அன்புத் தோழர்களே
மார்க்ஸ் சமூக விஞ்ஞானி; வரலாற்றுப் பொருள் முதல் வாதம் என்ற புதிய கோட்பாட்டை வகுத்த விஞ்ஞானி. அவர் கூறியவற்றை இன்று நடைமுறையில் காண்கிறோம். 135 ஆண்டுகளின் முன் 1848-ல் கம்யூனிஸ்ட் அறிக்கையில் கூறியவற்றை இன்று நடைமுறையில் காண்கிறேம், 30 வயதிலேயே அவரால் எழு தப்பட்ட இச்சிறு அறிக்கை மனித இனத்தின் சமூக வாழ்வு, அதன் இயங்கியல், வர்க்கப் போராட்டம், உலகப் புரட்சி, சோசலிச சமுதாயத்தின் அமைப்பு, அதைத் தொடர்ந்த கம்யூனிச சமூக அமைப்பு யாவையும் கூறி நிற்கிறது.
தோழர்களே இதனை தொடராக இங்கே எழுத முயற்சிப்பேன் உங்களின் விமர்சன்ங்களால் எனது எழுத்துகளை சீர்படுத்த அழைக்கிறேன் தோழர்களே–சிபி
நான் எழுத நினைத்துள்ள தொடர் கட்டுரைக்கு முன்னுரையாக இதனை எழுதுகிறேன்.
கார்ல் மார்க்ஸ், ஃபிரெட்றிக் ஏங்கெல்ஸ் ஆகிய இரு மேதைகளும் விஞ்ஞான பூர்வமாக வகுத்து அளித்துச் சென்ற தத்துவாமே மார்க்சியமாகும். அன்றுவரை ஆதிக்கம் செலுத்தி வந்த பழைமைவாத கருத்து முதல்வாத உலக நோக்கிற்கு எதிராக இயங்கியல் பொருள்முதல்வாதம் என்னும் புரட்சிகரமான உலக நோக்கை மார்க்சியம் நிலைநிறுத்திக் கொண்டது. மேலும் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு மட்டுமன்றி முழு மனிதகுல விடுதலைக்குமான தலைவிதியோடு தன்னை இணைத்துக் கொள்ளும் மாபெரும் வலிமையையும் பெற்றக்கொண்டது.
மார்க்சிசம் ஒரு விஞ்ஞானபூர்வமான தத்துவார்த்தத்தை முன்வைக்கின்றது. எவ்வாறு முதலாளித்துவத்தின் தோற்றம், வளர்ச்சி என்பவற்றை நடைமுறை ஆய்வுக்கு உட்படுத்தி தனது முடிவுகளை திடப்படுத்தி நிரூபித்துக்கொண்டதோடு அவற்றை முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாகப் பிரயோகித்தும் மார்க்சியம் வெற்றி கண்டது.
மார்க்சும், ஏங்கெல்சும் முதலாளித்துவ உற்பத்தி முறைமையில் உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள் பற்றிய துல்லியமான ஆய்வையும் தெளிவான வரையறைகொண்ட முடிவுகளையும் தமக்கேயுரிய மேதாவிலாசத்துடன் அணுகி ஆராய்ந்து அதன் மூலம் முதலாளித்துவம் நடைமுறைப்படுத்தி வரும் கூலி அடிமை முறையின் உள்ளார்ந்த அம்சங்கள் ஒவ்வொன்றையும் அவர்கள் அம்பலத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தினர்.
- முதலாளித்துவத்தின் ஒரே இலக்கு இலாபத்தைக் குவிப்பதும், மூலதனத்தைப் பெருக்குவதும் தான். மனிதர்களின் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோ அன்றி அவர்கள் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதோ அல்ல என்பதையும் மார்க்சும் ஏங்கெல்சும் தமது ஆய்வுகளின் மூலம் தெளிவுபடுத்திக் காட்டினார்கள்.
அன்றைய முதலாளித்துவம் தன்னை வளர்த்து நிலை நிறுத்திக் கொள்வதற்கு உலக நாடுகளை அடிமைப்படுத்தி அந்நாடுகளின் விலை மதிப்பற்ற வளங்கள் அனைத்தையும் சூறையாடிச்சென்றது. காலனித்துவ அமைப்பை இறுக்கிக்கொண்டது. இத்தகைய முதலாளித்துவ வளர்ச்சியையும் அதன் ஈவிரக்கமற்ற சுரண்டலையும் மார்க்சியம் நன்கு வெளிச்சமிட்டுக் காட்டியதுடன் நில்லாது அதற்கு எதிராகத் தொழிலாளி வர்க்கமும் அடக்கப்படும் காலனி நாடுகளும் போராட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியது.
இன்றைய உலகச் சூழலில் முதலாளித்துவம் ஏகாதிபத்திய நிலை நின்று தமது இராட்சத மூலதனம் கொண்டு உலக நாடுகளின் வளங்களைக் கொள்ளையிட புதிய புதிய வழிகளில் சுரண்டிக் கொண்டு நிற்கின்றது. அதுவே உலகமயமாதல் என்னும் நிகழ்ச்சித் திட்டமாகும்.
மார்க்சியம் அது தோற்றம் பெற்ற அதே இடத்தில் அப்படியே இருந்து வந்த ஒன்றல்ல. அது தனது விஞ்ஞான அடிப்படை காரணமாக வளர்ச்சியுற்றது. மாபெரும் அக்டோபர் புரட்சியின் மூலமாக லெனினியமாக வளர்ச்சி கண்டது. சீனப் புரட்சியின் ஊடாக மாவோ சிந்தனையாக விரிவுபெற்றது. இன்னும் பல நாடுகளின் புரட்சிகளில் மார்க்சியம் வளம் பெற்றது.
- மார்க்சியத்திற்கு ஏற்பட்ட தற்காலிகப் பின்னடைவை மீள முடியாத நிரந்தரமானது என்ற காட்டிக் கொள்வதற்கு ஏகாதிபத்தியப் பிரசாரம் பல முனைகளில் இருந்தும் ஏவப்படுகின்றது; அதனூடே உலகமயமாதல் திட்டங்களை முன்தள்ளியும் தனது சுரண்டலை நியாயப் படுத்த பல வகையான மூளைச் சலவை செய்யப் படுகின்றன.
- இராட்சத பல்தேசியக் கம்பனிகள் மூலமான பாரிய மூலதன ஊடுருவல் நடத்தப்படுகின்றது. முதலாளித்துவ நிலைப்புக்கான கருத்தியல்களும் கலாசாரச் சீரழிவுகளும் வேகமாகப் புகுத்தப்பட்டு வருகின்றன. சமூக நலன் சார்ந்த சிந்தனைகளும் கருத்துக்களும் அவற்றுக்குச் சார்பான பொதுவுடைமை எண்ணங்களும் குறிவைத்து தாக்கப்படுகின்றன. போராட்டங்கள், எழுச்சிகள், சமூகமாற்றம் என்பன மறுக்கப்பட்டு பழைமைவாதம், ஆதிக்கம், அடக்குதல் என்பன மீட்டுநிலைநிறுத்தப்படும் போக்கு வலுவடைகின்றது. இவை நமது நாடு உட்பட மூன்றாாம் உலக நாடுகளில் முனைப் படைந்திருக்கும் நிகழ்வுப் போக்குகளாகும்.
இதனூடே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 18 ஆண்டு தோழர் மாவோ அவர்கள் தன்னிலை விளக்கம் அளிப்பதுதான் கீழ் உள்ள பதிவு… இதில் நாம் கற்றவை என்ன என்பதே என் கேள்வி.
நாடு பூராவுமுள்ள மக்களிடையேயும் கட்சியின் செல்வாக்கு இன்னும் பரந்ததாகின்றது. இவையெல்லாம் மகத்தான சாதனைகள். இருப்பினும், எமது கட்சியின் புதிய உறுப்பினர் பலருக்கு இன்னும் கல்வியளிக்கப்படவில்லை. புதிய அமைப்புகள் பல இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. கட்சியின் புதிய உறுப்பினருக்கும் பழைய உறுப்பினருக்கும் இடையிலும் புதிய அமைப்புகளுக்கும் பழைய அமைப்புகளுக்குமிடையிலும் பெரிய வேறுபாடு இன்னும் நிலவுகின்றது. கட்சியின் புதிய உறுப்பினர் பலரும் ஊழியர் பலரும் இன்னும் போதியளவு புரட்சிகர அனுபவம் பெறவில்லை. அவர்கள் சீனாவின் வரலாற்று நிலைமை, சமுதாய நிலைமை ஆகியவை பற்றியும், சீனப்புரட்சியின் தனிச் சிறப்பியல்புகள் நியதிகள் ஆகியன பற்றியும் எதுவும் அறியாதவர்களாயிருக்கிறார்கள் அல்லது இன்னும் சிறிதளவேஅறிந்திருக்கின்றனர். மார்க்சிய லெனினியத் தத்துவத்திற்கும் சீனப் புரட்சியின் நடைமுறைக்குமிடையிலுள்ள ஐக்கியத்தைப் புரிந்து கொள்ளும் அவர்களின் ஆற்றல் விரிவானதாயுள்ளது என்று கூறுவதற்கே இடமில்லை.
கட்சி அமைப்புகளின் விரிவாக்கத்தின்போது, மையக்குழு “ கட்சியைத் துணிச்சலாக வளருங்கள்; ஆனால் தீயவர்கள் ஒருவரையும் கட்சிக்குள் அனுமதிக்காதீர்கள் ” என்ற முழக்கத்தை வலியுறுத்தி முன்வைத்த போதிலும் உண்மையில் கணிசமான அளவு பதவி வேட்டையாளரும் எதிரிச் சதிகாரரும் கட்சிக்குள் நுழைவதில் வெற்றிக் கண்டனர். ஐக்கிய முன்னணி அமைக்கப்பட்டு, மூன்றாண்டுகள்நிலைநிறுத்தப்பட்ட போதிலும், பூர்ஷ்வா வர்க்கம் குறிப்பாக, பெரும் பூர்ஷ்வா வர்க்கம் எமது கட்சியை அழிப்பதற்கு இடைவிடாது முயல்கிறது. பெரும் பூர்ஷ்வா வர்க்கச் சரணாகதி வாதிகளினதும் பிடிவாதவாதிகளினதும் தலைமையிலான கடுமையான மோதல்கள் நம்மீது நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன; பொதுவுடைமைக் கட்சி எதிர்ப்புக் கூச்சலுக்கு ஒழிவில்லை. இவையெல்லாம் ஜப்பானிய ஏகாதிபத்தியத்திடம் சரணடைவதற்கும் ஐக்கிய முன்னணியைத் தகர்ப்பதற்கும் சீனாவைப் பின் நோக்கி இழுத்துச் செல்வதற்கும் தயார் செய்வதற்காகப் பெரும் பூர்ஷ்வா வர்க்கச் சரணாகதிவாதிகளாலும் பிடிவாதவாதிகளாலும் பயன் படுத்தப்படுகின்றன.
பெரும் பூர்ஷ்வா வர்க்கம் சிந்தாந்த ரீதியிலே பொதுவுடைமையை “ அரிக்க ” முயல்கிறது. அதே வேளையில் அரசியல் ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் பொதுவுடைமைக் கட்சிக்கும் எல்லைப் பிரதேசத்திற்கும் கட்சியின் ஆயுத சக்திகளுக்கும் முடிவு கட்ட முயல்கின்றது. இச்சூழ்நிலைகளில், ஐயமின்றி, எமது கடமை, சரணடைவு, பிளவு, பின்னடைவு ஆகிய பேரிடர்களைச் சமாளிப்பதும் தேசிய ஐக்கியமுன்னணியையும் கோமிண்டாங் பொதுவுடைமைக் கட்சிக் கூட்டுறவையும் இயன்ற அளவு நிலைநிறுத்துவதும் தொடர்ந்து ஜப்பானிய எதிர்ப்பிற்காகவும் ஐக்கியம், முன்னேற்றம் ஆகியவற்றிற்காகவும் வேலைசெய்வதுமாகும். அதே வேளையில், எதிர்பாராதபடி நிகழக்கூடிய நிகழ்ச்சிகளைச் சமாளிப்பதற்குத் தயார் செய்ய வேண்டும். இதனால் அந்நிகழ்ச்சிகள் நிகழும் சமயத்தில் கட்சியும் புரட்சியும் எதிர்பாராத இழப்பிற்குள்ளாகமாட்டா. ஆகவே, நாம் எமது கட்சி அமைப்பையும் அதன் ஆயுதச் சக்திகளையும் உறுதிப்படுத்தி, சரணடைவிற்கும், பிளவிற்கும் பின்னடைவிற்கும் எதிரான திடமான போராட்டத்திற்காக நாடு பூராவுமுள்ள மக்களை அணிதிரட்ட வேண்டும். இந்தக் கடமையை நிறைவேற்றுவது கட்சி முழுவதினதும் முயற்சிகளிலும் கட்சி உறுப்பினர்களனைவரதும் ஊழியர்கள் அனைவரதும், எல்லா மட்டங்களிலும் இடங்களிலுமுள்ள அமைப்புகளைத்தினதும் தளராத, உறுதியான போராட்டத்திலும் தங்கியுள்ளது. பதினெட்டு ஆண்டுகால அனுபவத்தைக் கொண்ட சீனப்பொதுவுடைமைக் கட்சி தன் அனுபவமிக்கப் பழைய உறுப்பினரதும் ஊழியரதும் சுறுசுறுப்பும் இளமையுமுடைய புதிய உறுப்பினரதும் ஊழியரதும் கூட்டு முயற்சிகளினாலும், புடமிடப்பட்டு, போல்ஷெவியமாக்கப்பட்ட மையக்குழுவினதும் அதன் உள்ளூர்அமைப்புகளினதும் கூட்டுமுயற்சிகளினாலும் அதன் வலிமை மிக்க ஆயுத சக்திகளினதும் முற்போக்கான பொதுமக்களினதும் கூட்டு முயற்சிகளினாலும் இந்த நோக்கங்களை நிறைவேற்ற இயலும் என நம்புகிறோம்.( ̒கம்யூனிஸ்ட்டை அறிமுகம் செய்தல் ’ அக்டோபர் 4, 1938- மாசேதுங் நூலிலிருந்து).