லெனின் “பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும்”என்ற நூலை 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி துவங்கி அக்டோபர் மாதத்தில் எழுதி முடித்தார்.1909-ஆம் ஆண்டு அந்நூல் பிரசுரமாகி வெளிவந்தது. மிகவும் சிக்கலான தத்துவப் பிரச்னைகளை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட நூல் இது.
இந்த நூல் வெளிவந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரஷ்யாவில் பிற்போக்கு முதலாளித்துவ ஆட்சி தூக்கியெறியப்பட்டு,புதிய தொழிலாளி விவசாயிகளின் வர்க்க அரசு ஆட்சிக்கு வந்தது.அந்த அரசுக்கு லெனின் தலைமை ஏற்றார்.இந்த காலங்கள் முழுவதும் புரட்சிக்கான தயாரிப்பு பணிகளும் போராட்டங்களும் நிறைந்த காலமாக இருந்த நிலையில் ஒரு தத்துவ நூல் எழுத வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?அதிலும் புரட்சியின் தலைமையில் நின்று, முழுமூச்சாக செயல்பட்டு வந்த லெனின், அந்தப் பணியை ஏன் மேற்கொண்டார்?
அன்றைய காலக்கட்டத்தில் எழுந்த தத்துவப் பிரச்னைகள் புரட்சி வெற்றியோடு இணைந்த பிரச்னைகள் என்று லெனின் கருதினார்.தத்துவப் பிரச்னைகளில் அக்கறை செலுத்தாமல் அவற்றைக் கைவிட்டால்,புரட்சி முன்னேற்றம் அடையாது என்ற ஆபத்தினை அவர் உணர்ந்ததால்தான் இந்தக் கடினமான பணியில் ஈடுபட்டார்.
மார்க்சிய நோக்கிலான அவரது தீர்க்கதரிசனம் பின்னர் உண்மையானது.தத்துவத் துறையில் மார்க்சிய தத்துவத்தை திரித்து குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தோரின் கருத்து நிலைபாடுகளோடு இந்த நூல் வலிமையான கருத்து யுத்தத்தை நடத்தி, அந்தக் கருத்துக்களை முறியடித்தது.அதன் விளைவாக ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் மார்க்சிய தத்துவத்தின் உயிர்நாடியான இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை இறுகப் பற்றிகொண்டு புரட்சியை நோக்கி முன்னேறியது.
சமுக மாற்றத்தில்,புரட்சியில் நம்பிக்கை கொண்டவர்கள் தத்துவத்தை கைவிடக்கூடாது என்ற பாடத்தை இந்த வரலாற்று அனுபவம் எடுத்துரைக்கிறது.தொழிலாளி மற்றும் உழைக்கும் வர்க்கங்களிடம் வர்க்க தத்துவப் பிரச்சாரத்தை செய்வதும்,,முதலாளித்துவ தத்துவ நிலைகள்,மதப்பழமைவாதங்களின் குரலாக ஒலிக்கிற உலகப் பார்வைகள் போன்றவற்றிற்கு எதிராக தத்துவப் போராட்டம் மேற்கொள்வதும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அவசியமனது. இந்த நூல் உணர்த்தும் உன்னதமான லெனினிய அறிவுரை.
நூலாக்கத்தின் பின்னணி
19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்,20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் ஐரோப்பாவில் எர்னஸ்ட் மாக் பெயரால் மாக்கிசம் எனவும்,”அனுபவவாத விமர்சனம்“ என்றும் அழைக்கப்பட்ட தத்துவம் பரவியிருந்தது. எர்னஸ்ட் மாக்,அவேனரியஸ் உள்ளிட்ட இந்த தத்துவவாதிகள் தாங்களது தத்துவமே ஒரே அறிவியல் தத்துவம் என்று சொல்லிக் கொண்டனர்.இதற்கு அவர்கள் பல வாதங்களை முன்வைத்தனர்.
தத்துவம்,கருத்துமுதல்வாதம்,பொருள்முதல்வாதம் என்ற இரண்டு முகாம்களாக பிரிந்துள்ளது. இரண்டும் வெவ்வேறு பக்கமாக சாய்ந்திருக்கும் பிரிந்திருக்கும் நிலையை தாங்கள் சரிசெய்து செழுமையாக்கி ,”அனுபவவாத விமர்சனம்“ தத்துவத்தைப் படைத்திருப்பதாக பெரிதாக ஆரவாரம் செய்து நூல்களை வெளியிட்டனர்.
அன்றைய சமுக ஜனநாயக இயக்கத்தில் இருந்த மார்க்சிஸ்ட்கள் பலரும் ,”அனுபவவாத விமர்சனம்“ என்பது அறிவியல் உலகின் ஒரு புதிய சிந்தனையாக பார்க்க முற்பட்டனர்.சிலர் மார்க்சிய தத்துவமான இயக்கவியல் பொருள்முதல்வாதத்திற்கு மாற்றான தத்துவம் என்று நினைக்கும் அளவிற்கு கூட சென்றனர்.இந்த கூட்டத்தோடு சில முக்கியமான அறிவியலாளர்களும் சேர்ந்து கொண்டனர்.
அன்று சோசலிஸ்ட் கட்சிகளைக் கொண்ட சர்வதேச அகிலம் இயங்கி வந்தது.அது பிரெடரிக் எங்கெல்சின் அரும்பெரும் பணியால் உருவானது.ஆனால் அவரது மறைவிற்குப் பிறகு சந்தர்ப்பவாதிகள் நிறைந்த அமைப்பாக மாறிப் போனது.அகிலத்தின் தலைவராக இருந்த கார்ல் காவுத்ஸ்கி ஜெர்மானிய சமுக ஜனநாயகத்தின் செல்வாக்கான தலைவராகவும் விளங்கியவர்.தத்துவ உலகில் மார்க்சியத்தை பின்னுக்குத் தள்ளுகிற வகையில் பரவிக் கொண்டிருக்கும் மாக்கிசத்திற்கு பதிலடி கொடுக்க சர்வதேச அகிலம் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை.
ஒரு கட்டத்தில் காவுத்ஸ்கி மார்க்சிய தத்துவம்,எர்னஸ்ட் மாக்கின் தத்துவத்தோடு எந்த வகையிலும் முரண்படவில்லை என்று அறிவித்தார்.இது மேலும் பல ஐரோப்பிய சோஷலிச கட்சிகளிடையே அனுபவாத விமர்சனத் தத்துவம் பரவிட வழிவகுத்தது.
ஐரோப்பாவில் இந்த சூழல் நிலவியபோது ரஷ்யாவிலும் கருத்தியல் போராட்டத்திற்கான தேவை அதிகரித்தது.1905-07-ஆம் ஆண்டுகளில் ஜாராட்சிக்கு எதிராக எழுந்த புரட்சி கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டது.புரட்சி தோல்வியில் முடிந்ததையொட்டி ஜார் அரசாங்கம் புரட்சியாளர்களை வேட்டையாடியது. பல்லாயிரக்கணக்கானோர் தூக்கிலடப்பட்டனர்.
ரஷ்ய அறிவுஜீவிகள் மத்தியில் மார்க்சியம் மீதும்,இயக்கவியல்,வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் மீதும் நம்பிக்கை குறையத் தொடங்கியது.சமூகப் பிரச்னைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கடவுளை நாடும் போக்கு அதிகரிக்கத் துவங்கியது.”கடவுள் நாடுவோர்”எனும் பெயரில் கடவுள் பிரசாரம் செய்யப்பட்டு கிறித்துவத்தின் மீது புதிய ஆர்வம் தூண்டப்பட்டது.
எல்லாவற்றுக்கும் மேலாக, ரஷ்ய கம்யுனிஸ்ட் கட்சியான போல்ஷ்விக் கட்சியில் இருந்த சிலர் இந்தக் கருத்துக்களுக்கு இரையானதுதான் பெரும் ஆபத்தாக உருவெடுத்தது. போக்தானாவ், பசாராவ், லூனாசார்ஸ்கி போன்றோர் மார்க்சியத்தையும் எர்னஸ்ட் மாக்கின் தத்துவத்தையும் இணைத்துப் பேச முற்பட்டனர்.மார்க்சியத்தை வளர்க்கிறோம் என்ற பெயரில் இது நடந்தது.
ஆக, புரட்சிகர கட்சியின் தத்துவ அடித்தளத்தை வேரோடு சாய்த்திடும் வேலை நடந்து வந்தது.இந்த நிலையை லெனின் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பாரா?மார்க்சியத்தின் மீதான தாக்குதல்களை முறியடித்து, மார்க்சியத்தை பாதுகாத்திடும் கருத்துப் போரில் இறங்கினார்.அதன் விளைவாகவே “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” நூல் பிறப்பெடுத்தது.
பொருளே முதன்மையானது…
“பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்”என்ற தலைப்பிலேயே தனது முக்கிய குறிக்கோளை லெனின் வெளிப்படுத்துகிறார். ஆழ்ந்து நோக்கினால் இது புலப்படும்.
தத்துவத்தில் பொருள்முதல்வாதம்,கருத்துமுதல்வாதம் என இரண்டு பிரிவுகள்தான் உண்டு.எந்த பெயர்களில் எந்த தத்துவம் எழுந்தாலும் இந்த இரண்டுக்குள் தான் அடக்கம்.எனவே ஒரு புறம் பொருள்முதல்வாதம் எனில் மற்றொருபுறம் “அனுபவவாத விமர்சனம்”என்ற பெயர் கொண்டாலும் அது கருத்துமுதல்வாதம்தான்.ஆனால்,அனுபவவாத விமர்சன தத்துவ ஆசிரியர்கள் தங்களை கருத்துமுதல்வாதிகள் என்று ஏற்றுக் கொள்ளவில்லை.எனினும், அவர்களுடைய வாதங்கள் அனைத்தும் பழைய கருத்துமுதல்வாதமே என்று லெனின் நூலில் ஆணித்தரமாக நிறுவுகிறார்.புலனறிவு,பொருளின் இருப்பு,அறிவு போன்ற அடிப்படை தத்துவார்த்த பிரச்னைகளில் மார்க்சியத்தின் பார்வையையும் மாக்கியவதிகள் விமர்சித்துள்ளனர்.ஒவ்வொரு கருத்தையும் அலசி ஆராய்ந்து தகர்க்கின்றார் லெனின்.
அனுபவவாத விமர்சன தத்துவ ஆசிரியர்கள் தத்துவத்தின் இரு பிரிவுகளில் உள்ள குறைகளை நீக்கி ஒரு புதிய தத்துவ முறையை படைப்பதாக கூறிக்கொண்டனர்.இந்தக் கூற்றினைத் தகர்த்து அவர்களின் புதிய முறை என்பது பழைய 17௦௦-ஆம் ஆண்டுகளில் ஜார்ஜ் பெர்க்லியின் கருத்துமுதல்வாதம்தான் என்று லெனின் நிறுவுகிறார்.பெர்க்லியின் வாதங்களும்,முந்தைய கருத்துமுதல்வாதிகளின் கருத்துக்களும் மாக்,அவனேரியஸ் போன்றோர்களின் கருத்துக்களோடு எவ்வாறு ஒத்துப் போகின்றன என்பதை லெனின் அம்பலப்படுத்துகிறார்.
தத்துவத்தில் இரண்டு வேறுபட்ட நிலைகளான பொருளா,கருத்தா என்ற முகாம்களில் நான் எதிலும் சாராதவர் என்று சொல்லி வருகின்றார், அனுபவாத விமர்சகர்,வித்தியாசமான நிலை என்னுடையது என்று உள்ளே புகுந்து வாதிடுகிறார்.
புலன் உணர்வுகளின் தொகுதியே பொருள் என்று பேசுகின்றார் அவர். புதிய பார்வை என்ற பெயரால் மாக் புகுத்துகிற கருத்தை அம்பலப்படுத்துகிறார் லெனின்.கருத்துதான் அடிப்படை;பொருளின் இருப்பை கருத்தே நிர்ணயிக்கிறது எனும் பழைய தத்துவத்தைத்தான் “புலன் உணர்வுகளின் தொகுதி”என்று மாக் புது பெயர் சூட்டி அழைகின்றார்.
பொருள் மனிதனின் புலன் உணர்வில் பிரதிபலிக்கிறது.பிறது அது மனித மூளையால் பெறப்பட்டு பொருள் பற்றிய அறிவு உருவாகிறது.உதாரணமாக,பச்சை நிறம் கொண்ட திராட்சையை பார்க்கும் ஒருவர் அதன் நிறத்தை தனது புலன் உறுப்பினால் (கண்பார்வை) புலன் உணர்வு பெறுகின்றார்..அந்த புலன் உணர்வு மூளைக்கு அனுப்பப்பட்டு அந்தப் பொருள் பச்சை நிறம் கொண்ட திராட்சை என்று அறிதலுக்கு வருகின்றார்.
பொருளின் கூறுகள் மனிதரின் புலன் உணர்வுகளோடு கலந்து வினையாற்றும் போதுதான் புலனறிவு ஏற்பட்டு அறிவு பெறும் நிகழ்வு நடப்பதை லெனின் விளக்குகிறார். பச்சை நிறம் கொண்ட திராட்சையின் நிறம் எப்படி உணரப்படுகிறது?ஒளி அலைகள் கண்ணின் கருவிழிகளில் பட்டு,அந்த உணர்வுகள் மூளையில் பதிகின்றன.அதன் விளைவாக பச்சை நிறம் என்ற புலன் அறிவும்,பிறகு பொருளின் (பச்சை நிறம் கொண்ட திராட்சை) முழுத் தன்மை சார்ந்த அறிவும் தோன்றுகிறது.
இதில் பொருள் மட்டுமல்ல,ஒளி அலைகளும் பொருளாகவே லெனின் காண்கின்றார்.நம்மைச் சுற்றியுள்ள,வெளியுலகம் அனைத்துமே பொருட்களால் ஆனது:அனுபவவாத விமர்சகர்கள் பொருள் அல்லாதவைகளின் இருப்பு பற்றி பேசுவதை லெனின் நிராகரிக்கிறார்.இதனை புலனுணர்ச்சிகளின் தொகுதி என்பது போன்ற எந்தப் பெயர்களை அவர்கள் கொடுத்தாலும் அது உண்மையல்ல.எனவே பொருள்,அதன் தன்மைகள் அனைத்தும் மனித மனதிற்கு அப்பாற்பட்டு சுயேச்சையான இருப்பு கொண்டவை.இதுவே மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை என்கிறார் லெனின். இதுவே உலகை சரியாக அறிந்து கொள்ளவும்,புரிந்து கொள்ளவும் உதவிடும்.
வண்டியை குதிரைக்கு முன்னால் நிறுத்தி…
அனுபவவாத விமர்சகர்கள் பொருளை “அருவமான அடையாளம்”என்று வரையறுக்கின்றனர்.இந்த சொல்லாடலைப் பயன்படுத்தி குழப்புவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர். “அருவமான அடையாளம்”என்றால் நிலையான புலன் உணர்வுகளின் தொகுதிதான் உண்மையாக இருக்கிறது;பொருள்அல்ல என்பது அவர்களது வாதம்.இது அவர்களை எங்கு கொண்டு சேர்க்கிறது? பொருள் என்பதே மனித உணர்வில் தோன்றி உருவாகும் கருத்தாக்கம் என்பதுதான் அனுபவவாதிகளின் உண்மையான நிலை என்று வெளிப்படுத்திய லெனின்,அதனால் அவர்கள் கருத்துமுதல்வாதத்தில்தான் கரைந்து போகிறார்கள் என்று எடுத்துரைக்கின்றார்.
பொருள்,புலனுணர்வு,அறிவு ஆகியவற்றில் புலன் உணர்வுகளை முதன்மையாக அடிப்படையாக பார்ப்பது கருத்துமுதல்வாதம்.புலன் உணர்வுகளிருந்து பெறப்படும் எண்ணங்கள் மேலும் செழுமைப்படுத்தப்பட்டு அறிவு உண்டாகிறது என்பது கருத்துமுதல்வாதத்தின் நிலை.ஆனால்,புலன் உணர்வுக்கும் அதையொட்டி ஏற்படும் அறிவுக்கும் அடிப்படை பொருள்தான் என்பது பொருள்முதல்வாதம்.
தனது நூலில் லெனின் விளக்குகிறார்:
“பொருள்முதல்வாதத்திற்கும் கருத்துமுதல்வாதத்துக்கும் இடையே உள்ள எதிர்நிலை, தத்துவத்துறையில் இரண்டு அடிப்படையான போக்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாடே பிரச்சனையாகும். நாம் பொருட்களில் இருந்து புலனுணர்வுக்கும் சிந்தனைக்கும் போவதா? அல்லது நாம் சிந்தனை மற்றும் அறிந்துணர்ந்துகொள்ளலில் இருந்து, புலனுணர்விலிருந்து பொருட்களுக்கு போவதா?முதல் போக்கை, அதாவது பொருள்முதல்வாத போக்கை ஏங்கெல்ஸ் பின்பற்றுகிறார். இரண்டாவது போக்கை, அதாவது கருத்துமுதல் வாத போக்கை மாக் கடைப்பிடிக்கிறார். பொருட்கள் புலனுணர்வுகளின் தொகுதிகள் என்ற ஏ. மாக்கின் கோட்பாடு அகநிலைக் கருத்துவாதம் (Subjective Idealism); பெர்க்லிவாதத்தின் எளிமையான புத்துருவாக்கம் என்ற தெளிவான, மறுக்க முடியாத உண்மையை எந்தப் போலித்தனமும் , எந்த குதர்க்கமும் (அப்படி ஏராளமானவற்றை நாம் இனிமேல் சந்திக்க வேண்டியிருக்கும்) அகற்ற முடியாது.”
மாக்கின் வாதப்படி உலகப் பொருட்கள் எல்லாமே “புலனுணர்வுகளின் தொகுதிகள்” என்பது மொத்த உலகமே கருத்து அல்லது சிந்தனையில்தான் உள்ளது என்பதாகவே முடிகிறது.அவருக்கு முன்பு,பெர்க்லி “புலனுணர்வுகளின் ஒன்றுசேர்த்தல்கள்” என்ற சொற்றொடரை பயன்படுத்தி உணர்வு மட்டுமே உண்மை,பொருள் உண்மையானது அல்ல என்று கூறியிருந்தார்.இந்த வாதத்தை நீட்டினால் எதார்த்தத்தில் உலகமோ அல்லது பொருட்களோ இல்லை,ஒவ்வொருவரின் தனிப்பட்ட உணர்வு மட்டுமே உண்மையானது என்ற முடிவிற்கு வர வேண்டியிருக்கும்.
லெனின் இந்த விநோத வாதங்கள் எங்கு கொண்டு செல்கிறது என்பதை விளக்குகிறார்: “…இத்தகைய வாதங்களிலிருந்து தொடங்கினால், தன்னைத் தவிர மற்றவர்களும் இருக்கிறார்கள் என்பதைக் கூட ஒப்புக்கொள்ள இயலாது;… இது,ஒருவரின் சொந்த எண்ணம் மட்டுமே உள்ளது எனக்கூறும் ஆன்மீக நித்தியவாதம் (Solipsism) ஆகும்.”
அனுபவவாத விமர்சகர்கள் மீது லெனின் வைக்கும் அடிப்படை குற்றச்சாட்டு இதுதான்.: பொருள் அடிபடையானது,பொருலிருந்தே சிந்தனை தோன்றுகிறது என்ற உண்மையை அனுபவவாத விமர்சகர்கள் மறுக்கிறார்கள்.அதாவது, வண்டியை குதிரைக்கு முன்னால் நிறுத்தி வண்டியை ஓட்ட முயற்சிக்கிறார்கள்.
லெனினது வரையறை:
இந்த விவாதத்தில் லெனின் சிந்தனை அல்லது,கருத்து,அல்லது எண்ணங்கள் ஆகியவற்றின் பங்கையும் மறுக்கவில்லை,வறட்டு பொருள்முதல்வாதிகள் அத்தவறை செய்தனர்.மிக உயர்ந்த அளவில் வளர்ச்சி பெற்றுள்ள உயிர்ப்பு நிலையில் (organic)உள்ள பொருளின் குணம்தான் உணர்வு,சிந்தனை,கருத்து போன்றவை என்கிறார் லெனின்.(இந்த குணம் கொண்ட பொருளாக மனிதர்களிடம் மனித மூளை இயங்குகிறது).இந்த குணம் மனிதர்கள் மற்றும் உயிரினங்களின் தங்கள் வாழ்வின் சுற்றுப்புற இயற்கை நிகழ்வுகளையும்,சமுக சூழல்களையும் அறிந்து கொள்ள துணை புரிகிறது,இவ்வாறு அறிந்து,தகுந்த முறையில் எதிர்வினைகள்,செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள உதவுகிறது.
மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம்தான் பொருளுக்கும் சிந்தனைக்குமான இந்த தொடர்பை சரியான முறையில் விளக்குகிறது.கருத்துமுதல்வாதம் பொருளின் அடிப்படைப் பங்கினை மறுக்கிறது. அது,சிந்தனைதான் பொருளின் அடிப்படை என்று பார்க்கிறது.கருத்துமுதல்வாதத்தின் நீட்சியாக ஆன்மிகவாதம் மகத்தான சிந்தனையான கடவுள்தான்,இந்த உலகத்தின் பொருட்கள்,இயற்கை,பிரபஞ்சம் அனைத்துக்கும் ஆதாரம் என்று வாதிடுகிறது.
இந்த வாதம் உண்மைக்கு மாறானது மட்டுமல்ல,இயற்கை ,பொருட்கள்,சமுகம் ஆகியனவற்றின் நிலைமைகளை உணர்ந்து ,அவை பற்றிய அறிவினைப் பெற்று அந்த நிலைமைகளை மாற்றும் வல்லமையை மனிதர்கள் பெற்றிடாமல் தடுத்திடத் தூண்டுகிறது.பொருள்முதல்வாதம்,கருத்துமுதல்வாதம் இரண்டிலிருந்தும் நாங்கள் வித்தியாசப்பட்டவர்கள் என்று முன்வந்த அனுபவாத விமர்சகர்கள் கருத்துமுதல்வாத சரக்கையே உருமாற்றிக் கொடுததனர்.
‘பொருள்முதல்வாதிகள் பொருள் முதன்மையானது என்று பேசுகிறார்கள்; ஆனால் பொருளின் உண்மையான தன்மை என்ன என்பதை வரையறுக்க யாரும் முயற்சிக்கவில்லை’ என்று அனுபவாத விமர்சகர்கள் பொருள்முதல்வாதிகள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
’அதிலும் குறிப்பாக வளர்ந்து வரும் இயல்பியல் அறிவியல், பொருளைப் பற்றி பல கண்டுபிடிப்புக்களை வெளியிட்டு வருகிறது;(19-ஆம் நூற்றாண்டு இறுதியில்) அணுவையும் தாண்டி பல துகள்கள் (particles) கண்டுபிடிக்கப்பட்டது;இதனால் பொருள் என்று ஒன்று உண்டா என்று பொருளின் இருப்பே கேள்விக்குள்ளாகியுள்ளது;இந்த கண்டுபிடிப்புக்களைப் பற்றி எந்த கவனமும் செலுத்தாமல் சொன்னதையே சொல்லிக்கொண்டு, பொருளைப் பற்றிய வரையறை எதுவும் செய்யாமல் இருகின்றனர் பொருள்முதல்வாதிகள்’ என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டினர்.
லெனின் அவர்களது வாதங்களை எதிர்கொண்டார். பொருளின் முதன்மையை பொருள்முதல்வாதிகள் வலியுறுத்துகின்றனர்.இந்த வாதம் தத்துவ உலகில் விவாதிக்கப்படும் விஷயமாக நீடிக்கிறது.பொருள் பற்றிய பல்வேறு தன்மைகளை விளக்குவதும், மேலும் மேலும் ஆராய்ந்து புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்குவதும் அவசியம்.இது இடையறாது நடைபெற வேண்டிய துறை அறிவியல் துறை ஆகும்.
தத்துவத்துறையில் பொருளின் இருப்பு மற்றும் அதன் முதன்மையை வலியுறுத்துவதோடு மார்க்சிஸ்ட்கள் நின்றுவிடவில்லை.அது முந்தைய பொருள்முதல்வாதிகள் செய்த தவறு.மார்க்சிஸ்ட்கள் பொருளின் முதன்மையை வலியுறுத்துவதோடு,பொருள் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற கோட்பாட்டையும் வலியுறுத்துகின்றனர்.இதுவே இயக்கவியல் பொருள்முதல்வாதம்.பொருளின் மாறும் தன்மையை ஏற்றுக் கொள்கிற நிலையில் நவீன் அறிவியலோடு இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஒத்துப் போகிற தத்துவமாக விளங்குகிறது.
பல அறிவியல் கண்டுபிடிப்புக்கள் யாருடைய உணர்வையும் சிந்தனையையும் சாராமல், சுயேச்சையாக, பொருளின் இருப்பும்,இயக்கமும் இருப்பதை எடுத்துரைக்கின்றன.பொருளின் இந்த புறநிலை எதார்த்தத்திலிருந்துதான் அறிவியலுக்கு பொருளை ஆராய்ந்திட வழி ஏற்படுகிறது.பொருளின் சுதந்திர இருப்பினை மறுத்தால் அறிவியலுக்கான் கதவுகள் மூடப்படும்.அறிவியலுக்கு வாய்ப்பற்ற நிலையைத்தான் கருத்துமுதல்வாதம் ஏற்படுத்துகிறது.அதையேதான் அனுபவவாத விமர்சகர்களும் செய்கின்றனர்,ஆனால் நாசூக்காக தாங்கள் அறிவியலின் துணையோடு நிற்பதாகக் காட்டிக்கொண்டு பிற்போக்குத்தனத்தை புகுத்துகின்றனர்.
பொருளுக்கான வரையறை இல்லை என்றவர்களிடம் வாதப்போரில் ஈடுபட்ட லெனின்,வாதங்களின் ஊடாக அற்புதமான,பிரசித்திபெற்ற பொருள் பற்றிய ஒரு வரையறையை வழங்கினார்;
“பொருள் என்பது தத்துவரீதியான ஒரு கருத்தினம் (cetegory).இது புறநிலையான எதார்த்தத்தை சுட்டிக்காட்டுகிறது.இந்த எதார்த்தம் மனிதரின் புலன் உணர்வுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.புலன் உணர்வுகளின் பிரதிபலிப்பால் அங்கு அது காப்பி எடுக்கப்படுகிறது;நிழல் படம் எடுக்கப்படுகிறது;(இவை அனைத்தும்)பொருள் புலன்களுக்கு அப்பால் சுயேச்சையாக இருக்கும் நிலையில் நிகழ்கிறது.”
இந்த விரிவான வரையறை மனிதன்,புற உலகு இரண்டுக்குமான தொடர்பினை துல்லியமாக விளக்குகிறது.பொருள் முதன்மையானது,,பொருளிலிருந்துதான் சிந்தனை தோன்றுகிறது என்ற கோட்பாடுகளை இந்த வரையறை கொண்டுள்ளது.
தத்துவத்தின் கருப்பொருள் மனிதன்,புற உலகு இரண்டுக்குமான தொடர்பினை விளக்குவதுதான்.எனவே இந்த வரையறையில் பொருளை தத்துவத்தின் கருத்தினம் என்று லெனின் துவங்குகிறார்.பொருளின் உள்ளே இயங்கும் தொடர்புகளையும்,உள்ளிருக்கும் அணு,துகள்கள்,எலேக்ட்ரோன் போன்றவை அனைத்தும் இயல்பியல் உள்ளிட்ட அறிவியல் பிரிவுகளின் ஆராய்ச்சிக்கு உட்பட்டவை. அந்த அறிவியல் வளர்ந்து கொண்டே வருகின்றது.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் முக்கியமான பல கண்டுபிடிப்புக்கள் அறிவியல் துறையில் நிகழ்ந்தன.எக்ஸ்-ரே(1895)ரேடியோக்டிவிட்டி(1896),எலக்ட்ரான் கண்டிபிடிப்பு(1897)ரேடியம் கண்டிபிடிப்பு(1898),க்வாண்டம் கோட்பாடு(quantum thoery-1900). சார்பியல் தத்துவம் (theory of relativity-1905),வேதியல் பொருட்கள் ஒன்று மற்றொன்றாக மாற்ற முடியும் என்பது உள்ளிட்ட இந்த கண்டுபிடிப்புக்கள் அறிவியலில் பெரும் புரட்சிகர மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தன.இந்த கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் தத்துவத்துறையில் இயக்கவியல் பொருள்முதல்வாத நிலைபாடுகளை மேலும் மேலும் உறுதி செய்தன.ஒப்பீட்டளவில் அளவில் பார்த்தால் இன்று இந்த ஆராய்ச்சிகள் மேலும் பிரம்மாண்டமான முன்னேற்றத்தை அடைந்துள்ளன.
இந்த அறிவியல் வளர்ச்சி வரலாறும் லெனின் வாதிட்ட இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் முக்கிய கோட்பாட்டை உறுதி செய்கின்றன.இயற்கை, பிரபஞ்சத்தில் இன்னும் அறியப்படாதவை எராளமாக இருக்கின்றன;ஆனால் அவை அனைத்தும் இன்னும் அறியப்படவில்லை என்பதுதானே தவிர அறிய முடியாதது என்று எதுவுமில்லை.அனைத்தையும் அறிதல் சாத்தியம்.
அடுக்கடுக்கான தாகுதல்களை எதிர்கொண்டு…
**லெனினது வாதங்கள் அனுபவாத விமர்சகர்களின் கருத்துக்கள் பலவற்றை முறியடித்து மார்க்சிய தத்துவத்தின் மேன்மையை உயர்த்திப் பிடித்தது.வில்லியம் ஆச்ட்வால்த் என்ற அறிவியலாளர் எதார்த்தம் என்பது பொருளோ சிந்தனையோ அல்ல;ஆற்றல் மட்டுமே உண்மையான எதார்த்தம் என்று வாதிட்டார்.இது கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் இரண்டையும் எதிர்ப்பதாகக் கூறும் அனுபவாத விமர்சனத் தத்துவத்திற்கு ஆதரவாக இருந்தது.
லெனின் பொருளில்லாமல் ஆற்றல் இருக்க முடியாது எனவும்,பொருள் இயக்கத்துடன் இணைந்திருக்கிறது என்பதையும் விளக்குகிறார்.பொருள் இல்லாமல் இயக்கம் இல்லை;அதேபோன்று இயக்கம் இல்லாமல் பொருள் இல்லை.இரண்டும் ஒன்றிணைந்த முழுமையாகவே உள்ளது.வெறும் ஆற்றல்தான் என்பது இயல்பியலில் கருத்துமுதல்வாதத்தை புகுத்துவதாகும் என்று லெனின் எச்சரிக்கிறார்.
**நம்பிக்கை அடிப்படையில் அறிவைப் பெற முடியும் என்று வாதிட்ட அனுபவவாத விமர்சன அறிவுக் கோட்பாட்டையும் லெனின் கண்டித்தார்.இது மூட நம்பிக்கைகளுக்கு கொண்டு செல்லும் என்றார்.போகடனாவ் போன்றவர்கள் உண்மை பற்றிய கோட்பாடு என்ற பெயரில் இக்கருத்தை முன்வைதத்த போது, பாரம்பர்ய மார்க்சியத்தின் சமரசமற்ற நாத்திகத்தை அரித்து,மதப் பழைமைக்கு இடமளிக்கும் என்று எச்சரித்தார்.
**அனுபவவாத விமர்சகர்கள் ரஷ்ய மார்க்சிஸ்ட்டான பிளக்கனாவ் கருத்துக்களை தாக்கி வந்தனர்.அவர்களது தாக்குதல்களை எதிர்கொண்டு நூல் முழுவதும் பிளக்கனாவின் பொருள்முதல்வாதக் கருத்துக்களை ஆதரித்து எழுதினார் லெனின்.ஆனால் பிளக்கனாவின் ஒரு கருத்தோடு அவர் முரண்படுகின்றார்.
பிளக்கனாவ் புலன் உணர்வு என்பது புற எதார்த்தத்தின் ஒரு சித்திரம்தான் ( hyroglyph ) என்றும் புற உலகு பற்றி ஒருவர் நிழல் போன்ற ஒரு குறியீட்டை மட்டுமே பெற இயலும் என்றும் எழுதினார்.லெனின் இதனை மறுத்தார். எதையும் முழுமையாக அறிய முடியாது என்ற அறியொணாக் கோட்பாட்டை பிளக்கனாவ் கூறுவதாக சாடினார்.உண்மையான எதார்த்த உலகம், இயற்கை ஆகியன மனித அறிவுக்கு எட்டாதவை என்ற கருத்தை பிளக்கனாவ் முன்வைக்கின்றார்.
மாறாக புலன் உணர்வுகள் புற உலகை பிரதியெடுத்தும், படமெடுத்தும், உண்மை எதார்த்தத்தை தர இயலும் என்று வாதிட்டார் லெனின்.உலகை மாற்றுவதற்கு உலகை அறிந்திடவேண்டும்.இதற்கு உலகை அரிய முடியும் என்ற பொருள்முதல்வாதக் கோட்பாடு உதவுகிறது.
**ரஷ்ய போல்ஷ்விக்காக இருந்த லூனாசார்ஷியும் கூட தத்துவ குழப்பத்தில் ஆளாகி,”நாத்திக மதம்”என்று உருவாக வேண்டுமெனவும்,அது “உயர்ந்த மனித ஆன்மாவாக”விளங்கிடும் என்ற வகையில் கருத்துக்களை வெளியிட்டார்.”கடவுள்-கட்டும்”இந்த வேலையை கடுமையாக சாடினார் லெனின்.பாரம்பர்யமான மத மூட நம்பிக்கைகளுக்கு பதிலாக அந்த இடத்தில் அதே மாதிரியான நம்பிக்கைகளை புதிய வகையில் புகுத்தும் முயற்சி என்று விமர்சித்தார்.
**அனுபவவாத விமர்சகர்கள் மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்திலும் தலையிட்டனர்.வரலாற்று நிகழ்வுகளை ஆராயும்போது உயிரியல்ரீதியான காரணங்கள்,சமூகவியல் ரீதியான அம்சங்களை விவாதிக்க வேண்டும் என்றனர்.மார்க்சியம் சமுக நிகழ்வுகளின் அனைத்துப் பரிமாணங்களையும் ஆராய்கிறது என்றாலும்,பொருளியல் அடிப்படையை வலியுறுத்துகிறது.இந்த அடிப்படையை நிராகரிப்பதாக அனுபவவாத விமர்சகர்கள் பார்வை உள்ளது என்று குறிப்பிடுகிறார்,லெனின்.
**சமுக உணர்வினை நிர்ணயிப்பதில் சமுக இருப்பு அல்லது எதார்த்தம் அடிப்படையானது என்பது மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதம்.இதை மறுக்கும் வகையில் போகடானாவ் இரண்டையும் ஒன்றுபடுத்துவதாக கூறி ஒரு ஒருமைக் கோட்பாட்டை உருவாக்கினார்.இதில் சமுக சிந்தனையை முதன்மையாக்கி அந்த சிந்தனையை நிர்ணயிப்பதில்,பொருளியல் அடிப்படைகளின் முதன்மைப் பங்கினை போகடானாவ் கைவிட்டதாக லெனின் குற்றம் சாட்டினார்.
**அனுபவாத விமர்சகர்களின் தத்துவம், பொருள்முதல்வாதம்,கருத்துமுதல்வாதம் என்ற இரண்டு எல்லைகளையெல்லாம் தாண்டிய நடுநிலையான தத்துவம் என்று தங்களது தத்துவத்தை அவர்கள் பாராட்டிக்கொண்டனர்.இந்த கருத்தினையும் லெனின் தாக்கினார்.ஒரு தத்துவவாதி நடுநிலை என்ற நிலையை தத்துவப் பிரச்னைகளில் எடுக்க முடியாது.ஏனென்றால்,பொருளா?கருத்தா?எது அடிப்படை என்பதுதான் தத்துவத்தின் அடிப்படைப் பிரச்னை.எது அடிப்படை என்ற நிலையெடுத்து தனது தத்துவத்தை விளக்கிட வேண்டும்.இதில் நடுநிலை இருக்க இயலாது.அப்படி இருப்பதாக கூறிக் கொள்வது ஏமாற்று வித்தை.
மார்க்சியம் எந்த தயக்கமும் இல்லாமல் தனது சார்புத்தன்மையை அறிவிக்கிறது.பொருள்தான் அடிப்படை என்ற இயக்கவியல் பொருள்முதல்வாதத்தினைப் பற்றி நிற்கிறது.
லெனின் நூலில் எழுதுகிறார்:
“துவக்கத்திலிருந்து கடைசி வரை மார்க்சும் எங்கெல்சும் தத்துவத்தில் சார்பு கொண்டவர்களாகவே இருந்தனர்.பொருள்முதல்வாதத்திலிருந்து திசைமாறுகிற ஒவ்வொரு விலகலையும் அவர்களால் கூர்ந்து கண்டுபிடிக்க முடிந்தது.ஒவ்வொரு புதிய போக்குகள் உருவெடுக்கும் போதும் அது கருத்துமுதல்வாதத்திற்கும் மத விசுவாசத்திற்கும் எவ்வாறு இடமளித்து சலுகைகள் கொடுக்கிறது என்பதை நுணுகி கண்டறிந்தனர்…..”
எனவே தத்துவம் என்பது எதோ சில அறிவுஜீவிகளின் மயிர் பிளக்கும் வாதங்களுக்கான களமாக லெனின் பார்க்கவில்லை.பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்திற்கு எதிராக நடத்தும் வாழ்வா,சாவா போராட்டத்தின் மற்றொரு களமாகவே லெனின் தத்துவத்தை அணுகினார்.
தத்துவத்துறையில் நிலைத்து நிற்கும் நூலாக…
லெனின் எழுதிய சில நூல்கள் மட்டுமே பரவலாக அறிமுகமாகியுள்ளன.அதிகம் அறியப்படாத நூல்கள் பல உள்ளன.அதிலும் குறிப்பாக தத்துவம் பற்றிய நூல்களை பலர் வாசிப்பதில்லை.அதற்கு முக்கிய காரணம்,அன்றாட அரசியல் தேவைகளுக்கு தத்துவம் உதவிடாது என்ற எண்ணம் பலரிடம் நீடிப்பதுதான்.ஆனால் எட்டு மாதங்கள் முழுமையாக செலவிட்டு இடைவிடாது எழுதி முடித்த“பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” புரட்சிகர அரசியலுக்கு உதவிகரமாக அமைந்தது.
அந்த நூலை எழுதி முடித்தவுடன் லெனின் அந்நூல் உடனே வெளியாக வேண்டும் என்று அவசரம் காட்டினார் என்பது அவரது கடிதங்களில் தெரிய வருகிறது. பதிப்பகத்தாருக்கு அவர் எழுதிய ஒரு கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“…..(1909) ஏப்ரல் முதல் வாரத்தில் நூல் வெளிவர வேண்டும்;இதற்கான வகையில் எல்லா திருத்தங்களையும் செய்து முடித்துக் கொடுத்துவிட்டேன்…..இதில் ஒரு நூல் பங்களிப்பு என்ற நோக்கம் மட்டுமல்லாது ;இந்நூல் வெளிவருவது,முக்கியமான அரசியல் விளைவுகளோடு தொடர்புடையது ……”
இவ்வளவு அவசரமும் ஆர்வமும் அவர் கொண்டிருந்ததற்குக் காரணம், நூலின் கருத்துக்கள் பாட்டளி வர்க்கத்திடம் இயக்கத்தினரிடம் செல்ல வேண்டுமென்பதுதான். ரஷ்ய புரட்சிகர அரசியல் மாற்றத்திற்கு அந்த நூல் பயன்படும் என்று உறுதியாக நம்பினார்.
அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.“பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்”அன்று அந்த மாற்றத்திற்கான பணியை நிகழ்த்தியது. இந்நூல் வெளியான பிறகு ரஷ்யாவில் பரவலாக வாசிக்கப்பட்டது.இதையொட்டிய ரகசியக் வாசிப்புக் கூட்டங்கள்,விவாதங்கள் நடைபெற்றன.ரஷ்யாவில் மட்டுமல்லாது பாரிஸ் நகரத்தில் தொழிலாளர் கூட்டங்கள் நடந்தன.நாடு கடத்தப்பட்டவர்கள், சிறையிலிருப்பவர்கள் என பலரிடம் நூல் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அன்று லெனின் எதிர்பார்த்த அரசியல்மாற்றத்திற்கு இந்நூல் பயன்பட்டதுடன்,இன்றும் தத்துவத்துறையில் நீடித்து நிலைத்து நிற்கும் நூலாக விளங்குகிறது.
ஒரு புறம்,முதலாளித்துவ கார்ப்பரெட் சுரண்டல்,அதற்கு துணையாக நிற்கும் அரசு,அதிகாரம்,மறுபுறம்,சுரண்டலுக்கு ஆளாகி,மனமொடிந்து,வறுமைக்கும்,வேதனைக்கும் ஆளாகும் உழைக்கும் வர்க்கங்கள் என கூறுபட்டு நிற்பது இந்தச் சமுகம்.இது எதார்த்தம்.இந்த எதார்த்த நிலையிலிருந்து மாற்றத்திற்கான புரட்சிக்கான கருத்துக்கள் தோன்றுகின்றன.
கருத்திலிருந்து பொருள் என்ற வகையில் பார்த்தால் உண்மை எதார்த்தம் கடவுளால் அல்லது ஹெகலின் சொற்றொடரில் முழுமுதல் கருத்தினால் படைக்கப்பட்டது.அது மாற்ற முடியாதது என்ற முடிவிற்குத்தான் வர வேண்டியிருக்கும்.முதலாளித்துவம் நிரந்தரமானது என்றும் அது விதிக்கப்பட்டது என்றும் முடிவிற்கு இட்டுச் செல்வது கருத்துமுதல்வாதம்.உண்மை நிலையை மாற்றுவதற்கு இட்டுச் செல்வது பொருள்முதல்வாதம்.இதனால்தான் இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படைகளை பாதுகாப்பது புரட்சிகர கடமை என்று போதித்தார் லெனின்.