நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்
நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் !!!
BY SAVUKKU · 17/03/2020

பிரதமராவதற்கு முன் ஆதாரை எதிர்த்து வந்த மோடி, பிரதமரான பிறகு, ஒரு இந்திய குடிமகனின் அன்றாட வாழ்க்கை ஆதார் இல்லாமல் அமையாது எனும் அளவுக்கு விதிகளை மாற்றினார். வங்கி கணக்கு முதல், அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது வரை அனைத்துக்கும் ஆதார் அடிப்படையானது.

இந்த ஆதாரில் உள்ள விபரங்களின் பாதுகாப்பின்மை, தனி நபர் உரிமை மீறல் ஆகியவை குறித்து சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் உச்சநீதிமன்றம், ஆதார விபரங்களை பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. வங்கிக் கணக்கு, பள்ளி சேர்க்கை போன்ற விவகாரங்களில் ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது. ஆதாரை அனைவருக்கும், அனைத்துக்கும் கட்டாயமாக்கி, இந்தியாவின் அனைத்து குடிமக்களையும் கண்காணிப்பில் கொண்டு வர இருந்த மோடி அரசின் திட்டம், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் பின்னடைவை சந்தித்தது.

இந்த சூழலில்தான், மோடி அரசு, சத்தமின்றி, உச்சநீதிமன்றத்தின் ஆதார் தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் பணிகளில் இறங்கியிருப்பதை ஆதாரங்களோடு, ஹப்பிங்க்டன் போஸ்ட்டின் செய்தியாளர் குமார் சம்பவ் அம்பலப்படுத்துகிறார். ஹப்பிங்டன் போஸ்ட்டோடு இணைந்து, இக்கட்டுரையை தமிழில் வெளியிடுவதில், சவுக்கு மகிழ்ச்சி கொள்கிறது. இனி கட்டுரை.

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் கண்காணிக்கப்பட இருக்கிறது. உங்களின் ஒவ்வொரு நகர்வும் கவனித்து பதிவு செய்யப்படும். 1.2 பில்லியன் இந்தியர்களின் விவரங்களை உள்ளடக்கிய தன்னை தானே புதுப்பித்துக் கொள்ளும் டேட்டா பேஸை, மோடி அரசு உருவாக்கி முடிக்கும் இறுதித் தருவாயில் இருக்கிறது.

இது தொடர்பாக, இது வரை வெளிவராத ஆவணங்களை ஹப்பிங்ட்டன்போஸ்ட் இந்தியா ஆய்வு செய்துள்ளது.

தேசிய சமூகப் பதிவேடு (National Social Registry) என்பது சமூக , சாதிவாரிக் கணக்கெடுப்பின் ஒரு பகுதி என்பதாக வெகுஜன ஊடகங்களால் வர்ணிக்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்களுக்கான சமூக நலத் திட்டங்கள் சரியான நபர்களுக்கு சென்று சேரும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த கணக்கெடுப்புக்கு, மத்திய ஊரக வளர்ச்சித்துறை பொறுப்பேற்றுள்ளதால், இது வழக்கமான ஒரு சாதாரண கணக்கெடுப்பு என்றே இதுவரை அறியப்பட்டது. ஆனால், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலரும், இணையம் மற்றும் புள்ளி விபர ஆராய்ச்சியாளருமான ஶ்ரீனிவாஸ் கோடாலி மற்றும், ஹப்பிங்க்டன் போஸ்ட் செய்தியாளரும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக பெற்ற தகவல்கள், இது ஒரு சாதாரண புள்ளி விபர சேகரிப்பு நடவடிக்கை அல்ல என்பதையே வெளிப்படுத்துகிறது.

தேசிய சமூக பதிவேடு என்ற பெயரில் அறியப்படும் இந்தத் திட்டம், ஆதார் அட்டை விபரங்களின் அடிப்படையில், மதம், சாதி வருமானம், கல்வி, திருமண விபரம், வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளியர் என இந்திய குடிமக்களின் அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

சமூக நலத் திட்டங்கள் உரிய நபர்களை சென்று சேர்வதற்காக இந்த விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்ற கூற்றை ஏற்றுக் கொள்வோம் என்றே வைத்துக் கொள்ளுங்கள். அப்படியெனில், இது வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் விபரங்களை மட்டுமே தான் சேகரிக்க வேண்டும். ஆனால், இது அனைத்து இந்திய குடிமக்களின் விபரங்களையும் சேகரிக்கிறது என்பதுதான் விசித்திரம்.

இதே போல மக்கள் தொகைக்கான புள்ளிவிபரங்கள், இந்திய மக்கள் தொகை சட்டம் 1948ன்படி சேகரிக்கப்படுகின்றன. இந்தச் சட்டத்தின்படி சேகரிக்கப்படும் விபரங்கள் பாதுகாப்பானவையாக இருத்தல் வேண்டும். இந்த விபரங்களை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது. அது சட்டத்துக்கு எதிரானது. ஆனால், தற்போது தேசிய சமூக பதிவேடு என்ற பெயரில் சேகரிக்கப்பட்டு வரும் இந்த விபரங்களுக்கு இதுபோன்ற சட்டப் பாதுகாப்புகள் எதுவும் இல்லை.

இந்திய குடிமக்களை, ஒரு போலீஸ் ஸ்டேட்டின் கீழ் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்பும், மோடியின் ஆலோசகர்களின் கனவு நிறைவேறுமேயானால், ஒரு இந்தியன் எந்த நகரத்துக்கு குடிபெயர்கிறான், எந்த புதிய பணிக்கு செல்கிறான், எங்கே சொத்துக்கள் வாங்குகிறான், ஒருவருடைய குடும்பத்தில் இறப்பு, பிறப்பு விபரங்கள், எப்போது திருமணம் நடக்கிறது, எப்போது குடிபெயர்கிறார்கள் என்ற அனைத்து விபரங்களும் இந்த தேசிய சமூக பதிவேட்டில் இடம் பெறும்.

நவீன கணினி யுகத்தில் சேகரிக்கப்படும் இதுபோன்ற புள்ளிவிபரங்களை எந்த அரசு ஏஜென்சியாலும், ஒரு நொடியில் எடுக்க முடியும். 4 அக்டோபர் 2019ல் நடந்த நிதி ஆயோக் கூட்டம் ஒன்றில், அதன் சிறப்பு செயலர் ஒருவர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உருவாக்கி வரும், புவன் என்ற மென்பொருளோடு இணைத்து இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கலாம் என்ற ஆலோசனையை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகையதொரு டேட்டாபேஸை உருவாக்க பல கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. அலுவலக கோப்பு குறிப்புகள், கூட்டங்களின் குறிப்புகள், பல்வேறு துறைகளுக்கிடையே நடந்த கடிதப் போக்குவரத்துகள் ஆகியவற்றை ஹப்பிங்டன் போஸ்ட் பரிசீலித்தது. இவற்றை பரிசீலித்ததன் மூலம், அரசு இந்த டேட்டாபேஸை உருவாக்க பகீரத முயற்சிகள் எடுத்து வருவது தெளிவாகிறது.

2021ம் ஆண்டுக்குள், இந்த தேசிய சமூக பதிவேட்டை உருவாக்கி முடிக்க ஒரு சிறப்பு நிபுணர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு இத்திட்டத்தை நிறைவேற்றி முடிக்கும் தருவாயில் இருக்கிறது.

தற்போது உள்ள ஆதார் சட்டத்தின்படி, ஆதார் அட்டைக்காக சேகரிக்கப்படும் விபரங்களை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது. ஆதார் குறித்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஆதாரை குறிப்பிட்ட சில திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தலாம், அதிலும் தனிநபர் சுதந்திரத்தை மீறாத வகையில் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

தற்போது இந்த நிபுணர் குழு, உச்சநீதிமன்ற உத்தரவை மீறாத வகையில் ஆதார் புள்ளி விபரங்களை இதர பயன்பாட்டிற்காக பயன்படுத்துவது குறித்து, சட்ட திருத்தம் கொண்டு வர பரிந்துரை அளித்துள்ளது. இதன் அடிப்படையில், அக்டோபர் நான்காம் தேதி நடந்த ஆதார் நிறுவனத்தின் (UIDAI) கூட்டத்தில், ஆதார் சட்டத்தை திருத்த சம்மதம் தெரிவித்துள்ளது என்பது ஆவணங்களில் இருந்து தெரிகிறது. இந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால், ஆதார் மற்றும் தனிநபர் உரிமை குறித்து உச்சநீதிமன்றம் 2018ல் அளித்த தீர்ப்பு நீர்த்துப் போகச் செய்யப்படும்.

ஆதார் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன என்று ஆதார் ஆணையம் பதிவு செய்த கருத்து.

ஆதார் நிறுவனம், இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுத் துறைகள், ஆதார் விபரங்களை பரிமாறிக்கொள்ள வகை செய்யும் திட்டம் குறித்து விவாதித்துள்ளது. 17 ஜூன் 2019 தேதியிட்ட ஒரு அலுவலக குறிப்பின்படி, உலக வங்கி, இத்தகைய விபர பரிமாற்றத்துக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பொருட்டு 2 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்கவும் உலக வங்கி முன்வந்துள்ளது.

ஒத்துழைப்பு தர சம்மதிக்கும் உலக வங்கி.

இப்போது வெளியாகும் இந்த விபரங்களை தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடு முழுக்க என்.ஆர்.சி எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு செயல்படுத்தப்படும் என்பதையும், வெளிநாட்டிலிருந்து சட்டவிரோமாக இந்தியாவில் குடியேறியவர்களை மூட்டைப்பூச்சிகளை போல கண்டறிந்து வங்காள விரிகுடாவில் தூக்கி வீசுவோம் என்று பேசுவதையும் சேர்த்தே பார்க்க வேண்டும்.

இந்த புள்ளி விபர ஆவணம் / டேட்டா பேஸ் தற்போது உள்ள இந்த வடிவத்திலேயே உருவானால், அரசு மிக எளிதாக இந்த புள்ளிவிபரங்களை அலசி ஆராய்ந்து, யாரை வேண்டுமானாலும் குடிமகன் என்றோ, குடிமகன் அல்ல என்றோ அறிவிக்க முடியும். இதே போல 2018ம் ஆண்டு, தெலுங்கானாவிலும், ராஜஸ்தானிலும், புள்ளிவிபரங்களை பயன்படுத்தி ஆயிரக்கணக்கானோரின் வாக்குரிமையை பறித்த விபரங்களை ஹப்பிங்க்டன் போஸ்ட் மற்றொரு கட்டுரையில் பதிவு செய்திருந்தது.

இது ஜார்ஜ் வெல்லின் நாவலை நினைவுபடுத்துவது போல உள்ளது. என்கிறார் யேல் சட்ட பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ள சின்மயி அருண். ஏழை எளியவர்களுக்கான சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கென்று உருவாக்கப்பட்ட ஒரு திட்டம், பத்து ஆண்டுகளில், ஜார்ஜ் ஆர்வெல்லின் நாவலில் குறிப்பிடப்படுவது போல, தனது அனைத்து குடிமக்களையும் கண்காணிக்க அரசுக்கு பயன்படுவதாக மாற்றப்பட்டுள்ளது. இது மக்கள் மீதான வரைமுறையற்ற கண்காணிப்புகள். இவை நமது உரிமைகளுக்கு மிகப் பெரிய ஆபத்தாக முடியும்” என்கிறார் சின்மயி அருண். மேலும் அவர், “அரசு குடிமக்களை கண்காணிப்பில் வைத்திருப்பது தொடர்பான விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும், மேற்பார்வைகளும் இந்தியாவில் ஏறக்குறைய செயல்படுத்தப்படுவதே இல்லை. தற்போது, ஆர்வெல் நாவலில் வருவது போல முழுக்க முழுக்க கண்காணிக்கும் உரிமையை அரசிடம் கொடுக்கப்பட்டால், மக்களுக்கான உரிமைகள் முழுக்க பறிக்கப்பட்டு மக்களை முழுமையாக அரசு கட்டுப்படுத்தும் சூழல் உருவாகும். இப்படி மக்கள் அனைவரையும் அரசு தன் கண்காணிப்பில் கொண்டுவருமேயானால், இந்திய ஜனநாயகம் என்பது தன் அடையாளத்தை இழக்கும்” என்றார்.

2011ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 1931க்குப் பின் முதன் முதலாக சாதி வாரி பொருளாதார கணக்கெடுப்பை எடுக்க முடிவு செய்தது. இந்த கணக்கெடுப்பின் நோக்கம், சாதி, வருவாய், சமூக நிலை போன்ற விபரங்களை சேகரித்து, அதன் மூலம் சமூகநலத் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதே. இந்தத் திட்டம் மத்திய அரசின் மூன்று துறைகளால் செயல்படுத்தப்பட்டது. ஊரக விபரங்களை ஊரக வளர்ச்சித் துறை சேகரித்தது. நகர்ப்புற விபரங்களை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை ஆகியவை சேகரித்தன. மிகவும் உணர்வுப்பூர்வ விவகாரமான சாதி குறித்த விபரங்களை உள்துறையின் கீழ், மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகமும், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகமும் மேற்கொள்ளும் என்று முடிவெடுக்கப்பட்டிருந்தது.

3 ஜூலை 2015 அன்று பிஜேபி அரசு, காங்கிரஸ் அரசின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சமூக பொருளாதார விபரங்களின் புள்ளி விபரத்தை வெளியிட்டது. ஆனால் என்ன காரணத்தினாலோ, சாதி கணக்கெடுப்பு விபரங்களை வெளியிடாமல் நிறுத்தி வைத்தது. இந்தக் கணக்கெடுப்பு, இத்தனை ஆண்டுகளாக வறுமைக் கோட்டின் கீழே என்று அளவிடுவதற்கும், வறுமையை அளவிடுவதற்கும் வைத்திருந்த அளவுகோள்களில் இருந்து முழுமையாக மாறியது. இதுநாள் வரை, ஒரு குறிப்பிட்ட அளவு ஆண்டு வருமானம் பெறுவதை மட்டுமே வறுமைக் கோட்டுக்கு கீழே என்று கணக்கிட அளவுகோலாக இருந்தது.

பல்வேறு அம்சங்களின் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களை கணக்கிடவும், அரசின் சமூக நலத் திட்டங்கள், பல்வேறு வடிவங்களில் அவர்களை சென்று சேரவும் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பரிந்துரை செய்தது. குடும்ப வருமானமாக இதுநாள் வரை, ஒரு குடும்பத்தில் ஒருவர் பெற்று வரும் ஊதியம் மட்டுமல்லாமல், ஒரு குடும்பத்தில் மாணவர் பெறும் கல்வி ஊக்கத் தொகை, சிறு கடன்கள், போன்றவற்றை சேர்க்க வேண்டும் என்று இந்த கணக்கெடுப்பு பரிந்துரை செய்தது. இந்த புள்ளி விபரங்கள் குறித்து, அப்போதைய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சவுத்ரி பீரேந்திர சிங் இவ்வாறு கூறினார். “ஒரு கிராம பஞ்சாயத்தை அடிப்படையாக கொண்டு வறுமை ஒழிப்பை சிறப்பாக செயல்படுத்த இந்த புள்ளி விபரங்கள் உதவும்” என்று குறிப்பிட்டார்.

