நாத்திக்கப் பிரச்சாரம்-1
நாத்திக்கப் பிரச்சாரம்-1

நாத்திக்கப் பிரச்சாரம்-1

உழைக்கும் மக்களுக்கு எதிராக ஆட்சியாளர்கள் கொண்டு வரும் அரசியல், பொருளாதார, ஒடுக்குமுறைகளை எதிர்த்தோ அல்லது சுரண்டும் வர்க்கங்களின் சுரண்டலையும், ஒடுக்குமுறைகளையும் எதிர்த்தோ உழைக்கும் மக்கள் போராட்டத்தை நடத்த வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். உழைக்கும் மக்களில் ஒரு பகுதியினர் முற்போக்கான (சோசலிச) கருத்துகளைக் கொண்டிருப்பவர்களாகவும், மற்றொரு பிரிவினர் இன்னும் மதத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களாகவும், பிளவுபட்டிருக்கின்றனர் என வைத்துக்கொள்வோம். இத்தகைய ஒரு சூழ்நிலைமையில் மதவாதிகள் உழைக்கும் மக்களிடையில் இருக்கும் மதம் குறித்த கருத்து வேற்றுமைகளைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களைப் பிளவுபடுத்தி ஆட்சியாளர்களுக்கோ அல்லது சுரண்டும் வர்க்கத்தினருக்கோ சேவை செய்ய முயற்சித்து வருகின்றனர் என வைத்துக்கொள்வோம். இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் ஆட்சியாளர்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையில் அரசியல் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக ஒரு போராட்டம் துவங்கிவிட்டது. அப்போது ஒரு மார்க்சிய வாதியின் கடமை என்ன? இப்போராட்டத்தில் உழைக்கும் மக்கள் வெற்றி பெறச் செய்வதை எல்லாவற்றிற்கும் மேலான ஒரு கடமையாகக் கருதி, இப்போராட்டத்தில் முற்போக்கான தொழிலாளர்களையும், மதநம்பிக்கைக் கொண்ட தொழிலாளர்களையும் இரண்டாகப் பிளவுபடுத்துவதை எதிர்த்து தீவிரமாகப் போராடச் செய்வதும் அவர்கள் ஒன்றுபட்டுப் போராடுவதற்காகப் பாடுபடுவதும் ஒரு மார்க்சியவாதியின் கடமையாகும்.

இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் நாத்திக்கப் பிரச்சாரம் செய்வது மதத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் உழைக்கும் மக்கள் மதவாதிகள் விரிக்கும் மாயவலைக்குள் சிக்கிக் கொள்வதற்குத்தான் பயன்படும். ஆகையால் இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில், இத்தகைய ஒரு சூழலில் நாத்திகப் பிரச்சாரம் செய்வது அவசியமற்றதும், தீங்கானதும் ஆகும். இவ்வாறு சொல்வது பின்தங்கிய உழைக்கும் மக்கள் நம்மை விட்டுத் தூரமாகச் சென்றுவிடுவார்களோ என்ற ஒரு பழமைவாதச் சிந்தனையினாலோ அல்லது இதைப் போன்ற வேறு பிற்போக்கு எண்ணத்தினாலோ அல்ல. அதற்கு மாறாக மெய்யான ஒரு வர்க்கப் போராட்டதின் முன்னேற்றத்தைக் கருதியே இவ்வாறு சொல்கிறோம்.

இத்தகைய ஒரு தருணத்தில் ஒரு வறட்டுத்தனமான நாத்திகப் பிரச்சாரம் சாதிப்பதைவிட இந்தப் போராட்டத்தில் உழைக்கும் மக்கள் வெற்றி பெறச் செய்வதுதான் சுரண்டுவதையும், அடிமைப் படுத்துவதையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தில் வாழும் மதநம்பிக்கை கொண்டுள்ள உழைக்கும் மக்களை நூறு மடங்கு அதிகமாக சோசலிஸ்டுகளாகவும், நாத்திகவாதிகளாகவும் மாறச் செய்யும். இதனால்தான் நாத்திகப் பிரச்சாதத்தை உழைக்கும் மக்களின் அடிப்படையான பணிக்கு – அவர்களின் வர்க்கப் போராட்டம் வெற்றி பெறச் செய்யும் நோக்கத்திற்கு உட்படுத்த வேண்டும் எனக் கூறுகிறோம்.— நன்றி சமரன் இணையதளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *