வசந்தத்தின்_இடிமுழக்கம்:
(தொடர் கட்டுரை - பாகம் - 2)
தோழர் விவேக்
- (விவேக் மாவோயிஸ்ட்)
நக்சல்பாரிக்கு முந்தைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
சந்தர்ப்பவாத்திலிருந்து திரிபுவாதத்தை நோக்கி…
ரசியாவின் அக்டோபர் சோசலிசப் புரட்சிச் சூறாவளி, காலனிய, அரைக்காலனிய நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் வித்துக்களை வீசிவிட்டு சென்றது. 1920களின் இரண்டாம் பாதியில் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் நிறுவப்பட்டது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இந்திய துணைக்கண்டம் அடிமைப்பட்டுக்கிடந்த காலம் அது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சிக்கெதிரான போராட்டங்கள் ஏற்கனவே வளர்ந்து கொண்டிருந்தன.
காலனிய காலகட்டம் முழுவதிலும் (அதற்குப் பின் நக்சல்பாரி எழுச்சி வரையிலும் கூட) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு சந்தர்ப்பவாதத்தின் வரலாறாகவே இருந்தது. இ.க.க. மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போருக்கு தலைமை தருவதற்கு பதில், நிலவுடமை-தரகு முதலாளிய கட்சியான காங்கிரசின் வாலாகவே செயல்பட்டது. ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போரின் தலைமையை தன் கையிலெடுக்க, அது முயற்சிக்கவில்லை. அரை நிலப்பிரபுத்துவ இந்தியாவில் விவசாயப் புரட்சியின் முக்கியத்துவத்தை அது உணரவில்லை. இந்தியப் பெருமுதலாளிகளின் ஏகாதிபத்திய சார்பு தரகுப் பண்பை அது புரிந்து கொண்டிருக்கவில்லை. ஏகாதிபத்திய – நிலவுடமை சுரண்டலை ஒழிப்பதற்கான சனநாயகப் புரட்சி மற்றும் ஆயுதப்போராட்டம் மூலம் விடுதலை பெறுவது போன்றவற்றில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (பின்னர் இ.க.க.(மார்க்சிஸ்ட்)டும் கூட) தெளிவான நிலையை எடுக்கவில்லை. இதே காலக்கட்டத்தில் தோன்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயப் புரட்சியை அடிப்படையாகக் கொண்டு, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை தந்து, ஆயுதப் போராட்டப்பாதையில் மக்கள் சனநாயகப் புரட்சி நோக்கி பீடு நடை போட்டது. ஆனால், இ.க.க.வின் சந்தர்ப்பவாதத் தலைமைகள் இதில் இருந்து எந்தப் பாடமும் பெறாமல், தொடர்ந்து சந்தர்ப்பவாத சகதியில் மூழ்கிக் கிடந்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை சந்தர்ப்பவாதமாக விளங்கிய போதும், “பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவுக்கு முழுவிடுதலை” என்ற கோரிக்கையை முதலில் வைத்தது கம்யூ.கட்சியே. அக்காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சி பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட தன்னாட்சியையே கோரி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தலைமையின் சந்தர்ப்பவாதத்தையும் மீறி கம்யூனிஸ்ட் கட்சியின் அணிகள் வீர தீரமிக்க போராட்டங்களை நடத்தினர். இந்தியாவில் பாட்டாளி வர்க்கத்தை தொழிற்சங்கங்கள் மூலம் அமைப்பாக்கியதோடு, காலனிய எதிர்ப்புப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் அரசியல் போராட்டங்களில் முக்கிய பங்காற்றினர். கம்யூனிஸ்ட் கட்சியினரால் தலைமை தாங்கப்பட்ட மாபெரும் தெலுங்கானா விவசாயிகள் எழுச்சி, தெபாகா உழவர் போராட்டம், புன்னபுரா – வயலார் போராட்டம், மற்றும் தஞ்சை மாவட்ட உழவர் போராட்டங்கள் பிரிட்டிஷ் காலனியவாதிகள் மற்றும் இந்திய நிலப்பிரபுத்துவ வர்க்கங்களை நடுநடுங்க வைத்தன.
காலனிய காலகட்டத்தில் நிகழ்ந்த இன்னும் சில முக்கிய நிகழ்வுகளையும் பார்த்தால், இக்கட்டத்தினைப் பற்றிய அரசியல் சித்திரம் முழுமையடையும். சுதந்திரப் போராட்ட காலம் முழுக்க நிலவுடமை-தரகுமுதலாளிய வர்க்கத்தின் காங்கிரஸ் கட்சி மக்களின் போராட்டங்களுக்கு தலைமை தந்து, பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் பேரம் பேசுவது, மக்கள் போராட்டங்கள் கையை மீறும் போது, அதைக் காயடிப்பது என்ற இரட்டைவேடத்தையே மேற்கொண்டது. காங்கிரசை அம்பலப்படுத்தி, மக்கள் போராட்டங்களின் தலைமையை கைப்பற்றும் முயற்சியை இ.க.க. எக்கட்டத்திலும் மேற்கொள்ளவில்லை.
குறிப்பாக, 1942ல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம், பம்பாய் கப்பற்படை எழுச்சி, ஐஎன்ஏ வீரர்களை கைது செய்வதற்கெதிரான கல்கத்தா வெகுமக்கள் போராட்டங்கள், நாடுதழுவிய தொழிலாளர் போராட்டங்கள் ஆகியவற்றிற்கு தலைமை தந்து, தள்ளாடிக்கொண்டிருந்த பிரிட்டிஷ் ஆட்சியை அடியோடு வீழ்த்த முயற்சிக்காமல் வேடிக்கை பார்த்தது. அது மட்டுமின்றி, இரண்டாம் உலகப்போரின் இறுதிகட்டத்தில் சோவியத்தின் பாசிச எதிர்ப்பு முன்னணியில் பிரிட்டிஷ் அரசு இணைந்த போது, எவ்வித நிபந்தனையும் இன்றி பிரிட்டிஷ் காலனிய அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் சந்தர்ப்பவாத நிலையை எடுத்ததன் மூலம், இந்திய மக்களிடையே இ.க.க.வுக்கு இருந்த மாபெரும் அந்தஸ்தை இழந்தது. காங்கிரசே சுதந்திரத்திற்கு உண்மையில் போராடுகிறது என்ற மாயை உருவாக, இந்த தவறான நிலைபாடு காரணமானது. இறுதியாக, மாபெரும் தெலுங்கானா போராட்டம் இ.க.க. முழுமையாக திரிபுவாதத்தில் வீழ்ந்ததை படம் பிடித்துக்காட்டியது.
தெலுங்கானா எழுச்சி
““““““““““““““““““““““““““““““““““““
1947-ன் “அதிகார மாற்றம்” நிகழ்ந்த காலக்கட்டத்தில் இ.க.க. தலைமையில் தெலுங்கானா பகுதி உழவர்கள் வெட்டி உழைப்பு, சட்டவிரோதமான வரிகள் மற்றும் வலிந்து பறிக்கப்பட்ட தானிய வரிகள் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவந்தனர். அத்தோடு நிலப்பிரபுக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை கைப்பற்றத் தொடங்கினர். ஐதராபாத்தின் நிஜாம் அரசாங்கம் “ரசாக்கர்கள்” என்ற கூலிப்படையை உருவாக்கி. கிராமங்களை சூறையாடுவது, போராட்டக்காரர்களை படுகொலை செய்வது, பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்குவது என வெள்ளை பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டது. இதை எதிர்த்துப் போரிட, இ.க.க. கிராம பாதுகாப்பு குழுக்களையும் (10,000 பேர்) கெரில்லா குழுக்களையும் (20,000 பேர்) உருவாக்கியது. ஏறத்தாழ 3,000த்திலிருந்து 4,000 கிராமங்கள் விடுவிக்கப்பட்டு, கிராம ராஜ்ய குழுக்களால் நிர்வகிக்கப்பட்டன. ஆயுதந்தாங்கிய தெலுங்கானா விவசாயிகளின் எழுச்சி அடிலாபாத், கரீம்நகர் மேடக் மாவட்டங்களில் பாய்ச்சலில் முன்னேறியதோடு, ஒட்டுமொத்த தெலுங்கானாவையும் சுற்றுப்புறங்களையும் அச்சுறுத்தியது.
இந்தக் கட்டத்தில் நேருவின் அரசாங்கம் ஐதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதென்ற பெயரில் இந்திய இராணுவத்தை அனுப்பியது. ஆனால், அதன் உண்மை நோக்கம், தெலுங்கானாவில் கம்யூனிஸ்ட்கள் தலைமையில் தொடங்கியிருந்த விவசாயிகளின் எழுச்சியை ஒடுக்குவதுதான். இது சிறிது காலத்திலேயே அம்பலத்திற்கு வந்தது. இந்தியப் படை வந்திறங்கிய ஒரு வாரத்திற்குள் நிஜாம் சரணடைந்தார். அவர் இந்திய அரசால் ஐதராபாத் மாகாணத்தின் “ராஜ்பிரமுகர்” (முதல்வர்) ஆக்கப்பட்டார். நேரு அனுப்பிய 50,000 பேர் கொண்ட படை தெலுங்கானா விவசாயிகள் போராட்டத்தின் மீது வெறிநாய் போல பாய்ந்தது. நிஜாமின் ரசாக்கர்களை விடவும் பல மடங்கு கொடூரமான பயங்கரவாதத்தை இந்திய இராணுவம் தெலுங்கானா விவசாயிகள் மீது கட்டவிழ்த்துவிட்டது. கிராமங்களில் மீண்டும் நிலபிரபுக்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான, ஒரு பிற்போக்கான தாக்குதலாகவே இந்திய இராணுவத் தாக்குதல் அமைந்தது.
உண்மையில் தெலுங்கானா உழவர் பேரெழுச்சி இ.க.க. முன் ஓர் அற்புதமான வாய்ப்பை முன்வைத்தது. தெலுங்கானா போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுக்க மக்களை அணிதிரட்டிப் போராடுவது, நாடு முழுக்க ஏராளமான தெலுங்கானாக்களை உருவாக்கி, மாவோவின் நீண்டகால மக்கள் யுத்தப் பாதையில் முன்னேறுவது, இதன் மூலம் சந்தர்ப்பவாதத்தை சவக்குழிக்கு அனுப்பிவிட்டு ஒரு உண்மையான புரட்சிகர கட்சியைக் கட்டுவதற்கான வாய்ப்பை வழங்கியது. ஆனால், கட்சியில் தமக்குள் போராடிய இருபிரிவினரும் சந்தர்ப்பவாதிகளாகவே இருந்ததால், தெலுங்கானா நக்சல்பாரியாகும் வாய்ப்பை இழந்தது.
அஜாய் கோஷ், டாங்கே, காட்டே போன்ற பல தலைவர்கள் இந்திய இராணுவம் நுழைந்தவுடன் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத நிலையை முன்வைத்தனர். ராஜேஷ்வரராவ், சுந்தரையா போன்ற தெலுங்கானா போராட்டத் தலைவர்களும், அப் போராட்டத்தை விவசாயிகள் அடைந்திருந்த பலன்களை பாதுகாப்பதற்கான போராட்டமாக மட்டுமே பார்த்தனர். அதை அரசியல் அதிகாரத்துடனும், புரட்சியுடனும் இணைத்துப் பார்க்கவில்லை. எதிரியின் கொடூர அடக்குமுறையால் மட்டுமின்றி, கட்சியின் அரசியல் பலவீனத்தாலும் தெலுங்கானா பேரெழுச்சி நெருக்கடிக்குள்ளானது.
இறுதியாக, கட்சிக்குள்ளான முரண்பாட்டை தீர்க்கும் அரசியல் ஆளுமையற்ற இ.க.க. தலைமை சோவியத் தலைவர்களிடம் சென்று ஆலோசனை நடத்தியது. ஆலோசனையின் பின் மாபெரும் தெலுங்கானா பேரெழுச்சியை கைவிட்டுவிட்டு, நேரு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதேகாலக்கட்டத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் ஆலோசனைகளை மீறித்தான் புரட்சியில் வெற்றி பெற்றது. பின்னர், தோழர் ஸ்டாலினும் கூட சீனாவுக்கான வழிகாட்டலில் நிகழ்ந்த தவறை ஏற்றுக் கொண்டார். ஆனால், இந்திய நிலைமைகளில் புரட்சியை முன் கொண்டு செல்வதற்கான பாதையை வளர்த்தெடுப்பதற்கு பதில், சோவியத் ஆலோசனையை காரணம் காட்டி ஆயுதப் போராட்டப் பாதையை மொத்தமாக புதைத்துவிட்டு பாராளுமன்ற பாதைக்குள் சென்று சரணடைந்தது.
இ.க.க. இதுவரை சந்தர்ப்பவாத பாதையில் அடிக்கடி பயணித்த கம்யூ. கட்சி என்ற நிலையிலிருந்தது. இச்சமயத்தில் அது திரிபுவாதக் கட்சியாக மாறும் திசையில் விரைந்து முன்னேறியது. 1951-ல் நேரு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை என்ற பெயரில், மாபெரும் தெலுங்கானா உழவர்களின் பேரெழுச்சி காட்டிக் கொடுக்கப்பட்டது. கம்யூ. கட்சியின் பேச்சுவார்த்தை முன் மொழிதலை நேரு அரசாங்கம் ஒரு பொருட்டாகக் கூட மதிக்காத நிலையில், “தேர்தல் புரட்சியில்” இ.க.க. குதித்தது. முதலாளிய தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் மக்கள் சனநாயக அரசமைப்பது என்ற மார்க்சிய விரோத வழியை முன்வைத்தது. சர்வதேச அளவில் குருசேவின் திரிபுவாதம் தோற்றமெடுத்தவுடன், அதை ஆரத்தழுவிக் கொண்டு, அப்பட்டமான திரிபுவாதக் கட்சியாக இ.க.க. மாறியது.
-தொடரும்