ஊரக வளர்ச்சித் துறை, 13 அக்டோபர் 2015 அன்று ஒரு அலுவலக குறிப்பில், சமூக பொருளாதார புள்ளி விபரங்களின் பயனை மேலும் விரிவாக்க, ஒரு தேசிய சமூக பதிவேட்டை உருவாக்குவது அவசியம் என்று, ஊரக வளர்ச்சிக்கான பாராளுமன்ற நிலைக் குழுவில் பரிந்துரை செய்துள்ளது ஆவணங்களின் வழியே தெரிய வருகிறது.

27 நவம்பர் 2015 அன்று, ஊரக வளர்ச்சித் துறைக்கான பொருளாதார ஆலோசகர் மனோரஞ்சன் குமார் சமூக-பொருளாதார புள்ளி விபரங்கள் தொடர்பாக ஒரு விரிவான அறிக்கையைத் தயார் செய்தார். அதில், அவர், இந்த புள்ளி விபரங்களை தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே (Update) இருக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். “இந்த பதிவேடு, முழுமையாக செயல்படவேண்டும் என்றால், இது தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் இது ஒரு முழுமையான பதிவேடாக இருக்கும்” என்று அவர் பதிவு செய்தார்.

மனோரஞ்சன் குமாருக்கு இளநிலை அதிகாரியான துருவ் குமார் சிங், “சமூக-பொருளாதார பதிவேட்டின் உள்ளவர்களின் விபரங்கள், அவர்கள் பெரும் அரசு நலத்திட்டங்களை பொறுத்து தானாக அப்டேட் செய்யும்படி மாற்றப்பட வேண்டும்” என்று பதிவு செய்தார்.

ஒரு குடும்பம் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளதா, இல்லை அரசு நலத்திட்டங்களை பெற்று வறுமைக் கோட்டிலிருந்து வெளியே வந்து விட்டதா, எப்போது அவர்களுக்கான அரசு உதவிகளை நிறுத்தலாம் என்பது போன்ற விபரங்களை அரசு தானாகவே அறிந்து கொள்ளலாம் என்பது அவர்களின் வாதம். மேலும், ஊரகப் பகுதிகளில் இருந்து, மக்கள் நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்வதும், பின்னர் மீண்டும் ஊரகப் பகுதிகளுக்கு திரும்புவதும் நடைபெருகிறது. இதன் காரணமாக, நகர்ப்புறங்களுக்கான திட்டங்கள், ஊரகப் பகுதிகளுக்கான திட்டங்களுக்கான பயனாளர்களை கண்டறிவது கடினமாக உள்ளது என்றும் வாதிடப்பட்டது.

அனைத்து இந்திய குடிமக்களுக்கான ஒரே டேட்டாபேஸ் உருவாக்கப்பட்டால், ஆதாரின் அடிப்படையில் நடைபெறும் அனைத்து பரிவர்த்தனையின் விபரங்களையும் அரசு கண்காணித்து விபரங்களை சேகரிக்க உதவியாக இருக்கும் என்று குமார் பதிவு செய்கிறார்.

இந்தியாவின் அனைத்து வீடுகளும், தேசிய சமூக பதிவேட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்கிற குறிப்பு.

அரசுத் துறைகளில் இருந்து பெறப்பட்ட புள்ளி விபரங்கள் என்னவென்றால், அரசிடம் நலத்திட்ட உதவிகள் பெற்றவர்களின் விபரங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். அரசு அதிகாரி குமார் வாதிடுவது என்னவென்றால், இனி வரும் காலத்தில் அரசு நலத் திட்டங்கள் பெற இருப்பவர்களின் விபரங்களையும் சேகரிக்க வேண்டும் என்பதே. ஒரு கட்டத்தில், அனைவரின் புள்ளி விபரங்களும் சேகரிக்கப்படுவதில்தான் இது சென்று முடியும்.

அதிகாரி குமார் எழுதிய குறிப்பு கடந்த ஐந்து வருடங்களாக இன்னும் விவாதிக்கப்பட்டுக் கொண்டு வருகிறது. மத்திய அரசின் பல்வேறு துறைகள், அரசின் ஆலோசகர்கள், நிதி ஆயோக், ஆதார் ஆணையம், உலக வங்கி ஆகியவை இது குறித்து இன்னும் ஆலோசனை செய்து வருகின்றன.

வெளிப்படையாக பார்க்கையில் சமூக நலத் திட்டங்களை உரிய பயனாளிகளுக்கு சரியான முறையில் கொண்டு செல்ல இப்படி ஒரு டேட்டாபேஸ் அவசியமே என்று தோன்றும். இத்திட்டம் உருவாக்கப்பட்ட சமயத்தில், இதன் நோக்கமாக இதுவே இருந்திருக்க வேண்டும். ஆனால் பின்னாளில், குறிப்பாக கடந்த மூன்றாண்டுகளில் தான் இது அனைத்து குடிமக்களையும் கண்காணிப்பதற்கான ஒரு கருவியாக மாற்றப்பட்டு வருகிறது.

