கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்.
–நக்சல்பாரி முன்பும் பின்பும் – சுனிதிகுமார் கோஷ் –
நவம்பர் 1967-ல் நடைபெற்ற கூட்டம் முதல் உருவான முன்னேற்றங்கள் குறித்து மே, 1968-ல் நடந்த கூட்டத்தில் மீளாய்வு செய்த மைய ஒருங்கிணைப்புக் குழுவானது ஒரு புதிய பிரகடத்தை வெளியிட்டது.
இந்திய நாடு “பல்வேறு ஏகாதிபத்திய சக்திகளின் நவ காலனியாகவும், முதன்மையாக அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்தின் நவகாலனிய நாடாக மாறியுள்ளதை” அது சுட்டிக்காட்டியது.
“மனித குலத்தின் மிகக் கொடிய எதிரியாக விளங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள், இந்திய மக்களின் தீவிர எதிரிகளாவர்.” என்று அது குறிப்பிட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் திரிபுவாதம், இந்தியப் பெரு நிலவுடமையாளர்கள் மற்றும் தரகு முதலாளித்துவ வர்க்கம் ஆகியோர் தான் இந்திய மக்களின் முதன்மையான எதிரிகளாவர் என்று அது கூறியது.
இந்திய மக்களுடைய ஜனநாயகப் புரட்சியின் முதன்மையான சக்தியாகவும், தங்களுடைய எதிரிகளின் நேரடியான மற்றும் மறைமுகமான ஆட்சியைத் தூக்கியெறிவதற்கான முன்னணி சக்தியாகவும் விவசாயிகள் வர்க்கம் விளங்கும் என்று அதில் குறிப்பிட்டிருந்தது.உழைக்கும் வர்க்கத்தின் தலைமையின் கீழ் விவசாயிகள் வர்க்கமானது விவசாயிகள் புரட்சியை நிறைவேற்றுவதற்காக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்து, கிராமப்புறங்களில் புரட்சிகரத் தளப்பகுதிகளை அமைக்கும்.
நீண்டகால ஆயுதப் போராட்டத்தைக் கடைபிடித்துக் கிராமப்புறப் பகுதிகளிலிருந்து நகரங்களைச் சுற்றி வளைத்து, அவற்றைக் கைப்பற்றி, நாடு தழுவிய வெற்றிக்கு நடத்திச் செல்லும்.உழைக்கும் வர்க்கத்திற்கும் விவசாயிகள் வர்க்கத்திற்கும் இடையிலான உறுதிமிக்க கூட்டணிதான் உழைக்கும் வர்க்கம், விவசாயிகள் வர்க்கம், குட்டி முதலாளித்துவ வர்க்கம் மற்றும் தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஆகியவற்றைக் கொண்ட ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்கான அடிப்படையாக அமையும்.
மாசேதுங் சிந்தனைதான் பரட்சியின் வழிகாட்டியாகவும், அதைப் பரவலாகக் கொண்டு செல்வதுதான் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் முதன்மையான கடமையாகவும் இருக்கும்.
“வெகுமக்கள் பாதையைப் பின்பற்றினால் மட்டுமே இந்திய மக்களின் எதிரிகள் வீழ்த்தப்படுவார்களே தவிர சதி வேலைகளால் அல்ல” என்று அந்தப் பிரகடனம் எச்சரித்தது.
சித்தாந்தப் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக பர்த்வானில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் நிறை பேரவைக் கூட்டத்திற்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சிக்குள் இனிமேலும் உள்கட்சிப் போராட்டத்தை தொடருவதற்கான வாய்ப்பு புரட்சியாளர்களுக்கு இல்லை என்று அது கூறியது.மார்க்சிஸ்ட் கட்சிக்குள் புரட்சியாளர்கள் தொடர்ந்து நீடிப்பார்களேயானால் அது மக்களிடையே மாயைகளைத் தோற்றுவித்து அவர்களை ஒன்றுபட வைப்பதிலிருந்து தடுத்து நிறுத்தும்.
தனித்தனிக் குழுக்களைக் கலைத்து அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவுக்குள் தங்களை ஒன்றிணைத்துக் கொள்ளுமாறும், உண்மையான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியெழுப்புமாறும், மாசேதுங் சிந்தனை மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்கும் அந்தப் பிரகடனம் வேண்டுகோள் விடுத்தது.
ஆயுதமேந்திய போராட்டத்தின் மூலமாக அரசியலதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பாதையான புரட்சிகரப் பாதைக்கு எதிரான பாராளுமன்றப் பாதையைக் குறித்த தீர்மானத்தை அந்த கூட்டம் ஒருமனதாக நிறைவேற்றியது.
அந்தத் தீர்மானம் கூறியதாவது:
“சீனப் புரட்சியின் வெற்றி, அதனால் ஏற்படுத்தப்பட்ட தாக்கத்தின் விளைவாகத் தேசிய விடுதலை இயக்கங்களின் முன்னேற்றப் பாய்ச்சல் மற்றும் ஏகாதிபத்தியம் வீழ்ந்து வருவதும் சோசலிசம் விரைவாகப் பரவி வருவதுமான தற்கால சகாப்தத்தின் மார்க்சிய-லெனினியமாக மாறியுள்ள தலைவர் மாசேதுங் சிந்தனை ஆகியவற்றைத் தொடர்ந்து, ஏற்கெனவே வரலாற்று ரீதியாகக் காலாவதியாகிப் போயுள்ள முதலாளித்துவப் பாராளுமன்ற அமைப்புகள் பொதுவாக புரட்சிகளின் முன்னேற்றத்திற்கும், குறிப்பாக இந்தியா, போன்ற முதலாளித்துவம் அல்லாத நிலப்பிரபுத்துவ வகைப்பட்ட அரை நிலப்பிரபுத்துவ, அரை காலனிய நாடுகளின் புரட்சிகளுக்கும் பெரும் தடையாக மாறியிருக்கின்றன”.
“இந்தியாவில் பாராளுமன்ற வாதத்தின் மயான பூமியாக நக்சல்பாரி விளங்குகிறது” என்று அந்தத் தீர்மானம் மேலும் கூறியது. எனவே அது எழுப்பிய “தேர்தலைப் புறக்கணிப்போம்” என்ற முழக்கம் செயலுத்தியாக அல்லாமல் மூலவுத்தி சார்ந்த முழக்கமாக மாறியது.
அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்கள் முன்பாக, சாரு மஜூம்தார் சிலிகுரியில் இருந்த நேரத்தில், மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர்கள் இருமுறை கூடி, ஒவ்வொரு முறையும் குறைந்த பட்சம் நான்கு மணி நேரங்கள், இந்தப் பிரச்சனையைக் குறித்து விவாதிப்பதற்காகச் செலவிட்டனர்.
சுஷிடல்ராய் சௌத்ரி, பிரமோத் சென் குப்தா மற்றும் ஒன்று அல்லது இரண்டு தோழர்கள் மட்டுமே-அவர்களுள் ஒருவர் ஹவுராவைச் சார்ந்தவர்- தேர்தலில் பங்கேற்பதற்கு ஆதரவாக இருந்தார்கள்.
நான் உள்ளிட்ட எஞ்சிய அனைவரும் தேர்தல் புறக்கணிப்பை ஆதரித்தோம். அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுஷிடல்ராய் சௌத்ரி தனது நிலையை மாற்றிக் கொண்டு தேர்தல் புறக்கணிப்பை ஆதரித்தார். எனவே பெரிய அளவில் விவாதம் நடைபெறாமல் குறுகிய நேரத்தில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இன்றைய கட்டத்தில் அந்த தீர்மானமானது, சிபிஐ-சிபிஐஎம் கட்சிகளால் சீர்திருத்தவாத முறையில் சூழ்ச்சித்தனமாக பாராளுமன்றத் தேர்தல் கையாளப்பட்டுக் கொண்டிருந்ததன் மீதான வெறுப்பைக் குறிக்கின்ற புரட்சிகரத் தோழர்களின் எதிர்வினையாக எனக்குத் தோன்றுகிறது.
பாராளுமன்றத் தேர்தல்கள் பங்கேற்பு என்பது வர்க்கப் போராட்டம் மற்றும் புரட்சிகரப் போராட்டப் பாதை ஆகியவற்றுக்கு எதிரானது என முன்நிறுத்தப்பட்டால் அது கண்ணியாக, சூழ்ச்சிப் பொறியாக மாறி வர்க்கப் போராட்டப் பாதையிலிருந்தும் புரட்சிகர போராட்டப் பாதையிலிருந்தும், மக்களைத் திசை திருப்பும்.(to be checked
through book)
சிபிஐ-சிபிஐஎம் கட்சிகளும், பிற ஆளும் வர்க்கக் கட்சிகளும் இதுவரை இதைத்தான் செய்து வந்தன; செய்து வருகின்றன. லெனின் பாராளுமன்ற வாதத்தின் தீமைகளை அம்பலப்படுத்தினார்.அவர் கூறியதாவது:
“ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆளும் வர்க்கத்தைச் சார்ந்த எந்தப் பிரிவினர் பாராளுமன்றம் மூலமாக மக்களை அடக்குவது, ஒடுக்குவது என்பதைத் தீர்மானிப்பதுதான் பாராளுமன்ற அரசியல் சட்ட வரம்புக்கு உட்பட்ட முடியரசுகளுக்கு மட்டுமின்றி, பெரும்பாலான ஜனநாயகக் குடியரசுகளிலும் நிலவுகின்ற முதலாளித்துவப் பாராளுமன்றவாதத்தின் உண்மையான சாரமாக விளங்குகிறது. அமெரிக்கா முதல் சுவிட்சர்லாந்து வரையிலான நாடுகள், பிரான்சு முதல் பிரிட்டன் வரையிலான நாடுகள், நார்வே மற்றும் இன்னபிற நாடுகள் போன்ற ஏதேனும் பாராளுமன்ற நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள்; இவ்வனைத்து நாடுகளிலும் “அரசின்” உண்மையான பணி திரை மறைவுகளில் நிறைவேற்றப்பட்டு, துறைகள், அமைச்சகங்கள், நிர்வாக அமைப்புகள் ஆகியவற்றின் வாயிலாகச் செயல்படுத்தப்படுகிறது. “சாதாரண மக்களை” முட்டாள்கள் ஆக்குவதற்கான சிறப்புத் தேவைக்காக வாதங்கள் புரிகின்ற பணி மட்டுமே பாராளுமன்றத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.”
இத்தாலிய, பிரஞ்சு மற்றும் ஜெர்மன் கம்யூனிஸ்ட்டுகளுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் லெனின் கூறியதாவது:
“முதலாளித்துவவாதிகளின் நுகத்தடியின் கீழும்,கூலி-அடிமை முறையின் நுகத்தடியின் கீழும் நடைபெறுகின்ற தேர்தல்களில் பாட்டாளி வர்க்கம் முதலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்றும், அதற்குப் பின்னர்தான் அதிகாரத்தை வெல்ல முடியும் என்றும் அயோக்கியர்களும், பாமரர்களும் மட்டுமே சிந்திக்க முடியும். இது முட்டாள்தனத்தின் அல்லது போலித்தனத்தின் உச்சபட்ச நிலையாகும்.
இது வர்க்கப் போராட்டம் மற்றும் புரட்சிக்கு மாற்றாகப் பழைய அமைப்பு மற்றும் பழைய அதிகாரம் ஆகியவற்றின் கீழ் தேர்தல்களை முன்நிறுத்துவதும் ஆகும்.”
லெனினை மீண்டும் மேற்க்கோள் காட்டுவோமெனில்,
“மிகவும் ஜனநாயகம் வளர்ச்சியுற்ற முதலாளித்துவ குடியரசுகளும் கூட வர்க்க ஒடுக்குமுறை அமைப்புகளாகவே விளங்குகின்றன என்ற அவற்றின் உள்ளார்ந்த தன்மையைப் பாராளுமன்றவாதம் வெளிப்படுத்துகிறதேயன்றி ஒழித்து விடுவதில்லை.”
தற்போதைய அமைப்பின் கீழ் சீர்திருத்தவாதிகளுடனும், அது போன்று பிறருடனும் கூட்டணி அமைச்சரவை உருவாக்குவது தொடர்பாக லெனின் கூறியதாவது:
“மேற்கில் (மேற்கு ஐரோப்பாவில்) உள்ள சமூகச் சீர்திருத்தவாதிகளுடனும், ரஷ்யப் புரட்சியின் போது முற்போக்குச் சீர்திருத்தவாதிகளுடனும் (காடேட்டுகள்) ஏற்படுத்தப்பட்ட கூட்டணியின், முன்னணிகள், உடன்படிக்கைகள் ஆகியவற்றின் படிப்பினை அனைத்தும் இவ்வுடன்படிக்கைகள் வெகுமக்களுடைய உணவுர்களை மழுங்கடிக்கவே செய்யும் என்பதையும், போராடுவதற்கு திராணியற்ற, ஊசலாட்டம் மிக்க, துரோக்கச் சக்திகளைப் போராளிகளுடன் இணைப்பதன் மூலமாக, வெகு மக்களுடைய போராட்டத்தின் உண்மையான முக்கியத்துவத்தை அவை பலவீனப்படுத்துமே அல்லாமல் உயர்வடையச் செய்யாது என்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளன.”
ஆனால் மிகவும் பிற்போக்கான தொழிற்சங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆற்றுகின்ற பணியினைப் போன்று பாராளுமன்றத் தேர்தல் பங்கேற்பை வர்க்கப் போராட்டக் குறிக்கோளுக்காகவும், புரட்சியின் குறிக்கோளுக்கு சேவை செய்வதற்காகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை லெனின் போதித்தார்.
ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி வாக்குகளைச் சேகரிப்பதற்காகவாே அல்லது தொகுதிகளைக் கைப்பற்றுவதற்காகவாே தேர்தலை பயன்படுத்தக் கூடாது, மாறாக, அரசியல் பிரச்சனைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக மக்கள் தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்தும் போது, அன்றாட வாழ்வில் கிடைக்கப்பெறும் அறிவை விட இது போன்ற கருத்துப் பரப்பலை அவர்கள் வரவேற்கும் போது, புரட்சிகர அரசியலைப் பரப்புவதற்காகத் தேர்தல்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பாராளுமன்றப் பாதையிலிருந்து (புரட்சிகரப் பாதையிலிருந்து மக்களைத் திசை திருப்புகின்ற பாதை), பாராளுமன்றத் தேர்தல்கள் பங்கேற்பு மூலம் புரட்சிகர அரசியலைப் பரப்புதல் மற்றும் புரட்சிகரப் பாதையின் ஊடாக மக்களை முன்னேறச் செய்தல் ஆகியவற்றை ஒருவர் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.
லெனின் மிக மோசமான பாராளுமன்ற அமைப்பைக் கூடப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஆதரவாகவே இருந்தார். வர்க்கப் போராட்டம் மற்றும் புரட்சிக்கு மாற்றாக அல்ல; மாறாக அவற்றிற்கு உதவியாகப் பயன்படுத்திக் கொள்வதை அவர் ஆதரித்தார்.
அவர் கூறியதாவது:
“எத்தனை பாராளுமன்றத் தொகுதிகளை வென்றோம் என்பது நமக்கு முக்கியமல்ல; தொகுதிகளைக் கைப்பற்றுவது நமது நோக்கமல்ல”
அவர் மேலும் எழுதியதாவது:
“அவர்கள் (கம்யூனிஸ்ட்டுகள்) பாராளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றுவற்கு முயற்சிக்கக் கூடாது. மாறாக மக்களைச் சிந்திக்கத் தூண்டுவதற்கும், வெகு மக்களைப் போராட்டத்தில் இணைப்பதற்கும் முயற்சிக்க வேண்டும். தேர்தல் காலங்களைத் தவிர (இயல்பாகவே பெரும் வேலைநிறுத்தங்கள் நடை பெறும் காலகட்டங்களைத் தவிர்த்து) வேறெப்போதும் சாத்தியமல்ல (முதலாளித்துவ ஆட்சியின் கீழ்) என்னும் வகையில் அவர்கள் போல்ஷிவிசம் குறித்து மக்களுக்கு விளக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்”
அவரை மேற்கோள் காட்டுவோமெனில்,
“நமக்கு காலாவதியாகிப் போனதாகத் தோன்றும் விசயத்தை ஒரு வர்க்கத்துக்கும், மக்கள் திரளுக்கும் காலாவதியாகிப்போன ஒன்றாக நாம் கருதக் கூடாது”.
“புரட்சிகரத் தேவைகளுக்காகப் பிற்போக்குப் பாராளுமன்றங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் கடினமான பணியை த் “தவிர்ப்பதன்” மூலமாக, இந்த இடர்பாட்டை “நேர்கொள்ளாமல் சுற்றி வளைத்துச்” செல்ல முற்படுவது என்பது சிறுபிள்ளைத் தனமானது ஆகும்.
அவரை மீண்டும் மேற்கோள் காட்டுவதெனில், “நாம் பாராளுமன்றத்தை தகர்ப்பதற்காகவே பாராளுமன்றத்தில் உள்ளிருந்து போராட்டத்தை மேற்கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்”.
முதலாளித்துவ அமைப்பு உள்ளவரையில் கூட்டணி அரசாங்கங்களைக் கம்யூனிஸ்ட்டுகள் உருவாக்குவது பற்றி லெனின் கூறியதாவது:
“சோசலிஸ்ட்டுகள்” உள்ளிட்ட அனைத்து வகைப்பட்ட “கூட்டணி” அமைச்சரவைகள் என்ற பெயரில் அது எப்பாேதும் நடைபெறுகிறது. இந்த சோசலிஸ்ட்டுகள் மத்தியில் பல தனிநபர்கள் அப்பழுக்கற்ற நேர்மைக்குச் சொந்தக்காரர்களாக இருப்பினும், யதார்த்தத்தில் முதலாளித்துவ அரசாங்கத்தின் பயனற்ற அலங்கார ஆபரணமாக, அல்லது மூடுதிரையாக, அரசாங்கத்தின் மீதிருந்து மக்களுடைய கோபத்தைத் திசைதிருப்புகிற ஏதேனும் வகைப்பட்ட இடி தாங்கியாக, மக்களை ஏமாற்றுவதற்கு அரசாங்கத்தின் கைகளில் உள்ள கருவியாக மாறி விடுகிறார்கள்.
எனவே முதலாளித்துவ அமைப்பு நீடிக்கின்ற வரையிலும், பழைய முதலாளித்துவ, அதிகாரவர்க்க அரசு இயந்திரம் நிலைத்திருக்கும் வரையிலும், அது எப்பாேதும் அவ்வாறே இருந்து வருகின்றது; அது போலவே நீடிக்கும்”. பாராளுமன்றச் செல்லப்பிராணிகளான” சமூக ஜனநாயக வாதிகளின் வெற்று ஆரவாரப் பேச்சுக்களைப் பற்றி அவர் கூறியதாவது:
“கிராமப்புறப் பாமரர்களை மூழ்கடிப்பதற்கு புரட்சிகர-ஜனநாயகச் சொற்றாெடர்கள்; முதலாளித்துவவாதிகளின் “இதயங்களைக் குளிர்விப்பதற்கு” அதிகார வர்க்கமும், விதியாெழுங்கு முறையும்- இதுதான் நேர்மையான கூட்டணியின் சாரமாக உள்ளது”.
லெனினை மீண்டும் மேற்காேள் காட்டுவாேமெனில்,
“இந்த கட்சியின் (போல்ஷிவிக் கட்சியின்) பாராளுமன்றப் பிரதிநிதிகள், முதலாளித்துவ அரசாங்கத்தில் உள்ள அமைச்சரவைப் பொறுப்புகளுக்கு இட்டுச் செல்லும் பாதையில் பயணிப்பதை விடச் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்படுவதை விரும்புகிறார்கள்.”
லெனினிடமிருந்து மேலும் ஒரு பத்தி:
“அரசாங்கத்தின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளதை உணர்ந்த அவர்கள் (முதலாளித்துவவாதிகள்) தொழிலாளர்களை முட்டாள்களாக்கி, அவர்களைப் பிளவுபடுத்திப் பலவீனப்படுத்தும் பொருட்டு, 1848- முதலாகப் பல்லாண்டுகளாகப் பிற நாடுகளிலுள்ள முதலாளித்துவவாதிகளால் பின்பற்றப்பட்டு வரும் முறையைக் கையாளத் தொடங்கியுள்ளார்கள். இந்த முறைதான் “கூட்டணி” அரசாங்கம் என்று, அதாவது முதலாளித்துவ வர்க்கத்தினரையும், சோசலிசத்திலிருந்து விலகிய கட்சிமாறிகளையும் உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்பட்ட கூட்டு அமைச்சரவை என்று அறியப்படுகிறது. “சோசலிசத்” தலைவர்கள் முதலாளித்துவ அமைச்சரவைக்குள் நுழைந்த பிறகு பெயரளவிலான தலைவர்களாகவும், பொம்மைகளாகவும், முதலாளித்துவவாதிகளின் மூடுதிரையாகவும், தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கான கருவிகளாகவுமே எப்பாேதும் இருந்து வந்துள்ளார்கள்”
தேர்தல்கள் பற்றிய தீர்மானத்தை நாம் மேற்காெள்வதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பாகச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மையக்கழுவானது சோவியத் கட்சியின் மையக்குழுவுக்குக் கடிதம் எழுதியிருந்தது.
அதில் கூறியிருந்ததாவது:
“பாட்டாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரைப் புரட்சியில் வழிநடத்தும் பொருட்டு மார்க்சிய, லெனினியக் கட்சிகள் அனைத்துப் போராட்ட வடிவங்களையும் பயன்படுத்துவதில் நன்கு தேர்ச்சியுற்று, போராட்டச் சூழல்களில் ஏற்படும் மாற்றத்திற்கேற்ப ஒரு வடிவத்திற்கு பதிலாக மற்றாெரு வடிவத்திற்கு விரைவாக மாறக் கூடிய திறன் படைத்திருக்க வேண்டும்.
அமைதியான போராட்டம் மற்றும் ஆயுதப் போராட்டம், வெளிப்படையான போராட்டம் அல்லது இரகசியப் போராட்டம், சட்டப்பூர்வமான போராட்டம் மற்றும் சட்டவிராேதமான போராட்டம், பாராளுமன்றப் போராட்டம் மற்றும் வெகுமக்கள் போராட்டம் போன்ற அனைத்துப் போராட்ட வடிவங்களையும் கற்றுத் தேர்ந்தால் மட்டுமே பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை அனைத்துச் சூழ்நிலைகளிலும் வெல்லப்பட முடியாத ஒன்றாக விளங்கும்.
பாராளுமன்ற மற்றும் பிற சட்டப்பூர்வமான போராட்ட வடிவங்களைப் பயன்படுத்தக் கூடிய சூழலில் அவற்றைப் பயன்படுத்த மறுப்பது தவறான ஒன்றாகும். இருப்பினும், முதலாளித்துவ வாதிகளால் அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் போராட்டத்தைக் குறுக்கிச் சட்டவாதம் அல்லது பாராளுமன்ற முடக்குவாதத்திற்குள் ஒரு மார்க்சிய-லெனினியக் கட்சி வீழுமேயானால், அது தவிர்க்கவியலாத வகையில் பாட்டாளி வர்க்கப் புரட்சியையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் கை விடுவதற்கு வழிவகுக்கும்.”
நக்சல்பாரியின் அனுபவம் என்னவாக இருந்தது? தேர்தல்கள் பற்றிய தீர்மாணத்தை மேற்காெள்வதற்கு ஓராண்டிற்கு முன்பாக சாரு மஜூம்தாரால் எழுதப்பட்டிருந்த “திரிபுவாதத்திற்கு எதிராகப் போராடுவதன் மூலமாக ஆயுதப் போராட்டத்தைக் கட்டியெழுப்புவாேம்” (அவருடைய எட்டு ஆவணங்களில் ஏழாவது ஆவணம்) என்ற ஆவணத்தில் கூறப்பட்டிருந்ததாவது:
“பொதுத் தேர்தல்களின் போது அதிருப்திக்கு உள்ளாகியிருக்கும் மக்கள், அரசியல் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள விரும்புவர். அவற்றை அறிந்தும் கொள்வர். வரவிருக்கின்ற தேர்தல்களை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நாம் நமது அரசியலைப் பரப்ப வேண்டும். மக்கள் ஜனநாயகப் புரட்சி குறித்து நம்முடைய அரசியலை உழைக்கும் வர்க்கத்தின் தலைமையின் கீழ் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியாேர் இடையிலான கூட்டணி, ஆயுதப் போராட்டம் மற்றும் கட்சியின் தலைமையை நிறுவுவதற்கான அரசியல் ஆகியவற்றை நாம் துணிவுடன் மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டும். இந்த வாய்ப்பை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”
ஆயுதந் தாங்கிய விவசாயிகள் புரட்சியின் பாதையைப் பின்பற்றுவதற்கு முடிவெடுத்திருந்த நக்சல்பாரிப் பகுதியைச் சார்ந்த புரட்சிகரத் தோழர்கள் தங்களுடைய அரசியலை மக்களிடையே பரப்புவதற்காக 1967-ன் தொடக்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள். முன்னர் கண்டது போல, சிலிகுரி துணை மண்டல விவசாயிகள் சங்கத்தின் தலைவரும் முன்னணி கம்யூனிஸ்ட் புரட்சியாளருமாகிய ஜங்கர் சந்தால் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பன்சிதேவா சட்டசபைத் தொகுதியில் நிறுத்தப்பட்டார்.
நக்சல்பாரிப் பகுதியைச் சார்ந்த கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் வாக்குகளைச் சேகரிப்பதற்காகத் தேர்தல் பிரச்சாரத்தைப் பயன்படுத்தவில்லை. மாறாக ஆயுதந்தாங்கிய விவசாயிகள் புரட்சியின் அரசியலைப் பரப்புவதற்காகவும், எதிர்வருகின்ற புரட்சிகரப் போராட்டத்திற்காக மக்களைத் தயார்படுத்துவதற்காகவும் அவற்றைப் பயன்படுத்தினார்கள். பரவலாக நடத்தப்பட்ட பிரச்சாரம் குந்தகம் விளைவிப்பதற்குப் பதிலாக உண்மையில் நக்சல்பாரி விவசாயிகள் கிளர்ச்சிக்கு உதவியது.
லெனின் போதனைகள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் படிப்பினைகள் மற்றும் நக்சல்பாரியின் சொந்த அனுபவம் ஆகியவை புறக்கணிக்கப்பட்டன, மேலும் வர்க்கப் போராட்டம், புரட்சி ஆகியவற்றின் எதிர்நிலையில் அமைந்துள்ள பாராளுமன்றப் பாதையிலிருந்து, புரட்சியின் குறிக்காேளுக்கு உதவுகின்ற வழிகளாகத் தேர்தல் பங்கேற்பைத் தெளிவாக வேறுபடுத்திப் பார்க்க நாம் தவறினாேம்.
இந்தக் கூட்டத்தில்தான் நமது தொழிற்சங்கப் பணி மீதான நீண்ட தீர்மானத்தை அகில இந்திய ஒருங்கினைப்புக் குழு மேற்காெண்டது. உழைக்கும் வர்க்கத்தின் முனையில், தொழிற்சங்கப் பணியினை விரிவுபடுத்துவதன் அவசியத்தையும், பொருளாதார வாதத்திற்கு எதிராகப் போராடுவதன் தேவையையும் இந்தக் கூட்டம் வலியுறுத்தியது. முதற்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்ததைப் போல, இந்தக் கூட்டத்திலும் தொழிற்சங்கங்கள் மூலமாக உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்களைக் கட்டியமைக்கும் பணிக்குச் சரியாகவே முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
மாசேதுங் சிந்தனையைப் பரவலாகக் கொண்டு செல்வது குறித்தும், புரட்சிகரக் கட்சி ஒன்றைக் கட்டியெழுப்பும் தேவை குறித்தும், முதலாளித்துவப் பின்புலம் கொண்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்களை, ஏழை மற்றும் நிலமற்ற விவசாயிகளுடன் ஒன்றிணைப்பது குறித்தும், கிராமப்புறப் பகுதிகளில் வர்க்கப் போரைத் தீவிரப்படுத்துவது குறித்தும், உழைக்கும் வர்க்கத்தினரின் போராட்டங்களை க் கட்டியமைப்பது குறித்தும் அந்த கூட்டத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் முடிவுற்ற பிறகு சாருமஜூம்தார் தான் சில சொற்களை சேர்க்க விரும்புவதாகக் கூறினார். பளபளப்பும் ஒப்பனையும் நிறைந்த மாபெரும் காட்சியாென்று நக்சல்பாரியில் விரைவில் அரங்கேறப் போகிறது என்று தனனுடைய வழக்கமான உற்சாகத்துடன் அவர் கூறினார். மேடை தயாராகி விட்டது. அது புதிய வரலாற்றை உருவாக்கும். அண்மையில் கோகன் மஜூம்தாரின் நூலைப் படிக்கும் வரையில் நான் இந்த மாபெரும் காட்சி குறித்து அறிந்திருக்கவில்லை.
கணுசன்யால், கோகன் மஜூம்தார் மற்றும் போராளி விவசாயிகள் நூறு பேர் மலைகளுக்கு சென்று ஒரு தேயிலைத் தோட்டத்திற்கு அருகில் உள்ள இடம் ஒன்றைத் தேர்வு செய்தார்கள். அங்கு கொரில்லாப் போர்ப் பயிற்சியை மேற்காெள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கும், மலைகள் மற்றும் டெராய் பகுதியில் உள்ள காவல்துறை முகாம்களின் மீது தாக்குதல்கள் மேற்காெள்வதற்கும் அவர்கள் விரும்பினார்கள்.
அவர்கள் சில முகாம்கள் குறித்த தகவல்களையும் சேகரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் பட்டினி அவர்களை வாட்டியது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவர்களுக்கு உணவு வழங்கினார்கள். அவர்கள் காடுகளில் விளைந்த பொருட்களையே உணவாகக் கொண்டு காலம் கழித்தனர்.
24 நாட்களுக்குப் பிறகு உணவைக் கொண்டு வருவதற்காக கணுசன்யாலும் அவருடன் சேர்ந்து சில விவசாயிகளும் நக்சல்பாரிக்குச் சென்றனர். ஆனால் அவர்கள் நான்கு நாட்கள் கடந்த பின்பும் திரும்பவில்லை. ஆகவே மற்ற தோழர்களும் மலைகளிலிருந்து கீழே இறங்கி வந்துவிட்டனர். காட்சியும் நிறைவுற்றது.
மாசேதுங் கூறியது போல, “நாம் நமது மூளையைக் குளிர்வாகவும் சூடாகவும் வைக்க வேண்டும். இதுவும் ஒரு பொருளில் இருக்கும் இரண்டு எதிர்மறைகளாகும். பொங்கியெழும் உற்சாகம் என்பது மூளை சூடாவதைக் குறிக்கும். விஞ்ஞானப் பூர்வமாக ஆய்வது என்பது குளிர்ந்த நிலையில் மூளை உள்ளதைக் குறிக்கும்.”
சாருமஜூம்தாரிடத்திலும் எங்களிடத்திலும் சூடான மூளைக்குப் பஞ்சமில்லை. அது மாசேதுங் அறிவுறுத்தியதை விட மிக அதிகமாகவே எங்களிடம் இருந்தது. ஆனால் அவரிடத்திலும் எங்களிடத்திலும் குளிர்வான மூளூயின் பற்றாக்குறை இருந்தது.
தூல நிலைமைகள் குறித்த விஞ்ஞானப் பூர்வமான ஆய்வை சாருமஜூம்தார் மிக அரிதாகவே கடைபிடித்தார். கூடுதலான அளவிலாே அல்லது குறைந்த அளவிலாே நாங்களும் அவருடன் சேர்ந்து இந்த பண்புக் கூறைப் பகிர்ந்து கொண்டாேம்.
இந்தக் கூட்டத்தில்தான் ஒருங்கிணைப்புக் குழுவின் பெயரான சிபிஎம்-ல் உள்ள புரட்சியாளர்களின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு
என்பது கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு என்பதாக மாற்றப்பட்டது.
என்னால் நினைவு கூர முடிந்த வரையில், பஞ்சாபின் பிரதிநிதியாக ஒரு தோழர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஒரிசாவை யாரும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இந்தக் கூட்டத்தில்தான் நான் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டேன். ………..தொடரும்…………