நமது மூளைகள் வெற்றிடமாக ஒருபோதும் இருக்கமாட்டா என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதில் முதலாளித்துவ சிந்தனை இருக்கும், அல்லது பாட்டாளி வர்க்க சிந்தனை இருக்கும். நமது மூளைகளுக்குள் இந்த இரண்டு சித்தாந்தங்களுக்கும் இடையில் சர்வசதா போராட்டம் நடந்து கொண்டிருக்கும். ‘நமது மூளையில் இரண்டு சித்தாந்தங்களுக்கும் இடையில் நீண்டகாலம் சமாதான சகவாழ்வு இருக்க முடியாது. இறுதியில் முதலாளித்துவ சித்தாந்தம் வெற்றிபெறும், அல்லது பாட்டாளி வர்க்க சித்தாந்தம் வாகைசூடும்’ என்று தோழர் மாசேதுங் அவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகின்றது.
நாம் பிறந்தது முதல், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நிமிடமும், பழைய சமுதாயத்தின் மூலம், அதன் பிற்போக்கு சமூக பழக்க வழக்கங்கள் மூலம், கல்வியின் மூலம், மத அடிப்படையின் மூலம் திரைப்படம்,இன்றைய தொலைகாட்சி, (இன்று மக்களை ஊழல்படுத்தும் தொடர்கள் காட்சியாக்கங்கள்) முதலாளித்துவ பத்திரிகைகள் மூலம், பைத்தியக்கார சிகை அலங்காரங்கள் போன்ற நவ நாகரிகப் பாவனைகள் மூலம், முதலாளித்துவ எதிர்ப் புரட்சிக் கருத்துகளால் நமது மனம் தாக்கப்பட்டவண்ணம் இருக்கின்றது. நாம் முதலாளித்துவ கருத்துகளின் அழுத்தமான விற்பனையால் தாக்கப்படுகின்றோம். அவை மக்கள் மீது, சிறப்பாக இளைஞர்கள் மீது வெற்றிகரமாகச் செல்வாக்கு வகித்து, அவர்களை எதிர்நோக்கியுள்ள உண்மையான பிரச்சினைகளிலிருந்து அவர்களுடைய மனதைத் திருப்பி, அவர்களை ஊழல்படுத்துகின்றன.
நாம் இதை எதிர்த்துப் போரிடவேண்டும். நாம் பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தின் மேம்பாட்டுக்காக, மார்க்சிய -லெனினிய-மாசேதுங் சிந்தனையின் மேலாதிக்கத்துக்காக போராடவேண்டும். எல்லாக் கஷ்டங்களும் நமக்கெதிராகவே உள்ளன. உண்மை மாத்திரம் நம் பக்கத்தில் உண்டு. இங்கு தான் புரட்சிகர தத்துவத்தில் தேர்ச்சிபெறுவதன் முக்கியத்துவம் புதைந்து கிடக்கின்றது. நமது தோழர்களை புரட்சிகர தத்துவத்தால் ஆயுதபாணிகளாக்க இது துணை செய்யும்.