நக்சல்பாரி எழுச்சி பற்றி
நக்சல்பாரி எழுச்சி பற்றி

நக்சல்பாரி எழுச்சி பற்றி

நக்சல் எழுச்சி –புரட்சியாக மலரத் தவறிய கலகம்

தியாகுமுன்னாள் நக்சல் இயக்க உறுப்பினர் மற்றும் எழுத்தாளர்

  • 28 மே 2017

(இந்தியாவில் நக்சல்பாரி புரட்சி இயக்கம் தொடங்கப்பட்டு 5ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அந்த அமைப்பு தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து பல்வேறு தளங்களில் உள்ள சிந்தனையாளர்கள் பிபிசிதமிழ்.காம் பக்கங்களில் தங்கள் கருத்துகளை எழுதுகின்றனர். அந்தக் கட்டுரைத் தொடரில் இரண்டாவதாக, எழுத்தாளர் தோழர் தியாகு அவர்கள் எழுதியுள்ள கட்டுரை இன்று வெளியாகிறது. நக்சல் இயக்கத்தின் ஆயுதப் போராட்டத்தில் நேரடியாகப்பங்கேற்று தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் பெற்று 15 ஆண்டுகள் சிறையில் கழித்தவர் தியாகு. இத்தொடரில் வெளியாகும் கருத்துக்கள் கட்டுரையாளர்களுடைய சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர், பிபிசி தமிழ்.)

தோழர் தியாகு

கடந்த 1967ஆம் ஆண்டு நான்காம் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து இந்தியாவில் பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன.

மேற்கு வங்காளம், பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் முற்றாளுமை முடிவுற்று எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. நடுவணரசிலும் வலுக்குன்றிய நிலையில்தான் காங்கிரசால் மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்தது.

பொதுவாக நாடெங்கும் காங்கிரசுக்கு எதிரான அலைவீச்சு தென்பட்டாலும், காரணிகள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டன. தமிழ்நாட்டில் திமுகவைத் தூக்கிவிட்ட காங்கிரஸ் எதிர்ப்பில் இந்தி எதிர்ப்புக்கு ஒரு முகாமைப் பங்கு இருந்தது. பஞ்சாபில் அகாலி தளம் கண்ட வெற்றி சீக்கியம் சார்ந்த பஞ்சாபிய இனவுணர்வின் வெளிப்பாடு எனலாம்..

இந்திய நாடெங்கும் வெளிப்பட்ட அரச எதிர்ப்பு மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் அடிப்படை சமூக மாற்றத்துக்கான வேட்கையின் விளைவாக அமைந்தது.

நக்சல் இயக்க தலைவர்கள்

கடந்த 1964-ஆம் ஆண்டு இந்தியப் பொதுமைக் கட்சியில் (CPI) பிளவு ஏற்பட்டு மார்க்சியக் கட்சி (CPM) பிறந்த போது உண்மையான ஒரு புரட்சிக் கட்சி தோன்றி விட்டதாக நம்பியவர்கள் அக்கட்சியில் இருந்தார்கள். இவர்களால் அக்கட்சி இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு மாநில அரசில் பங்கேற்பதை ஏற்க முடியவில்லை.

இந்திய அரசமைப்பை உள்ளிருந்து தகர்ப்போம் என்றும், மாநில அரசை இந்திய அரசுக்கெதிரான போராட்டக் கருவியாகப் பயன்படுத்துவோம் என்றும் சி.பி.எம். தலைமை கூறிய சமாதானத்தை இவர்கள் மறுதலித்தார்கள்.

சாரு மஜும்தார்

மேற்கு வங்கத்தில் சாரு மஜும்தாரும் கனு சன்யாலும் இவர்களில் முக்கியமானவர்கள். டார்ஜிலிங் மாவட்டம் சிலிகுரி வட்டம் நக்சல்பாரியில் உழவர்களின் புரட்சிகரமான நில மீட்புப் போராட்டத்தை இவர்கள் ஒழுங்கு செய்து நடத்தினார்கள்.

நக்சல்

மார்க்சியக் கட்சி முக்கிய உறுப்பு வகித்த மேற்கு வங்க மாநில அரசு இவர்களைக் கைது செய்து சிறையிலடைத்துப் போராட்டத்தை ஒடுக்கியது. இதுவே நக்சல் இயக்கத்தின் தொடக்கப் புள்ளி ஆயிற்று.

புறநிலையில் காங்கிரசாட்சியின் வீழ்ச்சி பரந்துபட்ட வெகுமக்களிடையே வளர்த்து விட்ட எதிர்பார்ப்பும், அகநிலையில் சி.பி.எம். கட்சியின் ஒரு பிரிவினர் கொண்டிருந்த புரட்சிகர ஆர்வமும் நக்சல் இயக்கத்தின் பிறப்புக்கு வழிவகுத்தன.

வரலாற்று நியாயம்

இரு வகையிலும் இது ஒரு கலகத்தைக் குறித்தது. நீதிக்கான கலகங்கள் யாவும் நியாயமானவை. சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான கலகம் என்ற வகையிலும், சொல்லளவில் புரட்சியும், செயலளவில் பதவி அரசியலும் ஆகிய சி.பி.எம். தலைமையின் வாய்ப்பிய (சந்தர்ப்பவாத) அணுகுமுறைக்கும் எதிரான கலகம் என்ற வகையிலும் நக்சல் இயக்கப் பிறப்புக்கு வரலாற்று நியாயம் உண்டு.

நக்சல் இயக்கம்

இப்படி ஒரு வரலாற்று நியாயம் இருந்த படியால்தான் நக்சல்பாரி என்ற சிற்றூரில் தீப்பொறியாக எழுந்த இயக்கம் ஓரளவுக்கு இந்தியத் துணைக்கண்டமெங்கும் காட்டுத் தீயாகப் பரவிற்று எனலாம்.

நக்சல் இயக்கப் பிறப்பை சாரு மஜும்தார் வசந்தத்தின் இடிமுழக்கம் என்று வர்ணித்தார். இந்த முழக்கம் பீகார், ஒரிசா, வங்கம், தமிழ்நாடு, கேரளம் என்று எட்டுத் திக்கும் எதிரொலித்தாலும், ஆந்திரத்தில், குறிப்பாகத் தெலங்கானாப் பகுதியில், இன்னுங்குறிப்பாக சிறிகாகுளம் மாவட்டத்தில் பெருந்திரள் வீச்சுப் பெற்றது.

நக்சல் இயக்கத்தின் அமைப்பு வடிவமாக 1969 ஏப்ரல் 22ஆம் நாள் கல்கத்தாவில் இந்தியப் பொதுமைக் கட்சி (மார்க்சிஸ்டு-லெனினிஸ்டு) பிறந்தது.

தமிழகத்தில் தோழர் எல்.அப்பு, ஏ.எம்.கோதண்டராமன், புலவர் கலியபெருமாள், பி.வி,சீனிவாசன், ஆர்.மாணிக்கம் ஆகியோர் மா-லெ கட்சியின் மாநில அமைப்புத் தலைவர்கள் என்ற முறையில் நக்சல் இயக்க முன்னோடிகள் ஆவர்.

`தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும்’

நக்சல் இயக்கம்

கட்சியின் ஆங்கிலத் திங்களேடு லிபரேசனில் சாரு மஜும்தார் “மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும்” என்ற தலைப்பில் விடுத்த அழைப்பை ஏற்றுப் படிப்பையும் குடும்பத்தையும் துறந்து கிராமங்களில் புரட்சிப் பணிக்கு வந்த முதல் தமிழக மாணவன் நான்.

உடனடி ஆயுதப் போராட்டம், அந்தப் போராட்டத்தின் ஒரே வடிவம் வர்க்கப் பகைவர்களை அழித்தொழித்தல் என்ற கட்சிக் கட்டளைப்படி செயல் புரிந்து, அதற்காகத் தூக்குத் தண்டனையும் ஆயுள் தண்டனையும் பெற்று, பதினைந்து ஆண்டுக்காலம் சிறையில் கழித்து வெளியே வந்தவன் என்ற முறையில் மட்டுமல்லாமல், இப்போதும் புரட்சியை நேசித்து அதற்காக உழைத்துக் கொண்டிருப்பவன் என்ற முறையிலும் ஒருசில வினாக்களுக்கு விடை சொல்லக் கடமைப்பட்டவன் நான்:

வென்றதா, தோற்றதா?

நக்சல் இயக்கம் வென்றதா? தோற்றதா? தோற்றது என்றால் தோல்விக்கு என்ன காரணம்? இந்த இயக்கத்திற்கு வருங்காலம் உண்டா? அதன் இன்றைய, நாளைய பொருத்தப்பாடு என்ன?

நக்சல்

நக்சல் இயக்கம் ஏற்படுத்தியுள்ள வரலாற்றுத் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிடாமலே — அதன் கடந்தகால, நிகழ்கால சாதனைகளைச் சிறுமைப்படுத்தாமலே, அதன் அளப்பரிய உழைப்பையும், ஈடிணையற்ற ஈகத்தையும் கொச்சைப்படுத்தாமலே – இறுதி நோக்கில் அதன் தோல்வியை அறிந்தேற்க வேண்டியவனாய் உள்ளேன்.

நக்சல் இயக்கம் என்பதொரு கலகம், வரலாற்று நியாயம் கொண்ட கலகம்! ஆனால் கலகம் வேறு, புரட்சி வேறு. கலகம் புரட்சியாக மாறத் தவறி விட்டது என்பதுதான் நக்சல் இயக்கத்திற்கு நேர்ந்த அடிப்படைத் தோல்வி.

தோல்விக்கான காரணங்களைப் பட்டியலிடுவதானால்,

முதலாவதாக, நாடெங்கும் உடனடி ஆயுதப் போராட்டம், அதன் ஒரே வடிவமாக அழித்தொழிப்பு என்பது மக்களை அணிதிரட்டுவதற்குப் பதிலாக, மக்களிடமிருந்து தனிமைப்பட்டு மூர்க்கமான அரசு அடக்குமுறையை வலிந்து அழைப்பதாக அமைந்து விட்டது.

இரண்டாவதாக, சிறிகாகுளம் போன்ற ஒருசில வட்டாரங்களின் விதிவிலக்கான புற நிலைமைகளுக்குப் பொருந்திய போராட்ட வடிவங்களை நாடு முழுமைக்கும் பொருத்தும் முயற்சி பெருந்தோல்வி கண்டு பேரிழப்புகளுக்கு வழிகோலி விட்டது.

இன்றுங்கூட தண்டகாரண்யக் காடுகளில் பழங்குடி மக்கள் தங்கள் வனத்தையும் வாழ்வையும் காத்துக் கொள்வதற்கு ஆயுதப் போராட்டம் தவிர வேறு வழியில்லை என்றாகி விட்டது.

நக்சல்

இந்தப் போராட்டத்தை ‘இந்தியப் புரட்சி’ என்று மாவியர்கள் (மாவோயிஸ்டுகள்) அனுமானித்துக் கொண்டு, நாடுதழுவிய ஒன்றாக மாற்ற முயன்றால் கோட்பாட்டளவிலும் நடைமுறையளவிலும் பிழையாகி விடும்.

மூன்றாதாக, சீனத்தைப் பார்த்தொழுகும் முயற்சி போல் அபத்தம் வேறில்லை. “சீனத்தின் பாதை எமது பாதை!” என்ற முழக்கம் “சீனத்தின் தலைவர் எம் தலைவர்!” என்று நீண்டு “சீனத்தின் துணைத் தலைவர் எம் துணைத் தலைவர்!” என்று சிதைந்து போயிற்று.

இதெல்லாம் முட்டாள்தனம் என்பதை சீனக் கட்சியே இவர்களுக்கு சொல்ல வேண்டியதாயிற்று. ஆனால் சீனத்தைப் பார்த்தொழுகும் அபத்த முயற்சிக்கு சீனக் கட்சியும் சீனத் தலைவர் மாவோவும் பொறுப்பில்லை என்று விடுபட முடியாது.

சீன அரசுக்கும் இந்திய அரசுக்குமான உறவில் ஏற்பட்ட மாற்றங்களுக்கும், எல்லைச் சிக்கலிலும், திபெத் தொடர்பாகவும் நேரிட்ட திருப்பங்களுக்கும் ஏற்ப இந்தியப் புரட்சி பற்றிய சீனக் கட்சியின் பார்வைகள் மாறின என்பதையும் மறுக்கவியலாது.

நக்சல் தாக்குதல்

நான்காவதாக, இந்தியச் சமூகம் குறித்தும், தமிழ்ச் சமூகம் உள்ளிட்ட தேசியச் சமூகங்கள் குறித்தும் அறிவியல் வகைப்பட்ட ஆய்வுகள் செய்து கணிப்புகளுக்கு வரும் முயற்சி கூட மா-லெ கட்சி (மாவியர்கள்) தரப்பில் நடைபெறவே இல்லை. உடனடி ஆயுதப் போராட்டம் என்ற நடைமுறைக்குப் பொருத்தமாகவே இந்தியச் சமூகம் பற்றிய வரையறுப்புகள் வலிந்து திணிக்கப்பட்டன.

அரைக்காலனிய அரைப்பிரத்துவச் சமூகம், இந்தியப் பெருமுதலாளிகள் அதிகாரவர்க்கத் தரகு முதலாளிகள், இந்திய அரசு வல்லாதிக்கத்தின் கைப்பாவை அரசு … இவை யாவும் புரட்சிக்கு முந்தைய சீனச் சமூகம், சீன முதலாளிகள், சீன அரசு பற்றிய சீனக் கட்சியின் நிலைப்பாடுகளை அப்படியே பார்த்தொழுகும் முயற்சிகளே தவிர வேறல்ல.

சீனத்தில் போலவே இந்தியாவிலும் புரட்சியின் பாதை மக்கள்-போர்தான் என்று வலியுறுத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் சீனத்தில் போலவே இந்தியாவிலும் ‘நீண்ட பயணம்’ – சிறிகாகுளம் முதல் பீர்பூம் வரை — நடத்துவது பற்றிக் கூட சாரு பேசினார்.

சிறைக்குள் இதுகுறித்து நடைபெற்ற விவாதத்தில் நான் சாருவின் பார்வையை மறுத்துப் பேசிய போதுதான் இந்தியாவின் பல்தேசியத் தன்மையை இயக்கம் உரியவாறு கணக்கில் கொள்ளவில்லை என்றுணர்ந்தேன்.

நக்சல்

ஐந்தாவதாக இந்தியப் புரட்சி முகங்கொடுக்க வேண்டிய தனித்துவமான இருபெருஞ்சிக்கல்களில் – தேசிய இனச் சிக்கல், சாதிச் சிக்கல் ஆகியவற்றில் – பொதுவாக இந்தியப் பொதுமை இயக்கத்துக்குத் தெளிவான பார்வை இல்லை.

ஒரு நடைமுறைத் திட்டம் என்ற அளவில் இந்தியப் புரட்சி என்பதே கானல் நீர் வேட்டை என்ற ஏரணமே இவர்களுக்கு மனத்தடையாகி விடுகிறது. இந்தக் குறை நக்சல் இயக்கமாக அறியப்படும் மா-லெ கட்சி அல்லது கட்சிகளுக்கும் (மாவோயிஸ்ட் குழுக்களுக்கும்) பொருந்தும் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தக் குறைகளைக் களைந்து, வெற்றிகளிலிருந்து ஊக்கமும் தோல்விகளிலிருந்து பாடமும் பெற்று, மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகள் நடப்பது நம்பிக்கையளிக்கும் செய்தி.

அண்மைக்கால இந்திய வரலாற்றில் நக்சல் இயக்கத்தின் பெயரால் இளைஞர்கள், உழைக்கும் மக்கள், பழங்குடிகள் செய்துள்ள ஈகத்துக்கு இணை சொல்ல முடியாது. இந்த அரும்பெரும் ஈகம் வீண்போகக் கூடாது.

(கட்டுரையாளர் , ‘உரிமைத் தமிழ்த் தேசம்’ இதழின் ஆசிரியர் ; தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் , முன்னாள் நக்சல் இயக்க உறுப்பினர் — மின்னஞ்சல் முகவரி ;thozharthiagu.chennai@gmail.com )

தொடர்புடைய கட்டுரை :

நக்சல்பாரி இயக்கம் 50: கொடுத்ததா, கெடுத்ததா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *