மக்கள் அதிகாரம்/புஜ/வினவு / மகஇக வின் வலது சந்தர்ப்பவாத விலகல்

மக்கள் அதிகாரம்/புஜ/வினவு / மகஇக வின் வலது சந்தர்ப்பவாத விலகல்….புதிய ஜனநாயகம் ( April 2016 )பத்திரிகை தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் சமப்படுத்தக் கூடாது என்று பேசுகிறது. அவ்வாறு சமப்படுத்துவதன் பின்னே, திராவிட இயக்க அரசியல் மற்றும் கொள்கைகளின் சுவடுகூடத் தமிழகத்தில் இல்லாமல் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற பார்ப்பன கும்பலின் சதி மறைந்திருக்கிறது. இதனை நிறைவேற்ற துக்ளக் சோ தொடங்கி போலி கம்யூனிஸ்டுகள் வரை வெவ்வேறான அரசியல் சக்திகள் வெவ்வேறான பாத்திரத்தை ஆற்றுகின்றன.ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மோடியின் இயற்கை கூட்டாளியான ஜெயாவையும்; பதவி, அதிகாரம் என்ற பிழைப்புவாத நோக்கில் பா.ஜ.க.வோடு தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்ட தி.மு.க.வையும் ஒன்று என சாதிப்பதும், ஊழலை சாக்காக வைத்துகொண்டு அவ்விரண்டு கட்சிகளுக்கு இடையே வேறுபாடே கிடையாது என வாதிடுவதும் நரித்தனமானது என்று புதிய ஜனநாயகம் குற்றம் சுமத்துகிறது. “தி.மு.க.வும் இலஞ்சம், ஊழல், அதிகாரமுறைகேடுகளில் ஊறிப்போன கட்சிதான். ஆற்றுமணல், கிரானைட், கொள்ளைகள் தி.மு.க. ஆட்சியிலும் தடையின்றி நடந்திருப்பதையும், அதற்குரியப் பங்கை தி.மு.க. பெற்றிருப்பதையும் மறுக்க முடியாததுதான். தினகரன் பத்திரிகை அலுவலகம் மீதானத் தாக்குதல், திருமங்கலம் ஃபார்முலா என தி.மு.க.விற்கு இருண்ட பக்கங்கள் இருப்பதும் உண்மைதான். இவை போல இன்னும் பல குற்றச் சாட்டுக்களையும் தி.மு.க. மீது சுமத்த முடியுமென்றாலும், பார்ப்பன பாசிசத்தைத் தனது கொள்கையாகவே கொண்டிருக்கும் அ.தி.மு.க.வும், பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு, சுயமரியாதை, தமிழ், தமிழ் இனம் என்ற திராவிடக் கொள்கைகளின் வாசம் வீசுகின்ற அது காலிப் பெருங்காய டப்பாவாக இருந்த போதும் தி.மு.க.வையும் ஒரே விதமாக மதிப்பிடுவது அறியாமை அல்ல, கபடத்தனம்” என்று பு.ஜ. குற்றம் சுமத்துகிறது.எனவே, “தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சமம் என பார்ப்பன கும்பல் முன்வைக்கும் வாதம், அதற்கு வால்பிடிக்கும் மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க., நாம் தமிழர் கட்சிகளின் அரசியல் போக்கு தமிழகத்தைப் பார்ப்பன பாசிசத்திற்கு முற்றும் முழுதாக அடிமைப்படுத்தும் தீய உள்நோக்கம் கொண்டது” என்று பு.ஜ.கூறுகிறது.இவ்வாறு பு.ஜ. கூறுவதன் பொருள் தமிழகத்தை பார்ப்பன பாசிசத்திற்கு முற்றும் முழுதாக அடிமைப்படுத்தும் தீய உள் நோக்கத்தை எதிர்ப்பது என்ற பேரால், பார்ப்பன ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வை.எதிர்த்து தி.மு.க.விற்கு ஆதரவு தரவேண்டும் என்பதையே பு.ஜ. முன்வைக்கிறது. பார்ப்பன பாசிசத்தை எதிர்ப்பது என்ற பேரால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு பரிந்து பேசும் பு.ஜ.வின் நிலைபாடு புதிய காலனிய ஆதிக்கத்தை எதிர்த்த போராட்டத்தையும், புதிய தாராளக் கொள்கைகளை எதிர்த்த மக்களின் போராட்டங்களையும் திசைத் திருப்புவது ஆகும். அது மறைமுகமாக காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் கயமைத்தனமேயாகும்.