உதாரணத்துக்கு, ஜனவரி 2016ல் ஊரக வளர்ச்சித் துறை முன்னாள் நிதித் துறை செயலர் சுமித் போஸ் தலைமையில், சமூக-பொருளாதார புள்ளிவிபரங்களை பயன்படுத்தி, சமூக நலத் திட்ட பயனாளர்களை கண்டறிய ஒரு குழுவை நியமித்தது. இந்தக் குழு ஒருங்கிணைந்த டேட்டாபேஸ் உருவாக்குவதற்கு ஆதரவு அளித்து, தன் அறிக்கையை நவம்பர் 2016ல் அளித்தது. புள்ளி விபரங்கள் என்ற பெயரில், தனிநபர்களின் சுதந்திரத்தை பறிக்க இந்தத் திட்டம் பயன்படுத்தப்படுமானால் அதற்கு ஆதரவு அளித்திருக்க மாட்டோம் என்று அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த சில உறுப்பினர்கள், இப்போது கூறுகின்றனர்.

அந்தக் குழுவில் உறுப்பினராக இருந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொருளாதார உதவி பேராசிரியர் ஹிமன்ஷு, “ஆதார் விபரங்களை பயன்படுத்தி, ஒட்டுமொத்த குடிமக்கள் அனைவரின் விபரங்களையும் சேகரிப்பதை நாங்கள் பரிந்துரைக்கவில்லை” என்கிறார். “ஒரு பொதுவான பதிவேடு ஒன்றை உருவாக்கி, சமூக நலத் திட்டங்களுக்கு தகுதியான குடும்பங்களின் விபரங்களை சமூக-பொருளாதார புள்ளி விபரங்களை பயன்படுத்தி உருவாக்குவதே எங்கள் நோக்கம். சம்பந்தப்பட்ட அந்த குடும்பங்களில் ஏற்படும் பொருளாதார ஏற்ற இறக்கங்களையும் பதிவு செய்வதே நாங்கள் பரிந்துரைத்த திட்டத்தின் நோக்கம்” என்கிறார் ஹிமான்ஷு போஸ். ஆனால் எங்கள் பரிந்துரைக்கு பிறகு, எங்களிடம் அரசு கலந்தாலோசனை செய்யவில்லை என்கிறார்.

மார்ச் 2016ல், அரசு, நித்தி ஆயோக் அமைப்பிடமும் ஆலோசனைகளை கேட்டது. 13 மே 2016 தேதியிட்ட அலுவலக குறிப்பில், நித்தி ஆயோக்கின் தலைமை புள்ளிவிபர அலுவலர் எஸ்.சி.ஜா, தேசிய சமூக பதிவேட்டில், “வம்சாவளி (family tree) குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட வேண்டும்” என்று பதிவு செய்கிறார். “எல்லா நேரங்களிலும் எல்லா காலகட்டத்திலும், இந்த தேசிய சமூக பதிவேடு பயனுள்ளதாக இருக்கும் பொருட்டு, பிறப்பு, இறப்பு, திருமணம், குடிபெயர்தல் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட வேண்டும்” என்ற நித்தி ஆயோக்கின் ஆலோசனையை, 20 மே 2016 நாளிட்ட அலுவலக குறிப்பில், ஊரக வளர்ச்சித் துறையின் இயக்குநர் துருவ் குமார் சிங் ஏற்றுக் கொள்கிறார்.

ஒரு குடும்பத்தின் வம்சாவளி பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நித்தி ஆயோக்கின் கருத்து.

இந்நிலையில், அரசு மற்றும் உலக வங்கியின் இந்திய அலுவலகத்தோடு தொடர்ந்து இது குறித்து கடிதப் போக்குவரத்துகள் நடைபெற்று வந்தன. மார்ச் 2017 வாக்கில், ஊரக வளர்ச்சித் துறையின் சில அதிகாரிகள், உலக வங்கியின் ஆலோசனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

15 மார்ச் 2017ல், ஊரக வளர்ச்சித் துறையின் பொருளாதார ஆலோசகர் மனோரஞ்சன் குமார் இவ்வாறு எழுதுகிறார்.

“உலக வங்கியின் பல ஆலோசனைகள் பல பலவீனமாக உள்ளன. அமெரிக்காவில் உள்ள சமூக பாதுகாப்பு திட்டத்தை (Social Security System) இந்தியா மாடலாக கொள்ள வேண்டும். அமெரிக்க திட்டம், ஒரு தனி நபரின் பொருளாதார நிலை குறித்து அறிந்து கொள்ள மட்டும் உதவவில்லை. அது, அந்த தனி நபர், அரசிடம் என்னென்ன பயன்களை பெறுகிறார் என்பதையும் தெரிந்து கொள்ள உதவுகிறது” என்று பதிவு செய்கிறார்.

ஜூன் 2017ல், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம், பல்வேறு அமைச்சகங்களுக்கிடையேயான ஒரு நிபுணர் குழுவை அமைக்கிறது. 2011 சமூக-பொருளாதார புள்ளி விபரங்களை, தொடரந்து அப்டேட் செய்வதற்கும், அதை இடைவிடாமல் பராமரிப்பதற்குமான வழிமுறைகளை பரிந்துரைப்பதே அந்தக் குழுவின் பணி.

இந்தக் குழுவில், ஆதார் ஆணையம், உலக வங்கி, தேசிய தகவல் மையம் (National Informatics Center), மத்திய புள்ளிவிபரம் மற்றும் திட்ட செயலாக்கத் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, நேரடி மானிய பயன்பாடு மற்றும், டிஜிட்டல் நிதி பயன்பாடு ஆகிய துறைகளை சேர்ந்த நிபுணர்கள் இக்குழுவில் உறுப்பினர்களாக இருந்தார்கள். அலுவலக குறிப்புகளின்படி, இந்த குழு, ஜூன் 2017 முதல், அக்டோபர் 2019 வரை நான்கு முறை கூடியுள்ளது.

இந்த கூட்டங்கள் குறித்து நித்தி ஆயோக் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையிடம் ஹப்பிங்க்டன் போஸ்ட் கருத்து கேட்டதற்கு பதில் வரவில்லை. உலக வங்கி இது குறித்து ஈமெயில் மூலம் பதில் அளித்திருந்தது.

ஊரக வளர்ச்சித் துறையுடன் சேர்ந்து, தேசிய சமூக பதிவேடு குறித்து இணைந்து பணியாற்றுவதை ஒப்புக் கொண்ட உலக வங்கி, அதற்காக கடனோ நிதி உதவியோ செய்யும் திட்டம் இல்லை என்று தெரிவித்தது. இப்படி விபரங்கள் சேகரிப்பதால் தனி நபர் சுதந்திரம் பறிக்கப்படுவது குறித்து கேட்டபோது, மாநில அரசுகள், மத்திய அரசு, உலக வங்கி ஆகியவை, தனி நபர் சுதந்திரம் பாதுகாக்கப்படுவது குறித்து அதீத கவலை கொண்டிருப்பதாகவும், தெரிவித்தது. மேலும், உலக வங்கி அளிக்கும் தொழில்நுட்ப உதவிகள் மூலமாக, உலகின் பல்வேறு நாடுகளில் தனிநபர் தரவுகள் தவறானவர் கைகளில் கிடைக்காமல் இருக்க என்னென்ன தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அமைச்சகத்துக்கு அறிவுரை வழங்கியதாகவும் தெரிவித்தது.

ஆனால் உலக வங்கி, ஊரக வளர்ச்சித் துறைக்கு அது அளித்த பரிந்துரையின் விபரங்களை பகிர்ந்து கொள்ள மறுத்து விட்டது.

5 மார்ச் 2018 அன்று சமூக-பொருளாதார புள்ளிவிபரங்களை புதுப்பிக்க ஒரு திட்டத்தை நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த தரவுகளை பாதுகாக்க என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயம் இதன் மூலம் தெளிவாகியது. சமூக-பொருளாதார கணக்கெடுப்பில் கிடைத்த புள்ளி விபரங்களை வைத்து ஒரு தேசிய சமூக பதிவேடு உருவாகுமா இல்லையா என்ற கேள்வி முடிவுக்கு வந்தது. அது நிச்சயம் உருவாகிறது.

ஆதாரின் தாக்கம்.

ஆதார் என்ற ஒரு அமைப்பும், திட்டமும் இல்லையென்றால், தேசிய சமூக பதிவேடு என்ற கருத்துரு உருவாகியிருக்காது. மக்களின் அனைத்து விதமான தரவுகளையும் ஒருங்கே வைத்திருக்கும் ஆதார் தேசிய சமூக பதிவேட்டின் நோக்கத்தை எளிதாக்கியது.

உதாரணத்துக்கு, ஆதாரின் அடிப்படையில் பேன் (PAN) நம்பர் அடிப்படையில் ஒரு பட்டியல் உள்ளது. ஆதாரின் அடிப்படையில் செல்போன் நம்பர்களை வரிசையிடும் ஒரு பட்டியல் உள்ளது. ஆதாரை அடிப்படையாக வைத்து, இவை இரண்டையும் இணைப்பது எவ்வளவு எளிது என்று யோசித்துப் பாருங்கள்.

இதில் ஒரு சிக்கல் உள்ளது.

தனிநபர் சுதந்திரத்துக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் செயற்பாட்டாளர்கள், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். ஆதாரை அடிப்படையாகக் கொண்டு, விமான நிலையத்தில் விமானம் ஏற போர்டிங் பாஸ் வாங்குவது, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குகள், செல்பேசி இணைப்புகள், திருமணப் பதிவு என அனைத்துக்கும் ஆதாரை பயன்படுத்துவதை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளனர். இவர்கள் அச்சம் தெரிவிப்பது போலவே, தேசிய சமூக பதிவேடு தொடர்பான அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவில், ஆதார் ஆணையம் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

விசித்திரமாக, ஆதார் ஆணையம், ஜூன் 2017ல், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில் ஆதார் ஆணையம் தலைகீழான ஒரு நிலைப்பாட்டை எடுத்தது.

“ஆதார் தொழில்நுட்பத்தின் வடிவமைப்பே, தனி நபர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பயனாளரை 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்கவோ, ஆராயவோ ஆதாரில் வழிவகை இல்லை” என்று ஆதார் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பிரமாண வக்குமூலம் தாக்கல் செய்தது.

“ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் செய்த பெரும் தவறு என்னவென்றால், ஆதார் விபரங்களை வைத்து ஆதார் ஆணையம் என்ன செய்ய முடியும், முடியாது என்பதை ஆராய்ந்தது. ஆனால் ஆதார் தரவுகளை வைத்து அரசு என்ன செய்யப்போகிறது என்பதை உச்சநீதிமன்றம் ஆராயத் தவறி விட்டது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின்போது, விளக்கம் அளித்த ஆதார் அமைப்பின் சிஇஓ அஜய் பூஷண் பாண்டேவின் விளக்கத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அனைவரையும் கண்காணிக்கும் வகையில் 360 கோணத்தில் கண்காணிக்கும் பணியை நாங்கள் செய்யப்போவதில்லை என்று ஆதார் ஆணையம் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஆதார் தரவுகளை அரசு பயன்படுத்தி மக்களை கண்காணிக்காது என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை” என்கிறார் ஆதார் வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான அனுபம் சராப்.

அவர் மேலும், “ஆதார் தரவுகளை கொண்டு, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட முடியும். அதன் மூலம் தேர்தல்களில் முறைகேடு செய்ய முடியும். மானியத்துக்காக கொடுக்கப்படும் நிதியைக் கையாடல் செய்ய முடியும், அடையாளத் திருட்டில் ஈடுபட முடியும் என்பன உள்ளிட்ட பல்வேறு சாத்தியக்கூறுகளை உச்சநீதிமன்றத்தின் முன்பு எடுத்து வைத்தோம். இது போல தனி நபர் உரிமை தொடர்பாக மொத்தம் 32 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றில் பல மனுக்களில் ஆதார் அமைப்பு எதிர்மனுதாரர்களுள் ஒருவராகக் கூட இல்லை. ஆனால் உச்சநீதிமன்றம் அனைத்து 32 மனுக்களையும், ஒரே மனுவாக மாற்றி, இவ்வழக்குகளை ஆதாருக்கு எதிரான வழக்காக மாற்றியது. அதன் அடிப்படையில் அவ்வழக்கு, ஆதார் என்ன செய்ய முடியும், என்ன செய்யக்கூடாது என்று மாற்றப்பட்டது. இப்போது நேர்ந்துள்ள புதிய மாற்றங்களால் அந்த 32 மனுக்களும் மறு விசாரணை செய்யப்படவேண்டும்” என்றார் அனுபம் சராப்.

செப்டம்பர் 2018ல் உச்சநீதிமன்றம், ஆதார் வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அரசு மானியங்களை ஏழைகளுக்கு வழங்க மட்டுமே ஆதாரை பயன்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

ஏப்ரல் 2019ல் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம், ஆதாருக்கு பதிலாக, அனைத்து குடிமக்களையும் அடையாளப் படுத்தும் மற்றொரு வழிமுறையை கண்டுபிடிக்க வலியுறுத்தி ஒரு குழுவை அமைத்தது என்பது ஆவணங்கள் வழியாக தெரிய வருகிறது.

இவ்வளவு சிரமப்படுவதற்கு பதிலாக, எளிதாக ஆதார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரலாம் என்று முடிவெடுக்கப்படுகிறது. ஜூன் 2019ல், ஆதார் சட்டத்தில் என்னென்ன திருத்தங்கள் கொண்டுவந்தால், ஆதார் தரவுகளை மற்ற எல்லா பயன்பாடுகளுக்கும் உபயோகிக்க முடியும் என்று ஒரு குறிப்பை தயார் செய்கிறது. 4 அக்டோபர் 2019ல், அமைச்சகங்களுக்கிடையேயான நிபுணர் குழு கடைசியாக கூடியது. அந்தக் கூட்டத்தில், ஆதார் ஒழுங்குமுறை விதிகள் 2016 மற்றும், ஆதார் தகவல் பரிமாற்ற ஒழுங்குமுறை விதிகள் 2016 ஆகிய சட்டங்களில் என்னென்ன திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று ஆதார் ஆணையம் பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரைகள் இது வரை செயல்படுத்தப்படாமல் உள்ளது. இவை செயல்படுத்தப்பட்டால், உச்சநீதிமன்றம் ஆதார் வழக்கில் தனிநபர் உரிமைகள் தொடர்பாக வழங்கிய தீர்ப்பு நீர்த்துப் போகும். இது ஆதார் விதிகளையே மாற்றி அமைக்கும். தற்போது உள்ள விதிகளின்படி, ஒருவரிடமிருந்து எந்தக் காரணத்துக்காக ஆதார் விபரங்கள் பெறப்படுகின்றனவோ, அந்த காரணத்தை தவிர வேறு எதற்கும் அந்த விபரங்களை பகிர்ந்து கொள்ள முடியாது. உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு சிம் கார்டு வாங்க ஆதார் எண்ணை பயன்படுத்துகிறீர்கள் என்றால், அந்த செல்போன் நிறுவனம், வேறு யாரோடும் அந்த விபரங்களை பகிர்ந்து கொள்ள முடியாது.

மேலும் தற்போது இருக்கும் மற்றொரு பாதுகாப்பு அம்சம், ஆதார் உறுதிப்படுத்துகையில் உருவாக்கப்படும் தடயங்கள் (Logs). எந்த நிறுவனம் ஒருவரின் ஆதார் எண்ணை சரிபார்க்கிறதோ, அப்போது, எந்த இடத்தில், எந்த நேரத்தில் எந்த நாளில் அது சரிபார்க்கப்பட்டது என்பதற்கான ஒரு தடயம் உருவாகும். அதை வேறு யாரோடும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கிறது தற்போதுள்ள ஆதார் விதிகள்.

இந்த விதிகள் தளர்த்தப்பட்டால், ஒரு தனி நபரின் விபரங்களை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும் சூழல் ஏற்படும். தற்போது உருவாக்கத்தில் இருக்கும் தேசிய சமூக பதிவேடு, ஒருவரின் ஆதார் விபரங்களை எந்த அரசுத் துறை வேண்டுமானாலும், எடுத்து பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று மாற்றம் செய்யவிருக்கிறது. தற்போது உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், தேசிய சமூக பதிவேட்டை உருவாக்கி பராமரிக்க தடையாக இருப்பதாக அக்டோபர் 2019ல் நடந்த கூட்டத்தில் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தத் தடையை எதிர்கொள்ள மத்திய ஊரக வளர்ச்சித் துறை சொல்லிய ஒரு ஆலோசனை என்ன தெரியுமா ? ஒரு பயனாளர், ஒரு அரசுத் துறையிடம் அவரது ஆதார் விபரங்களை பயன்படுத்த சம்மதம் தெரிவித்தாலே, அவர் அனைத்து துறைகளும் அவ்விபரங்களை பயன்படுத்த சம்மதம் தெரிவித்தார் என்று பொருள் கொள்ளலாம் என்பதே.

அமைச்சரவைகளுக்கிடையேயான குழு, ஆதார் விதிகளில் திருத்தங்களை பரிந்துரைக்கிறது.

அக்டோபர் 2019 கூட்டத்தின் பதிவுகளில் இவ்வாறு தெரிய வருகிறது. அக்கூட்டத்தில் ஆதார் அமைப்பு, “இது குறித்த சட்டத் திருத்தங்கள் அனைத்தும் விரைவில் வர இருக்கின்றன” என்று பதிவு செய்தது.

குறிப்பிட்ட ஒரு பயனைத் தவிர்த்து, அனைத்து பயன்பாடுகளுக்கும் ஆதார் விபரங்களை திறந்து விடுவது என்பது, உச்சநீதிமன்றம் அளித்த புட்டாசாமி (தனி நபர் உரிமை தொடர்பான தீர்ப்பு) வழக்கின் தீர்ப்புக்கு எதிரானது என்கிறார், இவ்வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்களில் ஒருவரான எஸ்.பிரசன்னா.

“அரசின் நடவடிக்கை சட்டப்பூர்வமானதாக இருக்க வேண்டும். (சட்டம் அளித்த அதிகாரத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும்). இது சட்டபூர்வமான காரியங்களுக்கு பயன்பட வேண்டும். ஒரு விவகாரத்தை செயல்படுத்த சட்டம் அளித்த அதிகாரத்தின் அடிப்படையில் மட்டுமே அரசு அதனை பயன்படுத்த வேண்டும். இந்த விபரங்களை பயன்படுத்தினால் மட்டுமே, அரசு அதன் நோக்கத்தை நிறைவேற்ற முடியும் என்ற சூழல் இருக்க வேண்டும் என்பவைதான் உச்சநீதிமன்றத்தின் ஆதார் தீர்ப்பின் அடிப்படைகள். ஆனால், இவை எல்லாவற்றையும் நீர்த்துப் போகச் செய்யவே தற்போது திருத்தங்கள் எடுத்து வரப்படுகின்றன” என்கிறார் பிரசன்னா.

“சட்டப்பூர்வமான நோக்கம்” என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்துகையில், அது எந்த நோக்கத்துக்காக விபரங்கள் பெறப்படுகின்றனவோ, அந்த நோக்கத்துக்காக மட்டுமே என்றே பொருள் கொள்ள வேண்டும். ஒரு காரியத்துக்காக விபரங்களை சேகரித்துவிட்டு, சம்பந்தப்பட்ட நபரின் அனுமதி இல்லாமல், அதை வேறு ஒரு காரியத்துக்கு பயன்படுத்துவதோ, விபரங்களை பகிர்ந்து கொள்வதோ, மோசடியான காரியம்” என்கிறார் பிரசன்னா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *