நாம் தமிழர் புரட்சியாளர்களா?

கலைஞரை, தி.மு.க-வை எதிர்ப்பதாக ஆவேசம் காட்டுகிற நாம் தமிழர் கட்சி விதைக்கிற ஆபத்து மிகவும் ஆபத்தானது. தி.மு.க தனது வளர்ச்சிக்காக செய்த தொடக்க கால ஆபத்தைத்தான் நாம் தமிழர் கட்சியும் செய்கிறது.

தி.மு.க தன்னை புரட்சிகர கட்சியாக காட்டித்தான் வளர்ந்தது. அதன் தலைவர்கள், தாங்கள்தான் உண்மையான கம்யூனிஸ்டுகள் என்று அலங்காரச் சொற்களால் தங்களை அலங்கரித்துக்கொண்டார்கள். ஒரு புரட்சிகர சமூக மாற்றம்தான் தங்களது இலக்கு என்று வீராவேசம் பேசினார்கள். அதற்காகத்தான் ஆட்சியைப் பிடிக்கப்போகிறோம் என்று சவால்விட்டார்கள்.

ஆட்சியதிகாரம் என்னும் அரசு என்பது, ஒரு அல்லது ஒருசில வர்க்கங்கள் மற்ற வர்க்கங்களை ஒடுக்குவதற்கான ஒடுக்குமுறை கருவி என்பதை வாய்ஜாலத்தால் மூடிமறைத்ததுதான் தி.மு.க-வின் சாமர்த்தியம். இதையேத்தான் இன்று நாம் தமிழர் கட்சி தனது தொண்டை கிழியும்படியான உரத்தக்குரலால் செய்ய முயற்சிக்கிறது.

தி.மு.க எல்லாவற்றுக்கும் காங்கிர கட்சியின் மீது மட்டுமே பழியை போட்டு மக்களின் துன்பங்களுக்கு காரணமான முதலாளிகளையும் நிலவுடைமையாளர்களையும் பாதுகாத்தது. பின்னர் ஆட்சியைப் பிடித்து அதே முதலாளிகளுக்கும் நிலவுடைமையாளர்களுக்கும் சேவகம் செய்து பலனை அனுபவித்தது. தி.மு.கவையும் பயன்படுத்திதான் இன்றைய உலகமயமாக்கமும் கார்ப்பரேட் மூலதனமும் வளர்ந்திருக்கிறது.

“கவர்னர் பெருமான் உரையிலே புதிய காகித தொழிற்சாலை, பெரிய கலப்பு உருக்குத் தொழிற்சாலை, ரசாயன உரத் தொழிற்சாலை, புதிய மூன்று சர்க்கரை ஆலைகள் இவைகள் எல்லாம் தனியார் துறையில் அமைய இருக்கின்றன என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தனியார் துறை, பொதுத்துறை இரண்டும் இருப்பதுதான் நடைமுறை சமதர்மம் என்று நம்முடைய சர்க்கார் கருதிக்கொண்டிருக்கிறது. ஆனால் இது சமதர்மத்திற்கு இது முற்றிலும் முரண்பாடானதாகும். தனியார் துறை, பொதுத்துறை இப்படி இரண்டும் இருப்பதானது, நாம் அனுஷ்டிக்கிற நடைமுறை சமதர்மம் என்று கூறிக்கொள்வதற்கு முரண்பாடான கருத்து. இப்படிப்பட்ட தொழில்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும்”

இது 50 எம்.எல்.ஏக்களுடன் தி.மு.க எதிர்கட்சியாக இருந்தபோது கவர்னர் உரையின் மீதான விவாதத்தில் கலைஞர் பேசியது.

“ஆதிமூலம் (சுதந்திரா காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்) அவர்கள் ‘தனியார் முதலாளிகளை, தொழில் அதிபர்களை நீங்கள் வளரவிடமாட்டீர்களா?’ என்று கேட்டார்கள். நான் தமிழக அரசின் சார்பாகச் சொல்கிறேன், பொதுத்துறையிலே தமிழக அரசுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசுக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது என்றாலும், பொதுத்துறை பிலாக்காய் என்றால், இன்றைக்கு வருகிற தனியார் துறை என்ற கிளாக்காயை நாங்கள் வெறுப்பவர்கள் அல்ல. தனியார் துறையினர், தொழில் அதிபர்கள் தைரியமாக நம்பிக்கையோடு தமிழ்நாட்டில் தங்களுடைய தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றலாம். அவர்களுக்கு தமிழக அரசின் ஆதரவு பரிபூரணமாக உண்டு என்பதை இந்த மாமன்றத்தின் மூலமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்”

இது அண்ணாவுக்குப் பின் முதல்வராக பதவியேற்ற கலைஞர் பேசியது.

இப்படித்தான் தி.மு.க-வின் துணையோடும் முதலாளிகளும் நிலவுடைமையாளர்களும் அவர்களின் தொடர்ச்சியாக கார்ப்பரேட்டுகளும், உலக வங்கியின் ஆதிக்கமும் வளர்ந்தது.

இவ்வாறு தமிழ்நாட்டின் மீதான உலகவங்கியின் வரலாற்றை கொஞ்சம் பார்ப்போம்.

தமிழ்நாட்டில் விவசாயதிற்காக கிணறு தோண்டுவது, பம்ப்செட் வைப்பது, அதற்கு மின்சாரம் வழங்குவது போன்ற திட்டங்களுக்கு கடன் வழங்குவதின் வழியாக உலகவங்கி 1970-களின் தொடக்கத்திலே தமிழகத்தினுள் நுழைந்துவிட்டது. பின்னர் 1977-ல் மெட்ராஸ் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்திற்கு, மொத்த திட்ட மதிப்பீட்டு தொகையான 62 மில்லியன் டாலரில், 24 மில்லியன் டாலரை கடனாக அப்போதைய தமிழக அரசுக்கு அளித்ததது. அந்த திட்டத்தில் நில ஆக்கிரமிப்புகள் தொடர்பாக பிரச்சினைகளும் எழுந்தன. அதனால் 15 மாத காலதாமதமும் ஏற்படுகிறது. பின்னர் அந்தப் பிரச்சனைகள் சரிகட்டப்படுகின்றன. காவல்துறை இன்னும் பலப்படுத்தப்படுகிறது. நவீனமாக்கப்படுகிறது. அதிலிருந்து உலகவங்கி படிப்பினைகளையும் பெற்றுக்கொண்டு, தமிழக அரசுக்கு 1980 முதல் 1988 வரை அதே திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் 42 மில்லியன் டாலர் கடனை உலகவங்கி அளிக்கிறது. பின்னர் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டமாக அது மூன்றாவது கட்டத்தில் அறிவிக்கப்பட்டு, அதற்கு 1988 மற்றும் 1997 ஆண்டுகளில் 255 மில்லியன் டாலர் கடனாக கொடுக்கிறது. இதற்கிடையில் 1980-ல் தமிழ்நாடு ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் 32 மில்லியன் டாலரும், 1981-ல் தமிழ்நாடு செய்திதாள் திட்டத்தின் கீழ் 100 மில்லியன் டாலரும் உலகவங்கி கடன் வழங்கியது. 1990-ல் உலகவங்கியின் தொழிநுட்ப கல்விக்கான திட்டம் கிடைக்கிறது. 1993-ல் ஐரோப்பிய ஒன்றியம், உலகவங்கி, போன்ற வங்கிகள் அடிப்படை கல்வித் திட்டத்தில்மிகப்பெரிய அளவில் கடனுதவி அளிக்க ஆரம்பிகின்றன. டேனிஷ் சர்வதேச வளர்ச்சி முகமை 1981 முதல்1996 வரை தமிழ்நாடு சுகாதார நலத் திட்டம் என்ற பெயரில் அப்போதைய தென் ஆற்காடு, சேலம், விழுப்புரம், கடலூர், நாமக்கல் மாவட்டங்களில் வேலை செய்தது. பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் வேளாண்மை வளர்ச்சிக்கான சர்வதேச நிதியின் உதவியுடன் தமிழகத்தின் பல மாவட்டங்களில் 1989–90-ல் தமிழ்நாடு மகளிர் முன்னேற்றத் திட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் 1986-ல்தான் முதன்முதலில் எய்ட்ஸ் நோயாள பதிக்கப்பவரை கண்டறிகின்றனர். அப்போது இருந்து இப்போதுவரை அது சம்மந்தமாக தமிழகத்தில் சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முகமை(USAID) மற்றும் பல வெளிநாட்டு என்ஜீவோ’க்கள்மூலம் ஊடுருவியுள்ள அந்நிய பணம் என்பது இதுவரை கணக்கில் அடங்காதது. இன்னும் சொல்லப்போனால் கிராம வேலை வாய்ப்பு திட்டமே உலகவங்கிதான் ஸ்பான்சர்தான். இதுபோன்று பல திட்டங்கள் தமிழகத்தில் உலகவங்கியின் கீழ் இன்றளவும் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன.

இந்த போக்கின் ஊடாகத்தான் தனியார்மயம் முதலான அனைத்து சீரழிவுகளும் இன்றைய பொருளாதார நெருக்கடியும் உருவாகியுள்ளது.

முதலாளித்துவ ஆட்சிமுறையில் பங்கேற்பது என்பது முதலாளித்துவத்துக்கு சேவை செய்வதுதானே தவிர, அது சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறை அல்ல. ஆனால் இந்த உண்மையைத்தான் தி.மு.க தன் வாய்ஜாலத்தால் மறைத்தது. தாங்கள் மக்களுக்காக, சமூக மாற்றத்துக்காகத்தான் ஆட்சியைப் பிடிக்கவிருப்பதாக மகுடி ஊதியது.

இதே மாய்மாலத்தைத்தான் இப்போது நாம் தமிழர் கட்சியும் செய்கிறது. அது தி.மு.க-வை விட கூடுதலாக நடிக்கிறது. விவசாய புரட்சி, மீனவர் புரட்சி அது இதுவென பேசுவதோடு ஈழப் புரட்சியையும் தானே நடத்திவிடுவதாக கூசாமல் புளுகுகிறது.

தமிழ்நாட்டிலிருந்தே ஈழப் புரட்சி நடத்துவது கூட தி.மு.க-விடமிருந்து நாம் தமிழர் கட்சி வாங்கும் கடன்தான். கலைஞர் உலகத் தமிழினத் தலைவராக அறியப்பட்ட அவ்வரலாற்றை அறிந்தவர்களுக்கு அது தெரியும்.

தி.மு.க ஏற்கனவே அம்பலமாகித்தான் இருக்கிறது. ஆனால் நாம் தமிழர் கட்சி இன்னும் சரியாக அம்பலப்படுத்தாத ஆபத்தாக இருக்கிறது.

தோழர் திருப்பூர் குணா முகநூல் பதிவு