ஊரடங்கின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது. மற்றொன்று, நோய்த்தொற்றால் பாதிக்கப்படு பவர்களுக்கு சிகிச்சை அளிக்கப் போதுமான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள் வதற்கான அவகாசத்தைப் பெறுவதற்கு. ஆனால், ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஐம்பது நாட்களைக் கடந்த பிறகும் தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் பெருமளவில் உயர்ந்தே வருகிறது. இது ஊரடங்கின் நோக்கத்தையே தமிழகம் சரியாக நிறைவேற்றவில்லையோ என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்புகிறது. இந்த ஆபத்தான சூழ்நிலையில் மே 7 அன்று டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
கரோனா தொற்று தமிழகத்தில் வேகமாகப் பரவிவரும் சூழலில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் போடப்பட்டன. அதையடுத்து மதுபானக் கடைகளைத் திறக்கத் தடைவிதிக்கப்பட்டது. இதை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வெற்றிபெற்றுள்ளது.
மே மாதம் இரண்டு நாட்கள் மட்டுமே திறக்கப்பட்ட மதுபானக் கடைகளால் ஏற்பட்ட விளைவுகளே இனி நடக்கப்போவதை உணர்த்தும். அந்த இரண்டு நாட்களில் மட்டும் தமிழக அரசுக்கு ரூ.302 கோடி வருமானம் கிடைத்துள்ளது. வேறு வகையில் சொல்வதென்றால், தமிழகத்தில் உள்ள பெரும்பான்மை ஏழைக் குடும்பங்களிடம் இருந்த சிறு சேமிப்பும் மதுக்கடைகளுக்குக் கைமாறியுள்ளது எனலாம்.
பறிபோன பெண்களின் சிறுசேமிப்பு
ஊரடங்கு காலத்தில் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொறுப்பற்ற ஆண்கள் உள்ள வீடுகளில் பெண்களின் சிறுசேமிப்பே குழந்தைகளின் பசியைக் கொஞ்சம் போக்கிவந்தது. இதையும்கூட டாஸ்மாக் கடை திறப்பு சூறையாடியுள்ளது. டாஸ்மாக் கடைகளின் முன்னால் குவிகிறவர்களால், நிச்சயமாக இந்த இழப்பின் வலியை உணர்ந்திருக்க முடியாது. கடுமையான வேலைக்குப் பிறகு வறண்டுபோன தனது தொண்டையை நனைக்கக்கூடப் பழச்சாறு அருந்தாமல், அந்தப் பணத்தையும் சேமித்துத் தன் குழந்தைகளின் பசியாற்ற நினைக்கும் தாய்மார்களுக்கே அந்தச் சிறுசேமிப்புக்குப் பின்னால் உள்ள உழைப்பின் வலி தெரியும்.
பல்வேறு நிபந்தனைகளுடனும் வழிகாட்டுதல்களுடனும் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. மதுக்கடைக்கு வருபவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், ஒருவருக்கு மூன்று நாட்களுக்கு சேர்த்து 750 மி.லி. மதுபானம் மட்டுமே வழங்க வேண்டும், ஐவருக்கு மேல் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடக் கூடாது என்பது போன்ற விதிமுறைகள் நீதிமன்ற உத்தரவிலிருந்தன.
மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்ற தீவிரத்திலிருந்த அரசு, ஒரே இரவில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளுக்குச் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்கான இடைவெளி வட்டங்களை வரைந்தது. சவுக்குக் கம்புகளால் வேலிகள் அமைக்கப் பட்டன. இதே அக்கறையை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் காட்டியிருந்தால் கரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
விரயமான உழைப்பு
நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றும் நோக்கில் டாஸ்மாக் கடைகளின் முன் காவல் துறையினர், மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால், அது எதிர்பார்த்த பயனைத் தரவில்லை. சிறு இடைவெளிகூட இல்லாத அளவுக்கு மதுபானங்களை வாங்கப் பலர் குவிந்தார்கள். குடும்பம், குழந்தைகளின் நினைவுகூட இல்லாது மது அடிமைத்தனத்துக்கு இரையானவர்கள் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டு நடைமுறைகளை எல்லாம் நினைவில் வைத்திருப்பார்களா என்ன? போதையில் நிதானமில்லாமல் அலைந்தவர்களின் வீடியோக்கள், சமூக வலைத்தளங்களில் அரசின் கரோனா தொற்று நடவடிக்கைகளின் உண்மை நிலவரத்தைப் பறைசாற்றின.
மதுபானக் கடைகள் திறந்திருந்தது என்னவோ இரண்டு நாட்கள்தாம் என்றபோதும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் இந்த ஊரடங்கின் நோக்கத்தையே சிதைத்துவிட்டன. கரோனா வைரஸ் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் இரவு பகல் பாராது அயராமல் பாடுபட்ட மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோரின் ஒட்டுமொத்த உழைப்பையும் மதுக்கடைகளைத் திறப்பது என்ற அரசின் செயல் விரயமாக்கிவிட்டது.
மது இல்லாமலும் இருக்க முடியும்
முன்பு மதுக்கடைகளை மூட வலியுறுத்திப் போராட்டங்கள் நடந்தபோது, மதுக்கடைகளைத் திடீரென்று மூடினால் குடிக்காமல் பலருக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டுவிடும், மது இல்லாமல் குடிநோயாளிகளால் இருக்க முடியாது எனக் கருத்துச் சொல்லப்பட்டது. இத்தகைய நிலையில் இருப்பவர்கள் மிகச் சொற்பமானவர்களே. டாஸ்மாக் இல்லையென்றால் மது இல்லாமல் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் பெரும் பகுதியினர் இருக்க முடியும் என்பதைக் குடிகாரர்களுக்கு இந்த ஊரடங்கு உணர்த்தியுள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கோபாலுக்கு இருபது வருடங்களுக்கு மேலாக மதுப்பழக்கம் இருந்தது. அவரைக் குடிபோதையிலிருந்து மீட்க அவருடைய மனைவி எடுக்காத முயற்சிகளே கிடையாது. மருத்துவமனை முதல் மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன்வரை எல்லாவற்றையும் செய்து பார்த்துவிட்டார். ஆனால், கோபாலை குடியிலிருந்து மீட்க முடியவில்லை. மதுதான் தன்னை உயிர்வாழ வைத்துக்கொண்டிருக்கிறது எனத் தன் செயலுக்கு அவர் நியாயம் வேறு கூறுவார். அப்படிப்பட்டவரே மதுபானக் கடைகளை அரசு திறக்கும்வரை குடிக்காமல்தான் இருந்தார். அவரால் வேறெந்தப் பிரச்சினையும் குடும்பத்தில் எழவில்லை என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
மதுபோதையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலை குறித்தோ, குடியால் கணவனை இழந்த மனைவி, தகப்பனை இழந்த குழந்தைகளின் எதிர்காலம் குறித்தோ அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. குடிகாரர்கள் மது அருந்தாவிட்டால் அவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்றும் அவர்களுடைய உடல்நலனைக் கருத்தில் கொண்டே டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்கிறோம் என்கிறார் அமைச்சர் ஒருவர். ‘குடிமக்கள்’ மீதான அரசின் அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது.
கரோனா தொற்று பரவும் இக்காலத்தில் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் வைகை, “கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் உள்ள இக்காலகட்டத்தில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறந்தது சமூக விலகலைப் பாதித்துள்ளது. மதுபானக் கடைகளைத் திறப்பதால் மதுவை உட்கொள்ளும் நபரின் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் குறையும். அதனால், கரோனா தொற்று எளிதில் பரவும். மாநிலங்களுக்குப் போதுமான நிதியை மத்திய அரசு வழங்காததால், மாநில அரசு தனது வருவாயை அதிகரிக்க மதுக்கடைகளைத் திறக்க முனைகிறது.
மாநில அரசு நிதி ஆதாரத்துக்காக மேற்கொள்வதாக இருந்தாலும், அதை ஆன்லைன் விற்பனையாக மட்டும் வைத்துக்கொள்ளலாம். உயர் வகுப்பினரே ஆன்லைனில் பெரும்பாலும் வாங்குவார்கள். இதனால், சமூகத்தின் அடித்தட்டில் உள்ளவர்கள் மதுவால் பாதிக்கப்படுவது குறையும். ஏனென்றால், சமூகத்தின் அடித்தட்டில் உள்ளவர்களே மதுவால் அதிகமான இழப்பை பெரும்பாலும் சந்திக்கிறார்கள். நிதி ஆதாரம் வேண்டும் என்ற நிலை அரசுக்கு இருக்கிறது என்று சொன்னாலும் மக்களின் நலனும் முக்கியமானது. எனவே, கரோனா தொற்றுநோய் அதிகரித்துவரும் சூழலில் மதுவைச் சில்லறை விற்பனை செய்வதை தமிழக அரசு இப்போதைக்குத் தவிர்க்க வேண்டும்” என வலியுறுத்துகிறார்.
மக்கள் நலனை மனத்தில் கொண்டு ஒரு மாதத்துக்கான ரேஷன் பொருட்களையும் குடும்பத்துக்குத் தலா ஆயிரம் ரூபாயையும் தமிழக அரசு வழங்கியது. ஆனால், அதே அரசு டாஸ்மாக் கடைகளைத் திறந்து, ஏழை எளிய குடும்பங்களையும் பெண்கள் – குழந்தைகளின் வாழ்வையும் பணயம் வைப்பது முறையா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை
கட்டுரையாளர் தொடர்புக்கு: renugadevi.l@hindutamil.co.in