பாரதியை அடுத்த நூற்றாண்டுக்கு

பாரதியை அடுத்த நூற்றாண்டுக்கு எடுத்துச் செல்லும் பணிரவிக்குமார்(புதுவை பாரதி அன்பர்கள் ஏற்பாடு செய்திருந்த பாரதி பிறந்தநாள்விழாவில் ( 11.12.2014) பேசியதன் சுருக்கம்)பாரதி இன்று பலருக்கும் தன் சொற்களை வழங்கிக்கொண்டிருக்கிறார். ஊடக நிகழ்ச்சிகளின் தலைப்புகளாக, முழக்கங்களாக,இலச்சினை வாசகங்களாக அவரது சொற்கள் எங்கும் விரவிக் கிடக்கின்றன. கவிதைகளை எழுதியும், மொழிபெயர்த்தும் வருகிற என்னுடைய ஆதர்சங்களில் பாரதியும் ஒருவர். அடுத்து வெளியாக இருக்கும் எனது நூல் ஒன்றின் தலைப்புகூட அவரிடமிருந்து எடுத்ததுதான் ‘ நடுக் கடல் தனிக் கப்பல்’இன்று பாரதி பிறந்த நாளுக்காக பிரதமர் நரேந்திர மோடியின் பெயரால் ஒரு ட்விட்டர் செய்தி வெளியாகியிருப்பதாக அறிந்தேன். மகிழ்ச்சியளிக்கும் செய்திதான், ஆனால் அதில் பாரதியை ஒரு ‘தமிழ் இந்து ஆக்டிவிஸ்ட்’ எனக் குறிப்பிட்டிருப்பதை அறிந்தபோது வருத்தமாக இருந்தது.பாரதியைக் கொண்டாடுகிறவர்கள் இருப்பதைப்போலவே அவரை விமர்சிக்கிறவர்களும் இருக்கிறார்கள். அக்ண்ட பாரதத்தைக் கனவு கண்டவர் என்று அவரைக் குற்றம் சாட்டுகிறார்கள். இப்போது அல்ல பாரதி முனைப்போடு இயங்கிய காலத்திலேயே அத்தகைய விமர்சனங்கள் அயோத்திதாசப் பண்டிதரால் வைக்கப்பட்டன. 1907 ஆம் ஆண்டு சுதேசியத்தை விமர்சித்து அயோத்திதாசர் விரிவாகத் தமிழன் இதழில் எழுதினார். அதில் பாரதியையும், வஉசியையும் கடுமையாக அவர் விமர்சித்திருக்கிறார்.‘ஈனப் பறையரேனும்’ என்ற பாரதியின் பாடல் வரியை எடுத்துக் காட்டி அதைக் கேட்கிற யாராவது “ ஈனப் பார்ப்பார்களேனும்” என மறுத்துக் கூறினால் ஒர்றுமை நிலைக்குமா ? என அயோத்திதாசர் விமர்சித்திருக்கிறார். “ சாதி கர்வம், மத கர்வம், வித்தியா கர்வம், தன கர்வம் நான்கையும் கை பிடித்துக்கொண்டு பொதுச் சீர்திருத்தம் செய்யப்போகின்றோம் என்றால் சிறப்பாக இருக்குமா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.வந்தே மாதரம் என்ற அந்தப் பாடலில் “ஈனம் “ என்ற சொல்லை அடுத்த வரியில் வரும் ”சீனம்” என்ற சொல்லுக்கு மோனையாக அமைத்திருப்பார் என்றே நான் கருதுகிறேன். இழிவுபடுத்தும் நோக்கில் அவர் பாடியிருந்தால் அவரது பல்வேறு பாடல்களில் சாதியை மறுத்து அவர் பாடியிருக்க மாட்டார். “ நீதி நெறியினின்று பிறர்க்குதவும் நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்” எனப் பாடியிருக்கமாட்டார்.;எந்தவொரு போராட்டமும் தமர் பிறர் என அடையாளங்களை உருவாக்கிக்கொள்ளும். காலனிய எதிர்ப்புப் போராட்டம் ஆங்கிலேயரைப் பிறராகக் (Other ) கட்டியமைத்து இந்தியர்கள் எல்லோரையும் திரட்ட முயன்றது. அது புதிய விஷயமல்ல, சேக்கிழார் காலத்திலேயே நடந்த ஒன்றுதான். புற சமயங்கள் எனச் சொல்லப்பட்டவற்றுக்கு எதிராக சைவ மத ஆதரவாளர்களாக சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் திரட்டியதன் அடையாளம்தான் பெரியபுராணம். பாரதியும் அப்படித்தான் செய்தார். ஆனால் ஒரு அரசியல்வாதி அதைச் செய்வதற்கும் படைப்பாளி செய்வதற்கும் வேறுபாடு உண்டு. பாரதி சொன்னாரே உண்மை ஒளி அதுதான் அந்த வேறுபாடு. தான் சொன்னதை பாரதி நம்பினார், அதையே வாழ்க்கையாக வாழ்ந்தார். இன்று சில எழுத்தாளர்களைப் பார்க்கிறோம். ஞானபீடப் பரிசை வாங்குவதற்காக அவர்கள் செய்யும் அரசியல் தந்திரங்களைப் பார்க்கிறோம். அவர்களது எழுத்துகள் மையால் எழுதப்படவில்லையென்றாலும் ஆவியாகப் போய்விடுவதையும் பார்க்கிறோம்.இன்று காலையில் எழுத்தாளர் மாலன் அவர்கள் முகநூலில் ஒரு செய்தியைப் பகிர்ந்திருந்தார். ஊடகத் துறையில் இருந்ததால்தான் பாரதிக்கு அந்த அளவுக்குக் கவனம் கிடைத்தது என்று அதில் குறிப்பிட்டிருந்தார். “ பாரதி பத்திரிகைத் தொழிலுக்கு வராமல் போயிருந்தால் அவர் அவரது சமகாலத்தவர்களான இன்னொரு சோமசுந்தர பாரதியாக, அரசஞ் சண்முகனாராக, உ.வே.சா வாக முடிந்து போயிருக்கலாம்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதுவொரு முக்கியமான கருத்து. இன்று தம்மைத் தாமே மாபெரும் படைப்பாளிகள் என அறிவித்துக்கொள்கிறவர்கள் ஊடகங்கள் மூலம் தனது உருவைப் பெருக்கிக் காட்டிக்கொள்கிறார்கள். அப்படி பாரதி செய்யவில்லை என்றாலும் தனது பாடல்களை, கருத்துகளை உடனுக்குடன் மக்களிடம் கொண்டுசெல்ல ஊடகம் இருந்திராவிட்டால் அவரது இறப்புக்குப் பிறகு அவருடைய படைப்புகளைத் திரட்டியிருக்கக்கூட முடியாது என்பது உண்மைதான்.நான் பாரதியின் இரண்டு கருத்துகளை மட்டும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “ எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை” என்று பாரதி ஒரு பாடலிலே பாடியிருப்பார். இந்த சமத்துவ உணர்வை அவரது கவிதைகள் நெடுகிலும் காணமுடியும். இந்திய சமூகத்துக்கு சமத்துவம் என்ற கருத்தாக்கம் புதியது. இங்கே எப்போதும் சமத்துவம் இருந்ததாகத் தெரியவில்லை. சங்க இலக்கியங்களும்கூட சமத்துவம் கொண்ட சமூகத்தை நமக்கு அடையாளம் காட்டவில்லை. சமத்துவம் என்ற நவீன சிந்தனை இந்தியாவுக்கு வெளியிலிருந்துதான் இங்கே வந்தது. அன்னியரை எதிர்த்தாலும் அன்னிய கருத்தாக்கமான நவீனத்துவத்தை பாரதி ஏர்றுக்கொண்டிருந்தார். அதனால்தான் அவரால் சமத்துவத்தை வலியுறுத்த முடிந்தது.நவீன சிந்தனையை உள்வாங்கிக்கொண்டதால்தான் அம்பேத்கர் அதைப் பயன்படுத்தினார். இந்தியா குடியரசானபோது அரசியலமைப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்திப் பேசிய அம்பேத்கர் நமது அரசியலமைப்புச் சட்டம் அரசியல் சமத்துவத்தை உத்தரவாதப்படுத்தியிருக்கிறது என்றார். ‘ ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கு, எல்லா வாக்குக்கும் ஒரே மதிப்பு ” என்பதைத்தான் அரசியல் சமத்துவத்தின் அடிப்படையாக அம்பேத்கர் குறிப்பிட்டார். பாரதி பல ஆண்டுகளுக்கு முன்பே பாடிய ’எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை’ என்பதுதான் அம்பேத்கர் குறிப்பிட்ட அரசியல் சமத்துவம். பாரதியின் அந்த வார்த்தைகள் வெறும் பாடல் வரி அல்ல, அதுவொரு மகத்தான கனவு. அதனால்தான் அது ஈடேறியது. அத்தகைய மகத்தான கனவுகளைக் கண்டதனால்தான் 19 ஆம் நூர்றாண்டில் பிறந்து இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே இறந்துபோன பாரதியை 21 ஆம் நூற்றாண்டிலும் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.பாரதியின் வரிகளைப் பல்வேறு நோக்கங்களுக்காகப் பலரும் பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம். அவற்றில் ஒன்று பிராமணர்களை விமர்சிக்க பாரதியின் வரிகளைப் பயன்படுத்துவது. “ பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே” என்ற வரியையும் “ பேராசைக் காரனடா பார்ப்பான்-ஆனால் பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான் “ என்பது போன்ற வரிகளையும் எடுத்துக்காட்டி பிராமணர்களை விமர்சிப்பார்கள். தான் பிறந்த சாதியை விமர்சிக்கும் அறிவுநேர்மை பாரதிக்கு இருந்தது. அது அவரை விமர்சிப்பவர்களுக்கு இருக்கிறதா எனப் பார்க்கவேண்டும். தான் பிறந்த சாதியை விமர்சிக்கும் துணிவுகொண்ட எழுத்தாளர்கள் இப்போது இருக்கிறார்களா என எண்ணிப் பார்க்கவேண்டும்.எந்தவொரு நல்ல படைப்பாளிக்கும் வழிகாட்டி இருக்கமாட்டார், வாரிசும் இருக்க முடியாது. பாரதி அப்படியானதொரு நல்ல படைப்பாளி. அவருக்கு கவி வாரிசு எவரும் இல்லை. பாரதியின் அடிமை என்ற பொருள்பட புனைபெயர் வைத்துக்கொண்ட பாரதிதாசன் கூட பாரதியின் கவி வாரிசாகத் தன்னைக் கூறிக்கொள்ளவில்லை. அவர் இறப்புக்கு ஒருசிலர்தான் வந்திருந்தார்கள் எனக் குறைபட்டுக்கொள்வார்கள். அது குறை அல்ல. படைப்பாளி என்பவர் தனிமையில் கிடக்க சபிக்கப்ப்டுகிறார். அண்ணா இறந்தபோது வந்த கூட்டம் போல பாரதிக்கு வந்திருந்தால் அவர் மஹாகவியாகியிருக்க முடியாது.பாரதியை தேசிய கவியாக அறிவிக்கவேண்டும், அவரது நூல்களைத் தேசிய நூல்களாக அறிவிக்கவேண்டும் என பாஜக காரர்கள் இப்போது பேசுகிறார்கள். அது தேவையற்றது. நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்களின் கதி என்னவென்று நமக்குத் தெரியும் அந்த கதி பாரதியின் படைப்புகளுக்கு வரக்கூடாது. நாம் செய்யவேண்டியது பாரதியின் படைப்புகளுக்கு விவரக் குறிப்புகளுடன்கூடிய செம்பதிப்புகளைக் கொண்டுவருவதுதான். பாரதி அன்பர்களாகிய நீங்கள் அதற்கு முன்வரவேண்டும். அவர் புதுவையில் பாடிய குயில் பாட்டையாவது முதலில் அந்த முறையில் நாம் பதிப்பிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளைச் செய்வோம். பாரதியை அடுத்த நூற்றாண்டுக்குக் கொண்டுசேர்க்கும் பணி அதுதான். அதை அரசாங்கமோ அரசியல்வாதிகளோ செய்யமாட்டார்கள் பாரதி அனபர்களே நீங்கள்தான் செய்யவேண்டும். நன்றி. வணக்கம்!Ravi Kumar


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *