தமிழில் – சி. சிவசேகரம்
அறுபதுகளின் பிற்கூறுகளினின்று எண்பதுகள் வரை அமெரிக்காவில் துடிப்புள்ள பெண்கள் இயக்கமொன்று இருந்தது. அது பண்பாட்டுத் துறையில் செல்வாக்கும் அரசியலில் வலிமையும் கொண்டிருந்தது. தன் தாராளவாதப் பக்கத்தில் அவ் இயக்கம் மகப்பேற்று உரிமை, சம உரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் பிற சீர்திருத்தங்கள் தொடர்பான தேசிய நிறுவனங்களையும் பிரசார இயக்கங்களையும் உள்ளடக்கியிருந்தது. அதன் தீவிர முற்போக்குப் பக்கத்தில் பெண் விடுதலைக்கும் பெண்ணிய உணர்வு நிலையை வளர்த்தெடுப்பதற்குமான குழுக்களையும் பண்பாட்டு, வெகுசன மட்டச் செயற்திட்டங்களையும் கொண்டிருந்தது. அத்துடன், பெண்கள் இயக்கம் எண்ணற்ற அரசியற் குழுக்களைக் கொண்டிருந்தது மட்டுமன்றி உயர் தொழிற் துறைகள், தொழிற் சங்கங்கள், அரச நிருவாகம் ஆகிய துறைகளில் செயற்திட்டங்களை ஏற்பாடு செய்தும் வந்தது. அமெரிக்காவின் பெண்கள் பலரது வாழ்விலும் அமெரிக்காவின் அன்றாட வாழ்விலும் அந்த இயக்கம் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. முற்றிலும் ஆண்கள் வசமிருந்த உத்தியோகங் களையும் உழைப்புத் துறைகளையும் அது பெண்களுக்குத் திறந்து விட்டது. தகவல் ஊடகங்களில் பெண்கள் பற்றிய சித்திரிப்பை அது மாற்றியது. அரசியல், நிறுவனமாக்கப்பட்ட மதங்கள்,விளையாட்டு மற்றும் எண்ணிறந்த பல்வேறு களங்களிலும் நிறுவனங்களிலும் பெண்களுக்கும் சமத்துவம் என்ற கோரிக்கையை அது முன்வைத்தது. இவற்றின் விளைவாகப் பங்குபற்றுதலிலும் தலைமைத்துவத்திலும் பால் அடிப்படையிலான விகிதாசாரம் மாறத் தொடங்கியது. குடும்பத்தினுள் சமமின்மையும் ஒடுக்குமுறையும் தனிமனித உறவுகளும் பற்றிய பிரச்சனைகளை அரசியற் பிரச்சனையாக வடிவமைத்ததன் மூலம், முன்னர் அந்தரங்கமானதாயும் அக் காரணத்தாற் பொதுசன நுண்ணாய்வுக்கு அப்பாற்பட்டதாயும் இருந்த பிரச்சனைகளைப்
பற்றிய பொதுசனக் கலந்துரையாடலை விரிவுபடுத்தியது. நாம் பேசுகிற விதத்ததையும் நாம் சிந்திக்கிற விதத்ததையும் பெண்கள் இயக்கம் மாற்றிய மைத்தது. இதன் விளைவாக இளம் பெண்களிற் பெருவாரி யானோர், தம்முன்னுள்ள தெரிவுகள் ஆண்களின் முன்னுள்ள வற்றின் அளவுக்குத் தடையற்றவை அல்லது தடையற்றிருக்க வேண்டுமென நம்புவதாகக் கூற ஆதாரமுண்டு.
பெண்கள் இயக்கத்தின் வியக்கத்தகு சாதனைகளும் அமெரிக்கச் சமுதாயத்தின் பல்வேறு பகுதிகளிற் பெண்களின் சமத்துவம் ஒரு இலக்காக ஏற்கப்பட்டதும் ஒருபுறமிருக்க, பால் அடிப்படையிலான சமத்துவம் இன்னும் வென்றெடுக்கப்படவில்லை. மேலும் அதிகளவிற் பெண்கள் வீட்டுக்குவெளியே வேலை செய்த போதும், அவர்கள் குறைந்த ஊதியம் தரும் தொழில்களிலேயே அதிகம் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்; பெண்கள் சராசரியாக, ஆண்களிலும் கணிசமான அளவு குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர்; பெண்கள் வறுமைக்குட்பட்டிருக்கும் வாய்ப்பு ஆண்களினதிலும் அதிகம், பெண்களுக்கெதிரான வன்முறை இன்னமும் பரவலாகவே உள்ளது. குழந்தைப் பராமரிப்பு, பெண்களுடைய பொறுப்பாகவே பெரும்பாலும் உள்ளது. பெரும்பாலான பெண்கள் வீட்டுக்கு வெளியே வேலை பார்த்த போதும், எங்கும் இது ஒரு குடும்ப பொறுப்பாகப் பார்க்கப்படுகிறதே ஒழியச் சமூகப் பொறுப்பாகப் பார்க்கப்படுவதில்லை.அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பெண்ணியவாதிகள் குடும்பத்தினுள்ளும் தனிமனித உறவுகளிலும் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான அதிகாரச் சமமின்மை பற்றி ஆட்சேபித்தனர். ஆயினும், இவை யாவும் இன்றும் தொடர்கின்றன.
அனைத்திலும் மோசமாக, இப்போது பெண்கள் வெகுசன இயக்கமென ஒன்றில்லை. பொது நிறுவன மட்டத்திலும் தனியார் நிறுவனங்களிலும் பெண்களின் உரிமை வேண்டிச் செயற்படுகின்ற பல அமைப்புகள் உள்ளன. இவை பெண்கள் தேசிய நிறுவனம்
(National Organization of Women) அமைப்புக்களை உள்ளடக்குவதுடன், சுற்றுச்சூழல், உடல் நலம் பேணல், சமூகநீதி மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் சார்பாகவும் செயற்படுகின்றன. எனினும், முன்னர் பெருவாரியான அளவில் உறுப்பினர்கள் பங்குபற்றிய அமைப்புக்களினிடத்தில்; இன்று, ஊதியத்திற்குப் பணியாற்றும் அலுவலர் அதிகாரி அமைப்புக்கள் தாம் உள்ளன. ஒரு காலத்தில் கிளர்ச்சியூட்டிச் சுயாதீனமாக இயங்கிய பெண்ணியக் கொள்கை, இன்று, பெண்களின் வாழ்நிலைமைகள் பற்றி அக்கறை இழந்து பம்மாத்தானதாகவும் சோர்வுடையதாகவும் ஆகி விட்டது. இது இரண்டு வினாக்களை எழுப்புகிறது. சில காலம் மட்டுமே முன்பு சமூகப் பண்பாட்டுப் பரப்பில் எத்தனையோ மாற்றங்களைக் கொண்டுவரவல்லதாக இருந்த ஒரு இயக்கம் ஏறத்தாழ இல்லாமலே போனமை பற்றி, இன்று ஏன் மிக அற்ப அளவிலேயே பேசப்படுகின்றது? அந்த இயக்கத்தின் சரிவின் காரணங்கள் எவை?
இம் மெளனம் ஏன்?
பெண்கள் இயக்கத்தின் சரிவும் பெண்ணியத்தின் மீதான வலதுசாரித் தாக்குதலும் பிற செயலூக்கவாத இயக்கங்களது சரிவும் ஒருசேர நிகழ்ந்துள்ளன. சிவில் உரிமைகட்கான இயக்கமும் கறுப்பர் சக்தி (Black Power) இயக்கமும் சில தசாப்தங்கட்கு முன்னிருந்ததை விடக் கணிசமாக வலுக் குறைந்தும் பிளவுண்டும் உள்ளன. சுற்றுச்சூழல் செயலூக்கவாதிகளும் சுயபாற் காம உரிமைகட்கான இயக்கங்களும் ஒருங்கிணைவிழந்து திசைகெட்டு உள்ளன. இந்த இயக்கங்களின் பலவீனங்களை ஒப்புக்கொள்வது வலதுசாரிகளுக்கே தாக்குதல் வலிமையை அளிக்கும் என்று கூறி இவை பற்றிக்கலந்துரையாடுவதைப் பல பெண்ணிய வாதிகளும் முற்போக்காளர்களும் எதிர்த்து வந்துள்ளனர். இயக்கத்தின் குறைபாடுகளை ஆராயாமல் விட, இது போதுமான நியாயமாகாது. பொதுசன அரங்கை விட அதிகமாக இக் கலந்துரையாடலை நடத்த ஏற்ற களம் இல்லை. இந்த இயக்கங்கங்களின் சரிவுக்கான காரணங்கள் குண்டுச்சட்டிக்குள்
குதிரையோட்டுவதன் மூலம் அறியக் கூடியதை விடச் சிக்கலானவை. கருக்கலைப்பு உரிமை உட்பட்ட சில பெண்ணியப் போராட்டங்களைப் பலவீனப் படுத்துவதில் வலதுசாரி இயக்கங்கங்கள் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளன. எனினும், ஒட்டுமொத்தத்தில் பெண்கள் இயக்கத்தின் சரிவுக்கான காரணம் புறத்தாக்குதல்களை விட அதிகமாக இயக்கத்தின் அவசர அவசியம் பற்றிய உணர்வின் நலிவுடன் தொடர்புடையது.
இயக்கத்தினுள் விமர்சனங்களைத் தவிர்த்தலுக்கும் நசுக்குதலுக்கும் முக்கிய காரணம், அத்தகைய விமர்சனங்கள் ஏற்கெனவே இந்த இயக்கத்தில் நிகழ்ந்துவரும் கட்டுத் தளர்வை மேலும் துரிதப்படுத்தும் என்பதே என் எண்ணம். இயக்கங்கள் என்பன நொறுங்கும் இயல்புடையன; அவற்றை ஒன்றாய்ப் பிணைக்கும் பசை, வெறுமனே அவை உருவகம் செய்யும் இலட்சியங்கள் மட்டுமன்றித் தமது வளரும் ஆற்றல் மீதான நம்பிக்கையும் ஆகும். குறிப்பாக, ஒரு இயக்கம் நலிவடையும் போது, விமர்சனத்தை மெளனப்படுத்தி, யாருமே கவனிக்க மாட்டார்கள் என்ற எதிர்பார்ப்புடன், எல்லாமே நல்லபடி உள்ளதாகப் பாவனை செய்வதற்கான சபலம் வலிது. ஏற்க மறுப்பதாலோ அலசாமல் விடுவதாலோ பிரச்சனைகள் போயொழியா, மாறாக, அவை மேலும் மோசமாகலாம். ஒரு இயக்கம் ஏன் சரிவு கண்டது என விளங்கிக் கொள்வது அது முன்னிருந்த நிலைக்கு வர அதற்குப் புத்துயிரூட்டப் போதாதா யிருக்கலாம். ஆயினும், அது புதிய திசைகளைக் காண உதவலாம்.
சமகாலப் பெண்கள் இயக்கத்தின் பலவீனங்களைக் காண்பதற்கான தயக்கம், இரண்டாவது பெண்ணிய அலை, அதாவது சமகாலப் பெண்ணியம், முதலாவது பெண்ணிய அலையின் கதியையே அனுபவிக்கலாம் என்ற அச்சத்தினாலாகவும் இருக்கலாம். அமெரிக்காவில், முதலாவது பெண்கள் இயக்கம் 19ம் நூற்றாண்டின் முற்கூறு வரை செயற்பட்டது. பெண்ணியச் செயலூக்க அலைகள் இரண்டிற்கும் இடைப்பட்ட நான்கு தசாப்தங்களில், வரலாற்றின் நினைவுகளினின்று அது ஏறத்தாழ முற்றாகவே துடைத்தழிக்கப்படடிருந்தது. பெண்ணியத்தின் இரண்டாவது அலையிற் காணப்படாதனவான
அதன் பலவீனங்கள் சிலவே அதற்குக் காரணமெனலாம். முதலாவது பெண்ணிய அலை, பெரும்பாலும் வெள்ளைஇன நடுத்தர, உயர்நடுத்தர வர்க்கப் பெண்களுக்கு வரையறுக்கப்பட்டு இருந்தது. முதலாவது பெண்ணிய அலையும், வரலாற்றின் போக்கில், அதனைப் பிற முற்போக்கான இயக்கங்களினின்று தனிமைப்படுத்தும் ஒரு குறுகிய பார்வையை நோக்கி நகர்ந்தது. அமெரிக்காவின் முதலாவது பெண்ணிய இயக்கம், அடிமை முறை ஒழிப்பு இயக்கத்தினின்றே தோன்றியது. அடிமை முறை எதிர்ப்பு இயக்கங்களுடன் தொடக்க காலப் பெண்ணியத்தின் நட்புறவாலும் அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு முந்திய தசாப்தங்களின் எதிர்ப்பு இயக்கங்களுடன் அதன் உறவாலும், அமெரிக்காவின் முதலாவது பெண்ணிய இயக்கத்திற்கு ஒரு தீவிரப்பாங்கான அடையாளம் இருந்தது. உள்நாட்டுப் போர் முடிந்து முன்னாள் அடிமைகட்கு வாக்குரிமை வழங்கப்பட்டுப் பெண்களுக்கு வழங்கப்படாத நிலையில், பெண்கள் இயக்கத்தின் பெரும் பகுதி கறுப்பு இனத்தவருடன் தனது நட்புறவைக் கைவிட்டு விட்டது. உள்நாட்டுப் போருக்கும் இருபதாம் நூற்றாண்டின் பிறப்புக்கும் இடையிலான தசாப்தங்களில், நடுத்தர வர்க்கத்தினரிடையே நிறவாத உணர்வும் வந்தேறு குடிகட்கு எதிரான உணர்வு பரவலாயின. இருபதாம் நூற்றாண்டின் முதலிரண்டு தசாப்தங்களிலும், பெண்களுக்கு வாக்குரிமையை வென்றெடுப்பதிலேயே பெண்கள் இயக்கம் தனது கவனத்தைக் குவித்தது. அத்துடன் முன்வரிசைப் பெண்ணியவாதிகள் தமது இலக்குக்கு வாய்ப்பான முறையில் நிறவாத, வந்தேறுகுடி விரோதச் சிந்தனைகளையும் நாடினர். பெண்களின் தொழிற்சங்க இயக்கம் போன்ற பிற பெண்ணிய நீரோட்டங்கள், நிறவாதத்தைத் தவிர்த்து பெண்ணியத்தை ஒரு தீவிரப்பாங்கான நோக்குடன் இணைப்பதிற் தொடர்ந்தும் ஈடுபட்டன. எவ்வாறாயினும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்கூறு அளவிற் பெண்கள் இயக்கத்தின் மீது பெண்கள் வாக்குரிமை அமைப்புக்களின் ஆதிக்கம் ஏற்பட்டுவிட்டது. பெண்களின் வாக்குரிமை வெல்லப்பட்ட போது, முதலாவது
பெண்ணிய அலை எதுவிதமான பரந்துபட்ட வேலைத்திட்டத்தையும் கைவிட்டுவிட்டதுடன் பிற முற்போக்கு இயக்கங்களிடமிருந்தும் எட்ட விலகி நின்றாயிற்று. 1920களில் ஆதிக்கத்துக்கு வந்த பழமைபேணல்வாதிகளால் எளிதாகவே பெண்ணியத்தை ஓரங்கட்ட இயலுமாயிற்று.
இரண்டாவது பெண் ணிய அலையின் தாக்கம் , முதலாவதினை விடப் பரந்தும் ஆழமாயும் அமைந்தது. அமெரிக்க அரசியலின் திசை இனி எவ்வாறு போயினும், 1930கள், 40கள், 50களிற் போல, பெண்ணியத்தை துடைத்தழிக்க முடியும் எனக் கற்பனை செய்யவும் இயலாது. பெண்களின் வாழ்க்கையையும் சிந்தனையையும் பழையபடி மாற்ற முடியாத விதமாகக் கடந்த மூன்று தசாப்தங்களிற் பெண்ணியம் அவற்றைப் பல வகைகளில் மாற்றியமைத்து விட்டது. முதலாவது பெண்ணிய அலை ஒரு பிரச்சனைக் குவியத்துக்குள் ஒடுங்கியதற்கு மாறாக, இரண்டாவது அலை, தன்னைப் பல வகைகளிலும் விரிவுபடுத்திக் கொண்டது. இரண்டாவது பெண்ணிய அலையின் தொடக்க நிலையிற் சில போதாமைகள் இருந்தன. வெள்ளையரல்லாத பெண்களும் தொழிலாளி வர்க்கப் பெண்களும் பங்குபற்றிய போதும், அவர்கள் அங்கு வந்தடைந்த வழி, வெள்ளை நடுத்தர வர்க்கப் பெண்களுக்குப் பெண்ணியத்தைக் காட்டிய மாணவ, உத்தியோக வட்டங்கள் மூலமானதாகவே இருந்தது. வெள்ளையரல்லாத பெண்களும் தொழிலாளி வர்க்கப் பெண்களும் அதில் இருந்த காரணத்தால் இச் சமூகங்களுக்குள் பெண் ணியம் உள்வாங்கப்பட்டதாகக் கொள்ள இயலாதிருந்தது. இரண்டாவது அலையின் பெண்ணியவாதிகள், குறிப்பாக, இயக்கத்தின் போதையூட்டும் ஆரம்ப ஆண்டுகளில், தங்களாற் பெண்கள் அனைவரது சார்பாகவுமே பேச இயலும் என நம்ப முற்பட்டனர்) இந்தவிதமான கருத்துக்களில் ஓரளவு உண்மை இருந்தது எனினும், பெருவாரியாக இளம், வெள்ளை இன, பல்கலைக்கழகக் கல்வி பெற்ற ஆண்-பெண்பால் உறவை மட்டுமே அங்கீகரிக்கிற வர்களும் இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான நடுத்தர வர்க்கத்தினரிடையிலிருந்து வந்தவர்களு மானோரையே அந்த
இயக்கம் கொண்டிருந்தது என்பதை அது கணிப்பிற் கொண்டிருக்க வில்லை.
முதலாவது பெண்ணிய அலையைப் போலல்லாமல், இரண்டாவது அலை, தன்உள்ளடக்கத்திலும் முக்கியமான விடயங்களில் தன் பார்வையிலும், காலப் போக்கில் விசாலித்தது. எழுபதுகளிலும் எண்பதுகளிலும், சமபாற்காமப் பெண்ணியம் (lesbian feminism) இயக்கத்தினுள் ஒரு போக்காக வெளிப்பட்டது. கறுப்பு இனப் பெண்கள் தங்கள் வகையிலான பெண்ணியச் சிந்தனைகளை வெளிப் படுத் தினர் . தொடக் கத்தில் மாணவர்களையும் தொழில் வல்லுனர்களையும் கொண்டிருந்த பெண்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக இராத தொழிலாளி வர்க்கப் பெண்கள், வேலைத்தலத்திலும் தொழிற் சங்கத்திலும் சமத்துவத்துடன் நடத்தப்பட வேண்டியும் பிள்ளைப் பராமரிப்பு, பிள்ளைப் பேற்று உரிமை என்பவற்றுக்காகவும் கோரிக்கைகளை முன்வைத்து அணிதிரண்டனர். முதலாவது பெண்ணிய அலை, காலப் போக்கிற் கறுப்பு இனத்தவரது இயக்கங்களுடனும் பிற தீவிரப்பாங்கான இயக்கங்களுடனுமான தனது நட்புறவைக் கைவிட்டதற்கு மாறாக இரண்டாவது அலை, தன்னை முற்போக்கு இயக்கங்களுடன், குறிப்பாக வெள்ளையரல்லாதோரது இயக்கங்களுடனும் சமபாற்காம இயக்கத்துடனும் மேலும் நெருக்கமாக்கிக் கொண்டது. இரண்டாவது அலையின் பெண்ணியவாதிகள், இயக்கத்தினுள் இருந்த நிற வேறுபாடுகள், பாலுணர்வு வேறுபாடுகள் ஆகியன பற்றிய நுண்ணுணர்வையும் விருத்தி செய்து கொண்டனர்.
இயக்கமாகத் தொடங்கி ஒரு கருத்தாக ஒருங்கியமை
பெண்கள் இயக்கத்தின் வீறான காலம் 1960களும் 70களும் எனலாம். 1980களிலும் 90களிலும் பெண்ணியப் பார்வை அல்லது அடையாளம் எனப்படுவது பரவிப் படர்ந்து இன்று ஏறத்தாழ எங்குமே ஒரு வகையான ஊடுபாவிய பெண்ணிய உணர்வு நிலை காணப்படுகிறது. பெண்ணியச் சிந்தனையை உள்வாங்கிய இலக்குகளையும் அணுகுமுறைகளையுங் கொண்ட எண்ணற்ற செயலூக்கக் குழுக்களும் சமூக, பண்பாட்டு வேலைத்திட்டங்களும் இன்று உள்ளன. பன்முகப்பட்டதும் வெகுசனத்தளத்தில் இயங்குவதுமான பல்வேறு பெண்கள் அமைப்புக்கள் இன்று தொழிலாளி வர்க்கப் பெண்களுக்கும் வெள்ளையரல்லாத பெண்களுக்கும் உள்ள முக்கியமான பிரச்சினைகள் பற்றிக் கவனங்காட்டுகின்றன. அண்டை அயல் (National Congress of Neighbourhood Women) தொழிலாளர் வர்க்கப் பெண்களதும் வெள்ளையரல்லாத பெண்களதும் பிரச்சினைகளைக் கையாளுகிறது. இதையொத்த அக்கறைகளைக் கொண்ட பல உள்ளூர்க் குழுமங்கள் உள்ளன. கலிபோர்னியாவிலிருக்கும் கிழக்கு லொஸ் ஏஞ்ஜெலிஸ் தாய்மார் (Mothers of East Los Angels)நியாயப் பிரச்சனைகள் தொடர்பான போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்தது. (முன்னம் அணு ஆயுதக் களைவுக்கான பெண்கள் Women’s Action for Nuclear Disarmament அறியப்பட்டதான) புதிய திசைவழிகட்கான பெண்கள் நடவடிக்கை (Women’s Action for New Directions) பெண்களையும் வெள்ளையப் பெண்களையும் உடல் நலனும் சுற்றுச்சூழலும் தொடர்பான பிரச்சனைகளில் ஒருங்கிணைத் துள்ளது. இவ்வாறு பல உள்ளன. எவ்வாறாயினும், கீழ்மட்டத்துச் செயலூக்கம் என்பது பெண்கள் இயக்கத்தில் ஆதிக்கஞ் செலுத்திய ஒரு கூறாகவோ அதிகம் கவனத்தை ஈர்ந்த கூறாகவோ இருக்கவில்லை.
உயர் நடுத்தர வர்க்கப் பெண்களது அக்கறை களைக் கொண்டவையும் ஊழியர்களால் நடத்தப்படுகிறவையுமான அமைப்புக்களையும் கல்வித்தகமைசார் பெண்ணியவாதிகளின் கூற்றுக்களையும் வைத்தே பெண்ணியம் பற்றிய பொதுசனப் பார்வை வடிவமைக்கப்படுகிறது. பெண்ணிய உணர்வு நிலையின் வெகுசன ஊடுபாவுதலும் முன்வரிசைப் பெண்ணிய அமைப்புக்கள் பணித்துறை அதிகாரப் பண்புடையனவாகியதும் கல்வித் தகைமைசார் பெண்ணிய வாதிகளது பிரபல்யமும், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலும் பெண்ணியம் ஏற்புடையதாக மாறியதன் பின்விளைவுகளே. எனினும் இம் மாற்றங்கள் பெண்கள்
இயக்கத்தின் நன்மைக்கானவையே என்று கூற முடியாது. பெண்ணியம், ஏக காலத்தில், நிறுவன மயப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு விட்டது. பேரளவில் அது ஏற்புடையதாகிவிட்டது. எனினும், அதன் செயலாற்றல் இழக்கப்பட்டுவிட்டது.
பெண்ணியச் செயலூக்கம் நின்று போகவில்லை. பெண்ணியச் செயற்பாடுகளிலும் கலந்தாலோசனைகளிலும் பங்குபற்றும் பெண் கள் தொகை குறையவுமில்லை. கோடிக்கணக்கான பெண்கள், பெண்களுடைய பிரச்சினைகள் பற்றிப் பெண்ணியச் செல்வாக்கைப் பயன்படுத்தித், தம்மிடையே உரையாடுகின்றனர். குடும்ப வன்முறை, மகப்பேற்று உரிமைகள், பெண்கள் உடல் நலன் போன்றன பற்றிக் கவனங் காட்டும், திட்டமிட்ட பெண்ணியச் செயற்திட்டங்கள் எத்தனையோ உள்ளன. 1995ல் Bெய்ஜிங்ங்ல் நடந்த சர்வதேச மகளிர் சந்திப்பில் தொடக்கப்பட்ட முயற்சிகளைத் தொடர்ந்து செயற்படுத்தும் சர்வதேச மகளிர் வலைப்பின்னல்கள் உள்ளன. தங்கள் தலைமுறையினரை விளித்து அல்லது அவர்கள் சார்பாகக் குரல்கொடுக்கும் நூல்களை இளம் பெண்ணியப் படைப்பாளிகள் வெளியிடுகின்றனர்.
குறைந்தளவில் ஆண்களுக்குச் சமமாகவேனும், சுற்றுச்சூழலிய, பெருமுதலாளிய நிறுவன விரோத இயக்கங்களில் பெண்கள் தலைமைப் பங்கு வகிக்கின்றனர். இத்தகைய குழுமங்களில், தமது உலக நோக்கிற் பெண்ணியம் மிக முக்கியமான ஒரு பங்கு வகிப்பதை யாரும் உணர்வர். எனினும், இத்தகைய செயலூக்கப் பணிகள், பெண்ணியம் பற்றிய பொதுவான பார்வையை வடிவமைக்கும் நிறுவனங்களும் கல்விசார் வலைப்பின்னல்களும் முன்னொரு காலத்திற் தமக்குப் புத்துணர்வூட்டிய களங்களினின்று விலகிச் சென்றுவிட்டதோடு, தமது பார்வைக் குவிவையும் செயலாற்றலையும் இழந்துவிட்டன.
பெண்ணியம் ஒரு இயக்கமாக இல்லாது ஒரு கருத்தாக மாறிவிட்டது. எதிர்காலம் பற்றிய ஆசைக் கனவு மிகுந்த ஒரு பண்பை அது இழந்துவிட்டது. இடதுசாரி இயக்கங்கள் பற்றியோ முற்போக்கு இயக்கங்கள் பற்றியோ பொதுப்பட இவ்வாறே கூறலாம். பெண்ணியச் சிந்தனைகளும் முற்போக்குச் சிந்தனைகளும் ஏற்புடையன எனக் கூறத்தக்க விரிவானதும் மரியாதைக்குரியதுமான ஒரு களம் இன்று நம்முன் உள்ளது. எனினும் முழு அமெரிக்காவினதும் அரசியலின் செல்நெறி மீது நமது செல்வாக்கு அற்பமானதே. பெண்ணிய/முற்போக்கு அரங்கின் மீதாக முகில் மூடியுள்ளது போற் தெரிகிறது. இது, அண்மைய தசாப்தங்களில் இடதுசாரி இயக்கத்தின் பலவீனத்தின் காரணமும் விளைவுமாகும்; முதலாளியத்திற்கு மாற்று இல்லை என்று பரவலாக ஏற்கப்பட்டுள்ளதன் எதிர் வினையுமாகும். கூட்டு முயற்சி சமூகமாற்றத்தைக் கொண்டு வரும் என்ற சாத்தியப்பாடு பற்றிய நம்பிக்கைத் தளர்ச்சியின் விளைவாகப் பிற முற்போக்கு இயக்கங்கள் போல பெண்கள் இயக்கமும் பலவீனப்பட்டுள்ளது.
பெண்கள் இயக்கத்தின் சரிவின் காரணமென்ன?
1960களிலும் 70களிலும் பெண்கள் இயக்கத்தில் ஆதிக்கஞ் செலுத்திய போக்கு, தீவிரப் பெண்ணியமாகும். அப்போது பெண்கள் இயக்கம் தெளிவாக வேறுபட்ட இரு போக்குகளை கொண்டிருந்தது. இவற்றுள் ஒன்று, சோஷலிச பெண்ணியம் என
(சில சமயங்களில் மாக்ஸியப் பெண்ணியம் எனத்) தன்னை அழைத்துக்கொண்டதுடன், குறிப்பாக, நிற அடிப்படையிலும் வர்க்க அடிப்படையிலுமான, பிற ஒடுக்கல்களுடன் பின்னிப்பிணைந்த தாகவே பெண்கள் மீதான ஒடுக்குமுறையைக் கருதியதுடன் இவை யாவற்றையும் ஒரு சேரத் தீர்க்கக்கூடிய ஒரு அரசியலை விருத்தி செய்ய முனைந்தது. மற்றப்போக்குத், தன்னைத் தீவிரப் பெண்ணியம்’ என (Radical Feminits) என அழைத்துக் கொண்டது. (Large R, Radical Feminism) பெண்கள் மீதான ஒடுக்குமுறையே அடிப்படையானது எனவும் பிற ஒடுக் குமுறைகள் யாவும் பால் அடிப்படையிலான சமமின்மையினின்றே உருவெடுக்கின்றன என வாதிட்டனர்.
இரு வகையான பெண்ணியத் தீவிரவாதிகளும், பொது அலுவல்களில் உள்ள பாலடிப்படையிலான சமமின்மை தனிப்பட்ட வாழ்விலுள்ள சமமின்மையிலிருந்து பிரிக்க இயலாதது என வற்புறுத்தினர். தீவிர பெண்ணியம் இரு செயற்தளங்களிலும் பெண்களுக்குச் சமத்துவத்தை வேண்டி நின்றது. பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் பிறவகையான ஒடுக்குமுறைக்குமிடையே உள்ள உறவுபற்றிய கருத்து வேறுபாடுகளைத் தங்களிடையே கொண்டிருந்தாலும் தீவிர பெண்ணியவாதிகள் ஒரு விடயத்தில் உடன்பாடு கொண்டிருந்தனர். அதாவது, செல்வத்திலும், அதிகாரத்திலும் சமமின்மைகளால் பிரிவுபட்டுள்ள ஒரு சமூகத்தில், ஆண்கட்கும் பெண்கட்குமிடையிலான சமத்துவம் தன்னளவிலேயே செயற்பட முடியாது. தீவிர பெண்ணியத்தின் இலக்கு ஒரு சமத்துவமான சமுதாயம், சமத்துவ அடிப்படையிலான புது வகையான சமூகங்கள்.
1960களிலும் 70களிலும் பெண்கள் இயக்கத்தினுள் இருந்த தீவிரவாதப் போக்கு முழு இயக்கத்தையும் முன்னோக்கி உந்தியது. எனினும், ஆண்களுக்குச் சமமாகப் பெண்கள் வேலைத்தலங்களிற் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையே மிகுந்த வெற்றியைப் பெற்றது. அதிலும் தீவிரமான, சமத்துவமான சமுதாயமும் சமத்துவ அடிப்படையிலான புதுவகையான சமூகங்களும் என்ற
கோரிக் கை, அவ்வளவு எளிதாக வெல் லக் கூடியதாக இருக்கவில்லை. பெண்கள் இயக்கத்தின் தாராளவாத தீவிரவாதப் பிரிவுகளிடையே எதற்கு முக்கியம் தருவது என்பதில் வேறுபாடுகள் இருந்த போதும், அவர்களது கோரிக்கைகள் பாரிய முறையில் முரண்பட்டு நிற்கவில்லை. தீவிர பெண்ணிய வாதிகள் வேலைத்தலத்திற் பால் அடிப்படையிலான சமத்துவத்தை வேண்டினர். தாராளவாதப் பெண்ணியவாதிகளிற் பெரும் பாலானோர் மேலும் சமத்துவமான சமுதாயத்தை வேண்டினர். பிற்பட்டோருக்கான சிறப்புச் சலுகை ஏற்பாடு (Affirmative Action) வெறுமனே மேட்டுக்குடிப் பெண்களுக்கு ஏதுவானது மட்டுமல்ல. “பெண்ணிய ஆய்வுகள்’ சஞ்சிகையின் 1999 இளவேனிற் பருவ (Feminist Studies, Spring 1999) (Nancy McLean) எழுதிய கட்டுரையில் அவர் பின் வருமாறு சுட்டிக் காட்டினார் : உழைக்கும் பெண் கள், தங்கள் வேலைத்தலங்களில் வழமையாக ஆண்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைப் பெண்களுக்கும் பெற்றுத் தருவதற்கும் பெண்கள் இயக்கத்திற்குள் ஒரு தொழிலாளி வர்க்கப் பகுதியை உருவாக்குவதற்கும் பயன்படும் முறையில் இக்கொள்கை மூலம் அங்கே சமத்தவத்துக்காக போராடினார்கள். பெண்கள் இயக்கம் வளர்ந்தும் செல்வாக்கில் அதிகரித்தும் வந்த வேளை, வேலைத்தலத்தில் சம வாய்ப்புகட்கான கோரிக்கையும் பரந்துபட்ட சமுதாயச் சமத்துவத்துக்கான கோரிக்கையும் ஒன்றை ஒன்று ஆதரித்து நின்றன.
ஒரு இயக்கத்தின் கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட்ட பின்பு, அவற்றின் விளைவுகள் எதிர்பார்த்ததிலும் வித்தியாசமாக அமையலாம். சிறப்புச் சலுகை ஏற்பாடுகள் மூலம் கிட்டிய வாய்ப்புகளால் அதிகம் நன்மை காணக் கூடியவர்களாகப் பெருமளவும் வெள்ளை இனத்தவர்களான படித்த பெண்களே இருந்தனர். ஏனெனிற், சிறப்புச் சலுகை ஏற்பாடு, மற்ற எல்லாத் துறைகளையும் விட, உத்தியோகங்கள் தொடர்பாகவே அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெண்களையும் வெள்ளையர ல்லாதவர்களையும் ஸ்தாபனப்படுத்துவதில் தொழிலாளர் இயக்கம் தவறியது இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். 1970கள், 80கள்,
90களில், அமெரிக்கச் சமுதாயம் ஏற்றத்தாழ்வுடைய பிரிவுகளாக வேறுபட்டுப், பொருளாதார அடிப்படையில் உயர்நிலையிலி ருந்தோருக்கும் தாழ்நிலையிலிருந்தோருக்கும் இடையிலான இடைவெளி அதிகமானதும் சிறப்புச் சலுகை ஏற்பாடுகளின் வர்க்க, நிற அடிப்படையிலான சாய்வுக்கு ஒரு காரணமாகும். உழைக்கும் வர்க்கப் பெண்கள் கூடிய ஊதியத்துடனான தொழில்களைப் பெற முடிந்ததால் ஏற்பட்ட நன்மைகளால் சமூகத்தின் வர்க்க வேறுபாடுகளின் விரிசலின் விளைவுகளை ஈடுசெய்ய முடியவில்லை. 1970கள் தொட்டுத் தொழிலாளரின் வாழ்க்கைத்தரம் பொதுவாகவே சரிவு கண்டது. ஏற்கெனவே வறுமைப்பட்டோராக இருந்த பெண்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டனர்.
தீவிரவாதப் பெண்ணியப் பார்வை குழுவாதத்தாலும் மும்முரமான சித்தாந்த மோதல்களாலும் பிளவுபட்டுத் தடுமாறியது. 1970களின் பிற்பகுதியில், பொதுவான சமூக உறவுகளில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு மாறாக, ஒரு பெண்ணிய ‘உப பண்பாட்டை உருவாக்கும் நோக்குடைய ஒரு பண்பாட்டுப் பெண்ணியம், தீவிரவாதப் பெண்ணியம் இருந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. அலிஸ் எஷொலின் (Alice Echo) “கெட்டவராக இருக்கத் துணிவு கொள்ளல்; அமெரிக்காவில் 1967-75′ (Daring to be Bad: American Radical Feminism, 1967-75) போக்குகளைச் செம்மையாகவும் அழுத்தமாகவும் விவரிக்கிறது. றுாத் றோஸன் (Ruth Rosen) எழுதிய “பிளந்து திறக்கப்பட்ட உலகம்: நவீன பெண்கள் அமெரிக்காவை மாற்றிய விதம்’ (The World Split Open: the Way Modern Feminism Transformed America) எனும், பெண்கள் இயக்கம் பற்றிய அண்மைய ஆய்வு நூலில், இந்த வளர்ச்சிப் போக்குக்கள் பெண்கள் இயக்கத்தின் மீது ஏற்படுத்திய பொதுவான தாக்கம் பற்றிய தெளிவான பார்வை கொண்ட விவரணம் உள்ளது. வழமையாகச், சரிவை எதிர்நோக்கும் இயக்கங்களிலேயே இத்தகைய பிளவுகள் உண்டாகின்றன. ஆனால், பெண்கள் இயக்கமோ, அவ்வேளையில் வலுவாகவும் வளர்ந்து கொண்டும் இருந்தது. தீவிரப் பெண்ணியவாதிகள் வேண்டி நிற்கின்ற சமுதாய மாற்றத்திற்கும் அதை வென்றெடுப்பதன் சாத்தியப்பாட்டுக்கும் இடையிற்,
குறுகியகால அளவிலேனும், இருந்த பெரிய இடைவெளியே பிரச்சனையாக இருந்தது. பெண்கள் இயக்கம், புதிய உலகத்தை உண்டாக்குவதற்கு இல்லாவிட்டாலும், புதிய பெண்ணை நிர்மாணிப்பதற்கான பிரதேசமாகியது. பெண்ணியவாதிகள் ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து எதிர்பார்த்த தூய்மையின் அளவு, ஏமாற்றங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் வழிவகுத்தது.
அக்காலத்தில் தீவிரவாத இயக்கம் குழம்பிப்போன காரணங்களாலேயே தீவிரப் பெண்ணிய இயக்கமும் கொஞ்சம் குழம்பிப்போனது என்று நினைக்கிறேன். 1960களின் பிற்கூற்றிலும் 1970களின் முற்கூற்றிலும் பல தீவிரவாதிகள் புரட்சியையே ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் அது அமெரிக்காவில் எய்தக் கூடிய நிலையில் இருந்தது எனவும் நினைத்தனர். பல குழுமங்கட்குப், புரட்சி பற்றிய பல்வேறு பார்வைகளும் இருந்தன. புரட்சிகர அரசியல் பற்றிய பெண்ணிய, கறுப்பு இன, அரச மறுப்பு, மாக்ஸிய லெனினிய மற்றும் பிற வகையான வியாக்கியானங்கள் இருந்தன. ஏதோ ஒரு வகையான புரட்சி ஏற்படும் என்ற நம்பிக்கை, இவர்களது வேறுபாடுகளை ஊடறுத்து நின்றது. புரட்சியை நோக்கிய முனைப்பு, ஒன்றும் தவறானது அல்ல. ஏனெனில் அது இயக்கம் எதிர்நோக்கிய பிரச்சனைகளின் ஆழம் பற்றிய புரிதலைச் சுட்டிக் காட்டியது. ஆயினும் அமெரிக்காவிற் புரட்சி எட்டும் தொலைவில் இருந்தது என்ற எண்ணம் யதார்த்த விரோதமானது. வியற்நாம் போர், அமெரிக்கச் சமூகத்தில் ஒரு பாரிய நெருக்கடியை உண்டாக்கியிருந்தது. போருக்கு எதிர்ப்பு, நிறவெறிக்கும் பால் அடிப்படையிலான ஆதிக்கத்துக்கும் மீதான எதிர்ப்புடன் சேர்ந்து, ஒரு புதிய சமூகத்தை உருவாக்குவது இயலுமாகியுள்ளது என்று சிலரை எண்ணத் தூண்டியது. உண்மையில், எப்படி நோக்கினாலும், புரட்சிக்கான அணி பெரும் பாலும் மாணவர் களையும் இளைஞர்களையுமே கொண்டதாக இருந்தது. இது புரட்சிக்குப் போதுமானதாக இருக்கவில்லை.போர் முடிந்த பின்பு, எதிர்ப்பு இயக்கங்களது ஆட்பலம் கரைந்து போய், ஒரு தீவிரமான மையப்
பகுதியே எஞ்சியது. ஒட்டுமொத்தமாகப் பெண்கள் இயக்கத்தில் இருந்துவந்த வலிமை காரணமாயும் தீவிர கொள்கைகட்குப் பல பெண்ணியவாதிகள் நடுவே இருந்த ஏற்புடைமையாலும், பிற கிளர்ச்சிகளை விட நீண்ட காலத்துக்கு தீவிரப் பெண்ணியம் தாக்குப் பிடித்தது. 1980களில், தீவிரப் பெண்ணியம், ஒரு கட்டுக்கோப்பான செயற்திட்டம் கொண்ட ஒரு செயலூக்க இயக்கம் என்ற அளவிலேனும், அமெரிக்க அரசியலின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
பெண்களுக்கான சிறப்புச் சலுகை ஏற்பாடுகள், வேலைத்தலத்திற் பால் அடிப்படையிலான சமத்துவம் என்ற இலக்கைக் கொண்டிருந்தது. பெண்களுக்கு உத்தியோக வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிற் பெண்கள் இயக்கம் கண்ட வெற்றி இயக்கத்தின் பார்வையையும் இலக் குகளையும் குறுகலாக்க உதவியது என்பது, முரண்நிலையானது. பெண்ணிய இயக்கம் பெரும்பாலும் இள வயதினரைக் கொண்டதாகவும் தீவிரவாதச் சிந்தனைகளை உள்வாங்கியதாகவும் இருந்த போது, அது பெருவாரியான பெண்ணியவாதிகள் எந்த வர்க்கத்தினின்றும் வந்தார்களோ அந்த வர்க்கத்தினின்று பல வகைகளிற் சுயாதீனமாகவும் அவ் வர்க்கம் பற்றிய விமர்சனப்பார்வை கொண்டதாகவும் இருந்தது. இன்று, முக்கியமான இளம் பெண்ணியவாதக் குரல்களைக் கேட்க முடியுமாயினும், ஒழுங்கமைக்கப்பட்ட பெண்கள் இயக்கத்தின் பெரும்பகுதியினர் இரண்டாவது பெண்ணிய அலையைத் தொடக்கி வைத்த எனது தலைமுறையினரே. வயது ஏற ஏற மனிதர் தீவிரங்குறைகின்றனர் என்று நான் சொல்லவில்லை. மனிதரது கொள்கைகள், அவர்கள் வாழுகிற காலத்தின் மீதும் அவர்களது அரசியற் செயற்பாடுகள் மீதும் தங்கியுள்ளனவே ஒழிய, வயதின் மீதல்ல என நம்புகிறேன். இளவயதினருக்குங் கூடத் தீவிரப்போக்கு பொருந்தாது எனக் கருதப்படும் ஒரு காலத்தில், பெருமளவும் நடுத்தர வர்க்க நடுத்தர வயதினரைத் தலைமையிற் கொண்ட ஒரு இயக்கம் சுய திருப்திக்குள் போய் ஒதுங்குவது இலகுவாகவே நிகழும். (i. மேற் கூறியது நிச்சயமாக முழுப் பெண் ணிய இயக்கத்தினதும் விவரணமல்ல, இன்று பெண்கள் இயக்கம் என, ஒருபுறம் , பெண்கள் தேசிய நிறுவனம், பெண் களின் அரசியலுக்கான தேசியப் பேரவை போன்றன உள்ளன. மறுபுறம், அவற்றினும் துணிவான ஆனால், அவ்வளவு அறியப்படாத, குறிப்பான பிரச்சினைகள் பற்றி வெகுசன மட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் உள்ளன. நம்மிடையே இல்லாதது ஏதெனில், தீவிரப் பெண்ணியம் ஒரு காலத்திற் செய்தது போல, பெண்கள் மீதான ஒடுக்குதலைப் பற்றிப் பொதுப்பட நோக்கி, அதை முழுச் சமுதாயத்தின் மீதுமான விமர்சனத்துக்குள் பொருத்தும் ஒரு பெண்கள் இயக்கப் பிரிவு ஆகும். தாராளவாதப் பெண்ணியம் சம உரிமைச் சட்டத் திருத்தத்திற் தோற்றது, ஆயினும் பல விடயங்களைச் சாதித்தது.
அனேகமாகத் தாராளவாதப் பெண்ணிய முயற்சிகளின் விளைவாகவே யுவதிகட்கும், சிறுமியர்க்கும் சில தசாப்தங்கள் முன்பு இல்லாதிருந்த வாய்ப்புகளும் முந்திய தலைமுறையினர் கற்பனை செய்திருக்கவும் பொருந்தாத எதிர்பார்ப்புக்களும் இன்று உள்ளன.
பெண்ணியத்தின் தீவிர வடிவங்கள் இன்னமும் உள்ளன. ஆயினும், அவை, செயற்படுவோர் மத்தியிலன்றிக் , கல்வித்தகைமை சார்ந்தும் ஆய்வறிவாளர் நடுவிலுமே பெரிதும் உள்ளன. இந்த இடைவெளியை நிரப்பப் பல பெண்ணியவாதிகள், தமது ஆய்வறிவு சார்ந்த கருமங்கள் மூலமும் வெகுசனமட்டத்து வேலைகளில் பங்குபற்றியும் தொடர்ந்தும் பணியாற்றி வருகின்றனர். கல்வி நிறுவனங்களில் பெண்ணியவாதிகள் உட்படப் பெண்களின் எண்ணிக்கை கூடி வருவதால், பல மாணவர்கட்குப் பெண்ணிய, முற்போக்குச் சிந்தனைகளைத் தெரியவந்துள்ளது. பெண்ணிய முற்போக்கு எழுத்துக்கள் ஒரு பரவலான வாசக வட்டத்தின் சிந்தனை மீது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், மொத்தத்தில் கல்வி நிறுவனங்களில் உள்ள பெண்ணியவாதிகள், கல்வியாளரிடையே உள்ள முற்போக்கானவர்களைப் போலவே ஒரு தெளிவான அரசியல் வேலைத்திட்டத்தைக் கொண்டிருக்க வில்லை, என்பதோடு பல்கலைக் கழகங்களின் தர்க்கமுறையிலும்
விழுமியங்களிலும் அவர்கள் சிக்குண்டுள்ளனர். பெண்ணியத்துடன் நெருக்கமான தொடர்புடைய மேல் நிலைக் கொள்கை விவகாரங்களிலும் பண்பாட்டுக் கல்விநெறி தொடர்பாக ஓரளவுக்கும் கெளரவம், அந்தஸ்து, பிரபல்யம் ஆகியனவற்றை நாடியதன் விளைவாகப்பெண்ணிய, முற்போக்கு விழுமியங்கள் தலைகீழாக்கப்பட்டுள்ளன. 1960களின் அதிகார அடுக்குகள் பற்றிய தீவிர பெண்ணிய விமர்சனத்திற்குப் பதிலாக, அதிகார அடுக்குகளிலும் அவற்றில் மேல்நிலை எய்துவதாற் கிட்டும் நன்மைகளிலும் திளைக்கும் ஒரு நிலைமை காணப்படுகிறது.
சம காலப் பெண் கள் இயக் கம் , நிற, இன அடிப்படையிலான பக்கச்சார்பையும் ஒற்றைப் பிரச்சனை மீதான கவனக்குவிப்பையும் தவிர்த்துள்ளபோதும், தனக்குரிய நடுத்தர, உயர் நடுத்தர வர்க்க நிலைப்பாடுகளிலிருந்து விலகி நிற்கும் ஆற்றலைப் படிப்படியாக இழந்துள்ள வகையில், அது முதலாவது பெண்ணிய அலையை ஒத்துள்ளது. முதலாவது பெண்ணிய அலை, தன் வரலாற்றின் போக்கில், நிறம் தொடர்பாக மட்டுமன்றி, மூலதனமும் வர்க்கமும் தொடர்பாகவும் தனது பார்வையைக் குறுகலாக்கி விட்டது. உள்நாட்டுப் போருக்கு முந்திய ஆண்டுகளில் முதலாவது பெண்ணிய அலை, மூலதனம் பற்றிய விமர்சனப் பார்வை உட்படத் தீவிர நிலைப்பாடுகளைக் கொண்ட பல்வேறு இயக்கங்களின் கூட்டமைப்பாக இருந்தது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மூலதனத்தின் அமைப்புக்கள் இறுக்கமடைந்து வர்க்க முரண்பாடுகள் உக்கிரமான போது, ஏழைகட்கும் தொழிலாளி வர்க்கத்தினருக்கும் ஆதரவான சீர்திருத்த இயக்கங்களில் பெண்ணியவாதிகள் முக்கிய பங்கு வகித்தனர். பெண்கள் இயக்கத்தில் ஒரு பகுதியினர், முதலாளியத்தை, விமர்சித்து தொழிலாளர் இயக்கத்துக்கு நேசக்கரம் நீட்டினர். எடுத்துக்காட்டாக, மகளிர் கிறிஸ்துவ மதுவிலக்கு இயக்கம் (Women Christian Temprerance Movement) Gigibit poor மூலதனச் சுரண்டலை எதிர்த்து “சுவிஷேச சோசலிசத்தை” (Gospel Socialsm) (Christianity in Action) என்று கூறி ஆதரித்தனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க
ஆண்டுகளில் பெண்கள் இயக்கத்துக்கும் சோசலிசத்துக்கும் இடையிலான உறவு சோசலிசக் கட்சிக்குள் தொடர்ந்தது. ஆனால், புதிய நூற்றாண்டின் பிறப்பின் பின்னர், பெண்ணியத்தின் பெரும் போக்கு முதலாளியத்தை விமர்சிப் பதினின்றும் ஒதுங்கியதோடு பெண்ணிய நலன்களையும் விழுமியங்களையும் உயர் நடுத்தர வர்க்கத்தின் நலன்களுடனும் விழுமியங்களுடனும் இணைத்தது. முதலாவது பெண்ணிய அலை ஓய்ந்த போது, முதலாளியம் பற்றியும் தன் வர்க்க மூலவேர்கள் பற்றியுமான விமர்சனப் பார்வையைப் பெண்ணியம் இழந்துவிட்டது.
பெண்ணியம் நடுத்தர வர்க்கப் பார்வையை உறுஞ்சியாயிற்று
முதலாவது பெண்ணிய அலை போன்று, சமகாலப் பெண்ணியமும் காலப்போக்கில், தன்னிற் பெரும்பாலோரது வர்க்கமான நடுத்தர வர்க்கத்தின் பார்வையை உள்வாங்கிக் கொண்டது. அதே வேளை, அந்த வர்க்கத்தின் பார்வை, மாறுதலுக் குள்ளாகியுள்ளது. கடந்த சில தசாப்தங்களில், அதிகரித்து வரும் பொருளாதாரப் பாதுகாப்பின்மையினதும் விரிந்து வந்த சமூக ஏற்றத்தாழ்வுகளினதும் தாக்கத்தின்விளைவாக, தனிமனித மேம்பாட்டுக்கான வேட்கை, நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிகம் கவனிப்பைப் பெற்ற ஒரு விடயமாயிற்று. பல, அநேகமாகப் பெரும்பாலான, நடுத்தர வர்க்கத்தினருடைய சமூக ஈடுபாடு பலவீனப்பட்டுள்ளது. பலருக்கு, குறிப்பாக உத்தியோகக்காரருக்கு, வேலை ஒரு வகையான மதம் போல ஆகிவிட்டது. வேலை மட்டுமே எஞ்சியுள்ள அடையாளங்களின் தோற்றுவாய்களில் செல்லுபடியானதாகத் தென்பட்டது. அதே வேளை, பலருக்குத் தமது வேலைத்தலங்கள் மேலும் மேலும் போட்டியும் மேலும் மன உளைச்சலும் கொண்டதாகின. இது வேலைத்தலத்தின் பிரச்சனை மட்டுமன்றி, முழுப் பண்பாட்டினதும் பிரச்சனையுமாகும். இந்த நாடு மேலும் தனிநபர் வாதமுடையதாகவும் நேயமற்றதாகவும் சுயநலம் மிக் கதாகவும் ஆகிவிட்டது. பெண் ணியம் , கவனிக்கத்தக்களவில் இதை எதிர்த்து நிற்கவில்லை. தொழில் பெறுவதற்குச் சமவாய்ப்பு என்ற பெண்ணியக் கோரிக்கை அன்றும்
இன்றும் முக்கியமானதே. பெரும்பாலான பெண்களுக்கு இது இன்னமும் கைகூடவில்லை. ஆயினும் பெண்கள் இயக்கத்தின் மிகக் கவனிப்புக்குரிய பகுதியினர் சமூகச் சமத்துவத்துக்கும் சமுதாய நலனுக்குமுரிய இடத்தை பொருள் சார்ந்த தமது ஆசைகளின் ஈடேற்றத்திற்கு வழங்கிவிட்டனர். பெண்கள் இயக்கத்தின் இரண்டாவது அலையின் தொடக்க நிலையிலிருந்த தீவிர, சமூக மாற்ற விழுமியங் களிலிருந்து இந்த நிலைக்கு வரும் வரையிலான பரிணாம மாற்றம் படிப்படியாகவே நிகழ்ந்ததால் அதிற் சம்பந்தப்பட்டோர் அதைக் கவனியாமல் விடுவது இலகுவாயிற்று. ஆயினும் ஒரு காலத்திற் தீவிர இயக்கமொன்றன் பகுதியாக இருந்த பெண்கள் இன்று முற்றிலும் மாறுபட்ட விழுமியங்களால் ஆளப்படும் ஒரு சூழலில் இருக்கக் காணப்படுவது அவர்களது பார்வையில் ஏற்பட்டுள்ள பெயர்ச்சியைச் சுட்டி நிற்கிறது. 1970களிலும் 80கள்லும் பெண்களை அதிகளவிற் பல்கலைக்கழகங்கட்கு அனுப்பினாற் பல்கலைக்கழகங்களது மேட்டுக்குடித்தன்மையும் போட்டியும் குறைந்து அவை அதிக மனிதப் பண்புடையனவாயும் சமூகப்பிரச்சினைகளை விளிப்பதில் கூடிய அக்கறையுடையனவாயும் மாறும் என்று பல பெண்ணிய வாதிகள் நம்பினர். இப்போதோ பல்கலைக்கழகங்களில் பெண்கள் நிறையவே உள்ளனர். என்றாலும் பல்கலைக்கழகங்களில் நன்மைக்கான மாற்றம் நடந்துள்ளதா என்பது நிச்சயமில்லை. உண்மையிற், பல வழிகளில், பல்கலைக்கழகங்கள் மோசமாகி யுள்ளன: குறிப்பாக அவை பெரிய கம்பெனிகளது நிதியுதவியை நாடுகின்றன. அதன் விளைவாக சந்தை மனோபாவம் பரவுகிறது. எனினும் பொதுப்பட்ட முறையிற் பெண்களோ, குறிப்பாகப் பெண்ணியவாதிகளோ, இப் போக்குகளை எதிர்த்து, மேலும் மனிதப்பண்புடைய, போட்டி மனோபாவம் குறைந்த, அதிகார அடுக்குத் தன்மை குறைவான பல்கலைக்கழகங்களை வேண்டி நிற்கவில்லை. அண்மைக்காலங்களின் கல்வித்துறை சார்ந்த பெண்ணியவாதிகள் இத்தகைய முற்போக்கான விழுமியங்கள் கொண்டோராக அறியப்பட்டவர்களாக இல்லை. கல்வித்துறை சார்ந்த பெண்ணியத்திற் சில பகுதிகளிற் திறந்த விவாதம் உள்ளது.
மனிதர் ஒருவரையொருவர் மரியாதையுடன் நடத்துகின்றனர், சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் ஒரு பொது நோக்கிற்காகச் செயற்படும் சமமான உறுப்பினர்களாகக் கருதப்படுகின்றனர். எனினும் மிக அதிகமான பெண்ணியவாதக் கல்வித்துறையினர் நடுவே, நிலைமை இவ்வாறில்லை. கல்வித்துறை சார்ந்த பெண்ணியத்தின் மிகவும் மதிப்புக்குரியதான உயர் கொள்கைக் களத்தில் போட்டியும் அந்தஸ்துக்கான தேடலும் பெரிதும் மேலோங்கியுள்ளன. பெண்கள் இயக்கத்தின் விழுமியங்களில் ஏற்பட்டுள்ள பெயர்ச்சி, பரவலான ஒரு போக்கின் ஒரு பகுதியேயாகும். மேலும் மேலும் அதிகரிக்கும் லாபத்துக்கான பெருமுதலாளிய வேட்கையாலும் பேராசையை ஒரு நற்பண்பாக்கும் செயல்களாலும் அடையாளப்படுத்தப்படுத்துவதும் 8 inj60)LD யடைந்து வரும் பொருளாதார, சமூக வேறுபாடுகளைக் கொண்டதுமான ஒரு காலத்தில், ஒரு தலைமுறை முழுவதுமே, எப்படியும் மேலேறுவது என்ற ஆவலின் பிடியில் சிக்குண்டுள்ளது. பெண்ணியவாதிகள் இதற்கு விலக்கில்லை. பெண்ணியவாதி என்றால் பதவி மோகம் பிடித்தவர் என்ற படிமம் வெறுமனே பகைமையான ஊடகங்களின் புனைவு அல்ல. வேறுவிதமாகச் சொல்வதாயின், கல்வித்துறையிலும் உத்தியோகங்களிலும் உள்ள பெண்ணியவாதிகள் பிற நடுத்தர வர்க்கத்தினரை விட எவ் வகையிலும் அதிகளவில் இவ் விழுமியங்களால் ஆட்கொள்ளப்படவில்லை எனலாம். எனினும் இவ்வாறு கூறுவது, பெண்ணியவாதிகள் ஒரு புதிய உலகம் பற்றிய தமது பார்வையை நழுவ விட்டுவிட்டனர் என்று ஒத்துக்கொள்வதாகும்.
1960களிலும் 70களிலும், பால் அடிப்படையிலான அரசியலின் ஒரு அம்சம், இளம் பெண்கள் வீட்டுக்குள் அடைந்து கிடப்பதை எதிர்த்து வீட்டுக்கு வெளியே தொழில் வாய்ப்புகளைக் கோரிக் கிளர்ச்சி செய்ததிலிருந்து சமகாலப் பெண்ணியம் உருப் பெற்ற இன்னொரு அம்சம், ஏதெனின், பெருமுதலாளியத்தால் வழிநடத்தப்பட்ட சமுதாயத்திற்கு எதிராக எழுந்த “புதிய இடதுசாரி” இளைஞர்களின் கிளர்ச்சியையும் மேலும் அர்த்தமுள்ள
சமூகம் ஒன்றுக்காக அவர் களால் முழுமையாக வரைவிலக்கணப்படுத்த இயலாது இருந்த கோரிக்கையும் ஆகும். க்றிஸ்தொட்பர் லாஷ் (Christopher Lasch) இறந்த பின்பு வெளியான அவரது கட்டுரைத் தொகுதியான, “பெண்களும் சாதாரண (Women and Common Life, Norton, 1997) நுாலில் “பால் அடிப்படையில் வேலையின் பங்கீடும் குடிசார் பண்பாட்டின் சரிவும் நகர அயற்குடியிருப்புக்களின் எழுச்சியும்” (The Sexual Division of Labour, The Decline of Civil Culture and the Rise of the Suburbs) விமர்சன நோக்குகளும் அடிப்படையில் ஒன்றையொன்று நிறைவு செய்பவை என வாதிக்கிறது. ஒவ்வொரு பார்வையும் மற்றதைக் கணிப்பிலெடுக்காத குறையால் பாதிக்கப்பட்டுள்ளது என அவர் வாதித்துள்ளார். அத்துடன் அவற்றிடையிலான முரண்கள் தொழிற்துறைக்கும் குடும்பத் துறைக்கும் இடையிலான மிகையான இடைவெளியையே சுட்டி நின்றன எனவும் அவர் கருதினார். வீட்டிலும் பெண்ணிய விமர்சன நோக்கை உட்கொண்டு மேலும் மனிதப் பண்புடையதாக்கப்பட்ட ஒரு அலுவலகத்திலும் இரு பாலரினரும் சமமாகப் பங்கு பற்றுவதன் தேவைக்காக அவர் குரல் கொடுத்தார்.
1960களின் தீவிரவாதத்தின் நவீனமயமாக்கப்பட்ட ஒரு வடிவம் நமக்குத் தேவை என நினைக்கிறேன். அது சோசலிஷப் பார்வையும் பெண்ணியப் பார்வையும் கொண்டதாகவும் பெருமுதலாளிய நிறுவனங்களது மிகுதியான வலிமையையும் சந்தை சார்ந்த விழுமியங்களையும் கவனிப்பிற் கொண்டும் அமைய வேண்டும். பெண்ணியவாதிகள் பலர், அமெரிக்கப்பண்பாட்டின் முக்கியமான ஒரு பகுதியாகிவிட்ட தனிநபர்வாதத்தினதும் வெற்றிக்கான தேடலினதும் இருப்பை மறுப்பார்கள். ஆயினும் நம்மிற் பெரும்பாலானோர் எவ்வாறோ அந்த விழுமியங்களின் அடிப்படையிலேயே வாழ்கிறோம் என நினைக்கிறேன். நமது பெறுமதியை வேலைத்தளத்தில் நமது வெற்றியை வைத்து அளவிடுகிறோம் ; அதல் எதுவும் குறுக் கடுவதை அனுமதியாதிருக்கிறோம். வாழ்க்கையில் வெற்றி என்பது, பெருமளவும், தொழில் மூலம் பொருளும் அந்தஸ்தும் பெறுவதன்
அடிப்படையில் அளக்கக் கூடியது எனப் பரவலாக ஏற்கப்பட்டுள்ளது. இவ் விழுமியங்கள் உத்தியோகம் சார்ந்த நடுத்தர வர்க்கத்தினரிடையே மிக வலிதாக வேரூன்றியிருக்கலாம். ஆயினும் இவை அதற்கு அப்பாலும் பரவுகின்றன: பொருளாதாரப் பாதுகாப்பின்மையாலும் பின்தங்கிப் போகக் கூடுமென்றும் வேலையை இழக்க நேரும் என்றும் அடிமட்டத்திற்குத் தாழ நேரும் எனவும் அஞ்சுவதாலும் அவை வலுப் பெறுகின்றன.
தொழிலுக்குப் புறம்பான நிறுவனங்களும் சமூக உறவுகளும் பலவீனமடைந்து, வேறெதையும் விடத், தொழிலிற் சாதிக்கின்றனவே சமூகப் பெறுமானங் கொண்டனவாகத் தெரியும் போது, தீவிரவாதிகட்குக் கூட, வேறுவகையான விழுமியங்களைக் கடைப்பிடிப்பது கடினமானதாகவே இருக்கும். நமது சமூகங்கள் ஒடுங்கிவிட்டன. நாம் இதை வெறுக்கிறோம், எனினும் அதற்கு எதிர்வினையாக நம்மை நமது தொழிலில் ஆழமாக ஈடுபடுத்திக் கொள்கிறோம். மேலும் மேலும் தளையற்று விளங்குகிற ஒரு முதலாளிய முறைக்கு சமூக முரண்பாடுகளைக் கூர்மையாக்கி எல்லாவற்றின் மீதும் ஒரு விலையை வைத்து வாழ்வின் சகல அம்சங்களையும் தன்னுள் இழுக்கும் ஒரு நீர்ச்சுழலான முதலாளிய முறை மீதான விமர்சனமும் அதற்கெதிரான ஒரு மாற்றும் தேவை என நம்புகிறேன். சமத்துவத்துக்கும் சமூகத்துக்குமான தீவிரப் பெண்ணியக் கோரிக்கை பழமைப்பட்டது என ஒருவர் கருதலாம்; மாறாக ஒரு சமகாலத் தீவிர வேலைத்திட்டத்திற்கேற்ற முன் நிபந்தனையாகவும் ஒருவர் அதைக் கருதலாம்.
நன்றி; மன்த்லி ரீவ்யூ, மே 2001.