பேக்கன் முதல் மார்க்ஸ் வரை
பேக்கன் முதல் மார்க்ஸ் வரை

பேக்கன் முதல் மார்க்ஸ் வரை

#பேக்கன்முதல்மார்க்ஸ்_வரை என்ற நூலில் இருந்து சில குறிப்புகள்

உலகை பற்றிய பல கருத்து கொண்டவர்களின் பார்வையும் அதன் பரிமாணங்களும்

தத்துவத்தின் பணி சமூகத்தை விளக்குவது மட்டும் அல்ல. அதை மாற்றியமைக்க வழிகாட்டுவதாக இருக்க வேண்டும் என்னும் மார்க்சின் கூற்றுப்படி மானுட விடுதலைக்கு வழிகாட்டும் தத்துவமாக விளங்குவது மார்க்சியத் தத்துவமே.மக்கள் அத்தத்துவத்தை இறுகப் பற்றிக் கொள்ளும்போது அது மாபெரும் பொருண்மைச் சக்தியாக மாறும், அதைத்தான் வரலாறு திரும்பத் திரும்ப மெய்ப்பித்து வருகிறது. மக்களை மாபெரும் சக்தியாக மாற்றுவதற்குப் புரட்சிகரமான மார்க்சியத்தைப் பரந்துபட்ட உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

…….

நவீன அறிவியலின் பிறப்பு

(நிலவுடைமைச் சமுதாயத்திலிருந்து முதலாளியச் சமுதாயத்திற்கு)

தொழிலாளர்களைக் கூலிக்காக உழைப்புச் சக்தியை விற்பவர்களாக மாற்றியது. இங்கு உழைப்பு சக்தியே விற்க்கப்படக்கூடிய பண்டமாக மாறியது.

நிலமானியச் சமுதாயத்தில் இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அங்கு அடிமைகள் பிரபுக்களின் நேரடி நுகர்வுக்காக உற்பத்தி செய்தார்கள். அதில் ஒரு சிறு பங்கை தங்களுடைய உயிர் வாழ்க்கைக்காகப் பெற்றார்கள்.

பதினைந்தாம் நூற்றாண்டில் முதலாளிகள் பிரஞ்சு மொழியில் பூர்சுவாக்கள் என அழைக்கப்பட்டனர்.

மூளை உழைப்பாளிக்கும், உடல் உழைப்பாளர்களுக்கும் இடையிலான இந்த ஐக்கியம் சிறிது காலமே நீடித்தது. இது முதலாளிய காலகட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தது. மேலும் தத்துவ அறிஞர்கள் உடல் உழைப்பாளர்களுடன்  ஐக்கியமானதன் விளைவே மார்க்சியம். இந்த ஐக்கியம் இல்லாவிட்டால் தத்துவத்திற்கு எதிர்காலம் இல்லை. இந்த ஐக்கியம் இல்லாவிட்டால் நவீன அறிவியலும் இல்லை.

….

பிரான்சிஸ் பேக்கன் (1561- 1626)

தத்துவங்களின் வறட்டுத்தனங்களாலும், செயல் விளக்கத்தின் தவறான விதிகளினாலும், மனித மூளையில் உருவாக்கப்படும் போலிக் கற்பனைகளை அரங்கு பிழைபாட்டு மருட்சிகள்  என்கிறார். அவருடைய கருத்துப்படி அனைத்தும் மெய்  விளக்கக் கோட்பாட்டு முறைகளும் உலகை  உண்மையற்ற வகையில் உருவாக்கி காட்டும் மேடை நாடகங்கள் ஆகும். இது தற்போது உள்ள தத்துவங்களுக்கும், கடந்த காலத்தில் இருந்த தத்துவங்களுக்கும், வருங்காலத்தில் உருவாக்கப்படும் தத்துவங்களுக்கும் பொருந்தும் என்றார்.

…………

டெகார்ட்டே (1596-1650)

முறையைப் பற்றிய சொல்லாடல் என்னும் நூலின் முன்னுரையில் “கடவுளின் இருப்பையும் மனித ஆன்மா வையும் நிரூபிப்பது இந்நூலின் நோக்கங்களில் ஒன்று” எனக் குறிப்பிட்டார். ஆனாலும் நூலில் இடம்பெற்ற புரட்சிகரக் கருத்துகள் அதிகாரம் அமைப்புகளக்கு அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தின. அதை போக்க 1641 ல் “முதல் தத்துவத்தின் மீதான ஆழ்ந்த சிந்தனைகள்” என்னும் நூலை வெளியிட்டார். அதை அரசியல் சாதுர்யத்துடன் பழமைவாதத்திற்கு மிகுந்த விசுவாசத்தை தெரிவித்துக்கொண்டே அறிவியலின் வளர்ச்சிக்கு புரட்சிகர பங்கை இந்நூல் மூலம் ஆற்றினார்.

தன்னுடைய வாழ்க்கையில் குழந்தைப் பருவத்திலிருந்து இளம் வயது வரை பல பொய்யான கருத்துக்களை உண்மையானவை என நம்பியதாகவும் அவற்றின் அடிப்படையில் உருவாக்கிக்கொண்ட கருத்துக்களின் உண்மைத் தன்மையை சந்தேகித்ததாகவும் கூறுகிறார். அதனால் அதுவரை தான் கொண்டிருந்த கருத்துக்களைத் தன்னிடமிருந்து களைந்து புதிய அடிப்படையின் மீது புதிய கருத்துக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்ததாகவும், அதுவே அறிவியலின் உறுதியான மேற்கட்டுமானமாக இருக்க முடியும் என கருதினார்.

……….

ஜான்லாக் (1632-1704)

லாக்கின் தாக்கத்தால் நாத்திகமும் பொருள்முதல்வாதப் போக்கும் பரவின. குறிப்பாக பிரான்சில் சமரசமற்ற முற்போக்கு வாதமும் புரட்சிகரக் கருத்துக்களும் லாக்கின் கருத்துகளால் உத்வேகம் பெற்றன. பிரஞ்சுப் பொருள்முதல்வாதிகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய காண்டில்லாக் (1715-80) தன்னுடைய எழுத்துக்கள் லாக்  கருத்துக்களின் தொடர்ச்சி என்றார். பிரெஞ்சுப் புரட்சியின் 1789 தத்துவ அறிஞர்களின் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்திய முற்போக்கு நாத்திகத்தையும், பொருள்முதல்வாதத்தையும் லாக் கருத்துக்களின் தாக்கத்தின் விளைவுகள் என்றே கூறலாம்.

……..

பிரான்சில் தோன்றிய ஒளி

மனித மனதில் முன்கூட்டியே உருவாக்கப்பட்ட கருத்துக்களை துடைத்தெறிந்துவிட்டு நேரடியான அனுபவவாயிலாக அடையப்பெறும் பிரஞ்சுத் தத்துவம் ஏற்க வேண்டும் எனக் கூறிய லாக்கின் தத்துவம் பிரஞ்சுத் தத்துவ அறிஞர்களுக்குத் தேவையான ஆயுதத்தை வழங்கியது. அவர்களுடைய தத்துவ போராட்டம் கடவுள் மறுப்பிற்கும் பொருள் முதல்வாதத்துக்கும் இட்டுச்சென்றது. பிரஞ்சுத் தத்துவ அறிஞர் காண்டிலாக், “மனிதன் என்பவன் முழுமையடைந்த விலங்கு, விலங்கு என்பது முழுமையடையாத மனிதன்” என்றார். “விலங்கிடமிருந்து மனிதனைப் பிரிப்பது மனிதனின் முழுநிறைவடைந்த உள் அமைப்பை” என்றார்.

லா மெட்ரி என்பவர் (1709-51) கடவுள் என்னும் கருத்தாக்கத்தைக் கடுமையாக எதிர்த்தார். உலகத் தீமைகளுக்கு எல்லாம் முக்கிய காரணம் மதம் என்றார். மதமற்ற உலகமே மகிழ்ச்சியான உலகமாக இருக்க முடியும் என்றார். அப்பொழுதுதான் மத யுத்தங்களிலிருந்து உலகம் விடுபடும் என்றார். மாபெரும் மருத்துவர்கள் மற்றும் தத்துவ அறிஞர்களின் ஆய்வுகளும், அவதானிப்புகளும் ஆன்மா என்பது ஒரு வெற்று வார்த்தையே என்பதை நிரூபித்துள்ளன.

…..

#மாபெரும் பிரெஞ்சுப்புரட்சி முதலாளிகளின் மூன்றாவது எழுச்சியாகும். ஆனால் அதுதான் மதத்திரையை  விலக்கிவிட்டு தெளிவான அரசியல் வழியில் நடைபெற்ற முதல் புரட்சியாகும். அதுதான் எதேச்சதிகாரத்துக்கு முடிவுகட்டி முதலாளிகளின் வெற்றியை முழுமையாக்கிய முதல் புரட்சியாகும். ஆனால் இங்கிலாந்தில் நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் சமரசம் ஏற்பட்டது. புரட்சிக்கு முந்தைய நிறுவனங்களும், புரட்சிக்கு பிந்தைய நிறுவனங்களும் ஒரே சமயத்தில் தொடர்ந்து நிலவி வந்தன. அதனால் நிலப் பிரபுத்துவ சட்ட வடிவங்களை மதங்கள் தொடர்ந்து காப்பாற்றி வந்தன. ஆனால் பிரான்ஸில் கடந்த கால மரபுகளுடன் முழுமையான முறிவை புரட்சி ஏற்படுத்தியது. நிலப்பிரபுத்துவத்தின் எச்சங்களைத் துடைத்தெறிந்தது. புதிய சட்டங்களை ஏற்படுத்தியது. நவீன முதலாளிய நிலைமைக்கு, அதாவது பண்ட உற்பத்திக் கட்டத்துக்கு ஏற்ற சட்டங்களை ஏற்படுத்தியது என்கிறார் எங்கெல்ஸ்..

டேவிட் ஹூயும் (1711-76)

பார்வையற்ற ஒரு மனிதன் வண்ணத்தைப் பற்றிய கருத்தையோ, கேட்கும் உணர்வற்ற ஒரு மனிதன் ஒலியைப் பற்றிய கருத்தையோ அடைய இயலாது. ஏனெனில் வண்ணம் மற்றும் ஒலி பற்றிய மூலப் பதிவுகள் அவர்கள் மூளையில் ஏற்படுவதில்லை.

எனவே “அர்த்தமற்ற அல்லது கருத்தற்ற  ஒரு தத்துவ வார்த்தையை நாம் சந்திக்கும் பொழுது, எந்த மனப்பதிவிலிருந்து அந்த கருத்தை அது பெற்றது” என நாம் விசாரிக்க வேண்டும். சரியான மனப்பதிவை அது காட்டத் தவறினால் நமது சந்தேகம் உறுதியாகிறது என்றால் ஹீயும். இதன் மூலம் அதுவரை தத்துவத்தில் நிலவி வந்த அனைத்துப் பொருண்மைச்சார ஊகங்களுக்கும் முடிவு கட்டினார்.

ஹெகல் (1770-1831)

எண்ணம், கருத்து, அல்லது முழுமை

மனித வரலாற்றின் பல்வேறு துறைகளைச் சார்ந்த உண்மைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் ஹெகல் இப்பெரும் பார்வையை முன்வைத்தார். இது கருத்து, எண்ணம், முழுமை அதாவது கடவுளின் தன் வெளிப்பாடு என்றார். முழுமை என்பது அனைத்து தனிக்கூறுகளையும் தனக்குள் அடக்கிய பிரபஞ்சமாகும்.

கருத்து தான் முழுமையானது, எல்லா கருத்தின் வெளிப்பாடுகள்தான். கருத்தை விட உயர்ந்தது ஏதுமில்லை அது இல்லாமல் வேறு எதுவும் இல்லை ;ஒட்டுமொத்த முழுமையின் ஒவ்வொரு தனிக்கூறுகளிலும் கருத்து தன்னை நிகழ்விக்கிறது. எதார்த்தத்தின் எண்ணற்ற வடிவங்களில் கருத்து, அவற்றுள் தன்னை இழக்காமலேயே விரிவடைகிறது. ஆனால் பகுத்தறிவுடைய ஆன்மா, அதாவது உணர்வுடைய, தற்-சிந்தனையுடைய கருத்து வடிவில் அது மீண்டும், தன் சுயத்திற்குத் திரும்புகிறது; தன்னுடைய உண்மையை வடிவத்திற்கு, அதனுடைய சொந்த அக மற்றும் அவசிய வாழ்வுக்கு ஏற்ற வடிவத்திற்குத் திரும்புகிறது என்றார் ஹெகல்.

மார்க்ஸ் (1818-83)

இதுவரை தத்துவ அறிஞர்கள் உலகத்தை விவரிக்க மட்டுமே செய்தார்கள்; ஆனால் அதன் நோக்கம் உலகத்தையும் மாற்றுவதாக இருக்கவேண்டும்” என மார்க்ஸ் குறிப்பிட்டார். விவரிப்பது, மாற்றுவது ஆகியவற்றுக்கு மார்க்ஸ் அழுத்தம் கொடுத்தார். அவருடைய பார்வையில், தத்துவ அறிஞர்கள் புதிய பங்காற்ற வேண்டியிருந்தது. ஆணும், பெண்ணும் தத்துவ அறிஞர்களும் வாழ்கின்ற இவ்வுலகின் நடைமுறை செயல்பாட்டில் ஆற்றல் வாய்ந்த இடையீட்டை தத்துவங்கள் செய்ய வேண்டும்.

இந்தச் செயல்பாடு மரபுவழி தத்துவத்தின் வரலாறு முழுவதும் தத்துவ அறிஞர்கள் ஆற்றிய பாத்திரத்தில் இருந்து வேறுபட்டது. அது வரை தத்துவ அறிஞர்களின் செயல் உலகைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பது, அதாவது அனுபவச் சான்றுகளின்  உதவியுடனோ, உதவி இல்லாமலோ, கருதுகோள் அல்லது தருக்க இயல் கருவிகள் கொண்டு உலக உண்மைகளைத் தேடுவது ஆகும். மார்க்ஸ் இதை உலகைப் பொருள்படுத்துவது  அல்லது விவரிப்பது எனக் கூறினார். இது அறிவுத்துறை செயல்பாடாகும்.

மரபுவழியைச் சார்ந்த தத்துவ அறிஞர்கள் எதையும் சாதிக்கவில்லை என்று மார்க்சியம் கூறவில்லை. அவர்களுடைய சாதனை சிந்தனை அல்லது உணர்வு ஆகியவற்றோடு அடங்கிவிடுகிறது. செயல்பாட்டிலிருந்து விலகிய சிந்தனையில் மரபுவழித் தத்துவ அறிஞர்கள் மூழ்கியதன்  மூலம் – அவர்களுடைய சிந்தனை நோக்கம் எதுவாக இருந்தாலும் இந்த உலகை அதன் போக்கில் செல்ல அனுமதித்தனர் அல்லது அதைப் பின்தொடர்ந்து சென்றனர் என மார்க்சிய பார்வை கருதுகிறது.

“மனிதர்களை விலங்குகளிடமிருந்து உணர்வாலோ அல்லது மதத்தாலோ வேறுபடுத்தலாம். ஆனால் முதன்மையாக வாழ்க்கைக்கு தேவையான சாதனங்களை உற்பத்தி செய்யத் தொடங்கியவுடனே அவர்கள் விலங்குகளிடமிருந்து தங்களை வேறபடுத்திக் கொண்டார்கள்.

 அது அவர்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட அமைப்பினால் சாத்தியமான முதல் அடியாகும்.

#வாழ்க்கையை உணர்வு தீர்மானிப்பதில்லை. மாறாக உணர்வை வாழ்வு தீர்மானிக்கிறது. அதாவது தத்துவ பார்வைகள் அதாவது அனைத்து சித்தாந்தங்களும் இறுதியாக பொருள் வயப்பட்ட காரணங்களால்,

 அதாவது உற்பத்தி முறை, அதிலிருந்து விளைந்த உற்பத்தி உறவால் தீர்மானிக்கப்படுகின்றன என மார்க்சிய ஆய்வு கூறுகிறது.எனவே  பருண்மையான நிலைமைகளில் புரட்சிகர மாற்றம் இல்லாவிட்டால் தத்துவத் சிந்தனையிலும் புரட்சிகர மாற்றம் இருக்க முடியாது என்கிறது மார்க்சியம்.

தத்துவ அறிஞர்களும், கோட்பாட்டாளர்களும் தங்களுடைய தத்துவத்தை விடுதலை செய்ய சமுதாய மாற்றத்திற்காக வெறுமனே காத்திருக்கக் கூடாது. கோட்பாட்டாளர்கள் தத்துவ அறிஞர்கள் என்ற வகையில் அவர்கள் சமுதாயப் புரட்சிக்காக செயல்படவேண்டும். உலகை மாற்றுவது மிகவும் முக்கியம். அதேசமயத்தில் உலகை தவறாகவோ அல்லது அரைகுறையாகவோ புரிந்து கொண்டு சரியான முறையில் மாற்றி அமைக்க முடியாது.

இது கோட்பாட்டுக்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள உறவு பற்றி கேள்விக்கு நம்மை இட்டுச்செல்கிறது. அதை அறிவு, பலம் இரண்டிற்கும் இடையிலான உறவு, சுதந்திரம், அவசியம் இரண்டிற்கும் இடையிலான உறவு ஆகியவற்றோடு தொடர்பு படுத்திப் புரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *