பெண்களின் விடுதலை
பெண்களின் விடுதலை

பெண்களின் விடுதலை

பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் பற்றியும் அவற்றிலிருந்து விடுதலை பெறுவது என்பது ன் நிலவுடைமை சமூக சிந்தனை மேலோங்கி நிற்க்கும் இங்கு இன்று ஓரளவுக்குக் கேனும் சமூகத்தின் சில மட்டங்களிலே பெண் விடுதலை பற்றிய குரல்கள் மேலெழும்பி ஒலிக்கவே செய்கின்றன. இருப்பினும் அவை அமைப்பு ரீதியாகவும் இலக்கு நோக்கியும் திருப்தி கரமாணதாக இல்லை என்பதே உண்மை நிலை.
பெண்களின் விடுதலை பற்றிய பல்வேறு தளங்களிலும் வற்புறுத்தப்படுகின்றன. அவை் நாடளவிழும் ஏன் சர்வதேச அளவில் கவனத்தையும் முக்கியத்துவத்தையும் பெறுகின்றன. ஆனாலும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையினை அடையாளம் காண்பதிலும் அதற்குரிய விடுதலை பாதையைத் தேர்வு செய்வதிலும் வேறுபாடுகளும் முரண்பாடுகளும் காணப்படுகின்றன. இதில் பிரதானமான கருத்துநிலை முரண்பாடு மார்க்சியர்களுக்கும் தீவிரப் பெண்ணியவாதிகளுக்குமிடையே தான் காணப்படுகின்றது.
குறிப்பாக சோசலிசத்தின் தற்காலிகப் பின்னடைவிற்குப் பின், மாக்சியம் தோல்வி கண்டு விட்டதான பிரசாரம் முன்னெடுத்து சூழலில் பெண் விடுதலை பற்றிய நவீன கருத்தியல்கள் எனக் கூறப்படுபவை வேகமாகப் வளர்த்தெடுக்கப்பட்டன. பின்நவீனத்துவப் பின்புலத்தில் பெண்ணிய விடுதலை பற்றிய தீவிர கருத்துகள் நமது சூழலுக்கு பொருந்தாவிடினும் வலிந்து முன்வைக்கப்பட்டன. மேற்குலகிலே பேசப்படும் பெண்ணியக் கருத்துக்களை அரச சாரா நிறுவனங்கள் மூலம் சிலர் நம்மிடையே நட்டுவைக்க முயன்றனர். ஆனால் அதனை தளிர்க்க வைக்கவோ வளரச் செய்யவோ, அத்தகையவர்களால் முடியவில்லை. ஆனால் அதன் மூலம் குறிப்பிட்ட மேல்தட்டுப் பெண்ணியவாதிகளை தங்களளவில் தம்மை உயர்த்திக் கொண்டனர்.
நம்மைப் பொறுத்தவரை கருத்தும் அது உருவாக்கும் கொள்கையும் அதன் வழியாக உருவாகும் நடைமுறையும்தான் முக்கியமானதாகும். அவற்றின் அடிப்படையிலேயே எவ்வகைச் செயற்பாட்டாளர்களையும் நாம் நோக்குதல் வேண்டும்.
எனவே பெண் விடுதலையை சமூக விடுதலை சமூக மாற்றம் என்பதிலிருந்து பிரித்தெடுத்து தத்தமது அளவுக்கும் மேற்கத்திய முதலாளித்துவ ஏகாதிபத்தியத் தேவைகளுக்கும் ஏற்றவிதமாக முன்னெடுப்பதை மார்க்சியர்கள் கடுமையாக எதிர்க்கவே செய்வார்கள். ஏனெனில் முதலாளித்துவ ஏகாதிபத்திய அமைப்பு முறையினதும் அவற்றின் சுரண்டல் ஒடுக்கு முறைகளிலிருந்தும் விடுதலை வேண்டி நிற்கும் மனிதர்களிடையே ஆண்-பெண் முரண்பாட்டையே பிரதானமான தொன்றாகக் கொள்ளும் போக்கை மார்க்சியர்கள் தயவு தாட்சண்யமின்றி எதிர்த்தே நிற்பார்கள்.

மார்க்சியம்தான் பெண்ஒடுக்குமுறையின் சமூக அடித்தளத்தைத் தெளிவாக அடையாளப்படுத்திய உலகப் பார்வையை வழங்கியது. வெறுமனே சுட்டிக் காட்டியது மட்டுமன்றி நடைமுறைப் போராட்டங்கள் புரட்சிகள் வாயிலாக பெண் ஒடுக்கு முறைகளை உடைத்தெறிந்து ஆண்-பெண் சமத்துவத்தை நாட்டிலும் வீட்டிலும் நடைமுறைப்படுத்த வழிகாட்டியது. சோசலிசத்தின் கீழ் தான் முன்பு எப்பொழுதும் அனுபவித்திராத சுதந்திரத்தைப் பெண்கள் அனுபவிக்க ஆரம்பித்தனர். அதில் முழுமையோ திருப்தியோ அல்லது முடிவான அம்சங்கள் யாவும் நிறைவுடையனவாக இருந்தன என்று கூறிவிட முடியாது.ஆனால் மனிதகுல வரலாற்றில் வர்க்கங்கள் தோற்றம் பெற்ற பின்னான சமூக அமைப்புகளில் சோசலிச சமூக அமைப்பில் மட்டுமே பெண்கள் தமக்குரிய சமூக சமத்துவத்தை நிலைநாட்டக் கூடியதாக இருந்ததை மறுத்துவிட முடியாது.
கடந்த நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்பிருந்தே பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்த குரல்கள் மார்க்சியர்களின் வழிகாட்டலிகளில் வெளிவரத் தொடங்கிவிட்டன. கடந்த நூற்றாண்டின் முற்கூறிலே மேற்கு நாடுகளில் சோசலிசப் பெண்கள் இயக்கம் தோன்றிவிட்டது. அவர்களது பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்களும் கோரிக்கைகளும் பெண் விடுதலையைச் சுட்டிநின்ற அதேவேளை கானிய முதலாளித்துவ ஏகாதிபத்திய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரல்களோடும் போராட்டங்களோடும் பின்னிப்பிணைந்து நின்றன. இதன் வழியில் தான் சோசலிசத்திற்கான போராட்டங்களில் பெண்கள் தலைமைப் பாத்திரங்களிலும் இருந்தனர்.
இதன்காரணமாகவே இன்று வருடா வருடம் மார்ச் 8ம் தேதி சர்வதேசப் பெண்கள் தினமாக நினைவு கூரப்படுகின்றது. மார்ச் எட்டாம் தேதி சர்வதேசப் பெண்கள் தினம் என்பது மேல்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த பெண்கள் ஒன்று கூடி உண்டு கழித்து மகிழ்ந்து கலைந்து செல்லும் தினம் அல்ல. அதே தினம் பெண்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு எதிரான தினம். பெண்கள் மீது ஏவிவிடப்பட்ட கொடுரங்களுக்கு எதிர்ப்புக் காட்டும் தினம். ஒட்டு மொத்தத்தில் பெண்கள் மீதான சகல வகை ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக விடுதலையைக் கோரி நிற்கும் தினமுமாகும். இத் தினத்திற்கான மூலாதாரமாக விளங்கியவர்கள் சோசலிசப் பெண் விடுதலையை முன்னெடுத்தவர்களே என்பது நினைவு கூரப்பட வேண்டியதாகும்.
இன்று உலகமயமாதல் என்பதன் ஊடாக ஏகாதிபத்தியம் மூன்றாம் உலக நாடுகளை மேன்மேலும் சுரண்டிக் கொள்ளையிட்டு வருகின்றது. இதில் பெண்கள் பன்முகப்பட்ட வழிகளில் ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்கள் அனைத்திலும் பெண் ஒடுக்குமுறைகளை அடையாளம் காணமுடிகிறது. ஆனால் அவற்றுக்கு எதிரான அமைப்பு ரீதியாகப் பெண்களை அணி திரட்டுவது கடினமான ஒரு பணியாகவே இருந்து வருகின்றது. பழமைவாதக் கருத்தியல் அமுக்கத்திலிருந்து பெண்களை விடுவிப்பது மிகப் பிரதானமான கடமையாகின்றது. அடுத்து இன்றுள்ள சமூகச் சூழலின் பன்முகத் தாக்கங்களிலிருந்தும் பெண்கள் அறிவு ரீதியாகவும் நடைமுறை வாயிலாகவும் விடுபட வேண்டிய தேவையும் அவசியமும் காணப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *