பெண் விடுதலைப் பற்றி
பெண் விடுதலைப் பற்றி

பெண் விடுதலைப் பற்றி

மார்க்சியம்தான் பெண்ஒடுக்குமுறையின் சமூக அடித்தளத்தைத் தெளிவாக அடையாளப்படுத்திய உலகப் பார்வையை வழங்கியது. வெறுமனே சுட்டிக் காட்டியது மட்டுமன்றி நடைமுறைப் போராட்டங்கள் புரட்சிகள் வாயிலாக பெண் ஒடுக்கு முறைகளை உடைத்தெறிந்து ஆண்-பெண் சமத்துவத்தை நாட்டிலும் வீட்டிலும் நடைமுறைப்படுத்த வழிகாட்டியது. சோஷலிசத்தின் கீழ் தான் முன்பு எப்பொழுதும் அனுபவித்திராத சுதந்திரத்தைப் பெண்கள் அனுபவிக்க ஆரம்பித்தனர். அதில் முழுமையோ திருப்தியோ அல்லது முடிவான அம்சங்கள் யாவும் நிறைவுடையனவாக இருந்தன என்று கூறிவிட முடியாது.ஆனால் மனிதகுல வரலாற்றில் வர்க்கங்கள் தோற்றம் பெற்ற பின்னான சமூக அமைப்புகளில் சோஷலிச சமூக அமைப்பில் மட்டுமே பெண்கள் தமக்குரிய சமூக சமத்துவத்தை நிலைநாட்டக் கூடியதாக இருந்ததை மறுத்துவிட முடியாது.
கடந்த நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்பிருந்தே பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்த குரல்கள் மார்க்சியர்களின் வழிகாட்டலிகளில் வெளிவரத் தொடங்கிவிட்டன. கடந்த நூற்றாண்டின் முற்கூறிலே மேற்கு நாடுகளில் சோஷலிசப் பெண்கள் இயக்கம் தோன்றிவிட்டது. அவர்களது பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்களும் கோரிக்கைகளும் பெண் விடுதலையைச் சுட்டிநின்ற அதேவேளை கொலனிய முதலாளித்துவ ஏகாதிபத்திய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரல்களோடும் போராட்டங்களோடும் பின்னிப்பிணைந்து நின்றன. இதன் வழியில் தான் சோஷலிசத்திற்கான போராட்டங்களில் பெண்கள் தலைமைப் பாத்திரங்களிலும் இருந்தனர்.
இதன்காரணமாகவே இன்று வருடா வருடம் மார்ச் 8ம் திகதி சர்வதேசப் பெண்கள் தினமாக நினைவு கூரப்படுகின்றது. மார்ச் எட்டாம் திகதி சர்வதேசப் பெண்கள் தினம் என்பது மேல்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த பெண்கள் ஒன்று கூடி உண்டு கழித்து மகிழ்ந்து கலைந்து செல்லும் தினம் அல்ல. அதே தினம் பெண்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு எதிரான தினம். பெண்கள் மீது ஏவிவிடப்பட்ட கொடுரங்களுக்கு எதிர்ப்புக் காட்டும் தினம். ஒட்டு மொத்தத்தில் பெண்கள் மீதான சகல வகை ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக விடுதலையைக் கோரி நிற்கும் தினமுமாகும். இத் தினத்திற்கான மூலாதாரமாக விளங்கியவர்கள் சோஷலிசப் பெண் விடுதலையை முன்னெடுத்தவர்களே என்பது நினைவு கூரப்பட வேண்டியதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *