நக்சல்பாரிஎழுச்சிகுறித்தசிலவரலாற்றுக்_குறிப்புகள்- மாவோவிஸ்ட் அமைப்பு
நக்சல்பாரிஎழுச்சிகுறித்தசிலவரலாற்றுக்_குறிப்புகள்- மாவோவிஸ்ட் அமைப்பு

நக்சல்பாரிஎழுச்சிகுறித்தசிலவரலாற்றுக்_குறிப்புகள்- மாவோவிஸ்ட் அமைப்பு

வசந்தத்தின்_இடிமுழக்கம்:

(தொடர் கட்டுரை – பாகம் – 1)

முன்னுரை:

1960-களின் இறுதி காலம் அது. சுதந்திரத்திற்குப் பின்னர் பாலாறும், தேனாறும் ஓடும் என ஆளும் வர்க்கங்களால் வழங்கப்பட்ட வாக்குறுதி பொய்த்துப் போய் விட, இந்திய உழைக்கும் மக்கள் ஏமாற்றத்தாலும், அதிருப்தியாலும் குமுறிக் கொண்டிருந்தனர். மக்களின் சினத்தைப் புரட்சிக்கு மடைமாற்ற வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகளோ, ஆளும் வர்க்கக் கட்சிகளோடு சேர்ந்துகொண்டு, பாராளுமன்ற பன்றித் தொழுவத்தில் புரண்டு கொண்டிருந்தனர். துரோகி குருசேவின் “அமைதி வழிப் புரட்சி” பஜனையை தொண்டை கிழியப் பாடிக் கொண்டிருந்தனர்.

பஞ்சமும், வேலையின்மையும் மக்களை வதைத்துக் கொண்டிருந்தது; நாட்டின் பல பகுதிகளில் நிலப்பிரபுத்துவ சுரண்டலும் ஒடுக்குமுறையும் ஏழை விவசாயிகளின் வாழ்வைச் சூறையாடிக் கொண்டிருந்தன; பாட்டாளி வர்க்கத்திற்கெதிரான முதலாளிய தாக்குதல்கள் தொழிலாளர்களின் கழுத்தை நெரித்தன. தொழிலாளரும், விவசாயிகளும் கொதித்துக் கொண்டிருக்க, போலி கம்யூனிஸ்ட்டுகள் சமூகப் புரட்சியை கைகழுவி விட்டு அப்பட்டமான வர்க்க சமரசத்தில் இறங்கினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-டுக்கு உள்ளிருந்த புரட்சியாளர்கள் திரிபுவாதத் தலைமையின் துரோகங்களுக்கு எதிராக கலகக் கொடியை உயர்த்தி போராட்டத்தில் இறங்கினர்.

அதே சமயத்தில், உலகளவில் குருசேவ்-பிரஷ்னேவ் கும்பலின் திரிபுவாதக் கொள்கைகளுக்கு எதிராக தோழர் மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி போர் முரசு கொட்டியது. சோவியத் திரிபுவாதிகளுடன் “மாபெரும் விவாதம்” நடத்தி, அவர்களின் துரோகத்தைத் தோலுரித்து காட்டியது. சீனாவில் கட்சிக்குள்ளிருந்த முதலாளிய பாதையாளர்களின் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சிக்கெதிராகவும், சோசலிசத்தை கம்யூனிசம் நோக்கி உறுதியாக முன்கொண்டு செல்லவும், தோழர் மாவோவின் தலைமையிலான மாபெரும் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டுப் புரட்சி ஆழிப் பேரலையாய் பொங்கி எழுந்தது. இப்புரட்சியின் தாக்கம் உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் முற்போக்கு மாணவர்-இளைஞர்களின் மீது பெரும் செல்வாக்கு செலுத்தியது.

மார்க்சிய-லெனினிய-மாவோவியத்தாலும், பண்பாட்டுப் புரட்சியாலும் உத்வேகம் பெற்ற, தோழர் சாருவால் தலைமை தாங்கப்பட்ட புரட்சியாளர்கள் நக்சல்பாரியின் மக்களை அணிதிரட்டி நிலப்பிரபுக்களுக்கும், அரசுக்கும் எதிராக நிகழ்த்திய எழுச்சியே நக்சல்பாரி எழுச்சியாகும்.

பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர்கள் தலைமையில் எளிய பழங்குடிகள் மற்றும் விவசாயிகளால் நடத்தப்பட்ட நக்சல்பாரி எழுச்சி இந்தியப் புரட்சியின் பாதையை தனது குருதியில் எழுதிக் காட்டியது. அது மார்க்சிய-லெனினிய-மாவோவியத்தின் சரியான தன்மையை நிரூபித்துக் காட்டியது. இந்திய வரலாற்றில் ஒரு புதிய புரட்சிகரமான கம்யூனிச மரபை, கொள்கை உறுதியும், வீரமும், தியாகமும் நிறைந்த மகத்தான மரபை உருவாக்கிக் காட்டியது.

நக்சல்பாரி பாதையானது, திரிபுவாத பாராளுமன்றவாத துரோகப் பாதைக்கு எதிராக, ஆயுதப் போராட்ட பாதையை முன் வைத்தது; இந்திய சமூகம் பற்றி சரியாக வரையறுத்தது; இந்திய பெரு முதலாளிகளின் ஏகாதிபத்திய சார்பு தரகு வர்க்கத் தன்மையை சரியாக இனங்கண்டது; தோழர் மாவோவின் நீண்ட கால மக்கள் யுத்தப் பாதையை உயர்த்திப் பிடித்தது; சோவியத் திரிபுவாதத்தை எதிர்த்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தப் போராட்டத்தை ஆதரித்தது; உலகப் பாட்டாளி வர்க்கத்தின் முப்பெரும் புரட்சிகளில் ஒன்றான மாபெரும் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டுப் புரட்சியை உறுதியோடு ஆதரித்தது; சோசலிச சோவியத் ருசியா சமூக ஏகாதிபத்தியமாக மாறிவிட்டதென அறிவித்தது; மாவோ சிந்தனைகளை (இன்று நாம் மாவோவியம் என்றழைக்கிறோம்) மார்க்சிய-லெனினியத்தின் அடுத்த உயர்ந்த கட்டமாக அங்கீகரித்தது. இவை நக்சல்பாரி எழுச்சிக்கான அரசியல் தயாரிப்பின் போதும், அதற்கு பிந்தைய புரட்சிகரப் பாட்டாளி வர்க்கக் கட்சியின் உருவாக்கத்தின்போதும் எட்டப்பட்ட மகத்தான புரட்சிகர நிலைப்பாடுகளாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் முதல் முறையாக, ஒரு சரியான புரட்சிகர அரசியலின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டியமைக்கப்பட்டது என்பதே நக்சல்பாரி எழுச்சியின் மிகப்பெரும் சாதனையாகும். நக்சல்பாரி எழுச்சியின் பின் விளைவாக, திரிபுவாதத்தை அடியோடு எதிர்த்த ஒரு புரட்சிகர கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) உருவானது. இன்றளவிலும் இதன் தொடர்ச்சியாகவே இந்தியாவில் புதிய சனநாயகப் புரட்சியை உறுதியாக முன்னெடுக்கும் இ.க.க.(மாவோயிஸ்ட்)-டும்செயல்பட்டு வருகிறது என்ற உண்மை நக்சல்பாரியின் மகத்துவத்தை நமக்குப் புரிய வைக்கும்.

நக்சல்பாரி… ஒரு கிராமத்தின் பெயரல்ல

அது மக்களின் புரட்சிகர எழுச்சியின் அடையாளம்

அது ஒடுக்கப்பட்ட மக்களின் போர் முழக்கம்

அது பாட்டாளி வர்க்கக் கட்சியின் தியாக-வீர மரபின் வாழும் வரலாறு

அது இந்திய புரட்சிக்கு வழிகாட்டும் துருவ விண்மீன்

அது திரிபுவாத, சந்தர்ப்பவாதக் கசடுகளை துடைத்தெறிந்த புரட்சியின் பெருவெள்ளம்

அது என்றென்றும் ஆளும் வர்க்கங்களை நடுநடுங்க வைக்கும் சிவப்பு பூதம்

இத்தகைய மகத்தான நக்சல்பாரி எழுச்சியின் 50-ஆம் ஆண்டில், அதன் வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்பது, புரட்சியை நேசிப்போருக்கு அரசியல் தெளிவையும், புரட்சிகர பற்றுறுதியையும் வழங்கும். இந்த நோக்கத்தோடு நக்சல்பாரி எழுச்சியின் வரலாறு குறித்து முகநூல் பக்கத்தில் ஒரு சிறிய தொடராக எழுது உள்ளோம். இதை இதர முகநூல் நண்பர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *