பாராளுமன்ற பாதையில் திருத்தல்வாதிகளின் செயல்கள்
பாராளுமன்ற பாதையில் திருத்தல்வாதிகளின் செயல்கள்

பாராளுமன்ற பாதையில் திருத்தல்வாதிகளின் செயல்கள்

டீக்கடை பெஞ்சில் உட்கார உரிமை கோரிப் போராடிய சீனிவாசராவ், தனுஷ்கோடி எங்கே? பிரதமர் நாற்காலியில் குந்த கட்சியிடம் உரிமை கோரி ‘போர்க் கொடி’ தூக்கிய ஜோதிபாசு எங்கே?

“சாதி ஒடுக்குமுறைக்கெதிராக என்ன செய்தார்கள் கம்யூனிஸ்டுகள்?” என்ற அவதூறுக்குத் தன் ரத்தத்தால் பதில் சொல்லியிருக்கிறது கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கம். பண்ணையடிமைத்தனத்திற்கெதிரான போராட்டத்தில் சீனிவாசராவையும், இரணியனையும் தனுஷ்கோடியையும் இன்னும் ஆயிரக்கணக்கானோரையும் செங்கொடி தந்தது. நீலக்கொடி தராதது ஏன்?
கண்ணெதிரே நடந்த பண்ணையடிமைத்தனத்திற்கெதிரான போராட்டத்தில் களத்திலிறங்காமல், அரசு சன்மானங்களைப் பெறவும், அதிகாரத்தைப் பங்கு போடவும் பக்கவாட்டில் ஒதுங்கிக் கொண்டவர்களின் அரசியல் பிழைப்புவாதத்தை அறிந்து கொள்ள அன்றைய சமகால வரலாற்றைப் புரட்டிப் பார்க்கக் கோருகிறது

திருத்தல்வாத சிபிஅய் சிபிஎம் இன்று கோர மாட்டார்கள்; கிளற மாட்டார்கள். அன்றைய விவசாயிகள் இயக்கம் அவர்களது தொண்டையில் முள்ளாய் சிக்கியிருக்கிறது. அந்த இறந்த காலத்தைத் தட்டியெழுப்பினால் அது இவர்களது நிகழ்காலத்தைக் கொன்று விடக்கூடிய ஆபத்து இருக்கிறது. இவையோ முந்திய வரலாறு என்றால், இப்போது ஆட்சி கட்டிலில் அமர்ந்து கொண்டு என்ன செய்து கொண்டுள்ளனர்?.
மே.வங்கத்தில் நடந்தது என்ன? சில நிகழ்வுகளை பார்ப்போம்; ஒவ்வொரு முறையும் சட்டமன்ற – நாடாளுமன்ற – உள்ளாட்சித் தேர்தல்களில், ஏழைகளின் நண்பனாகக் காட்டிக் கொள்ளும்

இடதுசாரிக் கூட்டணி(திருத்தல்வாதிகள் எப்படி இடதுசாரியாக இருக்க முடியும்) கட்சிகளுக்கே அவர்கள் வாக்களித்தார்கள். வாக்குறுதிகள் வீசப்பட்டனவே தவிர, அவை லால்கார் வட்டார மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. வறுமை ஒழிப்புக்காகவும், வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதி அவர்களைச் சென்றடையவும் இல்லை.
புரட்சி பேசும் போலிகள் திருத்தல்வாதிகள், ஆளும் வர்க்கங்களின், மேட்டுக்குடி கும்பல்களின், அவர்களின் ஊதுகுழல்களான ‘தேசிய’ பத்திரிகைகளின் வாதம். பழங்குடியின மக்களைப் போலீசார் இழுத்துச் சென்று வதைத்தாலும், பொய் வழக்குப் போட்டுச் சிறையிலடைத்தாலும் அவை வன்முறையோ, பயங்கரவாதமோ அல்ல. சி.பி.எம். குண்டர்கள் மற்றும் போலீசின் அடக்குமுறையின் கீழ் அவர்கள் இருத்தி வைக்கப்பட்டாலும், அது வன்முறை அல்ல; புதிய விசயமும் அல்ல.
வறுமையையும் அடக்குமுறையையும் சகித்துக் கொண்டு அமைதியாக இருந்த பழங்குடியின மக்கள் மெதுவாக விழித்தெழுந்து போராடத் தொடங்கினால், அது சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைக்கும் வன்முறை! பழங்குடியினக் கிராமங்களைச் சுற்றி வளைத்துச் சூறையாடி விடிய விடிய வதைத்த போலீசாரின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடி, போலீசாரை அப்பகுதியிலிருந்து விரட்டியடித்தால், அது பயங்கரவாதம்!

அவர்கள் போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டியை நிறுவினார்கள். அந்தக் கமிட்டி கிராமங்களில் மருத்துவ – சுகாதார வசதியும், பள்ளிகள் – சாலைகள் – பாலங்கள் உள்ளிட்டு மின்சார வசதியும் ஏற்படுத்தித் தரக் கோரி போராடியவர்களை அடக்குமுறையில் ஈடுபட்ட போலீசார் மக்கள் முன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்; அதுவரை போலீசாரையோ அரசு அதிகாரிகளையோ இப்பகுதியினுள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்ற கோரிக்கையுடன் மக்களைத் திரட்டிப் போராடினர்.
இவையெல்லாம் சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைக்கும் அராஜக – வன்முறைகள் என்று சாடுகிறது. மே.வங்க இடதுசாரி அரசு. ஆனால், இந்த அராஜக – வன்முறையாளர்கள், மக்களின் சுயவிருப்ப உழைப்பின் மூலம் 20 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைத்துள்ளார்கள். ‘இடதுசாரி’ அரசின் பஞ்சாயத்து நிர்வாகம் சாலையே போடாமல், ஒரு கி.மீ. சாலை அமைக்க ரூ. 15,000 வீதம் செலவிட்டதாகக் கணக்கு காட்டி ஏய்க்கும் நிலையில், 20 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க மொத்தம் ரூ. 47,000 செலவாகியுள்ளதாக அவர்கள் கணக்குகளை எழுதி மக்களின் பார்வைக்கு வைத்துள்ளார்கள்.
இது மட்டுமின்றி, தூர்ந்து போன குடிநீர்க் கிணறுகளைச் சீரமைத்தும் புதிய கிணறுகளைத் தோண்டியும், பள்ளிக்கூடங்களை நிறுவியுமுள்ளார்கள். நிதியில்லை என்று இடதுசாரி அரசு புறக்கணித்து இழுத்து மூடிவிட்ட கண்டபாஹரி கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தை அவர்கள் சீரமைத்து உள்ளூர் மருத்துவர்களைக் கொண்டு மக்களுக்குச் சிகிச்சையளிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, காடுகளை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலங்களை, நிலமற்ற பழங்குடியினருக்கு விநியோகிக்கச் சட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படாத நிலையில், கண்டபாஹரி, பன்ஷ்பேரி கிராமங்களை அடுத்துள்ள புறம்போக்கு நிலங்களை, நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளார்கள். இந்நடவடிக்கைகளுக்காக அவர்கள் இடதுசாரி அரசின் உதவியை எதிர்பார்த்து நிற்கவில்லை. எதிர்பார்த்தாலும், அது கிடைக்கப் போவதுமில்லை.
போலீசு பயங்கரவாத அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய லால்கார் பழங்குடியின மக்கள், லால்கார் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரை விரட்டியடித்து, போலீசு நிலையத்தை இழுத்து மூடினர். லால்கார் காடுகளை அழித்து 5000 ஏக்கர் பரப்பளவில் ஜிண்டால் எனும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனம் தொடங்கவுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டத்தை முற்றாக ரத்து செய்யவும், அடக்குமுறையை ஏவிய போலீசார் பகிரங்க மன்னிப்பு கேட்கவும் கோரி இம்மக்கள் தொடர்ந்து போராடி வந்ததால், இப்பகுதிக்குள் போலீசாரோ, அரசு அதிகாரிகளோ நுழைய முடியவில்லை. அதன்பிறகு நாடாளுமன்றத் தேர்தலின்போது, வாக்குப் பதிவைக் கண்காணித்து முறைப்படுத்துவது என்ற பெயரில் போலீசு முகாமிட முயற்சித்தது. போலீசுடன் கூட்டுச் சேர்ந்து சி.பி.எம். குண்டர்கள் இப்பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அதிகாரவர்க்க – போலீசு ஆட்சியை நிறுவ எத்தணித்தனர். அந்த முயற்சியையும் லால்கார் மக்கள் தமது போராட்டங்களால் முறியடித்தனர்.
தேர்தல் முடிந்த பிறகு, மீண்டும் தமது அதிகாரத்தை நிலைநாட்ட போலீசும் – அதிகார வர்க்கமும் கிளம்பின. அதனுடன் கூட்டுச் சேர்ந்து சி.பி.எம். குண்டர்கள் ஆள்காட்டிகளாகவும் அடியாட்களாகவும் செயல்பட்டனர். இவர்களின் கூட்டுச் சதிகள் – சூழ்ச்சிகள் – தாக்குதல்களை முறியடித்த லால்கார் பழங்குடியின மக்கள், 2008 ஜூன் 15-ஆம் தேதியன்று சி.பி.எம். குண்டர்படைத் தலைவர்களது வீடுகளையும் உள்ளூர் சி.பி.எம் கட்சி அலுவலகங்களையும் தாக்கித் தீயிட்டுக் கொளுத்தினர்.
இதற்கு முன்னதாக, நந்திகிராமம் – கேஜூரி பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசு வெற்றி பெற்றதும், ஹேதியா நகரிலுள்ள சி.பி.எம். வட்டாரக் கமிட்டி அலுவலகம் ஜூன் 9-ஆம் தேதியன்று திரிணாமுல் காங்கிரசு கட்சியினரால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அரசு அதிகாரத்தைக் கொண்டும் குண்டர் படைகளைக் கொண்டும் தேர்தலின் போது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்ட சி.பி.எம். உள்ளூர் தலைவர்களது வீடுகளும் கட்சி அலுவலகங்களும் நந்திகிராமம் பகுதியில் அடுத்தடுத்து திரிணாமுல் காங்கிரசு கட்சியினரால் தாக்கப்பட்டுத் தீயிடப்பட்டன.
இவற்றை அரசியல் வன்முறை என்று சாடும் சி.பி.எம் கட்சி, லால்கார் மக்கள் போராட்டத்தை மட்டும் பயங்கரவாத வெறியாட்டம் என்று குற்றம் சாட்டுகிறது. லால்கார் மக்கள் சி.பி.எம். அலுவலகங்களையும் குண்டர்படைத் தலைவர்களது வீடுகளையும் மட்டும் தாக்கித் தீயிடவில்லை. அவர்கள் போலீசாரையும் அதிகார வர்க்கத்தையும் அடித்து விரட்டி விட்டு, அரசு அடக்குமுறையிலிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்துக் கொண்டு, தமது சொந்த ஆட்சியை நடத்துகிறார்கள். அதுதான் பயங்கரவாதம் என்கிறது ‘இடதுசாரி’ அரசு. சட்டத்தின் ஆட்சிக்கு எதிராக, அதிகார வர்க்க – போலீசு ஆட்சிக்கு எதிராக தமது சொந்த ஆட்சியை நிறுவக் கிளம்பிவிட்டார்களே, அதுதான் பயங்கரவாதம் என்கிறது சி.பி.எம். அரசு.-( நன்றி வினவு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *