைப் போலே வேட்டி சட்டை அணிந்து கொண்டார். மேலும் தற்பாதுகாப்புக்கென சிலம்பமும் கற்றுத் தேர்ந்தார். கையில் சிலம்பத்தோடும் வேட்டி சட்டையோடும் தனி ஒருவராகவே தஞ்சைப் பகுதியெங்கும் சென்று விவசாய இயக்கங்களைக் கட்டி வளர்த்தார்.எண்ணிலடங்கா விவசாய போராட்டங்களில் பங்கெடுத்த அந்த இரும்புப் பெண்மணி தொழிலாளர் மத்தியில் வேலை செய்யவும் தயங்கவில்லை. கொடும் சிறை வாசத்துக்கும் அஞ்சவில்லை. அதேபோல திராவிட மற்றம் நீதிக்கட்சிகளின் ஒருசார்புத் தன்மையையும் தோலுறிக்கத் தயங்கவில்லை.தன் வாழ்நாள் பூராவும் மக்களுக்காகவே வாழ்ந்த அந்த மாபெரும் பெண்மணி கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த பயன்பாட்டு வாதத்தாலும், ஆணாதிக்க சிந்தையாலும் , அதிகார போதையாலும் கடைசீ காலத்தில் கட்சியால் சரிவர நடத்தவில்லை என எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணண் தனது மணியம்மையின் வரலாறு தொடர்பான நாவலான “பாதையில் பதிந்த அடிகளில் ” குறிப்பிடும் அம்சம் நிச்சயம் ஆராயத்தக்கது.வழக்கமான சுதந்திரப்போராட்ட வீராங்கணை போலல்லாமல் சாதித் தீண்டாமை, பெண்ணடிமை, தேச விடுதலை, வர்க்கப் போராட்டமென ஓர் தலைமைக்கான சகல அம்சங்களோடு போராடியதால் தான் மணியம்மை முக்கியத்துவமானவராகிறார். 1953 ஆம் ஆண்டு மான் முட்டி அன்னை மரிக்கும் வரை உறுதி மிகுந்த கம்யூனிஸ்ட்டாவே இருந்தார்.மகளிர் தினமான இன்று மக்களுக்காக வாழ்ந்து மறைந்த அன்னை மணலூர் மணியம்மையை அவர் குறித்து வழங்கப்படும் நாட்டார் பாடலோடு பகிர்வதில் நான் மறுபடியும் பெருமை கொள்கிறேன்.LikeComment