- பொதுவாகப்பெண்கள் மணவாழ்க்கையை ஏற்ற பின்பு கல்வி கற்றிருந்தாலும் கற்காவிட்டாலும் அடுக்களையில்தான் தம் வாழ்நாட்களைப் போக்குகின்றனர். இப்போக்கைப் பொருளாதாரத்தில் இடைநிலையிலும் கீழ்நிலையிலும் உள்ளோரிடத்துக் காணலாம். மேட்டுகுடியில் பிறந்த பெண்கள் பெரிதும் அடுக்களைப் பக்கம் செல்வது என்பது அரிது. அதற்காக அவர்கள் வேலையாட்களை வைத்துள்ளனர்.
- உலகின் மனிதகுல வரலாறானது மகத்துவம் வாய்ந்தது. கூட்டு உழைப்பில் வாழத்தொடங்கிய துவக்ககால இனக்குழு, நாடோடி, நிலவுடைமை ஆகிய முச்சமூகப் படிநிலைகளில் மானுடச்சமூகம் வளர்ச்சி பெற்றது. நிலவுடைமைச் சமூகத்தில்தான் குடும்ப அமைப்பு உருவானது. இக்குடும்பத்தில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் பெண் பாதுகாப்பதோடு குடும்ப நிர்வாகத்தையும் பெண் பார்ப்பதாக அமைந்தது. இதுவே தாய் வழிச்சமூகமாகும். நிலவுடைமைச் சமூகத்தின் தொடக்க காலத்தில் தான் தந்தைவழிச் சமூகம் வளர்ந்தது. இச்சமூகம் வளர்ச்சி பெற்ற நிலையில் பெண்ணின் உழைப்பு சுரண்டப்பட்டுக் குடும்ப அரசியல், பொருளாதாரம், உடலமைப்பு போன்ற அடிப்படையில் பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள். இவ்வாறு பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கப் போக்கே தந்தைவழிச் சமூகமாகும். இந்நிலையில் உலகளவில் பெண்ணை அடிமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பெண்ணைப் பொருளாகவும் பார்க்கக்கூடிய சமூகமாக இம்மானுடச்சமூகம் திகழ்கிறது.
நிலவுடைமைச் சமூகத்திலிருந்து பெண் அடிமைப்படுத்தப்பட்ட நிலையினையும்
தாய்வழிச் சமூக அமைப்பில், பெண்ணுக்கு முதன்மை இடம் கொடுக்கப்படுகிறது. மனிதகுலப் பரிணாம வளர்ச்சியின் உயிர் நாடியாகப் பெண் திகழ்வதோடு, சமுதாயத்தின் முக்கிய ஆக்கப் பணிகளிலெல்லாம் பெண் முதன்மை இடம் பெற்றிருந்தாள் என அறிய முடிகின்றது. பெண் ஆணைச் சார்ந்து இருப்பதில்லை. சந்ததித் தோற்றம் தாயை முன்வைத்து அறியப்படுகிறது. பெண் வேட்டையாடியபோது குழந்தைகளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தாள். தந்தை என்பவர் இல்லை. இந்நிலையிலேயே தாய்வழிச் சமூகம் நிகழ்ந்திருந்தது. தந்தை வழிச் சமூகமானது ஆண் ஆதிக்கத்தை உள்ளடக்கிக் கொண்டு பெண், குழந்தை, அடிமை, குடும்பப் பணிப்பெண் ஆகியோர் மீது ஆட்சி செய்து அவர்களை அடக்குகிறது எனக் (ஏங்கல்ஸ் – 1877)” கூறுகின்றனர். இந்நிலையில் தாய்வழிச் சமூகத்தில் பெண் சுதந்திரமாக வாழ்ந்திருந்ததையும், தந்தைவழிச் சமூகத்தில் தான் பெண் அடிமையாக்கப்படுவதும் தெளிவாகின்றது.
குடும்பம், பாலின அடிப்படையில் பெண்ணடிமை நிலை
மரபார்ந்த ஆணாதிக்கம், பொருளாதார உற்பத்தியில் பெண்ணின் உழைப்பை அங்கீகரிக்கின்ற போதிலும், அதிகமாக வீட்டுப்பணியில் ஈடுபடுவதையே சமூக நியதியாக்கியிருக்கிறது. எனவே பெண்களின் உழைப்பு ஆணாதிக்கச் சமுதாயத்தைச் சார்ந்தது. குடும்பத்தில் பெண் வீட்டுப் பணி செய்தல் என்பது இயற்கையானது, உலகளாவியது, தேவையானது என்று கூறுகின்றனர் ஆணாதிக்கவாதிகள்(ஓக்கலே). அதை விளக்க அவர் மூன்று கருத்துக்களை முன் வைக்கிறார். உயிரியல் அடிப்படையில் ஆண் வேட்டையாடச் செல்லுதல், பெண் வீட்டில் பணிபுரிதல், மானுடவியலடிப்படையில் ஆண் மிகவும் பலம் வாய்ந்தவன். கருத்தரிக்கும் போதும், குழந்தையைப் பாதுகாக்கும் போதும் பெண் பலம் குறைந்தவளாக இருக்கிறாள். பெண் வீட்டில் பணி செய்வதற்கும், ஆண் வெளியில் வேலை செய்வதற்கும், பாலினத் தொன்மம் காரணம் எனக் கூறுகிறார். இது சமூக அமைப்பை மறுஉற்பத்தி செய்கிறது. எல்லாச் சமூகங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சமூகவியலடிப்படையில் பணி வேறுபாடு பாலினம் சார்ந்தது. குடும்பத்திற்குத் தேவையானது.
பாலினம் என்பது உயிரியல் அடிப்படையானது. ஆண், பெண் அமைப்பைக் குறிக்கின்றது. இவ்வேறுபாட்டில் பெண் ஆணுக்குத் துணைவியாக்கப்படுகிறாள். ஓர் ஆண் பெண்ணை விரும்புவது வரவேற்கப்படுகிறது. தாய்மை புனிதமாகக் கருதப்படுகிறது. பெண் உற்பத்திக் களமாக எண்ணப்படுவதில்லை. பெண், ஆணைச் சார்ந்து வாழ்கிறாள். இவை யாவும் ஆண் பெண் பாலின வேறுபாடாக ஆணாதிக்க அமைப்பு கருதுகிறது. பாலியல் வேறுபாட்டில் ஆண், பெண் ஏற்கும் பணியை இயற்கையில் வேறுபாடுடையதாகவும், கற்பிக்கப்படுகிறது.
குடும்பத்தில் பெண் ஏற்கும் இயற்கையான பணிவேறுபாடு குழந்தை பெறுவதையும், வளர்ப்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இதற்கு ஆண், பெண் மற்றும் குழந்தைகள் மீதும் செலுத்தும் அதிகாரம் காரணம். அதனால் பெண்ணின் உழைப்பையும் உற்பத்தியையும் ஆண் தன் ஆளுகையின் கீழ்க்கொண்டு வந்து பெண்ணைத் தனக்கு கீழ நிறுத்துகிறான்.
பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் பற்றியும் அவற்றிலிருந்து விடுதலை பெறுவது என்பதும் பேசாப் பொருளாக இருந்து வந்தது. ஆனால் இன்று ஓரளவுக்குத் தானும் சமூகத்தின் சில மட்டங்களிலே பெண் விடுதலை பற்றிய குரல்கள் மேலெழும்பி ஒலிக்கவே செய்கின்றன.
சோசலித்தின் தற்காலிகப் பின்னடைவிற்குப் பின்,மாக்சியம் தோல்வி கண்டு விட்டதென பிரசாரம் முன் எடுக்கப் பட்டு சூழலில் பெண் விடுதலைபற்றிய நவீன கருத்தியல்கள் பின்நவீனத்துவப் பின்புலத்தில் பெண்ணிய விடுதலை பற்றிய தீவிர கருத்துகள் வலிந்து முன்வைக்கப்பட்டன. மேற்குலகிலே பேசப்படும் பெண்ணியக் கருத்துக்களை அரச சாரா நிறுவனங்கள் மூலம் சிலர் நம்மிடையே நட்டுவைக்க முயன்றனர். அதன் மூலம் குறிப்பிட்ட மேல்தட்டுப் பெண்ணியக்காரர்கள் தங்களளவில் தம்மை உயர்த்திக் கொண்டனர். .
மார்க்சியம்தான் பெண்ஒடுக்குமுறையின் சமூக அடித்தளத்தைத் தெளிவாக அடையாளப்படுத்திய உலகப் பார்வையை வழங்கியது.வெறுமனே சுட்டிக் காட்டியது மட்டுமன்றி நடைமுறைப் போராட்டங்கள் புரட்சிகள் வாயிலாக பெண் ஒடுக்கு முறைகளை உடைத்தெறிந்து ஆண்-பெண் சமத்துவத்தை நாட்டிலும் வீட்டிலும் நடைமுறைப்படுத்த வழிகாட்டியது. சோசலிசத்தின் கீழ் தான் முன்பு எப்பொழுதும் அனுபவித்திராத சுதந்திரத்தைப் பெண்கள் அனுபவிக்க ஆரம்பித்தனர்.