ட்ராட்ஸ்கியவாதிகள் குற்றச்சாட்டு கீழ் வருவன.
1).அகிலம் என்ற ஒன்று இல்லாமல் எந்த ஒரு தனி நாட்டிலும் கட்சி கட்ட முடியாது புரட்சி நடத்த முடியாது என்பர் .
2).அகிலத்தை ஸ்டாலின் கலைத்தது தவறு அவர் ஒரு கலைப்புவாதி மாவோ அகிலத்தை கட்டவில்லை அவரும் கலைப்புவாதி என்பர் .
3).ஐநாவில் சேர்ந்தமை முதலாளித்துவ ஏகாதிபத்திய கூட்டு சேர்ந்தார் இவை ஸ்டாலின் மீது வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு .
இனி பதிலாக
பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமை பற்றிய கம்யூனிஸ்டுகள் யாரும் மறுப்பதற்கில்லை இது வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வடிவங்களைக் கையாள வேண்டியிருந்திருக்கிறது.
முதலாம் அகிலமும் பாரிஸ் கம்யூனும்
முதலாம் அகிலத்தின் வாரிசாக பாரிஸ் கம்யூனும் , பாட்டாளி வர்க்க ஆட்சி அதிகாரத்தின் முன் மாதிரி வடிவமான கம்யூனும் இருந்தது .
பாரிஸ் கம்யூனுக்குப்பிறகு அகிலம் சட்டரீதியாக இயங்க முடியாமல் போனதாலும் , போலீஸ் அடக்குமுறையாலும், தலைவர்களுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரத்தினாலும் முதலாம் அகிலம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது .முதல் அகிலம் 12 ஆண்டுகள் செயல்பட்டது .(1864- 1876)
1871ல் பாரிஸ் கம்யூன் புரட்சி வெடித்தது. அவை 72 நாட்கள் மட்டுமே நீடித்தது. முதலாளித்துவ சக்திகளின் கூட்டுசதியால் ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது.
பாரிஸ் கம்யூன் தோல்வியிலிருந்து மார்க்ஸ் எங்கெல்ஸ் படிப்பினைகளை தொகுத்தளித்தனர் .அந்தத் தொகுப்பு உலகப் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு பெரும் சேவை ஆற்றுவது அதன் சுருக்கம் கீழே..
முதலாளித்துவ அரசு எந்திரத்தை தகர்த்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவது அவசியம்.
மையப்படுத்தப்பட்ட ஆட்சியின் அவசியம் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்குப் பின்னும் அப்படியே இருக்கிறது, முதலாளி வர்க்கத்தை அரசியல் ரீதியில் ஒடுக்குவதற்கு அது தேவைப்படுகிறது .
பொருளாதார நடவடிக்கைகளும், உற்பத்தியில் நிகழும் அராஜகத்தை அகற்றுவதற்கும், உற்பத்தியின் சமூக வடிவங்களை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் இசைவோடு ஒரு நிலைப்படுத்தவும் மாற்று கலாச்சார கட்டுமானத்துக்கும் அது அவசியம் .
மாற்றங்கள் அனைத்தும் ஒரே அடியில் நிறைவேறாது. சந்தர்ப்ப சூழ்நிலைகளும், மனிதர்களும் மாறுவதற்கு மாபெரும் சக்திகளும், வெகு காலம் தேவைப்படும் .
தொழிலாளி வர்க்க ஆட்சி வருவதால் வர்க்கப் போராட்டம் அகற்ற படுவதில்லை மாறாக வர்க்கப் போராட்டம் தனது பல்வேறு கட்டங்களின் மூலம் மிகவும் விவேகமான மனிதாபிமானமுள்ள பாதையில் நடைபெறுவதற்கான விவேகமான சூழ்நிலை உருவாக்கப்படுகிறது.
முதலாம் அகிலம் அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டதால் மார்க்சும் எங்கெல்சும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கைவிட்டனர் என்றோ, புரட்சியை காட்டிக் கொடுத்தனர் என்றொ, கலைப்பு வாதிகள் என்றோ, உலகில் யாரும் விமர்சனங்களை முன்வைக்க வில்லை. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் பாட்டாளி வர்க்கமும் அதன் கட்சியும் எப்படி செயல் திட்டங்களை அமைத்து வடிவத்தையும் பின்பற்றுகிறது என்பதை பொறுத்து அந்த இயக்கத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி அமைந்துள்ளது. எனவே அன்றைய சூழ்நிலையில் முதலாம் அகிலம் கலைக்கப்பட்டது சரியானதே. ஏனென்றால் சூழ்நிலை பற்றிய மதிப்பீட்டையும் சக்திகள் பற்றிய மதிப்பீட்டையும் கொண்டு சமூக புரட்சியை முன்கொண்டு சென்றனர் நமது ஆசான்கள் .
இரண்டாம் அகிலமும் சர்வதேச சூழலும்
முதலாம் அதிலும் கலைக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்குப்பின் மாமேதை மார்க்ஸ் எங்கெல்ஸ் மற்றும் உலகப் பாட்டாளி வர்க்க சக்திகளுடன் இணைந்து இரண்டாம் அகிலம் உருவாக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் முதலாளித்துவம் வளர்ந்து கொண்டிருந்தது. மார்க்சியம் எல்லா நாடுகளிலும் பரவி இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இலட்சக்கணக்கான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
அதேநேரம் பல நாடுகளில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் முதலாளித்துவ சட்டத்தைப் பயன்படுத்தி வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தற்கு பதிலாக சட்டத்தை வழிபடும் சட்ட வாதிகளாக சீரழிந்து சந்தர்ப்பத்தில் மூழ்கியிருந்தனர்.
இரண்டாம் அகிலத்தின் காலகட்டம் முழுவதும் சர்வதேச பாட்டாளி வர்க்கம் புரட்சிகர மார்க்சிய வாதிகள் என்றும் சந்தர்ப்பவாதிகள் என்றும் இரண்டு பிரிவுகளாக இருந்தனர். சந்தர்ப்பவாதிகளை எதிர்த்து எங்கெல்ஸ் கடுமையான போராட்டத்தை நடத்தி வந்தார் .
முதலாளித்துவம் அமைதியான முறையில் சோஷலிசம் ஆக மாறும் என்ற கட்டுக் கதையும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற பித்தலாட்டம் இன்னும் பல சந்தர்ப்பவாத போக்குகளும் இரண்டாம் அகிலத்தில் நிலவியது. 1895இல் எங்கெல்ஸ் இறந்தபிறகு அகிலத்தின் தலைமை சந்தர்ப்பவாதிகள் கைகளுக்கு சென்றது.
இச்சூழ்நிலையில் சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான போராட்டத்தை முன்கொண்டு செல்ல மாமேதை லெனின் பொறுப்பானது.
சர்வதேச அளவில் சந்தர்ப்பவாத போக்குகளை எதிர்த்துப் போரிட்ட லெனின், சோவியத் ரஷ்யாவில் பிரிந்து கிடந்த குழுக்களை இணைத்து பலம்வாய்ந்த ஒரு புரட்சிகரமான கட்சியை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
முதலாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்பே லெனின் இரண்டாம் அகில தலைவர்கள் மற்றும் அவர்களின் சந்தர்ப்பவாததிற்க்கு எதிராக கடும் போராட்டத்தை நடத்தினார் .
அன்று ஏகபோக முதலாளி வர்க்கம் தங்களுக்கு கிடைத்த லாபத்தின் ஒரு பகுதியை பயன்படுத்தி தொழிலாளர்கள் மற்றும் அதன் தலைவர்களின் ஒரு பிரிவினரை தன்வசம் ஆக்கிக் கொண்டது. தொழிலாளர் உயர்குடியினர் தொழிற்சங்கவாதிகள் அடங்கிய ஒரு பிரிவு உருவாகிக் கொண்டிருந்தது .
வாழ்க்கை முறையிலும் சம்பளத்தில் உலக கண்ணோட்டத்திலும் என அனைத்திலும் முதலாளிய தன்மை கொண்ட இந்த பிரிவு பாட்டாளி வர்க்கத்தின் குட்டி முதலாளிய துணையுடன் சேர்ந்து, தொழிலாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாத போக்குகளை உருவாக்கினர். இந்த சந்தர்ப்பவாதம் இரண்டாம் அகில கட்சிகளை மேலும் சீரழித்தது .
ஆனாலும் இரண்டாம் அகிலம் முழுவதற்கும் வரப்போகிற யுத்தம் பற்றியும், யுத்தம் வந்தால் பாட்டாளி வர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் 1912 இல் இரண்டாம் அகில காங்கிரஸில் முன்வைக்கப்பட்ட பாசேல் அறிக்கை , உலக யுத்தம் சம்பந்தமாக ஒரு பொது வழியை முன்வைத்தது அதன் சாரம் கீழே …
இந்த யுத்தம் கொள்ளைக்கார தன்மை கொண்டு ஏகாதிபத்தியம்
யுத்தத்தை எதிர்த்து போராட வேண்டும் .
யுத்த எதிர்ப்பு சக்திகள் ஒன்றுபடுத்த வேண்டும் .
யுத்தம் மூண்டால் அதைப் பயன்படுத்தி அந்த நாட்டு ஆளும் கும்பலுக்கு எதிராக உள்நாட்டு யுத்தம் நடத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்.
ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடைபெறும் இந்த யுத்தத்தை பயன்படுத்தி உள்நாட்டு யுத்தத்துக்கு தயாரிப்பு செய்திட வேண்டும் .
ஏகாதிபத்திய யுத்தங்களுக்கு மாற்றாக உள்நாட்டு யுத்தங்கள் என்ற சர்வதேச பொது வழியை முன்வைத்தது .
இடதுசாரி செல்வாக்கினால் இரண்டாம் அகிலம் யுத்தத்திற்கு முன் வரை சரியான தீர்மானங்களை ஏற்றுக்கொண்டது. ஆனால் யுத்தம் வந்தவுடன் அதன் வலதுசாரி தலைவர்களின் நடைமுறை முதலாளித்துவக் கொள்கைக்கு சேவை செய்தது.
முதலாம் உலகப் போர் காலகட்டத்தில் சர்வதேசமும் மற்றும் தொழிலாளி இயக்கம் மூன்றுவித போக்குகள் நிலவின அவையாவன …
சமூக தேசியவெறி போக்கு- சமூக தேசிய வெறியை கொண்டவர்கள் வர்க்கங்களுக்கு இடையே சமாதானமும் கொள்ளைக்கார யுத்ததில் தாய்நாட்டின் தற்காப்பு தான் முக்கியம் என்றனர் .
மையவாதம்-மைய வாதிகளோ சொல்லில் சோசலிசம் ,செயலில் சமூக வெறியர்களாக இருந்தனர் .சந்தர்ப்ப வாதத்தை மார்க்சிய சொற்களால் அலங்கரிக்கும் இவர்களின் போக்கு மிக அபாயகரமாக இருந்தது .
புரட்சிகர போக்கு-புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் பாதையை உயர்த்தி பிடித்து இவர்கள் உண்மையான சோசலிஸ்ட்களாவர்.