“புதிய பாதையினரின்” பழைய பாதை:-
*******************************************************************
(எந்தவித பொருளாதாரக் காரணங்களைச் சுட்டிக்காட்டாமல், அணுவாயுதக் கண்டுபிடிப்பை மட்டும் முன் வைத்து, மார்க்சீய திட்டமிட்ட பொருளாதாரத்தின் சிறப்பம்சங்களை ஏகாதிபத்தியம் உள்வாங்கிவிட்டதாகக் கூறி, மார்க்சிய அடிப்படைகளைப் புறக்கணிக்கக் கோருகிற புதிய பாதையினரின் கருத்திற்கு எனது உடனடி எதிர்வினை)
1) புதிய பாதையினர்:- // அமரிக்கா தற்செயலாகக் கண்டு பிடித்த, தயாரித்த அணுக்குண்டே, உலகப்புரட்சி ஏற்படாமல், உலகில் விரைவாகச் சோசலிசம் மலராமல், உலகச் சமூகத்தில் பெரும் தாவிப் பாய்ச்சலிலான முன்னேற்றம் ஏற்படாமல் தடுத்தது.//
அணு ஆயுதக் கண்டுபிடிப்பின் தற்செயலால் மார்க்சியம் எதிர்பார்த்த சமூக மாற்றங்களுக்குத் தடை ஏற்பட்டுவிட்டதாகக் கூறுகிற புதிய பாதையினர் இந்த “தற்செயல்” குண்டைத் தூக்கி மார்க்சியத்தின் மீது போடுகின்றனர். பழைய மார்க்சியம் இனிமேல் செல்லாது என்று அறிவிக்கின்றனர். இதற்கு ஆதரவாக மார்க்சின் பெயரையும் இழுக்கின்றனர்.
புதிய பாதையினர்:- // மாமேதை மார்க்ஸ், “வரலாற்று (சமூகத்தின்) வளர்ச்சியின் வேகத்தையும் மந்தத்தையும் நிர்ணயிப்பது சில தற்செயலான நிகழ்ச்சிகளே” என்றார்.🌷5//
மார்க்ஸ் கண்டுபிடித்த சமூகம் பற்றிய வளர்ச்சியின் விதியை தற்செயல் நிகழ்ச்சியாகப் புதிய பாதையினர் சுருக்கிவிடுகின்றனர். மார்க்ஸ் கண்டுபிடித்த சமூகத்தின் உந்துவிசையான விதியை பொருளாதார நிலைமையின் வளர்ச்சியின் தரத்தினால், அவற்றின் உற்பத்தி முறையினாலும் அதனால் நிர்ணயிக்கப்படுகின்ற பரிவர்த்தனை முறையினாலும் நிலைப்படுத்தப்படுகின்றன என்று எங்கெல்ஸ் நமக்கு விளக்குகிறார்.
“வரலாற்றின் உந்து விசையைப் பற்றிய மாபெரும் விதியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் மார்க்ஸ். வரலாற்று ரீதியான அனைத்துப் போராட்டங்களும், அவை அரசியல், மத, தத்துவஞான அல்லது வேறு ஏதாவதொரு சித்தாந்தத் துறைக்குள்ளாக முன்னேறிய போதிலும், உண்மையில் அவை அநேகமாகச் சமூக வர்க்கங்களின் போராட்டங்களின் தெளிவான வெளியீடுகள் மட்டுமே, இந்த வர்க்கங்கள் இருப்பதும் அதன் காரணமாக இவற்றுக்கிடையே ஏற்படுகின்ற மோதல்களும் கூட அவற்றின் பொருளாதார நிலைமையின் வளர்ச்சியின் தரத்தினால், அவற்றின் உற்பத்தி முறையினாலும் அதனால் நிர்ணயிக்கப்படுகின்ற பரிவர்த்தனை முறையினாலும் நிலைப்படுத்தப்படுகின்றன என்பது அந்த விதியாகும். இயற்கை விஞ்ஞானத்தில் சக்தியின் உருமாற்றம் பற்றிய விதிக்கு உள்ள அதே முக்கியத்துவம் வரலாற்றில் இந்த விதிக்கு உண்டு.”
(லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் – எங்கெல்சின் முன்னுரை)
இவ்வாறு மார்க்சியத்தைச் சிதைத்து நீர்த்துப் போக வைக்க முடியும் என்று நினைக்கின்றனர். சமூக மனித விருப்பத்தைச் சார்ந்ததல்ல என்பதை மார்க்சியம் தெளிவாவே சுட்டிக்காட்டியுள்ளது.
2) புதிய பாதையினர் அணுவாயுத பூச்சாண்டி காட்டி பயமுறுத்தித்துகின்றனர். இது போன்ற பல பூச்சாண்டிகளை மார்க்சியம் பார்த்துவிட்டது.
புதிய பாதையினர்:- “அணுவாயுதம் கண்டுபிடிக்கப் பட்டு, ஜப்பானில் போடப்பட்டதும், அதுவரை வர்க்கப் போராட்டத்தின் முக்கியத் தளமாக இருந்த, முன்னிலைப் பெற்றிருந்த அரசியல் போராட்டத்தின் முக்கியத்துவம் குறைந்து, அது பின்னிலைக்குப் போய் விட்டது.”
3) அணுவாயுத பூச்சாண்டியைக் கண்டு புதிய பாதையினர் தான் பயந்துள்ளனர். புரட்சியை மறுதலித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டனர்.
புதிய பாதையினர்:- “..உலகில் எங்கும் அணுவாயுத சக்திகளின் ஆதரவு இல்லாமல் ஆயுதப் போராட்டத்தால் யாரும் யாரையும் வெல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இதனால் பாட்டாளி வர்க்கமும் உலகின் எல்லா இடங்களிலும் ஆயுதப் போராட்டத்தால் ஆளும் வர்க்கங்களை வெல்ல முடியாது என்ற புதிய நிலைமை, மார்க்சீய லெனினிய மூலவர்கள் எதிர்பாராத புதிய நிலமை ஏற்பட்டது.”
4) சோஷலிசப் பொருளாதாரத்திற்கான வளர்ச்சி நிலையைக் கணக்கில் கொள்ளாமல் ஏகாதிபத்தியவாதிகள் மன விருப்பப்படி சோசலிச திட்டமிட்ட பொருளாதாரத்தின் சிறப்பம்சங்களை உள் வாங்கினார்கள் என்று புதிய பாதையினர் கூறுகின்றனர். வரலாற்றியல் பொருள்முதல்வாததை ஏற்றுக் கொண்டவர்களால் இவ்வாறு கூறமுடியுமா? அணுவாயுத பூச்சாண்டியைக் காட்டி வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைக் கைவிட்டவர்களாலேயே இவ்வாறு கூறமுடியும்.
புதிய பாதையினர்:- //ஏகாதிபத்தியங்கள், தங்களது பழைய திட்டமிடாத போட்டி உற்பத்தியை தொடர்ந்தால், மூன்றாம் உலகப் போர் வரும். அணுப்போரும், பேரழிவும் ஏற்படும். அதன் முடிவில் உலகப் புரட்சி நடக்கும். அதனால் உலகம் முழுவதும் ஏகாதிபத்தியங்கள் ஒரேயடியாக வீழும் என்பதைத் தெளிவாக உணர்ந்தார்கள்.
அதனால் தங்களது அக அழிவுக் கூறான, தடையற்ற போட்டிப் பொருளாதார உற்பத்தி முறையைக் கைவிட்டார்கள். சோசலிச திட்டமிட்ட பொருளாதாரத்தின் சிறப்பம்சங்களைப் படிப்படியாக வேறு வழியின்றி உள் வாங்கினார்கள். மார்க்சீய பொருளாதாரத்தையும், மக்கள் நல திட்டங்களையும் உள்வாங்கிய புதிய வகை அமைப்பாக மாறினார்கள்…..//
மார்க்ஸ் குறிப்பிடுவதைப் போல் நினைத்தபடி அதாவது தீர்மானிக்கிறபடி திட்டமிடுவதற்குக் குறிப்பிட்ட பொருளாதார அடித்தளம் அவசியம். ஆனால் அணுவாயுத பூச்சாண்டியைக் காட்டி, ஏகாதிபத்தியவாதிகள் சோசலிச திட்டமிட்ட பொருளாதாரத்தின் சிறப்பம்சங்களை உள்வாங்கிக் கொண்டு செயற்படுத்துவதாக வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைக் கைவிட்ட புதிய பாதையினர் கூறுகின்றனர்.
“பொருளுற்பத்தி நிகழ்முறையின் அடிப்படையிலான சமுதாய வாழ்க்கை நிகழ்முறையானது சுதந்தரமாக ஒன்றுசேர்ந்த மனிதர்கள் நிகழ்த்தும் உற்பத்தியாகக் கருதப்பட்டு, தீர்மானிக்கப்பட்ட திட்டத் துக்கேற்ப அவர்களால் உணர்வுபூர்வமாக இயக்கப்படும் நிலை வரும் வரை தன் மாயத் திரையை நீக்கி விடுவதில்லை . ஆயினும் சமுதாயம் இந்நிலையை அடைய குறிப்பிட்ட பொருளாயத அடித்தளம் அல்லது வாழ்க்கை நிலைமைகளின் தொகுப்பு தேவைப் படுகிறது. இவையோ ஒரு நீண்ட, வேதனை வாய்ந்த வளர்ச்சி நிகழ்முறையின் தன்னியல்பான விளைவாகும்.”
(மூலதனம் தொகுதி 1 பக்116)
மார்க்ஸ் குறிப்படுகிற மாதிரி நீண்ட காலம் தேவையில் அணுவாயுத பூச்சாண்டியைக் காட்டி ஏகாதிபத்திய வாதிகள், இன்றே செய்து காட்டுவர். என்பதே புதிய பாதையினரின் கருத்து. அடிப்படை மார்க்சியம் புரியாத பிதற்றல்களை இன்றைய மார்க்சியம் என்று புதிய பாதையினர் கூறிவருகின்றனர்.
5) கீழே கொடுக்கப்பட்ட புதிய பாதையினரின் கருத்து அப்பட்டமான ஏகாதிபத்திய அடிவருடிகளின் கருத்தேயாகும். இதனை எந்த மார்க்சியர்களும் மார்க்சியமாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அது மட்டுமல்ல ஏகாதிபத்தியதிய அறிஞர்கள்கூட இதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மார்க்சிய போர்வை அணிந்த இந்தப் புதிய பாதையினரால் தான் இவ்வாறு கூறமுடியும்.
புதிய பாதையினர்:- “ஏகாதிபத்தியங்களால், சோசலிசப் பொருளாதாரத்தின் திட்டமிட்ட பொருளாதாரத்தை உள்வாங்கி, முதலாளிகளால் சந்தையைச் சமாதானமாகப் பகிர்ந்து கொண்டு உற்பத்தியில் ஈடுபட முடியாது, முதலாளிகள் ஆவதற்கும், இலாபமீட்டுவதற்காகப் போட்டிப் போட்டு உற்பத்திச் செய்வதையும் எல்லா முதலாளித்துவ நாடுகளின் அரசுகளும் சேர்ந்து கட்டுப் படுத்தவோ, தடுக்கவோ முடியாது என்பதே, அணுக்குண்டு கண்டு பிடிப்பதற்கு முந்தைய அரசியல் நிலமை.
அதனால்தான் மார்க்சீய மூலவர்கள், முதலாளிகளால் சந்தையைச் சமாதானமாகப் பகிர்ந்து கொண்டு, திட்டமிட்ட உற்பத்தியில் ஈடுபட்டு, யுத்தம் செய்யாமல் வாழவும், ஆளவும் முடியாது என்று கருதினார்கள். மார்க்சீய மூலவர்கள் எதிர்பாராத அணுக்குண்டு கண்டு பிடிப்பாலேயே, ஏகாதிபத்தியங்களால், சமாதானம் செய்து கொண்டு, திட்டமிட்ட உற்பத்தியில் ஈடுபட்டு, நீடித்து வாழவும், ஆளவும் முடிகிறது.
திட்டமிட்ட பொருளாதார உற்பத்தியில் பாட்டாளி வர்க்க அரசுகளால் மட்டுமே ஈடுபட முடியும் என்ற மார்க்சீய மூலவர்களின் கருத்தும், கணிப்பும், பழைய அரசியல் நிலமைகளின் படி சரியானதது தான். ஆனால், யுத்தங்களைத் தவிர்த்தாக வேண்டிய புதிய அரசியல் நிலமையில், ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ அரசுகளால் திட்டமிட்ட பொருளாதார உற்பத்தி முறையில் ஈடுபட முடியும். 🐙11
..
இந்தத் திட்டமிட்ட போட்டி உற்பத்தி முறையானது, பாட்டாளி வர்க்கத்தின் திட்டமிட்ட, போட்டியற்ற சோசலிச உற்பத்தி முறையை விட மேம்பட்ட உற்பத்தி முறையாகும்.”
6) ஆதாரமற்ற இந்தப் பிதற்றல்களுக்கு எல்லாம் பதிலளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். மார்க்ஸ் காலத்தில் பார்த்த வணிக நெருக்கடியும் 1915 & 1934 வாக்கில் ஏற்பட்ட முதல் & இரண்டாம் பெரும் பொருளாதார நெருக்கடியும் ஒன்றல்ல, ஆனால் மார்க்ஸ் குறிப்பிட்டப்படியே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் பிறகும் 2008 வாக்கில் மேலைநாடுகளில் பொருளாதா நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2008ல் தான் மார்க்ஸ் எழுதிய பொருளாதார நெருக்கடியைப் பற்றி விரிவாகப் பேசுகிற மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூல் பெரும் அளவு விற்கப்பட்டது. தற்போது நடைபெறுகிற நெருக்கடிகள் மார்க்ஸ் சந்தித்த வணக நெருக்கடியைப் போல் இல்லை என்பது உண்மை தான், மார்க்ஸ் கூறுகிற காரணத்தின் படியே பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுகிறது.
தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள வாகனத் துறை நெருக்கடியும் மிகைவுற்பத்திக் காணரமாக விற்பனை இல்லாது தேங்கிக் கிடக்கிறது. திட்டமிட்ட பொருளாதாரம் என்பது முதலாளித்துவ ஏகாதிபத்திய காலகட்டத்தல் சாத்தியமில்லை என்பதற்கு இவைகளே சாட்சிகள்.
புதிய பாதையினர்:- “…மார்க்சீய திட்டமிட்ட பொருளாதாரத்தை உள்வாங்கிய ஏகாதிபத்தியங்கள், சமூகத்தின் முக்கியத் தேவைகளையும், முக்கியப் பிரிவினர்களின் தேவைகளையும் சரியாகக் கணக்கில் எடுத்து, அதனை எப்படி, யார் யார் மூலம் எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு, அந்த உற்பத்தியை ஒரே முதலாளியிடமோ, ஒரே முதலாளிய கார்பரேட்டிடமோ விடாமல், முதலாளிகளின் அழுத்தங்களுக்கு ஏற்ப பல முதலாளிகளிடம் பிரித்துக் கொடுத்து, முதலாளிகளிடையே திட்டமிட்ட போட்டியை ஏற்படுத்துகிறார்கள். 🌻12
இந்தத் திட்டமிட்ட போட்டி, எல்லைக்கு உட்பட்ட போட்டி உற்பத்தி முறையில், உற்பத்தி திறன் வேகமாக அதிகரிக்கிறது. உற்பத்தி கருவிகளும், தொழில் நுட்பமும் விரைவாக முன்னேறுகிறது, மக்களின் வித விதமான தேவைகளுக்கும், ரசனைகளுக்கும் ஏற்ப, வித விதமான பொருட்கள் விரைவாக உற்பத்தியாகிறது, உற்பத்தியான பொருட்கள், வணிக முதலாளிகளால் விரைவாகச் சந்தைப் படுத்தப் படுகிறது.
இதனால் மிகை உற்பத்தியும், ஆலைகள் மூடலும் பெருமளவுக்குத் தவிர்க்கப் படுகிறது.”
7) புதிய பாதையினரின் அடிப்படைக் குறிக்கோள் இதுதான். ஏகாதிபத்தியம் படிப்படியாகத் தளர்ந்து அழிந்துவிடும். புரட்சிகர மார்க்சிய வாதிகள் புரட்சிக்கான புறநிலைமைகளைக் கண்ட போதும் அதற்கான அகநிலையைத் தயாரிக்காமல் சோம்பிக்கிடக்க வேண்டும்.
வர்க்கப் போராட்டத்தைப் புதிய பாதையினரின் விருப்படி தடை போட முடியாது. ஏன் என்றால் வர்க்கப் போராட்டம் யாருடைய மனதை சார்ந்து எடுக்கப்படும் முடிவல்ல, முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் உள்முரண்பாட்டின் வெளிப்பாடு என்கிறது மார்க்சியம்.
புதிய பாதையினர்:- “மார்க்சீய லெனினிய அடிப்படையில், பழைய ஏகாதிபத்தியங்கள், மார்க்சீயத்தை மேற்கண்டவாறு உள்வாங்கி, புதிய ஏகாதிபத்தியமாக மாறி, ஒரேயடியாக அழியாமல், படிப்படியாகத் தளர்ந்து, அழிந்து வருகிறது என்கிறது.”
புதிய பாதையினர் வரலாற்றியல் பொருள்முதல்வாததைப் புறக்கணித்ததால் வர்க்கப் போராட்டத்தைப் புறக்கணிக்கின்றனர். வரலாற்றியல் பொருள்முதல்வாதப் பார்வை கைவிட்டதால் எந்தவித பொருளாதாரக் காரணங்களும் இல்லாமல் மனவிருப்படி ஏகாதிபத்தியவாதிகள் மார்க்சீய திட்டமிட்ட பொருளாதாரத்தை உள்வாங்கிக் கொண்டதாகக் கூற முடிகிறது.
புதிய கண்டுபிடிப்பான வரலாறு பற்றிய பொருள்முதல்வாதத்தைக் கைவிட்டு “சிந்தனையே வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது” என்கிற மார்க்சுக்கு முன்பான வரலாறு பற்றிய பழைய கருத்துமுதல்வாத கண்ணோட்டத்திற்குப் புதிய பாதையின் சென்றுவிட்டனர். இவர்கள் புதிய பாதையினர் கிடையாது மிகமிகப் பழைய பாதையினர்.
“கடந்த வரலாறு அனைத்தும் புதிதாய்ப் பரிசீலனை செய்யப்படுவதை இந்தப் புதிய உண்மைகள் அவசியமாக்கின. இதன்பின் கடந்த வரலாறு அனைத்துமே (அதன் முதிர்ச்சியற்ற புராதன கட்டங்களைத் தவிர்த்து) வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்பது புலனாயிற்று; போரிடும் இந்தச் சமூக வர்க்கங்கள் எப்பொழுதுமே பொருளுற்பத்தி பரிவர்த்தனை முறைகளின் விளைவாய் உருவாகின்றவை – சுருங்கக் கூறுமிடத்து அவற்றின் காலத்திய பொருளாதார நிலைமைகளின் விளைவாய் உருவாகின்றவை- என்பது புலனாயிற்று. சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்புதான் மெய்யான அடித்தளமாய் எப்பொழுதும் அமைகிறது. இதிலிருந்து தொடங்கினால் தான் வரலாற்றின் அந்தந்தக் காலக் கூறுக்குமுரிய நீதிநெறி அரசியல் நிறுவனங்களும் மற்றும் சமயக் கருத்துக்களும் தத்துவவியல் கருத்துக்களும் பிற கருத்துக்களுமாகிய மேற்கட்டுமானம் அனைத்திற்கும் நாம் முடிவான விளக்கம் காண முடியும். ……… முடிவில் இப்பொழுது கருத்துமுதல்வாதம் அதன் கடைசிப் புகலிடமாய் அமைந்திருந்த வரலாற்றின் தத்துவவியலிலிருந்தும் விரட்டப்பட்டது. இப்பொழுது வரலாற்றுக்குப் பொருள்முதல்வாத விளக்கம் முன் வைக்கப்பட்டது. இது காறும் செய்யப் பட்டது போல மனிதனது உணர்வைக் கொண்டு அவனுடைய வாழ்நிலைக்கு விளக்கம் கூறுவதற்குப்பதில் மனிதனது வாழ்நிலையைக் கொண்டு அவனுடைய உணர்வுக்கு விளக்கம் கூறுவதற்கு ஒரு வழி கண்டறியப்பட்டது.”
(எங்கெல்ஸ்-டூரிங்கக்கு மறுப்பு 48-49)
(டார்வினை முன்வைத்து- புதிய பாதையினர் கூறுவதை அடுத்துப் பார்ப்போம்)